தனிமையில் இனிமை காண முடியுமா? ஏகாகி ந ரமேத | A thought provoking article by Sri U.Ve K. B. Devarajan Swami | Published by Sri APN Swami

தனிமையில் இனிமை காண முடியுமாஏகாகி ந ரமேத

எண்ணமும் எழுத்தும் ஆக்கமும் : ஸ்ரீ உ.வே K.B. தேவராஜன் ஸ்வாமிகள்
ரசித்து வெளியிடுபவர் : ஸ்ரீ APN ஸ்வாமி

A thought provoking article on Senior citizen township & today’s state of temples in villages

தற்காலத்தில் முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டன. ஒரு புறம் பணம் மறுபுறம் முதியோர் இல்லங்கள் மிகுதியாக காணப்படுகிறது. அதே சமயத்தில் கிராமங்களில் உள்ள கோயில்கள் பெருமையிழந்து வருகின்றன. இதனை ஸ்ரீ உ.வே K.B. தேவராஜன் ஸ்வாமிகள் ஸ்ரீ APN ஸ்வாமிகளிடம் பகிர்ந்து கொண்டுள்ளதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

சுகம்” முதியோர் இல்லம் அன்று மிகவும் பரபரப்பாக இருந்தது.

பல முதியோர் அங்கு தங்கள் மக்கள்களால்(பிள்ளைகளால்) சேர்க்கப்பட்டு வசித்து வருகின்றனர். அனைவருக்கும் காலை காபி, எட்டு மணிக்கு சிற்றுண்டி, பன்னிரண்டு மணிக்கு சாத்வீக உணவு. மாலை மூன்றரை மணிக்கு சுண்டல் மற்றும் டீ, இரவு ஏழரை மணிக்கு சப்பாத்தி மற்றும் ஒன்பது மணிக்கு பால் வழங்கப்படுகிறது. வாரம் மூன்று முறை மருத்துவர் வருவார். கழிவறை வசதியுடன் கூடிய இருவர் தங்குமளவு ஒரு விசாலமான அறை. அறைக்கு அறை டிவி. மாதம் ஒரு முறை outing. பல அறைகளில் முதிய கணவன் மனைவியர் இருந்தனர் . சிற்சில அறைகளில் தனித்த ஆணோ பெண்ணோ இருந்தனர். கூப்பிட்ட குரலுக்கு வந்து உதவ ஒரு ஆண் ஆளும் பெண் ஆயாவும் உண்டு. யாருடைய முகத்திலும் மகிழ்ச்சி இல்லை. காரணம் வெளி நாடுகளிலும் வெளி ஊர்களிலும் உள்ள அவர்கள் குழந்தைகள் ஏதோ ஒரு காரணம் கூறிக்கொண்டு பெற்றோர்களை வந்து பார்ப்பதில்லை.

திடீரென்று பரபரப்பு உண்டாகக் காரணம், பற்பல கிராமங்களிலிருந்து எம்பெருமான்கள் பலர் தாயார்களுடன் அம்முதியோர்களை சந்திக்கின்றனர். ஒரு பெருமாள் நல்ல பட்டு பீதாம்பரம் சாத்தி நன்கு அலங்கரிக்கப் பட்ட தாயாருடன் வந்தார். ஒருவர் தடித்த ஆளுயர மாலை சாத்தி வந்தார். ஒருவர் ஒற்றைச் சரத்துடன் வெள்ளை வேட்டி உடுத்து வந்தார். ஒருவர் கவசத்துடன் வந்தார். ஒருவர் எண்ணெய் படிந்த வஸ்த்ரத்துடன் வந்தார். ஒருவருடைய வஸ்த்ரம் ஆகங்கு சிறு சிறு துளைகளுடன் இருந்தது. ஒருவர் பளபளத்த art jewellery சாத்தி வந்தார். ஒருவர் சாலக்ராம மாலை சாத்தி வந்தார். ஒருத்தர் வெள்ளிக் கவசம் சாத்தி வந்தார். ஒரு ஊரிலிருந்து உத்சவர் மூலவர் இருவரும் வந்திருந்தனர்.

எல்லா பெருமாளும் ஒவ்வொரு அறைக்குச் சென்று முதியவர்களிடம் பேசத் துவங்கினர்.

முதல் அறையில்.

பெருமாள் : என்ன ராமசாமி. எப்படி இருக்கீங்க? பங்கஜம் எப்படி இருக்கா?

முதியவர்: ஓ எங்க பெர்சொல்லி கூப்பிடுகிறீரே? நீர் யாரு? தெரியலையே.

பெருமாள்: என்னூரைச் சேர்ந்தவன் நீ. உன்னைத் தெரியாதா? நினைவு உள்ளதா? எட்டு வயசுல தாத்தா கையைப் பிடிச்சு அழைத்து வருவாயே. பொங்கல் கொஞ்சமாகக் கொடுத்தான்னு ஓ என்று அழுவாயே.

முதியவர்: ஆ தேனூர் ஶ்ரீ நிவாசப் பெருமாளா? என்ன பாக்யம். சேவித்து 25 வருஷம் ஆச்சு. மறந்து போச்சு.

பெருமாள்: சௌக்யம் தானே? நாங்கள் உன்னை மறக்கவில்லை.

மற்றொரு முதியவர்: ஆஹா எங்க வரதராஜப் பெருமாள்! எங்களைப் பார்க்க வந்திருக்கார். என்ன பாக்யம்!

மற்றொரு முதியவர்: எம்பெருமானே வேளைக்கு சாப்பாடு எல்லாம் கிடைக்கிறது. Walking போகிறோம். பேப்பர் படிக்கிறோம். பார்க்கில் பேசுகிறோம். மாஸம் ஒருமுறை outing. எல்லாம் உண்டு. ஆனால் இதெல்லாம் இருந்தால் போதுமா பெருமாளே?

பெருமாள்: இதுக்கு மேல என்ன வேணும்?

முதியவர்: நான் பெத்து வளத்து ஆளாக்கிய என் பசங்கள் ஒருத்தனும் வந்து என்னைப் பார்க்கரதில்லை. மூன்று வருஷத்துக்கு முன்னால இங்க கொண்டு வந்து சேர்த்தது தான். அதுக்குப் பிறகு எட்டிக்கூட பார்க்கல. கேட்டால் பசங்களுக்கு ஸ்கூலாம் ஆஃபீஸ் work பிசியாம்.

என்ன தான் இங்க நன்னா கவனித்துக் கொண்டாலும் உடம்புண்ணு வந்துட்டால் நம்மைச் சேர்ந்தவா வந்து பார்த்தால் தானே ஒரு ஆப்யாயம்.

பாட்டி: (கம்மிய குரலோடு) பேரக் குழந்தைகளக் கண்ணுல கூடக் காட்டல அந்தக் கிராதகி மட்டுப்பொண்ணு. யாருக்கும் ஒரு பாவமும் செய்யல நாங்கள். எங்களுக்கு ஏன் இந்த கஷ்டம் ஶ்ரீநிவசா ?

மற்றொரு பாட்டி: (கண்ணில் நீர்கசிய) என் சம்பந்தி இருக்காளே அவ்வளோ நல்லவ. என்னையும் என் பிள்ளையையும் plan panni பிரிச்சுட்டா. நன்னா இருக்கட்டும். பெத்த எங்கள வந்து பாக்கர்துக்கு நேரமில்லை. மாமியார் மாமனார் பிறந்த நாளுக்கும் கல்யாண நாளுக்கும் பிரதி வருஷம் wish பண்ண flight பிடித்துக் கொண்டு ஓடரான் பொண்டாட்டி பசங்களோட. மச்சினி ஆஸ்திரேலியவிலேந்து வந்தாளாம் 15 நாள் லீவு போட்டு எல்லாரும் குலு மணாலி எல்லாம் சென்று வந்தாளாம். நேத்து வந்த என் நாத்தனார் மாப்ள சொன்னார்

பெருமாள்: நீங்க சொல்றது எல்லாம் எங்களுக்குத் தெரியும்.நாங்க பல ஊர்லேந்து பெருமாள்கள் வந்திருக்கோம். இங்க இருக்கற எல்லோரிடமும் நாங்க பேசணும். வாங்கோ பார்க்குக்கு போவோம்.

பார்க்கில் விதவிதமாய் பெருமாள்களும் தாயார்களும் ஒருபக்கம் பரிதாபமாய் நிற்கிறார்கள். எதிரில் பக்திப் பரவசத்தில் முதியோர்கள் கண்ணீர் மல்க நிற்கிறார்கள்.

எங்க பெருமாள். எங்க பெருமாள் என்று பல குரல்கள். நாராயணா வாசுதேவா கேசவா, வரதா, ரங்கா, வேங்கட ரமணா, ராமா, கிருஷ்ணா, வேணுகோபால், சுந்தர ராஜா, ஜகன்னாதா பத்மாவதி, ஆதிகேசவா ஜனார்தனா யதிராஜவல்லி, சுந்தரவல்லி, என தழு தழுத்த பல குரல்கள்.

ஒவ்வொருவராக தங்கள் தங்கள் பெருமாளுடன் selfie எடுத்துக் கொள்கிறார்கள். Photo session முடிந்தது.

பங்கஜம் மாமி: ஏன்னா… நம்ப ஊர் பெருமாளோட எடுத்த selfieயை atlantaல இருக்கிற நம்ப அனந்துக்கு அனுப்புங்கோ. அவன் அதை DP/ Statusல வெச்சுப்பான். ரொம்ப சந்தோசப்படுவான்.

தன் குழந்தைகளுடன் போட்டோ எடுத்துக்கொண்ட வரை smile செய்த பெருமாள் அனைவரும் திடீரென்று குலுங்கிக் குலுங்கி அழுகிறார்கள்.

சற்று நேரம் பேரமைதி.

எல்லாரும் சுதாரித்துக் கொள்கின்றனர்.

பின் பெருமாள்கள் ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கினர்.

குழந்தைகளே, எல்லாருக்கும் எங்கள் அனுகிரகம் என்னைக்கும் உண்டு. உங்களைத் தனிமை எவ்வளவு வாட்டுகிறது என்று எங்களுக்கு நன்கு தெரிகிறது.

நாங்களும் அதைத் தானே அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்.

எங்களுக்கும் நீங்கள் பண்ணியுள்ள ஏற்பாட்டின்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக எல்லாம் நடக்கிறது.

காலை விஸ்வரூபத்துக்கு பசும்பால். திருவராதனம் பொங்கல் புளியோதரை சக்கரைப் பொங்கல் எல்லாம் உண்டு. அப்பப்போ திருமஞ்சனம் புது வாஸ்த்ரம் கூட.

மாலை திருமால் வடை சுண்டல் கூட.

இத்தனைக்கும் கூட இருப்பவர் அந்த 20000 ரூபா சம்பளக் கார அர்ச்சகர் மட்டும் தான்.

அவர் என்ன எப்பவும் கூட இருக்காரா? நாலைந்து கோவில் பண்ணுகிறார். ஒரு நாள் காலை 7 மணிக்கு ஒருநாள் பகல் 11 மணிக்கு என்று அவர் இஷ்டம் தான்.

தனுர் மாசம் மாரிமலை பாசுரத்தன்று பகல் 12.30க்கு தனுர் மாசம். அவர் புரோஹித்யம் வேறு வெச்சின்றுக்கார். அன்னைக்கு ஒரு ஆயுஷ் ஓமமாம்

ஏதோ இந்த மட்டாவது ஒரு வாய் அன்னம் கிடைக்கறதே.

குழந்தைகள் உங்களப் பார்க்க முடியலை. அப்பறம் அந்த பொங்கலும் புளியோரையும் சக்கரப் பொங்கலும் எங்க ரசிக்கறது?

நீங்க நேர வந்து என்னப் பாத்து சௌக்யமான்னு என்னைக்காவது விசாரித்தீங்களா?

வந்து ரெண்டு வாழைப்பழம் அமுது செய்ய பண்ணினாலும் போரும் எங்களுக்கு எவ்வளவு திருப்தி தெரியுமா?

நீங்க அடிக்கடி என்ன வந்து பார்த்து இருந்தால் உங்களுக்கு இந்த தனிமையும் முதியோர் இல்ல வாசமும் இருந்திருக்காது.

எங்க ஊர் பெருதனக்காரர் சீனுவின் பேரன் சுதர்சனா தை திருவோணம் உன் பிறந்த நாளன்று நீ வருவேன்னு ராத்திரி கோயில் கதவை சாத்தர வரைக்கும் எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். தாயாரை சமாதானப்படுத்தி அழுகையை நிறுத்த காலை நாலு மணி ஆகி விட்டது. அது வரை ரெண்டு பேருக்கும் தூக்கமில்லை. அன்றைக்கு எங்களுக்கு வைகுண்ட ஏகாதசி தான்.

நீங்கள் என்னை வந்து பார்த்திருந்தால் உங்கள் பிள்ளைகள் உங்களை வந்து பார்ப்பர். என் தனிமை உங்களுக்குத் தனிமை உண்டாக்கிவிட்டது.

இப்போதும் ஒண்ணும் கெட்டுப்போகவில்லை. ஒன்று செய்யலாம்.

அந்தந்த ஊர்க்காரர்கள் உங்களைப் போன்ற முதியோர் மொத்தமாக ஒரு கட்டடம் கட்டி ஒன்றாக share பண்ணிக்கொண்டு கிராமங்களில் வாழலாம். தளிகை வேலைக்கு ஒரு ஆளும் போக்கு வரத்து வசதிக்கு ஒரு vehicle மற்றும் டிரைவர் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

முதியோர்: இதற்கெல்லாம் எங்கள்வூர்க்காரர்கள் சம்மதிக்க மாட்டார்கள் கேசவ.

பெருமாள்: அப்போ குறைந்த செலவில் ஒரு பொதுவான இடம் வசதிகளுடன் அமைத்துக்கொண்டு உங்களுக்குள் டர்ன் போட்டுக்கொண்டு அவ்வப்போது வந்து என்னுடன் ஓரிரு நாள்கள் தங்கி அளவளாவி(கைங்கரியம்–பரிசாரகம் தெரிந்த அருளிச்செயல், புருஷ சூக்தம், புஷ்பம் கைங்கர்யம் இத்யாதிகள் செய்து) போகலாமே.

முதியவர்கள்: இரண்டுமே நன்றாக உள்ளது. ஏதேனும் நிச்சயம் சேர்ந்து பேசி பண்ணுகிறோம் பெருமாள்களே.

பெருமாள் : சரி implement பண்ணறா மாதிரி ஒரு practical ஐடியா கொடுக்கட்டுமா? நீங்க எல்லாரும் இங்க முதியோர் இல்லத்தில் இருப்பதற்கு பதில், இந்த முதியோர் இல்லங்களை கிராமங்களில் construct செய்யலாமே!

முதியவர்கள்: எங்க ஸ்வாமி பங்காளிகள் இதுக்கெல்லாம் இடம் கொடுக்க மாட்டேங்கிறா, கண்டிப்பா ஒத்துழைக்க மாட்டா.

பெருமாள் : உங்க பங்காளிகள் கிட்ட ஏன் போகணும். இந்த முதியோர் இல்லத்தில் உள்ள எல்லோரும் இடம் வாங்கி சேர்ந்து ஒன்றாக இருக்கலாமே. உங்க எல்லோருக்கும் தான் நல்ல வசதி, காசு பணம் இருக்கே. அனைவரும் சேர்ந்து வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு என்னுடன் நிம்மதியாக வாழலாமே.

பங்கஜம் மாமி : அது வந்து அது வந்து,,,

பெருமாள்: பங்கஜம் புலம்பர்துல இருக்கிற ஜோர் உனக்கு கிராமத்தில் வசிக்கிறதில் இல்லைனு தெரியறது. சரி, usually நீங்க தான் என்கிட்ட application போடுவேல், for a change நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கிறேன். தயவு செய்து கிராமத்துல இருக்கிற எனக்கு புதுசா திருவாபரணம் பண்ணறேன், ராஜகோபுரம் காட்டறேன், தெப்பக்குளம் கட்டறேன் விக்ரஹங்களை ப்ரதிஷ்டை பண்ணறேன் னு please don’t waste your energy and money. உங்க முதியோர் இல்லத்தில் அதிகமாக ஆள் வரா மாதிரி, புது புது விக்ரஹங்கள் ஆபரணங்கள் எங்கள் கோவில் ல சேர்ந்து போறது. ஸேவார்த்திகள் இல்லாமல் யாருக்கு இவற்றை காண்பிக்கிறது.
நீங்க வாங்கோ அனுபவிங்கோ. நீங்க ஒரு வேளை கூட வசிக்க தயாராக இல்லாத அந்த இடத்தில் புதுசு புதிசாக project ஆரம்பிக்காதீங்கோ. உங்க பைசா எங்களுக்கு வேண்டாம். சரியா.

முதியவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் குற்ற உணர்ச்சியில் நின்றனர்.

பெருமாள்: சரி சரி விடுங்கோ. selfie யுடன் படித்ததில் பிடித்தது என்று நாம் பேசியதை facebook,twitter, instagram என்று social mediaவில் போட்டு like வாங்கி, viral post ஆக்குவீர்கள். அவ்வளவு தானே! அதுக்கப்புறம் வழக்கம் போல் எங்களை மறந்து தான் போகப்போகிறீர்கள். புராதனமான கோவில்கள் பாழானாலும், அக்ரஹாரம் அழிந்தாலும் கவலையில்லை. ஹும் ……

முதியவர்கள் கண்களில் தாரை தாரையாக நீர் வழிய அங்கு மௌனம் நிலவியது.

பெருமாள்: சரி எங்களுக்கு time ஆயிடுத்து.நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லியாச்சு. முடிவு உங்கள் கையில். நல்லது நடந்தால் சரி. நாம் எல்லாம் இன்பமாக கூட்டுக்குடும்பமாக இருக்கலாம். என் பிள்ளைகளான நீங்க என்னிடம் வந்தால், உங்கள் பிள்ளைகள் கட்டாயம் உங்களை பார்க்க தானே வருவார்கள். இந்த photo selfieயை DPல வெச்சு அழகு பார்க்கறது மட்டும் இல்லாமல் எங்க கோரிக்கையை deepபாக யோசிங்கோ! நாங்கள் வருகிறோம்.

30-Jan-2023
_________
We hope that this article would have kindled your thought process for sure.
Do not forget to Like, Comment & Share so that there is a change in the way we worship which will change the way we live.

– SARAN Sevaks / Shishyas of Sri APN Swami

விச்வ(வா)மித்ரர்களின் ஸம்வாதம் | தூப்புல் தெப்பம் | Sri APN Swami Writes | Samvadham | Thiruthankal Theppothsavam | Karthigai Shravanam

குறிப்பு :

சம்பிரதாய உரையாடல்களை எழுதுவது  ஸ்ரீ ஏபிஎன் சுவாமியின் தனிப்பட்ட பாணி என்று கூறலாம். ஸ்ரீ ஏபிஎன் சுவாமியின் ஆசார்யனான ஸ்ரீ உ.வே.புரிசை சுவாமியின் திருவுள்ளப்படி பல உரையாடல் நூல்களை வெளியிட்டுள்ளார். இந்த சம்பாஷணைகளில் (conversations) சுவாமி ராமானுஜர், சுவாமி வேதாந்த தேசிகர் போன்ற நம் ஆசார்யர்கள் பெருமாளுடனும்  பிராட்டியுடனும் பேசிய விஷயங்களை மிகவும் ரசமாக எழுதியுள்ளார்.

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி எழுதிய ஏனைய உரையாடல் வடிவில் இருக்கும் நூல்களாவன –

1. தேவதேவனும் தேசிகனும்

2. அனந்தன் கண்ட ஆனந்தாநுபாவம்

3. நைமிஷத்தில் அநிமிஷர்கள்

4. ஆழ்வாரின் பாபம்

5. ஆசார்யரும் அடியேனும்

6. காண்டகு தோளண்ணல்

7. ஸிம்ஹங்களின் ஸல்லாபம்

8. ராஜராஜர்களின் ஸம்வாதம்

9. திவ்ய தம்பதிகளின் ஸம்வாதம் 

10. அரங்கன் உரைத்த அந்தரங்கம்

11. இடைமறித்த  இமையோர் தலைவன்

12. வரதனின் விருப்பம் – 1

13. வரதனின் விருப்பம் – 2


ஶ்ரீ:

விச்வ(வா)மித்ரர்களின் ஸம்வாதம்

சுபக்ருத் கார்த்திகை ஶ்ரவணம் (26-Nov-2022) தீபப்ரகாசன், மரகதவல்லி தெப்போற்சவ அனுபவம்.

(வாத்ஸ்ய ஶ்ரீ க்ருஷ்ணமார்யமஹாதேசிகன் அந்தேவாஸீ, தேசிகபாதுகாஸேவகன் அனந்தபத்மநாபன்)

தூப்புல் தெப்பம்

அனைவர்க்கும் ஆனந்தமளிக்கும் திருத்தண்கா எனும் திவ்யதேசம், அன்றையதினம் ஆஸ்திகர்களின் உள்ளங்களை மேலும் குளிரச்செய்தது. தண் என்றால் குளிர்ந்த என்று பொருள். திரு-தண் என்பதற்கு பிராட்டியினால் குளிர்ந்த, தெய்வீகத்தால் குளிர்ந்த என்றவாறு பல ரஸனையான பொருள் கொள்வதில் சாஸ்த்ரவிரோதம் ஒன்றுமில்லை.

ஹேமந்தருதுவான மார்கழிக்கு குளிர் உண்டு. அதற்கு முன்னமே பிறந்த சரத் ருதுவான கார்த்திகையில் மெல்லிய குளிர் இருக்கும். ஆனால் அன்றைய தினம் அது உள்ளுக்குள் ஊடுருவி உள்ளத்தைக் குளிர்வித்ததன்றோ ஆச்சர்யம்.

விழாக்கோலம் பூண்டிருந்த விளக்கொளி எம்பெருமான் திருக்கோயிலுக்குள் நாமும் பரபரப்புடன் நுழைகிறோம். பொறிகடலை, பஞ்சுமிட்டாய், அகர்பத்தி, அகல்விளக்கு, சூடம் என அருகருகே தீடீரென முளைத்த கடைகள். அவற்றினிடையே ஓயாமல் ஒலியெழுப்பும் இருசக்கர வாகனங்கள். நடப்பதற்கே இடறிவிழும் நிலையில் இடைவெளியின்றி மக்கள் வெள்ளம். நாமும் எவ்வித பிரயாசையும் இன்றி (effortless) வெள்ளநீர் வழிந்தோடும் வேகத்தில் விழுந்த துரும்பு போன்று, அந்த மக்கள் வெள்ளத்தினாலேயே திருக்கோயிலுக்குள் அடித்து (இல்லையில்லை அழைத்து)ச் செல்லப்பட்டோம்.

உள்ளே நுழைத்த சமயம் ஒரு ஒளிக்குவியல் ஊடுருவி நம் ஆனந்த வெள்ளத்தை அதிகரித்தது. விளக்கொளியை, மரகதத்தை திருத்தண்காவில் வைத்த விழி வாங்காமல் விரிய சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. கண்வலிக்காரனுக்கு தீபம் துன்புறுத்தும். கண்ணே தெரியவதனுக்கோ அது துணையில்லை. கண் தெரிந்தும் இருட்டில் வழிதவறி நடப்பவனுக்குத்தானே வெளிச்சத்தின் துணை தேவை. மரகத வல்லியின் மணவாளன் தீபப்ரகாசன் தன மனையாளுடன் மனமகிழ்ந்து நடைபயிலும் காலமிது. மாகுருவாம் தேசிகன் இத்திவ்யதம்பதிகளுக்கு மங்களம் பாடிக்கொண்டு பின்னே வருகிறார்.

மேனி சிலிர்க்க, மகிழ்வெய்தி ஒன்றுமே தோன்றாமல் அந்த ஒளிக்குவியலை வைத்தவிழி மாறாமல் பார்க்கவிரும்பியது மனம். உத்தரவேதியில் ஆவிர்பவித்த வரதனைக்கண்டு பித்தேறிய பிரமன்; ப்ரதக்ஷிணம், அப்ரதக்ஷிணம் என முறை மாற்றி சேவித்தானாம். முன்னும், பின்னும் ஓடியாடி குதித்தானாம்.

அத்திகிரி மான்மியத்தை படித்தபோது அது புரியவில்லை. இப்போது இந்தப் புறப்பாட்டில் முன்புறம் செல்வதா, பின்புறம் தொடர்வதா, குறுக்காகப் புகுந்து எதிர்புறம் வருவதா என தொடர் தடுமாற்றங்கள் உள்ளத்துக்கு ஒரு உற்சாகத்தையே அளித்தன.

கார்த்திகை சிரவண தெப்போற்சவத்திற்குத்தான் திவ்யதம்பதிகளின் இந்த புறப்பாடு. அத்தம்பதியின் ஆர்ப்பரிப்பு அலைகடலையும் வென்றுவிடும். ஆசார்யனுடன் பயணிப்பது அலாதியான சுகமளிக்கும் என்பதை அனுபவசாலிகள் நினைந்திருப்பர். அர்ச்சையிலும் தனக்கிந்த அனுபவம் உண்டென்று தீபப்ரகாசன் பொலியநின்றான். தேவதேவனின் கரம்பற்றி தேசிகேந்த்ரனுடன் பயணம் செய்வதை எண்ணி எண்ணி மரகதவல்லி மனோரதவல்லியானாள்.

ஒருவர்பின் ஒருவராக வெகுஜாக்ரதையாக ஸ்ரீபாதம்தாங்கிகள் பெருமாள், பிராட்டி, ஸ்வாமி தேசிகனை தெப்பத்தில் எழுந்தருளப்பண்ணினர். தெப்பம் மெதுவாக அசையத்தொடங்கியது. அலைகளின் அழகியவரிசையில் அன்னமாகப் பவனிவந்தது அத்திருப்பள்ளியோடம். குதூகலத்தில் மிதந்த தேவதேவியின் திருவுள்ளம் வேதாந்த வாசிரியனிடம் வார்த்தையாட வைத்தது. வாத்யங்களும், வேதபாராயணங்களும், வாணவேடிக்கைகளும், அடியார்களின் அழகிய நாமஸங்கீர்த்தனமும் எங்கும் எதிரொலித்தாலும் திவ்யதம்பதிகளின் அழகிய ஸம்வாதத்தை நமது செவிகள் அள்ளிப்பருகத் தொடங்கின. இவர்கள் பேசின பேச்சுக்கள் நமது உள்ளதே உகந்துறைந்ததை இனிக்காணலாம்.

பிராட்டி – ஆசார்யரே! ஓய் ஆசார்யரே! (என அழைக்கிறாள்)

(திவ்யதம்பதிகளின் பேரழகை அள்ளிப்பருகிக் களித்துக்கொண்டிருக்கும் தேசிகன் காதுகளில் பிராட்டியின் குரல் விழவில்லை)

பெருமாள்– வேங்கடநாதா! பிராட்டி உன்னை அழைக்கிறாள் பார்

(என சொன்னவுடன் திடுக்கிட்ட தேசிகன்)

தேசிகன்: அடியேன் தாயே! நியமனம் என்னவோ?

பிராட்டி – (மெலிதாக நகைத்து) ஹும்.. உங்கள் இருவரையும் பார்க்கும்போது எனக்கு மிதிலையில் அரண்மனை நினைவில் வருகிறது (மீண்டும் மெலிதான சிரிப்பு)

பெருமாள் – தேவி! தேவி! என்ன அது? மிதிலையின் ஞாபகம் என்றால்?

பிராட்டி – ப்ரபோ ” விஶ்வாமித்ரஸ்து தர்மாத்மா ஶ்ருத்வா ஜநகபாஷிதம்.

வத்ஸ ராம தநு: பஶ்ய இதி ராகவமப்ரவீத்.” என்று (இதோ அந்த வில்! என ஜனகன் சொன்னவுடன், தர்மாத்மாவான விச்வாமித்ரர் ராம! வில்லைப்பார் என்று சொன்னார்) வால்மீகி சொன்னதின் உட்பொருளை தாங்கள் நன்கு அறிவீர்கள் தானே! (கண்களை சுழற்றி கேலியாக பிராட்டி பேசியது கண்டு அகமகிழ்ந்தான் தீபப்ரகாசன்)

பெருமாள் – சரி சரி.. புரிகிறது. புரிகிறது. ராமா சீதையைப் பார்த்தது போறும். இதோ வில்லைப்பார் என்று மஹரிஷி சொன்னார். அதற்கென்ன தேவி இப்போது

தேவி – நாத! அன்று விச்வாமித்ரர் உம்மைப் பார்த்துச் சொன்னார். இன்று நீர் விச்வாமித்ர குலத்துதித்த தேசிகனைப் பார்த்து சொன்னீர்.

(பெருமாள் திகைக்கிறார்)

தேவி – ரொம்ப திகைக்காதீர். நான் அழைத்ததை தேசிகன் காதில் வாங்கவில்லை. அதனால் நீர் அழைத்தீர். மிதிலையில் என்னைப் பார்த்த நீர் திடுக்கிட்டு வில்லைப் பார்த்தது போன்று இப்போது தேசிகனைப் பார்த்தேன். சிரித்தேன்… (மீண்டும் சிரிக்கிறாள்)

தேசிகன் – தாயே! திவ்யதம்பதிகளின் சேர்த்தியில் அடியேன் நிலை மறந்தேன்.

பெருமாள் – (குறுக்கிட்டு) அது சரி தேவி! நீ ஏதோ ஆசார்யரே என்று அழைத்தது போன்றிருந்ததே! அஃது என்ன?

தேசிகன் – (துணுக்குற்று) என்ன? தேவி அப்படியா அழைத்தாள்? (என பிராட்டியைப் பார்க்கிறார்)

தேவி – ஏன் அழைத்ததில் என்ன தவறு? தேசிகன் என்றால் ஆசார்யன் என்றுதானே அர்த்தம்.

பெருமாள் – அது பிரஸித்தார்த்தம். ஆனால் நீ அழைத்ததில் ஏதோ உள்ளர்த்தம் உள்ளது போல் தோன்றுகிறது.

பிராட்டி – ஏன்? எப்போதும் நீங்கள் மட்டும்தான் உள்ளர்த்ததுடன் பேசவேண்டுமா? நான் பேசக்கூடாதா?

தேசிகன் – தாயே! வனஸ்பதி ப்ருஹஸ்பதியாவதும், ப்ருஹஸ்பதி வனஸ்பதியாவதும் தங்களின் இன்னருளினாலன்றோ! ஆனால் என்றுமே என்னிடம் வாஞ்சையுடைய தாங்கள் இன்று அப்படி அழைத்ததின் காரணம்தான் என்ன?

பிராட்டி – இப்போது என்ன உத்ஸவம் நடைபெறுகிறது?

தேசிகன் – திவ்யதம்பதிகளின் தெப்போத்ஸவம்

பிராட்டி – நாங்கள் இருவர் மட்டும்தானா… அல்லது….?

தேசிகன் – தாயே! இது என்ன விளையாட்டு? இதோ அடியேனும் ஓடத்தில் உடன் அமர்ந்திருக்கிறேனே!

பிராட்டி – இதற்கு முன்பு இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறதா? தேசிக! நன்றாக ஜ்ஞாபப்படுத்திக்கொண்டு சொல்?

பெருமாள் – (வெகு அவசரமாக) நான் சொல்கிறேன். நான் சொல்கிறேன்! கோபிகளுடன் யமுனா நதியில் பன்முறை படகில் சுற்றியிருக்கிறேன்.

தேவி – (சற்றே கோபமாக) ப்ரபோ! தேவரீரின் திருவிளையாடல்கள் தான் ஜகத் ப்ரஸித்தமாயிற்றே! இன்று கோபியர் யாரும் அருகில் இல்லை என்பதால் என்னுடன் படகில் பவனி வருகிறீர். நான் கேள்வி கேட்டது தேசிகனை. அவனே அதற்குரிய பதில் கூறட்டும்.

(பெருமாள் பேசாமல் தலைகுனிகிறார்)

தேசிகன் – கங்கையில் கடக்கும்போது சீதையான தாங்களும் ராமனாகிய பெருமாளும் தெப்பத்தில் பயணித்ததை வால்மீகி அத்யாச்சர்யமாக வர்ணித்துள்ளாரே!

பிராட்டி – சபாஷ் சபாஷ்.. அவ்வளவுதானா படகு சவாரி.. அல்லது வேறு ஏதாவது உண்டா?

தேசிகன்—தேவதேவி! மேலும் விண்ணப்பிக்கிறேன். அஹம் வேத்மி மஹாத்மாநம் என ராமலக்ஷ்மணர்களை யாக ஸம்ரக்ஷணத்திற்கு அழைத்துச் சென்றாரல்லவா விச்வாமித்ரர்.

பெருமாள்—ஆமாம்.. ஆமாம் (என்றவுடன் பிராட்டியின் கண்ஜாடை கண்டு உடனேயே வாயைமூடிக்கொள்கிறார்).

தேசிகன்—அப்போது விச்வாமித்ரருடன் பெருமாள், இளையபெருமாள் படகில் பயணித்தனர்.

பிராட்டி—அதாவது என் திருமணத்திற்கு முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சி அது. சரிதானே!

பெருமாள்—ஆ..மா.. (என வாய்திறப்பதற்குள் பிராட்டியின் முகம் கண்டு மௌனமாகிறார்).

பிராட்டி— ம்… சொல் தேசிக!

தேசிகன்—சரிதான் அம்மா! விச்வாமித்ரருடன் அவர்கள் பயணித்தனர்.

பிராட்டி—ஆ ஆ ஆ..ம். ஆசார்யரான விச்வாமித்ரருடன் பயணித்தனர். எ.. ன்.. ன! சரிதானே?

தேசிகன்—விளக்கொளியின் மரகதமே! இப்போது அடியேனுக்கு எல்லாம் நன்கு புரிகிறது. (என மெலிதாக நகைக்கிறார்)

பிராட்டி—என்ன புரிந்தது? சொல் பார்க்கலாம்?

தேசிகன்—விச்வாமித்ரருடன் ராமலக்ஷ்மணர் பயணித்தனர். ஆனால் அப்போது நீ அருகில் இல்லை. இப்…போ..து இருக்கிறாய்! (எனத் தயங்கினார்) 

பெருமாள்—தேவி… தேவி. எனைத் தடுக்காதே. நான் சொல்கிறேன். அதாவது விச்வாமித்ரருடன் சேர்ந்து நீயும் நானும் பயணிக்கவில்லை. ஆனால் இந்த விச்வாமித்ரகுல விளக்கு, நம் தூப்புல் குல விளக்கான தேசிகனுடன் இன்று படகில் பயணிக்கிறோம். ஆசார்யரான விச்வாமித்ரர் போன்று, இங்கு ஆசார்யதீபமான தேசிகன். அதனால் நீ ஆசார்ய என்று அழைத்தாய். சரிதானே! சரிதானே! (ஒரே மூச்சில் பெருமாள் பேசிமுடித்து ஆவலுடன் தேவியின் திருமுகம் நோக்கினான்.)

பிராட்டி—ஆஹா, ஆஹா. எ…ன்…ன.. ஒரு உத்ஸாகம். என்னை விடுத்து தனியாகப் பயணித்த சுகமான அனுபவங்கள் பரீவாஹமாக வருகின்றனவே.

பெருமாள்—மரகதவல்லி! நான் எனது குருகுலவாஸ அனுபவங்களில் என்னை மறந்தேன்.

பிராட்டி—என் ப்ராண நாயகனே! நீர் உம்மை மட்டுமா மறப்பீர்! என்னையும்தான் மறப்பீர். அது சரி, என்னை தேசிகனுடன் பேசவிடாமல் குறுக்கே, குறுக்கே தாங்கள் ஏன் பேசுகிறீர்?

பெருமாள்—சரி அம்மா! இனி பேசவில்லை. (பவ்யமாக கைகளினால் வாயைப் பொத்திக் கொள்கிறான்.)

பிராட்டி—என்ன வேங்கட! ஒன்றும் சொல்லமாட்டேன் என்கிறாய்?

தேசிகன்—தங்களுக்கும், பெருமாளுக்கும் இடையில் ப்ரணயகலஹம் முடியட்டும் என காத்திருந்தேன். சரி̀! கேளுங்கள்!

பிராட்டி—அதான் நீயே சொன்னாயே விச்வாமித்ரருடனே ராமலக்ஷ்மணர்கள் படகில் சென்றனர். அப்போது என்ன நடந்தது?

தேசிகன்—மஹரிஷி அஸ்திரங்களை உபதேசித்தார். ஆங்காங்கு பல கதைகளை விவரித்தார். விச்வாமித்ரர் கதைகளைக் கூறக்கூற வழிநடை களைப்பே தெரியாமல் ராமலக்ஷ்மணர்கள் ப்ரயாணம் செய்தனர்.

பிராட்டி—ஆ…ம்…ம். கதை கேட்டுக்கொண்டே இருந்தால் நேரம் போவதும் தெரியாது. அலுப்பும் தெரியாது. இல்லையா!

தேசிகன்—உண்மைதான் தேவி.

பிராட்டி—உனது ராமாயணத்தில் அதை எவ்விதம் பாடினாய்!

தேசிகன்— குஶிக ஸுத கதித நவ விவித கதா (குசிக நந்தனன் எனும் பெயருடைய விச்வாமித்ரரால் சொல்லப்பட்ட பலவிசித்ரமான—அல்லது ஒன்பது முக்ய கதைகளை அறிந்தவனே!) என்று பாடினேன் ரகுவீரகத்யத்தில்.

பிராட்டி—அதன் பின் என்ன நடந்தது?

தேசிகன்—அகலிகை சாபவிமோசனம்.

பிராட்டி—அதாவது மிதிலைக்கு (அழுத்தமாக) வரும் வழியில்.

தேசிகன்—ஹிமோபவனேச்வரி! தங்களின் திருவுள்ளம் புரியவில்லை. சற்று விளக்குங்களேன்!

பிராட்டி—(கேலியுடன்) ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரனாகிய உனக்கா நான் பேசுவது விளங்காது? (என புருவத்தை உயர்த்துகிறாள்)

தேசிகன்—அதில்லை தாயே! விச்வாமித்ரர் சொன்ன கதைகளை கேட்டுக்கொண்டு குதூகலமாக ராமன் பயணப்பட்டான் என்றேன். (சற்று யோசித்து) ஓ. இப்போது புரிகிறது. தங்களுக்கு கதை கேட்கும் வாய்ப்பு இல்லை என்பதுதானே பிணக்கு.

பிராட்டி—அப்பாடா! ஒருவழியாகப் புரிந்துக்கொண்டாயே!

தேசிகன்—என்றோ த்ரேதாயுகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வினைத் தாங்கள் இப்போது எண்ணி மனம் மயங்குவது ஏனோ?

பெருமாள்—நன்றாகக்கேள் தேசிக. எதற்கெடுத்தாலும் எதையாவது நினத்துக்கொண்டு பிணங்குவதே இவளின் வாடிக்கை. விச்வாமித்ரர் கதை சொன்னார். ப்ரஹ்மசாரியான நான் கேட்டேன். பின்னர்தான் ஸஹதர்மசாரிணியான இவளின் கரம் பிடித்தேன். இது ஒரு நிகழ்வு அவ்வளவுதானே! ஏதோ நான் பெரும் அபராதம் செய்ததுபோன்று பேசுகிறாளே! (மூச்சுவாங்கப் பேசினான் தீபப்ரகாசன்)

பிராட்டி—(சற்று ரோஷத்துடன்) அன்று நடந்த கதைக்கு நானொன்றும் பிணங்கவில்லை. இன்று பேச வந்ததே வேறு. எப்போதும் போல் மாற்றிப் பேசுவது நான் அல்ல. எனது எண்ணத்தை மாற்றிப் புரிந்துக் கொள்வது தாங்கள்தான். நான் இப்போது தேசிகனிடம் தான் பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் குறுக்கிடாதீர்கள் (பெருமாள் மறுபடியும் மௌனம்) (தேசிகன்பால் திரும்பி) ம்… நீ பதில் சொல்.

தேசிகன்—அறியாமை இருளகற்றும் ஒளிவிளக்கு எம்பெருமான் என்றால், அவ்விளக்கின் ஒளியன்றோ மரகதவல்லியான தாங்கள்.

பிராட்டி—(சற்றே சலிப்புடன்) ஐயா வேதாந்ததேசிகனே! தங்களின் விளக்கத்தைக் கேட்டேனே தவிர்ந்து விளக்கு ஒளி (தீபப்ரகாச) ஸ்தோத்ரத்தைக் கேட்கவில்லை. (மிகுந்த கனிவுடன்) நான் என்ன நினைக்கிறேன் என்பது உனக்குத் தெரியாதா?) (கருணையுடன் தேசிகனைப் பார்க்கிறாள்) (பெருமாளும் ஆவலுடன் தேசிகனை நோக்குகிறார்). 

தேசிகன் –  தாயே க்ஷமித்தருளவேண்டும், மெய்நின்று கேட்டருளும் அடியேனின் விண்ணப்பம் (தொண்டையை கனைத்துப் பேசவாரம்பிக்கிறார் கண்டாவதாரர்).

ராமாவதாரத்தில் படகு சவாரி நடந்தது முதலில் தேவிகள் இல்லாமல் இளைய பெருமாளுடன்.  அங்குதான் பலவித கதைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.  அதன்பின்னர் வனவாசத்தில் பக்தியுடன் குகன் கங்கையைக் கடத்தியபோதும், பிரயாகையில் பிரயாணம் செய்தபோதும் பிராட்டியுடன் பயணம் செய்தாலும் அதிகம் பேசிக்கொள்ளும் மனோநிலை அங்கு இல்லை (சற்று நிறுத்தி பிராட்டியின் திருமுக மண்டலத்தை பார்க்கிறார்.  பிராட்டி முகவிகாஸத்துடன், நன்று.. நன்று.. என்கிறார்).

தேசிகன் தொடர்கிறார் – பிராட்டி வால்மீகி ஆச்ரமத்திலும், ராமபிரான் அரியணையிலும் இருந்த சமயம் இருவரும் தனித்தனியாகப் பல கதைகளைக் கேட்டுள்ளீர்கள்.  ஒரு வேளை தண்டகாரண்யத்தில் கேட்டிருக்கலாம் என்றாலும் அதில் படகு சவாரி இல்லையே! 

(பிராட்டி மிகுந்த மகிழ்வுடன், ஆம்.. ஆம்.. என்கிறாள்).

இன்று இருவரும் ஒன்றுசேர்ந்து இந்த தெப்பத்தில் பயணிக்கும்போது, நல்லதொரு வாய்ப்பாக பற்பல கதைகளை மகிழ்வுடன் பேசிக்கொண்டு சவாரி செய்ய திருமகளின் திருவுள்ளம்.  சரிதானே தாயே? (மெலிதான புன்முறுவல் பிராட்டிக்கு)

பெருமாள் –  அது சரி!  இதற்கு எதற்காக மறுபடி மறுபடி விச்வாமித்ரரைச் சொல்கிறாள்?

(தேசிகன் ஒன்றும் பேசாமல் மெளனமாகவிருக்கிறார்)

என்னப்பா!  உன் தாய் கேட்டால் தான் உடனே பதில் சொல்ல்வாயோ? (தேசிகன் மௌனம்) என்ன நான் கேட்பது காதில் விழவில்லையா? 

(தேசிகன் பிராட்டியின் திருமுகமண்டலத்தை பார்க்கிறார்.  அவள் புருவத்தை உயர்த்தி பேசு என அனுமதியளிக்கிறாள்)

இதை கண்டும் காணாததுப்போன்று, பெருமாள் – என்னப்பா?

தேசிகன் – சர்வஜ்ஞரே!  உள்ளம், உரை, செயல், குணம் என அனைத்திலும் ஓப்புமை பெற்ற ஒப்புயர்வற்ற திவ்ய தம்பதிகளாக நீங்கள் இன்று அடியேனைக் கொண்டு ஆனந்தமடைகிறீர்கள். ஹு..ம்.. சொல்கிறேன், சொல்கிறேன்.  தாயாரின் திருவுள்ளதை சொல்கிறேன்.

பெருமாள் –  அடேயப்பா! அவதாரிகையெல்லாம் பலமாகத்தான் உள்ளது. ஆனால் நீ சொல்லத் தயங்குகிறாய் போலிருக்கிறதே. எனக்கோ பொறுமை கரைக்கடந்து போகிறது. இது என்ன என்று தெரிந்து கொள்ள இயலாமல் தவிக்கிறேன்.

பிராட்டி – சரி, சரி, நானே சொல்கிறேன். தற்பெருமையை என்றும் விரும்பாதவனன்றோ தேசிகன். ஐயோ பாவம் எதுவுமே தெரியாமல் பரிதவிக்கும் தங்களுக்கு நான் விளக்குகிறேன்.

நம் தேசிகன் விச்வாமித்ர கோத்ரா பூஷணன் அல்லவா! அன்று ராமாவதாரத்தில் ஓடத்தில் கதைகேட்டது போன்று இன்று திவ்யதம்பதிகளாக நாம் அமர்ந்துள்ளோம். விச்வாமித்ரரை போன்று ஆசார்ய ஸ்தானத்தில் உபதேச முத்ரையுடன் நம் தேசிகன். எனவே ராமாவதாரத்தில் விட்டதை அனுபவிக்க இந்த அர்ச்சையில் ஒரு வாய்ப்பு கிடைத்ததே! என மகிழ்கிறேன்.
(பிராட்டி தன்னை ஸ்தோத்ரம் செய்வது கண்டு மெதுவாகத்தலை குனிந்துள்ளார் ஸ்வாமி)

நாத! இன்னுமொரு ஸ்வாரஸ்யம் கேளும். குஶிக ஸுத கதித நவ விவித கதா என்பதால் விச்வாமித்ரர் விஷயமாக சதாநந்தர் கூறிய கதை என்றும் வ்யாக்யானம் உண்டல்லவா!

பெருமாள் – ஆம்.. ஆம்! முதலர்த்தம் விச்வாமித்ரர் கூறிய கதை என்பது. இரண்டாவது அர்த்தம் விசுவாமித்தரரின் கதை என்பது. அது சரி. இதில் இங்கென்ன ஸம்பந்தம்.

பிராட்டி – அதிகமான இலக்கண சர்ச்சை செய்யாமலிருந்தால் ஒரு ஸ்வாரஸ்யம் சொல்கிறேன். (பெருமாளை பார்க்கிறாள், அவன் சம்மதம் என ஜாடை செய்கிறான்) குசிகஸுத என்பதற்கு விச்வாமித்ரர் என்பது போன்று குசிகஸுத தூப்புல் பிள்ளை. அதாவது குசம் என்பதற்கு தர்ப்பம் என்பது பொருள். தூப்புல் – தூய புல் – தூப்புலில் பிறந்த தூய பிள்ளை நம் தேசிகன்.  (பெருமாளைப்பார்த்து) அன்பரே விச்வாமித்ர சப்தத்தின் பொருளைக்குறித்து இலக்கண வல்லுனர்கள் சர்ச்சை செய்வது போன்று இதற்கும் விவாதம் ஆரம்பித்து விடப்போகிறார்கள். நான் எனது அனுபவமாகிற ஸ்வாரஸ்யத்தைச் சொன்னேன்.

பெருமாள் – மரகதவல்லி! அவர்களைக்குறித்து நீ என்றுமே கவலை கொள்ளவேண்டாம். எல்லாவற்றிடும் விதண்டாவாதம் செய்பவர்களுக்கு நாம் எத்தனைதான் பதில் சொல்வது. அவர்களுக்கு இந்த ஸ்வாரஸ்யமான அனுபவம் என்றுமே சித்திக்காது. நம் தேசிகனை நாம் அனுபவிப்போம்.  நீ மேலே சொல்.

பிராட்டி – விசுவாமித்ரரின் கதையை சதாநந்தர் சொன்னது போன்று; சத ஆநந்தர்கள் – அதாவது தேசிகனின் கல்யாண குணங்களில் ஈடுபட்டு நூறு, நூறாகத் தங்களின் ஆனந்தத்தை அபிவ்ருத்தி  செய்துக்கொள்ளும் அடியார்கள் பெருமாள், பிராட்டியான நமது சேர்த்தியில் தேசிகோத்தமனின் புகழைப் பாடுகின்றனர். மிதிலையில் நமது கல்யாணத்தில் ஆசார்ய குணானுஸ்ந்தானம் போன்று இன்று இந்த தெப்ப உத்ஸவத்தில் நாம் கண்ட அனுபவம் இது.

பெருமாள் – ஆஹா… ஆஹா… அத்புதம்…அத்புதம். ஆச்சர்யமான அர்த்தவிசேஷம். ஒவோன்றும் அனுபவரஸனை. சதாநந்தர் ஹோ ஹோ (உரக்கச்சிரித்து) சதாநந்தர் இவ்வடியார். நன்று. நன்று. என்ன தேசிக! சரிதானே!
(தேசிகன் மௌனமாகத்தலை குனிந்துள்ளார்)

(அதற்குள்ளாகத் தெப்பம் மெதுவாகப் புறப்படத் தொடங்குகிறது)

பிராட்டி – (தேசிகனைப்பார்த்து) என்ன விச்வாமித்ரரே! தெப்பம் கிளம்பிவிட்டது. இப்போதாவது கதை சொல்லத் தொடங்குகிறீரா (நகைப்புடன் கேட்கிறாள்)

தேசிகன் – தேவதேவியின் நியமனம் அடியேன். (என வணங்கி காசி, வ்ருக, அந்தகன்  முதலிய கதைகளைச் சொல்ல ஆரம்பிக்கிறார். (ஶரணாகதி தீபிகை பத்தொன்பதாம் ச்லோகத்தை கண்டு கொள்வது) அசைந்தாடும் தெப்பத்தின் நடுவே பெருமாளும் பிராட்டியும் ஆனந்தமாகக் கேட்டுக்கொண்டு ரஸிகின்றனர்.

அற்புதமான இந்த ஸம்வாதத்தைக் கேட்ட அடியார்களான சதாநந்தர்கள் ஸஹஸ்ராதிகமான ஆனந்தமடைந்தனர்.

விச்வம் என்றால் எம்பெருமான்/உலகம் என்று பெயர். இவ்வுலகை வாழ்விக்கும் மித்ரர்கள் (ஸுஹ்ருத்துக்கள்) பெருமாளும் தாயாரும். தேசிகன் விச்வாமித்ரர். அதாவது சரணாகதி அளித்து உலகைக் காப்பவர் திவ்யதம்பதி. சரணாகதிசாஸ்த்ரத்தையளித்துக் காப்பவர் தேசிகன். எனவே இம்மூவரும் விச்வமித்ரர்கள். அவர்களின் ஸம்வாதம் இது. 

—APN.

தங்களின் மேலான கருத்துக்களை comments sectionல் பதிவிடுங்கள். ஸ்ரீ APNSwami அருளியுள்ள புத்தகங்களையும் வ்யாஸங்களையும் இந்த வலைத்தளத்தில் free download செய்து படிக்கவும் பகிரவும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஸ்ரீ APNSwami அருளியுள்ள புத்தகங்கள் – https://apnswami.wordpress.com/publications/
ஸ்ரீ APNSwami அருளியுள்ள வ்யாஸங்கள் – https://apnswami.wordpress.com/blogpages/

#தூப்புல்        #தீபப்ரகாசன்             #தேசிகன்       #APN

Two Meaningful Theft (திருட்டு)  பொருளை தரும் பொருள் களவு | Sri APN Swami’s Shishya Writes | Karthigai Karthigal Special | Kaliyan Thirunakshathiram

Two Meaningful Theft (திருட்டு)  பொருளை தரும் பொருள் களவு

💫💫💫💫( ஸ்ரீ APN ஸ்வாமி யின் உபந்யாஸத்தில் ரசித்த சில துளிகள்)
💍💍💍💍💍💍💍💍💍💍💍
     திருடர்கள் பொருளை தேடி திருடுவர்.  களவுகளை செய்தவர்கள் எந்த பொருளை பெற்றனர் ?  இரண்டு கதை கொண்டு பார்க்கலாம் வாருங்கள்.

திருட்டு 1 – 💫💫💫💫

பாகவத ததீயாராதனம் செய்வதற்கு வழிபறி, திருட்டு செய்தவர் பரகாலன் என்னும் நீலன்.  எம்பெருமான் திருமணக்கோலத்தில், சிறந்த, உயர்ரக அணிகலன்களுடன் தானும் தன் மனையாளுமாக, இவர் வழிப்பறி செய்வதற்காகப் பதுங்கி இருக்கும் வழியாக வந்தான்.  பதுங்கியிருந்த நீலன்,  அவர்களை  வாளை வீசி அச்சுறுத்தி, வழிப்பறி  செய்தார்.  அப்போது, மணமகன் (எம்பெருமான்) காலில் இருந்த மோதிரம் கழற்ற முடியாமல் போக, நீலன் அதைக் கழற்றுவதற்காகத், தன் பல்லால் கடித்து வாங்க, மணமகனான எம்பெருமான் இவரைப் பார்த்து, “என்ன தைர்யம் உமக்கு!” என்று மெச்சும் (பாராட்டும்) வகையில், “மிடுக்கனோ நீர்!” என்ற அர்த்தத்தில் இவருக்குக் கலியன் என்று பெயரிட்டான். 

பெருமானிடம் வழிப்பறி செய்த பொருள்களை மூட்டையாகக் கட்டி, அதைத் தூக்க முயன்ற பொழுது, மூட்டையின் கனம் மிகவும் அதிகமாக இருந்ததால், அவரால் அதைத் தூக்க முடியாமல் போயிற்று.  இப்படி, மூட்டை, தூக்க முடியாமல் இருப்பதற்கு என்ன மந்திரம் செய்தாய்? என்று பரகாலன் மணமகனை மிரட்டிக்கேட்டு, தன்  கையிலிருந்த வாளை வீசி மிரட்டினார். மணமகனான எம்பெருமான் மந்திரத்தைக் கூறுவதாக இவரை அருகில் அழைத்து, திருமந்திரம்  என்னும்  அஷ்டாக்ஷர மந்திரத்தை, கலியனுக்கு உபதேசித்து அருளினான். பகவானிடமே உபதேசம் பெற்ற பரகாலன், அன்று முதல் பக்தனானான்.  தன் மனைவியின் பெயரான திருமங்கை என்னும் புனைபெயர் கொண்டு பாக்களைப் பாடி  திருமங்கையாழ்வார் என்ற திருநாமத்தைப்  பெற்றார்.   பரகாலன் என்னும் கலியன், நாயிகா பாவத்துடன் பரகாலநாயகியாக பாசுரங்களை அருளினார்.

ஸ்வாமி தேசிகன் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தில் –“ஸர்வேஸ்வரன் பக்கலிலே ஸர்வார்த்த க்ரஹணம் செய்த திருமங்கையாழ்வார்”   என்று போற்றுகிறார்.

பரகாலன் சென்றதோ பொருள்(wealth) திருட.  ஆனால் பொருளை மட்டும் பெறவில்லை திருமந்திரத்தின் பொருளையும் பெருமாள் பிராட்டி அருளினால்  பெற்றார்.  போனதோ அர்த்தம்(belongings) க்ரஹணம்(grab) பண்ண, ஆனால் க்ரஹித்ததோ திருமந்திர அர்த்தம்(meaning). இந்தத் திருட்டு(அதாவது வேதத்தின் அர்த்தம் உபதேசம்) நடந்த இடம் வேதநாராயணபுரம் என்று வழங்கப்படுகிறது.

திருட்டு 2 – 💫💫💫💫

   இதே போல் திருடனான வால்மீகியும்,  நாரதரை வழிமறித்துத்  திருட  முயன்றார். அப்பொழுது  நாரதர் அவருக்கு அக்ஷர த்வயமான ராம நாமத்தை உபதேசம் செய்தார் என்பதை அறிவோம்.

பின்னாளில், வால்மீகி  நாரதரிடத்தில் பதினாறு குணங்களை பட்டியலிட்டு அந்த குணங்கள் அனைத்தையும் உடையவன் யார் என்று வினவுகிறார்.  நாரதரும் அனைத்து காலத்திலும், அனைத்து லோகத்திலும் பட்டியலிட்ட அனைத்து குணங்களையும் கொண்டவர் ஸ்ரீராமபிரான் ஒருவனே என விடையளித்து, ராமனின் திவ்ய சரித்திரத்தை வால்மீகிக்கு உபதேசம் செய்கிறார்.  நாரதர் வால்மீகிக்குச் செய்த இந்த உபதேசமே ஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தில் முதல் ஸர்கத்தில் ராமாயணச் சுருக்கம் என வழங்கப்படுகிறது.

வால்மீகி  நாரதரிடம் ஸர்வார்த்தத்தையும் (all belongings) க்ரஹணம் செய்ய நினைத்தார்.  ஆனால் வேதத்தின் ஸாரமான ராமாயணத்தை அறிந்து, வேதத்தின் ஸர்வார்த்தத்தையும்(all meanings) க்ரஹணம் செய்தார்.

இதுவே இரண்டு தேவரிஷிகளிடம் இருந்து திருடர்கள் திருடிய two meaningful திருட்டு. வால்மீகிக்கு ராம நாமம் உபதேசம் செய்த நாரதர் தேவரிஷி. பரகாலனுக்கு திருமந்திரத்தை உபதேசம் செய்தவர்  தேவதேவனான நாராயண ரிஷி. ஆம், பத்ரிகாச்ரமத்தில் நரனுக்குத் திருமந்திரத்தை உபதேசம் செய்தவர் நாராயணன் என்னும் ரிஷியான பரமாத்மா அன்றோ!!

Aren’t these two meaningful thefts? 😊

நாமும் ஸர்வார்த்த க்ரஹணம் செய்ய, பெருமாள், பிராட்டி, நாரதர், வால்மீகி, திருமங்கையாழ்வார் மற்றும் ஸ்வாமி தேசிகனை ப்ரார்த்திப்போம்.

குறிப்பு: இந்த வ்யாஸம் ஸ்ரீ APN ஸ்வாமியிடம்  இராமாயணம், சில்லரை ரஹஸ்யம் மற்றும் ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸார காலக்ஷேபத்தில் பயின்றவற்றின் ஸாரத்தை அடியொற்றியது. 

கார்த்திகை கார்த்திகை நன்னாளாம் இன்று நாமும் ஸர்வார்த்த க்ரஹணம் செய்ய, பெருமாள், பிராட்டி, நாரதர், வால்மீகி, திருமங்கை ஆழ்வார், ஸ்வாமி தேசிகனை ப்ரார்திப்போம்.

அடியேன்
ஸ்ரீரஞ்ஜனி ஜகந்நாதன்

Sri APNSwami #Writes #Articles | Rukmangathan – Greatness of Ekadasi Vratham – ருக்குமாங்கதன் – ஏகாதசி விரதத்தின் மகிமை

அயோத்தியாபுரியில் ருஷபத்துவஜன் எனும் அரசன் ஆண்டு வந்தான். அவன் மகன் ருக்குமாங்கதன். ருக்குமாங்கதன் அரசனானபோது திருநந்தவனம் வைத்து மலர்களைக் கொண்டு எம்பெருமானைப் பூசித்து வந்தான். அந்நந்தவனத்தில் பல சிறந்த மலர்களிருந்தன. அதனைத் தேவேந்திரன் அறிந்து ரம்பை முதலான தெய்வலோகப் பெண்களின் உதவியால் அம்மலர்களைத் தான் பெற்று வந்தான். மலர்கள் குறைவது அரசனுக்குத் தெரிந்ததும் காவலாளர்களை அமைத்தான். அவர்காளாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால் அரசன் அவர்களைத் தண்டித்தான். அவர்கள் அருகே இருந்த ஒரு தவசியைப் பிடித்துக் கட்டி அரசனிடம் கொண்டு வந்தனர். அரசன் அவர் கட்டுக்களை மெல்ல அவிழ்த்து விசாரித்தான். அவர் உண்மையைக் கூறிக் கொம்மட்டிக் கொடியைப் பயிரிட்டால் அவர்களைக் கண்டு பிடிக்கலாம் என்று கூறினார். அரசன் அவ்வாறே செய்தான்.

ஒரு நாள் மலர் பறித்துக்கொண்டு செல்லும் ரம்பா ஸ்திரீகளில் ஒருத்தி காலில் அக்கொடி பட, அவள் தெய்வப் பிறவியின் வலிமையையிழ்ந்து தேவலோகம் செல்லமுடியாது நின்றாள். காவலாளர் அச்செய்தியை அரசனுக்கு அறிவித்தனர். அரசன் அங்கு வந்து அவளை விசாரித்தான். அவள் உண்மையைக் க்றினாள். பின், அரசன் அவளை நோக்கித் தேவலோகம் செல்லத்தக்க உபாயம் யாதெனக் கேட்டான். அவள் ஏகாதசி தினத்தன்று பட்டினி கிடக்கும் ஒருவர் அதன் பலனை எனக்குக் கொடுத்தால்தான் தேவலோகம் செல்லக் கூடும் என்று கூறினாள். அரசன் ஏகாதசி தினத்தில் பட்டினி இருக்கும் விரதத்தை அனுஷ்டிப்பார் எவரேனுமுண்டோ என்று பலரை விசாரித்தான். ஒருவரும் அகப்படவில்லை. அப்போது அத்தேவலோகப் பெண் அரசனது கைத்தாயை வரவழைக்க வேண்டினள். அவளும் வந்தாள். அவளை நோக்கித் தேவலோகப் பெண், அம்மா நீ ஒரு நாள் கோபத்தால் புசியாமல் இருந்தாய், மறுநாட் காலையில் புசித்தாய். நீ புசியாமலிருந்த நாள் துவாதசி. அவ்விஷயம் உனக்குத் தெரியாதிருந்தும் புண்ணியம் செய்தாய். அப்புண்ணியத்தை எனக்குக் கொடு, என்று கேட்டாள். அவளும் இசைந்து கொடுக்கத் தேவலோகப் பெண் தேவலோகம் போய்ச் சேர்ந்தாள்.

அன்று முதல் ருக்குமாங்கதன் நாட்டிலுள்ளார் அனைவரும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கும்படி கட்டளையிட்டு அத்தினத்தில் யாவரும் அறிய பேரிகை முழங்கி வந்தான். அதனால் ஒருவரும் நரகலோகம் அடையாது சுவர்க்கம் புகுந்தனர். அதனால் எமன் பிரம்மனிடம் முறையிடப் பிரம்மன் ஊர்வசியை அழைத்து ருக்குமாங்கதனை வசப்படுத்துமாறு கட்டளையிட்டார். அவ்வாறே ஊர்வசி மிக்க அழகுடன் பூமியில் தோன்றி ருக்குமாங்கதனை அடைந்து தன் கருத்தைப்போல் நடப்பதாக அவனிடமிருந்து வாக்குறுதி பெற்றுக் கொண்டு அவனோடு வாழ்ந்து வந்தாள். ருக்குமாங்கதன் தன் மகன் தன்மாங்கதனை அரசனாக்கி விட்டு ஊர்வசியோடு இன்பம் நுகர்ந்து வந்தான். ஒரு நாள் காலையில் ஊர்வசி ருக்குமாங்கதனுக்குத் தாம்பூலம் மடித்துக் கொடுக்கையில் பேரிகை முழக்கம் கேட்டது. ருக்குமாங்கதன் அன்று ஏகாதசி தினமாதலால் தாம்பூலம் கொள்ள மறுத்தான். ஊர்வசி வாக்கு மாறியதைக் கூறி அவனை விட்டுப் பிரிந்து காட்டின் வழியே நடக்கலானாள். தன்மாங்கதன் விரைந்து அவளைத் தடுத்து அழைத்துவந்து தந்தைபால் விடுத்தான். அப்பொழுதும் ருக்குமாங்கதன் தாம்பூலம் கொள்ள மறுத்து வேறு எது செய்யவும் ஒப்புக் கொண்டான். ஊர்வசி, தன்மாங்கதன் கழுத்தை வாளால் வெட்டச் சொன்னாள். உடனே ருக்குமாங்கதன் வெட்டினான். அவ்வாள் தன்மாங்கதன் கழுத்தில் மாலையாக விழுந்தது. அப்பொழுது மும்மூர்த்திகளும் தேவேந்திரனும் தோன்றினர். அரசனும் அந்நகரிலுள்ள ஏகாதசி உபவாசிகளும் வைகுந்தம் சேர்ந்தனர். ஏகாதசியன்று உபவாசத்துடன் எம்பெருமானைச் சேவிப்பவர் வைகுந்தம் அடைவர் என்பது நிச்சயம்.


Temple Run in Srimadh Bhagavatam | Based on Sri APN Swami’s Upanyasam | Sri APN Swami’s Shishya Writes

Temple Run in Srimadh Bhagavatam | Based on Sri APN Swami’s Upanyasam 

Temple Run is a famous 3D endless running video game.  It is an infinite runner where the player must escape from his enemy and avoid all the obstacles and traps that are found along the way.  The evil monkey monsters keep chasing and the runner escapes by traversing all odds and finally escape with the gold idol. 

Let’s look at Temple Run from a traditional angle and see who is running away from a Temple and what is the golden idol obtained by the runner. The video game is an endless running but this Temple run paves way for ending our run i.e cycles of birth and death from this evil samsaram

Let the Temple Run begin…. 

எம்பெருமானின் தயா ஸ்வரூபமாக திகழுபவள் 

பரமாத்மாவின் அவதாரத்திற்கேற்ப ஒத்த நிலையில் அவதரிப்பவள் 

விதர்ப தேச குண்டினபுரத்தில் வைதர்பினியாக தோன்றினவள் 

பிறப்பற்றவள் பீஷ்மகனின் புத்திரியாக பிறந்தாள் 

த்வாரகாதீஷனின்  தீய குணங்களைப் பற்றி கேட்டு கேட்டே  அவனுக்காக காதல் கோட்டை கட்டியவள்  

பழம் பகைவன் சிசுபாலனை மணக்க மனமில்லாதவள் 

எப்படியாவது கண்ணனையே கண்ணாளனாக அடைய ஆவல் கொண்டவள்  

ஓர் இரவில் கண்ணனை அழைத்து வர தகுந்த த்விஜனிடம் (கருடன்) ஸந்தேசம் அனுப்பியவள் 

aptஆனாவர்  (ப்ராஹ்மணர்) ஆப்தராக  ஆப்டவுடன் அவரை த்வாரகாதீஷனிடம்  காதல் தூது அனுப்பியவள்

காதல் கடிதத்தை கண்ணனிடம் படித்து காட்டும் படி பிராமணனிடம் (கருடனிடம்) விப்ர ஸந்தேசம் கொடுத்தவள் 

ஸுதாமா மண்டபத்தில் அமர்ந்திருந்த புவன சுந்தரனுக்கு ஸந்தேசம் கொடுத்தவள் 

தாமதித்தால்  Mrs. சிசுபாலன் ஆகிவிடுவேன் என்று கண்ணனை  எச்சரித்தவள் 

கோவர்தனத்தை தாங்கினவனை தன் ஹ்ருதயத்தில் தாங்குபவள்

அச்யுத்தன் கைவிடாமல் கைப்பிடிக்க மணாளனாக எப்பொழுது வருவான் என்று அவன் வரவை எதிர்பார்த்தவள் 

எவ்வித தயக்கமின்றி கண்ணனிடம் தன் மனதை பறிகொடுத்தவள் 

எல்லாவிதத்திலும் பொருத்தமாக இருந்த கண்ணனுக்கு காதல் செய்தி அனுப்பியவள் 

ப்ரஹ்லாதனுக்கு அப்பொழுதே தோன்றிய ந்ருஸிம்ஹனுக்கு ஹரிணியாக(பெண் சிங்கமாக) ஸந்தேசம் அனுப்பியவள் 

பராக்ரமம் கொண்ட சிங்கத்துக்குரிய மாமிசத்தை ஒரு நரி எடுத்து போகலாமா என்று கடிதத்தில்  கேள்வி கேட்டவள் 

தான் செய்த தவத்தின் பலன் உண்மையானால்,  தபகோஷனின் மகனான சிசுபாலனின் நகம் கூட படாதபடி அழைத்துச்செலுத்துமாறு பிரானிடம் ப்ரார்த்தித்தவள் 

Silentaaga வா ஆனால் சீக்கிரமாக வா என்று கண்ணனுக்கு செய்தி அனுப்பியவள் 

பகைவர்களின் படையை அழித்து, தன்னை ராக்ஷஸ விவாஹம் செய்துகொள்ளுமாறு கண்ணனிடம் வேண்டியவள்

ஊருக்கு வெளியில் இருந்த கிரிஜா (இந்திராணி) தேவாலயத்தில் காத்திருப்பதாக கடிதம் எழுதியவள் 

கண்ணா உன் திருவடி துகள்களுக்கு ஆசைப்படும் என்னிடம் நீ வரவில்லையென்றால் உயிர் துறப்பேன் என்றவள் 

கண்ணா நீ வந்தே ஆகவேண்டும் என்று கண்ணனுக்கு ஆணையிட்டவள்

இடது கண், புஜம் துடிக்க, துளஸி பரிமளம் காற்றில் வீச  கண்ணன் வருவதை அறிந்தவள் 

யாரும் அறியா வண்ணம் silentaaga வா என்ற பொழுதும், violentaaga பம் பம் பம் என்று சங்கத்த்வனியுடன் வந்த கண்ணனை கண்டு ஸந்தோஷித்தவள் 

ஆச்சரியத்தின் உருவானவள் தன்  மணாளனை கண் முன் கண்ட பின் தன்னையே மறந்தவள் 

“இனிபயம் வேண்டாம்” என்ற கண்ணனின் திருத்தோள்களில்  அமைதியாக அணைந்தவள் 

கிழக்கு திக்கு சூரியன் மேற்கு  செல்லச் செல்ல  கிழக்கே இருள் சூழ்வது போல்,  கண்ணனுடன் த்வாரகை நோக்கி சென்று,  குண்டினபுரத்தை இருள் சூழச்செய்தவள் 

எம்பெருமானும் பிராட்டியும் என்றும் பிரியாதவர்கள் என்று அறியாதவர்களுக்கு  அறிவித்தபடி மிதுனமாக கண்ணனுடன் திருத்தேரில் குண்டினபுரத்தில் பவனி வந்தவள் 

த்வாரகையில்  த்வாரகாதீஷனை மணம் புரிந்தவள் 

அவளே நம் ருக்மிணி பிராட்டியானவள். 

அந்த பிராட்டி நமக்கு ஸகல மங்களங்களையும் அருளட்டும். 

Thus Rukmani escaped from the shackles of Shishupala and got her golden soulmate Krishna. Meditating on this Temple run by Rukmani paves way for us to escape the evil samsaram for sure. 

This is an extract based on Sri APN Swami’s Rukmani Kalyanam Upanyasam (10th July 2017) from his Skandam wise Srimadh Bhagavata upanyasam conducted over a period of 15 years at Malleshwaram, Desika Sabha. 

அடியேன் 

Sriranjani Jagannathan

SARAN Sevak & Shishyai of Sri APN Swami

2-11-2022 

Sri APN Swami’s #Shishya Writes #Trending | Kantara, Virat Kohli, Rishi Sunak | Traditional Trending

காந்தாராவும் கண்டாரவமும்

( An extract from an interesting discussion with Sri APN Swami and SARAN Sevak Sri Prasanna on current Trending topics like Kannada Movie Kantara, Virat Kohli, Rishi Sunak from a Traditional Angle)

Traditional Trending என்றாலேயே APN குருஜிதான். நூற்றுக்கணக்கான தலைப்புகளில் அவ்வப்போது உலகியல் நிகழ்வுகளை ஸம்ப்ரதாய விஷயமாகச் சொல்வது அவரின் தனிப் பாணி. ஜிமிக்கி கம்மல், சின்னத்தம்பி கும்கி, பாகுபலி, காஷ்மீர் பைல்ஸ் என trending topics அவரின் Blogகில் (https://apnswami.wordpress.com/blogpages/) மலிந்து கிடக்கின்றன. “இவர் எப்படி எல்லாவற்றையும் ஸம்ப்ரதாயத்துடன் connect செய்கிறார்?” என்று அறிய ஆவல் உண்டானது. ஒருசிலரைப் போன்று இருபத்திநான்கு மணிநேரமும் தோஷத்தையே தேடிப்பிடித்து, அற்ப சந்தோஷம் அடைவது எனது நோக்கமல்ல. ஒரு சாதாரண ரசிகனாக எனது விருப்பத்தை வெளியிட்டேன். அதன் பின்பு எனக்கும், அவருக்கும் நடந்த உரையாடலை என்னால் இயன்ற அளவு பதிவு செய்துள்ளேன். இதில் விடுபட்டவைகள்தான் அதிகம். அவ்வளவு விஷயங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

நான் – குருஜி! இன்றைய trending என்ன தெரியுமா?

குருஜி – விராட் கோலியா, ரிஷி சுனக்கா, காந்தாராவா? எதை ட்ரெண்டிங்-னு சொல்ற?

நான் – (மலைத்து) குருஜி! எனக்குத் தெரிஞ்சதையே நான் நெனச்சேன். ஆனா எல்லாத்தையும் நீங்க கடகடன்னு சொன்னதால் பிரமிச்சிட்டேன். நான் கேக்க வந்தது காந்தாரா பத்தி மட்டும்தான்.

குருஜி – (அவருக்கே உரிய சிரிப்புடன்) ok. no feelings.. உனக்கென்ன தெரியணும்? கேளு..

நான் – உங்களுக்கு சினிமா பாக்கற பழக்கமே இல்லையே? actual-ஆ உங்களுக்கு time-ஏ இல்ல. But எல்லாத்தையும் எப்படி கரெக்ட்டா relate பண்றீங்க? More over, ஒரு படமே direct பண்ணியிருக்கீங்க குருஜி. Simply amazing.

குருஜி – என்னை praise பண்ண வந்தியா இல்ல உன் doubt clarify பண்ண வந்தியா?

நான் – ரெண்டும் தான். சரி காந்தாரா பத்தி ஏதாவது trending சொல்லுங்களேன்.

குருஜி – காந்தாரா பத்தி மட்டும் என்ன? நான் சொன்ன எல்லா topic-ஐயும் relate பண்ணி ஒரு சப்ஜெக்ட் சொல்லவா?

நான் – (அசந்துபோய்) குருஜி is it? நிஜமாவா? முடியுமா?

குருஜி – (சிரிச்சுண்டே) start மீஜிக்! என்றார் (காமெடி sense-ஓட scenes-ஐயும் relate பண்றதுல குருஜிக்கு நிகர் குருஜி தான்)

குருஜி – முதல்ல எனக்கு இத பார்த்தா கைசிக புராண scene தான் மனசுல ஓட்றது. காந்தாரம் என்றால் என்ன? Mysterious forest. அடர்ந்த காடு. இங்க பார் தம்பி, நீ cinema content-அ இங்க fix பண்ணாத. நான் சும்மா just like that அதைப்பத்தி சில விஷயம் சொல்றேன். என்ன ok-வா? இப்ப பாரு. Mysterious forest அப்படின்னா ஸம்ஸார காந்தாரம். ஸம்ஸாரம் எனும் பெரும் காடு. அதுல சுகமாக வாசிக்க என்ன செய்யணும்? ம்ம்ம்?

நான் – (முழிக்கறேன்)

குருஜி – காந்தாரா last song இன்னிக்கு superhit trending தானே?

நான் – yes குருஜி

குருஜி – அதோட meaning என்ன? “வராஹரூபம் தெய்வவரிஷ்டம்”. தெய்வத்தின் தெய்வம். அயர்வறும் அமரர்கள் அதிபதி. ஆயிரமாயிரம் தெய்வங்களுக்கும் அவனே அதிதேவதை. “தம் ஈச்வராணாம் பரமம் மஹேச்வரம்”. சிவஸம்பூதம் – சிவம் என்றால் மங்களம். சிவம், கல்யாணம், மங்களம் என அனைத்தும் மங்களவாசகம். இந்த அவதாரத்தின் மங்களத்தன்மை காண்பிக்கப்படுகிறது. “கோணாரவை: குர்குரை:” என பகவானின் உறுமல் நம்மை காக்கட்டும்” என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

ஸம்ஸார காந்தாரத்தில் நம்மை ரக்ஷிப்பவன் வராகன். வராக சரமச்லோகத்தை நினைத்துப்பார். அந்த கடைசி trending climax-ல் தன மார்மீது கைவைத்து ரக்ஷகத்வத்தை வெளியிடுவதை கவனித்தாயா? “அஹம் ஸ்மராமி மத்பக்தம்” என்னும் உயர் பொருளை உணர்த்துவதாகக் கருது.

(குருஜி சொல்லச்சொல்ல வியந்துபோய் நான் வாய்பிளந்து நின்றேன். ஒரு திரைப்படத்தின் ஒரு காட்சியை மட்டுமே வைத்துக்கொண்டு இவ்வளவு விஷயங்களை ஸம்ப்ரதாயமாகப் பார்க்கமுடியுமா? ப்ரமிப்பின் உச்சத்தில் நான்.)

குருஜி – நீ கேட்டயே-ன்னு சிலது சொன்னேன். இவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு காட்சிலேயும் பொருந்த வேண்டும்-ங்கற நிர்பந்தம் இல்லை. மேலும், திரைப்பட விமர்சனம் என்னோட நோக்கமல்ல. Just like that சொன்னேன். That’s all. இதுக்காகவே காத்துண்டு இருந்து time waste பண்ணி பக்கம் பக்கமா சிலபேர் விமர்சனம் பண்ணப்போறா! My intention is not like that (சிரிக்கிறார்)

நான் – குருஜி, super. semma. எனக்குத் தெரியும் நீங்க full movie பாக்கல. அங்கங்க சில reels அப்பறம் சிலபல விமர்சனம். இத வெச்சுண்டே semma-யா point relate பண்றீங்க Ok. இப்ப second trending விராட் கோலியோட. இத எப்படி connect பண்ணுவீங்க?

குருஜி – Simple. Virat அப்படின்னா விராடஸ்வரூபம். விச்வரூபம். Kholi கோலவராகன் என்கிறார் ஆழ்வார். விச்வரூப வராகன் பூமியை (தேசத்தை) காத்தான். அதாவது “காந்தாரம்” – மனைவியை. காந்தா என்றால் மனைவி. மனைவியான பூமியைக் காத்தான் விராட் கோலன்.

அதே பூமியின் (தேசத்தின்) பெருமையைக் காத்தவன் Virat Kholi. விச்வரூபமெடுத்த விராட் கோலி என்று தானே heading.. so இந்த trending ok-வா?

நான் – ஐயோ குருஜி! இது விராட் கோலி சிக்ஸரை விட Super சிக்ஸர். Super. சரி ரிஷி சுனக் எப்படி இங்க?

குருஜி – நா மொதல்லேயே சொன்ன மாதிரி அங்கங்க touch பண்ணனும். சும்மா எல்லாத்தையும் ரொம்ப ஆராய்ச்சி பண்ணக்கூடாது. Trending topic சுனக் தானே? சுனக் என்பது சௌனகரிஷி என்று பொருள்.  விராட் ரூபனான வராகனின் விச்வரூபத்தை சௌனகர் முதலானவர்களுக்குத்தான்  சூத  பௌராணிகர் பாகவதமாக விவரிக்கிறார். So சும்மா இது ரெண்டையும் connect பண்ணா enjoy பண்ணலாம். Just like that ரசிப்பதற்கு மட்டும்.

நான் – ஐயோ! குருஜி.. பின்றீங்களே!

குருஜி – Wait.. இதுல இன்னொரு சுவாரஸ்யம் சொல்லட்டா?

நான் – Wow. Double ok. Please.. சொல்லுங்க குருஜி.

குருஜி – Wait and see

நான்- குருஜி, குருஜி. Please குருஜி. அது என்ன concept!

குருஜி – நான் மொதல்லேயே clearஆக சொல்லிட்டேன்.  Scene by Scene இதோட connection வராது. but overall என்னோட observation வெச்சு ஒரு trending. அவ்வளவு தான்.


நான் – அதான் தெரியுமே. Suspense தாங்கல. Please மொதல்ல secretஅ open பண்ணுங்க.

குருஜி – இந்த கதையோட main concept என்ன? தெய்வத்துக்கிட்ட கொடுக்கிற வாக்குறுதியை மீறினா! அதன் result unexpected ஆ இருக்கும். அதானே!


நான்- Yes, Yes….

குருஜி – “அஹம் ஸ்மராமி …. நயாமி….” (நான் பக்தனை நினைக்கிறேன். உயர்ந்த நிலையை அடைவிக்கிறேன்.)  என வராகப் பெருமாள் வாக்குறுதி தந்தார். நாமும் அநுகூலனாகவே இருக்கிறேன் (அதாவது தெய்வத்திற்கு விருப்பமில்லாத கார்யத்தைச் செய்ய மாட்டேன்) என வாக்குறுதி அளித்து, அதை மறந்து தவறான செயல்களைச் செய்கிறோமே…. (குருஜியின் கண்  கலங்குகிறது..)


நான்:  (மெளனமாக அவரையே பார்க்கிறேன். சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்ட (குருஜி) தேவதேவனான கோலவராகன் mysterious ஸம்ஸாரத்திலிருந்து நம்மை ரக்ஷிக்க காத்திருப்பதை நாம் உணருவதில்லை.

Another important…… அந்த last scene எல்லார் கையும்  ஒன்னா கோக்கிறது, may be பூமிய காப்பாத்த  – that means இன்னிக்கு ஹிரண்யாக்ஷன் மாதிரி various அழிப்பாளர்கள் இருக்கிறதுனால எல்லோரும் ஒன்னா கைகோக்கணும்னு சொல்லறா மாதிரி எனக்கொரு feel.

இப்ப Kholi-ய எடுத்துப்போம். விளையாட்ல ஜயிச்சதும் தேசத்திற்கு அது பெருமையளித்தது. அதாவது கோலியின் கேளி. கேளின்னா விளையாட்டு. So பெருமாள் கோலியாக கோலவராகமாக அவதரித்து கேளியாக – விளையாட்டாக effortless-ஆ பூமியை காப்பாத்தினானே அதே போல. So இது கோலியின் கேளி (சிரிக்கிறார்).

நான் – குருஜி.. chance-சே இல்ல. What a connection. வெட்டித்தனமாக வெறுப்போட விமர்சனம் பண்றவாள விடுங்கோ. We are all enjoying these interesting connections. But குருஜி ஒரு சின்ன வருத்தம்..

குருஜி – என்ன?

நான் – நீங்க எதா இருந்தாலும் ஸ்வாமி தேசிகனை connect பண்ணுவீங்க. நாங்க அத தான் ரொம்ப enjoy பண்ணுவோம். But இதுல just online தான் சொன்னீங்க. Slight disappointment.

குருஜி – ஹா… யார் சொன்னா நான் முடிச்சுட்டேன்னு? இப்போ கேளு ஹைலைட்

நானிலம் வாய்க்கொண்டு நன்னீ ரறமென்று கோதுகொண்ட,

வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ் பாலை கடந்தபொன்னே!

கால்நிலந் தோய்ந்துவிண் ணோர்தொழும் கண்ணன்வெஃ காவுதுஅம்பூந்

தேனிளஞ் சோலையப் பாலதுஎப் பாலைக்கும் சேமத்ததே. (திருவிருத்தம் 26)

திருவிருத்தத்தில் ஆழ்வாரின் அனுபவம் இது. இந்தப் பாசுரத்தை ஸ்வாமி தேசிகனின் திருவவதாரத்தை குறிப்பிடுமதாகப் பெரியோர்கள் வ்யாக்யானம் செய்துள்ளனர். பொருள் – எங்கும் பரவியுள்ள கிரணங்களை உடையவன் சூரியன். அவன் தனது பரவிய கிரணங்களால் நானிலத்தையும் வாயில்கொண்டு – உறிஞ்சி, அதைக்கடித்து மென்று சுவைத்து பின்னர் கோதை (சக்கையை) உமிழ்ந்தான். அதுவே பாலை – மருகாந்தாரம் ஆனது.

இங்கு பெண்ணைப் பார்த்து (நாயகி) கூறுகிறபடி இப்பாசுரம். பெண்ணே! இனி நீ வெம்மையான இப்பாலையில் திரிந்து அப்பாலையைக் கடந்த பாலையே!

(பாலா – பெண்; பாலை – பாலைநிலம் – மருகாந்தாரம்) இனி விண்ணவரும் மண்ணில் தோயும்படியான வெஃகா எனும் யதோக்தகாரி எம்பெருமானின் க்ஷேத்ரம் இதோ நெருங்கியுள்ளது. அதனருகில் ஹிமவத்வனம் – அதாவது திருத்தண்கா எனும் குளிர்ந்த சோலையில் விளக்கொளி எம்பெருமான் எனும் நாயகனுடன் நீ இனிதே கூடிக்களிக்கலாம். அங்கு ஒளிவீசும் ஜ்ஞான தீபம் எல்லாருக்கும் – பாலைவனம் உட்பட அனைத்துக்கும் க்ஷேமத்தையளிப்பதாகும்.

இதற்கு ஆச்சர்யமான உள்ளுறைப்பொருள் ஒன்றுண்டு. சொல்கிறேன் கேள். “வேதத்திற்கு விருத்தமாகப் பொருள் கூறுமவர்களின் பாலைவனம் போன்ற விரோதங்களையெல்லாம் கடந்த ஆழ்வீரே! இதோ இப்பாலைக்கும் க்ஷேமமளிக்கும் (எப்பாலர்க்கும் – அந்தணர், அந்தியர் என அனைவருக்கும் க்ஷேமமாகிய மோக்ஷமளிக்கும்) திருத்தண்கா வந்துவிட்டது. இங்கு அவதரிக்கப்போகும் தூப்புல் பிள்ளை இச்சரணாகதி சாஸ்திரத்தை விரிவாக ஜ்ஞானதீபமாக விரித்துரைக்கப் போகிறார்” என்று எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி உரைக்கிறானாம்.

(இதன் ஆழ்பொருள்களை ஆசார்யர்களிடம் அறிந்து ரசித்திடுக) இதனால் ஸ்வாமி தேசிகனின் அவதாரம் காண்பிக்கப்படுகிறது.

நான் – ஸ்வாமி, இப்பாசுரத்தின் பொருள் ஆச்சர்யமாகவுள்ளது. ஆனால், what is the relationship? “காந்தாரம்” என்ற word தவிர்த்து but for that வேற ஒன்னும் இல்லையே. Of course தேசிகன் விஷயமான பாசுரம். அது enjoyable. But link?

குருஜி – இப்ப காந்தாரம் subject என்ன? வராகம் (தெய்வம்) தானே.. இங்க பார். திருவிருத்தம் வராகப்பெருமான் விஷயம். ஸ்வாமி தேசிகன் ரஹஸ்யசிகாமணி, உபகார ஸங்க்ரஹம் இதுலல்லாம் வராகப்பெருமாளின் சரமச்லோக ரஹஸ்ய விவரணத்தையும், திருவிருத்தம் பாசுர வ்யாக்யானமும் பண்ணியிருக்கார். பூமியை வராகம் எடுத்தது போன்று பூமியின்று ச்ருதப்ரகாசிகையை காத்ததாலும், ப்ரபத்தி சாஸ்த்ர விளக்கத்தை பூமிக்கு (பூமில இருக்கற நமக்கு) தெளிவுறச் சொன்னதால் ஸ்வாமி தேசிகன் வராக துல்யர்.

அவரென்ன சொல்றார்; மருகாந்தாரத்திலிருந்து – ஸம்ஸார காந்தாரத்திலிருந்து நமக்கு ப்ரபத்தி சாஸ்திரத்தால க்ஷேமம் (திருத்தண்காவில்) அளிக்கிறாரே!

மருகாந்தாரத்திலிருந்து வெளியேற முக்தி மார்க்கத்துக்கு “கண்டாரவம்” அதாவது மணியோசை தேசிகன் தானே..

இங்க பாருப்பா! இதெல்லாம் ஒரு ரசனை. அனுபவிக்கறது அல்லது இகழறது, அவாவா சௌகர்யம்.

நான் – Fantastic fantastic. காந்தாரமும் கண்டாரவமும். Oh Oh super குருஜி super. Oh.. what a link

குருஜி – முன்னெல்லாம் தெருக்கூத்துகள், நாட்டுப்புறக்கலைகள்னு நிறைய நல்ல விஷயங்கள் பயனுள்ள பொழுதுபோக்கா இருந்தது. அதெல்லாம் cinema மோகத்துல நாம neglect பண்ண ஆரம்பிச்சோம். நல்ல விஷயங்கள் நலிவடைய ஆரம்பிச்சது. அப்பறம் cinema hero மோகத்துல தர்மத்தையும் விட ஆரம்பிச்சோம். தெய்வ பக்திக்கு importance கொடுக்கற கதைகள் commercial failure ஆச்சு. So complete-ஆ ஒரு தலைமுறைக்கு subject கோவிந்தா கோவிந்தா. இனி நம்மூர்ல இந்த subject படம் பண்றதெல்லாம் ரொம்பக் கஷ்டம். But இந்த மாதிரி சமயத்துல தெய்வத்தை main hero-வா காமிச்சு ஒரு film வந்திருக்குன்னா அது really பாராட்டவேண்டியது. At least after effects-ஆ இனிமேலாவது இராமாயண, மஹாபாரத கதைகளை விளக்கற, நமது பண்பாட்டை விளக்கற, கலைகள் arts and science focus ஆகணும்.

இந்த தெய்வ ஸாந்நித்யத்த திருக்குறுங்குடி கைசிக மாஹாத்ம்யத்துல (வராஹ பெருமாள் பூமி தேவிக்கு  ( மனைவி காந்தாரத்திற்கு ) உபதேசித்த நம்பாடுவான் ப்ரஹ்ம ரக்ஷஸ் கதயில பார்க்கலாம்.  ம்ஹும் …. நம்ப ஸம்ப்ரதாயத்தோட  பெரும  நமக்கு என்னிக்கு தெரிஞ்சுறுக்கு.  Atleast கைசிக புராணத்தை வர்ற கைசிக ஏகாதசி அன்னிக்காவது தெரிஞ்சுக்க try பண்ணா சரி.

‘‘तस्य यज्ञवराहस्य विष्णोरमिततेजसः ।

प्रणामं येऽपि कुर्वन्ति तेषामपि नमो नमः’’

‘‘தஸ்ய யஜ்ஞவராஹஸ்ய விஷ்ணோரமிததேஜஸ꞉

ப்ரணாமம் யே(அ)பி குர்வந்தி தேஷாமபி நமோ நம꞉’’

ம்ம்.. சரி சரி.. இது போறும். அப்பறம் பாக்கலாம். Time ஆறது. ஸந்த்யாகாலம்.

பேட்டி With Sri APN Swami by

ப்ரஸன்னா

சரன் சேவக் (SARAN Sevak / Shishya of Sri APN Swami)

26-October-2022

#Kantara #KannadaMovie #RishiSunak #UKPM #ViratKohli

Sri #APNSwami #Writes #Trending | ஒற்றைத்தலைமையா? இரட்டைத்தலைமையா?

Traditional Trending

ஒற்றைத்தலைமையா? இரட்டைத்தலைமையா?

(02-Sep-2022)

வேதபவனம் எனும் நீதிமன்ற வளாகம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. செய்தியாளர்கள், விமர்சகர்கள், சாஸ்த்ரா பார்வையாளர்கள் என எங்கும் மக்கள் வெள்ளம் குழுமியிருந்தது. Breaking News என்பார்களே அது போன்று ஏதோ பரபரப்பான செய்தியொன்று வெளியாவதற்காக அனைவரும் ஆவலாகக் காத்திருப்பதாகத் தெரிகிறது.

என்ன விஷயம்? என்று நாமும் ஆவலுடன் அருகிருந்தவரைக் கேட்டோம். இது தெரியாதா ஸ்வாமி? ஸ்வாமி பராசரபட்டர், ஸ்வாமி வேதாந்த தேசிகன் எனும் இருவர் அமர்வு (Bench) இன்று ஒரு முக்கியமான தீர்ப்பளிக்க உள்ளனர். அதனால்தான் இத்தனை கோலாகலம் என்றார் அவர்.

இது நமது ஆவலை மேலும் அதிகப்படுத்தியது.

“ஸ்வாமி! என்ன விஷயமான வழக்கு?” – நாம்

“இவ்வுலகிற்கு (அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்டத்திற்கு) ஒற்றைத்தலைமையா? இரட்டைத்தலைமையா? என்பது குறித்து விவாதம் பலநாட்களாக நடைபெற்றுவருகிறது. அதன் தீர்ப்புதான் இன்றையதினம்” என்றார் அவர்.

இப்போது விஷயம் புரிந்த காரணத்தால் நாமும் மக்களின் ஊடே புகுந்து அவர்கள் பேசிக்கொள்வதைச் சற்று கவனித்துக் கேட்டோம்.

“அது எப்படி ஒரு தேசத்திற்கு இரண்டு அரசர்கள் இருக்க முடியும்? அப்படியானால் அது ஈரரசு எனும் தோஷத்தை அடையாதா? ஆதலால் எம்பெருமான் ஒருவனே தலைவன். இதில் மாற்றுக்கருத்து இல்லை” என ஒருசாரார் பேசிக்கொண்டிருந்தனர்.

“ஆம் நாங்களும் இதை ஒப்புக்கொள்கிறோம். ஒற்றைத்தலைமைதான் ஏற்புடையது. அனால் அது பிராட்டியான மஹாலக்ஷ்மியை தலைவியாகக் கொண்டது. அது தான் சரி” என மற்றொரு குழுவினர்.

“ஈரரசு என்பது எக்காலத்திலும் ஏற்புடையது அன்று. இருப்பினும், எம்பெருமானும் பிராட்டியும் சமமான பெருமை பெற்றவர். ஆகையால் சுழற்சி முறையில் தலைமை மாறவேண்டும்” என மற்றொரு வகுப்பினர்.

இந்த விசாரணையில் தங்களையும் மனுதாரராகச் சேர்க்க வேண்டும். எங்களின் கருத்துக்களையும் கேட்ட பிறகே தீர்ப்பளிக்கவேண்டும் என்று வேறொரு குழுவினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அவர்களின் கொள்கையாவது “சுழற்சி முறையில் ஒற்றைத்தலைமை என்பது ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்று இருக்கவேண்டும்” என்றனர்.

அவர்களுள் மற்றொரு சாரார் மும்மூர்த்திகளைத் தவிர்த்து வேறொரு தெய்வத்திற்கே தனிப்பெருமை (தனித்தலைமை) உண்டு என்று வாதிட்டனர்.

இதில் வேதம், இதிஹாஸம், புராணம், ஆழ்வார், ஆசார்யர்களின் அருளிச்செயல்கள் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டன. ஸாங்க்யம், யோகம் முதலிய மாதங்கள் பிறழ் சாட்சியங்களானபடியால் அவைகளை ஏற்கமுடியாது என நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இப்படியாக நடைபெற்ற வழக்கின் தீர்ப்பிற்காக உலகமே காத்துக்கிடக்கிறது.

இருவர் அமர்வின் நீதியரசர்களான ஸ்வாமி பராசரபட்டர், ஸ்வாமி தேசிகன் வந்தமர்ந்ததும் வேதபவன வளாகமே அமைதி காத்தது. நீதியரசர்கள் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினர்.

மும்மூர்த்திகளில் சுழற்சி முறையோ, அவர்களைவிட வேறு தெய்வத்திற்கு ப்ரதானத்துவமோ ப்ரமாணங்களின்படி எங்குமே ஏற்க இயலாமையினால், அந்த மனுக்களை தள்ளுபடி செய்கிறோம். மேலும் பெருமாள், பிராட்டி இருவருக்கும் சமமான பெருமை உள்ளதால் சுழற்சி முறையில் அரசாட்சி என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. எனவே அதையும் தள்ளுபடி செய்கிறோம்.

“பெருமாளோ, அல்லது பிராட்டியோ இருவரில் ஒருவர்தான் தலைமையேற்க முடியும். இல்லையென்றால் ஈரரசு (இரண்டு அரசர்கள்) எனும் தோஷம் உண்டாகும்” என்பது வாதிகளால் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. குலம், குணம், வயது, நடத்தை என அனைத்திலும் பெருமாளுக்கும், பிராட்டிக்கு ஒப்புமை நன்கமைந்துள்ளதை ப்ரமாணங்கள் தெளிவுறுத்துகின்றன. ஒரு இல்லத்தில் கணவன், மனைவி இருவர்க்கும் எல்லா பண்புகளும் இருக்கையிலும், பெண்மைக்குரிய விஷயங்களில் மனைவியும், ஆண்மகனுக்குரிய செயல்களில் புருஷனும் ஈடுபட்டு தங்களுக்குள்ளே கலகம் ஏற்படாமல் குடும்பத்தைக் காப்பாற்றுகின்றனரோ! அஃதே போன்று பெருமாளும் பிராட்டியும் இவ்வுலகைக் காக்கின்றனர். இதை நிரூபிக்கும் பொருட்டு ஓராயிரம் ப்ரமாணங்கள் உள்ளன. ஆகையால் “தம்பதீ தைவதம் ந:” எம்பெருமானும், பிராட்டியும் சேர்ந்து ஒற்றைத்தலைமையாக இவ்வுலகை அருளாட்சி செய்கின்றனர்” என்று தீர்ப்பை வாசித்தவுடன் எங்கும் ஆரவாரம்; ஆர்ப்பரித்த பக்தர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும், ஆடல்பாடலுடன் தீர்ப்பைக் கொண்டாடினர்.

வேதபுருஷன், ஆழ்வார்கள், ஆசார்யர்கள் போன்ற நீதித்துறை (சாஸ்த்ர) வல்லுநர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்ப்பினை வரவேற்றனர். “ஸ்ரீ குணரத்நகோசம்”, “ஸ்ரீஸ்துதி” என தலைப்பிடப்பட்ட இத்தீர்ப்பின் நகல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

பெருமாளும், பிராட்டியும் சேர்ந்த இந்த ஒற்றைத்தலைமை உலகத்திற்கு பரம மங்களம்.

-ஏபிஎன் சுவாமி

02/sep/2022

Sri APN Swami’s #Shishya Writes #Trending | ஸ்வதந்திர தின அம்ருதோற்சவம் | Trending Article

Azadi ka Amrit Mahotsav – ஸ்வதந்திர தின அம்ருதோற்சவம் – आजादी का अमृत महोत्सव – 75th Indian Independence Day Special Article –  ஸ்ரீ APN ஸ்வாமியின்  கருட வைபவம்  மற்றும் சுதந்திர தின  உபந்யாசத்தின் படி எழுதியது.

கச்யப ப்ரஜாபதிக்கு கத்ரு, விநதை என்று இரண்டு மனைவியர் இருந்தனர். அதில் கத்ருவுக்கு பாம்புகள் பிள்ளைகளாகப்  பிறந்தனர். விநதைக்கு ஊனமுற்று பிறந்த பிள்ளையான அருணன், பிறந்தவுடனேயே சூரியனுக்கு ஸாரதியாகச் சென்று விட்டான்.

கத்ரு விநதைக்குள்ளே அடிக்கடி சர்ச்சைகள் உண்டாகும். ஒரு சமயம், இந்திரனுடைய குதிரையான உச்சைச் சிரவஸின் நிறம் குறித்து இவர்களுக்குளே விவாதம் மூண்டது.   உச்சைச் சிரவஸ் முழுவதும் வெண்மை என்று விநதை கூறினாள். உச்சைச் சிரவஸ் உடலில் கருமை நிறமும் உள்ளது என்று கத்ரு வாதித்தாள். மறுநாள் குதிரையை முழுவதுமாகப் பார்த்த பின் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று அவர்கள் முடிவெடுத்தனர். பந்தயத்தில் தோற்றவர்கள் வென்றவர்களுக்கு ஆயுள் முழுவதும் அடிமையாக இருக்க வேண்டும் என்று பந்தயமும் வைத்துக்கொண்டனர்.

கத்ரு தன் பாம்பு பிள்ளைகளில் ஒருவனான கருத்த கார்கோடகனை அழைத்து, உச்சைச் சிரவஸ் வால் பகுதியில் சுற்றிக்கொள்ளும் படி சொன்னாள்.

மறுநாள் விநதையும் கத்ருவும் தூரத்திலிருந்து பார்த்த போது, குதிரையின் வால் பகுதி கருமை நிறமாக தோற்றமளித்தது. கொடிய குணம் கொண்டவளான கத்ரு, வஞ்சனையினால் வென்றாள்.  ஒப்பந்தப்படி தோற்ற விநதை, கத்ருவிற்கும் அவள் பிள்ளைகளுக்கும் அடிமையானாள்.

காலம் கனிந்தது. விநதைக்குப் பிறந்தவனான வைநதேயன்(கருடன்), தன் தாயை அடிமை தன்மையிலிருந்து மீட்க விரும்பினான். அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற என்ன செய்ய வேண்டும் என்று கத்ருவிடம் கருடன் வினவினான்.

பேராசை கொண்ட கத்ருவும் அவள் பிள்ளைகளான பாம்புகளும் தேவலோகத்து அம்ருதத்தைக் கொண்டு வந்து கொடுத்தால் விடுதலை தரலாம் என்றனர்.

தாயின் ஆசி பெற்று, தேவலோகம் சென்ற கருடன் தடைகளைத் தகர்ந்து எரிந்து அம்ருத கலசத்தை தேவர்களிடமிருந்து கை பற்றினான்.

கருடனிடம் தோல்வியுற்ற தேவர்கள், கொடிய பாம்புகள் அம்ருதத்தை உண்டு சாகா வரம் பெற்றதென்றால், மனித குலத்திற்கு ஆபத்து நேரிடும் என்பதை கருடனுக்குப் புரியவைத்தனர். அவர்கள் ஆலோசனை படி  ஒரு நாழிகை மட்டும் அம்ருத கலசத்தை பூலோகத்தில் வைத்துக்கொள்ள கருடன் ஸம்மதித்தான்.

கருடனால் கொண்டுவரப்பட்டு குளத்தின் கரையில் வைக்கைப்பட்ட அம்ருத கலசத்தை கண்டவுடன், பாம்புகள் அக மகிழ்ந்து, குளத்தில் குளித்து விட்டு உண்ண தலைப்பட்டன. ஒப்பந்தப்படி அம்ருத கலசம் கொண்டு வந்ததினால் கருடனும் விநதையும் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டனர்.

பாம்புகள் குளித்துவிட்டு வருவதற்குள் ஒரு நாழிகை ஆன காரணத்தால், அம்ருத கலசம் மறைந்து விட்டது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று பாம்புகள் வருத்தம் அடைந்தன.

அம்ருத கலசம் சுத்தமாக வைக்கப்பட்டிருந்த தர்பை புல்லின் மீது அமுதத் துளிகள் சிந்தியிருக்குமோ என்று நினைத்த பாம்புகள்,  அங்கிருந்த தர்பை புல்லை தங்கள் நாவினால் நக்கின. அந்த தர்பை புல் பாம்புகளின் நாக்குகளை இரு பிளவாகியது. இதனால் தான், பாம்புகளுக்கு இரண்டு நாக்குகள் என்று புராணங்கள் கூறுகின்றன. 

ஏமார்ந்து போன ஸர்ப்பங்கள், சீரிய படி சென்றன. மேலே, கருடனின் வைபவம் அத்யாச்சர்யமாக வர்ணிக்கப்படுகிறது.

அன்னையை அடிமைதளத்திலிருந்து கருடன் மீட்ட இந்தக் கதையை “அம்ருதோற்சவம்” என்று ஸ்வாமி தேசிகன்  கருட பஞ்சாசத் என்னும் ஸ்தோத்திர நூலில் கொண்டாடுகிறார்.

இதே போல் நம் பாரதத்தாயை அடிமைத்தனத்திலிருந்து அவளின் தவப்புதல்வர்கள் மீட்டனர். பாம்புகளைப் போன்ற   கொடிய எண்ணம் படைத்தவர்கள், பாரத அன்னையை விடுவிக்க  பல விதமான எதிர்பார்ப்புகளைத் தெரிவித்தார்கள்.  ஆனால் கருடன் போன்ற பராக்ரமம் கொண்ட நமது விடுதலை வீரர்கள், எவரும் நினைத்துப் பார்க்கமுடியாத பல செயற்கரியச் செயல்களைச் செய்து ஸ்வதந்திர அம்ருதத்தை நமக்களித்து பாரத அன்னையை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்துள்ளனர். எதிர்த்தவர்கள் பாம்பு நாக்கு போல் பிளவுபட்டது கண்கூடு.

இன்று (15-ஆகஸ்ட்-2022) நம் பாரத நாட்டின்  75வது ஸ்வதந்திர தினத்தை அம்ருதோற்சவமாகும் கொண்டாடுகிறோம்.

நம் நாட்டில் ஸகல ஸம்பத்து  பெறுகவும், துஷ்டர்கள் விலகவும்,  அம்ருதம் எடுத்து வந்து, அன்னைக்கு ஸ்வதந்திரம் பெற்றுத் தந்த கருடனை, ஸ்வதந்திர அம்ருதோற்சவ நன்னாளில் வணங்குவோம். தியாகிகளையும் நினைவுகூருவோம்.

குறிப்பு : இந்த வ்யாஸம் ஸ்ரீ APN ஸ்வாமியின்  கருட வைபவம்  மற்றும் சுதந்திர தின  உபந்யாசத்தின்படி எழுதியது. 

இப்படிக்கு
அடியேன்

ஸ்ரீ APN ஸ்வாமியின் காலக்ஷேப சிஷ்யை & SARAN Sevak 

ஸ்ரீரஞ்ஜனி ஜகந்நாதன்

#HarGharTiranga #HarGharTirangaCampaign #AzadiKaAmritMahotsav #HappyIndependanceday #Indiaat75 Sri#APNSwami

Click here to watch SARAN – Traditional Trending Independence Day Upanyasam by Sri APN Swami

To learn Sampradayam in an interesting manner and for more such interesting trending videos/articles do regularly watch Sri APN Swami’s YouTube Channel and his blog website.

ஹர் கர் திரங்கா | Sri APN Swami Writes | 75th Independence Day Special | Sri #APNSwami #Writes #Trending |

வீடுகள்தோறும் மூவர்ண வெற்றிக்கொடி கட்டு

(முகுந்தகிரி Dr. ஸ்ரீ உ. வே. அநந்தபத்மநாபாசார்ய (APN) ஸ்வாமியின் 75வது சுதந்திர தின உபந்யாசத்தின் சுருக்கம்)

To watch the 75th Independence Day Upanyasam by Sri APN Swami Click Here.

Also Read Sri APN Swami’s article on Independence day in 2019. https://apnswami.wordpress.com/2019/08/15/sri-apnswamis-shishya-writes-flag-poles-that-protect-our-mother-land-india/

வந்தே மாதரம் ! பாரத் மாதாவிற்கு ஜயம்!

ஆகஸ்ட் 15 2022 நம் தாய்நாடான பாரத தேசத்தின் 75வது சுதந்திர தினமாகும்.  நம் சாஸ்திரம் விவரிக்கும் பல பண்டிகைகளை  நாம் இல்லம்தோறும் கொண்டாடுகிறோம். அதைப் போல் நம் நாட்டின் சுதந்திர தினத்தையும் இல்லம்தோறும் கொண்டாட வேண்டியதும் சாஸ்திரமே.  இதனையே நம் பாரத பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி தலைமையில் “ஹர் கர் திரங்கா”  என்று இல்லம்தோறும் பாரதத்தின் மூவர்ணக் கொடியினை ஏற்றிக் கொண்டாடும்படி இந்திய அரசு அறிக்கையிட்டுள்ளது. கடைகள் முதல் மாட மாளிகைகள் வரை நாடே விழாக்கோலம்  பூண்டுள்ளது.

வெற்றிக் கொடி கட்டுவது எதற்கு?

உலகெங்கும் பாரதத்தின் பெருமை பரவவும், திக்கெட்டும் வெற்றி கோஷம் முழங்கவும், அனைவரும் இல்லந்தோறும்   வெற்றிக் கொடியினைக் கட்டி கொண்டாட வேண்டும்.  நம் உற்சாகத்தையும், தேச பக்தியையும் வெளிப்படுத்தி, சுதந்திரதிற்காக அனைத்தையும் அர்ப்பணம் செய்தோருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்.  நம் தேசத்தின் கொடி பட்டொளி வீசிப்  பறக்கும் அழகே அழகு.

இல்லங்களில் கொடி ஏற்றுவது என்பது நம் புராண இதிகாசங்களில் பல இடங்களில் காணலாம்.

வேண்டியோரை வரவேற்கும் வெற்றிக் கொடி

விச்வாமித்ரர் ராம  லக்ஷ்மணர்களை மிதிலைக்கு அழைத்து வந்தார். அப்பொழுது, “வெற்றி வீரனான ராமா! வருக! வருக!  தசரத மைந்தனே ராமா! வருக! வருக!  எங்கள் சீதா பிராட்டியை கைப்பிடிக்க வரும் அழகிய மணாளனே ராமா! வருக! வருக! ராமா உனக்கு ஸுஸ்வாகதம்(நல்வரவு) ! உன் வரவு நல்வரவாகுக!” என்று மிதிலை மாடமாளிகைகளில் கட்டப்பட்டிருந்த கொடிகள் ராமனை வரவேற்றன.  பதாகைகள்

(கொடிகள்) பறக்கும் அழகு அவை ராமனை வரவேற்பது போல் இருந்தது என்று கம்பன் வர்ணிக்கிறார்.

கம்ப ராமாயணத்தில் மிதிலைக் கொடிகளின் தோற்றம்

மை அறு மலரின் நீங்கி

   யான் செய் மா தவத்தின் வந்து

செய்யவள் இருந்தாள்’ என்று

   செழு மணிக் கொடிகள் என்னும்

கைகளை நீட்டி அந்தக்

   கடி நகர் கமலச் செங் கண்

ஐயனை ‘ஒல்லை வா’ என்று

   அழைப்பது போன்றது அம்மா!         (480)

         (பால காண்டம், 10. மிதிலைக் காட்சிப் படலம்)

தாமரையில் வசிக்கும் மஹாலக்ஷ்மி,  குற்றமற்ற தாமரை மலரை  விடுத்து, காவல் நிறைந்த மிதிலா நகர் மக்கள் புரிந்த தவத்தால், அழகிய தாமரைக் காடு நிறைந்த  மிதிலையில் வந்து பிறந்துள்ளாள்  என்று கூறியபடி,  மிதிலையில்  உள்ள பெரிய அழகிய  கொடிகள்  கைகளை  நீட்டி  அதாவது (தன்) கைகளை மேலும் கீழுமாக அசைத்துக் காட்டி, தாமரை  போன்ற  கண்களைக்  கொண்ட இராமனை “விரைவில் வந்து சேர்க!” என்று  ப்ரேமையுடன் அழைப்பதைப் போன்றுள்ளது என்று கம்பன் பாடியுள்ளார்.

நிரம்பிய மாடத்து உம்பர்

   நிரை மணிக் கொடிகள் எல்லாம்

தரம் பிறர் இன்மை உன்னி

   தருமமே தூது செல்ல

வரம்பு இல் பேர் அழகினாளை

   மணம் செய்வான் வருகின்றான்’ என்று

அரம்பையர் விசும்பின் ஆடும்

   ஆடலின் ஆடக் கண்டார்.                  (481)

(பால காண்டம், 10. மிதிலைக் காட்சிப் படலம்)

சீதையைத் திருமணம் செய்து கொள்வதற்கு   இராமனைத்   தவிர வேறு  எவர்க்கும்   தகுதி இல்லாமையை  நினைத்து;  அறக் கடவுளே தூது  போய்த் தெரிவிக்க; அளவில்லாத   சிறந்த  அழகுடைய சீதையைத்  திருமணம்  செய்து  கொள்ளும்   பொருட்டு     இராமன் வருகின்றான் என்று மகிழ்ந்து,  தெய்வ மகளிர்  வானத்திலே  மகிழ்ச்சியால் ஆடுகின்ற ஆடலைப்  போல அந்த  நகரத்தில்    நிறைந்துள்ள   மாடங்களையுடைய வீடுகளின் மேலே  வரிசையாக  உள்ள அழகிய  கொடிகள் யாவும் காற்றில்   ஆடுவதை அம்மூவரும் பார்த்தார்கள்.

விரோதிகளை விரட்டி அடிக்கும் வெற்றிக்கொடி

மஹாபாரத போர் நடப்பதற்கு முன்னர்,  போரில் கிருஷ்ணனின் துணை  வேண்டி அர்ஜுனன்  துவாரகைக்கு வந்தான். அதே சமயம் கிருஷ்ணனின் படை பலத்தை வேண்டி துரியோதனனும் துவாரகைக்கு வந்திருந்தான். எம்பெருமான் கண்ணன் துவாரகாதீசன். அவனுடைய ராஜ்யத்தின் ஆளுமையைப் பறை சாற்றும் வகையில் ப்ரஹ்மாண்டமான கொடி துவாரகையில் பட்டொளி வீசிப் பறந்தது. இன்றும்  துவாரகையில் துவாரகாதீசனின் பெரிய கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டுள்ள ஆச்சரியமான  கொடியை ஸேவிக்கலாம்.

ஈண்டு நீ வரினும், எங்கள் எழிலுடை எழிலி வண்ணன்

பாண்டவர்தங்கட்கு அல்லால், படைத் துணை ஆகமாட்டான்;

மீண்டு போக!’ என்று என்று, அந்த வியன் மதில் குடுமிதோறும்

காண்தகு பதாகை ஆடை கைகளால் தடுப்ப போன்ற.

(வில்லி பாரதம் – 2.25.5)

துரியோதனன் துவாரகை நகரத்தினருகில் செல்லும் பொழுது, அந்நகரத்து மதில்களின் மேலுள்ள கொடிகள் காற்றில் இயற்கையில்  பலமுறை அசைதலை, துரியோதனனை நோக்கி “நீ இங்கு வாராதே! திரும்பிச் செல்!” என்று குறிப்புக் காட்டிக் கைகளால் மறுத்துத் தடுப்பது போன்றதென வில்லிபுத்துரார் வருணித்தார். தீய எண்ணத்துடன் வருவோரை விரட்டி அடிக்கும் கொடிகளாக துவாரகை கொடிகள் விளங்கின.

இதே போன்று பாரதத்தின் பெருமைதனை அறிந்து, நட்புக்கரம் நீட்டுவோருக்கு நம் தேசியக் கொடியானது அரவணைத்து வரவேற்கிறது. அதே பாரதத்தின் மீது பொறாமை கொண்டு பகைமை பாராட்டுபவர்களை  நம் தேசியக் கொடியானது அவர்களை விரட்டி அடிக்கிறது.

எவ்வாறு இப்படி ஒரே கொடி இரண்டையும் செய்ய இயலும் ?

இதற்கு மஹாபாரத போரில் அர்ஜுனனின் ரதத்தை ஆராய வேண்டும். அர்ஜுனன் தேரில் ஆஞ்சநேயன் கொடியாகத் திகழ்ந்தார். போரில் அவர் கர்ஜித்தது, ஸிம்ஹ கர்ஜனையாக  பாண்டவர்களுக்கு உற்சாகம் மற்றும் சந்தோஷம் அளிக்கும் சப்தமாகவும், கௌரவர்களுக்கு நடுக்கத்தை உண்டு பண்ணக் கூடிய சப்தமாகவும் இருந்தது என்று ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் விளக்குகிறார்.

நமது பாரத தேசத்தின் கொடியிலும் அசோக சக்ரம் என்னும் வடிவில் விஷ்ணுவின் அம்சமான ஸிம்ஹம் விளங்குகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததன்றோ!  

ஸ்வாமி தேசிகன் யாதவாப்யுதயத்தில் கொடிகள் பறக்கும் அழகை வர்ணிக்கிறார்.  பாரிஜாத அபஹரணம்(கடத்தல்) செய்த பின், தேவலோகத்திலிருந்து  கிருஷ்ணனும் சத்ய பாமாவும், யாரும் நினைத்து பார்க்க முடியாத பெருமை கொண்ட த்வாரகாபுரிக்குத் திரும்பி வந்தனர்.  கருடன் மீது அவர்கள் வரும் சமயத்தில், த்வாரகாபுரியில் அவர்களை வரவேற்கும் வண்ணம் ஜய கொடிகள் பட்டொளி வீசிப்  பறப்பதை ரசித்தார்களாம்.

ஆம், இந்த சுதந்திர தினத்தில் “ஹர் கர் திரங்கா” என்று இல்லம் தோறும் தேசியக் கொடியினை ஏற்றி ஒரு ட்ரோன்(drone) மூலம்,  பறவையின் பார்வை(bird’s eye view) என்னும் படி வானத்திலிருந்து பார்த்தால், அன்று கண்ணன் சத்யாபாமா கண்ட காட்சியாக நம் பாரத தேசம் விளங்குகிறது என்பது பெருமைப்பட வைக்கும் நிகழ்வாகும்.

நம் பாரத தேசம் ஆலயங்கள்  நிறைந்த புண்ய பூமியாகும்.  பல ஆசார்யர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஸித்த புருஷர்கள், ரிஷிகள், முனிகள், சான்றோர்கள்,  மஹான்கள்  எல்லோரும் வாழ்ந்த, வாழும் தேசம்.   அதனால்தான் நாம் நம் தேசத்தை திவ்யதேசமாக கொண்டாடுகிறோம்

நம் தேச பக்தியும், திவ்ய தேச பக்தியாக என்றும் விளங்கட்டும்.  

ஹர் கர் திரங்கா ஆமாம் இல்லந்தோறும் மற்றும் நம் ஹ்ருதய இல்லந்தோறும் “தி ரங்கா” – “The Ranga”

#HarGharTiranga #harghartirangacampaign #AzadiKaAmritMahotsav #HappyIndependanceday #Indiaat75 Sri#APNSwami

Sri APN Swami’s Shishya Writes | திருவோணத் திருநாள் பாட்டு அர்த்த ஸ்வாரஸ்யம் | Guru Purnima Special Article

ஸ்ரீ:

திருவோணத் திருநாள் பாட்டு அர்த்த ஸ்வாரஸ்யம்

(ஸ்ரீரஞ்ஜனி ஜகந்நாதன்)

வாதாசனவரர் இவரென வருமா பாஷியம் வகை பெறு நாள்

வகுளாபரணப் பெருமாள் தமிழின் வாசியறிந்திடு நாள்

பேதாபேதம் பிரமம் எனாவகை பிரமம் தெளிவித்திடு நாள்

பேச்சொன்றுக்குச் சததூஷணியைப் பேசிய தேசிக நாள்

தீதாகிய பல மாயக் கலைகளைச் சிக்கென வென்றிடு நாள்

திக்கெட்டும் புகழ் ஸ்ரீபாஷியத்தைத் தெளிய உரைத்திடு நாள்

ஓதாதோதும் வேதாந்தாரியன் உதயம் செய்திடு நாள்

உத்தமமான புரட்டாசித் திருவோணம் எனும் நாளே.

Swami Vedanta Desikan

இது ஸ்வாமி தேசிகனின் திருநாள் பாட்டாகும். அருளிச் செய்தவர் ஸ்வாமி தேசிகனின் திருக்குமாரும், சிஷ்யருமான ஸ்ரீநயினாராசார்யர் ஆவார். திருநாள் பாட்டு என்றால் ஆசார்யன் அவதரித்தத் திருநாளை கொண்டாடும் பாடலாகும்.  ஸ்வாமி தேசிகன் புரட்டாசி மாதம் திருவோண நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.  ஸ்வாமி தேசிகனின் திருநாள் பாட்டில் உள்ள ஸ்வாரஸ்யங்களை இங்கு அனுபவிப்போம்.

“வாதாசனவரர் இவரென வரு மா பாஷியம் வகை பெறு நாள்” என்ற முதல் வரிக்கு முதலில் அர்த்தத்தை ஆராயலாம்.காற்றை மட்டும் சுவாசித்து உஜ்ஜீவிக்கும் பிராணி பாம்பாகும். ஆகையால் வாதாசனன் என்று பாம்பிற்கு பெயர். பாம்புகளில் சிறந்தவரான (வாதாசன வர:)  ஆதிசேஷனுக்கு  வாதாசனவரர்  என்று திருநாமமாகும். 

ஆதிசேஷனின் அம்சமான ஸ்வாமி ராமானுஜர் வாதாசனவரர்  என்று போற்றப்படுகிறார். ஸ்ரீபாஷ்யம் இயற்றிய ஸ்வாமி ராமானுஜர் ஸ்ரீபாஷ்யகாரர் என்று கொண்டாடப்படுகிறார். ஸ்ரீ  என்றால் மா என்னும் மஹாலக்ஷ்மியை குறிக்கும். ஆக, மா பாஷ்யம் என்றால் ஸ்ரீபாஷ்யம் என்று பொருள் கொள்ளலாம். ஸ்ரீபாஷ்யகாரரின் மறு அவதாரம் என்று விளங்குபவர் நம் ஸ்வாமி தேசிகன்.   நடாதூர் அம்மாளின் சிஷ்யரான ஸுதர்சன சூரி பட்டோலைப்படுத்திய, ஸ்ரீபாஷ்ய வ்யாக்யானமான  ச்ருதப்ரகாசிகையினை  காப்பாற்றியும், ஸத்யாகாலத்தில் சிஷ்யர்களுக்கு 30 முறை ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் அருளிச் செய்தும், ஸ்ரீபாஷ்யத்திற்கு அதிகரண ஸாராவளி, தத்வ டீகை  முதலிய வ்யாக்யானங்கள் எழுதியும்,  ஸ்வாமி தேசிகன், ஸ்ரீபாஷ்யம்  உயர்த்தி பெரும் வகையில்  பலபடிகளாலும் கைங்கர்யம் புரிந்துள்ளார்.  ஆக, திருவோண நன்னாள் ஸ்ரீபாஷ்யம் உயர்த்தி பெற்ற நன்னாளாகக் கொண்டாடப்படுகிறது.

முதல் வரிக்கு இது ஒரு வகை அர்த்தம். 

ஆனால், மீண்டும், “திக்கெட்டும் புகழ் ஸ்ரீபாஷ்யத்தைத் தெளிய உரைத்திடு நாள்” என்று ஸ்வாமி தேசிகன் ஸ்ரீபாஷ்யத்தை எட்டு திக்குகளிலும் பரவச் செய்தார் என்றும் உள்ளது. ஆக, முதல் வரிக்கு ஸ்ரீபாஷ்யம் என்று பொருள் கூறினால் புனருக்தி தோஷம் வராதோ!  என்ற கேள்வி எழுகிறது!  ஆகையால், மற்றுமொரு அர்த்த சுவாரஸ்யத்தை ஆராயலாம்.

ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி முனிவர், வாதாசனவரர்  என்று போற்றப்படுகிறார்.  பதஞ்சலி முனிவருக்கு ப்ரத்யக்ஷமான பெருமாள் திருநின்றவூர் பக்தவத்சலம்  பெருமாள் ஆவார். ஆகையால் தான் திருநின்றவூரில் ஆதிசேஷனுக்குத் தனி ஸன்னிதி உள்ளது.  வ்யாகரண சாஸ்திரத்தை நிலைநாட்டியவர்களில் முனித்ரயம்  என்று போற்றப்படும் முனிவர்கள் பாணினி, காத்யாயனர் மற்றும் பதஞ்சலி ஆவார்கள். இவர்கள் மூவரும் முறையே வ்யாகரணத்திற்கு சூத்ரகாரர், வ்ருத்திகாரர் மற்றும் பாஷ்யகாரர் என்று கொண்டாடப்படுகின்றனர். பதஞ்சலி முனிவர் எழுதிய வ்யாகரண சாஸ்திர பாஷ்யத்திற்கு “மஹா பாஷ்யம் , மா பாஷ்யம்” என்று பெயர். ஸ்வாமி தேசிகன் தமது ஸ்ரீபாஷ்ய வ்யாக்யான க்ரந்தங்களில்,  ‘மஹா பாஷ்ய’ விளக்கங்களைக் கையாண்ட விதத்தையும்,  வ்யாகரண சைலியையும்  பார்த்தால்,  பதஞ்சலியே அவதாரம் எடுத்தார் போல் உள்ளது என்று அனைவரும் கொண்டாடுவர்.  பதஞ்சலி முனியே ஸ்வாமி தேசிகனாக அவதரித்து மா பாஷ்யம் உயர்த்தி பெரும் வகையில் வ்யாகரணத்தைக் கையாண்டார். ஆக, திருவோண நன்னாள் பதஞ்சலி முனி இயற்றிய மா பாஷ்யம் உயர்த்தி பெற்ற நன்னாளாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும், முதல் வரிக்கு, ஸ்வாமி தேசிகன் ஸ்ரீபாஷ்யத்தைக் காப்பாற்றியதையும், ஆறாம் வரிக்கு ஸ்ரீபாஷ்யத்திற்கு வ்யாக்யானங்கள் எழுதி, சிஷ்யர்களுக்குக் கற்றுக் கொடுத்து, எட்டு திக்குகளிலும் பரவச் செய்தார் என்றும் தனித்தனியாகப் பொருள் கொள்ளலாம்.

ஸ்ரீபாஷ்யகாரரின் முதல் கட்டளை “ஸ்ரீபாஷ்யத்தை வாசித்தும் ப்ரவர்த்திப்பித்தும்” என்று உள்ளது. அதற்கிணங்க இங்கும், முதல் வரிக்கு ஸ்ரீபாஷ்யம் என்று பொருள் கொள்வதும் ஸ்வாரஸ்யமே. புனருக்தி தோஷம் வராது.   அது எப்படி என்று பார்க்கலாம். 

ஸ்ரீபாஷ்யகாரரின் இரண்டாம் கட்டளை பகவத் விஷயமான திருவாய்மொழியை கற்பதாகும்.  இந்த கட்டளையை நிறைவேற்றிய ஸ்வாமி தேசிகனை போற்றுவதாக அமைந்ததே  திருநாள் பாட்டில் இரண்டாம் வரியான  “வகுளாபரணப் பெருமாள் தமிழின் வாசியறிந்திடு நாள்” என்பதாகும்.  ஸ்வாமி தேசிகன் நம்மாழ்வாரின் பாசுரங்களின்படி, அதாவது த்ராவிட வேதங்களான திவ்ய ப்ரபந்தங்கள்  கொண்டு சூத்ர வாக்கியத்திற்கு விளக்கம் அருளியுள்ளார்.   இதை அவர் எவ்வாறு செய்தார் என்றால், வேதத்தில் உள்ள பேத அபேத ச்ருதிகளுக்கு, ஸ்ரீபாஷ்யகாரர் விளக்கியபடி கடக ச்ருதிகள் கொண்டு பொருள் கூறி, பரப்ரஹ்மத்தின் விளக்கத்திற்கு இருந்த தவறான அர்த்தங்களை அதாவது பிரமத்தை பற்றிய பிரமத்தை   விலக்கினார். இதுவே “பேதாபேதம் பிரமம் எனாவகை பிரமம் தெளிவித்திடு நாள்” என்று மூன்றாம் வரியில் உள்ளது.

ச்ருதிக்கு தவறாக அர்த்தம் அருளிய அத்வைதிகளை, வாதம் செய்து  சததூஷணி என்னும் கிரந்தத்தை அருளியவர் ஸ்வாமி தேசிகன் என்பது “பேச்சொன்றுக்குச் சததூஷணியைப் பேசிய தேசிக நாள்” என்று நான்காம் வரியாக அமைந்துள்ளது.

மேலும் மாயவாதம் செய்த அவைதீக மதங்களை பரமதபங்கம் என்னும் நூலை இயற்றி அவர்களை வென்றார் என்பது “தீதாகிய பல மாயக் கலைகளைச் சிக்கென வென்றிடு நாள்” என்று ஐந்தாம் வரியாக  உள்ளது.

இவ்வண்ணம், முதலில் ஸ்ரீபாஷ்யத்தைக் காப்பாற்றி, பின்னர் ஸ்ரீபாஷ்யம் பரவுவதற்கு  இருந்த அனைத்து இடர்களையும் களைந்த ஸ்வாமி தேசிகன், ஸ்ரீபாஷ்யத்தை சிஷ்யர்களுக்குக் கற்றுக்கொடுத்து எட்டு திக்குகளிலும் பரவச் செய்தார் என்பதை  “திக்கெட்டும் புகழ் ஸ்ரீபாஷ்யத்தைத் தெளிய உரைத்திடு நாள்” என்ற ஆறாம் வரிக்கு சுவாரசியமான பொருள் கொள்வர் பெரியோர். இதுவே ஸ்ரீபாஷ்யகாரரின் முதல் கட்டளையில்  “பாஷ்யத்தை ப்ரவர்த்திப்பித்தும்” என்றும்  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேதத்திற்கு ஆசார்யரான வேதாந்த தேசிகன் அவதரித்த நாள் புரட்டாசி திருவோணம் என்னும் உயர்ந்த நன்னாள் என்பது “ஓதாதோதும் வேதாந்தாரியன் உதயம் செய்திடு நாள், உத்தமமான புரட்டாசித் திருவோணம் எனும் நாளே.” என்று கடைசி இரண்டு வரியில் ஸ்ரீநயினாராசார்யர் போற்றியுள்ளார்.

குரு பூர்ணிமா தினத்தில் ஆசார்யன் ஆசி வேண்டி,

அடியேன்

 முகுந்தகிரி ஸ்ரீ APN சுவாமியின் காலக்ஷேப சிஷ்யை & சரன் ஸேவக்

ஸ்ரீரஞ்ஜனி ஜகந்நாதன்

13-07-2022 | சுபகிருத் – ஆனி – 29 , புதன், பொளர்ணமி