Sri #APNSwami #Writes #Book |இடைமறித்த இமையோர் தலைவன் |பெண்ணையாறு உற்சவம் @ Thiruvahindrapuram

     திருவஹீந்த்ரபுரத்திலிருந்து தேசிகன் புறப்பட்டபோது, பெண்ணையாற்றில் தேவநாதன் வழிமறித்ததாகவும், அந்நிகழ்ச்சியை நினைவு கூறுவதாகவே பெண்ணையாறு உற்சவம் நடைபெறுவதாகவும் பெரியோர் கூறுவர். இவ்வருடம் விளம்பி தை 5ம் திருநாள் (19/1/19) பெண்ணையாறு உற்சவம். அவ்வனுபவம் இக்கட்டுரை  ஸ்ரீஏ.பி.என் சுவாமி

தொடர்ந்து தேவநாதன் வைபவங்களை அனுபவித்திடுங்கள்…

இனி ஸ்ரீஏ.பி.என் சுவாமியின் இடைமறித்த இமையோர் தலைவன் – Part 1

     அமைதியான வயல்வெளிகளினூடே, சற்றே குள்ளமான ஒரு மெலிந்த ஆண் உருவமும், மற்றொரு பெண்ணுருவமும் சென்று கொண்டிருந்தன. வரப்புகளின் நடுவே மெல்லிய பாதத்தை வைத்து நடந்தபோது தலைசாய்த்த வரப்பின் ஓரமிருந்த நெற்கதிர்கள், அவர்களின் திருவடிகளைத் தடவிக் கொடுத்து தங்களை புனிதப்படுத்திக் கொண்டன. “இதுவரையில் தான்யங்களாகவிருந்த நாங்கள், இன்றுதான் தன்யர்களானோம்” எனும் இறுமாப்பும் உண்டானது.  

     அடர்ந்த மூங்கில் தோப்புகளின் ஊடே புகுந்த பெண்ணையாற்றின் காற்று, கண்ணன் குழலோசையை சுமந்து வந்தது. வெள்ளை வெளேரென்று வேஷ்டி, திருமேனியில் துலங்கும் ஊர்த்வபுண்ட்ரம், நடையசைவிலும், காற்றின் வேகத்திலும் திருமார்பில் புரளும் துளசி, தாமரை மணிமாலைகளின் மெல்லிய சப்தம் என அனைத்தும் தெய்வீகத்தைத் தோற்றுவித்தது.  தேகம் மெலிந்திருந்தாலும் எடுத்துவைத்த அடி ஒவ்வொன்றும் உறுதியானது.  உதடுகள் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன.  உற்றுக் கேட்டால், உயர்ந்த, ‘த்வயம்’ எனும் மகாமந்திரத்தின் மனனம்தான் அது.  அதே பாவனையில் அவரைப் பின் தொடர்ந்தாள் அந்தப் பெண்மணி.

     அவரோ முன்னேறிக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது தயக்கத்துடன் திரும்பி, திரும்பி பார்த்துக் கோண்டிருந்தார்.  கண்களில் பயமில்லை. ஆனால் ஏக்கம் குடிகொண்டிருந்தது.  ‘எதையும் எதிர்பாராதவருக்கும் ஏக்கமா?’ என்று எண்ணத் தோன்றுகிறது. அவர் பார்த்த திசையில் தூரத்தில் அழகிய ஔஷதகிரியும், அதன் அடிவாரத்தில் தேவநாதப் பெருமாளின் திவ்ய ராஜகோபுரமும் தெரிந்தன.  இவர்கள் முன்னே செல்லச் செல்ல அவைகள் மரங்களிடையே மறைவதைத்தான் ஏக்கத்துடன் பார்க்கின்றார் என்பது புரிகிறது.

     மலைமுகடு முழுதும் மறைந்த பின்னர் சில விநாடிகள் அங்கேயே நின்றார்.  நெடியதொரு பெருமூச்சு அவரின் திருமேனியில் கிளர்ந்தது. அம்மூச்சின் வெப்பத்தில் பசுமையான பயிர்கள் கூட சற்றே வாட்டமடைந்தன.

     “தேவ……….நா……..தா………..” என உச்சரித்த உதடுகளின் ஓசை காற்றில் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்தது.

அவர் வேதாந்த தேசிகர்.

     இதுவரையிலும் திருவஹீந்திரபுரத்திலிருந்த அவர், தேவநாதனைப் பிரிய மனமில்லாமல் புறப்பட்டு யாத்திரை சென்று கொண்டிருக்கிறார்.

     காஞ்சியிலிருந்து திருவரங்கம் புறப்பட்டார் ராமானுஜர்…. அப்போது வரதனைப் பிரிய மனமின்றி அவர் பட்டபாட்டைத்தான் இன்று தேசிகனும் அனுபவிக்கிறார்.  அவரேதான் இவரன்றோ!!

     அங்கு தேவராஜன்.  இங்கு தேவநாதன்.

     “சுவாமி!” – அந்த மாதரசி, அவரின் மனைவி திருமங்கை அழைத்தாள்.

     “என்ன மங்கா?”

     “தங்களின் மனத்தில் உற்சாகமில்லையே?” – ‘என்றுமே இந்த மகானின் மனோரதத்தை அறிந்து அதன்வழி நடப்பவள்’ எனும் பெருமை கொண்டவள் அவள்.  அதனால் கணவனின் கலக்கத்திற்கு, அமைதியாகக் காரணம் வினவினாள்.

     “உண்மைதான் மங்கா! தேவநாதனைப் பிரிய மனமின்றி தவிக்கிறேன். அதே சமயம் யாத்திரை செல்வதும் அவசியமாகிறது.  திருவஹீந்திரபுரம் வந்து பல நாட்களாகிவிட்டன.  மேலே பல திவ்யதேசங்களுக்குச் சென்று ஸம்ப்ரதாய ப்ரசாரம் செய்ய வேண்டும்.  ஒருபுறம் ஸம்ப்ரதாயம்.  மறுபுறம் தாஸஸத்யனின் ஸாந்நித்யம்.  அதனால்தான் தவிக்கிறேன். ம்………….ஹூ………ம்……..” என்று மீண்டும் நெடியதொரு பெருமூச்செறிந்தார்.

     அதன்பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை.  அமைதியாக பயணத்தைத் தொடர்ந்தனர்.

     பெண்ணையாற்றின் கரைக்கு வந்தாகிவிட்டது.  ஹேமந்த ருதுவாகையால் நதியில் அவ்வளவாகத் தண்ணீர் பெருக்கு இல்லை.

     கண்ணனைச் சுமந்த வசுதேவர் யமுனைக் கரைக்கு வந்ததும் உற்சாக மிகுதியால் அவரின் தலை வரை ப்ரவகித்தது யமுனை.  கண்ணனின் திருவடிபடப் பெற்றால் தூயபெருநீராகலாம் என்று அலைகளாகிய கைகளால் துள்ளியது.  அது பகவத் சம்பந்தம்.  இங்கு பாகவத சம்பந்தம். அதையெண்ணி பெண்ணையாறு பெருமையாகத்தான் ப்ரவகித்தது.

     “மங்கா! நதியின் வெள்ளம் அதிகமில்லை.  நாம் இப்படியே கரைகடந்து விடலாம்” என்றார் தேசிகன்.

     “சளக், சளக்……” நிசப்தமான அந்தப் பொழுதினில் இவர்களின் பாத வைப்பு, திக்குகளில் எதிரொலித்தது.

     ஏறக்குறைய நதியின் நடுவே வந்தாகிவிட்டது.  சற்றே களைப்பு நீங்க, ஆச்வாசம் செய்து கொண்டனர் இருவரும்.  இவர்கள் நடக்காததால் இப்போது நிசப்தம்.

     திடீரென்று சளசள சப்தம்.

     யாரோ வெகுவேகமாக……. இல்லையில்லை…… ஓடி…. வருகின்றனர்.

     அவர்களின் வேகம் கண்டு பெண்ணை இருபிளவாகப் பிளந்ததோ என்னும் அளவிற்கு சப்தம் கேட்டது.

     கூட்டிலிருந்த பறவைகள் சடசடத்து கிளைவிடுத்து வானில் பறந்தன.

     தேசிகன் சுற்றுமுற்றும் நோக்கினார்.  சுற்றும் எதுவும் புலனாகவில்லை.

     யாரோ நெருங்கி வருவதை மட்டும் உணர முடிந்தது.  ஆழமற்ற பெண்ணையின் அலைகளாகிய கைகள் தற்போது இவரின் காலகளை இறுகப்பற்றிக் கொண்டு நகரவொட்டாமல் தடுப்பது போன்று உணர்ந்தார்.

     “இதென்ன ப்ரமையா? அல்லது யாராவது மாந்த்ரீகம் செய்கிறார்களா?”

     இது மந்திரத்தின் சக்தியல்ல.  ஏதோ மகத்துவத்தின் சக்தி.  நாற்புறமும் நோக்கினும் எதுவும் புலனாகவில்லை.  அவரின் கூர்மையான கண்களுக்குப் புலப்படாதது,  நாசிகையின் நறுமணத்தால் புலனாகியது.

     அந்த சுகந்த பரிமளத்தை ஒருமுறை முழுதுமாக உள்வாங்கினார். இதுவரையிலும் காற்றிலில்லாத வாசம் நுரையீரலை நிறைத்தது.

     இது துளசியின் நறுமணம். “நாற்றத்துழாய்முடி நாராயணன். ஆர்க்குங்கருணை பொழிவான் அயிந்தையில் வந்தமர்ந்த கார்க்கொண்டல்”. “தேவநாதன்…… தேவநாதன்…..”. “ஹே! ப்ரபோ! அடியவர்க்கு மெய்யனே, அயிந்தை நாதனே! எங்குள்ளாய்? எங்குள்ளாய்? என்னப்பனே! எனைத் தொடரும் என் ஈசனே! உன்னைக் காட்டித் தந்தருளாய்!”  

     பெண்ணையின் நடுவில் வெண்ணையாக உள்ளம் உருக, இங்கும் அங்கும் ஆவலுடன் அவர் சுழன்றதைக் காண்போர், “இவரென்ன உன்மத்தரா? அல்லது பித்தரா?” என்பர்.

     அவனைக் காண இவர் தவிப்பதைவிட, இவரைப் பிரிந்து தேவநாதனன்றோ துடித்துப் போய் வந்துள்ளான்.

To continue in Part 2

வாத்ஸ்ய ஸ்ரீக்ருஷ்ணமார்ய மஹாதேசிகன் அந்தேவாஸீ

அனந்தபத்மநாபாசார்யன்

(ஆசிரியர் – ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியா)

விளம்பி மார்கழி, கூடாரை.

 


      திருவஹீந்த்ரபுரத்திலிருந்து தேசிகன் புறப்பட்டபோது, பெண்ணையாற்றில் தேவநாதன் வழிமறித்ததாகவும், அந்நிகழ்ச்சியை நினைவு கூறுவதாகவே பெண்ணையாறு உற்சவம் நடைபெறுவதாகவும் பெரியோர் கூறுவர். இவ்வருடம் விளம்பி தை 5ம் திருநாள் (19/1/19) பெண்ணையாறு உற்சவம். அவ்வனுபவம் இக்கட்டுரை  ஸ்ரீ ஏ.பி.என் சுவாமி

இடைமறித்த இமையோர் தலைவன் – Part 1ல்

     நேற்று,   “தான்யங்களாகவிருந்த நாங்கள், இன்றுதான் தன்யர்களானோம்” என்றும், ‘த்வயம்’ எனும் மகாமந்திரத்தின் மனனம், வேதாந்த தேசிகர் திருவஹீந்திரபுரத்திலிருந்த அவர், தேவநாதனைப் பிரிய மனமில்லாமல் புறப்பட்டார்.   அதேபோல்,  காஞ்சியிலிருந்து திருவரங்கம் புறப்பட்டார் ராமானுஜர்…. அப்போது வரதனைப் பிரிய மனமில்லாமல், அதேபோல் இன்று தேசிகன் திருவஹீந்திரபுரம் விட்டு  பெண்ணையாற்றின் கரைக்கு வந்து சேர்ந்தார்.  சுகந்த பரிமளமான துளசியின் நறுமணம்  நாற்றத்துழாய்முடி நாராயணன் என்றும், இப்படி பல நறுமணங்களை முதல் பகுதியில் அனுபவித்தோம்.  இன்னும் பல நறுமணங்களை அனுபவிக்க –

தொடர்ந்து தேவநாதன் வைபவங்களை அனுபவித்திடுங்கள்…

இனி ஸ்ரீஏ.பி.என் சுவாமியின் இடைமறித்த இமையோர் தலைவன் – Part 2

      விந்த்யமலைக் காட்டில் வழிதவறிய இளையாழ்வாரைக் காக்க, வரதனும்  பெருந்தேவியும் வந்து நின்றது போன்று, இன்று இவரை வழிமறித்து, தேவநாதனும் தேவதேவியுமான ஹேமாம்புஜமும் எதிர்நின்றனர்.

     தண்ணீரில் மூழ்கினவர் தத்தளித்துத் தவிப்பர்.  ஆனால் இவர்கள் இருவரின் சங்கமத்தைத்,  தான் பெற்ற பெண்ணையாறோ,  தவித்துத்தான் போனது.  இனியும் சமுத்திரத்தில் சென்று, தான், சங்கமிக்க வேணுமோ என்று தவித்துத்தான் போனது.

     “இனி எவராவது யமுனையின் பெருமை பேசிடுங்கள்? எங்கள் தேசிகர் சம்பந்தம் அதற்குண்டா! எனக் கேட்பேன்” என்று குதூகலமாக ஆர்ப்பரித்தது.

     நொடிப்பொழுதில் பெண்ணையாற்றின் வெள்ளப் பெருக்கு அதிகரித்தது. இது கரைபுரண்டால் அதை யார் கட்டுப்படுத்துவது? எனத் தோன்றும் போதே, இவ்வெள்ளம் பக்தி வெள்ளம் என்று தெரிந்தது. உள்ளத் தூய்மை உடையோருக்கே இது புலனாகும்.

நாதனைக் கண்ட நாதன் தழுதழுக்கிறார்.  அவன் தேவநாதன்.  இவர் வேங்கடநாதன்.  பகவானை சேவித்த குளிர்ந்த கண்ணீர் இவருக்கு; பாகவதோத்தமனைக் கண்ட ஆழிமழைக் கண்ணீர் அவனுக்கு.

     “வேங்கடநாதா! எனை விடுத்துச் செல்கிறாயே?!”  தேவநாதனின் த்வநி தொண்டை அசைவில்தான் தெரிந்தது.  ஊருக்கெல்லாம் வேதத்தை உபதேசித்தவன், ஒருவார்த்தை சொல்ல முடியாமல் தொண்டைக்குழிக்குள் தடுமாறுகிறான்.

   “அடியேன், மேலே கைங்கர்யங்கள் பல உள்ளன.  என்னைப் பொறுத்தருள வேண்டும்” – தேசிகன்.

   “ஏன், என்னுடன் இருப்பது உன் ராமானுஜ ஸம்ப்ரதாய ப்ரசாரத்திற்கு இடையூறா?” – பெருமாள்.

 என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் மௌனம் காத்தார் தேசிகன்.

    “கவிதார்க்கிகசிங்கமே! எனது கேள்விக்கென்ன பதில்?”– பெருமாள்.

     “இதோ பார்த்தாயா! இந்த பெண்ணையாற்றின் தண்ணீர் சுடுவதையும், இங்குள்ள மீன்கள் தவிப்பதையும் பார்த்தாயா?!”

தேசிகன் மௌனம் காத்தார்.

     “ராமன் காட்டுக்குச் சென்றபோது மரங்கள் வாடின, நீர்நிலைகள் கொதித்தன, ஜலஜந்துக்கள் துடித்தன. இதையெல்லாம் அறிவாயன்றோ?!  இன்று உனது பிரிவில், இவைகள் மட்டுமா, நானும் வாடுகிறேன் என்பதை நீ உணரவில்லையா?”

    “ஸர்வேச்வரா!” என்றார் தேசிகன்.

     அவர் அப்படி அழைத்து முடிப்பதற்குள் இடைமறித்த தேவநாதன் “ராமனாக இருந்தபோது, ‘தேவகாரியம்’ என காட்டிற்கு விரைந்தேன்.  இன்று அர்ச்சையில், ‘தேவநாதனாக’ தவிக்கிறேன்”.

    உணர்ச்சிப்பெருக்கு உந்தித்தள்ள, இமையோர் தலைவன் பேசிக் கொண்டேயிருந்தான்.

     எம்பெருமானின் சக்திஆவேசம் எவருக்காவது வந்தது எனில், அவர்கள் இவ்விதம் பேசுவார்கள்.  இன்று, எம்பெருமானே ஆவேசம் வந்தது போன்று கொந்தளித்துப்  பேசியதை இவ்வுலகே வியந்து பார்த்தது.

     அவனுடன் சேர்ந்து நிற்கும் திருவாகிய ஹேமாம்புஜம், தனது கைகளால் நாதனின் கரம் பற்றி ஆச்வாசம் செய்தாள்.  அவளின் கனிவான பார்வை, தன் நாதனிடமிருந்து வேங்கடநாதனிடம் திரும்பியது.

     பெண்ணையின் நடுவில் அந்தப் பெண்மையின் அருளை உணர்ந்தார் பெரும்பூதூர் முனிவரின் வழித்தோன்றல்.

    “பிள்ளாய்! நீ திரும்பினாலன்றோ தேவநாதனின் திருவயிந்திரபுரம் திகழ்ந்துறையும்” என்றாள்.

     “தாயே! அடியேன் காத்திருக்கிறேன். விடுவேனோ! என் ஆருயிர் விளக்காவியை! நடுவே வந்து உய்யக்கொண்ட என் நாதனை” என்று திவ்யதம்பதிகள் திருவடி பணிந்தார் தேசிகோத்தமன்.

     பெருமானின் உணர்ச்சிப் பெருக்கைக் கண்டு தன் வெள்ளப்பெருக்கினைக் கட்டுப்படுத்திய பெண்ணையாறு இப்போது மகிழ்ச்சிப் பெருக்கால் மாநதியாகப் பாய்ந்தது.

    “ஹே! ப்ரபோ! எங்கோ உன்னை விட்டகன்று தூரமாக வந்த என்னை, கயிற்றில் கட்டிய பறவை போன்று பிடித்திழுத்துத் திருவடி சேர்த்தாயே!  ஆரணங்கள் தேட அயிந்தை வந்த நாதா!  இடைமறித்த இமையோர் தலைவா!  மெய்நின்று கேட்டருளாய், அடியேன் செய்யும் விண்ணப்பமே!” என திருவடி தொழுதார் தேசிகோத்தமன்.

                          “மையுமா கடலு மயிலு மாமழையும்

                           மணிகளும் குவளையும் கொண்ட

                           மெய்யனே! அடியோர் மெய்யனே!

                           விண்ணோரீசனே, நீசனேடந்தேன்

                          கையுமாழியுமாய்க் களிறு காத்தவனே!

                          காலனார் தமரெனைக் கவராது

                          ஐயனே! வந்தன்றஞ்சல் என்றருள்

                          தென் அயிந்தை மாநகரமர்ந்தானே!”

எனப் போற்றினார்.  பல்லாண்டு பாடினார்.

     இவரின் வாக் அமுதம் பருகவன்றோ வழிமறித்தான் வாசுதேவன்.

     இப்படி இடைமறித்ததால் இடைக்கோவலூராகவும், நடுவே தடுத்ததால் நடுநாட்டுத் திருப்பதியாகவும் ஆனதோ இத்திவ்யதேசம்!!

குறிப்பு

     “உயர்ந்த நீ உன்னை என்னுடன் கலந்தனை” என்று ஸ்வாமி அருளியபடி,  தேசிகோத்தம – தேவநாத அநுபவமாக இதனை எழுதினோம்.  இதில் தேச, கால ஆராய்ச்சிகள் தண்ணீர் துரும்பு.  வெறும் அனுபவமாகவே மஹான்கள் ரசித்து அநுக்ரகித்திட வேண்டுகிறோம்.

முடிவுரை:

     சுவாமி தேசிகனுக்கும் தேவநாதனுக்கும் உள்ள பிணைப்பு, சாமானியர்களான நம்மைப் போன்றவர்களுக்கு உணர முடியாதுதான்!  ஆனால், ரசிக்க வேண்டும் என்று அனுபவ வெள்ளம் பாய்ந்தோடும்போது, அதை அணைபோட முடியுமா?  அவ்வனுபவமே இந்தக் கட்டுரை.

     இப்படி தேவநாதன் தடுத்தாட்கொண்ட காரணத்தால், தேசிகன், தேவநாயக பஞ்சாசத், அச்யுய சயயம், மும்மணிக்கோவை, நவமணிமாலை, பந்து கழல் அம்மானை, ஊசல், ஏசல்  எனப் பல நூல்களை அவன் விஷயமாக இயற்றினார்.  பரமதபங்கமும் இங்கு அவதரித்ததெனக் கூறுவர். மேலும் தனது பிரிவைப் பொறுக்காத பெருமானுக்கு தனது அர்ச்சா மூர்த்தியை அளித்ததாகவும் கூறுவதுண்டு.

வாத்ஸ்ய ஸ்ரீக்ருஷ்ணமார்ய மஹாதேசிகன் அந்தேவாஸீ

அனந்தபத்மநாபாசார்யன்

(ஆசிரியர் – ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியா)

விளம்பி மார்கழி, கூடாரை.