Sri APNSwami’s Shishya Writes |கவி ஸிம்ஹம் பாடிய ராகவ ஸிம்ஹம்

ஸ்ரீ:
கவி ஸிம்ஹம் பாடிய ராகவ ஸிம்ஹம்
ஜய் ஸ்ரீராம் | Long Live Ayodhya
(Ayodhya SriRam Janma Bhumi Temple Bhumi Puja Special Article)

முக்தி தரும் ஏழு நகரங்களாவன அயோத்தி, மதுரா, மாயா/ஹரித்வார், காசி(வாரணாசி), காஞ்சி, உஜ்ஜயினி (அவந்திகா), துவாரகை. இதில் முதன்மையானது அயோத்தி மாநகரம்.

“இந்த அயோத்தி மாநகரமானது உயர்ந்த மதில்களினால் நாற்புறமும் சூழப்பட்டது. அழகிய அயோத்திலே ஸகல லோகத்திற்கும் ஒளியை அளித்து விளங்குபவனான எம்பெருமான், ஸூர்ய குலத்திற்கு ஒப்பற்றதொரு விளக்கு போல அதில் வந்து அவதரித்து, தேவர்களின் துன்பம் தீர்த்து, மஹாவீரன் என்று போற்றப்படுகிறான். சிவந்த திருக்கண்களையுடைய, பெரிய காளமேகம் போன்ற வடிவ முடையவனான அந்த மஹாவீரனே ஸ்ரீராமனென்னும் திருநாமமுடையவன்!” என்று குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழியில், ராமனையும், அவன் பிறந்த அயோத்தியையும் கொண்டாடுகிறார்.
அங்கணெடு மதிள்புடைசூழ் அயோத்தியென்னும்
அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி
விண்முழுது முயக்கொண்ட வீரன் றன்னை,
செங்கணெடுங் கருமுகிலை யிராமன் றன்னைத்….

இன்று(5-ஆகஸ்ட்-2020) அயோத்திமாநகரம், ராம ராஜ்யத்தின் பெருமையை பறை சாற்றும் வண்ணம், ஸ்ரீராமனின் ஆலயத்திற்கான பூமி பூஜைக்காக விழா கோலம் பூண்டு, ஸ்ரீவைகுண்டமே பூலோகத்தில் உள்ளதோ என்றபடி பொலிவுடன், எவராலும் வெல்ல முடியாத நகரம் என்ற தன் பெயருக்கு ஏற்ற வகையில் சீதாராமனின் புகழ் பாடிய படி திகழ்கிறது.

அன்று த்ரேதா யுகத்தில் ராமாவதாரத்தில், அயோத்தி திரும்பிய ராமன் தன் பக்தனான பரதனின் விருப்பத்தை பூர்த்தி செய்தான். ஆம், ராமனை ஸிம்ஹாஸனத்தில் ஸேவிக்க வேண்டும் என்று ஆவல் கொண்ட பரதனின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில், ஸிம்ஹாஸனத்தில் ஏறி அமர்ந்து முடிசூடி, ராகவ ஸிம்ஹன் உலகம் முழுவதும் காத்தருளினான்.

இன்று கலி யுகத்தில், ராம நாமமே தாரக மந்திரம் என்று வாழும் பக்தர்களின் உள்ளம் மகிழும் வண்ணம், சீதாபதி மீண்டும் ராம-ராஜ்யத்தை ஸ்தாபனம் செய்து உலகை ரக்ஷிக்கிறான்.

Ayodhya Bhumi Puja – Swami Desikan @ Sugreeva Quila

இந்த நன்னாளில் ராகவ ஸிம்ஹனையும் அவன் தலைநகராக அரசாண்ட அயோத்தியையும், சுவாமி தேசிகன் ஸங்கல்ப சூர்யோதயத்தில் போற்றிய வழியில் நாமும் போற்றி துதிப்போம்.
சுவாமி தேசிகனின் ஸங்கல்ப சூரியோதயம் என்னும் ஸம்ஸ்க்ருத நாடகத்தில், யோகம் புரிவதற்கு சரியான இடத்தை தேடி விவேக மஹாராஜன் தன் ஸாரதியான தர்கனுடன் செல்கிறார். அப்பொழுது இருவரும் அயோத்தி மாநகரை அடைந்தனர்.
“எம்பெருமானின் அவதாரத்தினால், பாபமெல்லாம் போய் சுத்தமான ஸாகேத தேசத்தை (அயோத்திக்கு மற்றோரு பெயர்) மஹாராஜர் காணலாம். ஸ்ரீவைகுண்டத்திலுள்ள அயோத்தியே இந்த அயோத்திமாநகரம். இங்கு வெள்ளமிடும் ஸரயூநதியே விரஜை நதியாகும். அங்கே சாஸ்த்ர விதிப்படி பசுக்கள் கட்ட யூபஸ்தம்பங்கள் இருந்தன. அவை ஸ்ரீராமன் யாகத்திற் சேர்ந்தவையாகும். ரகுபதியான எம்பெருமான் தான் ஸ்வதந்ரமாய் எதையும் செய்யலாமாகையாலே, தன் அவதாரத்தை பூர்த்திசெய்து கொண்டு ஸ்ரீவைகுண்டத்திற்கு திரும்பிச் செல்லும் போது, அயோத்தியில் இருந்த அனைத்து ஜீவராசிகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றான். அப்பேற்பட்ட இந்த தேசம் ஸம்சாரத் துயரினை நீக்கி ஸ்ரீவைகுண்டம் அளிக்கும் மோக்ஷ தேசமாகும்.” என்று அயோத்தியின் பெருமையை ஸாரதி விவேக மஹாராஜாவிடம் விளக்கினான்.
அப்பொழுது விவேகன் எங்கும் பார்த்த படி “அயோத்தியில் உத்யானங்களில்(மாடங்களில்) கிளிக்கூட்டங்கள் மூன்று வேதங்களையும் ஓதுகின்றன. பண்டைய தர்மானுஷ்டானங்கள் இதனின்று நன்றாக தெரிகிறது. மேலும் ஜனங்களின் “ராம்” என்ற கோஷத்துடன் கூடியபடி அயோத்தி மாநகரம், ரகுவம்சத்து அரசர்கள் நாட்டிய சிறந்த யூபஸ்தம்பங்களாலும் நேர்த்தியாக விளங்குகின்றது.” என்று கூறினான்.
மேலும் அயோத்தியை ரசித்த படி, விவேகன் மகிழ்ச்சியும், மயிர் சிலிர்ப்புடன் , “இந்த்ரியங்கள் (புலன்கள்) என்ற முகங்களினால், பயங்கரமான மனமென்னும் அரக்கனை, யோகிகளின் நல்லது எது கேட்டது எது என்று பார்த்து அறியும் விவேகமென்னும் அம்புகளின் திரள்களால், அழிப்பவனும், தயரதன் மகனாகவும் , தயையே வடிவாக உள்ள ஜானகிதேவியாருடன் இருக்கும் அந்தத் திருமாலான ராமன், நல்லாருக்கு அபயம்(அடைக்கலம்) அளிப்பானாக.” என்று ஆவலுடன் கைகூப்பிக்கொண்டான்.
மேலும் “வேறொரு புகல் இல்லாதவர்களை தானே முன்னின்று காப்பதாகிற விரதத்தினால், மேன் மேலும் வளருகிற புகழையுடையவன் ராமன். இந்திரன் தன் மனம் போனபடி செய்த காரியத்தால், கோபத்தை அடைந்தவரும், சாபத்தையே ஆயுதமாகவுடைய கௌதம முனிவரின் மனைவியான அஹல்யையினுடைய கல்லாயிருக்கும் கெட்ட தசையை போக்கடிக்கும் திருவடித்தாமரைகளின் தூள்களையுடைய சிறந்த அந்த ராமபிரானை வணங்குகிறேன். “ஸ்ரீராமனுக்கு எனது வந்தனம்.” என்று விவேகன் வார்த்தை மூலம் சுவாமி தேசிகன் அயோத்தியை மங்களாசாஸனம் செய்கிறார்.

எம்பெருமானின் ஸங்கல்பம் என்னும் சூர்யோதயத்தினால், ராம ஜன்ம பூமியாம் அயோத்தியில், ஸ்ரீராமனின் ஆலயத்திற்கான பூமி பூஜை நடக்கும் இந்நன்னாளில், கவி ஸிம்ஹமாம் சுவாமி தேசிகன் கூறிய வழியில் நாமும் அயோத்தியின் பெருமை பாடிய பாடி, ராகவ ஸிம்ஹனான ஸ்ரீராமனுக்கு வந்தனம் பாடிய படி, அவன் திருவடியில் அடைக்கலம் புகலாம்.
அடியேனின் ஆசார்யன் ஸ்ரீ APN சுவாமிகள் பல காலக்ஷேபங்களில் அருளியதை அடியேன் இந்த நன்னாளில் தொகுத்துள்ளேன்.

ஜய் ஸ்ரீராம் ! ஜய் ஸ்ரீராம் ! ஜய் ஸ்ரீராம் !
Long Live Ayodhya

அடியேன்
ஸ்ரீரஞ்சனி ஜகந்நாதன்
(5-Aug-2020)