Sri #APNSwami #Writes #Book |ஸிம்ஹங்களின் ஸல்லாபம் | அனுஷ்டான குளம் – சாலைக்கிணறு உற்சவம் @ காஞ்சி

      யாதவப்ரகாசர் சூழ்ச்சியால் விந்த்யமலைக் காடுகளில் வழிதவறித்தவித்த ராமானுஜரை வரதனும், பெருந்தேவித்தாயாரும் காப்பாற்றினர். வேடுவன், வேடுவச்சி வடிவில் வந்த அவர்கள் ஒரு இரவிற்குள் ராமானுஜரை விந்த்ய மலையிலிருந்து காஞ்சிக்கு அழைத்து வந்தனர். இந்நிகழ்வை நினைவு கூறும் விதமாக வருடந்தோறும் இராப்பத்து ஆழ்வார் மோக்ஷமான பின்பு, தேசிகப்ரபந்த சாற்று மறையன்று வரதனும், ராமாநுசனும் சாலைக்கிணறுக்கு எழுந்தருளி, பின்னர் தூப்புல் தேசிகன் சன்னிதிக்கு எழுந்தருளுகின்றனர். அந்த சமயம் பெருமாள், ஸ்ரீ பாஷ்யகாரர், தேசிகனுக்கு நடந்த உரையாடல் தொகுப்பு இது.

     1999ம் வருடம் உத்ஸவத்தை சேவித்த ஸ்ரீ APN சுவாமி, தனது ஆசார்யர் புரிசைஸ்வாமியின் நியமனத்தால் இவ்வுரையாடலை தொகுத்து வெளியிட்டார். அதன் மறுபதிப்பு இப்போது. இவ்வருடம் – விளம்பி. இந்த உத்ஸவம் மார்கழி-14 (டிஸம்பர்-29) நடைபெறவுள்ளது.

இனி ஸ்ரீAPN ஸ்வாமியின் ஸிம்ஹங்களின் ஸல்லாபம் தொடரும்…

அனுஷ்டான குளம் – சாலைக்கிணறு உற்சவம் 29/12/18 @ காஞ்சி

“ஸிம்ஹங்களின் ஸல்லாபம்” part – 1

     ஸ்வாமி தேசிகன் அவதாரஸ்தலமான தூப்புல் ஸன்னதி வீதி.  இருபுறமும் மக்கள் கூட்டம் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டு இமைக்காமல் பரபரப்புடன் நிற்கின்றனர். இவர்களுக்கு நடுவே மிகச் சிறந்ததொரு வெள்ளித்தோளுக்கு இனியானில் ஸ்வாமி தேசிகன் மிக்க ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்பொழுது சிறிது தூரத்தில் சிற்றின்பம் இசையாத இவ்வைணவ ஸமூஹத்திற்கு செவிக்கினிதான திருச்சின்னவொலியும் அதைத் தொடர்ந்து உடல் வாத்ய கோஷங்களும், விண்முட்டும் வேதபாராயண சப்தமும் கேட்க அந்த வீதியே – ஸ்வாமிதேசிகன் உள்ளிட்ட அனைவரும் மிகுந்த பரபரப்புள்ளாகின்றனர். சிறிது தொலைவில் இரண்டு பெண் ஹம்ஸங்களுக்கு நடுவில் ஒரு ராஜஹம்ஸமாய், எழின்மதி திகழ்ந்தவதனமுமாய், வபாரிமளவாஸிதனாய் பிராட்டியாகிய மின்னல் கொடிபடர்ந்ததிருப்பதால் ஒளி வீசப்பெற்ற கறுத்த திருமேனியுடையவனாய், வெண் கொற்றக்குடைக்கீழே அத்திரவரக்கன் முடிபத்தும் ஒரு கொத்தாக உதிர்ந்த வல்வில் ராமனாய், தேவாதிதேவன் எழுந்தருள, அவரின் பின்னே ‘லக்ஷ்மணோ அநுஜகாம ஹ’ எனும் ரீதியில் ராமாநுஜராய் ஊர்த்வபுண்ட்ரமும் த்ரிதண்டமும் ஏந்தி ஸ்ரீபாஷ்யகாரர் எழுந்தருளுகிறார். அனைவரும் தண்டனிட்டுத் தொழுது எழுகின்றனர். ஸ்வாமி தேசிகன் ‘ப்ரஸாத பரமௌ நாதௌ மம கேஹம் உபாகதௌ’ என்று தர்சன தாம்பூலம் ஸமர்ப்பித்து எம்பெருமானையும், எம்பெருமானாரையும் ஒரு சேரஸேவித்து ‘வைகுண்டவாஸேsபி நமோsபிலாஷ:’ என்கிறார்.  பிறகு பெருமாள் தேசிகன் ஸந்நிதியுள்ளே எழுந்தருள, பெருமாளைத் தொடர்ந்து ஸ்ரீபாஷ்யகாரரும் ஸரோமாஞ்சித (மயிர்கூச்செறிதலும்) ஸ்வாமி தேசிகன் எழுந்தருள, இருகையும் கூப்பிகொண்டு பாகவதர்களும் சொல்கின்றனர்.  அங்கு உயர்ந்த ஸ்வர்ண வேதிகையில் பெருமாளும், அவரின் இடப்புறம் ஸ்ரீபாஷ்யகாரரும், இருவரையும் மங்களாசாஸநம் செய்தபடி ஸ்வாமி தேசிகனும் எழுந்தருளியுள்ளார்.

     ஸ்ரீ விசிஷ்டாத்வைத ஸித்தாந்த நிர்தாரண துரந்தரர்களான இந்த ஆசார்ய வரர்களின் சேர்தியினால் அகமகிழ்ந்த வரதன் இந்த வைணவ குழாங்கள் முன்பேயே இவர்களுடன் ஸல்லாபிக்கத் திருவுள்ளம் பற்றினான். அந்த ஸரஸ ஸல்லாபம் இதோ.

     வரதன்: வேங்கடநாத! (என்று அழைக்கிறார். ஆனால் ஸ்வாமி தேசிகன் ஸ்ரீபாஷ்யகாரரையே ஸேவித்துக்கொண்டு இருப்பதைக் கண்டு சற்று உரக்க) ஓய் வேதாந்தவாசிரியரே! (என்றழைக்கிறார்)

     தேசிகன்: (துணுக்குற்று) என்ன என் ஆசார்யர் திருமுன்பு யார் என்னையவ்வாறு அழைத்தது.

     வரதன்: நானன்றி உம்மையார் அவ்விதம் அழைப்பர். அது சரி என்னிடத்தில் பரமபக்தியுள்ளவர் நீர் என்று ஊர்முழுக்க நான் சொல்லிக் கொண்டிருக்க! நீர் நான் அருகில் உள்ளபோதே எனைப்பாரமல் ஆசார்யரையே பார்க்கிறீரே.

     தேசிகன்: வரத உன்னிடத்தில் நான் கொண்ட ப்ரேமையினால் தான் வைகுண்டவாஸத்தையும் விடுத்தேன், ஆனால் உன்னை எனக்குந்தந்தவர் எம் ஆசார்யர் அல்லவா? அதனால்தான்

अनुकल्प भूत मुरभित्पदम् सताम् अजहत्त्रिवर्गमपवर्गवैभवम्

चलचित्तव्रुत्तिविनिवर्तनौशधम् शरणम् यतीन्द्रचरणम् व्रुणीमहे

     (எம்பெருமான் திருவடியைக் காட்டிலும் ஆசார்யரின் திருவடிகளை தாங்கள் உய்வதற்கு முக்யமான உபாயமாகவும், அநுபவிக்கும் பலனாகவும் அறிஞர்கள் கொள்வார்கள்.) ஸ்ரீசத்ருக்னாழ்வான், ஸ்ரீமதுரகவிகள் காட்டிய தொல்வழியன்றோ இது.

     வரதன்: நன்றாயிருக்கிறது உன்னுடைய ந்யாயம். அன்று விந்த்ய காட்டில் உம் ஆசார்யர் வழியறியாமல் திண்டாடியபோது நான்தானே காப்பாற்றினேன். நான் காபாற்றியிராவிட்டால் உமக்கு அவர் கிடைத்திருப்பாரா.

 (ஸ்வாமி தேசிகன் மௌனம் ஸாதிக்கிறார்..)

 தொடரும்….


அனுஷ்டான குளம் – சாலைக்கிணறு உற்சவம் 29/12/18 @ காஞ்சி

“ஸிம்ஹங்களின் ஸல்லாபம்” part – 2

பகவத்ராமனுஜரை, விந்த்யமலைக் காடுகளிலிருந்து ஓரிரவிற்குள் வரதனும், பெருந்தேவியும், காஞ்சிபுரத்திற்கு அழைத்து வந்த நிகழ்வின் உத்ஸவம்.
தெய்வீகமான அனுபவம் தரும் இதனைப்படித்து பகிர்ந்திடுங்கள்.

இனி ஸ்ரீAPN ஸ்வாமியின் ஸிம்ஹங்களின் ஸல்லாபம் தொடரும்…

     வரதன்:  (உரக்க சிரித்து) பார்த்தீரா உம்முடைய வாதத்திறமைகள் மற்றவரிடம்தான் எடுபடும். என்னுடைய கேள்விக்கு நீர் பதில் சொல்ல முடியாது.

     தேசிகன்:  தேவதேவ! நான் பதில் சொல்லத் தெரியாமல் பேசாமலில்லை. ஆசார்யரான ஸ்ரீபாஷ்யகாரரின் அநுமதி இல்லாமல் அதிகமாக பேசுவது அழகன்று என்று பேசாமல் உள்ளேன்.

     வரதன்:  (பாஷ்யகாரரிடம்) என்ன எம்பெருமானரே உம் சிஷ்யர் உம்மிடம் அநுமதி எதிர்பார்க்கிறார். தருகிறீரா!

     பாஷ்யகாரர்:  ப்ரபோ! இன்று உத்ஸாஹமிகுதியால் உம்முடைய  ஸல்லாபத்தைத் தொடங்கிவிட்டீர்.  இதில் எனக்கொன்றும் தடையில்லை. உம்முடைய கேள்விகளுக்கு தேசிகனைத் தவிர வேறுயாரால் பதில் சொல்லமுடியும்.

     தேசிகன்:  (இருகையும் கூப்பிக் கொண்டு ஸ்ரீபாஷ்யகார்ரை ஸேவித்து ஆசார்ய!  தேவரீர் அடியேனை “தேசிகன்” எனலாமா? க்ருபையுடன் பெருமாளின் கேள்விகளுக்கு பதிலருள அடியேனை நியமித்தருள வேண்டும்.

     ஸ்ரீபாஷ்யகாரர்: விஜயீபவ! என்று அநுக்ரஹிக்கிறார்.

     வரதன்:  (சிரித்தவாறு) என்ன ஸங்கல்ப ஸூர்யோதய அநுஸந்தானமா?

     தேசிகன்:  (சற்று வேகமாக) வரதா ஆசார்யர்களின் அருமையறிந்துமா இப்படிப் பேசுகிறாய். சஸ்த்ரபாணியாய் இருந்து ப்ரயோஜனப்படாமல் சாஸ்த்ரபாணியாய் (ஆசார்யனாய்) அவதாரம் செய்ய ஆசைப்பட்டாய் அல்லவா!  ஸ்ரீ பாஷ்யகாரரை ஆசார்யனாக அடைய நான் பட்ட ச்ரமம் கொஞ்சமன்றோ!

     ஸ்ரீபாஷ்யகாரர்:  உன்னுடைய அந்த வருத்தத்தைத் தான் நான் ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் போக்கினேனே.

     தேசிகன்:  ஸ்வாமிந்! அடியேனுக்கு பரமாநுக்ரஹமன்றோ!

     வரதன்:  சரிதான் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஆசார்யனும் சிஷ்யனும் வேறு ஏதோ விஷயத்தைப் பேசி மழுப்புகிறீர்களே.

     (தேசிகன் ஸ்ரீபாஷ்யகாரரைப் பார்க்கிறார். பாஷ்யகார்ரும் தன்னிடமிருந்து திருப்பரிவட்டம், மாலை, பவித்ரம் இவற்றை தேசிகனுக்கு ப்ரஸாதித்தருளி அநுமதிதானம் செய்கிறார்.  ஸவிநயத்துடன் மஹாப்ரஸாதம் என்று அவைகளை தேசிகன் ஸ்வீகரித்துக் கொண்டு பின்னர் பெருமாள் பக்கம் திரும்பி)

     தேசிகன்:  ப்ரபோ இனி உன்னுடைய கேள்விகளுக்கு அடியேன் பதில் சொல்கிறேன்.  விந்த்யாடவியில் ஸ்ரீபாஷ்யகார்ரை நீதான் காப்பாற்றினாய். இது ஸத்யம்! ஸத்யம் புந: ஸத்யம்.

     வரதன்:  இப்படியானால் என்னிடத்தில் க்ருதஜ்ஞதை வேண்டாமா!

     தேசிகன்:  தேவப்பெருமாளே! தேவரீர் ஸ்ரீபாஷ்யகார்ரை காப்பாற்றினது உம்முடைய ஸ்வயநலம் அன்றோ!

     வரதன்:  என்னது! என்னுடைய ஸ்வயநலமா!

    தேசிகன்:  ஆமாம். ஸ்ரீவிசிஷ்டாத்வைத ஸித்தாந்தம் தழைத்தோங்க வேண்டுமென்றால் ஸ்ரீபாஷ்யகாரர் இல்லாமல் முடியுமா.  அந்த ஸித்தாந்தம் இல்லையென்றால் நீயுமிருந்திருக்க முடியாதன்றோ.

    வரதன்:  ஏன் எனக்கு என்ன ஆபத்து வந்திருக்கும்.

    தேசிகன்:  உனக்கு நேர்ந்த ஆபத்துக்களுக்கு கணக்கேயில்லை.  அந்தந்த மதத்தினர் தத்தம் கொள்கைக்கு ஏற்ப ப்ரஹ்மத்திற்கு வேதவிபரீதமான அம்சங்களைக் கற்பித்து வேதம் கூறிய பெருமைகளை இல்லையென்றாக்குவது பெரிய ஆபத்தன்றோ!  அப்படி சைவமதமாகிய சேற்றையும், கபிலமுனிவரின் கற்பனைகளாகிற வலையையும், கடக்கமுடியாத அந்த பிரமன் கண்ட யோகசாஸ்த்ரமெனும் யந்த்ரத்தின் நடுப்பகுதியையும், கடந்து மாயாவாதிகளின் வஞ்சனைகளின் வாயில் விழுகின்ற பரப்ரஹமத்தை (உன்னை) மீட்டவர்
कच ग्रह विचक्षण: लक्ष्मणो मुनि: ஸ்ரீபாஷ்யகாரரன்றோ.

தொடரும்….


அனுஷ்டான குளம் – சாலைக்கிணறு உற்சவம் 29/12/18 @ காஞ்சி

“ஸிம்ஹங்களின் ஸல்லாபம்” part – 3

பகவத்ராமனுஜரை, விந்த்யமலைக் காடுகளிலிருந்து ஓரிரவிற்குள் வரதனும், பெருந்தேவியும், காஞ்சிபுரத்திற்கு அழைத்து வந்த நிகழ்வின் உத்ஸவம்.
தெய்வீகமான அனுபவம் தரும் இதனைப்படித்து பகிர்ந்திடுங்கள்.

இனி ஸ்ரீAPN ஸ்வாமியின் ஸிம்ஹங்களின் ஸல்லாபம் தொடரும்…

      வரதன்:  (ஸ்ரீ பாஷ்யகாரரிடம்) எம்பெருமானாரே!
உம் சிஷ்யர் தன் தர்க்க பாண்டியத்தை என்னிடமே காட்டுகிறார்.

     ஸ்ரீ பாஷ்யகாரர்:  ( நகைத்தவாறு) தேவரீருடைய அநுக்ரஹத்தினால் வளர்த்ததனால் பயன் பெற்றேன் அடியேன்.

     தேசிகன்:  (கைகூப்பி ஸேவித்துவிட்டு) இனி அடுத்த கேள்வியென்ன?

     வரதன்:  சரி என்னுடையஸொந்த லாபத்திற்காகவே நான் இவைகளைச் செய்தேன் என்றாலும் மற்றொரு முக்கிய கார்யத்தையும் நான் செய்தேனல்லவா.

    தேசிகன்:  அது என்ன?

     வரதன்:  யாரை ஆச்ரயிப்பது, எது தத்வம் என்று உம்முடைய ஆசார்யர் தெரியாமல் திண்டாடியபோது “அஹமே பரம் தத்வம்” என்று திருக்கச்சிநம்பிகள் மூலமாக ஆறுவார்த்தைகள் அருளிச் செய்யவில்லையோ!

     தேசிகன்:  இவைகள் நீர் செய்யவில்லையென்று யாரும் சொல்லவில்லையே.

     வரதன்:  இவ்வாறாகில் ஸ்ரீபாஷ்யத்தின் முதல் ச்லோகத்தில் என்னைப்பற்றியன்றோ துதிக்கவேண்டும்.

     தேசிகன்:  (பாஷ்யகாரரைப்பார்க்க)

     ஸ்ரீபாஷ்யகாரர்:  கவிதார்க்கிக ஸிம்ஹமே! இதற்குண்டான பதிலையும் நீயே சொல், என் உள்ளக் கருத்தை உள்ளபடி அறிந்தவன் நீ மட்டும் தான் என்பதை எம்பெருமானும் அறியவேண்டும்.

     தேசிகன்:  தந்யோஸ்மி! (வரதனைபார்த்து) ச்ருதி, ஸ்ம்ருதி, இதிஹாஸ புராணங்களின் அந்தர்ஜ்வரத்தைப் போக்கிய யதிராஜனின் ஸ்ரீ ஸூக்தியில் நீர் குறைகாண்கிறீரா?

     வரதன்:  ப்ரார்தனா ச்லோகத்தில் “ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே” என்று திருமலை ஸ்ரீநிவாஸன் விஷயமாகத்தானே ஸ்தோத்ரம் செய்துள்ளார். உண்மையில் என்னைப் பற்றித்தானே சொல்லவேண்டும்.

     தேசிகன்:  அன்றே அடைக்கலம் கொண்ட எம் அத்திகிரித் திருமாலே! இதிலொன்றும் தவறில்லையே.
இந்த விஷயத்தில் தேவரீர் புரோபாகியாகவே (மேலெழுந்தவாரியாகப் பார்ப்பராய்) இருந்துள்ளீர் நன்கு கவனித்தால் “ ஸ்ரீநிவாஸ !” என்பதின் அர்த்தம் விளங்கும்.

     வரதன்:  நீர்தான் சற்று விளக்கமாகக் கூறுமே.

     ஸ்ரீபாஷ்யகாரர்:  வத்ஸ! நீ த்ரிம்சத்வாரம் (முப்பது தடவை) ஸ்ரீபாஷ்யகாலக்ஷேபம் ஸாதித்த வைகரியை அநுபவிக்க ஆசைப்படுகிறேன்.  அர்த்தததைச் சொல்வாயாக.

     தேசிகன்:  இங்கு ஸ்ரீநிவாஸ சப்தம் “பரமாத்மாவை அதாவது உம்மை தேவதாந்தரங்களிடமிருந்து விலக்ஷணமாக்கிக் காட்டுகின்றது . திருவில்லாத்தேவர் தேவரன்று என்று (ஸ்ரீமந்நாராயணனே பரப்ரஹ்மம் என்பதினை ப்ரதிபாதிக்கின்றது)  “ அகலில்லேன் இறையுமென்னும் அலர்மேல் மங்கையுறை மார்பன் ” நீயென்று ப்ரதிபாதிக்கக் கூடிய சப்தம் இது.  இதே திருநாமத்தை திருமலையில் நித்ய வாஸம் செய்யும் எம்பெருமானும் கொண்டுள்ளான்.  எனவே பரமாத்மாவைக் குறித்துப் பொதுவாகச் சொல்லும் பதம் இது.  நீ ஸாதித்த “ அஹமே பரம் தத்வம் ” எனும் அர்த்தத்தையன்றோ இது விலக்ஷணமாக காட்டுகின்றது. இதில் உனக்கு ஏனிந்தவருத்தம்.

     வரதன்:  குருவிற்கு ஏற்ற சிஷ்யன் நீர்தான்.  நன்கு உபந்யாஸம் பண்ணுகின்றீர்.

    தேசிகன்:  ப்ரமாண சரணராய்ப் போவதற்கு நாங்கள் என்றுமே தயங்கியதில்லை.  எம் ஆசார்யர் ஸாதித்த அர்த்தத்தைக் கொண்டே  “தினைத்தணையும் திருமகளை விடாதார் வந்தார்” என்று உன்னையன்றோ பாடினேன்.

     வரதன்:  சரி கத்யத்ரயத்தில் என்னைப்பற்றிய ப்ரஸ்தாவனம் இல்லையே.  “முக்தி தரும் நகரேழில் முக்கியமாம் கச்சி” என்று இருக்க சரணாகதி கத்யம் ஸ்ரீரங்கத்திலன்றோ அவதரித்தது ஏன்! இதற்கு முன்பு திருவோலக்கத்தில் என்னையும், பெருந்தேவியையும், பாஷ்யகாரர் மங்களாசாஸநம் பண்ணியது இல்லையா?   ஸ்ரீரங்க கத்யம் அருளிச் செய்த மாதிரி காஞ்சீகத்யமும் செய்திருக்கலாமல்லவா. துளி கூட ஸொந்த ஊர் அபிமானம் இல்லாமல் உள்ளாரே உம் ஆசார்யர்.

தொடரும்….


அனுஷ்டான குளம் – சாலைக்கிணறு உற்சவம் 29/12/18 @ காஞ்சி

“ஸிம்ஹங்களின் ஸல்லாபம்” part – 4

பகவத்ராமனுஜரை, விந்த்யமலைக் காடுகளிலிருந்து ஓரிரவிற்குள் வரதனும், பெருந்தேவியும், காஞ்சிபுரத்திற்கு அழைத்து வந்த நிகழ்வின் உத்ஸவம். தெய்வீகமான அனுபவம் தரும் இதனைப்படித்து பகிர்ந்திடுங்கள்.

இனி ஸ்ரீAPN ஸ்வாமியின் ஸிம்ஹங்களின் ஸல்லாபம் தொடரும்…

     தேசிகன்:  ஸர்வலோக சரண்ய! எம் ஆசார்யர் அநவரதம் உன்னையன்றோ ஹ்ருதயத்தில் கொண்டிருந்தார். கத்யத்திலும்

अनालोचित विशेष अशेष लोक शरण्य! प्रणतार्तिहर
आश्रितवात्सल्यैकजलधे———–त्वत् पादारविंद युगलं शरणं अहं प्रपद्ये

உனைக்குறித்தன்றோ அருளிச் செய்தார்.

    ஸ்ரீபாஷ்யகாரர்: (ஸந்தோஷத்துடன்) நன்று! நன்று!

    வரதன்:  என்ன நன்று! ஸாக்ஷாத்தாக என்னிடம் வரவில்லையே.

     ஸ்ரீபாஷ்யகாரர்:  ப்ரபோ இப்படி தேவரீரின் குறையை போக்கவன்றோ வேங்கடநாதனைக் கொண்டு ந்யாயஸதகம், அடைக்கலப்பத்து அருளிச் செய்து ப்ரபத்தியை இங்கு அநுஷ்டிக்க வைத்தேன்.

     தேசிகன்:  இப்படி உம்மிடம் அபிமானம் இல்லாமலா கூரத்தாழ்வானைக் கொண்டு “வரதராஜஸ்தவம்” அருளச் செய்து கச்சிதனில் கண் கொடுக்கும் பெருமாள் நீ என்பதனை உலகிற்கு உணர்த்தினார்!

     வரதன்:  (மௌனம் ஸாதிக்கின்றார்)

     தேசிகன்:  வாரணவெற்பின் மழைமுகிலே! ஸம்ப்ரதாய ஆசார்யர்களை உலகிற்கு தந்தவன் நீ.  அவர்கள் நன்கு வித்யாப்யாஸம் பண்ணவும், அதன் மூலமாகவும் ஸம்ப்ரதாயத்தை தழைத்தோங்கச் செய்யவும் நீதானே ஸ்ரீரங்கத்திற்கு அனுப்பினாய்.  இது ஸர்வலோக விதிதமான விஷயமல்லவா.  இவைகளை எனது வாயைக் கிளறி உன்னுடைய சரித்ரங்களை அநுபவிக்க வேண்டும் எனும் விருப்பத்தினாலன்றோ இன்று எம்முடன் ஸல்லாபித்தாய்.

     வரதன்:  (அதிகப்ரீதியுடன்) ஆசார்யவர்களே உங்களுடைய இந்த சேர்த்தியையனுபவிக்க வேண்டும் எனும் ஆசையினால் இந்த ஸரஸ ஸல்லாபம் செய்தேன்.  இதுவன்றோ எனக்குப் பரமபோக்யம்.
(அப்பொழுது கைங்கர்யபரர்கள் பலவிதமான பக்ஷ்யபோஜ்யங்களைக் கொணர்கின்றனர்) பெருமாள் அவைகளைப் பார்த்து

“வேங்கடநாதரே இதுவென்ன இத்தனை வகையான பக்ஷ்யங்கள்.”

     தேசிகன்:  (விநயத்துடன்) ஸ்வாமி இன்றல்லவா அடியேன் க்ருஹத்திற்கு ஆசார்யன் எழுந்தருளியுள்ளார். மேலும் நாங்கள் யதீச்வர மஹாநஸ ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்கள் அன்றோ. பாஷ்யகாரர் விபவத்தில் அநுபவித்ததை அர்ச்சையில் அநுபவிக்க வேண்டாமா. எனவே அதை ஸார்த்தக்யம் செய்வதற்காக இவைகள். இவைகளை கண்டருளி அடியேனை க்ருதார்த்தனாக்க வேண்டும்.

    (அப்படியே என்று திருவுள்ளம்பற்றி பெருமாளும், பாஷ்யகாரரும் அமுது செய்தருள்கின்றனர்.)  பின்னர் பெருமாள், பாஷ்யகாரரிடமுருந்து மரியாதைகள் ஸ்வாமி தேசிகனுக்கு அருளப்பாட்டுடன் நடைபெறுகின்றனர்.

     இப்படி நரஸிம்ஹனான கரீசன், யதிஸிம்ஹமான ஸ்ரீபாஷ்யகாரர், கவிதார்க்கிக ஸிம்ஹமான ஸ்வாமி தேசிகனின் ஸல்லாபத்தை செவியுற்ற பாகவதர் ஸம்ஸார ஏஷ அபவர்கம் என்றவாறு ஸேவித்து மகிழ்ந்தனர்.

 ***முற்றும்***                                                                                                                                                                                                                –Sri APNSwami.