Sri APN Swami’s Shishya Writes | திருவோணத் திருநாள் பாட்டு அர்த்த ஸ்வாரஸ்யம் | Guru Purnima Special Article

ஸ்ரீ:

திருவோணத் திருநாள் பாட்டு அர்த்த ஸ்வாரஸ்யம்

(ஸ்ரீரஞ்ஜனி ஜகந்நாதன்)

வாதாசனவரர் இவரென வருமா பாஷியம் வகை பெறு நாள்

வகுளாபரணப் பெருமாள் தமிழின் வாசியறிந்திடு நாள்

பேதாபேதம் பிரமம் எனாவகை பிரமம் தெளிவித்திடு நாள்

பேச்சொன்றுக்குச் சததூஷணியைப் பேசிய தேசிக நாள்

தீதாகிய பல மாயக் கலைகளைச் சிக்கென வென்றிடு நாள்

திக்கெட்டும் புகழ் ஸ்ரீபாஷியத்தைத் தெளிய உரைத்திடு நாள்

ஓதாதோதும் வேதாந்தாரியன் உதயம் செய்திடு நாள்

உத்தமமான புரட்டாசித் திருவோணம் எனும் நாளே.

Swami Vedanta Desikan

இது ஸ்வாமி தேசிகனின் திருநாள் பாட்டாகும். அருளிச் செய்தவர் ஸ்வாமி தேசிகனின் திருக்குமாரும், சிஷ்யருமான ஸ்ரீநயினாராசார்யர் ஆவார். திருநாள் பாட்டு என்றால் ஆசார்யன் அவதரித்தத் திருநாளை கொண்டாடும் பாடலாகும்.  ஸ்வாமி தேசிகன் புரட்டாசி மாதம் திருவோண நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.  ஸ்வாமி தேசிகனின் திருநாள் பாட்டில் உள்ள ஸ்வாரஸ்யங்களை இங்கு அனுபவிப்போம்.

“வாதாசனவரர் இவரென வரு மா பாஷியம் வகை பெறு நாள்” என்ற முதல் வரிக்கு முதலில் அர்த்தத்தை ஆராயலாம்.காற்றை மட்டும் சுவாசித்து உஜ்ஜீவிக்கும் பிராணி பாம்பாகும். ஆகையால் வாதாசனன் என்று பாம்பிற்கு பெயர். பாம்புகளில் சிறந்தவரான (வாதாசன வர:)  ஆதிசேஷனுக்கு  வாதாசனவரர்  என்று திருநாமமாகும். 

ஆதிசேஷனின் அம்சமான ஸ்வாமி ராமானுஜர் வாதாசனவரர்  என்று போற்றப்படுகிறார். ஸ்ரீபாஷ்யம் இயற்றிய ஸ்வாமி ராமானுஜர் ஸ்ரீபாஷ்யகாரர் என்று கொண்டாடப்படுகிறார். ஸ்ரீ  என்றால் மா என்னும் மஹாலக்ஷ்மியை குறிக்கும். ஆக, மா பாஷ்யம் என்றால் ஸ்ரீபாஷ்யம் என்று பொருள் கொள்ளலாம். ஸ்ரீபாஷ்யகாரரின் மறு அவதாரம் என்று விளங்குபவர் நம் ஸ்வாமி தேசிகன்.   நடாதூர் அம்மாளின் சிஷ்யரான ஸுதர்சன சூரி பட்டோலைப்படுத்திய, ஸ்ரீபாஷ்ய வ்யாக்யானமான  ச்ருதப்ரகாசிகையினை  காப்பாற்றியும், ஸத்யாகாலத்தில் சிஷ்யர்களுக்கு 30 முறை ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் அருளிச் செய்தும், ஸ்ரீபாஷ்யத்திற்கு அதிகரண ஸாராவளி, தத்வ டீகை  முதலிய வ்யாக்யானங்கள் எழுதியும்,  ஸ்வாமி தேசிகன், ஸ்ரீபாஷ்யம்  உயர்த்தி பெரும் வகையில்  பலபடிகளாலும் கைங்கர்யம் புரிந்துள்ளார்.  ஆக, திருவோண நன்னாள் ஸ்ரீபாஷ்யம் உயர்த்தி பெற்ற நன்னாளாகக் கொண்டாடப்படுகிறது.

முதல் வரிக்கு இது ஒரு வகை அர்த்தம். 

ஆனால், மீண்டும், “திக்கெட்டும் புகழ் ஸ்ரீபாஷ்யத்தைத் தெளிய உரைத்திடு நாள்” என்று ஸ்வாமி தேசிகன் ஸ்ரீபாஷ்யத்தை எட்டு திக்குகளிலும் பரவச் செய்தார் என்றும் உள்ளது. ஆக, முதல் வரிக்கு ஸ்ரீபாஷ்யம் என்று பொருள் கூறினால் புனருக்தி தோஷம் வராதோ!  என்ற கேள்வி எழுகிறது!  ஆகையால், மற்றுமொரு அர்த்த சுவாரஸ்யத்தை ஆராயலாம்.

ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி முனிவர், வாதாசனவரர்  என்று போற்றப்படுகிறார்.  பதஞ்சலி முனிவருக்கு ப்ரத்யக்ஷமான பெருமாள் திருநின்றவூர் பக்தவத்சலம்  பெருமாள் ஆவார். ஆகையால் தான் திருநின்றவூரில் ஆதிசேஷனுக்குத் தனி ஸன்னிதி உள்ளது.  வ்யாகரண சாஸ்திரத்தை நிலைநாட்டியவர்களில் முனித்ரயம்  என்று போற்றப்படும் முனிவர்கள் பாணினி, காத்யாயனர் மற்றும் பதஞ்சலி ஆவார்கள். இவர்கள் மூவரும் முறையே வ்யாகரணத்திற்கு சூத்ரகாரர், வ்ருத்திகாரர் மற்றும் பாஷ்யகாரர் என்று கொண்டாடப்படுகின்றனர். பதஞ்சலி முனிவர் எழுதிய வ்யாகரண சாஸ்திர பாஷ்யத்திற்கு “மஹா பாஷ்யம் , மா பாஷ்யம்” என்று பெயர். ஸ்வாமி தேசிகன் தமது ஸ்ரீபாஷ்ய வ்யாக்யான க்ரந்தங்களில்,  ‘மஹா பாஷ்ய’ விளக்கங்களைக் கையாண்ட விதத்தையும்,  வ்யாகரண சைலியையும்  பார்த்தால்,  பதஞ்சலியே அவதாரம் எடுத்தார் போல் உள்ளது என்று அனைவரும் கொண்டாடுவர்.  பதஞ்சலி முனியே ஸ்வாமி தேசிகனாக அவதரித்து மா பாஷ்யம் உயர்த்தி பெரும் வகையில் வ்யாகரணத்தைக் கையாண்டார். ஆக, திருவோண நன்னாள் பதஞ்சலி முனி இயற்றிய மா பாஷ்யம் உயர்த்தி பெற்ற நன்னாளாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும், முதல் வரிக்கு, ஸ்வாமி தேசிகன் ஸ்ரீபாஷ்யத்தைக் காப்பாற்றியதையும், ஆறாம் வரிக்கு ஸ்ரீபாஷ்யத்திற்கு வ்யாக்யானங்கள் எழுதி, சிஷ்யர்களுக்குக் கற்றுக் கொடுத்து, எட்டு திக்குகளிலும் பரவச் செய்தார் என்றும் தனித்தனியாகப் பொருள் கொள்ளலாம்.

ஸ்ரீபாஷ்யகாரரின் முதல் கட்டளை “ஸ்ரீபாஷ்யத்தை வாசித்தும் ப்ரவர்த்திப்பித்தும்” என்று உள்ளது. அதற்கிணங்க இங்கும், முதல் வரிக்கு ஸ்ரீபாஷ்யம் என்று பொருள் கொள்வதும் ஸ்வாரஸ்யமே. புனருக்தி தோஷம் வராது.   அது எப்படி என்று பார்க்கலாம். 

ஸ்ரீபாஷ்யகாரரின் இரண்டாம் கட்டளை பகவத் விஷயமான திருவாய்மொழியை கற்பதாகும்.  இந்த கட்டளையை நிறைவேற்றிய ஸ்வாமி தேசிகனை போற்றுவதாக அமைந்ததே  திருநாள் பாட்டில் இரண்டாம் வரியான  “வகுளாபரணப் பெருமாள் தமிழின் வாசியறிந்திடு நாள்” என்பதாகும்.  ஸ்வாமி தேசிகன் நம்மாழ்வாரின் பாசுரங்களின்படி, அதாவது த்ராவிட வேதங்களான திவ்ய ப்ரபந்தங்கள்  கொண்டு சூத்ர வாக்கியத்திற்கு விளக்கம் அருளியுள்ளார்.   இதை அவர் எவ்வாறு செய்தார் என்றால், வேதத்தில் உள்ள பேத அபேத ச்ருதிகளுக்கு, ஸ்ரீபாஷ்யகாரர் விளக்கியபடி கடக ச்ருதிகள் கொண்டு பொருள் கூறி, பரப்ரஹ்மத்தின் விளக்கத்திற்கு இருந்த தவறான அர்த்தங்களை அதாவது பிரமத்தை பற்றிய பிரமத்தை   விலக்கினார். இதுவே “பேதாபேதம் பிரமம் எனாவகை பிரமம் தெளிவித்திடு நாள்” என்று மூன்றாம் வரியில் உள்ளது.

ச்ருதிக்கு தவறாக அர்த்தம் அருளிய அத்வைதிகளை, வாதம் செய்து  சததூஷணி என்னும் கிரந்தத்தை அருளியவர் ஸ்வாமி தேசிகன் என்பது “பேச்சொன்றுக்குச் சததூஷணியைப் பேசிய தேசிக நாள்” என்று நான்காம் வரியாக அமைந்துள்ளது.

மேலும் மாயவாதம் செய்த அவைதீக மதங்களை பரமதபங்கம் என்னும் நூலை இயற்றி அவர்களை வென்றார் என்பது “தீதாகிய பல மாயக் கலைகளைச் சிக்கென வென்றிடு நாள்” என்று ஐந்தாம் வரியாக  உள்ளது.

இவ்வண்ணம், முதலில் ஸ்ரீபாஷ்யத்தைக் காப்பாற்றி, பின்னர் ஸ்ரீபாஷ்யம் பரவுவதற்கு  இருந்த அனைத்து இடர்களையும் களைந்த ஸ்வாமி தேசிகன், ஸ்ரீபாஷ்யத்தை சிஷ்யர்களுக்குக் கற்றுக்கொடுத்து எட்டு திக்குகளிலும் பரவச் செய்தார் என்பதை  “திக்கெட்டும் புகழ் ஸ்ரீபாஷ்யத்தைத் தெளிய உரைத்திடு நாள்” என்ற ஆறாம் வரிக்கு சுவாரசியமான பொருள் கொள்வர் பெரியோர். இதுவே ஸ்ரீபாஷ்யகாரரின் முதல் கட்டளையில்  “பாஷ்யத்தை ப்ரவர்த்திப்பித்தும்” என்றும்  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேதத்திற்கு ஆசார்யரான வேதாந்த தேசிகன் அவதரித்த நாள் புரட்டாசி திருவோணம் என்னும் உயர்ந்த நன்னாள் என்பது “ஓதாதோதும் வேதாந்தாரியன் உதயம் செய்திடு நாள், உத்தமமான புரட்டாசித் திருவோணம் எனும் நாளே.” என்று கடைசி இரண்டு வரியில் ஸ்ரீநயினாராசார்யர் போற்றியுள்ளார்.

குரு பூர்ணிமா தினத்தில் ஆசார்யன் ஆசி வேண்டி,

அடியேன்

 முகுந்தகிரி ஸ்ரீ APN சுவாமியின் காலக்ஷேப சிஷ்யை & சரன் ஸேவக்

ஸ்ரீரஞ்ஜனி ஜகந்நாதன்

13-07-2022 | சுபகிருத் – ஆனி – 29 , புதன், பொளர்ணமி