விச்வ(வா)மித்ரர்களின் ஸம்வாதம் | தூப்புல் தெப்பம் | Sri APN Swami Writes | Samvadham | Thiruthankal Theppothsavam | Karthigai Shravanam

குறிப்பு :

சம்பிரதாய உரையாடல்களை எழுதுவது  ஸ்ரீ ஏபிஎன் சுவாமியின் தனிப்பட்ட பாணி என்று கூறலாம். ஸ்ரீ ஏபிஎன் சுவாமியின் ஆசார்யனான ஸ்ரீ உ.வே.புரிசை சுவாமியின் திருவுள்ளப்படி பல உரையாடல் நூல்களை வெளியிட்டுள்ளார். இந்த சம்பாஷணைகளில் (conversations) சுவாமி ராமானுஜர், சுவாமி வேதாந்த தேசிகர் போன்ற நம் ஆசார்யர்கள் பெருமாளுடனும்  பிராட்டியுடனும் பேசிய விஷயங்களை மிகவும் ரசமாக எழுதியுள்ளார்.

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி எழுதிய ஏனைய உரையாடல் வடிவில் இருக்கும் நூல்களாவன –

1. தேவதேவனும் தேசிகனும்

2. அனந்தன் கண்ட ஆனந்தாநுபாவம்

3. நைமிஷத்தில் அநிமிஷர்கள்

4. ஆழ்வாரின் பாபம்

5. ஆசார்யரும் அடியேனும்

6. காண்டகு தோளண்ணல்

7. ஸிம்ஹங்களின் ஸல்லாபம்

8. ராஜராஜர்களின் ஸம்வாதம்

9. திவ்ய தம்பதிகளின் ஸம்வாதம் 

10. அரங்கன் உரைத்த அந்தரங்கம்

11. இடைமறித்த  இமையோர் தலைவன்

12. வரதனின் விருப்பம் – 1

13. வரதனின் விருப்பம் – 2


ஶ்ரீ:

விச்வ(வா)மித்ரர்களின் ஸம்வாதம்

சுபக்ருத் கார்த்திகை ஶ்ரவணம் (26-Nov-2022) தீபப்ரகாசன், மரகதவல்லி தெப்போற்சவ அனுபவம்.

(வாத்ஸ்ய ஶ்ரீ க்ருஷ்ணமார்யமஹாதேசிகன் அந்தேவாஸீ, தேசிகபாதுகாஸேவகன் அனந்தபத்மநாபன்)

தூப்புல் தெப்பம்

அனைவர்க்கும் ஆனந்தமளிக்கும் திருத்தண்கா எனும் திவ்யதேசம், அன்றையதினம் ஆஸ்திகர்களின் உள்ளங்களை மேலும் குளிரச்செய்தது. தண் என்றால் குளிர்ந்த என்று பொருள். திரு-தண் என்பதற்கு பிராட்டியினால் குளிர்ந்த, தெய்வீகத்தால் குளிர்ந்த என்றவாறு பல ரஸனையான பொருள் கொள்வதில் சாஸ்த்ரவிரோதம் ஒன்றுமில்லை.

ஹேமந்தருதுவான மார்கழிக்கு குளிர் உண்டு. அதற்கு முன்னமே பிறந்த சரத் ருதுவான கார்த்திகையில் மெல்லிய குளிர் இருக்கும். ஆனால் அன்றைய தினம் அது உள்ளுக்குள் ஊடுருவி உள்ளத்தைக் குளிர்வித்ததன்றோ ஆச்சர்யம்.

விழாக்கோலம் பூண்டிருந்த விளக்கொளி எம்பெருமான் திருக்கோயிலுக்குள் நாமும் பரபரப்புடன் நுழைகிறோம். பொறிகடலை, பஞ்சுமிட்டாய், அகர்பத்தி, அகல்விளக்கு, சூடம் என அருகருகே தீடீரென முளைத்த கடைகள். அவற்றினிடையே ஓயாமல் ஒலியெழுப்பும் இருசக்கர வாகனங்கள். நடப்பதற்கே இடறிவிழும் நிலையில் இடைவெளியின்றி மக்கள் வெள்ளம். நாமும் எவ்வித பிரயாசையும் இன்றி (effortless) வெள்ளநீர் வழிந்தோடும் வேகத்தில் விழுந்த துரும்பு போன்று, அந்த மக்கள் வெள்ளத்தினாலேயே திருக்கோயிலுக்குள் அடித்து (இல்லையில்லை அழைத்து)ச் செல்லப்பட்டோம்.

உள்ளே நுழைத்த சமயம் ஒரு ஒளிக்குவியல் ஊடுருவி நம் ஆனந்த வெள்ளத்தை அதிகரித்தது. விளக்கொளியை, மரகதத்தை திருத்தண்காவில் வைத்த விழி வாங்காமல் விரிய சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. கண்வலிக்காரனுக்கு தீபம் துன்புறுத்தும். கண்ணே தெரியவதனுக்கோ அது துணையில்லை. கண் தெரிந்தும் இருட்டில் வழிதவறி நடப்பவனுக்குத்தானே வெளிச்சத்தின் துணை தேவை. மரகத வல்லியின் மணவாளன் தீபப்ரகாசன் தன மனையாளுடன் மனமகிழ்ந்து நடைபயிலும் காலமிது. மாகுருவாம் தேசிகன் இத்திவ்யதம்பதிகளுக்கு மங்களம் பாடிக்கொண்டு பின்னே வருகிறார்.

மேனி சிலிர்க்க, மகிழ்வெய்தி ஒன்றுமே தோன்றாமல் அந்த ஒளிக்குவியலை வைத்தவிழி மாறாமல் பார்க்கவிரும்பியது மனம். உத்தரவேதியில் ஆவிர்பவித்த வரதனைக்கண்டு பித்தேறிய பிரமன்; ப்ரதக்ஷிணம், அப்ரதக்ஷிணம் என முறை மாற்றி சேவித்தானாம். முன்னும், பின்னும் ஓடியாடி குதித்தானாம்.

அத்திகிரி மான்மியத்தை படித்தபோது அது புரியவில்லை. இப்போது இந்தப் புறப்பாட்டில் முன்புறம் செல்வதா, பின்புறம் தொடர்வதா, குறுக்காகப் புகுந்து எதிர்புறம் வருவதா என தொடர் தடுமாற்றங்கள் உள்ளத்துக்கு ஒரு உற்சாகத்தையே அளித்தன.

கார்த்திகை சிரவண தெப்போற்சவத்திற்குத்தான் திவ்யதம்பதிகளின் இந்த புறப்பாடு. அத்தம்பதியின் ஆர்ப்பரிப்பு அலைகடலையும் வென்றுவிடும். ஆசார்யனுடன் பயணிப்பது அலாதியான சுகமளிக்கும் என்பதை அனுபவசாலிகள் நினைந்திருப்பர். அர்ச்சையிலும் தனக்கிந்த அனுபவம் உண்டென்று தீபப்ரகாசன் பொலியநின்றான். தேவதேவனின் கரம்பற்றி தேசிகேந்த்ரனுடன் பயணம் செய்வதை எண்ணி எண்ணி மரகதவல்லி மனோரதவல்லியானாள்.

ஒருவர்பின் ஒருவராக வெகுஜாக்ரதையாக ஸ்ரீபாதம்தாங்கிகள் பெருமாள், பிராட்டி, ஸ்வாமி தேசிகனை தெப்பத்தில் எழுந்தருளப்பண்ணினர். தெப்பம் மெதுவாக அசையத்தொடங்கியது. அலைகளின் அழகியவரிசையில் அன்னமாகப் பவனிவந்தது அத்திருப்பள்ளியோடம். குதூகலத்தில் மிதந்த தேவதேவியின் திருவுள்ளம் வேதாந்த வாசிரியனிடம் வார்த்தையாட வைத்தது. வாத்யங்களும், வேதபாராயணங்களும், வாணவேடிக்கைகளும், அடியார்களின் அழகிய நாமஸங்கீர்த்தனமும் எங்கும் எதிரொலித்தாலும் திவ்யதம்பதிகளின் அழகிய ஸம்வாதத்தை நமது செவிகள் அள்ளிப்பருகத் தொடங்கின. இவர்கள் பேசின பேச்சுக்கள் நமது உள்ளதே உகந்துறைந்ததை இனிக்காணலாம்.

பிராட்டி – ஆசார்யரே! ஓய் ஆசார்யரே! (என அழைக்கிறாள்)

(திவ்யதம்பதிகளின் பேரழகை அள்ளிப்பருகிக் களித்துக்கொண்டிருக்கும் தேசிகன் காதுகளில் பிராட்டியின் குரல் விழவில்லை)

பெருமாள்– வேங்கடநாதா! பிராட்டி உன்னை அழைக்கிறாள் பார்

(என சொன்னவுடன் திடுக்கிட்ட தேசிகன்)

தேசிகன்: அடியேன் தாயே! நியமனம் என்னவோ?

பிராட்டி – (மெலிதாக நகைத்து) ஹும்.. உங்கள் இருவரையும் பார்க்கும்போது எனக்கு மிதிலையில் அரண்மனை நினைவில் வருகிறது (மீண்டும் மெலிதான சிரிப்பு)

பெருமாள் – தேவி! தேவி! என்ன அது? மிதிலையின் ஞாபகம் என்றால்?

பிராட்டி – ப்ரபோ ” விஶ்வாமித்ரஸ்து தர்மாத்மா ஶ்ருத்வா ஜநகபாஷிதம்.

வத்ஸ ராம தநு: பஶ்ய இதி ராகவமப்ரவீத்.” என்று (இதோ அந்த வில்! என ஜனகன் சொன்னவுடன், தர்மாத்மாவான விச்வாமித்ரர் ராம! வில்லைப்பார் என்று சொன்னார்) வால்மீகி சொன்னதின் உட்பொருளை தாங்கள் நன்கு அறிவீர்கள் தானே! (கண்களை சுழற்றி கேலியாக பிராட்டி பேசியது கண்டு அகமகிழ்ந்தான் தீபப்ரகாசன்)

பெருமாள் – சரி சரி.. புரிகிறது. புரிகிறது. ராமா சீதையைப் பார்த்தது போறும். இதோ வில்லைப்பார் என்று மஹரிஷி சொன்னார். அதற்கென்ன தேவி இப்போது

தேவி – நாத! அன்று விச்வாமித்ரர் உம்மைப் பார்த்துச் சொன்னார். இன்று நீர் விச்வாமித்ர குலத்துதித்த தேசிகனைப் பார்த்து சொன்னீர்.

(பெருமாள் திகைக்கிறார்)

தேவி – ரொம்ப திகைக்காதீர். நான் அழைத்ததை தேசிகன் காதில் வாங்கவில்லை. அதனால் நீர் அழைத்தீர். மிதிலையில் என்னைப் பார்த்த நீர் திடுக்கிட்டு வில்லைப் பார்த்தது போன்று இப்போது தேசிகனைப் பார்த்தேன். சிரித்தேன்… (மீண்டும் சிரிக்கிறாள்)

தேசிகன் – தாயே! திவ்யதம்பதிகளின் சேர்த்தியில் அடியேன் நிலை மறந்தேன்.

பெருமாள் – (குறுக்கிட்டு) அது சரி தேவி! நீ ஏதோ ஆசார்யரே என்று அழைத்தது போன்றிருந்ததே! அஃது என்ன?

தேசிகன் – (துணுக்குற்று) என்ன? தேவி அப்படியா அழைத்தாள்? (என பிராட்டியைப் பார்க்கிறார்)

தேவி – ஏன் அழைத்ததில் என்ன தவறு? தேசிகன் என்றால் ஆசார்யன் என்றுதானே அர்த்தம்.

பெருமாள் – அது பிரஸித்தார்த்தம். ஆனால் நீ அழைத்ததில் ஏதோ உள்ளர்த்தம் உள்ளது போல் தோன்றுகிறது.

பிராட்டி – ஏன்? எப்போதும் நீங்கள் மட்டும்தான் உள்ளர்த்ததுடன் பேசவேண்டுமா? நான் பேசக்கூடாதா?

தேசிகன் – தாயே! வனஸ்பதி ப்ருஹஸ்பதியாவதும், ப்ருஹஸ்பதி வனஸ்பதியாவதும் தங்களின் இன்னருளினாலன்றோ! ஆனால் என்றுமே என்னிடம் வாஞ்சையுடைய தாங்கள் இன்று அப்படி அழைத்ததின் காரணம்தான் என்ன?

பிராட்டி – இப்போது என்ன உத்ஸவம் நடைபெறுகிறது?

தேசிகன் – திவ்யதம்பதிகளின் தெப்போத்ஸவம்

பிராட்டி – நாங்கள் இருவர் மட்டும்தானா… அல்லது….?

தேசிகன் – தாயே! இது என்ன விளையாட்டு? இதோ அடியேனும் ஓடத்தில் உடன் அமர்ந்திருக்கிறேனே!

பிராட்டி – இதற்கு முன்பு இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறதா? தேசிக! நன்றாக ஜ்ஞாபப்படுத்திக்கொண்டு சொல்?

பெருமாள் – (வெகு அவசரமாக) நான் சொல்கிறேன். நான் சொல்கிறேன்! கோபிகளுடன் யமுனா நதியில் பன்முறை படகில் சுற்றியிருக்கிறேன்.

தேவி – (சற்றே கோபமாக) ப்ரபோ! தேவரீரின் திருவிளையாடல்கள் தான் ஜகத் ப்ரஸித்தமாயிற்றே! இன்று கோபியர் யாரும் அருகில் இல்லை என்பதால் என்னுடன் படகில் பவனி வருகிறீர். நான் கேள்வி கேட்டது தேசிகனை. அவனே அதற்குரிய பதில் கூறட்டும்.

(பெருமாள் பேசாமல் தலைகுனிகிறார்)

தேசிகன் – கங்கையில் கடக்கும்போது சீதையான தாங்களும் ராமனாகிய பெருமாளும் தெப்பத்தில் பயணித்ததை வால்மீகி அத்யாச்சர்யமாக வர்ணித்துள்ளாரே!

பிராட்டி – சபாஷ் சபாஷ்.. அவ்வளவுதானா படகு சவாரி.. அல்லது வேறு ஏதாவது உண்டா?

தேசிகன்—தேவதேவி! மேலும் விண்ணப்பிக்கிறேன். அஹம் வேத்மி மஹாத்மாநம் என ராமலக்ஷ்மணர்களை யாக ஸம்ரக்ஷணத்திற்கு அழைத்துச் சென்றாரல்லவா விச்வாமித்ரர்.

பெருமாள்—ஆமாம்.. ஆமாம் (என்றவுடன் பிராட்டியின் கண்ஜாடை கண்டு உடனேயே வாயைமூடிக்கொள்கிறார்).

தேசிகன்—அப்போது விச்வாமித்ரருடன் பெருமாள், இளையபெருமாள் படகில் பயணித்தனர்.

பிராட்டி—அதாவது என் திருமணத்திற்கு முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சி அது. சரிதானே!

பெருமாள்—ஆ..மா.. (என வாய்திறப்பதற்குள் பிராட்டியின் முகம் கண்டு மௌனமாகிறார்).

பிராட்டி— ம்… சொல் தேசிக!

தேசிகன்—சரிதான் அம்மா! விச்வாமித்ரருடன் அவர்கள் பயணித்தனர்.

பிராட்டி—ஆ ஆ ஆ..ம். ஆசார்யரான விச்வாமித்ரருடன் பயணித்தனர். எ.. ன்.. ன! சரிதானே?

தேசிகன்—விளக்கொளியின் மரகதமே! இப்போது அடியேனுக்கு எல்லாம் நன்கு புரிகிறது. (என மெலிதாக நகைக்கிறார்)

பிராட்டி—என்ன புரிந்தது? சொல் பார்க்கலாம்?

தேசிகன்—விச்வாமித்ரருடன் ராமலக்ஷ்மணர் பயணித்தனர். ஆனால் அப்போது நீ அருகில் இல்லை. இப்…போ..து இருக்கிறாய்! (எனத் தயங்கினார்) 

பெருமாள்—தேவி… தேவி. எனைத் தடுக்காதே. நான் சொல்கிறேன். அதாவது விச்வாமித்ரருடன் சேர்ந்து நீயும் நானும் பயணிக்கவில்லை. ஆனால் இந்த விச்வாமித்ரகுல விளக்கு, நம் தூப்புல் குல விளக்கான தேசிகனுடன் இன்று படகில் பயணிக்கிறோம். ஆசார்யரான விச்வாமித்ரர் போன்று, இங்கு ஆசார்யதீபமான தேசிகன். அதனால் நீ ஆசார்ய என்று அழைத்தாய். சரிதானே! சரிதானே! (ஒரே மூச்சில் பெருமாள் பேசிமுடித்து ஆவலுடன் தேவியின் திருமுகம் நோக்கினான்.)

பிராட்டி—ஆஹா, ஆஹா. எ…ன்…ன.. ஒரு உத்ஸாகம். என்னை விடுத்து தனியாகப் பயணித்த சுகமான அனுபவங்கள் பரீவாஹமாக வருகின்றனவே.

பெருமாள்—மரகதவல்லி! நான் எனது குருகுலவாஸ அனுபவங்களில் என்னை மறந்தேன்.

பிராட்டி—என் ப்ராண நாயகனே! நீர் உம்மை மட்டுமா மறப்பீர்! என்னையும்தான் மறப்பீர். அது சரி, என்னை தேசிகனுடன் பேசவிடாமல் குறுக்கே, குறுக்கே தாங்கள் ஏன் பேசுகிறீர்?

பெருமாள்—சரி அம்மா! இனி பேசவில்லை. (பவ்யமாக கைகளினால் வாயைப் பொத்திக் கொள்கிறான்.)

பிராட்டி—என்ன வேங்கட! ஒன்றும் சொல்லமாட்டேன் என்கிறாய்?

தேசிகன்—தங்களுக்கும், பெருமாளுக்கும் இடையில் ப்ரணயகலஹம் முடியட்டும் என காத்திருந்தேன். சரி̀! கேளுங்கள்!

பிராட்டி—அதான் நீயே சொன்னாயே விச்வாமித்ரருடனே ராமலக்ஷ்மணர்கள் படகில் சென்றனர். அப்போது என்ன நடந்தது?

தேசிகன்—மஹரிஷி அஸ்திரங்களை உபதேசித்தார். ஆங்காங்கு பல கதைகளை விவரித்தார். விச்வாமித்ரர் கதைகளைக் கூறக்கூற வழிநடை களைப்பே தெரியாமல் ராமலக்ஷ்மணர்கள் ப்ரயாணம் செய்தனர்.

பிராட்டி—ஆ…ம்…ம். கதை கேட்டுக்கொண்டே இருந்தால் நேரம் போவதும் தெரியாது. அலுப்பும் தெரியாது. இல்லையா!

தேசிகன்—உண்மைதான் தேவி.

பிராட்டி—உனது ராமாயணத்தில் அதை எவ்விதம் பாடினாய்!

தேசிகன்— குஶிக ஸுத கதித நவ விவித கதா (குசிக நந்தனன் எனும் பெயருடைய விச்வாமித்ரரால் சொல்லப்பட்ட பலவிசித்ரமான—அல்லது ஒன்பது முக்ய கதைகளை அறிந்தவனே!) என்று பாடினேன் ரகுவீரகத்யத்தில்.

பிராட்டி—அதன் பின் என்ன நடந்தது?

தேசிகன்—அகலிகை சாபவிமோசனம்.

பிராட்டி—அதாவது மிதிலைக்கு (அழுத்தமாக) வரும் வழியில்.

தேசிகன்—ஹிமோபவனேச்வரி! தங்களின் திருவுள்ளம் புரியவில்லை. சற்று விளக்குங்களேன்!

பிராட்டி—(கேலியுடன்) ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரனாகிய உனக்கா நான் பேசுவது விளங்காது? (என புருவத்தை உயர்த்துகிறாள்)

தேசிகன்—அதில்லை தாயே! விச்வாமித்ரர் சொன்ன கதைகளை கேட்டுக்கொண்டு குதூகலமாக ராமன் பயணப்பட்டான் என்றேன். (சற்று யோசித்து) ஓ. இப்போது புரிகிறது. தங்களுக்கு கதை கேட்கும் வாய்ப்பு இல்லை என்பதுதானே பிணக்கு.

பிராட்டி—அப்பாடா! ஒருவழியாகப் புரிந்துக்கொண்டாயே!

தேசிகன்—என்றோ த்ரேதாயுகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வினைத் தாங்கள் இப்போது எண்ணி மனம் மயங்குவது ஏனோ?

பெருமாள்—நன்றாகக்கேள் தேசிக. எதற்கெடுத்தாலும் எதையாவது நினத்துக்கொண்டு பிணங்குவதே இவளின் வாடிக்கை. விச்வாமித்ரர் கதை சொன்னார். ப்ரஹ்மசாரியான நான் கேட்டேன். பின்னர்தான் ஸஹதர்மசாரிணியான இவளின் கரம் பிடித்தேன். இது ஒரு நிகழ்வு அவ்வளவுதானே! ஏதோ நான் பெரும் அபராதம் செய்ததுபோன்று பேசுகிறாளே! (மூச்சுவாங்கப் பேசினான் தீபப்ரகாசன்)

பிராட்டி—(சற்று ரோஷத்துடன்) அன்று நடந்த கதைக்கு நானொன்றும் பிணங்கவில்லை. இன்று பேச வந்ததே வேறு. எப்போதும் போல் மாற்றிப் பேசுவது நான் அல்ல. எனது எண்ணத்தை மாற்றிப் புரிந்துக் கொள்வது தாங்கள்தான். நான் இப்போது தேசிகனிடம் தான் பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் குறுக்கிடாதீர்கள் (பெருமாள் மறுபடியும் மௌனம்) (தேசிகன்பால் திரும்பி) ம்… நீ பதில் சொல்.

தேசிகன்—அறியாமை இருளகற்றும் ஒளிவிளக்கு எம்பெருமான் என்றால், அவ்விளக்கின் ஒளியன்றோ மரகதவல்லியான தாங்கள்.

பிராட்டி—(சற்றே சலிப்புடன்) ஐயா வேதாந்ததேசிகனே! தங்களின் விளக்கத்தைக் கேட்டேனே தவிர்ந்து விளக்கு ஒளி (தீபப்ரகாச) ஸ்தோத்ரத்தைக் கேட்கவில்லை. (மிகுந்த கனிவுடன்) நான் என்ன நினைக்கிறேன் என்பது உனக்குத் தெரியாதா?) (கருணையுடன் தேசிகனைப் பார்க்கிறாள்) (பெருமாளும் ஆவலுடன் தேசிகனை நோக்குகிறார்). 

தேசிகன் –  தாயே க்ஷமித்தருளவேண்டும், மெய்நின்று கேட்டருளும் அடியேனின் விண்ணப்பம் (தொண்டையை கனைத்துப் பேசவாரம்பிக்கிறார் கண்டாவதாரர்).

ராமாவதாரத்தில் படகு சவாரி நடந்தது முதலில் தேவிகள் இல்லாமல் இளைய பெருமாளுடன்.  அங்குதான் பலவித கதைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.  அதன்பின்னர் வனவாசத்தில் பக்தியுடன் குகன் கங்கையைக் கடத்தியபோதும், பிரயாகையில் பிரயாணம் செய்தபோதும் பிராட்டியுடன் பயணம் செய்தாலும் அதிகம் பேசிக்கொள்ளும் மனோநிலை அங்கு இல்லை (சற்று நிறுத்தி பிராட்டியின் திருமுக மண்டலத்தை பார்க்கிறார்.  பிராட்டி முகவிகாஸத்துடன், நன்று.. நன்று.. என்கிறார்).

தேசிகன் தொடர்கிறார் – பிராட்டி வால்மீகி ஆச்ரமத்திலும், ராமபிரான் அரியணையிலும் இருந்த சமயம் இருவரும் தனித்தனியாகப் பல கதைகளைக் கேட்டுள்ளீர்கள்.  ஒரு வேளை தண்டகாரண்யத்தில் கேட்டிருக்கலாம் என்றாலும் அதில் படகு சவாரி இல்லையே! 

(பிராட்டி மிகுந்த மகிழ்வுடன், ஆம்.. ஆம்.. என்கிறாள்).

இன்று இருவரும் ஒன்றுசேர்ந்து இந்த தெப்பத்தில் பயணிக்கும்போது, நல்லதொரு வாய்ப்பாக பற்பல கதைகளை மகிழ்வுடன் பேசிக்கொண்டு சவாரி செய்ய திருமகளின் திருவுள்ளம்.  சரிதானே தாயே? (மெலிதான புன்முறுவல் பிராட்டிக்கு)

பெருமாள் –  அது சரி!  இதற்கு எதற்காக மறுபடி மறுபடி விச்வாமித்ரரைச் சொல்கிறாள்?

(தேசிகன் ஒன்றும் பேசாமல் மெளனமாகவிருக்கிறார்)

என்னப்பா!  உன் தாய் கேட்டால் தான் உடனே பதில் சொல்ல்வாயோ? (தேசிகன் மௌனம்) என்ன நான் கேட்பது காதில் விழவில்லையா? 

(தேசிகன் பிராட்டியின் திருமுகமண்டலத்தை பார்க்கிறார்.  அவள் புருவத்தை உயர்த்தி பேசு என அனுமதியளிக்கிறாள்)

இதை கண்டும் காணாததுப்போன்று, பெருமாள் – என்னப்பா?

தேசிகன் – சர்வஜ்ஞரே!  உள்ளம், உரை, செயல், குணம் என அனைத்திலும் ஓப்புமை பெற்ற ஒப்புயர்வற்ற திவ்ய தம்பதிகளாக நீங்கள் இன்று அடியேனைக் கொண்டு ஆனந்தமடைகிறீர்கள். ஹு..ம்.. சொல்கிறேன், சொல்கிறேன்.  தாயாரின் திருவுள்ளதை சொல்கிறேன்.

பெருமாள் –  அடேயப்பா! அவதாரிகையெல்லாம் பலமாகத்தான் உள்ளது. ஆனால் நீ சொல்லத் தயங்குகிறாய் போலிருக்கிறதே. எனக்கோ பொறுமை கரைக்கடந்து போகிறது. இது என்ன என்று தெரிந்து கொள்ள இயலாமல் தவிக்கிறேன்.

பிராட்டி – சரி, சரி, நானே சொல்கிறேன். தற்பெருமையை என்றும் விரும்பாதவனன்றோ தேசிகன். ஐயோ பாவம் எதுவுமே தெரியாமல் பரிதவிக்கும் தங்களுக்கு நான் விளக்குகிறேன்.

நம் தேசிகன் விச்வாமித்ர கோத்ரா பூஷணன் அல்லவா! அன்று ராமாவதாரத்தில் ஓடத்தில் கதைகேட்டது போன்று இன்று திவ்யதம்பதிகளாக நாம் அமர்ந்துள்ளோம். விச்வாமித்ரரை போன்று ஆசார்ய ஸ்தானத்தில் உபதேச முத்ரையுடன் நம் தேசிகன். எனவே ராமாவதாரத்தில் விட்டதை அனுபவிக்க இந்த அர்ச்சையில் ஒரு வாய்ப்பு கிடைத்ததே! என மகிழ்கிறேன்.
(பிராட்டி தன்னை ஸ்தோத்ரம் செய்வது கண்டு மெதுவாகத்தலை குனிந்துள்ளார் ஸ்வாமி)

நாத! இன்னுமொரு ஸ்வாரஸ்யம் கேளும். குஶிக ஸுத கதித நவ விவித கதா என்பதால் விச்வாமித்ரர் விஷயமாக சதாநந்தர் கூறிய கதை என்றும் வ்யாக்யானம் உண்டல்லவா!

பெருமாள் – ஆம்.. ஆம்! முதலர்த்தம் விச்வாமித்ரர் கூறிய கதை என்பது. இரண்டாவது அர்த்தம் விசுவாமித்தரரின் கதை என்பது. அது சரி. இதில் இங்கென்ன ஸம்பந்தம்.

பிராட்டி – அதிகமான இலக்கண சர்ச்சை செய்யாமலிருந்தால் ஒரு ஸ்வாரஸ்யம் சொல்கிறேன். (பெருமாளை பார்க்கிறாள், அவன் சம்மதம் என ஜாடை செய்கிறான்) குசிகஸுத என்பதற்கு விச்வாமித்ரர் என்பது போன்று குசிகஸுத தூப்புல் பிள்ளை. அதாவது குசம் என்பதற்கு தர்ப்பம் என்பது பொருள். தூப்புல் – தூய புல் – தூப்புலில் பிறந்த தூய பிள்ளை நம் தேசிகன்.  (பெருமாளைப்பார்த்து) அன்பரே விச்வாமித்ர சப்தத்தின் பொருளைக்குறித்து இலக்கண வல்லுனர்கள் சர்ச்சை செய்வது போன்று இதற்கும் விவாதம் ஆரம்பித்து விடப்போகிறார்கள். நான் எனது அனுபவமாகிற ஸ்வாரஸ்யத்தைச் சொன்னேன்.

பெருமாள் – மரகதவல்லி! அவர்களைக்குறித்து நீ என்றுமே கவலை கொள்ளவேண்டாம். எல்லாவற்றிடும் விதண்டாவாதம் செய்பவர்களுக்கு நாம் எத்தனைதான் பதில் சொல்வது. அவர்களுக்கு இந்த ஸ்வாரஸ்யமான அனுபவம் என்றுமே சித்திக்காது. நம் தேசிகனை நாம் அனுபவிப்போம்.  நீ மேலே சொல்.

பிராட்டி – விசுவாமித்ரரின் கதையை சதாநந்தர் சொன்னது போன்று; சத ஆநந்தர்கள் – அதாவது தேசிகனின் கல்யாண குணங்களில் ஈடுபட்டு நூறு, நூறாகத் தங்களின் ஆனந்தத்தை அபிவ்ருத்தி  செய்துக்கொள்ளும் அடியார்கள் பெருமாள், பிராட்டியான நமது சேர்த்தியில் தேசிகோத்தமனின் புகழைப் பாடுகின்றனர். மிதிலையில் நமது கல்யாணத்தில் ஆசார்ய குணானுஸ்ந்தானம் போன்று இன்று இந்த தெப்ப உத்ஸவத்தில் நாம் கண்ட அனுபவம் இது.

பெருமாள் – ஆஹா… ஆஹா… அத்புதம்…அத்புதம். ஆச்சர்யமான அர்த்தவிசேஷம். ஒவோன்றும் அனுபவரஸனை. சதாநந்தர் ஹோ ஹோ (உரக்கச்சிரித்து) சதாநந்தர் இவ்வடியார். நன்று. நன்று. என்ன தேசிக! சரிதானே!
(தேசிகன் மௌனமாகத்தலை குனிந்துள்ளார்)

(அதற்குள்ளாகத் தெப்பம் மெதுவாகப் புறப்படத் தொடங்குகிறது)

பிராட்டி – (தேசிகனைப்பார்த்து) என்ன விச்வாமித்ரரே! தெப்பம் கிளம்பிவிட்டது. இப்போதாவது கதை சொல்லத் தொடங்குகிறீரா (நகைப்புடன் கேட்கிறாள்)

தேசிகன் – தேவதேவியின் நியமனம் அடியேன். (என வணங்கி காசி, வ்ருக, அந்தகன்  முதலிய கதைகளைச் சொல்ல ஆரம்பிக்கிறார். (ஶரணாகதி தீபிகை பத்தொன்பதாம் ச்லோகத்தை கண்டு கொள்வது) அசைந்தாடும் தெப்பத்தின் நடுவே பெருமாளும் பிராட்டியும் ஆனந்தமாகக் கேட்டுக்கொண்டு ரஸிகின்றனர்.

அற்புதமான இந்த ஸம்வாதத்தைக் கேட்ட அடியார்களான சதாநந்தர்கள் ஸஹஸ்ராதிகமான ஆனந்தமடைந்தனர்.

விச்வம் என்றால் எம்பெருமான்/உலகம் என்று பெயர். இவ்வுலகை வாழ்விக்கும் மித்ரர்கள் (ஸுஹ்ருத்துக்கள்) பெருமாளும் தாயாரும். தேசிகன் விச்வாமித்ரர். அதாவது சரணாகதி அளித்து உலகைக் காப்பவர் திவ்யதம்பதி. சரணாகதிசாஸ்த்ரத்தையளித்துக் காப்பவர் தேசிகன். எனவே இம்மூவரும் விச்வமித்ரர்கள். அவர்களின் ஸம்வாதம் இது. 

—APN.

தங்களின் மேலான கருத்துக்களை comments sectionல் பதிவிடுங்கள். ஸ்ரீ APNSwami அருளியுள்ள புத்தகங்களையும் வ்யாஸங்களையும் இந்த வலைத்தளத்தில் free download செய்து படிக்கவும் பகிரவும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஸ்ரீ APNSwami அருளியுள்ள புத்தகங்கள் – https://apnswami.wordpress.com/publications/
ஸ்ரீ APNSwami அருளியுள்ள வ்யாஸங்கள் – https://apnswami.wordpress.com/blogpages/

#தூப்புல்        #தீபப்ரகாசன்             #தேசிகன்       #APN

3 thoughts on “விச்வ(வா)மித்ரர்களின் ஸம்வாதம் | தூப்புல் தெப்பம் | Sri APN Swami Writes | Samvadham | Thiruthankal Theppothsavam | Karthigai Shravanam

  1. V.Rsnganathan. December 9, 2022 / 10:19 pm

    விஸ்வ(வா)மித்ரர்களின் ஸம்வாதம் , மரகதவல்லி தீபப்ப்ரகாசன் நம் ஸ்வாமி தேஸிகன் மூவரையும் கண் முன்னே திரையில் காண்பது போன்றுஅன்று சஞ்சயன் மனத்திரையில் குருக்ஷேத்ர காட்சிகள் அவர் கண்டதை திருதராஷ்டரனுக்கு சொன்னது போல நம்மை ஆச்சரயப்படுத்துகிறது.அன்று நம் பாஷ்யக்காரர் கங்கை அடுத்த வனத்திலே நடு இரவில் திவ்ய தம்பதிகள் வேடுவன் வேடுவச்சி வேடத்திலே வந்து அவ ரிடம் பேசியபடியே காஞ்சிபுரத்திற்கு அழைத்து வந்ததும் ( திவ்ய தம்பதிகளின் திவ்ய ஸம்வாதத்துடன் ) இருந்திருக்கும்.என்ன இனிமையான அனுபவம். அத்புதம் ஸ்வாமி.

    Like

  2. SriKrishna December 10, 2022 / 6:11 am

    Moksha precedes Saranagati… Saranagati-Ruchi precedes Saranagati….So before Saranagati to be done, the Ruchi should come to the Soul… Saranagati-ruchi given by Sastras/Acharyas and the Moksha given by Divyadampatis…Ruchi and Moksha travelling in same theppam…A Complete Wholesome Combo,ever a Prapannan shud aspire… Sreeyathae

    Like

  3. Kaveri S December 12, 2022 / 9:00 am

    Who does not enjoy listening to stories…but when Piratti asks for stories, pay attention…
    Even Perumal is chided for interrupting and misunderstanding….
    Like a mother who lovingly feeds her child a nutritious meal for its growth, so does Piratti, by making us listen to illuminative narrations that lead jeevatma towards light (Deepaprakashan)..

    Swami’s writing style has painted a மனோரதமான picture inviting everyone to dip into the தெப்பம் and travel with விச்வ(வா)மித்ரர்கள், listening to their ஸம்வாதம்..
    Dhanyaasmi 🙏🙏
    Adiyen
    Kaveri S

    Like

Leave a comment