Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 |யாரைத் தான் குற்றம் சொல்வது? | Whom to Blame?

Please note that this article has both the Tamil version (written by Sri APN Swami) and the English version (translation done by his sishyas)    

          யாரைத் தான் குற்றம் சொல்வது?

 

இது விகாரி வருட பங்குனி மாதம். ஆங்கில தேதி ஏப்ரல் (2-20) அன்று ஸ்ரீ ராம நவமி. அதன் முன்னதாக பங்குனி உத்திர உத்ஸவங்கள் ஆங்காங்கு கோயில்களில் நடைபெற்று வர வேண்டும். ஸ்ரீ ராம நவமி முடிந்து பங்குனி உத்திரம் வருகிறது. அனால் ஒரே இரவிற்குள் உலகில் அனைத்தும் தலை கீழாக மாறியது போன்று சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. அனைத்து ஆலயங்களும் பொதுமக்கள் தரிசனத்துக்காக அடைக்கப்பட்டுவிட்டன. அன்றாட பூஜைகள் மட்டும் நடைபெற்றது.  ஆனால் உத்சவங்கள் முழுதுமாகத் தடைபட்டுவிட்டன.

சென்னையின் மிகப்பெரிய விழாவான கபாலி கோயிலின் அறுபத்தி மூவர் வரலாற்றின் முதன் முறையாகத் தடைப்பட்டதாகச் சொல்கின்றனர். ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளின் பங்குனி உத்திரச் சேர்த்தி, மதுராந்தகம் ராமனின் ஸ்ரீராமநவமி, மன்னை ராஜகோபாலன் பங்குனி உத்திரம் உத்சவம், காஞ்சி வரதனின் ஐந்து தாயார் சேர்த்தி, ஏகாம்பரேச்வரர் etc etc  என நீள்கிறது.  மொத்தத்தில் மௌனமாக உள்ளுக்குள் புழுங்குவது தவிர்த்து வேறென்ன செய்து விடமுடியும் நம்மால்.

க்ருமி கண்ட சோழன் காலத்தில் ரங்கநாதன் சேவையை ஸ்ரீ வைஷ்ணவர்கள் இழந்தனர் -எனும் கதை கேட்டுள்ளோம்.  அன்னியப்படையெடுப்பில் நாற்பதாண்டுகள் கருவறை பூட்டப்பட்டிருந்ததைப் படித்துள்ளோம். ஒளரங்கசிப்  காலத்தில் வரதன் உடையார் பாளையம் எழுந்தருளின போது ஆலயக்கதவுகள் அடைபட்டிருந்ததாக அறிகிறோம்.  இவையெல்லாம் ஆங்காங்கு ஒரு சமயம் நேர்ந்த ஆபத்து காலத்தில் அந்தந்த ஆலயங்கள் மூடியிருந்தன.

ஆனால் இன்று கனவிலும் நினைத்துப்பார்க்கமுடியாதபடி ஒட்டு மொத்தமாக அனைத்து ஆலயங்களும் மூடப்பட்டுள்ளன.  நித்யம் நடைபெறும் பூஜைகள் மட்டும் சம்ப்ரதாயமாக  நடந்து வருவதில் ஒரு ஆறுதல் அவ்வளவே. ஊரடங்கு உத்தரவு நமது நன்மைக்காகவே என்றாலும் “என் கண்ணினைகள் என்று கொலோ களிக்கும்  நாளே ” என்பதாக எம்பெருமான் சேவையை இழந்த பக்தர்கள் உள்ளத்தில் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.

“காஞ்சி அரசன் தனது சிஷ்யனை நாடு கடத்தின காரணத்தால் நானும் போகிறேன். எம்பெருமானே என்னுடன் நீயும் வா” என்றாராம் திருமழிசை ஆழ்வார்.

    “ஆழ்வார்  இல்லாத ஊரில் தனக்கென்ன வேலை?” என பெருமான் அவருடன் கிளம்பினாராம். “பெருமாள் இல்லாத ஊரில் தங்களுக்கு என்ன வேலை?” என மற்ற தெய்வங்களும் பெருமாளைப் பின் தொடர்ந்தனவாம். “இப்படி தெய்வங்கள் வெளியேறியதால் தெய்வீகக் களையிழந்தது காஞ்சி” என்று திருமிழசையாழ்வார் சரித்ரம் கூறுகிறது.

இன்று தெய்வங்கள் சாந்நித்யத்துடன் இருந்தும் தெய்வீகத்தை உணர முடியாமல் நகரமும், நகரத்தில் உள்ள இயக்கமும் சூன்யமாகக் காட்சியளிப்பது வேதனை.

இந்நிலைக்கு யார் காரணம்? நீயா? நானா? என்று நாடுகளுக்குள் ஒருத்தரையொருத்தர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர். விதிகள் மீறலா? சாஸ்திரங்களை அறியவில்லையா? பெருமாளிடம் பக்தியில்லையா? என்றெல்லாம் மற்றொருபுறம் விவாதங்களும், விதண்டாவாதங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  ஆனால் எல்லோருக்கும் ஒரே பிரார்த்தனைதான். இந்நிலை விரைவில் மாறவேண்டும் என்பதே அது.

ராமனுக்கு பாட்டாபிஷேகம் என தசரதன் தீர்மானித்தவுடன் அயோத்தி மக்கள் மிகவும் மகிழ்ந்தனர். உடனடியாக தங்களுக்குத்தெரிந்த தெய்வங்களை எல்லாம் வேண்ட ஆரம்பித்தனர். ராம பட்டாபிஷேகம் நன்கு நடைபெற அவரவர்களுக்குத் தக்க முறையில் தெய்வ பிரார்த்தனை செய்தது போன்று இன்று நாம் அனைவரும் வேண்டிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் பரஸ்பர குற்றச்சாட்டுகளைத் தவிர்த்து ஒரே நோக்கத்துக்காக ஒன்றிணைவோம்.   அது தானே உத்தம ஸ்ரீவைஷ்ணவ  லக்ஷணம்.

பாவமே செய்யாமல் பாவியானவன் பரதன்.  அதாவது பரதன் அறியாமல் அவன் மீது மூன்று பழிகள் சுமத்தப்பட்டன. தந்தையின் மரணம்,தாயின் பேராசை, தமையனின் கானக வாழ்க்கை என இம்மூன்றும் பரதன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள்.

தந்தையும் இறந்து, தமையனும் வனம்  சென்றதால் தலைவன் இல்லாத நாட்டினுள், தம்பி சத்ருக்னனுடன் பரதன் உள்ளே நுழைகிறான். இதுவரை காணாத மயான அமைதியில் அயோத்தி ஊரடங்கியுள்ளது. உள்ளத்தால் பயந்துக்கொண்டே அரண்மனைக்குச் சென்றவனுக்கு அடுத்த அடுத்த அதிர்ச்சிகள் காத்திருந்தன. துயரம் தாங்க முடியாமல் கதறிக்கதறி அழுகிறான் தூயவன் பரதன்.

ஒரு வழியாக மனம் தெளிந்து விசாரணை ஆரம்பமாகிறது. ஆம், “ராமன் காட்டுக்குப் போனதுக்கு யார் காரணம்?” என்று கேட்டதுதான் தாமதம். உடனே அங்கே கூச்சலும் குழப்பமும் நிலவியது.

“பாதகி கைகேயி தான் (உனது தாய்) காரணம்” என்றார் சிலர். வேறு சிலரோ! “கைகேயி நல்லவள் தான்.  அவளின் மனத்தைக் கெடுத்தவள் அரக்கி கூனி” என்றனர். இன்னும் சிலர் “இல்லையில்லை மன்னன் தசரதன் மனைவி பேச்சைக்கேட்டது தான் காரணம்” என்றனர்.  வேறு சிலர் “பரதா ! மக்களின் பாவம் மன்னனைச் சேரும். எங்களின் பாவத்தால் தான் ராமன் வனம் ஏறினார்”  என்று வருந்தினர்.

அனைவரையும் அமைதிப்படுத்தினான் பரதன். “என் தாய் கைகேயி, மந்தரை, மன்னன் தசரதன், மக்களான நீங்கள் என எவருமே இக்கொடுமை நிகழ்வுக்குக் காரணமில்ல. பின் யார் தான்?  என்கிறீர்களா? என ஒரு கணம் நிறுத்தி அமைதியாகக் கூட்டத்தைப் பார்த்தான். இமைக்க மறந்து அனைவரும் அவனையே கண்டனர்.

“இதோ இந்த பாழாய்ப்போன பரதனின் பாவமன்றோ ராமபிரான் காடேறக் காரணமாயிற்று. இம்மாபாதகத்தின் காரணகர்தா நானேதானாயிடுக” என்று நெஞ்சம் வெடித்திட அழுது ஆர்பரித்தான் அண்ணலின் இளவல்.

“உலகில் எங்கு தீங்கு நடந்தாலும்,   அபசாரம் ஏற்பட்டாலும்” “நானேதானாயிடுக ”  (ஆம், இது எனது பாபத்தின் பலன்) என எண்ணுவது தானே உத்தம ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம். பிறரைக் குறை கூறுவதை விடுத்து நாம் நமது பாவத்தால்தான் இந்த ஆபத்து நேர்ந்தது என இப்போது நினைந்திடுவோம். இதற்கென்ன பரிகாரம்? வேறென்ன! ப்ரார்த்தனைத் தான். பெருமாளை சேவிக்க முடியாமலும், அவனின் உத்ஸவங்களை அனுபவிக்க முடியாமலும் தடுப்பது நமது பாவங்கள் தானே.

ஆகையால் ராம பட்டாபிஷேகம் போன்று தடைகள் அனைத்தும் நன்கு நீங்கி நாட்டில் செழிப்பும், ஆரோக்யமும், ஆஸ்திக்யமும் வளர்ந்திட ப்ரார்தனை செய்வோம். “நானேதானாயிடுக” எனும் நற்பண்பினை நமக்கருளவும் அவனையே வேண்டுவோம்.   இதிலேதும்  குற்றம்  இருப்பின்  “நானேதானாயிடுக “.

-ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

31/03/2020

 

English

Whom to Blame?

In this Vikari year, we are celebrating Ram Navami on 2/4/2020. Prior to this day, we should have had celebrations across all temples as Panguni Uthiram is going to happen right after Ram Navami. Unfortunately, all temples this year are shut for the public and it is almost like the world turned upside down overnight. Though everyday rituals are happening, none of the festivals are taking place. 

It is being said that for the first time in history, the Muppathu Moovar utsavam in Chennai’s famed Kapaleeswarar temple has stopped. In fact, the list of temples where festivities have stopped is endless and includes Srirangam Periya Perumal’s Serthi Utsavam, Sri Ram Navami celebrations at Madurantakam Ramar temple, panguni uthiram utsavam at Mannai Rajagopalaswamy temple, the five thayar serthi utsavam at Kanchi Varadan temple, ekambareswarar temple, and more. Most of us miss these events, but is there anything that we can do other than feel sorry for it in our hearts?

We all know how during the chola period, Sri vaishnavas didn’t have the privilege of praying to Srirangam perumal. Likewise, we know how the sanctum sanctorum was under a lockdown for 40 years because of invasions. We are also familiar with how the sanctum sanctorum of Varadaraja Perumal was closed during the invasion of Aurangazeb as Varadan was taken to udayarpalayam. But these were specific events that led to the closure of a few temples.

But today, all the temples are closed and this was beyond our imagination even a few days ago. Probably a small consolation is that all the rituals are happening according to the prescribed sastras. Though this lockdown and curfew is for our safety, all devotees are surely feeling miserable about missing their temples and Gods.

Thirumazhisai Azhwar once told Perumal to come with him since the king had banished him from the kingdom. Perumal also felt that He had no business in a place where Azhwar wasn’t allowed and so left with him. The other Gods felt that they had no business in a place where Perumal wasn’t there and so they followed Him. Due to this, kanchi lost its divinity and culture, says the Charitram of Thirumazhisai Azhwar. 

Today, it feels empty to live in a place where we cannot feel the divinity radiating from the temples. 

So, who is responsible for this state? Countries are trading blames on each other on one side and on the other, there are debates going on about non-adherence to the lockdown laws, fallacy of our sastrams, lack of faith in Perumal, and more. Still, the single prayer that unites us all is that this situation should change soon.

When Dasarathan announced Rama’s coronation, the entire city of Ayodhya was upbeat and the people immediately started praying to all their favorite Gods. Just like how they prayed for the successful completion of Rama’s coronation, we’re also praying today for this situation to change. Instead of trading blames, let’s all unite together for this wish to become a reality. After all, isn’t this the trait of SriVaishnavas?

Bharathan became a sinner without committing any sin! He was blamed for three sins in which he had no role and these sins are – his father’s death, his mother’s greed, and his brother’s forest life. 

Bharathan, along with his brother Shatrughan, entered the city of Ayodhya after his father’s demise and brother’s exile and experienced a deathly silence that he had never seen before. With a foreboding, he entered the place and there was a lot of bad news awaiting him. Unable to bear this grief, this pure soul cried uncontrollably. 

After everything settled, a questioning began as to who was responsible for Rama’s exile. Immediately, there was a commotion and some people said that the reason was kaikeyi while a few others said that Kaikeyi was a good person and it was the witch kooni who spoiled her mind. Others said that king Dasarathan was the reason as he was the one who listened to his wife. Many of them felt that since the people’s sins affect the king, it was their own sins that sent Rama to exile.

Bharathan got up and calmed the crowd. He said that the reason was not King Dasarathan, Queen kaikeyi, or the people of Ayodhya. Then who is it? Everyone wondered and they looked at him with bated breath. Bharathan looked at them and said calmly that it was the sin of the wretched Bharathan that made Rama go to exile. Saying this, Bharathan started crying inconsolably as if his heart would break. 

Yes, it is the exalted SriVaishnava trait to think that any bad event that impacts them is due to their own sins. Let us stop blaming each other and accept that this situation is the result of our sins. What is the remedy for this? What else, other than prayers! Our inability to conduct His utsavams and pray to Him are due to our sins, right?

So, let us pray together for this nation to become stronger, wealthier, and prosperous. So, let us accept our mistakes and pray to Him.

-translation by Sri APN Swami Sishyas

Links to Articles in this Series

11. யாரைத் தான் குற்றம் சொல்வது?

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 |யாரைத் தான் குற்றம் சொல்வது? | Whom to Blame?

10.உடலால் தனித்திரு ; உள்ளத்தால் இணைந்திரு

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 |உடலால் தனித்திரு ; உள்ளத்தால் இணைந்திரு | Separated by Body, United by Mind

9.Foreign போன பெரியோர்கள்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | Foreign போன பெரியோர்கள் | Elders who went Abroad

8. கட்டையான கடவுள்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | கட்டையான கடவுள்

7. எதிர்மறையே ஏற்றமாகுமா?

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | எதிர்மறையே ஏற்றமாகுமா?

6. சங்கஜித் – கூட்டத்தை வென்றவன்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | சங்கஜித் – கூட்டத்தை வென்றவன்

5. உள்ளே வெளியே |Inside-Outside

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | உள்ளே வெளியே | Inside-Outside

4. ஆநந்தார்ணவம் | Ocean of Bliss

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | ஆநந்தார்ணவம் | Ocean of Bliss

3. நரேந்த்ரன் செய்த நன்மை | The Good Acts of Narendran

Sri #APNSwami #Writes #Trending |#COVID-19 | நரேந்த்ரன் செய்த நன்மை | The Good Acts of Narendran

2. Pandemic in பரமபதம் ( Paramapadam)

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19|Pandemic in பரமபதம் ( Paramapadam)

1. COVID-19 ( Corona logical – Chronological) | Benefits of Self-Quarantine

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 |தனிமையில் இனிமை காணலாம் | Corona logical – Chronological| Benefits of Self-Quarantine

Sri #APNSwami #Writes #Book | அருளாளன் பேரருள் – Part 3 | அனுஷ்டான குளம் – சாலைக்கிணறு உற்சவம் @ காஞ்சி

அனுஷ்டான குளம் – சாலைக்கிணறு உற்சவம் 29/12/18 @ காஞ்சி

“அருளாளன் பேரருள்” Part – 3

முன் பதிவில் வேதார்த்த ஸங்க்ரஹத்தில் ” உயர்வற உயர்நலம் உடையவன்” பற்றி பார்த்தோம்.  இப்பதிவில் “வடிவழகு மறவாதார்” பற்றி பார்ப்போம்.  அருளாளன் தாம் எனினும் தமக்கொவ்வாத வைபவத்தை உடையவன் செய்த பேரருளை உரைப்போமினிச்சிறிது. 

தொடர்ந்து வரதனுடைய வைபவங்களை அனுபவித்திடுங்கள்…

இனி ஸ்ரீAPN ஸ்வாமியின் அருளாளன் பேரருள் Part – 3 தொடரும்…

வடிவழகு மறவாதார்:

     விச்வாமித்ரர், யாக ஸம்ரக்ஷணத்திற்காக ராமனைக் கேட்கிறார் தசரதனிடம்.  அச்சமயம் தனக்கு ஆதரவளிக்க தசரதன் சபையில் கூடியிருந்த ஏழு மஹரிஷிகளையும், தசரதன் குலகுருவான வசிஷ்டரையும் சேர்கிறார்.  புருஷோத்தமனாகிய எம்பெருமானைப் போற்றுவது புருஷசூக்தம்.  வேதத்தில் புருஷசூக்தமே சிறந்தது.  அதில் “சூர்யனைப் போன்று வர்ணம் உடைய இந்த மஹாபுருஷனை நானறிவேன்” என்னும் வேதவாக்யத்தின் பொருளை விச்வாமித்ரர் உரைக்கிறார்.  ‘வில்லைக் கையேந்திய தசரதா!  மஹாத்மாவும் ஸத்ய பராக்ரமனுமாகிய ராமனை நானறிவேன்.  இதோ மஹா தேஜஸ்வியான வசிஷ்டர் அறிவார்.  ஏனைய இந்த மஹரிஷிகள் அறிவர்.  ஆனால் நீயறிய மாட்டாய்” என்கிறார்.

    வில்லுடன் ராஜ்யமாளும் மன்னனுக்கு புல்லுடன் (பவித்ரபாணியாக தர்பைப்புல்) ஜபம், தவம் செய்யும் மஹரிஷிகளின் திவ்யஜ்ஞானம் எப்படியுண்டாகும்?  ஆகையால் உனக்கு உன்மகன் (ராமன்) அருமை தெரியாது, அவன் குணங்களால் உயர்ந்த வள்ளல் என்கிறார்.

     “சூர்யனின் நடுவில் கோடிசூர்யனைப்போன்று ஒளிர்விடும் இப்புருஷன் சுவர்ண (தங்க) மயமாக ஜ்வலிக்கிறான் அவன்தன் திருக்கண்கள் சூரியகிரணங்களால் மலர்ந்த தாமரை” போன்றவை.

     “என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவினை நெஞ்சென்னும் உட்கண்ணால் மட்டுமே காண முடியும்”.

     “மின்னல் போன்ற ப்ரகாசத்தை உடைய இப்புருஷனிடமிருந்தே ஸமஸ்த ஜகத்தும் (உலகமும்) உண்டாயின”.

     “நீலமான மேகத்தின் நடுவில் உடைய மின்னல்கொடி போல ப்ரகாசித்துக் கொண்டிருப்பவன்”.

     “தூய்மையான மனம் ஒன்றினாலேயே அறியத்தக்கவன்”.  உலகிலுள்ள அனைத்தையும் தனது சரீரமாகக் கொண்டுள்ளான்.

     சுடர்விடும் திவ்ய மங்கள விக்ரகத்தை (அர்ச்சையில் வரதனாக) உடையவன். தடையிறாத சங்கல்பத்தை (கட்டளை) உடையவன்.  ஆகாசம் போன்று சூக்ஷ்மமாகிய ஸ்வரூபத்தையுடையவன்.  ஸகல ஜகத்திற்கும் கர்தா.  பரிசுத்தமான போக்யம், போகத்திற்கான உபகரணங்களையுடையவன்.  பரிபூர்ண ஐச்வர்யம் உடையவனாகையால் எதுகுறித்தும் கவலை கொள்ளாமல், எதிர்பார்க்காமல் அலக்ஷ்யமாக (அநாதரவுடன்), எதுவும் பேசாமல் இருக்கிறான்.

     “அழகிய வர்ணத்தினாலாகிய திவ்ய வஸ்த்ரத்தினை உடுத்தியிருக்கிறான்”.

     “பூமியும் லக்ஷ்மியும் இவனது மனைவிகள்”.

     “அந்த விஷ்ணுவின் உயர்ந்த ஸ்தானத்தை சூரிகள் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.”

     “ப்ரக்ருதி மண்டலத்திற்கு மேம்பட்டவிடத்தில் அவன் வசித்துக் கொண்டிருக்கின்றான்.   அவன்தன் திவ்யமங்கள விக்ரஹமானது அளவற்ற ரூபத்தை (அழகை) உடையது.  அது வர்ணிக்க இயலாதது. புராதனமானது. எங்கும் நிறைந்திருப்பது.

     பக்தர்களின் இதய குகையில் உள்ள இந்த பரப்ரஹ்மத்தை எவன் உபாசிக்கிறானோ ! அவன் மகாவைகுந்தமாகிய பரமபதத்தையடைகிறான்”.

     இதுவரையில் சொன்ன ப்ரமாணங்கள் அனைத்தும் வேதார்த்த ஸங்க்ரஹத்தில் எம்பெருமானை வர்ணிக்கும் எம்பெருமானாருடைய (ஸ்ரீபாஷ்யகாரர்) வாக்யங்கள்.  இவ்விதமுள்ள வாக்யங்களை பாராயணம் செய்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், வரதன்; அனுஷ்டான குளத்தின் அருகில் எழுந்தருளிய பரபரப்பு உண்டானது.

     திருயஜ்ஞம் சுவாமியின் நியமனத்தின்படி அடியோங்கள் பாராயணம் செய்வதை நிறுத்திவிட்டு பெருமாளை ஸேவிக்கச் சென்றோம்.  இந்த வேதார்த ஸங்க்ரஹத்திற்கு ஸ்ரீ பாஷ்யம் போன்றே வ்யாக்யானம் அருளியவர் ச்ருதப்ரகாசிகாசாரியார் எனும் சுதர்ஸந சூரி.  அவர் ச்ருதப்ரகாசிகையின் மங்களச்லோகத்தில் ப்ரமாணம், ப்ரமேயம், ப்ரமாதா என மூன்றையும் போற்றுகிறார்.

     அதாவது ப்ரமாணம் வேதம் அந்த வேதத்தினால் தெரிய வருவது ப்ரமேயமாகிய வரதன்.  “வேத வேத்யன்” என்று வேதம் கொண்டே அறியத்தக்கவன்.  அடுத்தது வேதத்தை கொண்டு நமக்கு வேதாந்த விழுப்பொருளான பெருமானைக் காட்டித்தரும் ஆசார்யர்.  அவர் ப்ரமாதா, ப்ரமாணங்களை விளக்கி, ப்ரமேயத்தைக் காட்டித்தருபவர்.

     இப்போது பாராயணம் செய்யும் ப்ரமாணம்.  வேதார்த ஸங்க்ரஹம் ப்ரமேயம் பகவான் வரதன். ப்ரமாதா ஸ்ரீபாஷ்யகாரர். அறிவிக்கும் ப்ரமாணமும், அறிவுறுத்தும் ஆசார்யரும், அறியப்படும் பரம்பொருளும் ஒன்று சேர்ந்ததை உள்ளம் அனுபவித்ததை வர்ணிக்க வார்த்தையில்லை.

     ஒரு அழகிய மேனாபல்லக்கில் (பொட்டியில்) இரண்டு பெண்ஹம்ஸங்களுடன் கூடிய ராஜஹம்ஸம் போன்று வரதன் எழுந்தருளினான்.  நாகரிகவாசனை அதிகமிருந்தாலும், இன்னமும் தார்சாலையில்லாத அந்த பாதையில் புழுதியளைந்த பொன்மேனியுடன் வரதனின் ஊர்வலம்.  சுவாமி தேசிகன் ஹம்ஸ ஸந்தேசத்தில் ஹஸ்திகிரி நாதனுடைய வாகனங்களை எழுந்தருளப் பண்ணுபவர்கள் உழக்கிய பாததுளிகளை தேவர்களும், நித்யசூரிகளூம் தங்களின் சிரஸில் (தலையில்) பூசிக்கொண்டு தன்யனாகிறார் என்கிறார்.  அதேபோன்று “ஸ்ரீரங்கநாதனுடைய திருவடித்தாமரைகளை தலையில் ஏந்தும் பாகவதரின் பாததூளி உலகினை பவித்ரமாக்குகிறது” என்கிறார் பாதுகா ஸஹஸ்ரத்தில். இதன் முடிவிலும் “யதிராஜன் ஸ்ரீ சூக்திஜயதி, அதுபோன்று முகுந்தனின் பாதுகைகள் ஜயதி” என்று முடிக்கிறார்.  இங்கு ஸத்வமயமான அப்புழுதி உலகினை உய்விக்கிறது.

     மேலும் நாங்கள் பாராயணம் செய்த வேதார்தஸங்கிரஹம். அது யதிராஜசூக்தி (ராமானுஜர் இன்னுரை).  ராமானுஜருடன் வரதன் புறப்பாடு முகுந்தஸ்ய பாதுகா – வரதனின் பாதுகை. உபக்ரம், உபஸம்ஹார ஆரம்பம், முடிவில் உள்ள விஷயங்களை ஆராய்ந்தால் பாதுகையின் பெருமை (துயரறு சுடரடி என்று தேவாதிராஜனை நெஞ்சினில் கொண்டு பாடிய நம்மாழ்வாரின் பெருமை) இத்தலத்திலன்றோ பொருத்தமுடையதாகிறது.

     அழகியதாக திருமேனியில் போர்த்தப்பட்ட போர்வைகள் களையப்பட்டு வரதனின் வடிவழகு முழுவதும் சேவையானது. “ஐயோ ! இவன் அழியா அழகு எனும் வடிவுடையான்” எனும் கம்பராமாயணத்தின் வரிகள் உள்ளத்தே ஆர்பரித்தன. கம்பநாட்டாழ்வான் இவ்விதம் பாடியதற்கு ஆதாரமாகிய “நீலமேனி ஐயோ ! நிறை கொண்டது என்நெஞ்சினையே” எனும் திருப்பாணணின் வரிகள் தேவாதிதேவனுக்கன்றோ. இனி கீழ்சொன்ன ப்ரமாணங்கள் ஒவ்வொன்றையும் இணைத்து சேவிப்போம்.  இதய குகை போன்ற மேனா பல்லக்கிலிருந்து வரதன் பகலோன் பகல் விளக்காக பரஞ்சுடர் தோன்றியது போன்றல்லவா ஆவிர் பவித்தான்.

     “ஹே வரதா! உலகியல் மயக்கமாகிய இருளகற்றும் கதிரவனாகிய உனது திவ்ய ஸௌந்தர்யம் என்றுமே சுடர் விடுகிறதே” என்றார் நம் அப்புள்ளார் வளர்த்த பைங்கிளி தேசிகன் வரதராஜ பஞ்சாஸத்தில். அதே போன்றுதான் நம் இதயகுகையின் இருளகற்றும் வரதன் நெஞ்சென்றும் உட்கண்ணால் காண்பதற்கு, இன்று கட்கண்ணில் தெரிந்தான்.

     “பகல் கண்டேன் நாராயணனைக் கண்டேன்” என்றும் ஆழ்வார் பாசுரத்தின்படி நல்ல மத்யாஹ்ன வேளையில் பகலோன் முன்பு பரஞ்சுடர் தோன்றியது. இந்த ஆயுளில் எத்தனையோ முறைகள் இங்கு சேவித்திருந்தாலும் இன்று ப்ரமாணத்துடன் (வேதார்த்த ஸங்க்ரஹம்) சேவித்ததே விசேஷம். ஆகையால் அடியோங்களுக்கு இது “பகல் கண்டேன்” என்றதாயிற்று.  இது அவனுடைய சங்கல்பத்தின் மகிமையன்றோ.  அதனால்தானே தூப்புல் குலமணியும் “ஸம்ஸாரம் எனும் இரவு எவனுடைய ஸங்கல்ப சூர்யோதையத்தால் அழிகிறதோ” என்று பாடினார்.

     நிலத்தேவரான ப்ராஹ்மணோத்தமர்கள் ப்ரமாணமாகிய வேதத்தைக் கொண்டு அவனை துதித்தபோது “சூரிகள் எப்போதும் அவனைக் காண்கின்றனர்” எனும் வாக்யத்தின் பொருள் உணர்ந்தோம்.  “அழகிய உண்மையமாகிய வஸ்த்ரத்தையுடுத்தியவன்” என்பதை போர்வைகளைந்து சேவித்தோம் “ஸ்ரீயும் பூமியும் அவனது தேவிகள்” என்று அதனைக் கண்டுணர்ந்தோம்.

     போக்யம், போகோபகரணம், போகஸ்தானம் இவையனைத்தும் அவனது புறப்பாட்டில் நிரம்பியிருந்ததைக் கண்டோம். அவனுடைய ஸ்தானம் “பரமபதம்” என்றால் அதுவும் இதுதான்.

     “ஹே வரதா ! நீ ப்ரஸன்னமாக வேண்டும்.  உன்னருகிலேயே இருக்க வேண்டும்.  நிஷ்கபடமான பக்தி உன்னிடம் வைக்கவேண்டும் இதோ.  இந்த உன்னடியாருடன் கூடியிருத்தல் வேண்டும் எனில் இவையன்றோ பரமபதம்” எனும் தேசிக ஸார்வபௌமனின் வர்ணனை இங்கு நிகழ்காலமானது. நிகழ்களமானது.

     இப்படி சுடர்மிகு சுருதியின் ஒவ்வொரு வாக்கியத்தையும் சேவித்து, அதன் பொருளை ப்ரத்யக்ஷமாக சேவித்து, சேவித்து தந்யர்களானோம்.

தொடரும்…