வேண்டிய வரம் தரும் வேங்கடநாதபுரம் | Sri APN Swami writes | Thedi Thozhutha Thiruththalangal 03

Note : Scroll down to read the English translation of the article

ஸ்ரீ:

தென்பாண்டிய நாட்டின் ஜீவநதி தாமிரபர்ணி. தென்பாண்டி மட்டுமின்றி தமிழகத்திற்கே இந்நதி ஜீவன் என்றால் மிகையில்லை. தமிழகத்திலேயே உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் சங்கமிக்கும் நதி இதுவே. இதன் இருகரைகளிலும் அடர்ந்த சோலைகளும், அழகிய குன்றுகளும், அத்புதமான ஆலயங்களும் அமைந்துள்ளன.

வைணவத் திருத்தலங்களும், சைவத் திருத்தலங்களும், புண்ணியமான பல படித்துறைகளும் இந்நதியின் பெருமைக்கு மேலும் மெருகு சேர்க்கின்றன. நம்மாழ்வார் அவதரித்த திருத்தலமாகிய ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட நவ திருப்பதிகளும் தாமிரபரணியின் கரையில்தான் உள்ளன. 

தென்பாண்டிச் சீமையின் முக்ய நகரமான திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சிற்றூர் திருவேங்கடநாதபுரம். இது திருநெல்வேலிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.

ஆற்றோரம் அமைந்துள்ள இந்த அழகிய கிராமத்தில் ஒரு ஆலயமும், அதன் நாற்புறமும் அந்தணர்கள் வசிக்கும் அக்ரகாரமும் மிக ரம்மியமான சூழ்நிலையினால் நம் உள்ளத்தில் ஆனந்த அதிர்வுகளை உண்டாக்குகிறது. ஒரு சிறு பாறை குன்றின் மீது திருவேங்கடமுடையானின் சன்னிதி அமைந்துள்ளது. ச்வேத மலை அதாவது வெண் மலை என்று இக்குன்றிற்குப் பெயர்.

கலியில் கண்கண்ட தெய்வம் ஸ்ரீநிவாசன் எனும் திருமலையப்பன். ஏழுமலைகளின் மீதேறிச் சென்றால், அவனது தெய்வீக தரிசனம் பெறலாம். அவனது மலையின் பெயர் அஞ்சனகிரி. அதாவது கருமை நிறம் கொண்ட மலை. அது வடவேங்கடம். அதே பெருமாள், இங்கு தமிழகத்தின் தென்கோடியில் ஒரு சிறிய மலையின் மீது சேவை சாதிக்கிறார் என்றால் எப்பெருமானின் கருணையை என்னவென்பது! அழகிய இவ்வாலயத்திற்குள் நுழைந்து,  பெருமாளை சேவித்து, திவ்யமான தல வரலாற்றினையும் அறியலாம்.

வேதவ்யாசர் 

மகாபாரதம் தொகுத்த முனிவர் வேதவ்யாசர். பாரதம் மட்டுமின்றி பதினெட்டு புராணங்களையும், மிக முக்யமாக வேத, வேதாங்கங்களையும் தொகுத்தார். க்ருஷ்ணத்வைபாயனர் எனும் இயற்பெயர் பெற்ற இந்த ரிஷி, வேதங்களை நெறிப்படுத்தியதாலேயே வேத வ்யாசர் என்று புகழப்படலானார். மகாபாரதத்தைக் கூட ஐந்தாவது வேதம் என்பர் பெரியோர்.

வ்யாச பகவானின் தந்தையார் பராசர மாமுனிவர். இவர்தான் ஸ்ரீ விஷ்ணு புராணத்தை எழுதியவர். இதற்கு புராண ரத்னம் என்பது பெயர். தனது சிஷ்யன் மைத்ரேயனுக்கு இப்புராணத்தை உபதேசிக்கும் போது வ்யாசரின் பெருமைகளைக் கூறுகிறார்.

! மைத்ரேயா! எனது பிள்ளை எனும் பாசத்தால் நான் கூறவில்லை. க்ருஷ்ணத்வைபாயனன் எனும் வேத வ்யாசரை, சாக்ஷாத் நாராயணனின் அவதாரமாக அறிவாயாக. ஏனெனில் நாராயணால் மட்டுமே நான்கு வேதங்களையும், மஹாபாரதத்தையும் தொகுத்தளிக்க முடியும் என்று.

அந்த வேத வ்யாசருக்கு நான்கு சீடர்கள். பைலர், சுமந்து, ஜைமிநி, வைசம்பாயனர் என அவர்களும் தவத்திலும் சீலத்திலும் ஞானத்திலும் சிறந்து விளங்கினர். தன் சீடர்கள் நால்வரிடத்திலும் ஒவ்வொரு வேதத்தைக் கொடுத்து அதை நன்கு ப்ரசாரம் செய்துவரும்படி வ்யாசர் பணித்தார். பைலர் ரிக் வேதத்தையும், வைசம்பாயனர் யஜுர் வேதத்தையும், ஜைமிநி மஹரிஷி சாம வேதத்தையும், சுமந்து அதர்வண வேதத்தையும் கற்றனர். ஆசாரியர் அனுமதி பெற்று அவர்கள் தனித்தனியே திவ்யதேச யாத்திரை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

பல புண்ணிய தீர்த்தங்களுக்குச் சென்று நீராடி ஜபம், தவம் செய்தும், அங்குள்ள பெருமான்களை வழிபட்டும், ஆங்காங்கு வசிக்கும் மக்களுக்கு நல்ல உபதேசங்களைச் செய்தும் அவர்கள் யாத்திரையைத் தொடர்ந்தனர்.

பைலர் பெற்ற பேறு

பைலர் இங்கு தாமிரபரணி நதிக்கரைக்கு வந்தார். அச்சமயம் இங்கு மூங்கில்காடுகள் நிறைந்திருந்தன. மானும் மயில்களும் மகிழ்ச்சியுடன் இக்காட்டில் சுற்றித் திரிந்தன. சலசலத்து ஓடும் தாமிரபரணியின் தெளிந்த தீர்த்தம், மகரிஷியின் மனது போன்று நிர்மலமாக இருந்தது.

நிற்கின்றதெல்லாம் நெடுமால் என்று இயற்கையில் இறைவனைக் காண்பதுதானே மகான்களின் மேன்மை! மூங்கில் மரங்களின் துளைகளில் காற்று புகுந்து வெளியேறும்போது, கண்ணனின் வேணுகானத்தை உணர்ந்தார். தோகை விரித்து, மயில் ஆடும் போது, கண்ணனின் கருமை நிறத்தையும், தலையில் சூடிய மயில்பீலியையும் தரிசித்தார். தாமிரபரணியின் தண்ணீர் பெருக்கில் கண்ணனின் கருணையை உணர்ந்தார்.

பல திருத்தலங்களில் தீர்த்த யாத்திரை செய்திருந்தும், இங்கு உண்டான மன அமைதி, தனக்கு வேறு எங்கும் கிடைக்கவில்லை என்பதினை நன்குணர்ந்தார் பைலர். நதிக்கரையில் சில நிமிடங்கள் கண்களை மூடி பகவானை த்யானம் செய்தார். அவர் மனக்கண்ணில், மயில் தோகையுடன் மாயக்கண்ணன் காட்சியளித்தான். ஒரு நொடியின் அரை பங்கில் அந்த காட்சி மறைந்தது.

திடீரென்று தோன்றி மறைந்த மின்னல் போன்று, அத்திவ்ய சேவையை இழந்த பைலர் துடித்தார். மீண்டும் மீண்டும் கண்களை மூடியும், காட்சி கிடைக்கவில்லை. கண்ணா! கண்ணா!” எனக் கதறினார். ஒன்றும் தோன்றவில்லை. சிறிது நேரத்தில், தன்னை நன்கு ஆச்வாசம் செய்து கொண்டார். ஏதோ ஒரு தீர்மானம் அவருள்ளத்தில் எழுந்தது போலும்.

நதிக்கரையில் ஒரு ஆசிரமம் அமைத்தார். இந்தத் தெய்வீக சூழலில், தனக்கு நிச்சயம் தெளிவு பிறக்கும் என உணர்ந்தார். தாமிரபரணியில் நீராடி சிறந்தத் தவமியற்றத் தொடங்கினார். பன்னிரெண்டு எழுத்துக்கள் உடைய வாசுதேவ மகா மந்திரத்தை இடைவிடாமல் ஜபம் செய்தார். 

இவரின் தவத்திற்குத் தன்னால் இடையூறு கூடாது என்று தாமிரபரணியும் தனது ப்ரவாக வேகத்தின் ஒலியை குறைத்துக் கொண்டாள். பைலரின் ஆசார்யர் வேதவ்யாசரின் தவத்திற்கு, சரஸ்வதி நதியின் சப்தம் இடையூறாக இருந்ததாம். இதனால் வெகுண்ட வ்யாசர் அந்நதிக்கு சாபமளித்தாராம். எனவே பதரிகாச்ரமத்தில் வ்யாசர் தவம் புரிந்த குகை அருகே சரஸ்வதி நதி பூமிக்குள் மறைகிறாள். இந்த அற்புதத்தை இன்றும் காணலாம். அதுபோன்றுதான் சிஷ்யரின் தவத்தைக் கெடுக்க தாமிரபரணியும் பயந்தாள் போலும்.

கோவிந்தன் கருணை

கருணையுள்ளம் கொண்ட கோவிந்தன் பைலரின் தவம் கண்டு மகிழ்ந்தான். தன்னைக் காணத் தவிக்கும் தபோதனருக்கு காட்சியளித்தான். சங்கம், சக்ரம் கதை, வில், என ஆயுதங்கள் ஏந்தி அபயமளிப்பவனாக, இருபுறமும் ஸ்ரீதேவி, பூமிதேவி திகழ, திவ்யமான காட்சியளித்தான். மயிர்கூச்சலுடன் பைலர் மகரிஷி, பலமுறை விழுந்து எழுந்து, பெருமானை சேவித்து ஆனந்தமடைந்தார். ப்ரபோ! கருணைக் கடலே! கார்முகில் வண்ணனே!” என்று போற்றினார். மகரிஷியே! நீர் தவம் செய்த இந்தப் பாறை என்னுடைய சுயம்பு மூர்த்தியாகும். இதையே கொண்டு எனக்கு ஒரு ஆலயத்தை ஏற்படுத்துவாயாக என்று எம்பெருமான் கட்டளையிட்டான்.

என்ன ஆச்சர்யம்!! பெருமான் மறைந்தவுடன், அந்த கற்கள் மறைந்து அதில் அழகிய வடிவுடன் ஸ்ரீநிவாஸன் தோன்றினார். உடனடியாக சுயம்பு ஸ்ரீநிவாசனுக்கு ஒரு அழகிய ஆலயத்தை பைலர் நிர்மாணித்தார். சுவேதமலை எனும் சிறு குன்றின் மீது கறுத்தமலையாக பெருமானின் வடிவழகை இன்றும் சேவிக்கலாம். அன்று முதல், அவ்வனப்பகுதி,  வேங்கடநாதபுரம் எனும் அழகிய அக்ரகாரமாகியது. அடியார்கள் பலரும் அங்கு வாசம் செய்யலாயினர்.

வனதேவதை பெற்ற வரம்

ஆண்டுகள் பல உருண்டோடின. மீண்டும் ஒரு மகரிஷி இங்கு வந்தார். கடுந்தவம் புரிந்தார். அப்போது அங்கிருந்த ஒரு வனதேவதை அவரின் தவத்திற்கு இடையூறு புரிந்தது. இதனால் கோபமுற்ற மகரிஷி, நீ உருவமில்லாமல் போவாய்!” என சாபமிட்டார். சுவாமி எனது தவறை மன்னியுங்கள் என அத்தேவதை வேண்டியது. மனமிரங்கிய மகரிஷியும், கலியுக தெய்வமான வேங்கடவன் அருளால் உனது சாபம் நீங்கும் என அநுக்ரகம் செய்தார்.

கொடிமரத்தில் குடி கொண்ட மாடன்

பின்னர் மேலும் பல நூற்றாண்டுகள் கழித்து வேங்கடப்ப நாயகர் எனும் மன்னரின் காலத்தில் பெருமாளுக்குக் கொடிமரம் ஒன்று புதியதாக நிர்மாணிக்கப்பட்டது. என்ன ஆச்சர்யம்!! முனிவரின் சாபத்தால் வனதேவதை, அரூபமாக, மாடனாக (மாடசாமி எனும் பெயர்) இருந்த மரத்தை, பெருமாளின் கொடிமரத்திற்காக வெட்டி எடுத்து வந்தனர். அங்கிருந்த ஒரு பக்தரின் மேல் ஆவேசித்த மாடன் தனது சாபத்தைக் கூறி பெருமாளின் நிர்மால்ய ப்ரசாதம் தனக்களித்தால் சாபம் நீங்கும் என்று கூறினான். அந்த கொடிமரத்திலேயே குடிகொண்ட மாடனுக்கு, இன்றும், பெருமாளின் நிர்மால்ய ப்ரசாதங்கள் தினந்தோறும் அளிக்கப்படுகின்றன. மாடனிடம் ப்ரீதி கொண்ட மக்களும் கொடிமரத்தில் அவரை வணங்கி பூஜைகள் செய்கின்றனர்.

கலியுக வரதன் 

சமீபத்தில் இவ்வூரைச் சேர்ந்த பக்தர் ஒருவரின் மகனுக்கு, பிறவியிலிருந்தே பேச்சு வரவில்லை. எங்கெங்கோ திரிந்து பரிகாரம் செய்த அவர்கள், முடிவில் தங்களின் குலதைவமான இந்த பெருமாளுக்கு வெள்ளியில் நாக்கும், திருப்பாதகமலமும் செய்து வைத்தனர். என்ன ஆச்சர்யம்! மடை திறந்த வெள்ளம் போன்று அச்சிறுவன் பேச ஆரம்பித்தான்.

இப்பகுதியின் பெரும்பாலான க்ராமங்களுக்கு இந்த பெருமாள்தான் குலதெய்வம். புரட்டாசி சனிக்கிழமையன்று நடைபெறும் கருட சேவை விசேஷமானது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி வழிபடுவார்கள். சிறந்த ப்ரார்த்தனை தலமான இப்பெருமானை, ஒருமுறை சென்று வழிபட்டு,  வாழ்வில் சகல வளங்களையும் பெற்றிடுங்கள்.

திருநெல்வேலி ஜங்க்ஷனிலிருந்து சுமார் நாற்பது நிமிட ப்ரயாணத்தில் இவ்விடத்தை அடையலாம். வேங்கடநாதபுரத்திற்கு பேருந்து, ஆட்டோ என அனைத்து வசதிகளும் உள்ளன. ஊரிலும் மிகச்சிறந்த தங்கும் விடுதிகள் உள்ளன.

த்யான ச்லோகம்

ஸ்ரீமந்தம் ஸ்ரீநிவாஸம் தம் பைல ஸேவ்யம் வரப்ரதம் |

நமோ வேங்கட நாதாக்யே வநே வம்சே நிவாஸிநம் ||

ஏ.பி.என் சுவாமி எழுதியது


(மஹாலட்சுமியுடன் கூடியவனும், பைலர் எனும் மகரிஷியால் சேவிக்கப்படுபவனும், வரங்களை அருளுபவனுமாகிய ஸ்ரீநிவாஸன், மூங்கில் காட்டின் நடுவே திருவேங்கடநாதபுரத்தில் வசிக்கிறான். அவனையே தஞ்சமடைகிறேன்.)

Wish Fulfilling Venkatanathapuram

Thamirabarani is the perennial river in southern Pandya Kingdom.  This river is indeed the Life for the enitre tamilnadu. The only river that originates in tamilnadu as well as ends into the seas of Tamilnadu is Thamarabarani.  On both banks of this river are dense gardens, beautiful hills and magnificent temples.

The holy places of Vaishnava, Saiva and many sacred ghats add glory to this river.  Namazhvar’s birth place Azhwarthirunagari, including the Nine Thirupathis are spread across the banks of Thamarbharani river.

One of the most important towns of Tirunelveli district is Tiruvenkatanathapuram.  It is situated very near to Tirunelveli.  In this beautiful village, that is spread over the river bank, lies a wonderful temple which is surrounded by Brahmins’ Agraharam on its four sides.   This pleasant surrounding, create a vibration of joy and peace in our hearts.  On a small rocky hill lies the Tiruvenkatamudaiyan temple.   This hill is called as “Swetha Malai” meaning white hill. 

Lord Srinivasan is the presiding deity of Kaliyuga.  He is also called as Malaiappan – residing on Thirumala hills.  After we climb over the 7 hills, reaching Anjanagiri – the black hill, we will have HIS blissful Darshan. That place is called Vadavenkatam (Venkatam of North).  While here, in the southern tip of Tamil Nadu, the same Perumal gives us darshan from this small mound.   This shows HIS merciful compassion.  Let us enter this beautiful temple to worship the Perumal as well as get to know about its divine history.

Veda Vyasa:

The Sage Veda Vyasa compiled Mahabharatha, the 18 Puranas as well as the most important Vedas and Vedantas.  His birth name is Krishnadwaipayana.  As he compiled the 4 Vedas, he acquired the name Veda Vyasa.  Elders call Mahabharatha as the 5th Veda.

Vyasa is the father of the great sage Parasara.  Parasara is the author of Sri Vishnu Purana, which is called the Gem of Puranas. While explaining this great Purana to his disciple Maithreya, Sage Parasara talks about the glories of Veda Vyasa.

Hey Maithreya, don’t think I am talking about Vyasa because he is my son.  Please understand, that Krishnadwaipayana, who is also known as Veda Vyasa, is the absolute incarnate of Lord Narayana.  Except Lord Narayana, no one else can compile the 4 Vedas and Mahabharatha.

Veda Vyasa had 4 disciples namely Bailar, Sumanthu, Jaimini and Vaisampayanar. They were great in Penance, Knowledge and Qualities.   Vyasa distributed them with one Veda each and asked them to propagate.   Bailar was given Rig Veda, Vaisampayana was given Yajur, Jaimini was given Sama and Sumanthu was given Atharvana Veda. After thorough learning, taking the consent of their Guru, they started on a pilgrimage to holy places.

After bathing in several sacred waters, they performed penance, chanting and meditation. They worshiped the presiding deities of those holy lands they visited and continued their task of preaching good to the people.

Bailar’s Vision:

Sage Bailar reached the banks of Thamarabarani.  In those times, it was spread by vast bamboo forests. The Deer & the Peacocks roamed happily in the forest. The crystal clear water of the river Thamarabarani reflected the peaceful mind of the sage.

The intellectuals, always conceive Perumal in everything they see.  The sound that is produced when the wind pass through the bamboo holes, Bailar perceived as Sri Krishna’s Venu gaana (music from the flute). Through the Peacocks’ dance, he saw the dark complexion of Lord Krishna and His hair decorated with peacock’s feather.   He experienced Krishna’s compassion in the abundance of the Tamarabarani river.

Bailar never felt this kind of mental peace in any of those many holy places he visited.  He sat on the banks of the river and meditated for a few minutes on Bhagavan.   While in meditation, he got a vision of Lord Sri Krishna adorning the peacock’s feather, that lasted for a fraction of a second.    

This sacred vision of Sri Krishna, from nowhere like a flash of lightening, lasted no more.  This disturbed Bailar a lot.  He could not bear the loss of this enchanting vision.  He cried Kanna! Kanna! and sobbed, but nothing seen.   He closed his eyes many times but the vision was no more.  A little later, Bailar consoled himself as if he has decided on something. 

He built a hermitage on the banks of the river.  He thought that this mystic environment will calm his mind.   He bathed in the Tamarabarani river and started his unceasing penance.   He continued his meditation on the 12 lettered sacred Maha mantra of Vasudeva.

River Thamarabarani too decreased its noise, not to disturb the sage’s penance.  Once, Bailar’s guru Veda Vyasa did penance on the banks of River Saraswati.   He got terribly annoyed of the noise made by Saraswathi river’s flow.   He got angry and cursed the river.   Hence, in Badrikashramam, near the cave where Sage Vyasa did penance, the river Saraswathi hides herself and flows underground. This amazing phenomena can be sighted even today.  Looks like, the river Thamarabarani too, got scared of this disciple of Sage Vyasa.

Govindan’s Compassion:

Lord Govinda got very pleased of Bailar’s penance.  HE appeared before Sage Bailar, who was yearning for long.  Lord Govinda showed HIS enchanting darshan with all his mystic weapons such as Conch, Discus, Maze, Bow & arrow flanked by Sridevi & Bhoomidevi.   Sage Bailar was overwhelmed with this sight, enjoyed Lord’s captivating darshan by prostrating several times.   Bailar revered the Lord in admiration calling HIM, Hey Prabho! Hey the Merciful Ocean! Hey the Dark Complexioned!  “Hey Maharishi! The rock on which you penanced is MY self-manifestation. Create a temple out of this!”, commanded Lord Sri Krishna. 

What a surprise!! When the Lord disappeared, the stones too vanished and transformed into a beautiful form of Lord Sri Srinivasan.   Sage Bailar constructed a beautiful temple for the Self-Manifested Sri Srinivasan immediately.  Even today, the  dark  beauty of the Lord can be seen on the white hillock, Swethamalai.  Since then, the forest area got transformed into a beautiful Agraharam called Venkatanathapuram. Many devotees started to dwell there. 

The Boon of Vanadevatha:

Years passed, another Maharishi visited the place and did penance. A forest angel happened to disturb his penance. The Maharishi got angry and cursed the angel to become formless.  The forest angel pleaded with the Maharishi to forgive him.  The kind hearted Maharishi excused him and assured that with the blessings of the Kaliyuga’s presiding deity Venkatavan, he will be relieved of the curse. 

Maadan dwels in the flag mast:

After several centuries, during the King Vekatappa Naicker’s time, a new flag mast was installed at the temple. What a surprise! The forest angel Maadan (called as Madasamy) who was cursed to be formless by the maharishi, was dwelling in a Maada tree.  That particular Maada tree was chosen by the locals to craft the flag mast for the Perumal. The forest angel Maadan manifested on a devotee and spoke about his curse. He also said that his curse will be relieved upon Perumal’s Nirmalya Prasadam (the very first offerings of the day) is offered to him. Since then, Perumal’s Nirmalya Prasadam is being offered every day to Maadan residing on the Flag Mast.  Even the people of the land offer their prayers to Maadan residing in the flag-mast every day.

Kaliyuga Varadan:

Recently, one of the local devotee’s son, could not speak since his birth.  The devotee approached many to cure his son, he offered oblations to many demi-gods but no change, finally he prayed to this Perumal, who is also his Family-God.   He made a Silver replica of Tongue & Feet and offered to Perumal.  What a surprise! The boy began to speak like the flood gates are opened.

For most of the hamlets around this region, this Perumal is their Family-God. Every year they celebrate Garuda Sevai Utsavam on a Saturday, during the Tamil month Puratasi.   This festival is very famous and Lakhs of devotees gather to worship the Perumal on Garuda.   Please make a visit to this holy place and worship the compassionate Perumal.  You are sure to get all the prosperity in your life.

It takes about 40 minutes to reach this town from Tirunelveli Junction.  All facilities including Buses and Autos are available to reach Venkatnathapuram. The town has decent lodging facilities too!

Dhyana Slokam

Srimantham Srinivasam tham Baila Sevyam varapradam I

Namo Venkata Nathakye Vane Vamse Nivasam II

Written by Sri APN Swami

(Lord Srinivasan, who is with Mahalaksmi, who is being worshiped by Sage Bailar, who always blesses and grants boons, lives amidst bamboo forest in Thiruvenkatanathapuram. I surrender only to HIM)

துன்பம் தீர்க்கும் துளசித் தோட்டம் | பெங்களூரு | Sri APN Swami writes | Thedi Thozhutha Thiruththalangal 02

கர்நாடக மாநிலத்தின் தலைநகரமாம் பெங்களூருவில் மெஜஸ்டிக் பேருந்து நிலையம் அருகிலேயே அமைந்துள்ளது துளஸி தோட்டம் ஸ்ரீ ப்ரஸன்ன க்ருஷ்ணஸ்வாமி கோவில். மிகப் ப்ரம்மாண்டமான கோவிலாக இல்லாவிடினும், முன்புறம் விசாலமான இடைவெளியில், மரங்கள் அடர்ந்த பகுதியுடன் கூடியதாக, பெயருக்கு ஏற்றாற்போல் துளசிச்செடிகள் நிறைந்து காட்சியளிக்கிறது.

ஒரு காலத்தில் ஏக்கர் கணக்கில் இங்கு துளசிச் செடிகள் பூத்துக்குலுக்கி மணம் வீசிய காரணத்தால், இந்த இடத்திற்கு துளசித்தோட்டம் எனும் பெயருண்டானது. நகர வாழ்க்கைமுறை மாறினதாலும், இடப் பற்றாக்குறையினாலும் பெரும் தோட்டம் முழுதுமாகச் சுருங்கிச், சில செடிகள் மட்டுமே உள்ளன.

ஒரேயொரு துளசிச்செடி இருந்தாலும், அந்த இடத்தில் மஹாவிஷ்ணு மிகவும் மனமகிழ்ச்சியுடன் வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. க்ருஷ்ணன் திருவாய்ப்பாடியில் வசித்த இடத்திற்குப் ப்ருந்தாவனம் என்பது பெயர். ப்ருந்த என்றால் கூட்டம் என்பது பொருள். பசுக்களின் கூட்டம், பாகவதர்களின் கூட்டம், அதுபோன்றே துளசிச்செடியின் கூட்டம். இப்படி துளசி நிறைந்திருந்த காரணத்தால்தான், கண்ணன் ப்ருந்தாவனத்தை விரும்பினான். நம் திருவல்லிக்கேணியும் ப்ருந்தாரண்யம் எனும் பெயர் படைத்ததும் ஒரு சுவாரஸ்யம்.

ப்ரஸன்ன க்ருஷணன் 

அழகிய ராஜகோபுரம் நம்மை அன்புடன் வரவேற்கிறது. அதில், விசித்ரமான பல சிற்பங்கள், ஸ்ரீக்ருஷ்ணனின் பால லீலைகளை விவரிக்கின்றன. கம்பீரமான அக்கோபுரத்தைக் கடந்து, த்வஜஸ்த்ம்பத்தினடியில் கருடனை சேவிக்கிறோம். அங்கிருந்தே நவநீத கண்ணன் நர்த்தனம் ஆடிக்கொண்டே நமக்கு தரிசனம் தருகிறான்.

நவநீதம் என்றால் புதியதாகக் கடைந்தது என்று பெயர். கடைந்தவுடன் கையில் வருவது வெண்ணைதானே!. கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் கண்ணன். இவன் வெண்ணைக்கு ஆடும் பிள்ளை. அதாவது, ஆய்ப்பாடியில் சென்று ஒவ்வொரு வீட்டிலும் கண்ணன் வெண்ணை கேட்பானாம். திருடுவது, வேறுசமயம். கோபியரிடம் கெஞ்சுவது இப்போது. கண்ணா! நீ நர்த்தனம் செய்தால் உனக்கு வெண்ணை தருவோம் என்பர் அக்கோபியர். அவர்கள் தயிர் கடையும் தாள ஒலியைக் கொண்டே கையில் வெண்ணையுடன் ஆடும் கண்ணனைக் கண்கள் இமைக்காமல் கோபியர் கண்டு களிப்பாராம்.

ஆடும் கண்ணனைக் கண்டு இவர்கள் மகிழ்வர். இவர்களைக் கண்டு கண்ணனுக்கு மேலும் உத்ஸாஹம். ஆயர்பாடியில் ஆடிய கோலத்திலேயே, ப்ரஸன்ன க்ருஷ்ணனை சேவிக்கிறோம். சிறிய மூர்த்திதான். ஆனால் கொள்ளை அழகு. குண்டு கன்னம், கொழுத்த பின் பாகம், கள்ளத்தனம் கொண்ட கண்கள், காலைத் தூக்கிய நளினம் என, உருகும் வெண்ணையைக் கையில் உடையவன், எதற்கும் உருகாத நமது உள்ளத்தையும் உருக்கி விடுகிறான். எங்கே நமது கண்த்ருஷ்டி படுமோ! என பயந்து, ஒரு நொடி கண்களை மூடுகிறோம். மூடின கண்களுக்குள்ளும் கண்ணன் – இல்லையில்லை – கள்வன்!.

ஒருபுறம் ருக்மிணித் தாயார், மறுபுறம் ஆண்டாள் நாச்சியாருடன் சேவையாகும் எம்பெருமானின் இத்திருக்கோயில் 1844ம் வருடம் கட்டப்பட்டது.

மனத்துக்கினியானின் மகிமை 

சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கினியான் என்று ராமனைக் கொண்டாடுகிறாள் ஆண்டாள். ராமனை எதிர்த்து வந்த ராவணனும், ராமனின் அழகில் மயங்கினான். இக்கோயில் க்ருஷ்ணன் கோயிலாகவிருப்பினும், இங்குள்ள இராமனுக்குத் தனிப்பெருமைகள் உண்டு.

ராமபக்தியில் திளைத்தவரும், ராமசரித மாநஸம் எனும் அற்புத ராமாயண காவியத்தை அவதி எனும் மொழியில் படைத்தவருமான மகாத்மா துளசிதாசர் வழிபட்ட ஸ்ரீராம விக்ரகம், இத்திருக்கோவிலில் வழிபடப்படுகிறது என்பது ஆச்சர்யத்தின் ஆச்சர்யம்!! அதெப்படி என்று பார்க்கலாம்.

மகாத்மா துளசிதாசர், பல ராமவிக்ரகங்களை ப்ரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அவற்றினுள், துளசிதோட்டம் ஸ்ரீராமன் பல்லாயிரம் முறை ஸ்ரீமத் ராமாயண பாராயணம் கேட்டு களித்தவர். தனது வயதான காலத்தில், அப்போதைய மைசூரு மன்னரிடம் இந்த விக்ரகத்தை ஒப்படைத்தார் துளசிதாசர். மனம் மகிழ்ந்த மன்னனும், தனது ராஜ்யத்தில் துளசிவனமாகிய இங்கு, அந்த ராமரை ப்ரதிஷ்டை செய்தார். பின்னாளில், மூலவர் திருமேனியும் ப்ரதிஷ்டை ஆனது.

பல்லாயிரம் முறை ராமாயண பாராயணம் கேட்ட களிப்புடன், இங்கு ஸ்ரீராமபிரான் சேவை தருகிறார். அவரது சன்னிதி முன்பு நிற்கும் போதே, ராமாயண பாராயணம் காதுகளில் ஒலிப்பது போன்ற அனுபவம் உண்டாகி மேனி சிலிர்க்கிறது. ஒருமுறை மானசீகமாக மகாத்மா துளசிதாசரையும் வணங்குகிறோம். கோதண்டபாணியாக சீதா லக்ஷ்மணர்களுடன் ராமனின் வடிவழகினை நமது உள்ளத்தில் நிறைத்துக் கொள்கிறோம். சமீப காலங்களிலும் இப்பெருமான் சன்னிதியில், ஸ்ரீமத்ராமாயணம் மூலபாராயணம் பலமுறை நடந்துள்ளது. பகவானின் நாமாக்களைச் சொல்லச் சொல்ல விக்ரகத்தில் சாந்நித்யம் கூடுகிறது என்று ஆகமங்கள் கூறுகின்றன. பல்லாயிரம் முறைகள் ராமாயணத்தை அனுபவித்த இக்கோவில் ராமபிரான், நமது மனோரதங்களையும் பூர்த்தி செய்திடுவான் என்பதில் சந்தேகமுண்டோ!

பார்த்தசாரதி

மாபாதகச் செயல் புரிபவர்கள் இந்த மண்ணில் பெருகியதால் மாபாரம் (பெரிய சுமை) தாங்க முடியவில்லை என்றாள் பூமாதேவி நாராயணனிடம். அவள் ஒரு பசுவின் உருவத்தில் சென்று பகவானை வேண்டினாள். அதனால் பகவானும் கோபாலனாக (மாடு மேய்ப்பவனாக)ப் பிறந்து மாபாரத யுத்தம் செய்து மாபாதகர்களை அழித்தான்.

இனியும் உலகில் நன்மைகள் தொடர்ந்து நடைபெறவேண்டி பகவத் கீதையை உபதேசம் செய்தான். பார்த்தன் என்றால் அர்ச்சுனனுக்குப் பெயர். அர்ச்சுனனுக்கு தேரோட்டியவன் பார்த்தசாரதியானான்.

நூற்றியெட்டு வைணவத் தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், மூலவர், தனது வலது கையில் பாஞ்சசன்யம் எனும் அழகிய சங்கினை ஏந்தியிருப்பதைக் காணலாம். அவரின் உற்சவர் திருமேனி, இத்திருக்கோவிலில், வலது கையில் சங்குடன் சேவை சாதிப்பது சிறப்பானதாகும்.

ஒருவனுக்கு நல்ல அறிவு உண்டாக வேண்டுமென்றால, அதற்கு அவன் பாஞ்சசன்னிய சங்கினை வணங்க வேண்டும். எனவேதான், அர்ச்சுனனுக்கு ஞானம் உண்டாக கீதையை உபதேசிக்கத் தொடங்குமுன்பாக, சங்கொலியெழுப்பினான் பார்த்தசாரதி எனவே, நல்ல அறிவினைப் பெற்று வாழ்க்கையில் வெற்றியினை விரும்புபவர்கள், இங்குள்ள பார்த்தசாரதியையும், அவரின் கையிலிலுள்ள சங்கினையும் வணங்க வேண்டும்.

மற்றைய சன்னிதிகள் 

யசோதை இளஞ்சிங்கம் என்று ஆண்டாள் கண்ணனைக் கொண்டாடுவதற்கேற்ப, நவநீத க்ருஷ்ணனுக்கு வலதுபுறம் ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்மனும், இடதுபுறம் ஸ்ரீநிவாஸனும் அருள்பாலிக்கின்றனர். ஒரேசமயம், அருகருகே, மூன்று பெருமாளை வழிபடுவது நமது வாழ்க்கையில் பல சிறப்புகளைத் தரவல்லது. திருமலையப்பனாகிய ஸ்ரீநிவாசன், இக்கோவிலின் முதன்மை அர்ச்சகர் கேசவ ரங்கநாத பட்டரின் கனவில் தோன்றி, தனக்கொரு தனி சன்னிதி அமைத்துத் தரும்படி நியமனம் செய்ததால், ஸ்ரீநிவாஸன் சன்னிதி அமைக்கப்பட்டது.

தில்லைஸ்தானம் சுவாமி

தஞ்சாவூரில் அமைந்துள்ள அழகிய சிறிய கிராமம் தில்லைஸ்தானம். அங்கு தில்லைஸ்தானம் சடகோபன் சுவாமி என்னும் ஒரு மகான் எழுந்தருளியிருந்தார்.  வைராக்யத்தினால் சந்நியாச தீட்சை பெற்ற அவர், துளசி தோட்டம் க்ருஷ்ணன் கோவிலில் பல ஆண்டுகள் தங்கியிருந்தார். சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்பு, அவர் செய்து வைத்த திருத்தேர், இன்றுவரையில் புது மெருகு குறையாமல் பவனி வருகிறது. இதுவே இந்த மகானின் மகிமைக்குச் சான்றாகும்.

பல ஆண்டுகள் இங்கு வசித்த வந்த சுவாமிகள், நூற்றுக் கணக்கான சிஷ்யர்களுக்கு ராமனுஜரின் நல்லுபதேசங்களையும், வேதாந்த தேசிகனின் வ்யாக்யானங்களையும் உபதேசித்துள்ளார். இங்குள்ள ஒவ்வொரு கல்லும் அந்த மகானின் கம்பீரமான குரலை எதிரொலிக்கின்றன. தன் ஆசார்யன் ஆதிவண்சடகோப சுவாமிக்கு அருகிலேயே தில்லைஸ்தானம் சுவாமிக்கும் ஒரு விக்ரகம் அமைந்துள்ளது.

வேறெங்கும் கிடைக்காத பாக்கியமாக, அவரின் திவ்ய பாதுகைகள் இச்சன்னிதியில் விளங்குகின்றன. அந்த பாதுகைகளை சேவிப்பதால் நமது பாபங்கள் கழியும்.

சமுதாய பார்வை

வெறும் ஆன்மிக நோக்குடன் மட்டும் இருந்துவிடாமல், பி.கே.கருடாசார் சாரிடபிள் ட்ரஸ்ட் மூலமாக, ஒரு இலவச மாணவர்கள் தங்கும் விடுதியும் செயல்படுவது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இன்றைய இளைஞர்கள், இதுபோன்ற ஆன்மீக சூழலில் பழகுவதாலும் வளர்வதாலும் அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டதாகவே இருக்கும் என்பது நிச்சயம். 

குழந்தை வரம் வேண்டுவோர் வெண்ணை கண்ணனையும், மனப் பொருத்தம் அமைய மனத்துக்கினிய ராமனையும், பாவங்கள் தொலைய தில்லைஸ்தானம் சுவாமிகளின் பாதுகைகளையும் சேவித்துவிட்டு வாருங்கள். 

பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தின் மிக அருகாமையில் அமைந்துள்ளது இக்கோயில். சென்றுவர அனைத்து வசதிகளும் உண்டு. தொடர்புக்கு: 98457 47613, 080-23381184.

Thulasi Thottam that removes adversity

Thulasi Thottam Sri Prasanna Krishnaswami temple is situated very near to the Majestic bus stand of Bangalore, the capital city of Karnataka. Though this temple is not so big, it has lots of trees and a basil garden (Thulasi Thottam, as it is so called) in the available space, at the entrance of the temple.

Once upon a time, this place used to have a thick garden of basil plants and hence this place was popularly known as “Thulasi Thottam”. Due to the changes of city lifestyle and scarcity of space in the city, today the basil garden has shrunk to only few.

As per the puranas, it is believed, even if there is only one Thulasi plant, Sri Maha Vishnu will happily reside in that place. Thiruaaypaadi where Lord Krishna lived was known as “Brindavanam”. Brinda means that which is thickly populated or available in plenty. A herd of cows, crowd of devotees, similarly a garden of basil plants. Lord Krishna loved Brindavanam, because it is covered with lots of Basil plants. Triplicane was also known as “Brindaranyam” because of the same reason.

Beautiful Krishna (Prasanna Krishnan)

A very beautiful temple tower welcomes everyone at the entrance. The tower has lots of sculptures of Lord Krishna’s playful incidents from his younger days. The Garudan could be seen at the bottom of Dwajasthambam, once you cross the majestic temple tower. There is also an idol of Lord Navaneetha Krishnan, who gives darshan in dancing posture.

Navaneetham means freshly churned butter. When curd is churned, the butter pops out at the top. Kannan has another name Kovalan, whose mouth is always filled with fresh butter. Kannan will dance and do anything to get the butter. He visits every house in Aayarpadi and asks butter. He begs the Gopikas for the butter and sometimes even steals it. Gopikas tells Lord Krishna that if he dances, he will be given butter. With butter on his hands, Lord Krishna, dances to the tunes of the sweet sound that comes, when the Gopikas churn the curd. Gopikas enjoy this beautiful rhythmic dance without taking their eyes off him.

Gopikas drench in ecstasy on seeing the dancing Lord Krishna. Lord Krishna gets more excited on seeing the Gopikas. In this temple, Lord Prasanna Krishna gives darshan in the same form as he dances in Aayarpadi. It is a small idol of Lord Krishna, but he steals the heart of his devotees with his beauty. Chubby cheeks, fatty back, mischievous eyes, dancing posture by lifting one leg, melting butter on his one hand, which in-turn melts our hearts. We close our eyes, fearing Lord Krishna should not get any harm, by seeing his beauty through our eyes. No, he still resides inside the closed eyes, indeed he is a heart stealer.

With Rukmini Thayar on one side and Andal Nachiyar on the other, this temple of Lord Prasanna Krishna was built in the year 1844.

Sweetheart’s Grace (Manathukkiniyaanin Mahimai)

Andal praises Lord Rama as “Sinathinaal Thenilangai Komaanai chetra manathukkiniyaan”. Ravanan, who came to fight with Lord Rama, was taken away by the beauty of Lord Rama. Though the main deity in this temple, is Lord Prasanna Krishna, the idol of Lord Rama in this temple is very special, for a reason.

The idol of Lord Rama, which was worshipped by Thulasidasar, the Mahatma, who drenched himself in the Rama Bhakti and one who created the most precious epic of Ramayana as “Rama Charitha Maanasam” in a language called “Avathi” is worshipped in this temple. Surprised about the connection, let’s see.

Many idols of Lord Rama were worshipped by The Mahtama, Thulasidasar. The Lord Sri Raman of Thulasi Thottam has enjoyed Sri Ramayana parayanam, many thousand times. When Thulasidasar became old, he handed over this idol of Sri Raman to the then king of Mysore. The King installed this idol in this Thulasi Thottam and worshipped, which was part of his kingdom. The moolavar idol of Sri Rama was installed later.

Sri Raman, who has listened to the Sri Ramayana parayanam, many thousand times, gives darshan to his devotees in ecstasy. When one gets the darshan of Lord Rama in this temple, they will feel the vibration and could hear internally the Ramayana parayana, that gives goose bumps. Let’s pay our obeisance to Thulasidasar and fill our hearts with beautiful images of Sri Kothanda Rama, along with Sri Seetha and Sri Lakshmana. Even recently, in this Lord Rama’s sannadhi, Sri Ramayana parayanam (moola parayanam) have taken place many times. Agama sastra, says, as you pronounce the names of Lord many times, it will increase the sanctity of the idol, by many folds. No doubt, this Lord Rama, who has listened to Sri Ramayana parayanam many times, will bless all the devotees and their wishes to come true.

Parthasarathy

Due to the increase in wrong deeds on this planet, which has resulted in Mahabaram (load of wrong deeds), bhooma devi (in the form of cow) requested Lord Narayanan for a solution. God took the avatar of Lord Gopalan (Cowherd) and fought the Mahabaratha to destroy the evil forces.

To ensure only good karma continue hereafter Lord Krishna preached us the Bhagawad Geetha. Arjunan is also known as Parthan. Since Lord Krishna is the Charioteer of Arjuna (Parthan), he got the name “Parthasarathy”.

The Lord Parthasarathy (moolavar) holds the conch called Panchajanyam on his right hand, at Thiruvallikeni, which is one of the 108 vaishnava divya desams. The utsava moorthi, also gives darshan with conch on his right hand.

If one wants to have good knowledge, he should pray Panchajanyam. Hence Parthasarathy blew the conch, before preaching the Geetha to Arjuna. Those who want to attain good knowledge and succeed in life, should worship the Parthasarathy and the conch on his hand, at this temple.

Other Sannadhi’s in the temple:

Andal Nachiyar celebrates Lord Kannan as “Yasodhay Illansingam”. On the same lines, Sri Lakshmi Nrusimahan is on the right side and Sri Srinivasan is on the left side of Sri Navaneetha Krishnan. Worshipping all three Perumal at the same time will bring lots of good wishes in one’s life. Lord Thirumalaippan came in the dream of Sri Kesava Ranganatha Bhattar, chief archakar of the temple and ordered him for a separate sannadhi for Lord Srinivasa at this temple.

Thillaisthanam Swami:

Thillaisthanam is a beautiful, small village in Thanjavur district. There lived a mahan named Thillaisthanam Sadagopan swami. He was a sanyasi and he stayed in the Thulasi Thottam temple for many years. Thillaisthanam swami presented a temple car to this temple around 80 years ago and till today, this temple car comes around with all its beauty as ever. This is a living proof of this mahan’s glory.

Thillaisthanam swami, who lived in this temple for many years, has preached the teachings of Swami Ramanujar and works of Swami Vedantha Desikan to hundreds of his sishyas. Each stone in this temple has the positive vibes of this swami’s bold voice. The idol of Thillaisthanam swami is placed near to his Acharyan Adivan Sadagopan swami.

His Padukas has been kept at his Sannidhi. Having the darshan of the swami’s Padukas is a very rare opportunity. Prostrating before his Padukas will remove all the sins.

Social welfare:

This temple is not only a place for spirituality, but also has a free hostel for students, run by P.K. Garudachar Charitable Trust, which is praiseworthy. By living & growing in such environment, it is definite that the standard of life of younger generation will be noble.

For resolving child issues, pray Vennai Kannan and to get good match for matrimony, pray Manathukiniyan Raman and to remove all the sins, have the darshan of the Padukas of Thillaisthanam swami at this temple. This temple is situated very near to the Majestic bus stand. All facilities are available to have the darshan at this temple. Contact Details: 98457 47613, 080 – 23381184

குடந்தையில் காட்சி தரும் கொன்றைப் பூ லக்ஷ்மணன் | கும்பகோணம் | Sri APN Swami Writes | Thedi Thozhutha Thiruththalangal 01

Note : Scroll down to read the English translation of the article

அழகிய காவிரிக்கரையில் அமைந்துள்ள அத்புத நகரம் குடந்தை நகரம். கோவில் நகரம் கும்பகோணம் என்று இதற்குப் பெயருண்டு. சைவமும் வைணவமும் தழைத்தோங்கும் புண்யபூமி. சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர் திருக்குடந்தை என்கிறார் நம்மாழ்வார். அதாவது, காவிரித்தாயின் கருணையினால் செழித்து வளர்ந்த நெற்பயிர்கள், பெருமாளுக்கு சாமரம் வீசுகின்றதாம். சோழவளநாட்டின் செழுமை மகத்தானது.

கோவில் நகரமான குடந்தையில், திரும்பிய பக்கமெல்லாம் திருக்கோவில்களைக் காணலாம். ஒருமாதம் முழுதும் இந்நகரத்தில் தங்கியிருந்தாலும், மொத்த கோவில்களையும் முழுதாக தரிசித்துவிட முடியாது. இறையுணர்வு, கலையுணர்வு என இரண்டையும் நமக்களிக்கும் பொக்கிஷங்கள் இக்கோவில்கள்.

அன்னிய படையெடுப்புகள், அணை மீறிய வெள்ளங்கள் என பல ஏற்பட்டாலும்,  காலத்தால் அழியாதவையாக, கம்பீரமான தெய்வத்தின் சன்னிதானங்கள், குடந்தையில் நிறைந்துள்ளன. இந்த வாரம் நாம் தரிசிக்கவிருப்பது, கும்பகோணம் தோப்புத் தெரு கோபாலன். கோபாலன் என்றாலேயே கொள்ளையழகு என்பதற்கேற்ப, தோப்பின் நடுவில், தெய்வீக அருள்புரிகிறான் கோபாலன்.

தோப்புத்தெரு

கும்பகோணத்தில் எவரைக் கேட்டாலும், தோப்புத் தெருவிற்கு எளிதாக வழிகூறுவர். ஒரு காலத்தில் அடர்ந்த தென்னை மரங்கள் இங்கு அதிகமாக நிறைந்திருந்தன. பெரிய பெரிய தென்னந்தோப்புகள் நடுவே, பெருமாளுக்குத் தனியாக ஆலயம் அமைக்கப்பட்டது. கண்ணன் என்பவன் காட்டில் வாழும் தெய்வம்தானே!

ப்ருந்தாவனத்திலும் கோகுலத்திலும் வசித்தபோதுகூட கண்ணன் பெரும்பாலான நேரத்தை காட்டிலேயே செலவிட்டான். இதனை சுவாமி வேதாந்த தேசிகன் ரசமாக வர்ணிக்கிறார் – ஆரண்யம் என்றால், காடு என்றும்  வேதம் என்றும் பொருள். வேதத்தின் தலைவன் கண்ணன், ஆரண்யத்தில் – காட்டில் வசித்திட விரும்புகிறானாம்“. அதனால்தான் இங்கும் தோப்பின் நடுவே குடியிருக்கிறான்.

ப்ருந்தாவனத்தில் யமுனா நதி. இங்கு அரிசிலாறு. இவ்வாற்றின் கரையில்தான் அழகிய ஆலயம் அமைந்துள்ளது. இத்தலத்தில் எப்போதும் வேதவொலியும், விழாவொலியும் நிறைந்திருக்குமாம். வாஜபேயம், பௌண்டரீகம் முதலிய பெரிய யாகங்களை மஹான்கள் இத்தலத்தில் செய்துவந்துள்ளனர்.

கோகுலத்தின் அருகில் அந்தணர்கள் நிறைந்த ஒரு அழகிய அக்ரஹாரம் இருந்ததாம். அங்கு பெரியோர்கள் எப்போதும் யாகம் செய்து வந்தனராம். கண்ணனும் அவனது தோழர்களும் வனத்தில் திரிந்து, களைத்து, பசித்திருந்தால், அவர்கள் யாகம் செய்யும் இடத்திற்கு வந்து, அங்குள்ள பெண்கள் அளிக்கும் ஆகாரத்தை உண்டு பசியாறிடுவார்களாம்.

அதேபோன்றுதான், அரிசிலாற்றின் கரையில் தோப்புத் தெருவில் கோபாலன் சன்னிதிக்கு நேர் எதிராக அழகிய அக்ரஹாரம் ஒன்றுள்ளது. தனது பழம் பெருமையை அது இழந்திருந்தாலும், பெரியோர்கள் பல யாகங்களைச் செய்து வந்ததின் சக்தியை நாம் இன்றும் உணருகிறோம்.

கோபாலனின் கோவில்

தெருவினில் நுழைந்தவுடனேயே நம்மை ஆட்கொண்ட தெய்வீக உணர்வுடன் திருக்கோவிலுக்குள்ளே நுழைகிறோம். கோவில் சிறியதுதான். ஆனால் இறைவனின் கீர்த்தியோ மிகமிகப் பெரியது.  இக்கோவிலில் ஒரு வித்யாசமான சிறப்புண்டு. அதாவது மூலவர் ராமர் நின்ற திருக்கோலத்துடன்; உற்சவர் கோபாலன். ஆனாலும்,  இக்கோவில், தோப்புத்தெரு கோபாலன் சன்னிதி என்றே வழங்கப்படுகிறது.

ராமனை, காட்டில் திரியும் அழகன் (வந சுந்தரன்) என்கிறார் வால்மீகி முனிவர். அதாவது, தண்டகாரண்யம், பஞ்சவடி முதலிய காடுகளில் அலைந்து திரிந்தபோது, காட்டிலிருந்த மஹரிஷிகள் அவனின் அழகைக் கண்டு மனம் மயங்கினார்களாம். ராமாவதாரம், க்ருஷ்ணாவதாரம் எனும் இரண்டு அவதாரங்களிலுமே காட்டில் திரிந்தபடியால், இங்கு தோப்புத் தெருவில், மூலவர் ராமனும் உற்சவர் கோபாலனும் காட்சியளிக்கின்றனர் போலும்.

வாயிற்படிக்கு நேராகவமைந்த கருவரையில் ஒரே பீடத்தில் ராமனும், சீதையும் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றனர். ஒரே பீடத்தில் தம்பதிகள் நிற்பது திருமண கோலத்தில்தானே! உலகைக் காப்பாற்றும் இந்தத் திவ்யதம்பதிகள், மணக்கோலத்தில் சேவை தந்து, மக்களுக்கு மனக்குறையையும், திருமணத்தடங்கல்களையும் தீர்க்கின்றனர். ஒரே பீடத்தில் நின்று சேவை சாதிக்கும் ராமனையும், சீதையையும் சேவிப்பவர்கள், திருமணத்தடைகள் நீங்கப் பெறுகின்றனர்.

லக்ஷ்மணனின் லக்ஷணம்

வலதுபுறம் சீதையென்றால், ராமனின் இடதுபுறம் லக்ஷ்மணன்தானே! இவர்களுக்கு, எக்காலத்திலும் எல்லா நிலைகளிலும் உடனிருந்து கைங்கர்யம் செய்யும் பாக்யம் பெற்றவன் லக்ஷ்மணன். சீதையைப் பிரிந்ததைவிட லக்ஷ்மணனைப் பிரிந்த ராமன் அதிகம் துயரமுற்றாராம். வேறெந்த திருக்கோவிலிலும் சேவிக்க முடியாத அற்புத உருவ அமைப்பில், இங்கு லக்ஷ்மணன் அருகில் நிற்கிறார். அதை அறியும்போதே நமக்கு மெய் சிலிர்க்கிறது!

ராமன் சாக்ஷாத் மகாவிஷ்ணுவின் அவதாரம். சீதையோ மஹாலக்ஷ்மீ. ராம நாமத்தின் பெருமையை நன்குணர்ந்தவர் சாக்ஷாத் அந்த பரமேச்வரனே ஆவார். எனவேதான் இறக்கும் தருவாயிலுள்ள ஜீவன்களின் வலது காதில், ராம நாமத்தை,  காசியில் பரமேச்வரன் உபதேசம் செய்கிறார் என்கிறார் ஆதிசங்கரர். அத்தகைய பரமசிவனிடம், பார்வதிதேவி, ஸ்ரீராமபிரானின் பெருமைகளைக் கேட்கிறாள்.

அப்போது ஸ்ரீராமசந்த்ரமூர்த்தியின் பெருமைகளை விளக்கும் பரமசிவன், லக்ஷ்மணன் போன்று தானும் ராமபிரானுக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அது எப்படி முடியும்?” என பார்வதி கேட்கிறாள். கண்ணை மூடி ராமபிரானையும் சீதாதேவியையும் ப்ரார்த்தனை செய்து, கண்ணைத் திறந்து பார்  என்கிறார் பரமசிவன்.

என்ன ஆச்சர்யம்!! சீதா ராமர்கள் அருகிலிருக்கும் லக்ஷ்மணன், சடைமுடியுடனும், பிறை சந்த்ரனுடனும், தலையில் கொன்றைப்பூவுடனும் காட்சியளித்தார். ஒருகணம் பார்வதியின் உடல் சிலிர்த்தது. உதடுகள் அவளையறியாமல், ராம! ராம! என்று உச்சரித்தன. கண்ணைக் கசக்கிக்கொண்டு மீண்டும் பார்த்தபோது, சீதா-ராம-லக்ஷ்மணர்களே சேவை தந்தனர்; சடை, கொன்றைப்பூ, பிறைசந்த்ரன் என ஏதும் தெரியவில்லை.

வேறெங்குமே தரிசிக்க முடியாத, பார்வதி தரிசித்த, இந்த அதிசய கோலத்தை இன்றும் இங்குள்ள லக்ஷ்மணன் திருமேனியில் சேவிக்கலாம். ஒருமுறை நமக்கும் சிலிர்ப்பு உண்டாகிறது. ராமபிரானின் பெருமைதான் என்னே!!! தஞ்சை சரபோஜி மன்னரின் அனுபவம் இது – என்பர் பெரியோர்.

உற்சவர் கோபாலன்

இப்படி மூலவரை தரிசித்த பின்னர், உற்சவர் கோபாலனை தரிசிக்கலாம். மதிளழகுமிக்க மன்னார்குடி ராஜகோபாலனின் வடிவழகு என்னவோ, அது அனைத்தையும் குடந்தை கோபாலனிடம் சேவிக்கலாம். ருக்மிணி, ஸத்யபாமை எனும் இருதேவிகள் இருபுறமும் திகழ, ஒய்யாரமாக, மாடு மேய்க்கும் கண்ணனாக கையில் சாட்டையுடன், நின்ற திருக்கோலத்தில் கொள்ளை அழகுடன் காட்சி கொடுக்கிறான். எங்கள் கண் த்ருஷ்டி உன்மீது படக்கூடாது கண்ணா என்று வேண்டிக்கொண்டே, கண்ணை மூடாமல் கோபாலனை தரிசிக்கிறோம். மூல ஸ்தானத்திலேயே சந்தான க்ருஷ்ணனும் சேவையாகிறார். புத்திரபாக்யம் இல்லாதவர்கள் இவரை சேவித்து மக்கட்பேறு அடைகின்றனர்.

ராமன் உண்டு என்றால், அனுமான் இல்லாமலா! வாயு குமாரனாகிய அனுமனை பரமசிவன் அம்சம் என்பர் பெரியோர். அழகிய குடுமியுடன், மார்பில் பூணூலுடன் திகழும் அனுமனும்,  கையில் கொன்றைப் பூவினை ஏந்தி நிற்பது, அனுபவித்து சேவிக்கத் தக்கது. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள், கோபாலனையும் ரகுவீரனான ராமனையும் பாடிய வேதாந்த தேசிகர் முதலானோரும் இக்கோவிலில் காட்சியளிக்கின்றனர்.

குடந்தை நகரினுள்ளேயே அமைந்துள்ள தோப்புத்தெரு கோபாலன் சன்னிதிக்கு ஒருமுறை சென்று சேவித்து வாருங்கள். உங்களின் உள்ளத்தில் நல்ல தெளிவு உண்டாகும்.

நகரத்தின் எங்கிருந்தும் ஆட்டோ முதலிய வசதிகள் உண்டு. 

தொடர்புக்கு சுதர்சன பட்டர்99406 55506.

Lakshman with Cassia Flowers in Kudanthai

As the name “Temple city” suggests, one will come across a temple almost everywhere throughout this city.  In fact, one cannot complete visiting all the temples, even if you spend a full month here.  These temples are the treasures that bestow on us the Godliness and Artistic sense.   Though the foreign invasionsThe wonderful town of Kudanthai is situated on the banks of the beautiful river Cauvery.   It’s also known as the “Temple city Kumbakonam” as both Saivism and Vaishnavism flourished together in this sacred place.  Namazhvar says சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர் திருக்குடந்தை”, which means that with the blessings of mother Cauvery, the paddy crops here grow well and fan Perumal.  This speaks of the prosperity of the Chola Kingdom. and the rampant floods have caused many to perish, the prevalence of time tested temples that stand majestically in Kudanthai is an ancient testimony of our Sanatana Dharmam.

This week, we are going to visit Kumbakonam’s Thoppu Theru Gopalan temple.   The very word “Gopalan” means mystic beauty.  Lord Gopalan blesses all of us from the middle of the thoppu (grove) here.

Thoppu Theru:

Ask anybody in Kumbakonam, they will easily show you the way to Thoppu street.  Once, there existed an extensive coconut grove with magnificent coconut trees and the temple was built exclusively for Perumal in the middle of the grove.  After all, Lord Krishna always spent his time in the forest.

Even during His days in Brindavan and Gokulam, Kannan spent most of His time in the forest only.  Swami Sri Vedanta Desikan very beautifully describes “Aranyam” as “Forest” as well as “Veda”. The head of Vedas, Kannan, loves to spend His time in the forest. That’s the reason He stays here too, in the middle of the grove (thoppu).

Just like River Yamuna in Brindavan, here it is the Harisal River. On the banks of this Harisal river, this wonderful temple is built. This place always enjoys the sound of Vedas and the many festivals that adorn it.  In the past, great scholars performed many Yagams such as Vajapeyam and Poundareekam in their homes around this temple.

Near Gokulam, there used to be a beautiful Agraharam with lots of brahmins. There, the elders always performed the Yaagams.  Lord Krishna along with his friends used to roam in the forest.  Whenever they got tired and hungry, they would visit this place where Yagams were performed.  The women from these homes would feed Sri Krishna and his friends sumptuously.

Just like that, here on the banks of the Harisal river, opposite to the Gopalan temple, there was a beautiful Agraharam. Though it has lost the ancient pride of elders performing the Yagams and  Yagnams, one can feel its power even now.  

Gopalan Temple:

As we enter the thoppu street, with the blissful feeling engrossing us, we enter the Gopalan Temple.  The temple is small, yet Perumal’s glory is infinite.  The speciality of this temple is that the presiding deity is Sri Raman in standing posture while the utsavar is Sri Gopalan.  However, this temple is addressed as Thoppu Theru Gopalan Sannadhi.

Sage Valmiki calls Lord Rama as “Vana Sundaran”, which means the “Handsome one roaming in the woods”. Especially, while Lord Rama was roaming in the forests like Dhandakaranyam and Panchvati, the Rishis around were smitten by the beauty of Rama and fell in love with him.  As HE roamed the forests in both Ramavatharam & Krishnaavataham, here in this temple, HE gives us the darshan as Raman – the presiding deity and Gopalan – the Utsavar.

Straight from the entrance, we get to see the Sanctum Sanctorum in which Rama and Sita are in a standing posture on a single pedestal as bride and groom. The very darshan of this Divya Dampathi alleviates all the problems of the people as well as the hurdles that impede their marriage.

Lakshmana’s attribute:

On the right side of Lord Rama is Sita and to His left stands Lakshmana, who is destined to be in their service at all times. This is very unique aspect to this temple, where the amazing  Lakshmana stands close to Rama and gives darshan to us.  The very thought of this creates goosebumps in us.

Lord Sri Rama is Sri Mahavishnu’s avatar and Sita is Mahalakshmi.  Lord Paramasivan is the one who has completely understood the greatness of “Rama Nama”.  That is the reason, Lord Shiva chants Rama Nama in the right ear of all the Jeevathma’s, at their death bed in Kashi – says Adi Shankara.   

Parvathi once requested Shiva to explain the greatness of Lord Rama.  At that time, Shiva, while explaining the greatness of Sri Ramachandramoorthi, expresses his desire to serve Lord Rama like Lakshmana.  How is it possible? asks Parvathi.  Shiva says, ‘Close your eyes and bring in your vison on both Lord Rama & Sita. Worship them and open your eyes and see’.

What a surprise, Lakshmana standing near Lord Rama & Sita was seen transformed with tangled hair, crescent moon and cassia(kondrai)  flowers on his head.  For a moment, Parvathi experienced wonder.  Without her knowledge her lips started murmuring Rama… Rama….  As she looked back again, the Sita-Rama-Lakshmana gave darshan as before; the tangled hair, crescent moon and cassia(kondrai) flowers were gone.

This miracle experienced by Parvathi can be felt by us even today on Lakshman’s statue.  This gives a feeling of wonder to us too.  Such is the greatness of Lord Rama. Elders say, this is also the experience of Tanjore King Saraboji.

Utsavar Gopalan:

After worshiping the presiding deity, we move to the darshan of Utsavar Gopalan.  We will experience the entire beauty of Mannargudi Rajagopalan in Kudanthai Gopalan.  Kannan gives us His wonderful darshan in standing posture flanked by Rukmini and Satyabhama on both sides, and holding a whip in His hand, as if, He was managing the grazing cows.  Though we pray that our drishti (evil eye) should not affect Him, we continue to gaze at Him.  Santhana Krishnan also gives His darshan from the Sanctum sanctorum.  By worshipping Santhana Krishnan, those who do not have children are sure to be blessed with Putra bhagyam (to bear Children).

Where Lord Rama is, there is Hanuman too.  The elders say Vayu Putra Hanuman is the incarnation of Paramasivan.  Here, Hanuman gives darshan with a beautiful tuft, a sacred thread in the chest, holding a cassia(kondrai) flower in hand, and is a feast to watch and worship.  Acharyas including Sri Vendantha Desikan who has composed hymns on both Rama and Krishna and Choodi Kodutha sudarkodi Aandal also give darshan in this temple.

Please visit Thoppu Theru Gopalan Sannadhi, which is well within the city of Kudanthai and worship this Perumal.   You are sure to get great clarity in your mind.

Autos and other facilities are available from anywhere in the city.

Contact Sudarshana Bhattar – 99406 55506