Sri #APNSwami #Writes #Article| Director Desikan | டைரக்டர் தேசிகன்

ஸ்ரீ:
டைரக்டர் தேசிகன்

வழக்கம் போல் தலைப்பு மலைப்பாக இருக்கலாம். அல்லது மீண்டும் ஒரு ரவுண்ட் விமர்சனங்கள் வரலாம். இன்னும் சில நாட்களுக்கு உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலையாகவும் ஆகுக. எப்படி நினைத்தாலும் முழுவதும் ஒரு முறை படித்து விடுங்கள். ஒருவேளை பயன்படலாம்.

சுவாமி தேசிகனை “ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்” என இவ்வுலகம் புகழ்கின்றது. அதாவது “அனைத்து கலைகளிலும் வல்லவர்”- “சகலகலா வல்லவர்” என்பது இதன் பொருள். கோணல் கற்களைக் கொண்டு கிணறு கட்டுதல், உயிரோட்டமான சிற்பம் வடித்தல் என அவரின் ஜீவ தசையில் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.

இவை தவிர அவர் அருளிய நூல்கள் தான் ஸத்ஸம்பிரதாயத்தின் அடித்தளமாக அமைகின்றன. பல நூல்களை இயற்றுவதே மகான்களின் அவதார நோக்கம். ஏனெனில் நூல்கள் வாயிலாக உபதேசங்கள் செய்யப்படும்போது அவைகள் காலத்தால் அழியாதவை ஆகின்றன. மேலும் சிஷ்யன் மனதின் கேள்விகளுக்கு நூல்களில் விரிவான விடை கிடைக்கிறது.

இன்றைய சூழலில் நூல்களைப் படிக்கும் மனோநிலை; நம்மிடையே அறவே இல்லை எனலாம். எக்காலத்திலும் அரை குறைகள் உண்டென்றாலும், வாசிக்கும் பழக்கம் முழுவதும் மறைந்து வரும் சமயம் இது. தங்களுக்கு சொந்தமாக தெரியாது என்றாலும், எதையோ கோர்த்து வைத்துக் கொண்டு, தோன்றியதை எல்லாம் எழுதி வைத்து, சாமானியரை மயக்கியும், சாதுக்களை வெறுத்தும் பலர் எழுதி வருவது கண்கூடு. இவர்களின் நிலைப்பாட்டினை தேசிகன் ஓர் அழகிய ச்லோகத்தால் வர்ணிக்கிறார்.

குற்றமற்றவர்களிடம் காரணமின்றி பகைமை கொள்கின்றனர் பலர். இதனால் அவர்களிடம் தெய்வத்திற்கு மேன்மேலும் கோபம் உண்டாகிறது. ஏற்கனவே மதி கலங்கி உள்ள அவர்கள் தெய்வ கோபம் சேர்ந்ததால் மேலும் குழம்புகின்றனர்.

தங்களின் த்வேஷ புத்தியின் உச்சத்தினால் மேன்மேலும் பல விசித்திரமான கற்பனைகளுடன் (துளியும் உண்மை இல்லாத) விஷயங்களை சித்தரித்து மக்களிடையே விஷமப்ரச்சாரம் செய்கின்றனர். ஐயோ கஷ்டம்! – ஏற்கனவே மூடர்கள் நிறைந்த இவ்வுலகில் இவர்களின் துஷ்ப்ரச்சாரம் தலையெடுத்தால் உண்மையான ஆத்ம வித்யை எப்படி நிலைக்கும்?” என்கிறார்.

தேசிகன் காலத்திலேயே விஷமிகளின் விரோதமான கற்பனைகளுக்கு பதில் உறைக்கப்பட்டுள்ளது ஆச்சர்யமன்றோ! மேலும் நாட்டின் (ஸம்ப்ரதாயத்தின்) நிலைமைக்கும் என்றும் பொருந்தும்படியன்றோ வள்ளலின் வாக்குவன்மை.

சரி! இக்கட்டான இவ்விஷயத்தில் மக்களுக்கு ஆஸ்திகத்தையும், ஆன்மலாபத்தையும் அளிப்பது எப்படி? எனும் கேள்வி உண்டாகிறதே! ஸத் விஷயங்கள் நிறைந்த புத்தகங்களை படிப்பதில்லை. விஷமிகள் ப்ரச்சாரத்திற்கு விளம்பரம் அதிகம். ஸாதுக்களின் வழியை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வேறு என்னதான் செய்வது? ஸம்ப்ரதாயத்தின் நிலைதான் என்ன?

இச்சமயத்தில்தான் டைரக்டர் தேசிகன் அவதாரம் செய்கிறார். ஆம் அனைவரையும் ஸம்ப்ரதாயத்தின் பால் ஈர்க்கவும், ஸம்ப்ரதாய கருத்துக்கள், ஆத்ம குணங்களை வளர்த்துக்கொள்ளும் அறிவுரைகள் சுலபமாக அனைவருக்கும் புரியும் நாடகம் (ட்ராமா/drama) ஒன்றை எழுதியுள்ளார்.

“உயர்ந்த சாஸ்த்ர விஷயம் (தத்வ விஷயம்), கலைகள், சிற்ப விஷயங்கள், யோகம், தவம் என நாடகத்தில் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்த இயலாதது எதுவுமில்லை” என்னும் டைரக்டர் தேசிகனின் வேதவாக்குதானே தொல் வழியே நல்வழியில் துணிவார்கட்கு.

ஆகையால் “சங்கல்ப சூர்யோதயம்” எனும் நாடகத்தில் அதிகமான வன்மத்துடன், பிறரின் பெருமை கண்டு பொருமும் அனேக தீய குணங்களின் தொகுதியாக “மஹா மோஹன்” நல்லதைப் பார்க்கவே முடியாத மூடன் எனும் வில்லன் கூட்டத்தை இந்நாடகத்தில் பாத்திரமாக்கியுள்ளார்.

பொறாமை, கோபம், அஹங்காரம், கொழுப்பு, வீண் டம்பம், உலகம் தன்னையே போற்ற வேண்டும் எனும் ஆணவம், கைக்கூலிகளான (ஜால்ராக்கள்) பல துர்குணங்கள் இந்நாடகத்தில் பாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் பல இடங்களில் நகைச்சுவையே அதிகம்.

சுமதியுடன் (நற்புத்தியுடன்) கூடிய விவேகன் நாயகனாக, விஷ்ணு பக்தி, பொறுமை, ஆசார்யா அபிமானம் முதலிய சாத்வீக குணங்களுடன் அலட்டிக்கொள்ளாமல் ஜயிப்பவன் ஆகிறான். அதாவது நல்லதைப் பொறுக்காது கலகக்கூட்டம் மற்றும் ஆரவாரமற்ற சாத்வீக சங்கமம் இடையே நடக்கும் (நமது உள் மனதின்) போராட்டங்கள் தான் கதைக்களன். இதில் நம் சம்பிரதாயக் கருத்துக்கள் அற்புதமாகக் கொட்டிக் கிடக்கின்றன. பெரியோர்களிடம் நெருங்கிப்பழகி ஸ்வரூபசிக்ஷை (அதாவது பன்புள்ள வளர்ப்பு) பெற்றவர்களுக்கு அன்றோ இதன் பெருமை தெரியும்!

“வேங்கடேசன் என்னும் கவிராஜரின் இயக்கத்தில் (டைரக்சன்) இந்நாடகம் தயாராகியுள்ளது. சிறந்த சீடர்கள் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். ரங்கம் எனும் (ஸ்ரீரங்கம்) திரையரங்கில் இப்படம் திரையிடப்படட்டும்” என்கிறார்.

டைரக்டராக ஸம்ப்ரதாயத்திற்கு வழிநடத்தி (டைரக்சன்) செய்த டைரக்டர் தேசிகனன்றோ நமக்கு டைரக்டான ஆசாரியராகிறார். தேசிக பக்தனாக நம்மை காண்பித்துக் கொண்டால் நாமும் அவர் வழியில் நடப்பதை தானே விவேகிகள் விரும்புவர். மதி மயக்கம் கொண்ட மகா மோகன் களுக்கு இதற்கு வாய்ப்பேது. இந்த நாடகத்தில் ஒரு பஞ்ச் டயலாக்குடன் நிறைவு செய்யலாம்….

“குற்றமற்ற பிறரிடம் பொறாமையால் குற்றம் காண்பர் சிலர். ஆனால் அவர்களின் பெரிய சாதனைகள் ஒரு போதும் இவர்களின் கண்களில் படாது. மோகத்தின் வசப்பட்ட இவர்கள் மீள வழியேது!”

குறிப்பு : ஆஸ்திகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நமது கண்டவாதாரம் திரைப்படம் விரைவில் Youtubeல் வெளியாகும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதனை ஏதோ ஒரு வகையிலும், எல்லா வகையிலும் விளம்பரப் படுத்திய அனைவருக்கும் தலையல்லால் கைமாறு காணகில்லோம்.

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்.

டைரக்டர் தேசிக தாசன்
ஏ பி என்
(21-July-2020)

இது போன்ற மேலும் சுவையான ஸம்ப்ரதாய கட்டுரைகளை அறிந்து கொள்ள – https://apnswami.wordpress.com/blogpages/

#Art #Concept by Sri #APNSwami |ஸ்ரீவைகுண்டத்தில் வடுவூர் சுவாமி | கருத்து – APN சுவாமி, வடிவம் – Artist Keshav

ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி ஸமேத வைகுண்டநாதனுக்கு நித்ய கைங்கர்யம் செய்யும் நம் வடுவூர் சுவாமி கருத்து – APN சுவாமி, வடிவம் – Artist Keshav

அஹோபிலமடத்து ஆராதகராக இருந்த ஸம்ப்ரதாய பிதாமஹர், ஞான அனுஷ்டான சீலர், வடுவூர் ஸ்ரீ உ.வே.நரசிம்மாசார்யார் ஸ்வாமி சார்வரி ஆனி 6 / 20-ஜூன்-2020 ஆசார்யன் திருவடிகளை அடைந்தார்.

SriSannidhi Aradhakar Sri Vaduvur Swami

42ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் வடுவூர் ஸ்வாமிக்கு ஸமாச்ரேயணம் செய்து வைத்த ஆசார்யன் ஆவார். 42 ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் தொடங்கி 46ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் வரை கைங்கர்யம் செய்த மஹான் வடுவூர் ஸ்வாமி. இப்படி அழகிய சிங்கர்களின் பரிபூரண க்ருபையை பெற்ற மஹான் வடுவூர் ஸ்வாமி.

நம் APN சுவாமியின் காலக்ஷேபத்தில் வடுவூர் சுவாமியின் வைபவத்தை பல முறை அனுபவிப்பது அடியோங்கள் பாக்கியம். நம் ப்ராசார்யன் புரிசை சுவாமியின் வைபவத்தை, நம் APN சுவாமி சாதிக்கும்போதெல்லாம் அவரை ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அடியேனுக்கு வருவதுண்டு. வடுவூர் சுவாமியை ஸேவித்ததை நினைக்கும் போது, அடியேனுக்கு சிறுது ஆறுதலாக இருக்கும்.

பூலோகத்தில் அபராஜிதா என்னும் அயோத்தில் ஓடும் சரயு நதி, பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் காவேரி, நைமிசாரண்யத்தில் கோமதி, புனிதமான கங்கை, காவேரி என அனைத்து புண்ணிய நதிகளிலும் நம் அழகிய சிங்கர்களாம் ஆசார்யர்களுடன் அனுஷ்டானங்களை செய்த வடுவூர் ஸ்வாமி, இப்பொழுது விரஜை கடந்து, ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி ஸமேத பரவாசுதேவனுக்கு நித்ய கைங்கர்யம் செய்கிறார். ஆம் வைகுண்டம் வாழ்ந்து விட்டது !

தன்னை அனுபவித்து, ரசித்து ஆராதனம் செய்த வடுவூர் ஸ்வாமியை பிரிந்து இன்று மாலோலனும் தவிக்கிறான். அவனை தேற்ற முடியாமல் மஹாலக்ஷ்மியும் தவிக்கிறாள். மாலோலனுக்கே இந்த நிலை என்றால் பாகவதர்களின் நிலையை என்ன என்று கூறுவது !

அந்த நிலையின் வெளிப்பாட்டை இந்த அற்புத சித்திரமாக நம் கண் முன் இன்று விருந்தாக அளித்திருக்கின்றனர் நம் APN சுவாமியும், Artist ஸ்ரீ Keshav அவர்களும்.

என் சொல்வது? அற்புதம் ! அற்புதம் ! அற்புதம் !

நிழலானது நிஜம்,
ஆனால் இன்று நம் கண் முன் …
நிஜம் நிழலாக !!

கண்டோம் கண்டோம் வைகுண்டம் கண்டோம் !!
அடியோங்கள் பாக்கியம்.

அடியேன்
ஸ்ரீரஞ்ஜனி ஜகந்நாதன்
SARAN Sevak
7-July-2020