Sri APNSwami’s Shishya Writes | காஞ்சி வரதனின் – வைகாசி பிரம்மோத்ஸவம்

 ஸ்ரீ:

வரதனின் வைகாசி பிரம்மோத்ஸம்

    ஸ்ரீ APN சுவாமியின் உபன்யாசம் மற்றும் அவரின் வரலாற்று  நாவல் “யமுனைதுறைவர்  திருமுற்றம்” புத்தகத்திலுள்ள வரதனின் பிரம்மோத்ஸவ விவரம்.  

தொகுப்பு : திருமதி ஸ்ரீரஞ்சனி ஜகந்நாதன் 

**************************************************************************************************************

            பிரமனால்  ஆராதிக்கப் பட்ட நம் அத்திகிரி திருமால் வரதனின் வைகாசி பிரம்மோத்ஸம்  காண கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும். வைகுண்டம் போலே ஸத்யவ்ரத க்ஷேத்திரத்தில் நித்யஸ்ரீ நித்யமங்களமாக வாசம் செய்ய வேண்டும் என்று பிரமன் வரதனை கேட்டுக்கொண்டான்.  பிரமன் ஆராதித்த  இடம் என்பதால் காஞ்சி என்று வழங்கப்படுகிறது.

ஆதியுகத்தயன் கண்டிட நின்ற அருள்வரதர்

காதலுயர்ந்த களிற்றைத் திரேதையிற் காத்தளித்து

வாதுயர் தேவகுருவுக்கிரங்கித் துவாபரத்தில்

சோதியனந்தன் கலியில் தொழுதெழ நின்றனரே

என்று வரதனை யார் எந்த யுகத்தில் எவ்வாறு ஆராதித்தனர் என்பதை சுவாமி தேசிகன் பாடியுள்ளார்.

             வரதனின் பிரம்மோத்ஸம் வைகாசி ஹஸ்த நக்ஷத்திரத்தில் ஆரம்பித்து, திருவோணத்தில் தீர்த்தவாரி, பின்னர் மறுநாள் த்வஜாவரோஹணத்துடன் பூர்த்தியடைகிறது. இந்த பதிவில் நாம் வரதனின் பிரம்மோத்ஸவத்தை அனுபவிக்கலாம்.

            வரதன் திருக்கோவிலில் பாஞ்சராத்ர ஆகமத்தின் படி பிரம்மோத்ஸம்  ஆரம்பிக்கும் முன்னர் செல்வர் உற்சவம், அங்குரார்ப்பணம், சேனை முதலியார் உற்சவம் என அனைத்தும் நடைபெறுகிறது.

சுவாமி தேசிகன் வரதனின் பிரம்மோத்ஸம் பற்றி ஸ்ரீ வரதராஜ பஞ்சாஸத்தில் பாடியுள்ளார். 

கடை வெள்ளி உற்சவம்

            பிரம்மோத்ஸம் ஆரம்பிக்கும் முன் வெள்ளிக்கிழமையன்று பெருந்தேவி தாயார் கடை வெள்ளி உற்சவம் கண்டருளுகிறார். தன் நாயகனின் பிரம்மோத்ஸம் ஆரம்பிக்கும் நேரத்தில், பக்தர்களுக்கு முதலில் பிராட்டியின் அனுகிரஹம் கிடைக்கிறது.

            கடை வெள்ளியன்று காலை பெருந்தேவி தாயார், கண்ணாடி அறையில் திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

            மாலை கண்ணாடி அறையிலிருந்து, வசந்த மண்டபம், ஆழ்வார் ப்ரதக்ஷிணம் என்று  தாயார் புறப்பாடு கண்டருளுவார். கடைவெள்ளியன்று தாயார் விசேஷ திருக்கோலத்தில் திருவடி ஸேவையாகும் படி பக்தர்களுக்கு அனுகிரஹிக்கிறாள்.

செல்வர் உற்சவம்

            செல்வர் உற்சவத்தன்று செல்வர் புஷ்ப பல்லக்கில்  உள் புறப்பாடு கண்டருளுகிறார்.

அங்குரார்ப்பணம்

            திருக்கோவிலின் தென்-மேற்கு மூலையில் உள்ள புற்றிலிருந்து மண் எடுத்துவரப்பட்டு பிரம்மோத்ஸம் நல்ல படியாக நடக்க அடித்தளமிடும் உற்சவமாக இது கொண்டாடப்படுகிறது.  உற்சவம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக, அங்குரார்ப்பணம் என்னும் நவதானியங்களை முளைவிடும் உற்சவம் நடைபெறுகிறது.

சேனை முதலியார் உற்சவம்

               அங்குரார்ப்பணம் நடந்தன்று மாலை சேனை முதலியார் என்னும் விச்வக்சேனர் சிறிய புண்யகோடி விமானத்தில், நகர சோதனை செய்யும் வகையில், வரதனின் ராஜ வீதிகளை சோதனை செய்கிறார். இதனை முள் பொறுக்கும் உத்சவம் என்று வேடிக்கையாக கூறுவர். 

முதல் நாள் காலை – த்வஜாரோஹணம், பேரிதாடனம்

            வரதனின் பிரம்மோத்ஸம் முதல் நாள் ஹஸ்த நட்சத்திரத்தில் பின்மாலை வேளையில், வேத ஸ்வரூபனான கருடனின் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

            பின்னர் பெருமாளின் முன்னர் பேரி (முரசு) என்னும் வாத்யம் முழக்கி, முப்பத்து முக்கோடி தேவர்களை பேரிதாடனத்துடன் அழைப்பர்.

பரிச்சின்னமான இரு நாலெழுத்தின் பல் வண்மையெலாம்

விரிச்சு நலம்பெற ஓதவல்லோர்க்கிந்த மேதினிக்கே

மரிச்சின்ன மீளப் பிறவாமல் வாழ்விக்கு மால் வரதர்

திருச்சின்னவோசை இனிமையுண்டோ மற்றைத் தேவருக்கே.

என்று வரதனுக்கேயுரிய திருச்சின்ன ஓசை என்னும் திருஅஷ்டாக்ஷர ஒலி,  அனைவரையும் அழைக்கிறது. தேவர்கள், கின்னரர்கள், யக்ஷர்கள், பல தேசங்களிலிருந்து ஆஸ்திகர்கள் என அனைவரும் வரதன் உற்சவத்தை காண அனைவரையும் அழைத்து வரவேற்கும் உற்சவம்.

முதல் நாள் காலை – தங்க சப்பரம்

            முதல் நாள் காலை த்வஜாரோஹணம், பேரிதாடனத்திற்கு பின்னர் வரதன் தங்க சப்பரத்தில் புறப்பாடு கண்டருளுகிறான்.

            விஷ்ணு காஞ்சி என்னும் சின்ன காஞ்சியிலிருந்து, சிவ காஞ்சி என்னும் பெரிய காஞ்சி வரை காலையும், மாலையும் வரதன் புறப்பாடு கண்டருளுகிறான்.  ஆம், வரதன் இரண்டு வேளையும் ஏறத்தாழ பன்னிரெண்டு மைல் புறப்பாடு கண்டருளுகிறான்.

முதல் நாள் மாலை –  ஸிம்ஹ வாகனம்

            முதல் நாள் மாலை ஸிம்ஹ வாகனத்தில் வரதன் புறப்பாடு கண்டருளுகிறான். “முடிச் சோதியாயுனது முகச்சோதி மலர்ந்ததுவோ?”  என்று நம்மாழ்வார் பாடியுள்ளார்.  “பெருமானே! உன்னுடைய திருவபிஷேகம் என்னும் கிரீடத்தின்   காந்தி விசேஷம் எங்கள் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது.  திருவபிஷேகத்தினால் திருமுகமடலத்தில் ஸோபை அதிகமா, இல்லை திருமுகமண்டலத்தினால் திருவபிஷேகத்திற்கு ஸோபை அதிகமா?” என்று பக்தர்கள் மலைத்து நிற்கும் அழகு வரதனின் ஸிம்ஹ வாகன அழகு.

            கூரத்தாழ்வான் பெருமாளின் கிரீடத்தை ஸேவித்து இவனே ஸர்வலோகத்திற்கும் நாயகன், முப்பத்து மூவர் அமர்ரர்களுக்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலி தேவாதிராஜன்  என்று தெரிகிறது என்று கொண்டாடுகிறார்.

            வரதனுக்கு இரட்டை குடையானது ஸிம்ஹ வாஹந ஸமயத்தில் ஸமர்பிக்கப்படுகிறது.

இரண்டாம் நாள் காலை – இரண்டாம் காப்பு

            முதல் நாள் ஸிம்ஹ வாஹனத்திற்கு பின், கண்ணாடி அறையான அபிஷேக மண்டபத்திலிருந்து புறப்பட்டு  தாயார் சந்நிதி, மடைப்பள்ளி ப்ரதக்ஷிணம், மடைப்பள்ளி, உக்கிராணம்(பண்டகசாலை) என்று திருமலைக்கு புறப்பாடு கண்டருளி, மீண்டும் ஒரு காப்பு – “இரண்டாம் காப்பு” என்னும் ரக்ஷாபந்தனம் கண்டருளுகிறான். 

            மூலவர் ஸந்நிதியில் பெருமாளுக்கு விசேஷ திருவாரதனம் விமர்சையாக நடக்கும். பின்னர் பெருமாளுக்கு மற்றொரு காப்பு கட்டிய பின் (இரண்டாம் காப்பு) உத்ஸவர் அங்கிருந்து மேள தாளங்கள் முழங்க மலையிலிருந்து புறப்படுவார்.  சில வருடங்கள் வரதன் காஞ்சியை விடுத்து வெளி இடங்களில் இருக்க நேரியது. வரதன் காஞ்சிக்கு திரும்ப வந்ததை குறிப்பதே இரண்டாம் காப்பு உற்சவமாகும்.

இரண்டாம் நாள் காலை – ஹம்ஸ வாகனம்

            இரண்டாம் நாள் அதிகாலை இரண்டாம், காப்பிற்கு பின்னர் ஹம்ஸ வாகனத்தில் புறப்பாடு கண்டருளுகிறான். ஒரு காலத்தில் அன்னமாக அவதரித்து, பிரமன் முதலியோருக்கு அருமறை ஈந்தவன் ஹம்ஸ வாகன புறப்பாடு கண்டருளுகிறான்.

இரண்டாம் நாள் மாலை – சூரிய ப்ரபை வாகனம்

            “பகலோன் பகல் விளக்காக பரஞ்சுடர் தோன்றியதே” என்பது போல்  கோடி சூரிய ஸமப்ரபன்/ கோடி சூரியனின் பேரொளியைக் கொண்ட வரதன் புறப்பாடு அமைகிறது.  பகல் நேரத்தில் விளக்கின் ஒளி மங்கி காட்சியளிப்பது போலே, வரதனின் முன்பு சூரியனின் ஒளி மங்கி காட்சியளிக்கிறது என்று வரதனின் ஆவிர்பாவத்தை தேசிகன் வர்ணிக்கிறார்.  இதனை விளக்கும் வண்ணம், ஸாயங்காலம் மஞ்சள் வெயிலில் சூரிய ப்ரபையில் வரதனின் புறப்பாடு அமைகிறது.

இரண்டாம் நாள் இரவு – நம்மாழ்வார் சாற்றுமுறை

            நம்மாழ்வார் அவதாரம் வைகாசி விகாசம். இரண்டாம் நாளன்று நம்மாழ்வார் சாற்றுமுறை நடைபெறுகிறது. நம்மாழ்வார்  அமர்ந்த திருக்கோலத்தில், தன்னுடைய திருக்கைகளை தன் இதயத்தை நோக்கி உபதேசம் செய்வது போல் வைத்துக்கொண்டு, மதுரகவிகள் மற்றும்  நாதமுனிகளுடன் ஸேவை ஸாதிப்பார்.  வரதன் நம்மாழ்வார்  சந்நிதிக்கு எழுந்தருளி வைகாசி விசாக மஹோத்ஸவம் நடைபெறுகிறது.

மூன்றாம் நாள் காலை – கருட வாகனம்

            வேத ஸ்வரூபமான கருடன், வரதனின் துயரறு சுடரடிகளை தன்னுடைய திருக்கைகளில் ஏந்திக்கொண்டு கோபுர வாசலில் வெளி வரும் போது பக்தர்கள் “வரதா! வரதா!” என்று எம்பெருமானை ஸேவிக்கிறார்கள். வரதனின் கருட ஸேவை British காலத்திலேயே ஜில்லாவிற்கு விடுமுறை அளித்து கொண்டாடப்பட்ட வைபவமாகும்.

            சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்வை இங்கு பார்க்கலாம்.  சோழசிங்கபுரம் தொட்டாச்சார்யார் என்னும் பக்தர் அக்காரக்கனி யோக நரசிம்மருக்கு கைங்கர்யம் செய்து வந்தவர். அவர் சோழ சிம்ம புரத்திலிருந்து வருடம் தவறாமல் நடந்து சென்று காஞ்சி கருட சேவையை தரிசித்து வந்தவர்.  ஆனால் அந்த வருடம் அவரால் செல்ல முடியவில்லை. ஆனால் அவர் மனம் முழுவதும் அந்த வரதன் தான் நிறைந்திருந்தார். கருட சேவை ஸேவிக்க முடியவில்லையே என்று கண்ணீர் மல்க ஏங்கிக் கொண்டிருந்தார்  தொட்டாச்சார்யார் என்னும்  அந்த பரம பக்தர்.  

            காஞ்சியில், காலை நான்கு மணி வெளியே நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு பகவான் கருட வாகனத்தில் புறப்பட்டதற்கு அறிகுறியாக மேள சத்தமும், திவ்ய ப்ரபந்த ஒலியும், வேத ஒலியும் காதில் இன்ப நாதமாக வந்து விழுந்தன. எங்கும் வரதா! கோவிந்தா! கண்ணா! பெருமாளே! என்ற சத்தம் அலை கடல் சத்தம் போல ஒலித்தது. வாண வேடிக்கைகள் இரவை பகலாக்கின. அந்த வெளிச்சத்திலேயே வாகன மண்டபத்தில் இருந்து கருட வாகனத்தில் புறப்படும் பெருமாள், நம்மாழ்வார் ஸந்நிதி, தேசிகன் ஸந்நிதி, இராமானுஜர் ஸந்நிதிக்கு எழுந்தருளுகிறார்.  பின்னர் வரதர் கோபுர வாசலுக்கு வந்தாகி விட்டது. மெதுவாக கோபுர வாசல் கதவுகள் திறந்தன, எங்கும்  அஞ்சலி கூப்பி கச்சி வரதா! அத்தி வரதா! சத்ய வரதா! என்று மெய் புளகாங்கிதம் அடைந்து கண்ணில் நீர் சோரப் பக்தர் குழாம் நின்றிருந்த போது தான் அந்த அதிசயம் நிகழ்கிறது.

            “திடீரென்று வரதன்  மாயமாய் மறைந்து விட்டார்”!

            எங்கே வரதன்? எங்கே என்று காஞ்சி பக்தர்கள் மயங்கி நின்ற வேளையில்… அங்கே சோளிங்கரில் தொட்டாச்சாரியாருக்கு   தக்கான் குளத்தில்  வரதராஜப் பெருமாள் கருட வாகனத்தில் காட்சிதந்தார். என் அன்பனே, நீ வர முடியாவிட்டால் என்ன, நானே வந்து விட்டேன் உனக்காக என்று பறவை ஏறும் பரம்புருடன் தன்னுடைய பக்தனுக்கு சேவை சாதித்தான். தொட்டாச்சாரியார் தண்டனிட்டு பெருமாளை வணங்கி, கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய பெருமாளே, எமக்காக நீர் இவ்விடம் வந்தீரே உமது கருணையே கருணை நீர் உண்மையில் பக்த வத்சலன் தான், பேரருளாளர் தான் என்றும் பலவாறு துதி செய்து போற்றினார்.

            அடுத்த கணம் ….

            காஞ்சியில் முன் போல் வரதர் ஒய்யாரமாக நின்றார். தனது அன்பரின் தூய பக்திக்காகத் தாம் சோளிங்கர் சென்று சேவை சாதித்ததை காஞ்சியில் உள்ளோருக்கு உணர்த்தினார் பெருமாள். பக்தர்கள் அனைவரும் பக்திப் பரவசத்தில் தெண்டனிட்டு வீழ்ந்து வணங்கினார் தேவராஜரின் கருணையை எண்ணி.

            பெருமாள் யோக நரசிம்மராயும், அனுமன் யோக அனுமனாகவும் இரு மலைகளில் அருள் பாலிக்கும் சோளசிம்மபுரம் என்றழைக்கப்படும் சோளிங்கரில் தக்கான் குளக்கரையில் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நித்ய கருட சேவையில் பெருமாளை ஸேவிக்கலாம்

            இவ்வாறு வரதன் தொட்டாசாரியாருக்குச் சேவை சாதித்தது சுமார் 400  வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றது.  இன்றும் கருட சேவையன்று கோபுர வாசலில் பெருமாளை குடை சாற்றி மறைத்து, பெருமாளுக்கு ஆரத்தி எடுத்து கண் எச்சில் எடுக்கும் இச்சேவை  “தொட்டாச்சாரியார் சேவை”  என்று அழைக்கப்படுகின்றது.   இது பெரியோர் கூறும் ஐதிக்யமாகும்.

            கருட ஸேவை அன்று, வரதன் தூப்புல் தேசிகன் சந்நிதானம் முன்னர் எழுந்தருளி, ஒரு குடை இரக்கப்பட்டு, தேசிகனுக்கு அருளப்பாடுடன் மரியாதைகள் செய்யப்பட்டு பிறகு முரங்கை வீதி வழியாக கங்கைகொண்டான் மண்டபம் செல்கிறான். 

            வைகாசி பௌர்ணமி அன்று கங்கா தேவி அனைத்து நதிகளுடன்  வரதனை ஸர்வ தீர்த்தத்தின் குளக்கரையில் ஆராதிக்கப்படுவதாக உள்ளது. ஆகையால் கங்கையின் ஆராதனையை ஏற்றுக்கொண்ட பெருமாள் கங்கை கொண்டான் மண்டபம் எழுந்தருளுகிறான்.

            கருட ஸேவை அன்று பெருமாள் கல்லடைத்த தொப்பாரம்(cap) என்னும் கிரீடத்தை சாற்றிக்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறான்..           

மூன்றாம் நாள் மாலை  – ஹனுமந்த வாகனம்

            காலை பெரிய திருவடியில் சேவை சாதித்த பெருமாள், மாலை சிறிய திருவடியாம் ஹனுமானின் மேல் ஸேவை சாதிக்கிறான். சுவாமி தேசிகன் வரதனை “அத்திறவரக்கன் முடி பத்தும் ஒரு கொத்து என உதிர்த்த திறலோன்” என்று ராமனாக கொண்டாடுகிறார்.  ராவணனின் பத்து தலையை பனங்காய் போல் ஒரு கொத்தாக விழ வைத்தவர் தேவாதிராஜன் வரதன்.  ஸர்வ ப்ராணிகளிடம் கருணை கொண்ட தயா நிதியாக விளங்குகிறான் என்று கூரத்தாழ்வான் கொண்டாடுகிறார்.

நான்காம் நாள் காலை – சேஷ வாகனம்

            நான்காம் நாள் காலை வரதனுக்கு பரமபதநாதன் திருக்கோலம். உபய நாச்சிமாருடன், ஆதி சேஷனில் அமர்ந்த திருக்கோலம். ஒரு  திருவடியை மடித்து ஊன்றி,அதன் மீது ஒரு திருக்கையை அழுத்தி அமர்ந்த திருக்கோலத்தில் தானே பரதெய்வம் என்று உணர்த்தும் படி அனாயாசமாக அன்பர்களுக்கு அருள்பாலிக்கின்றான். 

நான்காம் நாள் காலை – வரதன் பத்தி உலாத்தல்

            சேஷ வாகனம் முடிந்த பின்னர், வாகன மண்டபத்தில் திருக்கோலம் களையப்பட்டு, திருமேனியில் அதிகமான திருவாபரணம் சாற்றப்படாமல், மெலிதான வஸ்திரத்தில் “பெடையிரண்டையொரனமடைந்து பிரிந்திடா வகை பேசலாம் ..” என்பதில் தேசிகன் பாடியது போல், இரண்டு பெண் ஹம்சத்தின் நடுவில் ஒரு ராஜா ஹம்ஸ போலவும், இரு சிறு அருவிகளுக்கு நடுவில் ஒரு பெரு அருவி இருப்பது போலே வரதன் விளங்குகிறான். இந்த அற்புதமான திருக்கோலத்தில் உபய நாச்சிமாருடன், திருக்கரங்கள் பற்றி  வரதனின் பத்தி உலாத்தல் நடைபெறுகிறது.   இந்த சமயத்தில்,  பெருமாளின் திருமேனிக்கு குளிர்ச்சியை தரும் வகையில்  குங்குமபூ விழுது காப்பு  சாற்றப்படுகிறது. வரதன் கொட்டகையில் பத்தி உலாத்தல் செய்வதை பக்தர்கள் ஸேவித்து பேரானந்தம் அடைகின்றனர். உபய  நாச்சிமாருடன் அவன் இருக்கும் இந்த சமயத்தில், பக்தர்கள் தாங்கள் செய்த அபராதங்களுக்கு வரதனிடம் மன்னிப்பு கேட்டு, அஞ்சலியுடன் வணங்குகின்றனர்.

அஸ்து ஸ்ரீஸ்தன கஸ்தூரீ-வாஸனா-வாஸிதோரஸே

ஸ்ரீஹஸ்தி கிரநாதாய தேவராஜாய மங்களம்

               பிராட்டியின் குங்கும பூச்சுக்களை கொண்ட திருமார்புடன் வரதன் விளங்குகிறான் என்று மணவாள மாமுனிகள் தேவராஜ மங்களத்தில் பாடியுள்ளார்.

நான்காம் நாள் மாலை – சந்திரப் ப்ரபை வாகனம் & நெல் அளவு

            நான்காம் நாள் மாலை,  குளிர்ந்த கிரணங்களை, அம்ருத கிரணங்களை வாரி வர்ஷிக்கும் வகையில் வரதன்  இரண்டு உபய நாச்சிமாருடன்  சந்திர ப்ரபையில் புறப்பாடு கண்டருளுகிறான்.  அடியார்கள் துயர் களையும் வண்ணம், குளிர்ந்த கிரணங்கள் கொண்ட சந்திர பிரபையில் வரதன் சேவை சாதிக்கிறான்.

            வால்மீகி ராமனை “சந்திர காந்தம் கொண்ட ராமன்” என்று வர்ணிக்கிறார். சூரியனை சில நேரம் தான் பார்க்க முடியும். ஆனால் சந்திரனை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அது போல சந்திர ப்ரபையில் புறப்பாடு கண்டருளும் வரதனையும் நாம் ஸேவித்துக்கொண்டே இருக்கலாம்.   வரதன் ஒவ்வொரு நாள் உற்சவம் கண்டருள அவன் திருமேனி காந்தியும், வைலக்ஷண்யமும் பெருகுகிறது என்று சுவாமி தேசிகன் கொண்டாடுகிறார்.

            குளிர்ந்த சந்திர வாகனம் முடிந்த பின்னர், நெல் அளவை நடைபெறுகிறது. இல்லங்களில், அலுவலங்களில் auditing கணக்கு வழக்கு பார்ப்பது போல், உற்சவ வரவு செலவு கணக்கை வரதன் பார்க்கின்றான்.

ஐந்தாம் நாள் காலை – பல்லகில் நாச்சியார் திருக்கோலம்

            தங்க பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்தில் மோஹன சுந்தரன் வரதனின் ஒய்யார புறப்பாடு. 

            “நெடுந்தெருவே சென்றவர்கள் நான் இருந்த முடுக்குத்தெரு வந்தனரே!” என்பது போல அவரவர்கள் இருக்கும் இடம் சென்று வரதன் அனுகிரஹம் செய்கிறான்.

            ஆடவர்களே தங்களை பெண்களாக நினைக்கும் அளவிற்கும் வடிவழகு கொண்ட வரதன், ஐந்தாம் தினம் காலையில், இவன் தான் பெண்ணோ! ஆண் இல்லையோ! என்னும் அளவிற்கு வரதனின் பேரழகு.

            சீதை ராமனிடம் “ஆணுருவில் இருந்த ஒரு பெண்ணுக்கு தான் என்னை மனம் முடித்து வைத்தார் போல் இருக்கிறது.” என்று ராமனின் கோபத்தை வளர்பவளாக கூறினாள்.  ஆனால் இங்கு நம் தாபத்தை நீக்க தாயுருவில் வரதன்.

            நேற்று வரை கம்பீர புருஷனான வரதன், அடக்கம் ஒடுக்கத்துடன், பெண்மைக்குரிய லட்சணத்துடன், பெருந்தேவி தாயாரின் திருவாபரணங்களை அணிந்துக்கொண்டு, நாச்சியார் திருக்கோலம் காண்கின்றான்.  ராகுடி, ஜடை பின்னல், மணப்பெண் கால்களை மடித்து வைத்திருக்கும் திருக்கோலத்தில், தங்க பல்லாக்கில் நாச்சியாராக வரதன் காட்சி தருகிறான்.

            பின்னர் தூப்புல் எழுந்தருளி, சுவாமி தேசிகனுக்கு மரியாதை முடிந்த பின்னர், தீபப்ரகாசன் சந்நிதி, யதோதகாரி சந்நிதி, பவழவண்ணர் சந்நிதி, அஷ்டபுஜ பெருமாள் சந்நிதி பின்னர் கங்கை கொண்டான் மண்டபம் சென்று வரதன் திரும்புகால் ஆகின்றான்.

            இதனை மோஹினி அலங்காரம் என்றும் சிலர் கூறுவார். திருப்பாற்கடலை கடைந்த பொது அம்ருதம் வந்தது. அப்பொழுது கண்ணன் மோஹினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு அம்ருதத்தை அளித்தான்.  பெண்ணாகி அமுதூட்டும் பெருமாள் என்று மோஹினி அவதாரம்.

ஐந்தாம் நாள் மாலை – யாளி வாகனம்

            ஐந்தாம் நாள் மாலை திருச்சின்னம் ஒலிக்க, சண்டோல் அடிக்க, மேள தாளங்கள் முழங்க யாளி வாகனத்தில் புறப்படுகிறார் நம் அத்திகிரி திருமால்.

ஆறாம் நாள் காலை வேணுகோபாலன் திருக்கோலம்

            ஆறாம் நாள் காலை வரதனுக்கு வேணுகோபாலன் திருக்கோலம்.  இந்த திருக்கோலத்தின் அழகில் மயங்கியே சுவாமி தேசிகன், யாதவ குல  கண்ணனை பற்றி  யாதவாப்யுதயம் என்னும் மஹாகாவியத்தை இயற்றினார். இந்த சேவையில் மனம் மயங்காதவர் ஒருவரும் இருக்க முடியாது. அவன் குழல் ஊதும் அழகு நம் உள்ளங்களை கொள்ளை கொள்கிறது.

            அன்று யசோதை கண்ணனுக்கு குழல் கற்றைகளை வாரி, முடித்து, மயிர் பீலி சாற்றி, பூ சூட்டி மகிழ்ந்தாள். இன்று அழகிய சௌரி கொண்டையை சற்றே அள்ளியெடுத்து தூக்கி முடிந்து, அதில் சந்திர, சூரிய நெற்றிச் சுட்டி மற்றும் மயில்தோகையுடன் ராக்குடி சூட்டி,  பச்சைப் பவழமல்லி மாலையையும் சூடியிருக்கும் வரதனின் அழகை காண, கண் கோடி வேண்டும்.

            இரு கைகளிலும் புல்லாங்குழல் ஏந்தி, அதில் கோர்க்கப்பட்டிருந்த சங்கிலியில் நண்டு மாணிக்கம் ஒன்று அசைந்தாட, புல்லாங்குழலின் துளைகளில் பதிந்திருந்த கைவிரல்கள் பத்திலும், விதவிதமான மோதிரங்கள் பளபளக்க, இருபுறமும் உபய நாச்சியார் திகழ, இரண்டுகால்களை குறுக்கு நிலைபாட்டில் வைத்து வரதன் நிற்கும் அழகே அழகு!

            இந்த அழகை வேதாந்த தேசிகன்  “குழலூதும் இக்கண்ணன் திருக்கோலம், உயிர்பிரியும் தருவாயில் என் உள்ளத்தே உறைய வேண்டும்” என்று பாடியுள்ளார் போலும்.  கம்பன் “இந்திர நீலம் முத்து இருண்ட குஞ்சியும் ” என்று பாடியுள்ளார்.

            அவன் பின்புறமுள்ள பசு, வேத மணம் கமழும் வரதனின் திருவடிகளை தன் நாவினால் வருட, முன்புறம் உள்ள கன்றின் தங்கப் பதுமை அவன்தன் திருமுகத்தையே பார்ப்பது போல் அதியத்புத ஸேவை. கிருஷ்ணாவதாரத்தில்  வேதமும், உபதேசமும் கைங்கர்யம் செய்ய பசுக்களாகவும், கன்றுகளாகவும் வந்து பிறந்தனவோ என்பது போல் இருந்தது. இதனையே சுவாமி தேசிகன் யாதவாப்யுதயத்தில் பாடியுள்ளார்.

            அன்று கோகுலத்தில் கண்ணன் வாயினால் ஊதும் குழல் ஓசையை கேட்டு மாடுகள் தங்கள் மேச்சலை மறந்து, செவிகள் அசைக்காமல், வால் அசைக்காமல் சித்திரத்தில் உள்ள மாடுகள் போல் நின்று அந்த இசையை ரசித்தன.  இன்று பக்தர்கள் வரதனை கண்டு மெய் மறந்தனர். அதிகாலையிலேயே கண்ணனுக்கு (வரதனுக்கு) சூர்ணாபிஷேகம் எனும் மஞ்சள்காப்பு உற்சவம் நடக்கும். பெரியோர்கள் கூட அந்த மஞ்சள் சூரணத்தை தங்களின் மேனியில் பூசிக் கொண்டு மற்றவர்கள் மீதும் தூவுவர். “வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்” என்ற பெரியாழ்வாரின் பாசுரங்கள் எங்கள் வரதன் விஷயமானவைதான் என்பது போல் இருக்கும் இந்த ஸேவை.

            அனைத்து உற்சவங்களுக்கு தனி சிறப்பு உண்டு. ஆனால் கரி கிரி மேல் கண்ணாக நிற்கும் வரதனின் வேணுகோபால திருக்கோலத்து பத்தி உலாத்தலுக்கு  தனி அழகு.  காஞ்சி ஆயர்பாடியோ என்னும் அளவிற்கு, சாஸ்திர ஞானம் மறந்து, வேதாந்த விஷயங்களை விடுத்து, பெரியோர்களும் வரதனின் அழகில் மயங்கி தங்களை பறி கொடுத்து, “கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணம் திரு நாமம் திண்ணம் நாரணமே” என்று  முன்னழகையும், பின்னழகையும் ரசித்து நிற்பர்.

ஆறாம் நாள் மாலை யானை வாகனம்

            அன்று யானைக்கு அருள்பாலித்த எம்பெருமான் இன்று யானை வாகனத்தில், கஜேந்திர வரதனாக ஏகாம்பரர் கோவில் வாசலில் ஏசல் காண்கிறான்.  ஏகாம்பரேச்வரர் கோவிலில் வாசலில் ஏசல் என்னும் ஒய்யாளி ஸேவை  நடைபெறுவதைக் காணத்தான் மக்கள் கூட்டமாக கூடுவர்.

            பொதுவாக யானை வாகனம் நின்ற நிலையிலேயோ, அல்லது முன்னிரு கால்களையும், பின்னிரு கால்களையும் மடித்த நிலையிலேயோ அமர்ந்திருக்கும். ஆனால் காஞ்சியில் யானை வாகனத்திற்குக் கால்கள் இல்லை. பெருமாள் கஜேந்த்ர வரதனன்றோ!  ஒவ்வொரு யுகத்தில், ஒவ்வொருத்தர் இந்த பெருமாளை ஆராதித்தனர். முதலில் க்ருதயுகத்தில் பிரமன் ஆராதனை செய்தார். பின்னர் த்ரேதாயகத்தில், கஜேந்த்ரனான யானை பெருமாளை ஆராதித்தது. முதலை, யானை காலை பிடித்த கதை அனைவரும் அறிந்ததே! யானை ஆதிமூலமே என்றழைத்தது. அச்சமயம் ஏனைய தேவர்கள், பிரமன் சிவன் என்று எல்லோரும் நாங்கள் மூல புருஷர்கள் இல்லை என்று கைவிரித்தனர்.அந்த சமயம்தான், மூலமென ஓலமிட வல்லார் வந்தார் என்று வெகுவேகமாக வரதன் ஓடிவந்து யானையைக் காத்தான். ஓடிவந்த வரதன், அதே வேகத்தில் முதலைக்கும் சாப விமோசனமளித்து, யானையையும் காப்பாற்றினான். அதனால், யார் மேலான தெய்வம் என்பதை உலகம் உணர்ந்தது.

            இது பர தத்வ நிர்ணயம்! முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று, யானையின் நடுக்கத்தை தீர்த்து, கஜேந்த்ர வரதனாக விளங்குகிறான்.எனவே நானே பர தத்வம் என்று காட்டுவதற்காக, ஏகாம்பரேச்வரர் கோயில் முன்பு,  ஏசல் எனும் உற்சவம் நடைபெறுகிறது. விளையாட்டில் ஜயித்த பிள்ளைகள் தோற்றவருக்கு பழிப்பு காண்பிக்குமே அது போன்றது இது. ப்ரம்மதேவர் என்றைய தினம் இந்த ப்ரம்மோற்சவம் ஆரம்பித்தாரோ அது முதற்கொண்டு இவ்வுத்ஸவம் நடைபெற்று வருகின்றது.

            பெருமாள் வழக்கம் போல் முதலில் கங்கை கொண்டான் மண்டபத்தில் இறங்காமல், நேராக ஏகாம்பரேச்வரர் சன்னிதி வீதிக்குச் சென்று, பெரும் ஜனத்திரள் திரண்டியுள்ள அந்த இடத்தில் ஏசல் கண்டருள்வார். தங்கள் இல்லங்களின் மாடிகளிலிருந்தும், ஆர்ப்பரித்துக் கொண்டு பெருமாள் வாகனத்தில் ஆரோகணித்து வருவதை மக்கள் கண்டு களிப்பர்.  ஏசல் முடிந்து கட தீபம் ஏற்றப்பட்டு பெருமாளுக்கு த்ருஷ்டி கழிக்கப்படும்.

ஏழாம் நாள் காலை திருத்தேர்

            பெரிய மணி ஒலிக்க, மாடவீதிகளின் நாற்புறங்களிலும் அதன் எதிரொலியாய் மக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். வரதனின் திருத்தேர் உற்சவம் அவ்வளவு சிறப்பானது. பின்மாலையில் பெருமாள் தேருக்கு எழுந்தருளும் அழகே அழகு! சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள திருத்தேருக்கு, பெருமாள் வேகமாக எழுந்தருளும் அவ்வழகைக் காண கண்கள் கோடி வேண்டும்.

            காஞ்சியில் ஒரு வழக்கம் உண்டு. எந்த முகூர்த்தத்தில் பெருமாளுக்கு த்வஜாரோகணமோ (கொடியேற்றல்) அதே முகூர்த்தத்தில் தேரில் எழுந்தருள வேண்டும். அதனால், அத்புதமான வேகத்துடன் புறப்பாடாகும்.  கேடயத்தில் எழுந்தருளுவதால், பெருமாள் நேராக அபிஷேக மண்டபத்திலிருந்து புறப்பாடு. தொண்டரடிப்பொடியில் பெரும் மக்கள் வெள்ளம் கூடுவர் த்வஜஸ்தம்பத்தின் இருமருங்கிலும் அடியார்கள் குழாம்.  திருப்பணிப்பிள்ளை திரை நீக்க அத்புதமான ஜோதி வடிவத்தில் பெருமாள் சேவை சாதிப்பார்.

            பச்சை வைரத்தால் ஆன பல அட்டிகைகளையும், மாலைகளையும் சாற்றிக் கொண்டு சிக்குதாடு எனப்படும் சிகப்புக் கொண்டையுடன் வரதன் சேவை. ஒரே சீராக ஸ்ரீபாதம்தாங்கிகள் எழுந்தருளப்பண்ண, உடல், திருச்சின்னம் பரிமாறிய அடுத்த நொடியில், தேசிகர் சன்னிதி வாசலில்,  தேசிகனுக்கு மரியாதையானவுடன் திவ்யப்ரபந்த கோஷ்டி தொடங்கியதுதான் தாமதம். வேகம், வேகம், வேகம் என்று அப்படியொரு வேகத்துடன் வரதன் புறப்பாடு. கணீர்கணீரென்று வெள்ளி மணி ஒலிக்க, இரண்டு பெரிய குடைகள் மாற்றி குஞ்சலங்கள் ஆட, வெகு விரைவாக தேரடிக்கு எழுந்தருளி, அனுமார் மரியாதையுடன் திருத்தேரின் மேலே ஏறுவார். 

            இரண்டு வெண்கொற்றக்குடை குதித்து குலுங்க வரதன் உபய நாச்சிமாருடன் தேருக்கு எழுந்தருளும் காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தும். பராசர பட்டர் இதை தான் “பெருமானே! உன் வேகத்திற்கு நமஸ்காரம்.” என்றார் போலும். பின் தொடரும் அடியவர்கள் குழாம், ஓடி, மூச்சிரைத்துப், பெருமாள் தேர்த்தட்டின் மேலேறியவுடன் ஒருவழியாகத் தங்களை ஆச்வாசம் செய்து கொள்வர்.

            மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடி, தேரை வடம் பிடித்து இழுப்பர். ஆடி, ஆடி சிலைகள் அசைய மணிகள் கணகணப்ப, தேர் வீதிகளில் வலம் வந்தது.  “தென்னரங்கர் இன்று திருத்தேரில் ஏறினார், நின்று வடம் பிடிக்க வாருங்கள், வைகுந்த நாட்டில் இடம் பிடிக்க விடுமென்றால்” – என்பார் திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்.

            வரதனின் தேரோட்டம் மக்கள் உள்ளத்தில் விவரிக்க இயலா உணர்ச்சியை விளைவித்தது.   “அப்பனே வரதா! இன்று சாயங்காலத்திற்குள் நிலை சேர்ந்துவிடப்பா.. எந்தத்  தடங்கலும் இல்லாமல் உனது தேரோட்டம் நடக்கட்டும்” என்று வேண்டிக்கொள்வர்.  ஒருசிலசமயம் இப்பெரும் தேர், நிலைக்கு வருவதற்கு, ஒரு வாரம் கூட ஆகிவிடும். ஆதலால் பெருமாளை வேண்டிக் கொள்வர் பக்தர் குழாம்.

            “டோலாய மானம் கோவிந்தம், மஞ்சஸ்தம்  மதுசூதனம், ரதஸ்தம் கேசவம் த்ருஷ்டவா புனர் ஜன்மம் ந வித்யதே” – டொலையில் கோவிந்தனையும், சயன திருக்கோலத்தில் மதுசூதனனையும், திருத்தேரில் கேசவனையும் ஸேவித்தோமேயானால் மீண்டும் பிறவி என்பதே கிடையாது.  

எட்டாம் திருநாள் திருப்பாதம் ஜாடித் திருமஞ்சனம்

            எட்டாம் நாள் காலை புறப்பாடு இல்லை. எட்டாம் திருநாள் மதியம் திருப்பாதம் ஜாடித் திருமஞ்சனம்.  ஆகையால் மதியம் எல்லோரும் அபிஷேக மண்டபத்தில் திரளுவர்.

            உபய நாச்சிமாருடன் பெருமாளுக்கு அதிவிலக்ஷணமான திருமஞ்சனம் நடக்கும். திருமஞ்சனம் முடிந்து, அலங்காரங்கள் முடிந்தவுடன் திரை திறக்கப்படும். பெரிய கற்பூரத் தட்டில் அர்ச்சகர் ஆலத்தி வழிக்க, அந்த அழகைச் சேவித்த அனைவருமே மேனி சிலிர்ப்பர். மை வண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழ, மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட, கோடாலி முடிச்சு என்னும் சௌரி கொண்டை சாற்றிக்கொண்டு, சங்கு சக்ர நெத்தி சுட்டி, ராக்குடி சூட்டிக்கொண்டு, விலக்ஷணமான காதில் துலங்கும் சங்கு சக்ர கடுக்கனுடன், நெற்றியில் ஊர்த்வ புன்றத்துடன், பட்டு பீதாம்பரங்களையும், திருவாபரணங்களையும் சாற்றிக்கொண்டு  வரதன் சேவை ஸாதிப்பான். ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணத்தில், வரதனின்  தெய்வீக அழகு நம் கண்களுக்கு  புலனாகும்  வண்ணம், அதியற்புதமான  ஸேவை.

Kanchi Varadan With Ubhaya Nachimar during Thotti Thirumanjanam

            பெருமாளை இரண்டு கைகளிலும் உயரத்தூக்கிக் கொண்டு, கைத்தல சேவையில் பட்டர்கள் எழுந்தருளப் பண்ணுவர். அபிஷேக மண்டபத்தின் நடுவே ஒரு மிகப்பெரும் வெள்ளி ஜாடியில், பூரணமாகத் தெளிந்த தண்ணீர் நிரப்பி, விளாமிச்சைவேர், ஏலப்பொடி, குங்குமப்பூ சேர்த்து வைத்திருப்பர்.

            சத்ர, சாமர், வாத்யங்களுடன் திருப்பணிப்பிள்ளை கட்டியம் கூற, மெதுவாகப் பெருமாளைக் கைத்தலத்தில் எழுந்தருளப் பண்ணி அவரின் இரண்டு பாதங்களை மட்டும் ஜாடியில் தீர்த்தத்தில் தோய்ப்பர். இதற்குத்தான் திருப்பாதம்ஜாடித் திருமஞ்சனம் என்பது பெயர்.

            கைத்தலத்தில் பெருமாளை உயர்த்திக் காண்பிக்க பக்தர் கூட்டம் “ஹோ!” என்று ஆர்ப்பரித்து வரதனின் அழகை ஸேவிப்பர்.

             “அனிமேஷ……”  என்று பிராட்டி இருவரும் வரதனின் அழகில் மயங்கி கடைக்கண்களில் வரதனை குளிரக் கடாக்ஷிக்கின்றனர்.

பூணித் தொழுவினில் புக்குப் புழுதி யளைந்த பொன்மேனி

காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்

நாணெத் தனையு மிலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும்

மாணிக்க மேஎன் மணியே மஞ்சன மாடநீ வாராய்.

என்று பெரியாழ்வார் கிருஷ்ணனை நீராட்டத்திற்கு அழைக்கும் பாசுரம் நினைவுக்கு வரும்.

            “காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில் பூரித்து வைத்தேன்” என்று அன்று யசோதை கண்ணனை நீராடியது நினைவுக்கு வரும்.

எட்டாம் திருநாள் மாலை குதிரை வாகன புறப்பாடு

            எட்டாம் திருநாள்  மாலை குதிரை வாகனத்தில் வரதன் புறப்பாடு. உடன் திருமங்கையாழ்வாரும் எழுந்தருளுவார். 

            குறு நில மன்னன் திருமங்கையாழ்வார் தான் கப்பம் கட்டும் பணத்தை பாகவத ததீயாராதானத்திற்கு செலவழித்தார். அதனால் மன்னன் அவரை சிறையிலிட்டார். அன்று இரவு பெருமாள் திருமங்கையாழ்வாரின் கனவில் தோன்றி வேகவதி ஆற்றங்கரையில் பொற்புதையல் இருப்பதை கூறினார்.  மறுநாள் அரசனுடன் அங்கு வந்த

            திருமங்கையாழ்வாருக்கு வேகவதி ஆற்றங்கரையில் பொற்புதையல் அளித்தாராம் நிதியை பொழிந்த மழை முகிலான வரதன். அதனாலதான் இங்கு கலியன், தன்கையில் ஒரு முத்து வைத்திருப்பதைக் காணலாம்.

            வேடுபறி உற்சவத்திற்காக உடன் வந்தார் கலியன். செங்கழுநீர் ஓடைக்கரையில் பெருமாளை மறித்த திருமங்கையாழ்வார், பின்னர் பாகவனாலே திருஅஷ்டாக்ஷர மந்திர உபதேசம் பெரும் வேடுபறி உற்சவம்  நடக்கும்.  வாடினேன்வாடி என்று தொடங்கும் பெரிய திருமொழி ஸேவிப்பர். அதன்பின்னர் பெருமாளின் அநுக்ரகத்தைப் பெற்றுக் கொண்ட கலியன், திருக்கோயில் திரும்புவார்.

            அன்றும் பெருமாளுக்கு ஏகாம்பரேஸ்வரர் கோவில் வாசலில் ஏசல் நடைபெற்றது. குதிரை வாகனத்தில் ஒய்யாரமாக, ஒரு போர் வீரனைப் போன்று பெருமாளுக்கு சாற்றுப்படி அலங்காரம் செய்திருப்பர். கம்பீரமான ஆக்ருதி. இடதுகையால் லகானைப் பற்றியபடி, வலது கையால் சவுக்கை ஏந்தியிருப்பர்.

            தலையில் ராஜகொண்டை என்று வெண்பட்டாலான தலைப்பாகை அணிந்திருப்பர். ராஜகம்பீரமான தோற்றத்துடன் இரண்டு வெண்குடைகளும் குறுக்காக பிடித்துக்கொண்ட படி,  அக்குடைகளுடனே பதினாறுகால் மண்டபத்தினுள் பெருமாள் ஏசல் (முன்னும் பின்னுமாக எழுந்தருளுவது) கண்டருளுவார்.

            பெருமாள் கோவிலுக்கு எழுந்தருளினவுடன் திருவந்திக்காப்பு நடைபெறும்.

ஒன்பதாம் நாள் காலை ஆள்மேல் பல்லக்கு. போர்வை களையும் வைபவம், ப்ரணயகலகம், பத்தி உலாத்தல்

            நவம் என்றால் புதியது என்று அர்த்தம். சுவாமி தேசிகன் ஹயக்ரீவ ஸ்தோத்திரத்தில் “உன்னுடைய புதிய தயா பரிவாஹங்களுக்கு கடாக்ஷங்களுக்கு  நான் பாத்திரமாக வேண்டும்.” என்று பாடியுள்ளார். அது போல வரதனின் புதிய திருவாபரணம், புதிய உற்சவம், புதிய புதிய வாகனங்கள் என புதிய புதிய பக்த வெள்ளம் அனுபவிக்கிறார்கள். அஸ்த்தத்தின் பத்தாம் நாள் திருவோணம். திருவோண நட்சத்திரத்தின் அதிதேவதை பெருமாள். திருவோண நட்சத்திரத்தில் வரதன் தீர்த்தவாரி கண்டருளுகிறான்.

            ஒன்பதாம் நாள் காலை ஆள்மேல் பல்லக்குபோர்வை களையும் வைபவம். வரதன் உபய நாச்சிமார் இல்லாமல், ஒய்யாரமாக ராஜ வீதியில் ஆள் மேல் பல்லக்கில் கங்கைகொண்டான் மண்டபம் எழுந்தருளுவார். பல போர்வைகள் போர்த்திக்கொண்டு யாருக்கும் முக்கியமாக உபய நாச்சிமார்களுக்கு தெரியாமல் வரதன் புறப்பாடு.  பல்லக்கு முன்னும் பின்னும் ஓடிவர, ஒவ்வொரு போர்வையாகக் களையப்பட்டு திவ்யமான பட்டு பீதாம்பர அலங்காரங்களுடன் பெருமாள் ஜொலிப்பார்.

            பெருமாள் எதையோ துலைத்து விட்டு தேடச் செல்கிறார். ஆனால், நாச்சிமார்கள் தங்களை விட்டு பெருமாள் யாரை பார்க்க சென்றார் என்று கோபம் கொள்கின்றனராம்.

            திரும்புகால் ஆனவுடன் தொண்டரடிப்பொடியில் உபய நாச்சிமாருடன் மட்டையடி உற்சவம் நடைபெரும். “பெருமாள் ஏகாந்தமாகத் தனியாகச் சென்று விட்டாராம். அவர் அப்படிச் சென்றது எதனால்?” என்று சந்தேகத்தின் பேரில் மறுபடியும் உள்நுழைய விடாமல் நாச்சிமார் தொண்டரடிபொடி கதவைச்சாற்றி ப்ரணயகலகம் / மட்டையடி  எனும் வேடிக்கை நிகழ்கிறது.

            பின்னர் பட்டர் சுவாமிகள் பெருமாள், பிராட்டி இருவர் திறத்திலும் சமாதானம் பேசினபின்பு, ப்ரணயகலகம் தீரும். மிகவும் ஏகாந்தமாக ஒருபுறம் உபய நாச்சிமார் ஒருதோளுக்கினியானிலும், மறுபுறம் பெருமாள் ஒரு தோளுக்கினியானிலும் பத்தி உலாத்தல் கண்டருளி, பின்னர் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளுவார்கள்.

ஒன்பதாம் நாள் தீர்த்தவாரி திருநாள்

            பெருமாள் நூற்றுக்கால் மண்டபத்தில் உயர்ந்த மேடை மீது எழுந்தருளினவுடன் மிகவும் ஆர்பாட்டத்துடன், அனந்த கொத்து பரிஜனங்களுடன் மலைமேலிருந்து சிறிய பல்லக்கில், வேத திவ்ய ப்ரபந்த கோஷங்களுடனும்  ப்ரணதார்த்திஹர வரதர் எனும் சிறிய வெள்ளி மூர்த்தி அங்கு எழுந்தருளுவார். அவருக்குத் திருமஞ்சனம் நடைபெற்றவுடன், அனந்தசரஸ் புஷ்கரணியில் / திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பல்லாயிரக்கணக்கானோர் ஒரே சமயம் பெருமாளுடன் குளத்தில் தங்கள் பாபம் நீங்க வேண்டும் என்று ப்ரார்த்தித்து, மூழ்கி  புனித நீராடுவர். தீர்த்தவாரி முடிந்து  ப்ரணதார்த்திஹர வரதன் மலைக்கு எழுந்தருளுவார்.  இவ்வாறு திருவோணத்தில் வரதனின் தீர்த்தவாரி திருநாள் நடைபெறுகிறது.

ஒன்பதாம் நாள் மாலை புண்யகோடி விமானம்

            ஒன்பதாம் நாள் மாலை புண்யகோடி விமானம். வரதன் அவதாரத் திருக்கோலம். ப்ரம்மதேவர் செய்த யாகத்தின் பயனாக புண்யகோடி விமானத்தில் பெருமாள் இருபுறம் உபயநாச்சிமாருடன் ஆவிர்பவித்தானாம். அந்த ஸேவையை இன்று கலியுகத்தோர் கண் குளிர காணும் வண்ணம் புண்யகோடி விமானத்தில் வரதன் புறப்பாடு கண்டருளுகிறான். 

“அயமேதவேதியின் மேல் புகலோங்கு பொன்மலையன்ன ஓர் புண்ணியகோடியுடன் பகலோன் பகல் விளக்காகப் பரஞ்சுடர்தோன்றியதே.” என்று தேசிகன் பாடியுள்ளார்.

            மேலும் திருவோணம் என்பதால், தூப்புல் சுவாமி தேசிகன் மங்களகிரியிலிருந்து எழுந்தருளி, மாட வீதி ப்ரதக்ஷிணம் கண்டருளி தூப்புல் சென்று சேருகிறார்.  தூப்புலில் புண்யகோடி விமானத்தில் வரதன் எழுந்தருளி, சுவாமி தேசிகனால் தரிசன தாம்பூலம் சமர்ப்பிக்க பட்டு பின்னர் வரதன் தேசிகனுக்கு அனுகிரஹம் செய்கிறார். இரவு நாழிகையானதும் புறப்பட்டு, பின்னர் ஆங்காங்கு மண்டகப்படி முடிந்து, விடிவதற்கு ஒரு நாழிகை முன்னர்தான் திரும்புகால் நடைபெறும். இந்த நேரத்தில் வரதனுடன் அணு யாத்திரை செய்வது நம் புண்ணிய பலன்களை பண் மடங்கு வ்ருத்தி செய்கிறது.  நிசப்தமான அந்த வேளையில் உடல், திருச்சின்ன ஸப்தம் காதில் ஒலிக்க, வேத-திவ்ய ப்ரபந்தம் ஒழிக்க,  பக்த குழாங்களுடன் வரதனின் அற்புத புறப்பாடு நடைபெறுகிறது.

            இவ்வண்ணம் ஒன்பதாம் நாள் உற்சவத்துடன் வரதன் பெரிய காஞ்சிக்கு எழுந்தருளும் உற்சவங்கள் பூர்த்தியடைகின்றன. 

பத்தாம் நாள் – மதியம் புஷ்பயாகம் & துவாதச ஆராதனம்

            மதியம் பன்னிரெண்டு மணிக்கு வரதனுக்கு  புஷ்பயாகம், துவாதச ஆராதனம் ( பன்னிரெண்டு திருவாராதனம்)  என அனைத்தும் விசேஷமாக நடைபெறும். அத்யாபக ஸ்வாமிகள் நம்மாழ்வார் திருவாய்மொழியையும் வேதத்தையும்  ஸேவித்து வரதனை ஸ்தோத்திரம் செய்து மகிழ்வர். பன்னிரெண்டு திருவாராதனம் முடிந்தபின் ஆஸ்தானத்தில் வரதன் எழுந்தருளுவான்.

பத்தாம் நாள் இரவு வெட்டிவேர் சப்பரம்

            பத்தாம் நாள் – இரவு வெட்டிவேர் சப்பரத்தில் மாடவீதி ப்ரதக்ஷிணம் கண்டருளுகிறான் வரதன். உற்சவ நாட்களில் வரதன் ஏறத்தாழ பன்னிரெண்டு மைல் காலையும் மாலையும்  புறப்பாடு கண்டருளியதால் அவனுக்கு குளிர்ச்சியை தரும் வகையில் வெட்டிவேர் சப்பரத்தில் மாடவீதி புறப்பாடு நடக்கிறது.

பத்தாம் நாள் இரவு – கொடியிறக்கம், ஸப்தாவரணம்

            வெட்டிவேர் சப்பரத்திற்கு பின்னர் கொடி மரத்திலிருந்து கருடக் கொடியிறக்கம் அதாவது த்வஜாவரோஹணம் நடக்கிறது. 

            பின்னர் ப்ரஹ்மோத்சவ காலத்தில் வந்திருந்த அனைத்து தேவர்களுக்கும் வாகன மண்டபத்தில் விடை சாதிக்கும் (send off) உற்சவம் நடைபெறும்.   

            திருமேனியில் அதிகமான திருமேனி சாற்றிக்கொள்ளாமல், விழுதி காப்பு எனப்படும் பச்சை கற்பூரம், குங்குமப்பூ திருமார்பில் சாற்றிக்கொண்டு வெகு வேகமாக,  ஸப்தாவரணம் (ஏழு சுற்றுகள்) எனும் கணக்கில், ப்ரதக்ஷிணம் செய்து, மலைக்குள் வரதன் எழுந்தருளுகிறான்.  ரக்ஷாபந்தனம் செய்து கொண்ட அர்ச்சகருக்கு  மரியாதைகள் செய்யப்படும்.

            வரதன் எப்பொழுது வெளியில் புறப்பாடு கண்டருளினாலும் சுவாமி தேசிகன் ஸந்நிதியில் தேசிகனுக்கு மரியாதை நடைபெறும்.

            உற்சவம் முடிந்து மலைக்கு வரதன் திரும்ப எழுந்தருளும் போது, எப்பொழுதும் ஆண்டாள் ஸந்நிதியில் மாலை மாற்றிக்கொண்ட பின்னரே எழுந்தருளுவான்.  ஆண்டாள் ஸன்னிதி சற்று உயரமாக இருக்க, ஆண்டாளின் திருவடிக்கு நேராக வரதனின் திருமுடி இருப்பது போன்ற பாவனையில்  பக்தர்கள் ஸேவிப்பர்.  ஆண்டாள் சூடிக்களைந்த மாலையை தான் பெற்று, தன்னை தன்யனாக நினைத்துக் கொண்டு பரமாத்மா வரதன் மலைக்கு எழுந்தருளுகிறான்.  வாக்குகளில் வேதம், திருமார்பில் மஹாலக்ஷ்மி, வைஜயந்தி மாலை, நாபி கமலத்தில் பிரமன் என இத்தனை மங்களம் பெற்றிருந்தாலும், ஆண்டாள் சூடிக்களைந்த பரிமளம் மிகந்த மாலையையே வரதன் விரும்புகிறான்.

            மலையில் திருவெண்நாழி ப்ரதக்ஷிணம்/ வையமாளிகை ப்ரதக்ஷிணம் இரண்டு முறை ப்ரதக்ஷிணமாகி உள்ளே எழுந்தருள, பூர்ண கும்பத்துடன் வையம் கண்ட வைகாசி திருநாள் பூர்த்தியடைகிறது.

விடையாற்றி உற்சவம்

               பிரம்மோத்ஸம் முடிந்த அடுத்த மூன்று நாட்களும் விடையாற்றி எனப்படும் ஓய்வுத் திருநாள் உற்சவம் கொண்டாடப்படுகிறது.  விடையாற்றி உற்சவத்தில் வரதன் உபய நாச்சிமாருடன் நூறு கால் மண்டபத்தில் உற்சவ களைப்பு தீர திருமஞ்சனம் கண்டருளுவான். விடையாற்றி முதல் நாள் மாலை  பெருமாள் திருவடி கோயிலான அனுமார் சன்னிதி வரையில் எழுந்தருளுவார். மூன்றாம் நாள் புஷ்ப பல்லக்கு என்று விடையாற்றி உத்சவம் கொண்டாடப்படுகிறது.

             இவ்வாறு ஆதியுகத்து அயன் வணங்கிய அருளாளன், இன்றும் கலி யுகத்தில் வைகாசி மாதத்தில், பேரருளை வர்ஷிக்கும் பேரருளாளனாக, பிரம்மோத்ஸம் கண்டருளுகிறான். இந்த ஸேவைகளை ஸேவித்து, பக்தியுடன் வரதனின் திருவடிகளில் சரணடைவோமாக.

Sri #APNSwami #Writes #Article |#Well Wishers | #Editorial |#SriNrusimhapriya

                                         Well Wishers

தண்ணீரின் தேவையை வலியுறுத்தும் அற்புதமான Editorial (ஸம்பாதகர் குறிப்பு) by Sri APN Swami.
விகாரி – வைகாசி – May 2019 – ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியா Issue.

ஆங்கிலத்தில் அதிகமாக உபயோகத்தில் உள்ள வார்த்தையிது. ‘நலம் விரும்பிகள்’ என நாம் தமிழில் சொன்னாலும் ஆங்கில மோஹத்தில் ஆட்பட்டவர்களுக்கு இந்த வார்த்தை மிகவும் பிடித்தமானதாகும்.  அதுபோன்றே ஒரு சொல் நன்றாகச் செய்யப்பட்டது என்றால் நன்று, நன்று என்பதற்குப் பதிலாக well done என்கிறோம்.  இந்தப் பாராட்டு மிகவும் ஆனந்தமளிக்கக் கூடியது. ஸமீபத்தில் ஒரு உபந்யாஸகர் வெகு சமத்காரமாக இந்த வார்த்தையை உபயோகித்ததை ரஸித்து இங்கு பகிர்கிறோம்.

அதாவது ஸ்வாமி தேசிகனிடம் ஒருவன் போட்டியிட்டான்.  தான் கொடுக்கும் கோணல்மாணல் கற்களைக் கொண்டு ஒரு கிணறு வெட்டச் சொன்னான். தேசிகனும் அதைச் செய்து முடித்தார்.  அப்போது ஸ்வாமியை எப்படிப் பாராட்டுவது?  எனும்போது, நகைச்சுவையாக, well done என்றார் அந்த உபந்யாஸகர்.

அதாவது கிணறு முடிந்தது என்பதை வார்த்தை ஜாலத்தால் வெளிப்படுத்தினார்.  கிணறு என்பதற்கு ஆங்கிலத்தில் well என்றுதானே பொருள்!

எனினும், இந்தக் கட்டுரையின் நோக்கம் ஜாலம் அல்ல, ‘ஜலம்‘.

நீரின்றி அமையாது உலகு என்பர் பெரியோர். தற்போது தமிழகத்தில் அனல் சுட்டெரிக்கிறது.  வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.  ஏறத்தாழ எல்லா நீர்நிலைகளும் வறண்டு விட்டன. வானிலை அறிக்கையைக் கவனித்தால் நிலைமை இன்னமும் மோசமாகும் என்றே தோன்றுகிறது. செய்வது அறியாமல் அரசாங்கமும், மக்களும் தவியாகத் தவிக்கின்றனர்.

இந்து அறநிலையத்துறையினர் எல்லாக் கோவில்களிலும் வருணஜபம், பாசுரங்கள், பதிகங்கள் பாடி ப்ரார்த்தனை செய்ய வேண்டும் எனும் சுற்றறிக்கையை அளித்துள்ளனர்.  முதன் முறையாக இத்தகைய அறிவிப்பை அரசாங்கம் வெளியிடுவது ஆனந்தமளிக்கிறது.  அதேசமயம், தண்ணீரின் தேவை எத்தகையது என்பதை மக்கள் இன்னமும் உணரவில்லையோ எனும் ஏக்கமும் உண்டாகிறது.

சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரலாக ஒருபடம் வெளியிடப்பட்டது.  அதில் மாட்டுவண்டியில் பயணம் செய்யும் சில வைதிகர்கள் அண்டா, குடம் முதலியவற்றில் தண்ணீர் கொண்டு வருகின்றனர். இது நமது மயிலை ஸ்ரீநிவாஸன் ஸன்னிதியின் நிலை.  பெருமாள் திருவாராதனம், திருமஞ்ஜனம் செய்வதற்குக் கூட கிணற்றில் தண்ணீர் இன்றி வறண்டிருப்பதால் சற்று தொலைவில் உள்ள ஸ்ரீமதாண்டவன் ஆச்ரமக் கிணற்றிலிருந்து ஆசாரம் கெடாமல் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

உண்மையில் மக்கள் இங்கு ஒரு விஷயத்தை யோசிக்க  வேண்டும். ஒரு காலத்தில் பெரும் கிணறுகள் எல்லோருடைய இல்லங்களிலும் இருந்தன. அதிலிருந்து இறைக்கும் தண்ணீர், சிக்கனமாகவும் மறுசுழற்சி (recycling) எனும் விதத்தில் தோட்டத்துச் செடிகளுக்கு பாய்வதாகவும் இருந்ததால் பூமியின் ஈரப்பதமும், தண்ணீர் தேக்கமும் நிறைவாக இருந்தது.  அதுதவிர, திருக்கோயிலின் குளங்கள் பெரும் நீராதாரமாக இருந்தது. சென்னையையும், அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் மட்டும் சுமார் ஆயிரம் குளங்கள் இருந்தன!!!

காலப்போக்கில் தூர்ந்தும், ஆக்ரமிப்புகளினாலும் தற்போது ஐம்பது குளங்கள் மட்டுமே உள்ளதாக ஒரு தகவல் தெரியும்போது நெஞ்சம் குமுறுகிறது.  எவ்வளவு பெரிய தண்ணீர்த் தேக்கமாகத் திருக்குளங்கள் விளங்குகின்றன! தற்போது மயிலாப்பூரில்,  சித்திரைக் குளம், கபாலீச்வரர் குளம் முதலிய பெரும் குளங்கள் ஏறத்தாழ குப்பை மேடுகளாகிவிட்டன.

நம் முன்னோர்களை முட்டாள்களாக நினைத்து இன்னும் எத்தனை காலம் நாம் அல்லல்படப் போகிறோம் பெரும்பாலான திவ்யதேசங்களில் பெருமாளுக்குத் திருவாராதனமே குழாய்த் தண்ணீரில் தான்!  இந்நிலையிலும் சில பெரியோர்கள் இன்னமும் கிணற்றுத் தண்ணீரையே நாடியுள்ளனர்.  நமக்கு அவர்கள் வெறுக்கத்தக்க நபர்களாயிருப்பது வேதனையிலும் வேதனை.

அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவோரின் முதல் சாதனையே பழைய கிணறுகளைத் தூர்த்து அதன்மீது வாகன நிறுத்துமிடம் கட்டுவதுதான்.  இதனால் ஏற்படும் விளைவுகளை எவருமே எண்ணிப் பார்ப்பதில்லை.  ‘இனி வரும், எதிர்கால ஸந்ததியினர், மாத்திரை வடிவில்தான் தண்ணீரைக் காண்பர்’ என நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது கவனத்திற்குரியது.

பருத்திப்பட்டு ஸஞ்சாரத்தில் ஸ்ரீமதழகியசிங்கர் தெரிவித்த கருத்தினையும் எண்ணிப் பார்க்க வேண்டும். 45ம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர், நிறைந்த ஜலவசதி கொண்ட சேலையூர் ஸ்ரீமடத்தை நிர்மாணம் செய்தார்.  ஒன்பது கிணறுகள் கொண்ட இம்மாபெரும் வளாகம், தற்போது வறண்டுள்ளது.  எனவே ஜலவசதி கொண்ட பருத்திப்பட்டில் ஒரு மடம் நிர்மாணிக்க வேண்டும் என்று சொன்னது தற்போதைக்கு ஸமாதானமாக இருப்பினும், இன்னும் இருபது வருடங்களில் அந்த இடமும் என்ன ஆகுமோ! எனும் பயமும் உண்டாகிறது.

மழை வேண்டி பாராயணங்களும், யாகங்களும், ப்ரார்த்தனைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  காஞ்சி தூப்புலில் செய்த வருண ஜபத்தின் பலனாக சுமார் ஒன்றரை மணிநேரம் நல்ல மழை பெய்தது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இருப்பினும் இது முழுதும் போதுமானதன்று.  இனியாவது இயற்கையுடன் இணைந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.  வறட்சியின் நடுவே தமிழகத்திற்கு வரவிருந்த ஃபானி எனும் புயல், ப்ரம்மாண்டமாக ஒடிசாவைத் தாக்கியுள்ளது.  தமிழகத்திற்கு ஆபத்தில்லை என்றாலும், ஒடிசாவின் நிலைமை மிகவும் மோசமாயுள்ளது.  தமிழகத்திற்கு வரவேண்டிய மழையும் இல்லை என்பது வருத்தமளிக்கிறது.

மரங்களால் மழை பொழியும் என்பதற்கேற்ப, ஸ்தல வ்ருக்ஷங்கள் கோவில்களில் வளர்ந்தன.  காரண, காரியம் தெரியாமலேயே நாம் அனைத்தையும் அழிப்பது, மனித குலத்திற்கே மாபெரும் கேட்டினை விளைவிக்கும்.

இனிமேலாவது இயற்கையைக் காப்பது நமது ஸந்ததிகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் சேமநிதி (Fixed Deposit) என உணர்ந்து செயல்பட வேண்டியது தற்போதைய சூழ்நிலையில் ஆவஶ்யகமாகும்.  கிணற்று நீரை முகர்ந்து உபயோகிக்கும் வைதிகர்களாக இல்லாதிருப்பினும், அதன் அருமை உணர்ந்து, தூர்க்காமல் இருக்கலாம்.  அவ்விதம் செய்தால் உண்மையில் நாமும் Well Wishers தாம்!