Sri APN Swami’s TrunkkuPotti – From Kalaimagal Magazine – Kalvi Dhaanam

கல்வி தானம்

கல்வி கற்க வயது கிடையாது. ஆசையும் ஈடுபாடும் இருந்தால் எந்த வயதிலும் கற்கலாம். வாழ்கையில் பொருளாதார வசிதிகளைப் பெருக்கிக் கொள்வதற்குத் தான் கல்வி என்ற எண்ணம் இப்போது சமூகத்தில் வேரூன்றீயிருக்கிறது. ஆனால், மனத்தைச் செம்மைப்படுத்தும், அமைதியையும் ஆனந்தத்தையும் அளிக்கும் ஆன்மிகக் கல்வியைப்பெற யாரும் அதிகமாக முன்வருவதில்லை. ஆனால், முப்பத்தாறு ஆண்டுகளாக எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஒரு கல்வி நிறுவனம் சாதனை புரிந்து வந்திருக்கிறது.

            தானங்களில் சிறந்து கல்வி தானம் என்பார்கள். அப்படிக் கல்வியைத் தானமாகவே அளித்து வந்திருக்கிறது. பத்து வயதுப் பாலகன் மட்டுமல்ல, பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களும், இல்லத்தரசிகளும் இந்தத் தானத்தை ஆர்வத்துடன் பெற்றிருக்கின்றன. இதைப் படிப்பதால் என்ன லாபம்? என்று லாப நஷ்டக் கணக்குப் பார்க்காமல் சிரத்தையுடன் கற்று வந்திருக்கிறார்கள், இன்றும் கற்று வருகிறார்கள்; அக்கறையுடன் கற்பித்தும் வருகிறார்கள்.

     கல்வி கற்பதன் பலன் அறிவைப் பெருக்கிக் கொள்வதாகத்தான் இருக்க வேண்டும். ” நூல்வரைத் தொடர்ந்து பயத்தொரும் பழகி, நுணுங்கிய நுவலரும் உணர்வே” என்று கம்பர் பாடுகிறார். கற்ற கல்வி மணற்கேணியைப்போல் அறிவைப் பெருக்க வேண்டும். ஆனந்தத்தை அளிக்க வேண்டும், உள்ளம் செம்மைப்பட வேண்டும்.

      மாம்பலம் சம்ஸ்கிருத வித்யாலயா என்ற அமைப்பு இந்தச் சாதனையை முப்பத்தாறு ஆண்டுகளாக ஆற்றி வருகிறது. 1955-இல் தொடங்கிய இந்த அமைப்பு சம்ஸ்கிருத அறுவை ஆர்வம் உள்ளவர்கெல்லாம்  ஊட்டி வருகிறது. பள்ளி செல்லும் மாணவ-மாணவியும் படிக்கிறார்கள். அலுவலகத்தில் பணி புரிபவரும் படிக்கிறார்கள். இவர்களுக்கு வசதியாக இந்த அமைப்பு மாலையில் வகுப்புகளை நடத்தி வருகிறது. இதுவரை மூவாயிரம் பேருக்கு மேல் இதில் படித்துப் பல பரீட்சைகளில் தேறியிருக்கிறார்கள்.

சென்னை, மேற்கு மாம்பலம், அகோபிலமடம் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஸ்ரீ ஓ.ஆர். ராஜகோபாலசாரியார்  என்ற அறிஞர், இந்த இலவசச் சம்ஸ்கிருத வகுப்புகளைத் தொடரந்து நடத்தி வருகிறார். சித்தூர் சம்ஸ்கிருத பாஷா பிரசாரணி சபா நடத்தும் பரீச்சயா, அபிக்ஞா , விசக்ஷணா, ஸமர்த்தா,  கோவிநா போன்ற தேர்வுகளுக்கு மாணவ மாணவிகளைத் தயார் செய்து அனுப்புகிறார்கள். மேலும் எம்.ஏ க்கும் கற்றுத் தருகிறார்கள். மாம்பலம் சம்ஸ்கிருத வித்யாலயாவின் முதல்வர்  ஸ்ரீ ஓ.ஆர். ராஜகோபாலசாரியாருக்கு உதவியாகப் பல அறிஞர்கள் இங்கே பணியாற்றுகிறார்கள்.

தேவபாஷையான சம்ஸ்கிருதத்தைக் கற்றுத் தருகிறோம் என்ற மனநிறைவுதான் இவர்களுக்குப் பெருத்த வருமானம். சென்னைப் பல்கலைக் கழகத்தின் சிரோமணி தேர்வுக்கும் இங்கே கற்றுக் கொடுக்கிறார்கள். இந்த அமைப்பில் படித்துத் தேறியவர்களில் பலர் மாநில முதன்மைப் பரிசும், தங்கப் பதக்கமும் பெற்றிருக்கிறார்கள்.

இந்த அமைப்பில் சேரும்போது “அநுமதிக் கட்டணமாக” ஒரு ரூபாய் வாங்குவதோடு சரி, மற்றபடி எவ்விதக் கட்டணமும் வாங்குவதில்லை.  

      திரு  பிரபுதாஸ்‌ பட்வாரி, தமிழக ஆளுநராக இருந்தபோது வெள்ளி விழாவைக் கொண்டாடினார்கள். மத்திய அரசின் கல்வி போதனை, மாநில உதவியுடன் இந்த வித்யாலயம் செயல்படுகிறது. மேலும்‌ சம்ஸ்கிருதத்தில்‌ பேசும் திறனை வளர்ப்பதற்காக சம்ஸ்கிருத வாக்வர்த்தினி என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள். பலர் மிக அழகாகச் சம்ஸ்கிருதத்தில் தொடர்ந்து ஒரு மணிவரை கணீரென்று பேசுகிறார்கள். “அபிலாஷா” என்ற கையெழுத்துப் பத்திரிகையையும் இந்த வித்யாலயா நடத்துகிறது.

      இந்தச்  சம்ஸ்கிருத வித்யாலயாவின் 36-‌ ஆம்‌ ஆண்டு விழா அண்மையில்‌ நடந்தது. போலீஸ்‌ இன்ஸ்பெக்டர் ஜெனரல் திரு. ஆர்.வி. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். வித்யாலயா காரியதரிசி திரு .எம்.வி. அனந்தபத்மநாபன் யாவரையும் வரவேற்றார். திருமதி லட்சுமி ராதாகிருஷ்ணன். வித்யாலயத்தின் ஆண்டறிக்கையைப் படித்தார்.  

வித்யாலயத்தின் முதல்வர், 1955-ல் ஐந்து மாணவருடன் தொடங்கியது இன்று 50, 500, 5000 என்று வளர்ந்து வந்திருக்கும் சாதனையையும், எல்லா இன மக்களும் சம்ஸ்கிருதத்தை விருப்பத்துடன் கற்றுக்கொள்ளும் நேர்த்தியையும் குறிப்பிட்டார்.

   வித்யாலயத்தின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸா சாரியார் முப்பத்தாறாம் ஆண்டு விழா மலரை வெளியிட்டார். பல தேர்வுகளில் பரிசுகள் பெற்றவர்களுக்குச் சிறப்பு விருந்தினர் திரு. சுப்பிரமணியன் பரிசுகளை வழங்கினார். பரிசு வாங்கியவர்களில் பத்து வயதுப் பாலகன், பாலகி முதல் ஐம்பது அறுபது வயது இல்லத்தரசிகளும் இருந்தனர் என்பதைச் சொல்ல வேண்டும். அப்போது அவர்கள் முகத்தில் விகசித்த பெருமையைப் பார்க்கவேண்டும். சம்ஸ்கிருதத்திலேயே   பேசி நடத்திய கலை நிகழ்ச்சிகளையும் வித்யாலயா மாணவ – மாணவியர் நடத்திக் காட்டினர். 

மகாவிஷ்ணுவின் வாமண அவதார நாடகம் சிறப்பாக இருந்தது. மாணவ-மாணவிகள் தெளிவான உச்சரிப்புடன் உற்சாகமாக  நடித்தார்கள். வில்லுப்பாட்டு நிகழ்ச்சி அமர்க்களமாக இருந்தது. அம்பலத்தில் கொடியேற்றிவிட்டு அறையில் வந்து  பட்டங்களும், விருதுகளும் பெறும் இந்த நாளில் எந்தவித விளம்பரமும் இல்லாமல், யாரிடமும் எந்தவித விளம்பரமும் இல்லாமல், யாரிடமும் எந்தவித உதவிகளையும் எதிர்பார்க்காமல், மாம்பலம் சம்ஸ்கிருத வித்யாலயம் அரும்பணி ஆற்றி வருகிறது.

“கற்க வாருங்கள்; கற்றுத் தருகிறோம்” என்பதே இவர்களின் குறிக்கோள், சம்ஸ்கிருதம் படிப்பதால் என்ன லாபம் கிடைக்கும் என்று எண்ணாமல், அக்கறையுடன் பயிலும் மாணவ – மாணவியரையும் பாராட்ட வேண்டும். ” நாம் பெற்ற இன்பம்   பெருக இவ்வையகம்” என்ற குறிக்கோளே மாம்பலம் சம்ஸ்கிருத வித்யாலயத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குகிறது.

– கண்ணன்