Sri APNSwami’s Shishya Writes | சர்க்கரைப் பொங்கலும் சரணாகதியும்

குறிப்பு: அடியேன் ப்ரசன்ன வரதன், பஹ்ரைன் தேசத்தில் பணிபுரிந்து வருகிறேன். ஆசார்யன் அனுக்கிரஹத்தினாலே, இங்குள்ள 30 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் திவ்யப்ரபந்த ஸத்ஸங்கத்தில் ஒரு அங்கமாக கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருக்கிறேன். அடியேனுடைய  சரணாகதியின் போது ஏற்பட்ட அனுபவங்களையும் ஸ்ரீ APN ஸ்வாமியின் காலக்ஷேபத்தின்போது கிட்டிய ஞானத்தையும் இங்கே பகிர்கிறேன். பிழையிருப்பின் பொருத்தருளப் பிரார்த்திக்கிறேன்.

நமது ஸ்ரீ APN ஸ்வாமி 07-05-2022 சனிக்கிழமையன்று சாதித்த சில்லறை ரஹஸ்யங்கள் காலக்ஷேபத்தின்போது..

“சரணாகதி பண்ணிக் கொண்டால், சர்க்கரைப் பொங்கல் தருவா.. வாங்கோ” என்று சொல்லி ஒருவரை அழைத்துக் கொண்டுபோய், அவரும் சர்க்கரைப் பொங்கலுக்கு ஆசைப்பட்டு ப்ரபத்தி செய்து கொண்டால், எம்பெருமானின் அனுகிரஹத்தாலே அவருக்கு ஸத் சிந்தனை உண்டாகும் / வ்ருத்தியாகும் என்று சாதித்தார். சரணாகதி பற்றி அத்தனை தெரியாத போதிலும் அல்லது அத்தனை விருப்பமில்லாத போதிலும், எம்பெருமானுடைய அனுகிரஹத்தினாலே நமக்கு சரணாகதி நடந்தேறினால், கொஞ்சம் கொஞ்சமாக அதுகுறித்து தெளிவும், சம்ப்ரதாயம், அனுஷ்டானம் இவைகளில் மெள்ள மெள்ளப் பற்றுதலும் உண்டாகும் என்பது உட்கருத்து.

உண்மை.

அடியேன் இந்தியா வரும்போதெல்லாம், தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தாலன்றி, ஆசார்யனை நிச்சயம் சேவித்துவிடுவேன். 2021 ஜூலை மாதம் இந்தியா வந்திருந்தபோது ஆசார்யன் சாதுர்மாஸ்ய விரதத்தை கும்பகோணத்தில் அனுஷ்டித்துக் கொண்டிருந்தார்.

சேவித்துவிட்டு வரலாம் என்று முடிவானபோது, அடியேனின் மாமனார் மாமியார், எங்களுக்கும் ஆசார்யனை சேவிக்க வேண்டும். பரந்யாஸம் செய்துவைக்க வேண்டுமென்று ஆசார்யனை சில வருடங்கள் முன் பிரார்த்தித்தோம். ஆனால் அப்போது ஆசார்யன் அனுக்கிரஹம் கிடைத்திருக்கவில்லை. இந்த முறை கண்டிப்பாக ஆசார்யனிடம் பிரார்த்தித்து சரணாகதி செய்து கொள்ள வேண்டும் என்றனர்.

அவர்கள் பரந்யாஸம் செய்துகொள்ளவும், நாங்கள் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடவும் (ஸ்ரீஸந்நிதியில் ததியாராதனத்திற்கு விண்ணப்பித்திருந்தபடியால்) என, அனைவரும் செல்ல முடிவாயிற்று. ஆசார்யன் மிகப்பெரும் அனுக்கிரஹம் பண்ணப்போகிறார் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை.

அந்த நாளும் வந்தது. காலை உணவருந்திவிட்டு தேனியிலிருந்து கிளம்பினோம். நடுவில் 2 முறை காரும் நாங்களும் இளைப்பாறி, ஆறாமல் சூடாக கொஞ்சம் காபியை நாங்களும் பெட்ரோலை காருக்கும் கொடுத்து சுமார் 8 மணியளவில் கும்பகோணம் அடைந்தோம். நேராக ஸ்ரீஸந்நிதி சென்று ஆசார்யனை சேவித்தோம்.

சாவதானமாக கைங்கர்யபரர்களிடம் பேசிக்கொண்டிருந்த ஆசார்யனிடம், மாமனார் பரந்யாஸத்திற்கு விண்ணப்பித்தார். மறுநாள் 44ம் பட்டம் அழகியசிங்கரின் வார்ஷிக திருவாராதனம் இருந்தபடியால், அதற்கடுத்த நாள் செய்துவிப்பதாய் அவருக்கு ஆசார்யன் அநுக்ரஹம் செய்துவிட்டு, அப்படியே நானும் பிரார்த்தனை செய்யப் போகிறேனோ என்று நான் இருந்த பக்கம் பார்த்தார். அவருக்கா தெரியாது நான் அப்படியொன்றும் முடிவு செய்திருக்கவில்லையென்று…

ஆனாலும், அவருடைய திருவாக்கினின்றும் நான் சரணாகதி பற்றி தெரிந்துகொள்ள அப்படி கேட்டிருக்கிறார். “அழகியசிங்கர் திருவுள்ளம்” என நான் ஏதோ வாய்க்கு வந்ததை உளறிவைக்க, இதுல நான் சொல்றதுக்கு என்னடா இருக்கு? நீ சொல்லு.. என்றார். நான் பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாயிருக்க, “என்னடா விஷயம்” எனக்கேட்டார் ஆசார்யன். மாத்யாஹ்நிகம் திருவாராதனம் எல்லாம் பண்றதில்லை.. இது நான்.

இதையும் அதையும் போட்டு கொழப்பிக்காதடா. இது நித்ய கர்மா.. அது பர சமர்ப்பணம் என்று சொல்லிவிட்டு, மேலும் பரசமர்ப்பணம்-ன்னா என்ன? நாமெல்லாம் யாரு? எம்பெருமானோட குழந்தைகள். இந்த ஜீவாத்மாவை, அந்தப் பரமாத்மா-கிட்ட சேர்த்துக்க வேண்டியும், இந்த ஜென்மாவோட முடிவிலே, நமக்கு மோக்ஷப்ராப்தி கிடைக்க வேண்டியும் பண்ணிக்கற விஷயம். என்ன.. பண்ணிக்கிறாயா? அதே வாத்சல்யத்துடன் அன்பான குரலில் கேட்டார்.

எத்தனை பேருக்கு கிடைக்கும் இப்படியொரு ஆசார்ய கடாக்ஷம்?  அப்போதும் கூட என் மந்தபுத்திக்கு அது எட்டவில்லை. ஆனாலும், என்னையறியாமல் என் வாய் “அழகியசிங்கர் உத்தரவு” என்று சொன்னது.

நாங்கள் பதிவு செய்திருந்த ததியாராதனம் மறுநாள் 44ம் பட்டம் அழகியசிங்கரின் வார்ஷிக திருவாராதனம் அன்று வாய்க்கப்பெற்றது எத்தனை பெரிய பாக்கியம்.. அதற்கடுத்த நாள் எங்களுக்கு பரந்யாஸம் செய்துவித்தார் ஆசார்யன். அதன் ஏற்றம் அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை என்பதே ஸத்யம்.

அதற்கடுத்த சில நாட்களில் மைசூரு அஹோபில மடத்திலிருந்து ஸ்ரீ APN ஸ்வாமியின் காலக்ஷேபம் ஏற்பாடு செய்கிறோம். விருப்பமிருப்பவர்கள் கலந்துகொள்ளலாம் என்று மின்னஞ்சல் வந்தது.  உடனே விருப்பம் உண்டென்று பதிவு செய்துவிட்டேன்.

வந்திருந்த நூற்றுக்கணக்கான பெயர் லிஸ்ட்டில், என் பெயரை ஸ்ரீ APN ஸ்வாமி டிக் அடித்தது, என் அதிர்ஷ்டமே. அதிலும், இந்த காலக்ஷேபம் மூலம் என்போன்ற ஒரு வாழைமட்டையின் காதில் நாலு ஸத் விஷயம் விழவேண்டி ஆசார்யன் செய்த அனுக்கிரஹமே என்றால் மிகையல்ல.

காரணமில்லாமல் காரியமில்லை என்று சொல்வதற்கேற்ப, சில பல நாட்களுக்கு முன்னர் “வந்தே வத்ஸ விபூஷணம்” என்ற 3 நாள் ஒர்க்-ஷாப்பில் “ஸமாச்ரயணமும் சரணாகதியும்” என்ற ஒரு தலைப்பில் பல ஞானவான்களின் உபதேசம் நடந்தேறியது. இது காரியம்.

காரணம் – பகவத் ராமானுஜரின் 1005வது திருநக்ஷத்ர வைபவத்தில் அடியேனை உபன்யாஸம் பண்ண வேண்டுமென்று பஹ்ரைன் திவ்யப்ரபந்த ஸத்ஸங்கப் பெரியோர்கள் பணிக்க, தலைப்பு என்னவென்று நான் கேட்க, “ஸமாச்ரயணமும் சரணாகதியும்” என்று பதில் வந்தது.

அடியேனுக்கு ஸமாச்ரயணம் சில பல வருடங்களுக்கு முன்னமே நடந்திருந்தாலும், இந்த ஒர்க்-ஷாப் மூலமாகத்தான் பஞ்சஸம்ஸ்காரத்தின் விளக்கம் புரிந்தது. போலவே, சரணாகதி என்றால் “அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்” என்ற ஒற்றை வரியை தவிர வேறொன்றும் தெரிந்திருக்காத நிலையில், சரணாகதி என்றால் என்ன, அதை எப்படி எப்போது யார் செய்துகொள்ளவேண்டும் என்றெல்லாம் அத்தனை எளிமையாக எனக்கும் கூட புரியும் அளவுக்கு நடந்தேறியது “வந்தே வத்ஸ விபூஷணம்”.

இது நமது ஸ்ரீ APN ஸ்வாமியின் அனுக்கிரஹமே என்றால் மிகையல்ல.

ஆசார்யன் திருவடிகளே  சரணம்

ஸ்ரீ APN ஸ்வாமியின் காலக்ஷேப சிஷ்யன்

அடியேன் தாஸன்

ப்ரசன்ன வரதன் – பஹ்ரைன்
16-May-2022