Sri APNSwami’s Shishya Writes | ஸ்ரீவைகுண்டத்தில் கண்டாவதாரம் – வைகுண்டவாசிகளின் விமர்சனம்

ஸ்ரீ:

ஸ்ரீவைகுண்டத்தில் கண்டாவதாரம் – வைகுண்டவாசிகளின் விமர்சனம்  –Special Review by நித்ய முக்தர்கள்

இக்கட்டுரையின் முதற்பகுதி – https://apnswami.wordpress.com/2020/02/11/ghantavatharam-screening-at-srivaikuntam/

மஹாவிஷ்ணுவின் விருப்பத்தின்படி, ஸ்ரீவைகுண்டத்தில்,  திருமாமணிமண்டபத்தில்,  மதி நிறைந்த நன்னாளில், விண்ணகரம் முழுக்க தேசிய கீதத்துடனும், தேசிக கீதமான கண்டாநாதம் முழங்க, கண்டாவதாரம்  திரையீடு SARAN சேவகர்களினால் இனிதே நடந்தது.

கௌஷீதிகி உபநிஷத், ஆழ்வார் ஆசார்யர்  ஸ்ரீஸூக்திகளிலும், கத்யத்ரயத்திலும்,  சுவாமி தேசிகனின் ஸ்ரீஸூக்திகளிலும் வர்ணிக்கப்பட்டபடி வைகுண்டத்தின் பெருமையைக் கண்ட SARAN சேவகர்கள் ஆச்சர்யப்பட்டார்கள், ஆனந்தத்தப்பட்டார்கள்.  APN சுவாமி காலக்ஷேபத்தில் சாதித்ததை அவ்வப்போது நினைவு கொண்டும், அங்கே அவர் மூலமாகவும் விளக்கம் பெற்றும், ஸ்ரீ புரிசை சுவாமி உட்பட வைகுண்டத்திலிருந்த அனைத்து ஆசார்யர்களை ஸேவித்தும், பாக்கியமடைந்தனர்.

திருமாமணி மண்டபத்திலிருந்த நித்ய முக்தர்களை  SARAN சேவகர்கள்  பேட்டி எடுத்தனர்.

முதலில் பேச ஆரம்பித்த அனந்தன், “திரைக்கதையைச்  சொல்வதா?  சதீஷின்  இன்னிசையில் லயித்தத்தை விவரிப்பதா? சுதர்சனின் Cinematographyயைச்  சொல்வதா? ஜித்துவின் Editing நுணுக்கங்களைப்  பற்றி விவரிப்பதா?   அழகாக பாடியவர்களை புகழ்வதா?  திருமால் கவிச்செல்வர் ரகுவீரபட்டாசார்யரும் APNனும் இயற்றிய அழகிய தமிழ் பாடல்களைப் பாராட்டுவதா? Art Directionனை  வர்ணிப்பதா? திரையில் நடித்துள்ளவர்களைப் பற்றி பாராட்டுவதா? இல்லை திரைக்குப் பின்னால் பங்காற்றியவர்களைப் பற்றிப்  புகழ்வதா? வியாபார நோக்கமற்ற இலவச திரையீட்டைப் பாராட்டுவதா? எங்கு ஆரம்பிப்பது என்றே தெரியவில்லையே!” என்று திண்டாடியவர்….

“எனக்கு ஆயிரம் நாக்குகள் இருந்து என்ன ப்ரயோஜனம்? நம் திருமணியின் ஒரு நாக்கு அனைத்து லோகத்திலும் கண்டாநாதமாக ஒலிக்கிறதைக் கண்டு மிகவும் ஆனந்தமாக இருக்கிறது…”  என்று திருமணி ஆழ்வாரின் தோளில் கை போட்டுக்கொண்டே அழகாக அனந்தன் பேட்டிக் கொடுத்தார்.

அவருடைய அந்த கருத்தை ஏற்பது போல் திருமணி ஆழ்வானும்  மெலிதாக “டிங்..” என்று  நாதம் செய்தார்.

“இப்படி ஒரு எண்ணம் APNனுக்கு எப்படி வந்தது? இது மிகவும் போற்றத்தக்கதே!” என்று ஆரம்பித்த பெரிய திருவடியாம் கருடன்  தொடர்ந்து,  “நான் பெருமாளுடன் பல அவதாரங்கள் எடுத்துள்ளேன்.  எப்பொழுதும் அவசரம், ஆர்ப்பாட்டம் தான்.  நான் அவரை சுமக்கிறேனா? இல்லை அவர் என்னை சுமக்கிறாரா? என்று  புரிவதற்குள் அந்த அவதாரமே முடிந்துவிடும்.  ஆனால் கண்டாவதாரத்தில்  மூன்று முறை வெவ்வேறு ரூபத்தில் அவதாரம்.  நிஜ ரூபத்துடன் வேங்கடநாதனுக்கு அருள் புரிய  திருவயிந்தையிலும்,  , பறவையாக தேசிகனைக்  காப்பாற்றியதும், பகவானை சுமந்து பழகியவனை அற்புதமாக எழுத்தாணி சுமந்து நிஜமாகிய நிழலாக ஒரு ஜாமத்தில் கவிஸிம்ஹம் பாடிய பாதுகா ஸஹஸ்ரத்தை  பட்டோலைப்படுத்தவும் ……..  Wow… அங்கு தான் Director APN நிற்கிறான். “  என்று கூறிய படியே அடுத்த வேலைக்குப் பறந்து விட்டார்.

அவரைத் தொடர்ந்து,  “நித்ய மண்டலத்தில் உள்ளோமா? இல்லை பூலோகத்தில், கலியுகத்தில்  திராவிட தேசத்தில் அவதரித்துள்ளோமா?” என்ற ஐயத்துடன்  பேச ஆரம்பித்தார் நித்ய சூரிகளின் தலைவன் சேனைமுதலியார்.

“அற்புதம்! அற்புதம்!  எனக்கு, அந்த காலத்து உத்சவ காலங்களில்,  வீதி சோதனைக்குச் செல்லும் ஞாபகம்தான்  வந்தது.  கிராமங்களே காணாமல் போன நிலையில்,  750 வருடத்திற்கு முன்னர் இருந்த கிராமங்களில் வாழ்ந்தது போல்,  தத்ரூபமாகப் படமெடுத்துள்ளீர்களே!  Mobile Phone Tower, Wires, குழாய்கள், Electric light கம்பம்,posters என இக்காலத்து பொருட்கள் எதுவும் தென்படவில்லையே!  ராஜபாட்டை(highway) போன்ற சுத்தமான  பெரிய வீதிகள், அன்றிருந்தது போல் இருந்ததைக்  கண்ட என் ஆனந்தத்திற்கு அளவே இல்லை!  Great Choice of Locations…  கிராமங்கள்தோறும் கண்டாவதாரம் முழங்க வாழ்த்துக்கள்…….”   என்று ஆச்சர்யத்தில் ஆழ்ந்தபடி ஆசி வழங்கினார்.

அனந்த, கருட,விஷ்வக்சேனர்களைத் தொடர்ந்து,  “தூப்புல் வந்துதித்த புனிதன் அவன் …” என்று அம்ருதவர்ஷிணி  ராகத்தில் பாடிய படி வந்தனர் சுதர்சன பாஞ்சஜன்யர்கள்.   “உடல், திருச்சின்னம் மட்டுமே வாத்யங்களாக  கொண்ட ‘அத்திகிரி அருளாளப் பெருமாள் …’ பாடலைக் கேட்க, அத்திவரதன் மீண்டும் வந்தாலும் ஆச்சர்யமில்லை! உள்ளத்தை உருக்கும் வாத்தியமன்றோ!“ என்றனர்.

அப்பொழுது “உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெத்திலை எல்லாம் கண்ணன்” என்றிருந்த நம்மாழ்வார்,  அந்த மாயக் கண்ணனையும் மறந்து, கண்டாவதாரத்தினால்  மூர்ச்சை அடைந்திருந்தார்.  எப்பொழுதும் போல், மதுரகவியாழ்வார்  அவரை தெளிய வைத்தபின், கண்களில் நீர் பெருக பேட்டி கொடுத்தார் நம்மாழ்வார் – “எதை சொல்வது, எதை விடுவது?  இருப்பினும்…. ஜடாயுவிற்கு ராமன் மோக்ஷம் அளித்தது போல்,  தேசிகன் அரங்கனுக்காக கட தீபம் ஏந்தி நர்த்தகிக்கு சரணாகதி செய்து வைத்து மோக்ஷம் அளித்தானே!  அதுவன்றோ நம் ஸ்ரீஸம்ப்ரதாயம்! இந்த சரணாகதி தத்துவத்தை கற்றுக் கொடுக்கவே கலியுகத்தில் நாம் நாதனுக்குக் காட்சியளித்தோம்.   என் உள்ளத்திலிருந்த அவா நிறைவேறும் என்பதில் ஐய்யமில்லை.  சரணாகதியின் பெருமையினால் “வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!”  என்பது உறுதி.”  என்று சந்தோஷமடைந்தார்.

அங்கிருந்த கடைக்குட்டி திருமங்கையாழ்வார் “’ஆடல் மா’ என்னும்  என் குதிரை மீதேறி நான் திவ்யதேச யாத்திரை செய்ததுண்டு.  இன்று கண்டாவதாரத்தினால் பல திவ்யதேசங்சங்களின் அர்ச்சா எம்பெருமான்களைக்  காணும் பாக்கியம் பெற்றேன். ” என்று கூறியவுடன்,

“கலியனே! தேவரீர்  பூவுலகத்திலிருந்து விடைபெற்ற போது திவ்ய தேச எம்பெருமான்களைப்  பற்றிப் பாடியது போன்றே, கலியன் உரை குடி கொண்ட கருத்துடையோனான தேசிகன் வைகுந்தம் செல்வதும் மிகவும் ரசிக்கத் தக்கதாக இருந்தது.” என்று நாதமுனிகள் கூற, அங்கிருந்த ஆழ்வார்களும்  ஆசார்யர்களும் “ஆம்.” என்று கொண்டாடினார்கள்.

“அது மட்டுமல்ல, கலியன் ஆரம்பித்த  அத்யயன உத்சவம், வெகு சிறப்பாக நடக்கத் தொடங்கியதைக்  கண்டு மிகவும் ஆனந்தமடைந்தேன்.  ஹும்! திருவரங்கத்தில்   அத்யயன உத்சவம்  இன்றும் நடக்கிறதே! …………………….” (ஏதோ மனக்குறையை நாதமுனிகள் கொண்டுள்ளார் போல் தோன்றுகிறது!)  

அப்பொழுது, அங்கு எம்பெருமானின் ஐந்து தேவிகளும் வந்து, பேட்டியில் கலந்துகொண்டனர்..

பாதுகா தேவி: “தயா தேவியே! உலகோர் நம் இருவரையும் இன்று வரை நினைத்துக் கொண்டுள்ளனர் என்றால் அதற்கு ஒரே காரணம், நம்மை பற்றிப் பாடிய நம் தூப்புல் வேங்கடநாதன் தான்.  கண்டாவதாரத்தில் நம் இருவரையும் கதாபாத்திரமாக பார்க்கும் போது, மக்கள் நெகிழ்ந்து தான் போகிறார்கள்!”

தயா தேவி: “பாதுகா ஸஹஸ்ர உத்ஸவத்தின்  மூலமாக பாரெங்கும் பாதுகா ஸஹஸ்ரத்தை பரவச் செய்த APN, தற்பொழுது கண்டாவதாரத்தில் பாதுகா தேவியின் படைப்பைப்  பாரெங்கும் பரவச்செய்தது மிகவும் பாராட்டுக்குரியது.”

நீளா தேவி:  “பூமி தேவியே! தாங்கள் தான் பொறுமையின் ஒரே இருப்பிடம் என்று நினைத்தேன். ஆனால் தேசிகனின் தேவிகளைக் கண்டவுடன் பொறுமையின் மற்றொரு வடிவையும் அறிந்தேன்.”

பூமி தேவி:   “ஆம் நீளை. நீ சொல்வது சரி தான்.  நானும் கோதா தேவியான உன்னுடைய ஸர்வ மங்களத் தன்மையும் திருமங்கையிடம்  கண்டேனே! ஆன்மீகத்துடன் கூடிய ஆரோக்யமான வாழ்வுக்கு, இம்மாதரசியின் வாழ்க்கையே எடுத்துக்காட்டு. ”

ஸ்ரீதேவியும்  அவர்களுடன் சேர்ந்து,  ” ஆம்! இந்த வருடம் வைகுண்டத்தில் நடக்கும் மகளிர் தின விழாவிற்குச் சிறப்பு அழைப்பாளராகத்  திருமங்கா தேவியை அழைத்து, கௌரவிப்பதாகத் தீர்மானித்துள்ளோம்.” என்று ஒரே குரலில் ஐவரும் கூறினார்கள்.

ஐந்து தேவிகளின் தீர்மானத்தைக் கேட்ட ஸ்ரீநிவாசன்  “நான் தான் திருவேங்கடமுடையானாக அவதரித்தேன். அதை மறந்து விட்டுப் பேசாதீர்கள்!” என்று கூறினார்.

அப்பொழுது அங்கிருந்த ஒரு முக்தர், “லட்சியம்னா இது தாண்டா லட்சியம் …….”  என்று  கண்டாவதார Punch Practice செய்து காண்பித்தார்.  கார்ய வைகுண்டமே சிரிப்பில் ஆழ்ந்தது.

அதனை ரசித்த பெருமாளும் பிராட்டியும் பேட்டியைத் தொடர்ந்தனர்.

பெருமாள்:  கஞ்சத் திருமங்கையே! Ladies First  என்றார்.

பிராட்டி : “பிரபோ!  கடினமான வேலை என்றால் என்னை முதலில் அனுப்புவது உங்கள் வழக்கமாகிவிட்டது .  தேசிகனைப்  புகழ்வதே  கடினம்.   தேசிகனின் கண்டாவதாரத்தைப் புகழ்வது  எளிதல்லவே!”

பெருமாள் : ஆம் தேவி…. நீ சொல்வது சரி தான்.  நீ அளித்த பொற்காசுகளைப் புழுவாகத் தள்ளியதை என்னவென்று புகழ்வது?  நடிகர்கள் கண்களிலேயே வைராக்கியத்தைக் காட்டினர்.  நடித்தார்களா? வாழ்ந்தார்களா? வியக்க வைக்கும் காட்சி அது!!.

பிராட்டி :  ஆம் பிரபோ! பூலோகத்தில் இந்தக் காட்சியைக் கண்ட பல இளம் சிறுவர்களும், சிறுமியர்களும், தாங்கள் வைராக்யத்துடன் Materialistic life இல்லாமல் வாழ வேண்டும் என்று resolution எடுத்துள்ளனராம்.

பெருமாள் : கலியுகத்தில் இப்படி ஒரு நல்ல செய்தியா?

பிராட்டி: “ஹயக்ரீவன், ந்ருஸிம்ஹன், வேங்கடவன், தேவநாதன், வரதன், செல்லப்பிள்ளை, அரங்கன் என தங்களின் பல அவதாரங்ளை, தாங்கள் ரசித்ததை அடியாளும் ரசித்தேன் சுவாமி”

பெருமாள் :  ( சிரித்தபடி)  ஓ! கவனித்து விட்டாயா?

பிராட்டி:  “அன்று ராமாவதாரத்தில் ராமனாக, சூர்ய குலத்தின் மூர்த்தியான ரங்கநாதனை,  நீங்கள் ரசித்துத் திருவாராதனம் செய்ததை அடியாள் சீதையாக ரசித்தேன்.  கண்டாவதாரத்தில் இவ்வளவு அர்ச்சாவதார எம்பெருமான்கள் தோன்றும் போது ரசித்துப் பார்த்தீர்கள். நான் அதை கண்டு ரசிக்காமல் இருப்பேனா?.”

பெருமாள் : “ஆம் தேவி.  இருந்தாலும், எங்கே இந்த அர்ச்சாவதாரப் பெருமான்கள், தேசிகனை பூலோகத்திலேயே தங்க வைத்துவிடுவார்களோ! என்ற அச்சம் கூட இருந்தது. “

பிராட்டி : “போதும் போதும்……இது நித்யவிபூதி வந்தடைந்த தேசிகனின் சரிதம் என்று மறந்தீர்களா?  Cricket highlights பார்ப்பது போன்று நீங்களும்…………….. ”

பெருமாள்: “ஆமாம்! மறந்தே போனேன்!”  என்று அசட்டுத் தனமாக ஸர்வஞன் சிரித்தான்.

திவ்ய தம்பதிகள் ரசித்ததை ரசித்த, நாதமுனிகள், ஆளவந்தார், ஸ்ரீபாஷ்யகாரர் மற்றும் அனைத்து ஆசார்யர்களும் “தேசிகனை வளர்த்ததனால் பயன் பெற்றோம்” என்று ஆனந்தம் அடைந்தனர்.

சுவாமி ராமானுஜர் தேசிகனுக்கு நான் வாழ்ந்த காலத்தில் வாழவில்லை என்ற குறை இருந்தது.  அதை அனைத்தையும் இந்த கண்டாவதாரம் தீர்த்தது. “

ஆளவந்தார்: “இளையாழ்வாராக, என் மூன்று ஆசையை நிறைவேற்றிய, உன் ஆசையும் கண்டாவதாரம் மூலம் நீங்கியது என்று சொல். ”

ராமானுஜர்: “ஆம் சுவாமி!”  என்று அவரை அடிபணிய,

ஆளவந்தார்: ” ஸ்ரீபாஷ்யக்காரரே! உமக்குப் பிறகு நம் சம்பிரதாயத்திற்கு ஆணிவேராக இருந்து, அரங்கனுக்குக் கல் திரை எழுப்பி,  நீ எழுதிய ஸ்ரீபாஷ்யத்தின் விளக்கமான  ச்ருதப்ரகாசிகாவை, பிணக் குவியல்களுக்கு நடுவில் சிரமம்பட்டு காப்பாற்றி, ஸத்யாகாலத்தில் தவம் புரிந்த, நம் கவி தார்க்கிக சிங்கமான தேசிகனின் அந்த செயல்களைக் கண்டு மெய் சிலிர்த்து விட்டது. அரங்கத்திற்கு அன்று ஸ்ரீரங்கஸ்ரீயை தேசிகன் மூலம் பெற்றுக்கொடுத்த ஸர்வேச்வரன், இன்று அரங்கம்  மீண்டும் பொலிவு பெற விரைவில் ஸங்கல்பிக்க வேண்டும் என்பதே இப்பொழுது அடியேனுக்கு இருக்கும் ஒரே விண்ணப்பம்!” என்று நா தழுதழுக்க உரைத்தார்.

அப்பொழுது SARAN சேவகர்கள், ஆசார்யர்களை அனுகிரஹபாஷணத்திற்காகப் ப்ரார்த்தித்தனர். அனைத்து ஆசார்யர்களும் ஒரே குரலில்  “எங்கள் அனைவரின் அனுகிரஹமும் வடிவெடுத்து வந்த வேங்கடநாதனே உங்களுக்கு அருளாசி வழங்குவார்.” என்று கூறினர்.

திவ்யதேசங்கள் அனைத்திலும் தனித்தனியாக தேசிகனின்  அர்ச்சாவதாரத்தை ரசித்து ஸேவித்துள்ள APN சுவாமியும், SARAN சேவகர்களும், தேசிகனின்  அனைத்து அர்ச்சா மூர்த்திகளின் அழகு ஒன்று திரண்டு இருந்தது போல் விளங்கிய தேசிகனின் திவ்ய தேஜஸில் தங்களையே மறந்தனர்.  அதுவரை கண்டாநாதம் ஒலித்த அந்த திருமாமணிமண்டபத்தில் ஒரே அமைதி.

சுவாமி தேசிகன் ஆசார்யர்களின் நியமனத்தை ஏற்று, அவர்களைப்  பார்த்து கை குவித்துப்  பேசத் தொடங்கினார்.

தேசிகன்:  “ஸம்ப்ரதாய, அனுஷ்டாந,  ரக்ஷண, அபிமானம் உடைய சரன் ( SARAN – Sampradaya Anushtana Rakshana AbhimaN ) சேவகர்களே!  உங்களின் இந்தத் தன்னலமற்றத்  தொண்டைக் கண்டு அடியேனுக்கு மிகவும் மகிழ்ச்சி.  ஆனால், ‘இது வெறும் ஆரம்பமே!’ என்று நீங்கள் புரிந்து செயல்பட வேண்டும்.  நம்முடைய சரணாகதி சாஸ்திரம் மக்களிடையே இன்னும் பிரபலமாகவில்லை. ப்ரபத்தியைக்  கண்டு பயப்படுபவர்களே அதிகமாக உள்ளனர். அவர்களைத்  தெளிவு படுத்தவும்,  சாஸ்திரத்தின் பெருமையை பிரச்சாரம் செய்யவும், சாஸ்திரத்தின் வழியில் Digital Media போன்ற நவீன யுக்திகள் துணை கொண்டு நீங்கள் முயற்சிக்க வேண்டும்.  பெருமாளிடம் சரணாகதி செய்யும் அனைவருக்கும் மோக்ஷம் என்னும் உயர்ந்த கொள்கையை, உலகோரிடம்  எடுத்துச் செல்வதே உங்களின் தலையாய பணியாகும்.  ஆசார்யர்னிடம்  ஸம்பிரதாய நுணுக்கங்களை அறிந்து, அதை பாமரனும் அறியும் வண்ணம் கிராமங்கள் தோறும், பாரெங்கும் பல மொழிகளில்  எடுத்துச் செல்ல வேண்டும். மதம் மாற்றும் கும்பலான  கொடிய அரக்கர்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் தண்டகாரண்ய மஹரிஷிகளைப் போன்ற சாதுக்களான மக்களை ரக்ஷிக்க, ராம பாணமாக SARAN சேவகர்கள்  நீங்கள் செயல்பட வேண்டும். மேன்மேலும் வளர்க உங்கள் தன்னலமற்ற கைங்கர்யம்.”  என்று  அனுகிரஹித்தார்.

அப்பொழுது, ஏனைய ஆசார்யர்களும் “ஆமாம்.” என்று ஆமோதித்தனர்.

தேசிகனின் நியமனத்தை ஏற்ற  APN சுவாமியும், SARAN சேவகர்களும், தொண்டர் உகக்கும் …..” என்று தமிழில் பல்லாண்டு பாடி அனைத்து ஆசார்யர்களிடமும் விடைபெற்றனர்.

அங்கிருந்த நித்ய முக்தர்கள் மீண்டும் கண்டாவதாரம் பார்க்கும் ஆவலைத் தெரிவிக்க, அதற்கு சுதர்சன பாஞ்சஜன்யர்கள் “கவலையே வேண்டாம்…  பூலோகம் போல் இங்கும் Repeat audience அதிகம் இருப்பதினாலேயே நமக்கு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த திரைப்படத்தைக்  கண்டு களிக்கலாம். என்ன சரி தானே!” என்று கூற, SARAN சேவகர்கள் பவ்யமாக தலையசைத்தார்கள்.

அதன் பின் நித்ய முக்தர்கள் அனைவரும் SARAN சேவகர்களுக்குப்  பிரியா விடையளித்தார்கள்.  நாரதரும் ஸ்ரீநாரஸிம்ஹா, ஸ்ரீநாரஸிம்ஹா……”  என்று கண்டாவதார styleலில் நாமஸங்கீர்த்தனத்தைத் தொடர்ந்தார்………பூலோகம் வந்த APN சுவாமியும், SARAN சேவகர்களும்  தேசிகனின் நியமனப்படி, அடுத்த Sampradaya Project வேலைகளில் busyயானார்கள்.

பிழைகள் இருப்பின் க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

இப்படிக்கு,
அடியேன்
ஸ்ரீரஞ்ஜனி  ஜகந்நாதன்
SARAN Sevak & Sri APN Swami’s Kalakshepa Shishyai
21-பிப்ரவரி-2020 BSD ( Bhuloka Standard Date)

Sri APNSwami’s Shishya Writes | ஸ்ரீவைகுண்டத்தில் கண்டாவதாரம்

ஸ்ரீ:

ஸ்ரீவைகுண்டத்தில் கண்டாவதாரம்

நாரதர் பாடிக்கொண்டே வேதம் என்னும் கூட்டில் வாழும் வைநதேவனே!……..” என்றவர் பெருமாளைக்  கண்டதும் நிறுத்துகிறார்.

பெருமாள்:  என்ன நாரதா? ஸ்ரீவைகுண்டலோகம் பக்கம் உன்னைக் கண்டு வெகு நாட்கள் ஆகிவிட்டது ? எங்கு சென்றாய்? அதென்ன புதியதான ஒரு பாடலைப் பாடிக் கொண்டிருக்கிறாய் ?

நாரதர்:  அது வ…ந்…து… அ…து… வ…ந்து…. (என தயங்குகிறார்.)

பெருமாள்:  என்ன தயக்கம்? ஏன் இந்த தடுமாற்றம்? தயங்காமல் சொல்.

நாரதர்:  பூலோகத்திற்கு கண்டாவதாரம் காணச் சென்றிருந்தேன்.  ஆஹா ! ஆஹா! அற்புதம்! மஹா  அற்புதம்! அதிலிருந்து ஒரு பாடலைத்தான் பாடினேன்.

பெருமாள்: ( திகைப்புடன்) தசாவதாரம், அம்சாவதாரம், ஆசார்யாவதாரம் என இதெல்லாம் தெரியும்.  அதென்ன கண்டாவதாரம் ?

நாரதர்:  ஸர்வஜ்ஞனே! இது தெரியாதா உனக்கு. பூலோகம் ஒரே அல்லோலப்பட்டுக்  கொண்டிருக்கிறது.

(அதற்குள் ஸ்ரீதேவி உள் நுழைந்து,  அலுப்புடன்)

நானும் ஒரு வாரமாக இவரிடம் (பெருமாளைக் காண்பித்து) இது குறித்து பேச வேண்டும் என்று இருந்தேன்.  என்ன செய்வது? எப்போது பார்த்தாலும் லோக அலுவல்கள்.  அதாவது பதினான்கு லோகங்களின்  பரிபாலனமே,  சரியாக உள்ளதால்,  மாய்ந்து, மாய்ந்து அனைவரிடமும் பேசும்  உங்கள் சுவாமிக்கு என்னிடம் மனம் விட்டுப் பேச நேரம் தான் ஏது?  ஏதாவது கேட்டால் சிரித்துக் கொண்டே சென்று விடுகிறார். ( அலுத்துக் கொள்கிறார்).

பெருமாள்: (பதறிக்கொண்டே…) நாரதா! இவள் வேறு அலுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டாள். நீயும் சேர்ந்து கொண்டால்……….. ஐயோ! என் நிலைமை மோசமாகிவிடும்.  முதலில் அதென்ன கண்டாவதாரம்.  அதைச்  சொல்.

பிராட்டி:  நம் தூப்புல்  குலமணியின் அவதாரமே “வேதாந்த தேசிகனின்  கண்டாவதாரம்” என நகைக்கிறாள்.

பெருமாள்: (ரோஷத்துடன் ) என்ன விளையாட்டு  இது? தேசிகன் தான் கண்டாவதாரம் என்பது எனக்குத் தெரியாதா? திருவேங்கடமுடையானாகிய எனக்கே லட்டா!

நாரதர்:  சாந்தம், சாந்தம் வாசுதேவா! இதோ விண்ணப்பிக்கிறேன்.  தேசிகனின் திவ்ய சரித்திரம் தற்பொழுது தமிழில் முழுநீளத்  திரைப்படமாக தயாரிக்கப்பட்டு, உலகமெங்கும் வெற்றி நடைபோடுகிறது. அந்த திரைப்படத்தின் பெயர் தான் “வேதாந்த தேசிகன் கண்டாவதாரம்.

கருத்மானும், ஆதிசேஷனும் வந்துகொண்டே ……

என்ன மாதிரியான காட்சி அமைப்புகள், என்ன மாதிரியான இசை அமைப்பு, ஒளிப்பதிவு, பாடல்கள், ஒப்பனை, ஆஹா!  ஆஹா!  இதெல்லாம் Super Super என புகழ்கின்றனர்.

ஆதிசேஷன்:  வைநதேயா!  நீ கூறுவது முற்றிலும் உண்மை.  எனது ஆயிரம் தலைகளையும் படமெடுத்து, விரித்து ஆஹா! ஆஹா! என்று எத்தனை முறை ஆட்டினாலும் எனக்கு ஆனந்தம் தீரவில்லை.

பிராட்டி: (சிரித்துக்கொண்டே)  அனந்தன் எடுத்த படத்திற்காக, அனந்தன் நீ ஆயிரம் படம் எடுக்கிறாய்.   (அனைவரும் சிரிக்கின்றனர்.)

பெருமாள்:  (பொறுமையிழந்து) ஸர்வஜ்ஞநான   என்னைத்  தவிர்த்து எல்லோரும், எல்லாவற்றையும் அறிந்து வைத்துள்ளீர்கள்.  அது என்ன தான் படம்? விளக்குங்களேன்.

(என அழுத்திச் சொல்கிறார்)

(நாரதர் படத்தின் அனைத்து செய்திகளையும் விரிவாக கூற கூற பெருமாளின் திருக்கண்கள் மேலும் வளர்ந்து, விரிந்து ,அகன்று, ஆனந்தம் அடைகின்றன.)

பெருமாள்: ஆஹா! ஆஹா!  இஃதன்றோ ஸம்ப்ரதாய கைங்கர்யம்.  திரைப்படம் படைத்தவனுக்குப் பாராட்டுக்கள்.

வைநதேயன்:  இது தனி ஒருவனின் தவம் அல்ல.  தன்னலமற்றத் தொண்டு புரியும் சரன்(SARAN) சேவகர்களின் தன்னிகரற்ற கைங்கர்யம்.

பெருமாள்: அது என்ன சரன் சேவகர்கள்?

நாரதர்ஸம்ப்ரதாய, அனுஷ்டாந,  ரக்ஷண, அபிமானம் உடையவர்கள் சரன்(SARAN – Sampradaya Anushtana Rakshana AbhimaN) சேவகர்கள்.

பெருமாள்: பலே! இப்படியும் ஒரு சபை சத்தமில்லாமல் இயங்குகிறதா?

ஆதிசேஷன்:  அதை வழி நடத்துபவன் அனந்தன் – அனந்தபத்மநாபன்.

வைநதேயன்: ஏ.பி.என் என்று கூறும்.

பெருமாள்: அதென்ன ஏ.பி.என்?

பிராட்டி:  வேறென்ன அனந்தபத்மநாபனது பெயரைச்  சுருக்கி மக்கள் அன்போடு அழைப்பது தான் ஏ.பி .என்.

 (பெருமாள் ஒரு முறை உச்சரித்து பார்க்கிறார். ஏ. பி .என் என்று.)

 பெருமாள்: நன்றாகத் தான் இருக்கிறது. (ரசிக்கிறார்…….)

நாரதர்:  பாஞ்சஜன்யம் ட்ரஸ்ட் இதனை ஒரு வியாபார நோக்கமற்ற திரைப்படமாக தயாரித்துள்ளது. இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில், நூற்றுக்கணக்கான திரையீடுகள் நடைபெற்றுள்ளன.  எல்லா இடங்களிலும் Blockbuster தான் இப்படம்.  நான் இதுவரை ஐந்து  முறை பார்த்தேன். பார்த்தேன் என்பதைவிட மூழ்கித்  திளைத்தேன்.

பெருமாள்:  என்ன! எல்லா நகரங்களிலும்,  Non-Commercial  சினிமாவா!

பிராட்டி :  ஆம் ப்ரபோ! தேசிக பக்தியே  சிறந்த செல்வம் என உணர்ந்த SARAN சேவகர்கள்,  APNனின் செயல் திட்டத்திற்கு வடிவம் கொடுக்கின்றனர்.  அவர்களின் தன்னலமற்ற மனோநிலையைப் புரிந்துகொள்ள ஹ்ருஷீகேசனான உன்னாலும் தான் முடியாது! (என நகைக்கிறாள்)

வைநதேயன்: நானும், ஆதிசேஷனும், சுதர்சன, பாஞ்சஜன்யர்கள்  கூட இதுவரை பலமுறை அத்திரைப்படம் பார்த்தோம்.  அலுப்பு தட்டவே இல்லை.  அடடா! அடடா! என்ன ஒரு Super படம்.

பெருமாள்:  ஒரு சாமானிய உபன்யாசகன்  படம் எடுப்பதா ? அதுவும் non-commercial.  சரி,  இது குறித்து எந்த செய்தியும் NEWSல் வரவில்லையே!

நாரதர்:  அது எப்படி வரும்? அவர்கள் தான் பெரிய நடிகர்களின் ரெய்டிலும், தோல்வி அடைந்த படத்தின் விமர்சனத்திலேயே  காலம் கழிக்கின்றனரே!   ஸம்ப்ரதாய படத்தை குறித்து விமர்சித்து பாராட்ட அவர்களுக்கு ஏது நேரம்?

ஆதிசேஷன்:  சீனிவாசன், கருடன், ஹயக்ரீவன், ந்ருஸிம்ஹன் ப்ரத்யக்ஷம் முதலான Scenes…. Super Scenes. அதிலும் சதீஷின் Music,  நம்ப சரன் சேவகர்கள் நடிப்பு ப்ரமாதம்.  பழமையான காலத்திற்கேற்ப ஒலிப்பதிவு Super o Super.

நாரதர்: “ஸ்ரீரங்கநாதா…. சரணம்… சரணம்….” எனப் பாடுகிறார். (அனைவரும் மெய்மறந்து ரசிக்கின்றனர்.)

பெருமாள்:  எல்லாரும் பார்த்தாகிவிட்டது. நான் மட்டும் தான் இன்னும் பார்க்கலை. (சோகமாக)

பிராட்டி:  ஏன் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் தான் என்னை எங்குமே அழைத்துச் செல்வது இல்லையே.  (அலுப்புடன்)

பெருமாள்: சரி. சரி. நம் தேசிகனின் பெருமைகளைக்  காண எனக்கு மட்டும் ஆசை இல்லையா? என்ன நாம் மறுபடியும் பூலோகம் செல்லலாமா?

வைநதேயன்:   ப்ரபோ! அதற்கு பதில் இங்கே வைகுண்டத்தில் அப்படத்தை திரையிட்டால், நித்ய சூரி,  முக்தர் ஆழ்வார், ஆசார்யர் என அனைவரும் சேர்ந்து கலகலவென்று பார்க்கலாமா?

பிராட்டி:  Very Good Idea. கடல் கடந்து பயணிக்கும் கண்டாவதாரம்  விரஜை கடந்து வரட்டுமே ! 

பெருமாள்:  நாரதா! அதற்குரிய Screening Process தான்  என்ன ?

நாரதர்:  பெருமாளே! SARAN சேவகர்களைத்  தொடர்பு கொண்டால் அவர்களே வைகுந்தம் வந்து Screening போடுவார்கள்.  வைநதேயனே  Projector , ஆதிசேஷனே Wide Screen (அகன்ற திரை).  இனி என்ன கவலை!

பெருமாள்:  SARAN சேவகர்கள் வைகுந்தம் வருவதா! இவ்வுலகம் அதை ஏற்குமா?  அச்சோன்யமாகப்  பார்ப்பரே!

ஆதிசேஷன்: ( சிரித்துக் கொண்டே)  நாராயணா! ஏன் இந்தக் கவலை? விரோசனன் வைகுந்தம் வந்து போகவில்லையா?  இதோ நான் வரவில்லையா?  கிருஷ்ணாவதாரத்தில் வைதிகன் பிள்ளைகளை மீட்க நீ அர்ஜுனனை அழைத்து வந்து மறுபடியும் பூலோகம் செல்லவில்லையா? அர்ச்சிராதி மார்க்கத்தில் வந்தால்தானே மீண்டும் பூலோகம் செல்ல முடியாது! SARAN சேவகர்களை நாம் வேறு வழியாக அழைத்து வரலாமே!

பெருமாள்: அற்புதமான யோசனை. விரைந்து செயல்படுங்கள். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் Inform செய்யுங்கள். விண்ணகரம் முழுக்க கண்டாநாதம் முழங்க வேண்டும். இந்த Special Showவிற்கு ஏ.பி.என் and SARAN சேவகர்கள்  அனைவரையும் அழைத்து வந்து கௌரவியுங்கள்.

பிராட்டி: பிரபோ! இன்னும் ஒரு உயர்ந்த காரியத்தையும் அவர்கள் செய்ய முனைந்துள்ளனர். கிராமங்கள்தோறும் கண்டாவதாரம்” என ஆயிரம் கிராமங்களுக்குப்  பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

பெருமாள்: “சபாஷ் SARAN சேவகர்கள் சாமான்யமானவர்கள்  அல்ல.  அவர்களின் பெருமைக்குத் தக்கதொரு பெருவிழாவினை இவ்வைகுண்டம் நடத்தட்டும்.  எதற்கெடுத்தாலும் வியாபாரம் செய்யும் இவ்வுலகில்,  விளம்பரமற்றவர்களை நாம் பூரணமாக அனுக்கிரஹம் செய்யலாம்.  ஸநாதன தர்ம ப்ரசாரத்தில் இவர்கள் இளைய தலைமுறையின் Role Modelகள்.  லக்ஷ்மி!  நீ ஏற்பாடுகளை கவனி.

நாரதர்:  நான் சென்று Poster, Banner ready செய்கிறேன். (என்று கூறிய படி SARAN சேவகர்களை தொடர்பு கொள்கிறார்.) 

SARAN Sevak ராஜாராம் சுவாமி  உடனடியாக ரெடியாக உள்ள template கொண்டு Invitation ரெடி செய்து, “கண்டாவதார கைங்கர்யம்” WhatsAPP Groupபில்  சுவாமி மற்றும் SARAN சேவகர்கள் review செய்ய அனுப்ப….

Slide4

இதுவன்றோ நாடு புகழும் பரிசென்று,

Invitationனை   review செய்த படி கண்விழிக்கும் ………………..

அடியேன்

சுபத்ரா  ராகவன்

SARAN Sevak & Sri APN Swami’s Kalakshepa Shishyai

(10-பிப்ரவரி-2020)

கண்டாவதாரம் குறித்த “வைகுண்டவாசிகளின் விமர்சனம்

விரைவில்……………..

 

அதன் தொடர்ச்சியாக “ஸ்ரீவைகுண்டத்தில் கண்டாவதாரம் – வைகுண்டவாசிகளின் விமர்சனம் – Special Review by நித்ய முக்தர்கள்” 

https://apnswami.wordpress.com/2020/02/21/ghantavatharam-screening-at-srivaikuntam-review-by-vaikuntavaasigal/