Sri APNSwami’s Shishya Writes |செல்வச் சிறுமீர்காள்! பரந்தாமன் புகழ் பாடிய பாவை | Selvach Sirumeergal | Girls Who hailed Parandaman

Scroll down to read the English & Tamil version.  

The Tamil article  written by Sri APN Swami’s Shishyas and was published in Sri Nrusimha Priya Vikari Aadi July 2019 issue. Along with that the English translation done by Sri APN Swami’s Shishyas is posted today on account of  Vikari ThiruAdi Pooram – Andal’s  Thirunatchathiram.   Special thanks to Sri Nrusimha Priya. 

செல்வச் சிறுமீர்காள் !

பரந்தாமன் புகழ் பாடிய பாவை

வேதம் அனைத்துக்கும் வித்தாக விளங்கும் திருப்பாவையில், கோதை நாச்சியார்,  பரந்தாமனை போற்றி பாவை நோன்பினை நோற்பதற்காகத் தன் தோழிகளை அழைத்தாள்.   ஸ்ரீவில்லிபுத்தூரை வடமதுரையென நினைத்து,  தங்களை ஆயர்குலச் சிறுமியர் போல் பாவித்து  கிருஷ்ண அனுபவத்திற்காக விரதம் இருந்தனர்.

விடியற்காலையில் எழுந்த ஆண்டாளும் அவள் தோழிகளும், தூங்கிக் கொண்டிருந்த மற்ற தோழிகளை எழுப்பி, பாவை நோன்பினை நோற்றனர். அதில் குறிப்பாக, பத்து பெண்களை எழுப்புவதாக ஆறாவது பாசுரம் முதல் பதினைந்தாவது பாசுரம் வரை பாக்கள் அமைந்துள்ளது.  துயில் எழுப்பும் பொழுது, ஒவ்வொரு பெண்ணையும், அவளின் தனித்தன்மையை சொல்லி விளக்கும் சொற்களைக் கொண்டு, அழைக்கின்றனர்.

இப்படி ஆயர்பாடியின் அழகிய பெண்களின் தனித்தன்மையை விளிச்சொற்கள்  மூலம் விளக்கி, ஆண்டாள் நமக்குக்  காட்டும் நெறியை, ஆண்டாளின் அவதாரத்தைக் கொண்டாடும் இந்த ஆடி மாதத்தில், இக்கட்டுரையின் மூலம் ரசிக்கலாம் வாருங்கள்.

பிள்ளாய் !

ஆண்டாள்  முதல் பெண்ணின் வீட்டு வாசலில் நின்றபடி “பிள்ளாய் ! எழுந்திராய்” என்று எழுப்பினாள்.

Andal Thiruppavai Pasuram 06-Pullum Silambhinakaan
ஆண்டாள் – திருப்பாவை – 06 – புள்ளும் சிலம்பின Andal – Thiruppavai – 06 – Pullum silambina

அந்த பெண்ணோ சிறியவள்; பகவதனுபவத்திற்குப் புதியவள். முதல் முறையாக இத்தகைய நிகழ்ச்சியில் கலந்துக்  கொள்ளப்போவதால்,  நடக்கப்போவதை ஆவலுடன் எதிர்பார்த்துத்  தூங்காமல் இருந்ததால்,  அவளால் காலையில் சீக்கிரம் எழுந்துக்கொள்ள முடியவில்லை.

தீபாவளியன்று சிறுவர்கள்  பட்டாசு வெடிக்கவேண்டும் என்ற excitement காரணமாக இரவில் விழித்திருந்து, அதிகாலையில் பட்டாசு வெடிச்சத்தத்திலும் தூங்கிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம். 

பறவைகளின் சத்தத்தையும், சங்கின் பேரோசையையும் கூட கேட்காமல், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளிடம், “ஹரிர் ஹரி: ஹரிர் ஹரி: ஹரிர் ஹரி:” என்று  பாகவதர்கள் கூறும் மதுரமான சொற்களைக் கேட்காமல் போக நேரிடும் என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி, ‘சிறுபிள்ளைத்தனம்விட்டு, எழுந்து வர ப்ரயத்னம் செய்’ என்றபடி கோதை அந்த சிறு பெண்ணை “பிள்ளாய்!” என அழைத்தாள். 

அதிகாலையில் செய்யப்படும் ஹரி நாம சங்கீர்த்தனத்தின் பெருமையையும், பகவத் கைங்கர்யம் செய்யத் துவங்கும் சமயத்தில் இருக்கும் ஆவல்,  பகவதனுபவத்திற்குத் தடையாகாத வண்ணம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையும், இந்த சிறு பெண்ணின் (பிள்ளாய்) மூலம் தெரிவிக்கிறாள் ஆண்டாள்.

பேய்ப்பெண்ணே!, நாயகப் பெண் பிள்ளாய் !, தேசமுடையாய் !

இரண்டாவதாக, ஆண்டாள் துயில் எழுப்பும் பெண், கோபர்களின் தலைவன் மகள். தன் தந்தையைப் போல் இவளும் தலைமைப்  பொறுப்பை ஏற்று நடக்கத்தக்கவள்.  ‘பாவை நோன்பிற்குத் தலைமை வகிக்கத்  தகுந்த பெண் இவளே!’,  என்று அனைவரும் நினைத்திருந்தார்கள். அப்படியிருக்க, துயிலெழாத அவளைப் பார்த்து ஆண்டாள் “மதிகெட்ட பெண்ணே!  வலியன் என்னும் பரத்வாஜ பறவைகளின் பேச்சையும்,  விண்ணையே  பிளக்கும் அளவுக்கு உன் இல்லத்தில் ஆய்ச்சியர்கள் தயிர் கடையும் சத்தத்தையும், அவர்களின் கேசவ நாம சங்கீர்த்தனத்தையும் கேட்டும், கேட்காதவள் போல் படுத்திருக்கும் நாயகப் பெண்பிள்ளாய்! எழுந்திரு.” என்று அழைத்தாள்.

07-Keesu Keesendrengum
ஆண்டாள – திருப்பாவை – 07 – கீசு கீசென்று Andal – Thiruppavai – 07 – Keesu Keesendrengum

பகவானின் நாம சங்கீர்த்தனத்தைக் கேட்டும் இந்த பெண் படுத்திருந்ததால், பேய் பிடித்து பரவச நிலையில் இருப்பவர்களைப் போல்  இருக்கிறாள் என்பதால் பேய்ப்பெண்ணே என்று முதலில் அழைக்கிறாள்.

மேலே, பாவை நோன்பிற்கு  செல்லும் பெண்களிலே  நாயகமாக விளங்க வேண்டியவள் (நாயகப் பெண் பிள்ளாய்),  கேசவனின் நாமத்தை கேட்டு, பகவதனுபவத்தில் எழுந்திருக்காமல் படுக்கையிலேயே படுத்திருந்ததால் அவளை ஆண்டாள் “தேசமுடையாய்!” அதாவது “பகவதனுபவத்தில் உடல் பூரித்து, ஒளி மிகுந்த உத்தம வடிவு பெற்ற கன்யாமணியே! கதவைத்திற, எங்களுடன் கூடிக்கலந்து களி.” என்று எழுப்புகிறாள்.

பாகவதன், பகவதனுபவத்தினால் பித்தனைப் போல் மெய்மறந்து இருப்பதையும்,  பகவத் கைங்கர்யத்தை முன்னின்று நடத்த வேண்டும் என்றும்,  நாம சங்கீர்த்தனத்தின் அனுபவத்தையும், அதனால் பாகவதன் பெறும் தேஜஸையும் இந்தப் பெண்ணின் மூலம் கோதை விளக்குகிறாள்.

கோதுகலமுடைய பாவாய் !

மூன்றாவதாக ஆண்டாள் துயில் எழுப்பும் பெண், நோன்பை ஒரு குறைவுமில்லாமல்  நல்லபடியாக முடிக்க வேண்டும் என்ற உத்ஸாஹம் கொண்ட  ஒரு பெண்.  அந்த பெண்ணின் வீட்டு வாசலில் நின்றபடி ஆண்டாள் “உத்ஸாஹா! கோதுகலமுடைய பாவாய்! நேற்று இரவு நாமெல்லோரும் கூடிப் பேசிய பொழுது நீ காட்டிய ஆர்வம் எங்களுக்கெல்லாம் ஊக்கத்தை உண்டாக்கிற்றே! அத்தகைய நீயா இன்னும் படுத்துறங்குவது?  எங்களை வெகு நேரம் காக்க வைக்காதே….” என்றாள்.

08-Keezhvanam
ஆண்டாள – திருப்பாவை – 08 – கீழ்வானம் வெள்ளென்று Andal – Thiruppavai – 08 – Keezhvanam vellendru

ஆனால் அவளோ, விடியலாகிவிட்டதால் பிள்ளைகள் எல்லோரும் நோன்பு செய்யும் இடத்திற்குச் சென்று சேர்ந்துவிட்டார்களோ என்ற ஐயத்தினால் பிரமித்து, மோஹித்து ஒரு பொம்மையைப்  போல் ஆடாமல் அசங்காமல் படுத்திருந்தாள்.

இந்தப் பெண்ணுக்கு மட்டும் கண்ணன் மேல் பேரவா இல்லை….. கண்ணனுக்கும் இந்த அழகிய பதுமையின் மேல் அளவு கடந்த ஆசை.  அப்படியிருந்தும் “பொய் பேசும் கண்ணன்” என்று அனைவரும் கூறுவதால், “அவன் வருவானோ மாட்டானோ!” என்று தயக்கத்தினால் எழுந்து வராதவளிடம், “தேவாதிராஜனே நமக்கு அருள் புரிவான்.” என்று ஆண்டாள் நினைவுறுத்தியவுடன், உத்ஸாஹா மேலும் உத்சாஹத்துடன் வெளியே வந்தாள், கோஷ்டியில் சேர்ந்தாள். எல்லோரும் அங்கிருந்து புறப்பட்டார்கள்.

எம்பெருமான்  மேல் unshakable trust  மஹாவிஶ்வாசம்  இருந்தும், சில சமயம் மஹாவிஶ்வாசம்  குறைய நேரிடும் பொழுது, அவன் துணைக் கொண்டே மஹாவிஶ்வாசத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்த பெண்ணின் மூலம் உணர்த்துகிறாள் நாச்சியார்.

மாமான் மகளே!

தன்னை கோப ஸ்திரீயாகவும், தோழிகளை இடைப்பெண்களாகவும் பாவித்த ஆண்டாள்,  (க்ருஷ்ணனின்) மாமன் மகளான இந்த நான்காவது பெண்ணை எழுப்பச் சென்றாள்.

09-thumanimadathu
ஆண்டாள – திருப்பாவை – 09 – தூமணி மாடத்துச் சுற்றும் Andal – Thiruppavai – 09 – Thoomani Madathu

ஸ்ரீகிருஷ்ணன் இல்லத்திற்கு  வீதி வலமாக, தன் இல்லத்தின் வழியாகச் செல்ல வேண்டும் என்று தோழிகளிடம் கூறியவள் இந்த பெண்.  ஆகையால், இரவில் தூங்காமல் பாகவதர்களான இடைப்பெண்களின் வருகைக்கென இல்லத்தை அலங்கரித்து, தூப தீபங்களை ஏற்றி, அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு காத்திருந்தவள், தன்னை அறியாமல், திண்டின் மேல் சாய்ந்தபடியே  தூங்கிவிட்டாள்.

அப்பொழுதுதான், நாயகப்பெண் வந்து இவளை எழுப்பினாள். அவளோ எழுந்த பாடில்லை.  ஆகையால், அந்த பெண்ணின் தாயாரின் துணை கொண்டு “மாமீர்! அவளை எழுப்பீரோ?” என எழுப்ப முற்பட்டாள்.  மாமியாலும் எழுப்ப முடியவில்லை.

அயர்ந்த தூக்கத்தில் இருந்தவளை எளிதாக எழுப்ப முடியாத காரணத்தால், என்ன செய்ய என்று யோசித்த நாயகப்பெண்,  ஸஹஸ்ரநாமத்தில் அடங்கிய திருநாமங்களைக் கீர்த்தனம் பண்ணுவது என்று முடிவெடுத்துப் பாட ஆரம்பித்தாள்.   நாமசங்கீர்த்தனத்தினால் மகிழ்ந்த எம்பெருமான், கிருபை பண்ணினான். அப்பெண் புரண்டாள்,  கை கால்கள் அசைந்தன, மெல்ல எழுந்தாள். கண்ணை விழித்துப் பார்த்தாள். அறையின் வெளியில் பகவந்நாமசங்கீர்த்தனம் காதில் பட்டது.  உடனே அனைவரையும் காக்க வைத்துவிட்டோமே என்று மன்னிப்புக் கேட்டபடி கோஷ்டியில் சேர்ந்து கொண்டாள்.

பரமைகாந்திகள் அனைத்துக்கும் எம்பெருமானையே நாடுவர், அவன் நாமம் பாடுவதையே விரும்புவர் என்று நாயகப்பெண்ணின் நாமசங்கீர்த்தனத்திலிருந்து தெரிகிறது. பாகவதர்களுக்கு உபசாரம் செய்ய நினைத்த இந்த நான்காவது பெண், அறியாமல் அவர்களைக் காக்க வைத்து அபசாரம் செய்ததினால் மன்னிப்புக் கோருகிறாள்.  ஸ்ரீவைஷ்ணவர்கள்  அறிந்து செயல் படுத்த வேண்டிய முக்கியமான விஷயங்களை இந்த பெண் மூலம் தெரிவிக்கிறாள் ஆண்டாள். 

அருங்கலமே !

ஐந்தாமவள் மிகுந்த உறக்கத்தை உடைய பெண். அவளின் அயர்ந்த நித்திரையின் காரணம் பகவதனுபவமே ஆகும். மற்ற பெண்களை விட விஷேச பகவதனுபவம் பெற்ற பெண் என்பதால், மஹாபாக்யசாலியான அப்பெண்ணை “அம்மனாய்” அதாவது “தாயே!” என மிகுந்த மரியாதையுடன் முதலில் கோபஸ்த்ரீகள் விளித்தார்கள்.

10-nottru
ஆண்டாள – திருப்பாவை – 10 – நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற andal – Thiruppavai – 10 – Nottru suvargam

முன் பிறவியில் செய்த நோன்பின் பலனாக, இந்தப் பெண் கண்ணனோடு உள்ளே கலந்துப் பேசிக் கொண்டிருந்தாளாம்.  வாசல் கதவோ மூடியிருந்தது.  அப்படியிருக்க, வெளியில் இருந்தவர்கள் எப்படி கண்ணன் உள்ளே இருக்கிறான் என்று யூகித்தார்கள்?  உள்ளேயிருந்த கண்ணனின் திருத்துழாய் நறுமணம் வெளியில் நின்ற கோபாஸ்திரீகளின் மூக்கைப் பறித்ததால், உள்ளே கண்ணனை  இவள்  அனுபவித்துக் கொண்டிருப்பதைத் தோழிகள் கண்டுபிடித்து விட்டார்கள்.  தோழிகளிடம் மாட்டிக்கொண்டவள், வெட்கமுற்று, என்ன செய்வது என்று புரியாமல் குறட்டை விட்டு தூங்குபவள் போல் படுத்துக்கொண்டாள். தூங்குபவர்களைக் கூட துயில் எழுப்பிவிடலாம், ஆனால் தூங்குவது போல் பாசாங்கு  செய்பவர்களை எளிதாக எழுப்ப முடியாது.  மேலும் அவள், கும்பகர்ணனே தோற்றுவிட்டது போன்று,  இவர்கள் கூப்பிடுவது தெரியாதது போல் தூங்கினாளாம்.  ஆகையால்,  “ஆற்ற அனந்தலுடையாய்!” அதாவது “மிக்க உறக்கத்தை உடைய பெண்ணே!” என்று கூப்பிட்டார்கள்.

இவ்வளவு கத்தின பிறகு  கண் விழித்தாள் அவள். அதனால் ஆனந்தமுற்று “அருங்கலமே!” என்று வர்ணிக்கின்றனர். ஒவ்வொரு கன்னியும் கலம்(அணிகலன்) போன்றவர்களே. பேருறக்கம் விட்டு வந்ததால், இவளை “அருங்கலமே!” அதாவது “அருமையான ஆபரணம் போன்றவளே! அற்புதமான அழகும், குணமும் கொண்டவளே!” என்று கூப்பிட்டார்கள்.

பகவதனுபவத்தை விட்டு, பாகவத அனுபவத்தில் பங்கு கொள்ள வந்ததால், அந்த பெண்ணின் உயர்ந்த குணபூர்த்தியை இங்கு போற்றியுள்ளாள் நாச்சியார்.

பொற்கொடியே! புனமயிலே! செல்வப் பெண்டாட்டி!

ஆறாவது பெண்ணானவள், பல குடும்பத்தாரின் ப்ரேமைக்குப் பாத்திரமான,  அழகான அருமையான ஒரு பெண்மணியாவாள்.

இவள், கன்றுடன் கூடிய மாடுகளை மேய்த்து, சத்ருக்கள் நுழையா வண்ணம் காவல் காத்து,  குற்றமொன்றுமில்லாத  கண்ணனுக்கு ஒத்த கோபாலர்களின் உயர்ந்த குடியில் பிறந்தவள்.  அழகிலோ பேரழகி; பொன்னாலான கொடி போன்றவள் என்பதால் “கோவலர் தம் பொற்கொடியே!” என்று முதலில் கூப்பிட்டனர்.

11-Kattrukaravai
ஆண்டாள – திருப்பாவை – 11 – கற்றுக் கறவைக் கணங்கள் Andal – Thiruppavai – 11- Kattru karavai

அழகான மயிலானது கார்மேகத்தை பார்த்தவுடன் எப்படி ஸந்தோஷப்படுமோ, அதுபோல் கார்வண்ணனின் புகழ் பாடுவதைக் கேட்டு சந்தோஷப்படுபவள் என்பதை குறிக்கும் வகையில் “புனமயிலே!” என்று அடுத்து அவளைக் கூப்பிட்டார்கள்.

எழுந்து கொள்ளாமல் தூங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் வீட்டின் முற்றத்தில் நின்றபடியே, தோழிகள் எம்பெருமானின் திருநாமங்களைக் கீர்த்தனம் செய்ய ஆரம்பித்தனர். அதை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவளாகையால், அவளை “செல்வப் பெண்டாட்டி!” அதாவது “பகவானின் திருநாம ஸங்கீர்த்தனத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்ற பெண்மணியே!” என்று அழைத்தனர்.

ஐஶ்வர்யம், அழகு, தோஷமற்ற உயர்ந்த குடியில் பிறப்பு (ஆபிஜாதம்)  என அனைத்து சிறப்பையும் உடைய அந்தப் பெண்ணை, கோதையும் அவள் தோழிகளும் இவ்வண்ணம் எழுப்ப, பகவானை அனுபவித்தபடியே அவளும் எழுந்து அனைவருடன் நோன்பிற்குச் சென்றாள்.

அழகும், உயர்ந்த குடிபிறப்பும் ஒரு பெண்ணிற்குக் கர்வத்தைத் அளிக்கும். ஆனால் இவளோ,  அனைவராலும் விரும்பப்பட்ட குணபூர்த்தி நிறைந்த பெண்ணாக இருந்தாள். மேலும், எம்பெருமானின் நாம சங்கீர்த்தனத்தை அனுபவிக்கும் பெண்ணின் பெருமை இப்பெண்ணின் மூலம் கோதையால் விளக்கப்படுகிறது.

நற்செல்வன் நங்காய்!

ஏழாவதாகப் போற்றப்படும் பெண்ணானவள் நற்செல்வன் என்பவனின் சகோதரியாவாள்.  சிறந்த செல்வத்தைப் பெற்றதால் அவன் நற்செல்வன்  என்று போற்றப்பட்டான். சிறந்த செல்வம் என்றால் என்ன?  கண்ணனுடையே இருந்து கைங்கர்யம் செய்பவன்.

12-kanaithilam
ஆண்டாள – திருப்பாவை – 12 – கனைத்திளங் கற்றெருமை Andal – Thiruppavai – 12- Kanaithilan kattrerumai

“கண்ணனுக்கு  மிகவும் பிடித்த, கோஸம்ரக்ஷணம் செய்பவனின் தங்கையே!  (நற்செல்வன் நங்காய்!),  நீயும் உன் அண்ணனைப் போல் கண்ணன் கைங்கர்யத்தில் ஈடுபட வேண்டாமா? அழைக்காமலே எழுந்து வர வேண்டாமா? நாங்கள் கதவை இடித்த ஓசை ஊரில்  ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோர் காதிலும் விழுந்து, அவர்களே என்ன விசேஷமென்று கேட்டுக்கொண்டு வந்துவிட்டார்கள். வந்து பார்.” என்று கோப ஸ்த்ரீகள் ஏழாவது பெண்ணை எழுப்பினர். இதைக் கேட்ட அப்பெண் மிக வருந்தி “உங்களுக்கு இவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்த என்னை க்ஷமியுங்கள்” என்று ப்ரார்த்தித்து விட்டு அவர்களுடன் சேர்ந்து அங்கிருந்து புறப்பட்டார்கள்.

போதரிக் கண்ணினாய்! பாவாய்!

சிறுமிகளின் கூட்டம் வீடு வீடாகச் செல்லச் செல்ல விடிந்துவிட்டது. கூட்டில் இருந்த பறவைகள் இரை தேடச் சென்று விட்டன.  சிறுமிகள் தோழிகளை எழுப்ப பகவந்நாமாக்களை பாடிப் பாடி, அந்த அனுபவத்தில் ஆழ்ந்திருந்தனர்.  அதில் சில சிறுமிகள் பொறுமை இழந்து, “இனி ஒருவர் வீட்டுக்கும் வீடு வீடாக நாம் போகக்கூடாது. நாழியும் ஆகி விட்டது. நேராகவே போவோம்.” என்று நாயகப்பெண்ணிடம் முறையிட்டனர்.

13-Pullinvai
ஆண்டாள – திருப்பாவை – 13 – புள்ளின் வாய் கீண்டானை Andal – Thiruppavai -13- Pulll in vaay keendanai

பொறுமையின் வடிவான அந்த நாயகப்பெண் “தோழிகளை விட்டு விட்டு விரதமிருந்தால், வராதவர்கள் நினைவினால் உத்ஸாகமாகவும்,   ஸந்தோஷமாகவும் விரதம் அனுஷ்டிக்க முடியாது. பொறுத்திருங்கள்.  தோழமையைக்  காட்ட வேறு சந்தர்ப்பம் ஏது?  இன்னும் சிலரே வரவில்லை. விரைவில் அனைவருடனும் செல்லலாம்.” என்றாள்.  பொறுமையிழந்த சிறுமியர் “பாவைக்  களத்திற்கு அதாவது நதிக்கரையில் வ்ரதத்தை ஆரம்பிப்பதற்காக  ஏற்பட்ட இடத்திற்குப் நாங்கள் போகிறோம்.”  என்றபடி தனி அணியாக சென்றனர்.

மற்ற தோழிகளையும் அழைத்தே  செல்ல எண்ணிய  நாயகப்பெண்ணுடன் கூடிய அணி எட்டாவதாக ஒரு பெண்ணின் வீட்டை அடைந்தது.

நேரமாகி விட்ட நிலையில் ஏழாவதாக  எழுப்பும் பெண், கன்னிகைகள்  வந்த சமயத்தில், அவளே கண்களை விழித்து, கள்ளத்தூக்கத்துடன்  படுத்திருந்தாள்.   அதையறிந்த நாயகப்பெண் அவளிடம் “ஸகி, விளையாடுவதற்கு இது நேரமா? விரதம் அனுஷ்டிக்க வேண்டிய நல்ல காலத்தில், செய்ய வேண்டியதை காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டாமா? போதரிக் கண்ணினாய், பாவாய்! பதுமை போல் பாசாங்கு காட்டாமல் சீக்கிரம் வா…….” என்றாள்.

போதாவது அலரும் மலர் அதாவது நன்றாக மலர்ந்து கொண்டிருந்த புஷ்பமாகும்.    அரி என்றால் அழகு.  எனவே,  நன்றாக மலர்ந்து கொண்டிருந்த அழகான புஷ்பத்தை போன்ற கண்களை உடையவளே என்று கூப்பிட்டார்கள்.

அரி என்றால் மான் அல்லது வண்டு என்றும் பொருள். “பூவையும் மான் கண்ணையும் ஒத்த கண்களை உடையவளே!   பூவிலிருக்கும் வண்டின் கண்களை உடையவளே!”  என்றும் கொள்ளலாம்.

அரி என்றால் சத்ரு. “அழகிலே பூவுக்கு சத்ருவான கண்களை உடையவளே! ” என்றும் கொள்ளலாம்.

இப்படிப் பலவாறு அவர்கள் கூப்பிட்டவுடன், பாசாங்கு காட்டுவதை விட்டு, அந்தப் பெண் அனைவருடன் சேர்ந்துச் செல்ல ஆரம்பித்தாள்.

பகவதனுபவத்திற்கு கூடியிருந்து களிக்க வேண்டும் என்று, இங்கே தெளிவாக, நாயகப்பெண்ணின் செயல் மூலம் அறியலாம்.  காலம் தாழ்த்தாமல்  நற்காரியங்களை தாமதமின்றிச்  செய்ய வேண்டிய முக்கியத்துவத்தை விளக்கியுளாள் சூடிக்கொடுத்த நாச்சியார்.

நங்காய்!

கன்னிப் பெண்கள், அநுஷ்டிக்கும் நோன்பு ஒரு குறையுமின்றி மிக சிறப்பாக நடைபெற என்ன செய்ய வேண்டும் என்று முந்தைய நாள்  பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது உத்ஸாஹா என்ற பெண், விடியற்காலையில் கண் விழிக்காத பலரையும் யார் அழைத்து வருவது என்ற கேள்வி எழுப்பினாள்.  அதற்கு நிச்சலா என்பவள், தான் அனைவரையும் எழுப்பி அழைத்து வருவதாகக் கூறினாள். இப்படி ஒவ்வொருவரும் ஒரு காரியத்தை ஏற்றுக் கொண்டால் குழப்பமில்லாமல் அந்த கார்யம் இனிதே முடிவடையும் என்றாள். அந்த நிச்சலா என்பவளே ஒன்பதாவதாக எழுப்பப்படும் பெண்ணாவாள்.

14-Ungal puzhakadai
ஆண்டாள – திருப்பாவை – 14 – உங்கள் புழைக்கடைத் தோட்டத்து Andal – Thiruppavai – 14- Ungal puzhakkadai

ஆனால், அனைவரையும் தான் எழுப்புவதாகக் கூறிய நிச்சலா இன்னும் துயிலெழவில்லை. வீட்டில் உள்பக்கம் தாளிட்டுப் படுத்திருந்த அவளை, உரக்கக் கூவி வந்திருந்த பெண்கள் அழைத்தார்கள். கதவை தடதடவென்று அடித்தார்கள். அவள் எழவில்லை. பெண்கள் நிச்சலா இல்லத்தின்  பின் பக்கமாக சென்று, அவள் படுக்கையறையை அடைந்தார்கள்.  பல தடவை கதவை தட்டியும் அவள் எழவில்லை. இனி ஸ்நேஹ பாவத்தில் ஏளனம் செய்துதான் இவளை எழுப்ப வேண்டும் என்று முடிவுசெய்தார்கள்.

ஆகவே  “வாய் பேசும் நங்காய்!” என்று நிச்சலாவை அழைத்தார்கள், அதாவது  “எங்களை எழுப்புவதாக நேற்றிரவு பல பேச்சுக்களைப்  பேசினவளே! நீயே உறங்குவது நியாயமா? வாயிருக்கிறதென்று பேசிவிட்டால் போதுமா? சொன்ன வார்த்தையை செயல்படுத்த வேண்டாமா? எல்லோரையும் எழுப்புவது என் பொறுப்பு என்று கம்பீரமாக சொல்லிவிட்டு இன்னும் உறங்குகிறாயே!”  என்று ஏளனமாகப் பேசினார்கள்.

அப்படியும் அவள் படுக்கையை விட்டு எழுந்துகொள்ளாத காரணத்தால்,  விடியலாகியும் தூங்கும் அவளை,  “நாணாதாய்! (அதாவது வெட்கம் இல்லாதவளே!)            , உனக்கு நாக்குதான் நீளம் ஆனால் செயலில் ஒன்றும் இல்லை” என்று ஏளனம் செய்தார்கள். ஏளனம் செய்தாலாவது அவள் துயிலெழுவாளோ என்று முயன்றனர்.

தோழிகள் கூறியதைக் கேட்டு எழுந்தவள்,  தான் செய்தப் பெருந்தவறை உணர்ந்தாள், வெட்கப்பட்டாள். தான் செய்த அபசாரத்திற்கு மன்னிப்பும் கேட்டாள். அவள்  மன்னிப்பு கேட்டதால் முன்சொன்னதை மறக்கவில்லை, மறுக்கவில்லை என்பது தெரிகிறது. ஆகையால் இரு நாக்குகள்  கொண்டவள் இல்லை என்ற காரணத்தால் “நாவுடையாய்!” அதாவது  இரண்டு பேச்சுக்கள் இல்லாத காரணத்தால், நாவீறு பொருந்தியவள். மேலும், சங்கு சக்கரம் ஏந்தும் புண்டரீகாக்ஷனைப் போற்றிப் பாடத் தொடங்கினாள் என்பதால், பாடுவதற்கு பேச்சுத் தன்மை(நாவீறு) உடையவள் என்று தோழிகள் அந்தப் பெண்ணைப் போற்றினர்.

சொல் ஒன்றும் செயல் ஒன்றும் இருக்கக்கூடாது என்பதை இந்த பெண்ணின் மூலம்  விளக்கப்பட்டது.

இளங்கிளியே!

இவ்வண்ணம் எல்லா பெண்களையும் அழைத்துக்கொண்டு, நாயகப்பெண் கண்ணனின் திருமாளிகைக்கு புறப்பட்டாள். தனியாக சென்ற பிரிவினர், தோழிகளை பிரிந்து துன்புற்று,  திரும்ப வந்து இவர்களுடன்  சேர்ந்து கொண்டு கண்ணனை எழுப்ப தயாராகினர்.

15-Elle
ஆண்டாள – திருப்பாவை – 15 – எல்லே! இளங்கிளியே! Andal – Thiruppavai – 15 – Elle, Ilankiliye

அப்போது இன்னும் ஒருத்தி வரவில்லை என்று அறிந்தாள். அவளையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூப்பிடுகிறார்கள்.

இவள் அதிகம் சண்டைப்போட கூடியவள், எனவே இவளை மிக இனிமையாக அழைக்கிறார்கள். எல்லே! என்றனர். இச்சொல் அவர்களுக்கு இடையில் உள்ள நெருக்கத்தை காட்டும். மிகவும் நெருங்கிய நன்பர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆங்கிலத்தில் “Hey” என்று அழைத்துக் கொள்வார்கள் அல்லவா, அது போல் தான். இந்த பெண்ணிடம் இருந்த அன்பாலும் நெருக்கத்தாலும் எல்லே! என்றார்கள்.

இவள் இளமையானவள். இனிமையாக பேசுபவள். இவளது அழகை நாள்தோரும் பார்ர்த்துக்கொண்டே இருக்கலாம். இவள் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று மேலே “இளங்கிளியே” என்று கூப்பிடுகிறார்கள். கிளி என்பது பறவை தானே. எல்லா பறவைகளும் விடிந்தவுடன் வெளியில் வந்துவிடும். இது கிளிக்குட்டி ஆகையால் இன்னும் கூண்டை விட்டு வரவில்லை போலும் என்று “இளங்-கிளியே” என்றனர்.

இவ்வளவு நேரமாகியும் துங்குகிறாயா? என்று அவர்கள் கேட்டதும், சடக்கென்று பதில் அளித்தாள் “எதற்காக சத்தமாக கூப்பிடுகிறீர்கள்?, நான் வந்து கொண்டே இருக்கிறேன்…..”. தான் காலையிலேயே எழுந்து எல்லொரும் வந்த பிறகு தானும் சேர்ந்துக்கொள்ளலாம் என்று காத்திருந்தாள். அப்படி இருக்க இவளை பார்த்து துங்குகிறாயா? என்று கேட்டது, அவளுக்கு கோபத்தை உண்டாக்கியது. இந்த மார்கழி மாதத்தில் அதுவும் விடியற்காலையில் பணி அதிகமாய் உள்ள படியால் இவளுக்கு கிளம்ப கடினமாய் உள்ளது போலும் என்று வந்தவர்கள் நினைத்து இவளை விட்டு சென்றுவிடுவார்களோ என்று பயந்தாள். ஆகவே கடுமையாக பதில் அளித்த மாத்திரமே “நங்கைமீர்!” என்றாள். குணங்கள் பூர்ணமாய் (முழுமையாய்) உடையவர்களே!! என்று வந்தவர்களை புகழக்கூடிய வகையில் அழைத்து பதில் கூறினாள்.

இவள் புகழ்கிறாளா, அல்லது ஏளனம் செய்கிறாளா என்று வெளியில் இருப்பவர்களுக்கு தெரியவில்லை. நாயகப்பெண் “இந்த கோஷ்டியில் நீ இன்னும் வந்து சேரவில்லை என்று ஒரு குறை இருக்க பூர்ணத்வம் எப்படி வரும்? ஏளனம் செய்யாதே” என்றாள். உடனே சண்டைப்போடும் இந்த இளங்கிளியானவள் “என்னை தாங்கள் எல்லே என்று மதிப்பு குறைவாக அழைத்து, இன்னமும் தூங்கிக்கொண்டு இருக்கிறாயே என்று பழி சுமத்தினீர்கள். இப்பொழுது நான் ஏளனம் செய்கிறேனா!!” என்று கடிந்துக்கொண்டாள். குற்றத்தை வந்தவர்கள் மீது சுமற்றினாள். அவர்களும் தவறு தங்களுடையது என்று ஒப்புக்கொண்டார்கள். “பகவத் குணங்களை பேசவும் பாடவும் மதுரமான குரல் உடையவளே என்ற அர்த்தத்துடன் தான் உன்னை இளங்கிளி என்றோம். ஏளனம் செய்வதற்கு அல்ல. இருப்பினும் எங்களை மணிக்கவேண்டும், உன்னை அச்சொல் ஏளனம் செய்வது போல் தோற்றம் அளித்தபடியால்”  என்றார்கள். இப்படி தவறே செய்யாத போதிலும் மன்னிப்பு கேட்டதை பார்த்து, தன் தவறை உணர்ந்து உயர்ந்த குணம் படைத்த இவர்களோடு சேர்ந்தாள்.

திருப்பாவையில் நடுநாயகமாக அமைந்து இருக்கும் இப்பாசுரத்தில் இளங்கிளியுடன் செய்த உரையாடல் வழியாக, பாகவதர்கள் எப்படி க்ஷமா ப்ரார்த்தனை  (குற்றம் இல்லாவிடிலும், தங்களை தாழ்த்திக்கொண்டு மன்னிப்பு வேண்டுவது) செய்வார்கள் என்ற சிறந்த விஷயத்தை காட்டுகிறாள் நம் நாச்சியார்.

செல்வனை ஸேவிக்கச் சென்ற செல்வச் சிறுமீர்காள் :

புத்தி, தயை, தாக்ஷண்யம், சாமர்த்தியம்  முதலிய ஸர்வ குணங்களும் பொருந்திய நாயகப்பெண்ணாகிய நாச்சியார், அனைவரையும் நல்ல படியாக, பகவத் அனுகிரஹத்தால் அழைத்துக் கொண்டு ஸ்ரீகிருஷ்ணனின் இல்லம் நோக்கி விரைந்தாள்.

முதல் பாசுரத்தில் அனைத்து சிறுமியரை கூப்பிடுமிடத்தில் நேரிழையீர் மற்றும் செல்வச் சிறுமீர்காள் என்று அழைக்கிறாள் ஆண்டாள்.

நேரிழையீர்

01-margali3
ஆண்டாள – திருப்பாவை – 1 – மார்கழித் திங்கள்

திருஆயர்பாடியில் அச்சமின்றி, நேர்த்தியான ஆபரணங்களை அணிந்ததனால்  நேரிழையீர் ஆவர்.  மேலும் அவர்கள் அணிந்துள்ள ஆபரணங்கள் கண்ணனை உவப்பிக்க, அதாவது கண்ணணுக்காகவே, அவன் பார்த்து இன்புற என்ற உயர்ந்த எண்ணத்தை கொண்டிருந்தனர். இந்தச் சிறுமிகள் அங்க லக்ஷணங்கள் பொருந்தி, சௌந்தர்யமுள்ளவர்களாக விளங்கினர். பகவத் கைங்கர்யத்திற்காக ஆபரணங்கள் அணிந்ததால், சிறுமிகள் அழகுடன்  சோபிப்பதோடு, ஆபரணமும் சோபித்ததாம். அவ்வளவு நேர்த்தி. அவ்வளவு பொருத்தம் அவர்களுக்கும் அந்த ஆபரணங்களுக்கும். ஆகையால், அவர்களை நேரிழையீர்  என்று அழைக்கிறாள் ஆண்டாள். 

செல்வச் சிறுமீர்காள்!

இந்த பெண்கள் கண்ணனுக்கு முன்னோ பின்னோ பிறக்காமல், கண்ணனின் சம காலத்தில் பிறந்து கைங்கர்ய சம்பத்து என்னும் உயர்ந்த செல்வத்தைப் பெற்ற சிறுவயது பெண்கள்.  ஆயர்பாடியானது தனம்,  தான்யம் மற்றும் பசு ஸம்பத்துடன் விளங்கியது. இந்த செல்வங்களை உயர்ந்த செல்வங்களாக திருஆயர்பாடியில் வாழ்ந்த கோபர்கள் மதிக்கவில்லை.  அவர்களுக்கு மனநிம்மதியையும், ஆனந்தத்தையும் அளித்த செல்வம் இந்த சிறுமிகளே ஆவர். இந்த சிறுமிகளை பார்த்தவுடன், தாய் தந்தையருக்கு அனைத்து வித களைப்பும் நீங்கிவிடும். இந்த சிறுமிகளுடன் பேசினால் பரமானந்தத்தில் திளைப்பர். கோபர்கள் அந்த சிறுமிகளை அன்புடன் செல்லமாக வளர்த்தனர். இவ்வளவு அருமையாக போஷித்து வளர்க்கும் பெற்றோர்களுக்கு செய்யும் ப்ரதிபலனாக, அந்த கன்யைகள், பாரோர் பார்த்து புகழும் வண்ணம் நற்குணங்கள் பொருந்தியவராக திகழ்ந்தனர்.  செய்ய வேண்டியவற்றை செய்து, செய்யக்கூடாததை விட்டு விலகி, பிறந்த குலத்தின் அனைத்து அனுஷ்டானங்களை அனுஷ்டித்து வாழ்ந்ததால், “இவர்களைப் பெற்றவர்கள் என்ன புண்ணியம் செய்தார்களோ!” என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.  அழகு,  விவேகம், குலதர்ம அனுஷ்டானம் என்று குண பூர்ணைகளாக  விளங்கிய  இந்த சிறுமிகளைப் பெற்றவர்களே பாக்யசாலிகள் ஆவர்.

குண ஸம்பத்துடனும், கைங்கர்ய ஸம்பத்துடனும் திகழ்ந்த இந்தச் சிறுமிகளே செல்வச் சிறுமீர்கள் அன்றோ!

அடியோங்கள்

தீதிலா நல்லோர் திரள் தோழிகள்

விகாரி – ஆடி

நன்றி ஸ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரியா

Selvach Sirumeergal

Girls Who hailed Parandaman

The tamil version of this article appeared in the July 2019 Sri Nrusimha Priya issue and it is about the 10 girls that Andal takes along with Her to do Nombu during the holy month of Margazhi. Andal imagined herself and her friends as Gopis and Srivilliputhur  the place they lived as Ayarpadi as she went to each of her friend’s houses to wake them from sleep. 

The names of these 10 girls are mentioned from the 6th to the 15th pasuram in Thiruppavai, which is the essence of Vedas and is considered to be the seed for the tree called Vedam.  While waking each girl, Andal uses a unique word for each of the them to describe the individual qualities of that girl.

Let us enjoy the beauty and description of these words as we celebrate Thiruvadipooram today.  Let us get to know names of these Selva Sirumeergals to know more about them so we can imbibe those qualities as much as possible.

PillAi (Pullum Silambinakaan – 06)

Andal went to the first girl’s house on the first day of Margazhi month and gently called out “PillAi!”

PillAi was a young girl and.hence, was new to Bhagavath Anubhavam (divine experience). This was the first time she was participating in such an event, so she was waiting for it eagerly. Due to her excitement for the next day, she could not sleep well and hence, couldn’t get up the next morning.

Her act is similar to that of young children who wait for Deepavali to burst crackers. They are unable to sleep well because of their excitement and when sleep finally catches with them in the early morning hours, even the loud sound of crackers don’t wake them!

This PillAi also slept late and hence, couldn’t even hear the brisk chirping of birds and the sound of the conch. But Andal had no plans to leave her behind as She didn’t want PillAi to miss hearing the divine words of “Hari:” that Bhagavathas chant as soon as they get up in the morning. Also, She wanted the young girl to grow out of her childishness and get ready to do Kainkaryam to Him.

Through this young girl, Andal imparts the importance of chanting/hearing Hari nama sankeerthanam in the morning, the eagerness necessary for Bhagavad kainkaryam and the many hurdles that we should stay away from in order to get Bhagavath anubhavam.

PEi PennE, Naayaga pEn PillAi, ThEsamudaiyAi (Keesu Keesendrengum – 07)

The next girl that Andal woke was the daughter of the leader of Gopas. Like her father, she is also capable of leading from the front and this makes her the ideal leader for this Nombu. Or at least that is what everyone had thought!

But when she could not open her eyes the next morning, Andal chided her and said, “O Naayaga pEn PillAi (drama queen) and senseless girl, can’t you hear the sound of Valiyan or the Bharadwaja bird, the sound of your elders churning the curd or even their Keshava nama sankeerthanam?”

Since this girl was lying down during namasankeerthanam, Andal calls her pEi pennE to denote the frenzy that one feels while hearing the divine names of the Lord.

Also, since this girl was expected to lead the rest into His divine experience, but failed to get up even after feeling the energy of namasankeerthanam, Andal calls her thEsamudaiyAi, which means, “A girl who is stirred by bhagavth namasankeerthanam.” Andal also asks her to join the rest of the group right away to enjoy this divine experience.

Through this young girl, Andal explains the frenzy that true Bhaagavathas feel during Bhagavad anubhavam, the tejas (radiance/energy) one gets while hearing nama sankeerthanam and the need to lead from the front when it comes to Kainkaryam.

KOthukalamudaiya Paavaai (Keezhvanam vellendru – 08)

The third girl that Andal woke was someone who was yearning to complete the nombu without any hurdle or blemish. Standing in front of her house, Andal said, “Uthsaha (O enthusiastic one). KOthukalamudaiya Paavaai (Girl with a lot of enthusiasm)! When we discussed last night, you showed a lot of enthusiasm and this is what motivated all of us to get up and come here. Why are you still sleeping? Get up and come fast. Don’t make us wait for long.”

But that girl thought that everyone had left her and in that sadness, she was lying down without any movement, just like a doll.

Also, she had a lot of love for Kannan and He also shared the same love and affection for her. But this girl didn’t believe that Kannan would come simply because everyone called Him a liar. So, she doubted if He would come or not and did not bother to get up from her bed. But Andal reminded her that whatever happens DevAdirajan would fulfill all our wishes. She also called out to Uthsaha and asked her to come out with enthusiasm and join the group.

Through this girl, Andal reminds us that we have to take His help to reaffirm our faith in Him, especially when doubts emerge now and then.

Maamaan MagalE (Thoomani Madathuch chutrum – 09)

Andal imagined Herself as a gopika girl and saw Her friends as the cow herding girls of Ayarpadi. With such a thought, Andal next went to the house of Krishna’s cousin (daughter of His mama).

This girl had told all her friends that everyone should go to Krishna’s house through her road and only after passing her house. To this end, she was waiting all night for her friends to cross her house before going to Krishna’s house. She had also decorated her house with lamps and incense sticks and had made all preparations to welcome them. But without her knowledge, she had dozed off on her front porch.

When Andal came, she saw her sleeping in front of her door! Andal decided to take the help of the girl’s mother to wake her and this is why She called out, “Maameer! Avalai ezhupeerO!” The mother also came and together everyone tried to wake her, but to no avail.

Seeing this, Andal decided to sing the names of Perumal from Sahasranamam. Perumal became happy hearing this namasankeerthanam and the girl moved slightly, stretched her arms and legs and finally, opened her eyes. She apologized for making everyone wait and promptly joined the group.

Through this girl, Andal shows that Paramaikaanthis always go to Perumal for everything. They love to sing only His names and this is evident from Andal’s namasankeerthanam. This girl wanted to serve His devotees, but due to her tiredness she had slept off. Realizing her mistake, she apologized to them. These are some things that all Sri Vaishnavas should follow and this what Andal tells us through this girl.

ArungalamE (Nottru suvargam – 10)

The fifth girl was someone who loved to sleep and the reason for her sleep is also bhagavad anubhavam! Since she was foremost in experiencing bhagavad anubhavam, all the girls called her “Ammanai!” or “Mother!” to show their respect.

Due to a Nombu that she undertook during her last birth, this girl had the opportunity to talk to Krishnan inside her house. Now you may wonder, how did these girls know that Kannan was inside when the front door was closed?

It’s because the girls could smell the strong fragrance of Kannan’s tulasi garland! And this is how they came to know that their friend was enjoying the blissful experience of His presence.

This girl felt embarrassed and didn’t know how to face her friends. So, she went and lied down on the bed and pretended to sleep. It is easy to wake someone who is sleeping, but impossible to wake someone who is pretending to sleep! This is why the friends found it so hard to wake her and they felt that she was the right competitor for Kumbakarnan! This also explains why they called out to her as “Aatra Ananthaludaiyaai”, which means, “someone who is in deep slumber.”

After her friends screamed for a long time, the girl finally opened her eyes. This made her friends happy and they called her “ArungalamE!”which means, “one who resembles an exquisite ornament and one who is beautiful and at the same time, has the best of qualities.”

Through this girl, Andal shows the greatness of bhaagavatha anubhavam. She also praises this girl as she left bhagavath anubhavam to enjoy bhaagavatha anubhavam.

Porkodiye! PunamayilE! Selva Pendaati! (Kattru karavai – 11)

The sixth lady was someone who bore the love of many families.

She was born in the same exalted clan as that of Kannan and used to herd cows and calves every day. She was also very beautiful and her thin body frame made her look like a golden creeper. This is why Andal called her “Kovalar tham porkodiye!” right at the beginning.

Just like how a peacock gets excited seeing the dark rain-bearing clouds, this lady also used to get excited when anyone sang about the dark-hued Krishnan. To denote this characteristic, Andal called her “PunamayilE!”

This lady was in a deep sleep when Andal and her friends went. To wake her, they stood in the courtyard and sang Perumal’s names. Since she could enjoy this divine namasankeerthanam, Andal called her “Selva Pendaati”, which means, a lady who is blessed to enjoy the Thirunaama sankeerthanam of Perumal.

This lady, who was bestowed with wealth, good looks and good birth (abhijatham), was woken like this by Andal and she also got up hearing His names. Immersing herself in this blissful experience, she went along with the others.

Through this lady, Andal explains how ladies should immerse themselves in the joy of namasankeerthanam. Though she had wealth, looks and good birth, she was not arrogant. She was humble and simple enough to be loved by everyone and this is an important requirement to reach Him.

Narchelvan nangaai (Kanaithilan kattrerumai – 12)

The seventh lady was the sister of a man called Narchelvan, who was so called because he possessed the greatest wealth.

What is this greatest wealth that Narchelvan has?

The opportunity to be with Kannan always and do Kainkaryam for Him.

The one kainkaryam that Kannan loves is Gho Samrakshanam and this is what Narchelvan was doing. Since she is his sister, she was called Narchelvan nangaai.

“Don’t you also want to do Kainkaryam to Kannan, like your brother? Should you not come out without any of us even calling you? Our loud banging has woken the entire place and people have been asking the reason for this loud bang. If you don’t believe me, come and see for yourself”, asked Andal.

This is why the goshti woke the seventh lady and she apologized to them for the wait.

Through this girl, Andal brings out the importance of Gho samrakshanam and how it pleases Him.

POthari Kanninaai! Paavaai! (Pulll in vaay keendanai – 13)

As these girls moved from house to house, the sun began to rise and the birds started leaving their nests to find food. These girls continued on with their journey where they sang namasankeerthanam to wake their friends and in the process, enjoyed the bliss that came with singing His names.

Some of the younger girls in the group became impatient and refused to go to every house to wake the rest of the group. They requested their leader (Naayagapenpillaai) to start the nombu without any further delay.

But the leader said, “Do you think our friends will be happy and peaceful if we don’t take them along for our nombu? Please be a little patient. Only a few more have to join us. Let us also take them along for our nombu and show them the greatness of friendship.”

The young girls though refused to accept this argument. They wanted to go to the riverside where nombu was about to start, so they excused themselves from the group and went as a separate ghosti towards the riverside.

The remaining girls wanted to take their friends along, so they went and woke the eighth girl. This girl was pretending to be asleep and so the leader said, “O silly girl! Is this the time to pretend? It is already time to start our nombu and we have to get the preparations going. pOthari kanninai, Paavaai, stop your drama and come now.” This means, a lady with beautiful eyes that resemble a freshly-bloomed flower.

The word “ari” means beauty. It also means deer or a bee. So, “pOthari” means someone whose one eye is like a fawn (young deer) and the other eye like a beautiful flower. “Ari” also means enemy. So, we can also say that pOthari means someone who is so beautiful that she can be an enemy of the most beautiful flower.

Hearing her friends call her in such beautiful names, the lady stopped her pretense and joined the group.

Through this girl, Andal stresses on the importance of enjoying Bhagavan along with others (Koodi irunthu). These thoughts are reflected in the actions and words of the leader of the group. At the same time, Andal also brings out the importance of starting good deeds in an auspicious time without unnecessary procrastination.

Nangaai (Ungal puzhakkadai -14)

These young girls discussed the do’s and dont’s of Nombu the previous evening. At that time, a girl named Uthsaha wanted to know who will wake each of them and will bring them to the riverside for performing Nombu. Another girl called Nichala volunteered to wake each of them and bring them for Nombu. Hearing this, the others decided that each of them should take up a task and should focus on doing it well.

Now the ninth girl whom Andal woke was Nichala! She volunteered to wake everyone, but she herself was not up yet!

She had bolted the door from inside and was enjoying a good sleep, so her friends screamed, banged the door hard, and even went to her bedroom window through the backside of the house. But none of it even stirred Nichala from her sleep. Finally, they decided to use love and affection to tease and wake her.

They called her, “Vaay pEsum Nangaai!” It means someone who spoke at length about waking everyone up in the morning. “How can you continue to sleep? Did you just say empty words without any commitment? Why are you still sleeping after promising to wake all of us?”, they teased.

Still, Nichala didn’t get up. So, they called her “Nangaai!”, which means, “O shameless one!” because she kept sleeping even after sunrise. They further teased her saying, “You only have a long tongue and no briskness in your action.” They hoped that all this teasing would wake her.

These words had their effect. Nichala woke up and apologized to them for this big mistake from her end. This apology showed that she did not forget or go back on her words, but just fell asleep. This is why she came to be called “Naavudaiyai”, which means, someone with a single tongue. In other words, someone who did not go back on her words. Also, her friends praised her for the efforts to keep up her commitment and for singing about Pundarikaakshan as soon as she came out.

Through this girl, Andal reiterates the importance of adhering to one’s commitments. She abhors us from doing things that are opposite to what we say. In other words, She wants us to practice what we preach.

IlangkiliyE (Elle, IlankiliyE – 15)

NaayagapEn or the leader, thus gathered all her friends and together they all went to Krishnan’s palace. The group that went separately to the riverside faced many hardships enroute, so they came back and joined with their friends. Together, everyone went to wake Krishnan.

That was when they realized that one girl was missing and so they went to wake her. Since this girl is known for her fighting prowess, they decided to wake her gently. They called out “EllE!” This word goes to show the closeness they had amongst themselves and roughly translates to “Hey!”

This friend is a pleasant person who also used to talk sweetly. One can keep enjoying her beauty and hearing her sweet words all day long. Due to these characteristics, they called her, “IlangkiliyE, are you still sleeping?”

Parrot is a bird that comes out as soon as the sun rises, but its chicks are young and they will continue to sleep in their nest. Since this girl didn’t come out, they called her “IlangkiliyE”, which means a parrot chick.

Hearing these words, the girl opened her eyes immediately and said, “Why are all of you screaming like this? I’m on my way.” It looked like she was simply waiting for her friends to come and call her. But her friends misunderstood her and thought that she was sleeping, and this angered that girl. Also, she feared that others would leave her behind because of the chillness that persists during the early hours of Margazhi month. This is why she called them “Nangaimeer!” in a loud tone. She praised them saying that they are the most perfect girls.

The girls standing outside did not know if she was praising or teasing them. But the leader said, “How can there be perfection when you haven’t joined our group yet? So, please don’t tease us.” The girl immediately retorted back, “You called me in a disrespectful manner and accused me of sleeping. And now you say that I’m teasing you?” This way, she pointed out the mistake of her friends and they also accepted it.

“We called you ‘Ilangkili‘ because you have a sweet voice that is most ideal for singing His names and praise and not to tease you. But if you think that our words hurt you, please forgive us”, they said. When her friends apologized, the girl’s heart melted because she knew that they made no mistake and still apologized. She also, in turn, felt bad and tendered her apology to them.

Through this incident, Andal shows how true Bhagavathas are apologetic even if there are no mistakes on their side.

The Selva sirumeergal who went to take the blessings of Selvan (Bhagavan)

Andal, who is an embodiment of the finest qualities such as compassion, intelligence and utmost concern for others, took all the girls due to His grace and went to Krishnan’s house. As she calls out to each one of them, she uses the words “nErizhaiyeer” and “Selva Sirumeergal” in the first pasuram to denote them.

nErizhaiyeer

They are called “nErizhaiyeer” because they were brave enough to wear large and prominent ornaments while roaming in Ayarpadi. Also, they wore these jewels for Kannan and to attract Him towards them.  Thus, these girls were not only beautiful but also knew how to look best at all times because their sole intent was to see Kannan. Since the girls dazzled in their sparkling ornaments, Andal called them nErizhaiyeer.

Selva Sirumeergal!

They were young girls who lived during Krishna avatar and had the privilege of earning the highest selvam (Wealth). In this context, selvam doesn’t mean money or property, but the opportunity to do Kainkaryam (service) to Him.

Ayarpadi was a prosperous place that was filled with many different forms of wealth such as money, food and cattle. But the people who lived there did not consider any of these as wealth. In fact, they hardly paid any respect to it! They only valued the happiness and peace that they got through these Selva sirumeergal.

Parents used to forget all their tiredness when they saw these lovely and cheerful faces and they used to feel calm and happy hearing these girls talk. These girls were the apple of all eyes in Ayarpadi and in turn, they spread happiness and energy to all those who looked after them so well.

How did the girls(Selva Sirumeergal) do that?

They did all that they had to do, stayed away from all that they are not supposed to do and diligently followed the tradition and practices of their respective families. Their perfect lives were an example to all the people there and many even praised the good luck of their parents to have such dutiful daughters like them.

These selva sirumeergal were beautiful, intelligent and above everything, followed their dharma to perfection. Undoubtedly, the parents of these girls were lucky!

Thus, these are the 10 selva sirumeergal that Andal wakes and through each of them, sends us all an important message. On this auspicious Thiruvaadipooram (Vikhari Varusham), let us all pray to Andal to shower us with Her blessings and to show us the way to reach Him.

Written & Translated by 

Theedhila Nallor Thiral Thozhigal

Vikari – Aadi – Pooram

Sri #APNSwami #Writes #Tweets | திருப்பாவை துளிகள் |Tweets on Thiruppavai

This is a compilation of all the tweets that were posted on Twitter during the month of Margazhi in Vilambi year ( Dec 2018 – Jan 2019).

16/12/2018
1. ஏரார்ந்த கண்ணி யசோதை…
கண்ணனைப் பெற்று அவனது இளவயது குறும்புகளை ரசிக்க முடியாத தேவகீ ஏமாந்த கண்ணியானாள்.
கண்ணனின் குறும்புகள் கண்டுவியந்த யசோதை ஏரார்ந்த கண்ணியானாள்.

17/12/2018
2. உய்யுமாறு…
இந்த விரதத்தால் நாங்கள் உய்யுமாறும், இந்த வையகம் உய்யுமாறும், எங்களை அடைந்ததால் அக்கண்ணன் உய்யுமாறும் உகந்திடுவோம்.

18/12/2018
3. நீங்காத செல்வம்…
காசு, பணம், வீடு, வாகனம், மனைவி, மக்கள், உற்றார், உறவினர் நீங்கும் செல்வம்
கண்ணன் ஒருவனே எங்களைவிட்டு நீங்காத செல்வம்.

19/12/2018
4. சார்ங்கம் உதைத்த சரமழை……
சத்ருக்கள் உதிர்த்த சரமழை உலகை நாசமாக்கியது.
சார்ங்கம் உதைத்த சரமழை உலகை வாழ்வித்தது.

20/12/18
5. மாயனை….
கறுத்த நிறமுடைய யமுனை கண்ணன் குளித்ததால் தூயபெரு நீர் யமுனையானது.

21/12/18
6. புள்ளும்…
வேதமனைத்திற்கும் வித்தான திருப்பாவையில் துயிலமர்ந்த வித்தினைப் பாடுகிறாள்.

22/12/18
7. கீசு கீசு…
கேசவனைப்பாட தேசமுடையாளை நேசமுடன் அழைக்கிறாள்.

23/12/18
8. கீழ்வானம்…
கண்ணன் பிறந்த ஆயர்பாடி கீழ்வானமாய் வெளுத்தது.
மேல்வானமான பரமபதம் கறுத்தது.

24/12/18
9. கற்று…
க்ருஷ்ணபக்தி தவிர்த்து ஏனைய அவதாரங்களில் பக்தியில்லாத குற்றமற்ற கோவலர்.

24/12/18.
10. நோற்று…
சுவர்கம் புக நோன்பு நோற்றவள் தேற்றமாக வந்து திறக்கிறாள்.

26/12/18
11. கனைத்திளம்…
பால்சோறு உண்பவர் இன்று பால் சேற்றில் நிற்கிறார்.

27/12/18
12. புள்ளின்…
புள்ளின், கிள்ளின், பிள்ளை, வெள்ளி, புள்ளும், குள்ள, பள்ளி, கள்ளம் – இதுவே ஆண்டாள் உள்ளம்.

28/12/18
13. உங்கள்…
வெண்பவல் தவத்தவர் – வன் பற்று அற்றவர்.

29/12/18
14. உங்கள்…
வெண்பல் தவத்தவர் – வன் பற்று அற்றவர்.

30/12/18
15. எல்லே…
இளங்கிளியின் பாடல் இதயத்தை வருடும்.

31/12/18
16. நாயகன்…
அசுரர் உள்புகா வண்ணம் தடுக்கும் நிலைக்கதவு.
பக்தர்களுக்கு பரிவுடன் உள்வாங்கித் திறக்கும் நேசமிக்க கதவு.

01/01/19
17. அம்பரம்…
அம்பரமாகிய எம்பெருமானிடம் நாம் பரத்தை சமர்ப்பித்தால் நீங்காத செல்வம் நிலைத்திடும்.

02/01/19
18. உந்து…
நந்தன் மருமகளே உந்தன் மணாளனை எந்தமக்குத்தந்தருள்.

03/01/19
19. குத்து…
மைத்தடங்கண்ணியின் மைவண்ண நறுங்குஞ்சியில் மனம் மயங்குகிறான் மாதவன்.

04/01/19
20. முப்பத்து…
கலியின் துயர் கெட
கலியே துயிலெழாய் என்கிறாள்.

05/01/19
21. ஏற்ற…
ஆற்றாது வந்து போற்றுகிறோம்
மாற்றாது அருள் புரிவாய்.

06/01/19
22. அங்கண்…
பாபத்தினால் சாபத்தில் இழிந்த நாங்கள் உன் பார்வையினால் அருள் பெற்றோமே.

07/01/19
23. மாரி…
சிங்கத்தின் சீற்றம் சிறுநரிகளின் ஓட்டம். மாறினது மனோபாவம். மரித்தது நம்துக்கம்.

08/01/19
24. அன்று…
அழகுத்தமிழில் அருமையாக அர்ச்சனை செய்கிறாள் ஆண்டாள்;
வேதமனைத்துக்கும் வித்தான திருப்பாவையில் போற்றி, போற்றி என்று.

09/01/12
25. ஒருத்தி மகன்…
ஒருத்திக்குப் பிறந்து, ஒருத்தியிடம் வளர்ந்தவனிடம், வருத்தம் தீர்த்து திருத்தக்க செல்வம் வேண்டுகிறாள்.

10/01/19
26. மாலே…
All in – வையமேழம் உண்டவனே.
இலையாய் – ஒப்பாரும் மிக்காரும் இலையாயவனே! என்கிறாள்.

11/01/19
27. கூடாரை…
கூடாரை வெல்பவன்,
கூடியவர்க்கு தோற்பவன்.

12/01/19
28. கறவைகள்…
ஹரியே யாதவனாய் பிறந்தும்,
நாங்கள் அவனை அறியாதவர்கள் என்கிறாள்.

13/01/19
29. சிற்றம்…
நம்முள் மாற்றங்கள் நிகழ, நம் காமங்களை மாற்ற வேண்டுகிறாள்.

14/01/19
30. வங்கம்…
எங்கும் திருவருள் பெற்று இன்புற செங்கண் திருமுகத்துச் செல்வத்திருமால் அருள் புரிகிறான்.

For more such interesting tweets, follow @apnswamy on Twitter.