Sri #APNSwami #Writes #Trending | வரதனின் விருப்பம் – 02

வரதனின் விருப்பம் – 02

(By Sri APNSwami)

     அனந்தசரஸின் அழகிய தோற்றம் நிலவொளியில் நன்கு தெரிந்தது.  இரண்டொரு நாட்களுக்கு முன்னர்தான் பௌர்ணமி தினமாதலால் சந்திரனின் ஒளி இன்னமும் குறையவில்லை.  குளத்தில் ஆங்காங்கு சிறிதுசிறிதாகத் தேங்கியுள்ள தண்ணீரில், நிலவின் பிம்பத்தைக் காணும்போதும், சிறு காற்றின் அசைவில் அத்தண்ணீர் அசையும்போது நிலவின் பிம்பம் அசைவதையும் கண்டால், அக்குளத்தினுள் சந்திரன் எதையோ தேடுவது போன்றிருந்தது.

     இன்று சந்திரனும் என்னைப் போன்றுதான் இளைத்து வருகிறானோ?  சுக்லபட்சத்தில் சுடர்விட்டு ப்ரகாசித்தவன், இப்போது தேய்பிறையில் ஏனோ தேம்புகிறான்!

      நைவாய எம்மேபோல் நாள்மதியே!  நீஇந்நாள்

     மைவானிருளகற்றாய் மாழாந்து தேம்புதியால்

      ஐவாயரவணைமேல் ஆழிப்பெருமானார்

     மெய்வாசகம்கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே!   

                                                                                              திருவாய்மொழி 2.1.6)

என்ற ஆழ்வாரின் பாசுரத்திற்கு ஆசார்யர்கள் உபதேசித்த அர்த்தம் மனதிலே கனிந்தது.

     முழுமதி இளைத்துள்ளது கண்டு ஆழ்வார் வினவுகிறார்.  வரதனைப் பிரிந்த ஏக்கத்தில் தலைமகளாக (பராங்குச நாயகியாக) ஆழ்வாரின் பிரிவுத்துயர் பாசுரம் இது.

    “என்னைப் போன்றே சந்திரனே! நீயும் இளைத்துள்ளாயே!”  என வினவுகிறார்  நிற்கின்றதெல்லாம் நெடுமால் என எல்லாவற்றிலும் எம்பெருமானைக் காணும் ஆழ்வார், இப்போது சந்திரனும் பெருமாளின் பிரிவினால் வாடுகிறதோ!  என்று எண்ணுகிறார்.

     “அமுதைப்பொழியும் நிலவே!  நீ இப்போது இந்த இருளை ஏன் அகற்றவில்லை  உன் ஒளி ஏன் மங்கியது?  உன் மேனியின் வாட்டத்தின் காரணம்தான் என்ன?  ஓ…  நீயும் என்னைப்போன்று எம்பெருமானின் வார்த்தையில் நம்பிக்கை வைத்துப் பின்னர் அவனால் ஏமாற்றத்திற்குள்ளானாயோ?”  “மாசுச:” “கவலைப்படாதே” என்று அபயமுத்திரை அளித்தவன் ஏமாற்றினானே.

     “ஓ அவன் பழகுமவர்களின் இயல்பினைப் பெற்றிருப்பவன் தானே என்ற ஆழ்வார்,  அப்படி யாருடன் பெருமாள் பழகினான்?  அவர்களைப் போன்று இவனும் எப்படி பொய்யனானான்?”  விதியின் பிழையால் ஒளியிழந்த மதியின் நிலை கண்டு மேலும் விவரிக்கிறார் ஆழ்வார்.

     “நம் வரதன் கொடுமையான இக்கலியுகத்தில் “அனந்தன்” எனும் ஆதிசேஷனால் ஆராதிக்கப்படுகிறானல்லவா!  மேலும் அனந்தசயனனாக ஆதிசேஷன் மீது (அனந்தசரஸில்) பள்ளி கொள்கிறானன்றோ!  அனந்தன்  எனும் பாம்புக்கு இரண்டு நாக்குகள் உண்டோ? அதாவது, பொய் பேசுபவரை இரட்டை நாக்குடையவர் என்பர் பெரியோர்  அனந்தனான ஆதிசேஷனுடன் பழகுபவனான வரதனும் பொய் பேசி உன்னை ஏமாற்றினானோ  வெண்ணிலவே!”  என்கிறார். 

    “மேலும், வரதனின் ஆயுதங்கள் அழகு.  அவற்றினுள் அழகோ அழகு சுதர்ஸந சக்ரம்.  எதுவொன்று மேன்மேலும் பார்க்கத் தூண்டுமோ,  அதுதானே சுதர்ஸனம்”.  அந்த திவ்ய சக்ரத்தின் கதையைக் கேளுங்கள்.

     “கௌரவ, பாண்டவ யுத்தத்தில் அபிமன்யுவை அந்யாயமாகக் கொன்றான் ஜெயத்ரதன்.  இன்று சூரிய அஸ்தமனத்திற்குள் அவனைக் கொல்கிறேன் என சபதம் செய்தான் அர்ஜுனன்.  அர்ஜுனனின் சபதம் காக்க சுதர்ஸந சக்ரம் சூரிய ஒளியை மறைத்து,  பகலின் நடுவே இரவு வந்தது போன்றதொரு மாயத் (பொய்த்) தோற்றத்தை விளைவித்தது.  இருள் சூழ்ந்தது என எண்ணி குதூகலித்த ஜயத்ரதன் வெளியே வர, சுதர்ஸன சக்ரம் விலகி, சூரியன் ஒளிவிட, அர்ஜுனன் அவரைக் கொன்றான்.”

     இப்படி பகல் நடுவே இரவழைக்க வல்லான் சுதர்ஸனன் செய்ததும் வஞ்சனை தானே.  இருநாக்கு பாம்புடனும், வஞ்சனை செய்யும் சக்கரத்துடன் பழகும் வரதன், ஏமாற்றாமலிருப்பானா!”

     ஆழ்வார் ப்ராகாரத்தின் நடுவே கம்பீரமாகத் தோன்றும் நம்மாழ்வாரின் சன்னிதியும், அதன் மேலே முகிழ்த மதியும் கண்டபோது, நமக்குள்ளும் ஆழ்வாரின் இந்த பாசுரமும், அர்த்தமும் தோன்றியது.

     அப்படியானால் வரதன் வஞ்சனை செய்பவந்தானா!  நாயகி நிலையில் ஆழ்வார் பாடியது நம்மைப் பொறுத்த வரையில் இன்று நிஜமாகத் தோன்றுகிறதே!  என் விதியை என் என்பது?

     எப்போதும் உடன் இருப்பதாகச் சொன்னவன், இன்று விட்டுச் சென்றுவிடுவானோ?  அப்படியெனில் கவலைப்படாதே என்பதின் பொருள் ப்ரமையா?

     தொண்டரடிப் பொடியில் பூத்துக் குலுங்கும் மகிழ மரத்தின் சுகந்த பரிமள வாசனையை சுமந்து வரும் காற்று, நெஞ்சத்தை நிறைத்தது.  சோகத்தால் கனத்திருந்த நம் இதயத்தில் நுழைந்து, நுரையீரலில் புகுந்த அந்த வாசனை, சற்றே ஆறுதலளித்தது.  இதுபோன்ற அமைதியான சூழலில், ஆழ்வார் பாசுரங்களையும், ச்லோகங்களையும் அர்த்தத்துடன் அசைபோடுவது ஆனந்தமளிக்கும்.  ஆனால் இப்போதோ, உள்ளத்தில் ஓசையில்லை… உதடுகள் ஒட்ட மறுக்கின்றன.  ஒளியில்லாத பார்வையுடன், எதையும் கவனிக்கும் மனநிலையின்றி, ஒலியில்லாத வார்த்தைகள் இதழின் ஏக்கத்தைத் தெரிவித்தன.

    இதயம் கனத்திருந்தால் இதழால் இயம்ப முடியுமா? உலர்ந்த உதடுகள் ஒலியின்றி உச்சரித்தன. வ…. ர….. தா….    வ….ர…..தா….” என்று…

     பாக்கியத்தின் பக்குவத்தில் எழுந்த ஓசையெனில் விண்ணதிர வரதா என ஒலித்திருக்கும் சோகத்தின் சாயலில் சுவாரஸ்யமின்றி சுருண்டன அந்த வார்த்தைகள்.   ஆம்… இன்னும் சற்று நேரத்தில் எம் அத்திவரதன் அனந்தசரஸினுள் அமிழப் போகிறான்!!  சம்சார சாகரத்தில் அமிழ்ந்த எம்மைக் காக்கப் பிறந்தவன், பாற்கடலுள் பையத்துயிலும் பரமன், அனந்தன் மீது பள்ளிகொள்ளும் ஆதிப்பிரான், அனந்த கல்யாணகுணங்களுடையவன்,  அனந்தசரஸினுள் மீண்டும் செல்லப் போகிறான்!!

     பிரியமானவனைப் பிரிய மனமின்றி பிரியாவிடை கொடுக்கத் தெரியாமல் தவியாகத் தவிக்கும் போது, உதடுகள் உலர்ந்துதானே போகும்… தனிமையில் உள்ளத்துள் அழுவதை இந்த ஊருக்குப் புரிய வைத்திட முடியுமா?

     ஆயாசத்தின் ஆதிக்கத்தால், நெஞ்சத்தின் பாரத்தை சுமக்க முடியாமல் நூற்றுக்கால் மண்டபத்தின் குளக்கரைப் படிகளில் அமர்ந்தேன்.  கனத்த இதயம் கண்களைத் தானாக மூடியது வ….ர….தா… என ஒருமுறை வாயால் சொன்னாலும் மூச்சுக்காற்றின் வெம்மை உள்ளத்தின் வெறுமையைக் காட்டியது.

     கலக்கத்தில் கண்கள் மூடினவேயன்றி களைப்பில் மூடவில்லையன்றோ! அதனால் உறக்கம் எப்படி வரும்?  சில நொடிகள் சென்றிருக்கும்.  சிலீரென்று ஒரு ஸ்பரிசம்!!!!   இதுவரையிலும் உணர்ந்திராதது!!  ஆயிரம் வெண்மதியின் அனைத்து குளிர்ச்சியும் ஓரிடத்தில் ஸ்பரிசித்தால் எப்படி இருக்குமோ அதுபோன்று…

     மேனி சிலிர்த்த அந்த ஸ்பரிசம் தொடர்ந்திடாதா? என ஏங்க வைத்தது.

     ‘தனிமையில் தவிக்கும் நம்மைத் தொடுபவர் யார்?’ என தலையைத் திருப்பினால்….

      திசைகள் அனைத்தும் எழும்பிட ஒரு திகைப்பு உண்டானது.  இது திகைப்பா! அல்லது தித்திப்பா என் எதிரே நிற்பவன் …. நிற்பவன்…. தடுமாறித்தான் போனது உள்ளம்..

     “என் எதிரே நிற்பவன் தேவாதிராஜனா!!!. அத்திவரதனா!!! மும்மறையின் முதல்வனா!!! மூலமென ஓலமிட நின்றவனா!!!”

     திருவபிஷேகமும், திருக்குழைக்காதுகளில் கர்ணபத்ரமும், பங்கயக்கண்களும், பவளச் செவ்வாயும், திருக்கையின் திவ்ய ஆயுதங்களும், காண்தகு தோளும், திருமார்பு நாச்சியாரும், அனந்தநாபியும், அரைச்சிவந்த ஆடையும், ஆதிவேதத்தின் அனுபவம் கமழும் பாதகமலங்களும் சோதிவெள்ளமென சுடரிடும் ஆபரணங்களுடன் அருள்வரதன் என் முன்னே நின்ற பெருமையை எவ்வண்ணம் பேசுவேன்? எவரிடம் விளக்குவேன்?

     என்னைத் தொட்ட கைகள் இமையோர் தலைவனதா?  கருடனையும், அனுமனையும் அணைத்த கைகளா?  பெருந்தேவியுடன் பிணைந்த கைகளா? ஹஸ்திகிரிநாதனின் ஹஸ்தமா(கையா) அடியேனை ஸ்பரிசித்தது!!!!!

     என் உள்ளத்தை உணர்ந்தான் உரக மெல்லணையான்…. ஓதநீர் வண்ணன் மெலிதாக நகைத்தான். மந்தகாசப் புன்னகையின் மாறாத பொருள் கவலைப்படாதே“..

    “வ…. ர….. தா..” திகைத்தவன், திடுக்கிட்டு நான் எழுவதற்குள், தோளைத் தொட்டு அழுத்தி அமர வைத்தான் துழாய்முடியான்.

    அவனும் அருகே அமர்ந்ததை யாரிடம் சொன்னால் நம்புவர்?!!!!!!

     பிரமனின் யாகத்தில் வபை எனும் திரவியம் சேர்த்த போது அவதரித்தான் வரதன்.  அதனால் அவனது அதரத்தில் இன்றும் வபையின் பரிமளம் வீசுகிறது. வபையின் வாசனை, பெருந்தேவியின் தழுவலில் அவளின் திருமார்பக சந்தனத்தைத், தான் ஏற்றதால் வந்த பரிமளம், தனக்கு நிகர் எவருமில்லை என தன்னொப்பாரைத் தவிர்த்திடும் துளசிமாலையின் திவ்யசுகந்தம் என வேதக்கலவையின் பொருளானவன் இன்று வாசனைக் கலவியில் வந்தமர்ந்தான்.

     இமைக்க மறந்து இமையோர் தலைவனைக் கண்டேன்! எழுதவறியாத எம்பெருமானைக் கண்டேன்.  ஓவியத்தில் எழுதவொண்ணா உருவத்தைக் கண்டேன்.  ஆர்ப்பரிக்கும் உணர்ச்சிகள் உந்தித்தள்ள நிலைதடுமாறின என்னை, மென்மையாக ஆச்வாசம் செய்தான் ஆனைமலை நாயகன்.

     “முப்பது நாட்களுக்கு முன்பு நமது உரையாடலை நாடறியச் செய்தாயே! இன்று உனக்கு என்ன ஆயிற்று?  ஏன் இந்த வாட்டம்?”

     அனைத்துலகும் காக்கும் அருளாளன், அனைத்துக்கும் அதிபதியானவன், அடியேனை ஆறுதல்படுத்தக் கேட்கிறான் இது உண்மையா? அல்லது பிரமையா?

     “வரதா….. வரதா…. என் ப்ரபோ! தேவாதிராஜா! மாயம் செய்யேல் என்னை. உன்னைப் பெற்று அடியேன் எப்படி இழப்பேன் என்று தேம்பினேன்.

     “என்னது என்னைப் பிரிகிறாயா?  யார் சொன்னது? உன்னையும், என்னையும் பிரிக்க யாரால் முடியும்?” சற்றே குரலில் கடுமையுடன் வரதன்.

    “இல்லை வரதா! இன்னும் சற்று நேரத்தில் நீ குளத்தில் எழுந்தருளி விடுவாயே! அப்புறம் உனைக்காணும் பாக்கியம் எனக்குண்டா?” அந்த ஏக்கம் எனக்கில்லையா?” என்றேன்.

    நிவந்த நீண்முடியன் சற்றே குனிந்து எனது முகத்தை நிமிர்த்தி என் கண்களை ஊடுருவிப் பார்த்தான்.

     அம்புஜலோசனின் பார்வையின் கூர்மை தாளாமல் தலையை கவிழ்த்துக் கொண்டேன்.

     “இந்த உலகம்தான் பைத்தியக்காரத்தனமாக உளறுகிறது என்றால், உனக்கென்ன ஆயிற்று?” வரதன் குரலில் கடுமை…

    புரியாமல் பார்த்தேன்.

     “உன்னுள் மறைந்திருக்கும் நான், இக்குளத்தினுள் மறைந்தால், வாடுவாயோ?”

    “இதோ…. தூர்வாரி, பழுதுகளை நீக்கி பராமரித்து, தெளிந்த தீர்த்தத்துடன் உள்ள இக்குளத்தில் இருப்பது போன்றுதானே உன் மனதிலும் மூழ்கிட ஆசைகொண்டேன்…

     “கோபம், பொறாமை, ஆசை, கள்ளம், கபடம் என்று மனதில்தான் எத்தனை வகையான சேறுகள்!!  அதையெல்லாம் தூர்வாரி துடைத்தெறிந்து என்னை அனுபவிக்கத் தெரியாத நீ,  குளத்தினுள் நான் செல்ல கவலைப்படுகிறாயா? முட்டாள்….” என்று சீறினான் வரதன்.

     வ….ர….தா…. என நான் பேசத் தொடங்குமுன், நில்.. குறுக்கே பேசாதே! நாற்பது நாட்களுக்கு மேலாக மலையில் சென்று மூலவரையும், உற்சவரையும் சேவிக்க முடியவில்லையே! என்று ஏங்கியவன்தானே நீ!!…” – வரதன்.

     “ ஆமாம்..” – அடியேன்.

     அங்குள்ளவனும் நான்தானே! என்னை வெளியே வைத்தாலும், உள்ளே வைத்தாலும் உற்சவரின் உற்சவங்களால்தானே காஞ்சிக்கும் எனக்கும் பெருமை….” – வரதன்.

     தலையாட்டினேன் ஆமாம் என்று.

     “இப்போது எந்த உற்சவமாவது பழைய பொலிவுடன் பெருமையுடன் கம்பீரமாக நடந்ததா? சொல்… என்றான்.

     “ஆனால் வரதா! அத்திவரதரை தரிசிக்கத்தான் நாள்தோறும் பக்தர்கள் அலையலையாகப் படையெடுக்கின்றனரே!”

     “நான் அதையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.   இந்த மண் பக்தி மணம் கமழும் மண் என்பது மறுபடியும் நிரூபணம் ஆகியுள்ளது.  ஆனாலும் இந்த மக்களின் செயல்பாடு சற்று வருத்தமளிக்கிறது – வரதன்.

     வரதனே பேசட்டும் என மௌனம் காத்தேன். 

     “இப்போது ஓடோடி வருபவர்கள் இதே பக்தியினை இனியும் வெளிப்படுத்துவார்களா அத்திவரதர் ஊடகங்களுக்குச் செய்தியாகிவிட்டார். அத்திவரதர் உள்ளே போகலாமா?  கூடாதா?” என்றும் பட்டிமன்ற பொருளாகிவிட்டார்?  ஆதியுகத்து அயன் கண்ட அற்புத உற்சவங்களைத் தடுப்பதற்கு அவதரித்தவராகி விட்டார்“.

     எம்பெருமானின் இந்தப் பேச்சின் வேகத்தில் திடுக்கிட்ட சில பறவைகள்,  ராஜகோபுரத்தின் பொந்திலிருந்து படபடத்துப் பறந்தன.

     “இப்படியெல்லாம் ஊரார் என்னைப் பேசும்படி செய்துவிட்டனர் சிலர்.   நான் பத்திரமாக உள்ளே எழுந்தருள வேண்டும் என நீயும்தானே விரும்பினாய்?” வரதனின் கேள்வி.

     “நிச்சயமாக வரதா! அதுவும் உனது திருவுள்ளம்தானே! உனது தரிசனம் பக்தி வளர்த்தது நிதர்சனம்.  ஆனால் நடைமுறைக்கு ஒவ்வாத திட்டங்களை சிலர் செயல்படுத்த முனைந்தனர்.  அவ்விதம் நிகழ்வது பல பெரிய குழப்பங்களை உண்டாக்கும்.  ஆதலால் நன்கு தீர்மானித்து எல்லோரும் விரும்பும்படியான ஒரு நல்ல தீர்வை எடுக்க வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன்.  ஆ……னா….ல்….

    “ஆனால் என்ன?”… வரதன்.

     “எனது கருத்தில் முக்யமானதை விட்டுவிட்டு, அவரவர்கள் தங்களுக்குத் தோன்றியதையெல்லாம் பேசவாரம்பித்து விட்டனர்.  இது வருத்தத்தினால் விளைந்த கருத்து என்பதை உணராமலேயே தங்களின் சுய காழ்ப்புணர்ச்சியை விமர்சனமெனும் பெயரில் வெளியிட்டனர்.”

    “இங்குள்ள மக்களும் இங்கு வரும் பக்தர்களும் படும்பாட்டைக் காணும்போது, எவருக்குமே இது புரியுமே!!  அதற்காக உன்னைப் பிரிய நாங்கள் இசைந்தோம் என்பது பொருளாகிவிடுமா நடைமுறையின் சில அசாத்யங்களை இவ்வுலகம் உணரவில்லையே!  ஏறத்தாழ ஒரு நாஸ்திகனின் நிலையில் அடியேனை விமர்சிக்கின்றனரே!” அழுகையுடன் அடியேன்….

    ஹா…… ஹ…… ஹா….. எனச் சிரித்தான் அருளாளன்.

    “இதற்குத்தான் வருத்தப்படுகிறாயா என் குமரா?!!” என்றான்.

     விழிகளின் ஈரத்திரைகளின் ஊடே புரியாமல் அவன் முகத்தைப் பார்த்தேன். புன்னகை மாறாமல் பேசினான் புண்யகோடீச்வரன்.

    “நல்லதொரு ஆசார்யன் மூலமாக நம் சம்ப்ரதாய அர்த்தங்களை அறிந்தவன் தானே நீ?” வரதனின் கேள்வி.

   “என்ன சொல்ல வருகிறான் எம்பிரான்?” எனப் புரியாமல் ..மா..ம் என மெதுவாகத் தலையசைத்தேன்.

   “கீதையில் நான் சொன்னதை உனது ஆசார்யார் விளக்கியிருப்பாரே!” நினைவுபடுத்திகிறேன் கேள்.

    “ அர்ஜுனா! இன்னமும் இந்த உலகம் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. மனிதபாவனையுடனே என்னைப் பார்ப்பதால் எனக்குரிய மதிப்பளிப்பதுமில்லை என்று சொன்னேனே…. என்னையும், எனது உபதேசங்களையும் புரிந்து கொள்ளாத இவ்வுலகம்,  உன்னைப் புரிந்து கொள்ள வேண்டுமாம்!!  இன்னமும் நான் நாலாயிரம் அவதாரம் எடுத்தாலும் இவர்கள் இப்படித்தான்….”

     சத்யவ்ரதன் சத்யமான உலகியல்பைப் பேசினான். 

     “ஆம் ப்ரபோ! எனது சுவாமி தேசிகனும் உன் விஷயமான ஸ்தோத்ரத்தில்,  நிலையில்லா மனமுடைய மாந்தர், நிலையான உன்னை, உன் உண்மையை உணரவில்லையே!” என ஏங்குகிறாரே!” – அடியேன்.

     “ம்ம்.. சரிதான். இதையெல்லாம் அறிந்துமா உனக்கு வருத்தம்! ராமனையும், கண்ணனையும் ஏன் ராமானுஜனையும் தேசிகனையுமே குறைகூறும் இவ்வுலகம், உன்னை மட்டும் ஏற்கும் என்று எதிர்பார்க்கிறாயா?”

     பதில் சொல்லத் தெரியாமல் மௌனமாகத் தலைகுனிந்தேன்.

     “ஸர்வஜ்ஞனாகிய (எல்லாம் அறிந்தவனாகிய) என்னாலேயே இவர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.  சாமான்யன் உன்னால் முடியுமா?”

    “அது சரி, நான் இன்னமும் எவ்வளவு நாட்கள் தரிசனம் தந்தால் எல்லோரும் விரும்புவார்கள்?” என்றான் வரதன்.

    “ஒருசிலர் நூற்றியெட்டு என்கின்றனர் வேறு சிலர் நிரந்தரமாகவே நீ வெளியே சேவையாக வேண்டுமென்கின்றனர்.  உன் திருவுள்ளம் என்ன வரதா?” – அடியேன்.

     மறுபடியும் ஹா…. ஹ….. ஹா…… என்றவன், என்னை என்றுமே அனுபவிக்க வேண்டுமெனும் ஆவலில் அவர்கள் பேசுகின்றனர்.  அதிலொன்றும் தவறில்லை. ஆனால் எனது இந்த அர்ச்சா மூர்த்தியும் அவதாரம்தானே?!” – வரதன்.

     “அதிலென்ன சந்தேகம் வரதா! ஆகமங்கள் உனக்கு ஐந்து நிலைகளை அவதாரங்களாக அறிவிக்கின்றன.” – அடியேன். 

    “அப்படியானால் ராம க்ருஷ்ண அவதாரங்களைப் போன்று, ஒரு காரண கார்யத்தில் அவ்வப்போது அவதரிக்கும்(தோன்றும்) நான், அது முடிந்தவுடன் அந்த அவதாரத்தை முடித்துக் கொள்கிறேனல்லவா!” – வரதன்.

    நான் மௌனமாகவே இருந்தேன்.

     “நாற்பதாண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்திலிருந்து வெளியே வந்து அருள்பாலிப்பது ஒரு அவதாரம் போன்றுதானே! அது முடிந்தவுடன் மறுபடியும் மறைகிறேன்.  இதை உலகம் புரிந்து கொள்ளாமல் போகலாம். உனக்குமா புரியவில்லை?” – வரதன்.

    “ராமனும், கண்ணனும் தங்களது அவதாரத்தை முடித்துக் கொண்டு சென்றபோது, இவ்வுலகம் பட்டபாட்டை புராணங்களில் அறிகிறோமே வரதா!!! அதுபோன்றுதான் உன்னைப் பிரிய மனமின்றி தவிக்கிறோம் – எனது ஏக்கம்.

    மீண்டும் ஹா….. ஹா…..

    “ஊருக்கெல்லாம் உபந்யாசம் செய்யும் திறமை பெற்றவன் நீ – எனக்கும் நன்கு உபதேசிக்கிறாய்!” – வரதன்.

    “ஐயோ! ப்ரபோ! ப்ரபோ! அபசாரம்…..” பதறினேன்.

   “ஏனடா பதறுகிறாய்? நான் பழக்கி வைத்ததை, ஒரு கிளி போன்று என்னிடம் பேசுகிறாயே! நான் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன் இது உனது ஆசார்யன் சொன்னதுதானே!.”

   “அடியேன்… தேசிகனல்லால் தெய்வமில்லை..”

    “ம்ம்…. ம்….” என வரதன் விழிகளைச் சுழற்றி உதடுகளைக் குவித்தது அதியத்புதமாக இருந்தது.

    அந்த அழகில் மயங்கி அப்படியே நின்றேன்.

    “ஏன் பேசவில்லை பிள்ளாய் உன் மொழி கேட்கத்தானே நான் வந்தேன்… வரதன். 

    “என்னுடை இன்னமுதே! வானவர்தம் ஈசனே! மெய்நின்று கேட்டருள். அடியேனின் விண்ணப்பம் ராமாவதாரத்தில், உன்னைப் பிரிய மனமின்றி நதிகளும், குளங்களும், மரங்களும், பறவைகளும், மீன்களும்கூட கதறியழுதன என்றில்லையா!”

     “கண்ணனாக மாயம் செய்த உன்னைக் காணாமல் உயிர் தரியேன் என உத்தவர் ஓலமிட்டு அழவில்லையா?  நாங்கள் தபோவலிமையற்றவர்தாம்…. ஆனால் உனது பிரிவு எங்களுக்கு இனிக்குமா இத்தனை நாட்களும் உன் பெருமை பேசிவிட்டு இனி வெறுமையாக எப்படி இருப்பது?”

    “நன்று நன்று..” என ஆனந்தமாகத் தலையசைத்தான் ஆனையின் துயர் தீர்த்தவன்.

     “ராமாவதாரம் போன்று என்னுடன் எல்லோரும் வருவதற்குத் தயாராகவுள்ளனரா? அல்லது க்ருஷ்ணாவதாரத்தில் கோபிகளைப் போன்று என் நினைவிலேயே இருப்பவர் எத்தனை பேர்?” வரதன் வினவினான்.

    “உண்மைதான்… அந்த அளவிற்குப் பக்குவப்பட்ட பிறவிகள் இல்லை நாங்கள்.  ஆனாலும் உனது பிரிவு பேரிழப்புதானே” – அடியேன்.

    “பிரிகிறேன், பிரிகிறேன் என்கிறாயே! நான் எங்கு செல்கிறேன் இதே குளத்தினுள்தானே!. மேலும் எனது ஏனைய நிலைகள் மூலவர், உற்சவர் என்றுமே உங்களுடன்கூடியது தானே… ராம, க்ருஷ்ண அவதாரம் போன்று ஒட்டுமொத்தமாக விடுத்துச் செல்லாமல், என்றுமே என்னை அனுபவிக்க அளித்த அர்ச்சையின் மேன்மைதனை எப்பொழுது புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?”

    “அத்திவரதனாகிய நான், உனது அந்தர்யாமி. உன் உள்ளத்துள் உறைபவன்தானே… ஏதோ காரண காரியத்தால் இக்குளத்தினுள் அமிழ்ந்துள்ளேன் இது தேவரகசியம்!!!! தேவாதிதேவன் எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!! உள்ளே செல்லும் எனக்கு வெளியே வரத் தெரியாதா? நான் எந்த அரசாணைக்குக் காத்திருக்க வேண்டும்?

     “தர்மத்தை நிலைநிறுத்த எனது அவதாரம். அதைத்தான் எவ்வளவு பேர்கள் புரிந்து கொண்டு அதன்படி நடக்கின்றனர்?  இந்த நாற்பது நாட்கள் என்னைக் கொண்டாடுமவர்கள், தொன்றுதொட்ட பழக்கங்களான உற்சவங்கள் செவ்வனே நடைபெறவில்லை என்று உணர்ந்தனரா!”

    வரதனின் வார்த்தைகள் நடுவே குறுக்கிடுவது கூடாது என்று அமைதி காத்தேன்.

    சற்றே வேகம் தணிந்தவனாக என்னைப் பார்த்து கனிவான குரலில் மீண்டும் பேசினான்.

    “அதுசரி! என்னை நினைத்திருக்கும் நீ நித்யோத்சவரை மறந்து விட்டாயா? அவர்தானே என்றுமே உங்களுடன் கலந்திருப்பவர்!!”.

    திடீர் தாக்குதலாக வரதனின் கேள்வியில் நிலைகுலைந்து போனேன்.

    “என்ன! என் பெருமானை மறப்பதா அவனை சேவிக்க முடியவில்லையே எனும் ஏக்கத்தில்தானே ஓர் அறிக்கை சமர்ப்பித்தேன்.   ஆனால் அதன் கருத்தை ஆஸ்திகர்கள்கூட சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே!  இன்னமும் என்னை திட்டித் தீர்த்து வருகின்றனர் என் இயலாமையைக் கொட்டினேன்.

    ஆறுதலாகக் கரம் பிடித்து ஆச்வாசம் செய்தான் அரவிந்தலோசனன்.

    “நீ பெரியோர்கள் தாள் பணிந்து சம்ப்ரதாய பொருள் அறிந்தவன்தானே! இவர்கள் உன்பால் கொண்ட விரோதம் உனது பாபங்களைப் போக்குமென்பதை நீ அறியாயோ?”

    வாஞ்சையுடன் வரதன் விரல் பிணைத்தான் அந்தத் தீண்டுமின்பத்தில் திளைத்த அடியேன் திக்குமுக்காடிப் போனேன்.

   “வரதா! ஒரு பாசுரம் பாடட்டுமா?” என்றேன்.

    ஹா.. ஹா… எனச் சிரித்தவன், நான் வருவதற்கு முன்பு நம்மாழ்வார் பாசுரத்தைக் கொண்டு சந்திரனைக் கண்டாயே! அது போன்று மறுபடியும் பாசுரமா?” வினவினான் வரதன்.

   வெட்கத்தில் தலை கவிழ்ந்தேன்.   என் உள்ளத்துள் உறையும் இவனை அறியாது ரகசியமாக என் எண்ணங்களை வளர்த்தேனே!  இஃதென்ன முட்டாள்தனம்!”.

    என் மௌனம் கலைத்து ஆதிப்பிரான் பேசினான்.  “நானன்றி உன்னை உரிமையுடன் யார் சீண்டுவார்?  சரி.. சரி.. அந்த பாசுரத்தைச் சொல். உன் உபந்யாசத்தை நான் ரசிப்பேன் வரதன்.

         “விடுவேனோ? என் விளக்கை என் ஆவியை

           நடுவே வந்து உய்யக்கொள்கின்ற நாதனை”

                                                                                        (திருவாய்மொழி 175)

என்று முடிப்பதற்குள் முந்திக் கொண்ட வரதன்,  இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்றான்.

    “வரதா! பூர்வர்கள் காட்டிய விரிவுரை ஒருபுறம்…. இங்கு இப்போது எனது அனுபவம் மறுபுறம் என்றேன்.

    “அதைத்தான் சற்று விளக்கமாகக் கூறேன்..” என்றான் ஆழியான்.

     “என் விளக்கைஅதாவது, வரதா, எனக்கு ஜ்ஞானம் தந்து ஆட்கொண்ட விளக்கு நம் வரதன். கரிகிரிமேல் நின்றனைத்தும் காக்கும் கண்ணன்..“.

    “ம்… சரி… வரதன்.

    “என் விளக்கை விடுவேனோ! – என் வரதனை மறப்பேனா?”.

    “என் ஆவியை விடுவேனோ? – என் ஆவி பெருந்தேவி… இந்த ஆத்மாவுக்கு உயிரளித்து என்னைக் காக்கும் அன்னை.. அவளை விடுவேனா.. மறப்பேனா?..” அடியேன்.

    “அடடே… ம்… அப்புறம் மேலே சொல்…. வரதன்.

   நடுவே வந்து உய்யக்கொள்கின்ற நாதனை விடுவேனோ?” என அத்திவரதனைக் கைகாட்டினேன்… 

    “பேஷ்…. பேஷ்… என்றான். 

    “வரதா…. 

இவர்கள் நடுவே வந்து என்னை உய்யக் கொண்டாய்… 

என் வாழ்வின் நடுவே வந்து உய்யக் கொண்டாய்… 

குளத்தின் நடுவே வந்து உய்யக் கொண்டாய்… 

நாற்பது நாட்கள் நடுவே வந்து உய்யக் கொண்டாய்…

மேலே சொல்ல முடியாமல் தழுதழுத்த என் தலை கோதின தேவராஜன், உன் மனது எனக்குத் தெரியும் பிள்ளாய்..” என இதயம் வருடுகிற வார்த்தைகளை ஒலித்தான்.

     “வரதா! தரிசனம் காக்கவே இன்று தரிசனம் தந்தாய் நீ… ஆனால் தரிசு நிலமான இம்மனசில் உன் அனுபவம் இன்னமும் நிறையவில்லையே என ஏங்குகிறேன் என்று தேம்பினேன்.

   “அதை அனுபவிக்க ஆழ்வார்களே ஆசைப்பட்டனர்.  நீ எம்மாத்திரம் எனப் புன்னகைத்தான்…

   “பிள்ளாய்… உரையாடல்கள் போதும். உள்ளத்தில் வருத்தத்தை விடு.. உயர்வான உற்சவங்களும், உற்சாகமான உபயவேத கோஷ்டியும் காத்திருக்கிறது.  இனியென்ன கலக்கம்?” வரதன் விழி துடைத்தான்.

   உண்மைதான்.  மயர்வற (சந்தேகமற) என் மனத்தே மன்னினான் அத்திவரதன் அயர்வில் அமரர் ஆதிக் கொழுந்தாகச் சுடர்விட்டவனை, பாதாதிகேசம் தொழுதேன்.  எனது துயரங்கள் பறந்தோடின.

    நான் ஏன் கலங்க வேண்டும்? எனக்கென்ன குறை!! ஆள்கின்றான் ஆழியான்… ஆரால் குறை நமக்கு?… இதோ இக்குளமும் உண்டு.  இக்குளத்தில் நித்யகர்மானுஷ்டானம் செய்யும் பரமைகாந்திகளின் குலமும் உண்டு என்றுமே வரதன் எமக்கெதிரே சேவையாகிறான் என் பாட்டனாராம் ப்ரம்மதேவன் சேர்த்த அழியாத பெருஞ்செல்வம், அத்திமலையில் நிரந்தரமாகக் குவிந்துள்ளதே…. அள்ள அள்ளக் குறையாத செல்வமன்றோ!

    துயரறு சுடரடி தொழுதேன்.. வரதா…. வரதா…. என்றேன்.. இப்போது அவனது திருக்கையில் “மாசுச: – கவலைப்படாதே” எனும் எழுத்துக்கள் தெளிவாக மின்னியது.. திவ்யமான தேஜோமயமாகத் திருக்குளத்தினுள் இறங்கினான் அத்திகிரியான்.  சரயூவில் இறங்கிய ராமனைத் தழுவிய சரயூ போன்றும், கண்ணனின் காலடி வைப்பில் களித்த யமுனை போன்றும், அனந்தசரசின் புன்ணியதீர்த்தம் வரதனின் திருமேனியைத் தீண்டி மகிழ்ந்தது.  அனந்தனாம் நாகராஜன் அழகிய படுக்கையாகக் காத்திருந்தான்.  வரதனின் முழுதிருவுருவமும் நீருக்குள் மறைந்தது.  குளத்தின் தண்ணீர் போன்று என் நெஞ்சமும் தெளிந்தது.

    ஆம்… வரதன் அனந்தசரஸினுள் புகவில்லை.  இந்த அனந்தன் எனும் அடியேனின் உள்ளக் குளத்தினுள் அமிழ்ந்தான் – திருமாமகளைப் பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட பேரருளாளனார்.  இருபத்திநான்கு படிகளிலும் நீர் நிறைந்தது.  இருபத்திநான்கு அதிர்வேட்டுக்கள் முழங்கின!!!

    விழிகளின் ஓரம் திரண்ட துளிகளைத் துடைத்துக் கொண்டேன்.  இது சோகத்தின் வடிவமல்ல… ஆனந்தத்தின் அலைகள்.  ஆகையால் இந்தக் கண்ணீரை வரதனும் விரும்புவான். 

    ராமனைப் பிரிகிறோமோ என்று குளத்து மீன்கள் வெந்தன அயோத்தியில்! வரதனைத்  தாங்கள் மீண்டும் பெற்றோமே என்று அனந்தசரஸ் மீன்கள் துள்ளிக் குதித்தன!! மீன்களாம் நித்யசூரிகளுக்கு இங்கேயும் வரதானுபவம்!! 

    பொழுது புலரும் பின்மாலைப் பொழுதாகியது.  இப்பொழுது பார்த்தபோது வானத்து சந்திரன் சுடர்விட்டுத்தான் விளங்கினான்.  எனது கலக்கம் நீங்கியது போன்று அவனது களங்கமும் நீங்கியது. கதிரவன் தனது கிரணங்களை புண்யகோடி விமானத்தின் மீது படரவைத்தான். 

    ஏறத்தாழ ஒரு மண்டலம் தவிர்ந்து வைதிகர்கள் தங்கள் நித்யகர்மானுஷ்டானத்திற்கு திருக்குளத்தில் நீராட வந்தனர்.  அடியேன் மெதுவாக திருக்குளத்தை வலம் வந்தேன்.  தூரத்தே உடல், திருச்சின்னம் சப்தம் கச்சியின் மதிள்களில் எதிரொலித்தது. 

    ஆஹா, இதைக் கேட்டு எவ்வளவு நாட்களாகி விட்டன. அமைதியான காலையில் ராமானுஜரின் சாலைக்கிணறு தீர்த்தம் வரதனுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.  அதற்காகத்தான் திருச்சின்னம் ஊதுகின்றனர். 

     சோதியனந்தனாக, கலியில் ஸ்ரீராமானுஜர் அன்றோ வரதனுக்கு திருவாராதனம் செய்கிறார்!  இனி தீர்த்தாமாடி மலைக்குச் சென்று, பெருமாளையும் பெருந்தேவியையும் சேவிக்கவேண்டும். 

     காஞ்சியின் வீதிகளில், பெண்கள் கோலமிடத் தொடங்விட்டனர். வேதபாராயணம் மாடவீதி ப்ரதக்ஷிணம் செய்கின்றனர்.  ஆனிரைகளும் அழகாகச் சாலைகளில் படர்கின்றன.  இனி வாசலில் எழுந்தருளப்போகும் வரதனை வரவேற்கக் காத்திருப்போம்!!

அன்புடன்,

ஏபிஎன்.

Athi Varadan Special – Varadan’s wish by Sri APN Swami, Art by Sri Keshav

Sri #APNSwami #Writes #Trending | வரதனின் விருப்பம் – 01| Varadan’s Wish – 01

Varadan’s Wish – Concept Sri APN Swami, Art by Sri Keshav
Note: Scroll down to read the article in Tamil & translation in English.

 

               வரதனின் விருப்பம் – 01

(By Sri APNSwami)Varadan Athivaradan.jpg

வரதனின் விருப்பம்

முழுநிலவாகப் பௌர்ணமி சந்திரன் ஒளிவீசிப்படர்ந்திருந்தான். அப்பொழுதுதான் மழைபொழிந்து ஓய்ந்திருந்ததால் மேகங்கள் நிலவை மறைக்காமல் நகர்ந்திருந்தன.  மேகத்திரள்களின் நடுவே ஆங்காங்கு நட்சத்திரங்களும் கண்சிமிட்டின.  இன்னும் சற்றுநேரத்தில் சந்திர க்ரகணம் சம்பவிக்கப் போகிறதாகையால், இனம் தெரியாத நிசப்தம் எங்கும் குடிகொண்டிருந்தது.  வான்தூறல்கள் விழுந்ததால் வெப்பம் தணிந்து சில்லென்று மெல்லிய காற்று மேனியை வருடியது.  ஆளரவமற்ற திருக்கோயில் வளாகம்.  அத்திவரதரை சேவிக்க வந்த கட்டுக்கடங்காத கூட்டம் கலைந்து சென்றுவிட்டது.   இனி அடுத்த நாள் அதிகாலை தான் தரிசனம் என்பதால் திருக்கோயில் வளாகம் அமைதியாகயிருந்தது.  ஏறத்தாழ நள்ளிரவுப்பொழுது நெருங்கும் சமயம்.  கடமையாற்றிய காவலர்களும் களைப்பின் மிகுதியால் கண்ணயர்ந்துள்ளனர்.  அனந்தசரஸ் புஷ்கரிணியைச் சுற்றிலும் பாதுகாப்புகள் உள்ளதால் எவரும் உள்ளே நுழைய முடியாது.  ஆனால் இதையெல்லாம் தாண்டி யாரும் அறியாவண்ணம் ஒரு நெடிய கருத்த உருவம் குளத்தின் படிகளில் அமர்ந்திருந்தது.

முகிலுருவமாக திருவுருவம் இருந்தாலும் கும்மிருட்டிலும் சோதிவடிவமாகக் காட்சியளித்தது.  குளத்தில் எதிரே தெரியும் அத்திவரதர் கோபுரத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்த அவ்வுருவம் அவ்வப்பொழுது தனக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தது.  மெலிதாக தலையை இடதும் வலதுமாக ஆட்டுவதும், கைகளை பிசைவதும், ஆகாயத்தை அண்ணார்ந்து பார்ப்பதுமாக ஏதோ தீவிரசிந்தையில் ஆழ்ந்துள்ளது தெரிகிறது.  நிலவின் ஒளியில் அவ்வுருவத்தை நெருங்கிப்பார்த்தால் ” இவரை எங்கோ பார்த்த மாதிரியுள்ளதே;  யார் இவர்?” என யோசிப்பதற்குள்…

“ஆஹா! புரிந்தது.  இவர் அத்திவரதர்.  வசந்தமண்டபத்தில் இருந்து எப்படி வந்தார்?  என்ன யோசனை செய்கிறார்?”  என்று நாம் நினைத்துகொண்டிருக்கும் போது  யாரோவரும் காலடி ஓசை கேட்கிறது. சட்டென்று நாம் குளத்தின் சுற்றுச்சுவர் நிழலில் ஒதுங்கி மறைந்துக்கொள்கிறோம்.  நடப்பவற்றை அங்கிருந்து வசதியாக கவனிக்கவும்  முடியும்.

காலடி ஓசை வரவர சற்றே பெரிதாகிறது.  அத்தி வரதனை இரண்டு நெடிய உருவங்கள் நெருங்குகின்றன.   “இவ..…ர்…..கள்,…..இவ…ர்…..கள்….” நமது யோசனை தடுமாறுகிறது.  உண்மையிலேயே கண்களை நம்பமுடியவில்லை. குளத்தின் படிகளில் அமர்ந்திருக்கும் அத்திவரதரை நெருங்குபவர்கள் சாக்ஷாத் உற்சவர் வரதனும், மலைமேல் நிற்கும் மூலவரும்தான்.  இதென்ன அதிசயம்!

 “நாம் காண்பது கனவா, நினைவா?  புரியவில்லை. மூன்று நிலைகளாக வரதன் நம்முன்னே நிற்கிறானா ? “, வரதா!  வரதா! என்று எண்ணுவதற்குள் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.

உற்சவர் வரதன் மெதுவாக “அத்திவரதா!” என அழைத்தான்.

முழுதும் சிந்தனையில் முழுகிக்கிடந்த அத்திவரதன், வரதனின் வார்த்தைகளை காதுகளில் வாங்கிகொள்ளவில்லை.

“அத்திவரதா!….அத்திவரதா” சற்றே மீண்டும் பலமாக அழைத்தபின் “என்ன!” என திடுக்கிட்டுத் திரும்பினான் அத்திவரதன்.

நெருங்கிய வரதன் அத்திவரதனின் இடதுகையினைப் பிடித்தபடியே “என்ன சிந்தனை!” என்று வினவினான்.

    “வரதா! மறுபடியும் குளத்திற்குள் போய்விடமாட்டோமோ?  எதற்காக வெளியே வந்தோம்?  எனும் எண்ணம் தோன்றுகிறது” – அத்திவரதன்.

(உற்சவரும் மூலவரும் திடுக்கிட்டு) “என்ன? அதற்குள்ளாக மறுபடியும்  ஜலாதிவாசமா?”

“ம்….ம்..” அத்திவரதன்

“ஏன்? என்ன ஆயிற்று?  நாற்பத்தியெட்டுநாட்கள் முடிவதற்குள் குளத்துக்குள் எழுந்தருள என்ன அவசரம் ?” மூலவர்.

“ப் ச் “என சலித்துக்கொண்ட அத்திவரதன் “நான்கூட மிகுந்த உத்ஸாஹத்துடன்தான் உள்ளிருந்து வெளியேவந்தேன்.  குளத்தினுள் சேற்றில் அமிழ்ந்துகிடந்த என்னைக்கண்டதும் கைங்கர்யபரர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் ” அத்திவரதா…. அத்திவரதா” என கோஷமிட்டதும் உள்ளம் நெகிழ்ந்தேன். நாற்பதாண்டுகள் கழிந்து இப்புதிய உலகைக் காணப் போகிறோமே எனும் உத்ஸாகம் எனக்குள்ளும் ஊற்றெடுத்தது.  இங்கு நடப்பது எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.  ஹ்ம்ம்… உங்களுக்கு என்ன?  நீங்கள் எப்போதுமே வெளியே இருந்து உத்சவம் கண்டருளுபவர்கள்  – அத்திவரதன்.

“அஃதென்ன சொல்கிறாய் அத்திவரதா?  நாங்கள் இருவரும் (மூலவரும், உத்சவரும்) எப்போதும் வெளியே இருக்கிறோம்.  அதனால் என்ன? அதற்கும் உனது வருத்தத்திற்கும் என்ன சம்பந்தம்? – உத்சவர் வரதன்.

” உற்சவரான நீயோ பிரமனின் அயமேத வேள்வியில் தோன்றியவன்.  உனது உத்சவமோ:  அது ஒரு தனி ஸ்டைல்.  எந்த பெருமாளுக்கும் இப்படி உத்சவம் கிடையாது.  எங்க தலைவர் ஸ்டைல் தனி தான்” என்று எப்போதும் உன்னை பின்தொடரும் ரசிகர் பட்டாளம்.  பிரம்மோற்சவம்  ஆரம்பித்தால் போதும் இங்குள்ளவர்களுக்கு தலைகால் புரியவில்லை மற்றும் பக்தர்கள் எங்கிருந்தெல்லாமோ  ஓடி ஓடி வருகிறார்கள்.

“அதெல்லாம் இருக்கட்டும் அத்திவரதா நீ என்னதான் சொல்ல வருகிறாய்?”

“இதோ இந்த மூலவர் இருக்கிறாரே!  என்ன அழகு!  என்ன கம்பீரம்! உத்சவருக்கு ஈடுகொடுக்கும் திருமேனி.  அவ்வப்போது திருமஞ்சனம், புஷ்ப அங்கி”, என தினந்தோறும் கொண்டாட்டம் தான்.

அதற்குள் மூலவர்குறுக்கிட்டு “ஓய்! அத்திவரதரே! என் விஷயத்தை முழுதும் அறியாமல் பேசுகிறீர்.  உற்சவர் மலையிலிருந்து இறங்கிவிட்டால் மூலவரை சேவிக்கக்கூடாது!  என ஊர்கட்டுப்பாடு உண்டு.  வெளியூர் சேவார்த்திகள் வந்தால், அவர்கள் பஸ்சிலிருந்து இறங்கும் போதே “பல்லி தரிசனம்” தேடுகிறார்கள்.  பல்லியா! பகவானா என்றால் பல்லிதான் அவர்களின் சாய்ஸ். ஆலயத்திற்கு வருமானமே பல்லிதான் தெரியுமா!”

“இன்னொன்றையும் சொல்கிறேன் கேள் ” – மூலவர்

“மூலவரே மூச்சு விடாமல் பேசினீரே! அந்த இன்னொன்று என்ன! அதையும் சொல்லும்” – அத்திவரதன்.

   “உற்சவரோ யாகத்தில் தோன்றியவர்.  அத்திவரதன் நீயோ ஆதி மூலவர். ஆழ்வார், ஆசார்யர்கள் உன்னை சேவித்ததுதான் பாடினார்கள்.  அதனால் நீ தான் மேன்மையானவன்.   நானோ! பழையசீவரத்திலிருந்து புதியதாக வந்தேனாம்.  என்ன இருந்தாலும் ஆதிவரதர் ஆதிவரதர் தான்.  இவர் பாதியில் வந்த வரதர்” என என் காதுபடவே பேசுகின்றனர்.  உண்மையில் நான் தான் குளத்தினுள் அமிழவேண்டும் – மூலவர்

“மூலவரே! நமது குறைகள் இருக்கட்டும்.  அத்திவரதர் எதனால் இப்படி துக்கப்படுகிறார்?  எனும் கேள்விக்கு இதுவரை விடையில்லையே?” உற்சவர் வரதன்.

“வரதா! நான் என்னத்தைச் சொல்ல!  ஏதோ சில காரணங்களால் என்னை குளத்தில் எழுந்தருள பண்ணினார்கள்.  அதன் பின்னர் நான் வெளியே தெரிந்தேன்.  இதனால் நாற்பதாண்டுகள் எனும் கணக்குமுறை வைத்து வெளியே தரிசனம் செய்யவைத்தனர்.  இரண்டொருமுறை நாற்பதாண்டுகள் கணக்கு முன்பின் மாறியுள்ளது. சரிதானே!!” – அத்திவரதர்.

“ஆமாம் சரிதான். அதற்கென்ன இப்போது ?” – இருவரும்.

ஆழ்வார்களும், ஆசார்யர்களும் தரிசித்த, பாடிய, என்னை சேவிப்பது பக்தர்களுக்கு பாக்யம்தான்.  ஆனால் என் பெயரைச்சொல்லி என்னென்னவோ நடக்கிறது.  ஒரு புறம் ஜோஸ்யகாரர்கள், கடக ராசிக்கு கன்னத்தை சேவியுங்கள், மகர ராசிக்கு மூக்கை சேவியுங்கள், தனுர் ராசிக்கு தாமரைக்கண்களை சேவியுங்கள் என்று எனது அவயவங்களை பன்னிரெண்டு ராசிகளுக்கு பிரித்துக்கொடுத்துவிட்டனர்.  போதாக்குறைக்கு விஐபிக்கள் எனும் பேரில் நாஸ்தீகர்களின் கும்பல் வேறு.

“அத்திவரதா! நீ யாரைச் சொல்கிறாய்?”- உற்சவர்.

” நான் யாரையும் குறிப்பிட்டுச்சொல்லவில்லை.  நாக்கில் நாத்திகத்தை சுமந்துகொண்டு, மனதில் பக்தி பூண்டு, மக்களை ஏமாற்றும் கும்பலை பொதுவாகத்தான் சொன்னேன்.  நெஞ்சுநிறைய அழுக்குடன் வந்து என்முன்னே நின்று நகைக்கும் போது அவர்களை பார்க்கவே பிடிக்கவில்லை.  அதே சமயம் வரிசையில் வரும் பக்தர்களை கண்டால் சற்று ஆத்திரமாகவும் உள்ளது.

“பொதுமக்கள் என்ன செய்தார்கள் பாவம்? கால்கடுக்க க்யூவில் நின்றுதானே வருகின்றனர்” – மூலவர்.

“ஆமாம், ஆமாம், நாத்திகரையும், தெய்வநிந்தனை செய்பவரையும், இந்து மதத்தை படுகேவலமாகப் பேசுபவர்களையும் தூக்கிவைத்து கொண்டாடிவிட்டு இப்போது கூட்டத்தில் என்னை தரிசிக்க திண்டாடுகிறார்களாம்.  திண்டாடட்டும் திண்டாடட்டும்.”

வேகமாக பேசியதில் சற்றே மூச்சிறைத்தது அத்திவரதனுக்கு.  அவன் தன்னை ஆச்வாஸம் செய்துகொள்ளட்டும் என மற்ற இருவரும் அமைதி காத்தனர்.  சற்று மூச்சுவாங்கி இந்த மக்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள். தெய்வத்தை நிந்திப்பவர்கள் சொல்லும் பசப்பு வார்த்தைகளில் மயங்குகிறார்கள், ஆனால்  தெய்வத்தின் வார்த்தைகளை நம்புவதில்லையே! – அத்திவரதன்

  “நான் கூட திருக்கச்சிநம்பிகள் மூலம் ராமானுஜருக்கு ஆறுவார்த்தைகள் சொன்னேன்.  நானே பரம் தத்வம் என்றும், சரணாகதிதான் மோட்சத்திற்கு வழியும் என்றேன்.  அதையெல்லாம் இப்போது யார் நினைத்துப்பார்க்கிறார்கள்” – உற்சவர் வரதர்.

“அதைத்தான் நானும் சொல்கிறேன்.  எதை முக்கியமாக கவனிக்க வேண்டும், எது தேவை;  என அறியாமல் திண்டாடும் கூட்டம் இது.   அதனால்தான் சில சுயநலவாதிகள் தங்களின் ஆளுமையில் இவர்களை வைத்துள்ளனர். “அத்திவரதர் இப்போது அரசியல் ப்ரமுகர்களுக்கும், திரைப்ரபலங்களுக்கும், முன்புறம் நாஸ்திகம் பேசி, முதுகுக்குப்பின்னே ஆஸ்தீக வேஷம் போடுபவர்களுக்கும் அனுக்ரகம் செய்கிறார்”;  எனும் பேச்சு என்னைக்குறித்து மக்கள் பேசவாரம்பித்துவிட்டனர்.   இது எனக்கு தேவையா?

மூலவர் சிரித்துக்கொண்டே “ப்ரபலமான தூர்தர்களையும் விவிஐபிக்களாக்கினார்களே! அத்திவரதரே அதை சொல்ல மறந்தீரே”

எரிச்சலுடன், “நான் ஏன் மறக்கிறேன்.  நன்றாக நினைவிருக்கிறது. மொத்தத்தில் என்னை தெய்வமாக பார்க்காமல் அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் ஒரு இயந்திரமாகக் காண்கின்றனர்.  என்னால் இதை ஏற்க முடியவில்லை.  அதனால் தான் உடனே மறுபடியும் குளத்தினுள்  செல்கிறேன் என்றேன்”.

“அத்திவரதா!  ஒரு மண்டலத்திற்கே உனக்கு இப்படியிருக்கிறதே!  என் மனக்குமுறல்களை நான் யாரிடம் கொட்டித்தீர்த்துகொள்வது.  பெரியோர்களே வர வர இக்காஞ்சியில் குறைந்து விட்டனர் ஒருவேளை யாராவது  ஒரு பெரியவர் இருந்தாலும் அவர்களுக்கு மதிப்பு கிடையாது.  உத்சவங்கள் நடை பெறுகின்றன.  உண்மையான பக்தர்கள் ச்ரத்தையுடன் கைங்கர்யமும் செய்கின்றனர், சேவிக்கின்றனர்.  ஆனாலும் ஏதோ குறைந்தது போல் இருக்கிறது.  என்ன மூலவரே நான் சொல்வது சரிதானே!” – உற்சவர் வரதன்.

மூலவர் “சரிதான்” என மெலிதாக தலையசைத்தார்.

“அத்திவரதா! உனக்குத் தெரியாததா! இந்த மக்கள் இன்று நேற்றல்ல ஜென்மஜென்மத்திற்கும் விளம்பரம், கவர்ச்சி, பொய்யுரைகள், போலிமுகங்கள், இதற்கு அடிமைகள்.  நம்மை சேவித்த சந்தோஷத்தைவிட வரும் விஐபிக்கள், விவிஐபிக்கள் இவர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துகறதுல ரொம்ப ரொம்ப ஆவலாக உள்ளனர்!

“அவ்வளவு ஏன்? என்னுடைய சித்ரா பௌர்ணமி நடவாபி உத்சவம் , சினிமாவில் வந்த நீருக்குள் பொம்மை பெருமாள், சேலம் பட்டை கோயில் அத்திமர பெருமாள் இதையெல்லாம் அத்திவரதர் என்று fake news பிரச்சாரம் தானே இவர்களுக்கு ஒரிஜினலாக தெரிகிறது.  இன்னொரு காமெடி அத்தி வரதா “உனக்கு முத்தங்கின்னு திருப்பதி கோவிந்தராஜன் முத்தங்கியை காண்பித்து ஆயிரம் like போடுகிறார்கள்”. ஒரு பக்தர் கைவண்ணத்தில் உருவான கிராப்ட் பெருமாள் போட்டோ போட்டு இதை ஏழுபேருக்கு அனுப்பினா ஏழு ஜென்மம் மோட்சம்னு சொல்றா! ஹாஹா…ஹா…….. – உற்சவர் சிரிக்கிறார்

” வரதன் சொல்றது சரிதான்.  நாற்பது வருடமா உள்ள இருக்கறதால இந்த உலகம் தெரியல. ஆண்டாளையும், கண்ணனையும் அவதூறு பேசினவர்கள் அருள் வேண்டி வருகிறார்கள்.   ஓட்டு வாங்கும் சமயத்தில் மக்களை நாடி வருவதைப்போல, இங்கு வருவது யாரை ஏமாற்றுவதற்கு?  இங்கு வருவதை மக்கள் புரிந்துக்கொள்ள மாட்டேனென்கிறார்களே!

“நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் சரி.  நான் வெளியே வந்து மக்களுக்கு தரிசனம் கொடுத்ததின் நோக்கம் தர்மம் வளரணும், ஆன்மிகம் செழிக்கணும். ஆடம்பரமும், பகட்டும் இல்லாத சாமானிய பக்தன் மனம் குளிரணும். குறிப்பா நாஸ்திகம் அழியணும்.”

“இல்……ல…..வ…..ர….தா”  என இடைமறித்தார் மூலவர்.

“மூலவரே! நம்மை வேண்டி வரும் பக்தர்களின் விருப்பத்தை நாம் நிறைவேற்றுவது போல, நமது பக்தர்கள்;  எனது இந்த ஆசையை நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் எனது அருள் அவர்களுக்கு முழுமையாகும்.”

“அது எப்படி?” – உற்சவர்

“இனிவரும்காலங்களிலாவது இந்துக்கள் ஒன்று கூடவேண்டும்.  ஏறுமாறாகப் பேசுபவர்கள் இனியும் வாய் திறக்க பயப்படும்படி பதிலடி கொடுக்க வேண்டும். இது போன்ற பக்திவெள்ளத்தை சாதகமாக்கிக்கொண்டு தர்மராஜ்யம் உண்டாக்கப்பாடுபடவேண்டும்.  தெய்வநிந்தனை செய்து வஞ்சனையுடன் கபடமாகப் பழகுகிறவர்களின் பணத்திற்கு மக்கள் மயங்கக்கூடாது.

“விஐபிக்கள் என்னை வந்து பார்ப்பதைப்பெருமையாக நினைத்து விளம்பரம் தேடிக்கொள்ளலாம்.  ஆனால் ஆறுமணிநேரம் வரிசையில் நின்றுவரும் கடைகோடி பக்தனைத்தான் நான் கடாட்சிக்கிறேன்.  அதே சமயம் அந்த பக்தன் இவர்களின் பகட்டை பார்த்து மயங்கக் கூடாது.  தர்மத்தை நிலைநாட்ட நான் தண்ணீரிலிருந்து அவதரித்ததை சாமானிய பக்தன் உணர வேண்டும்.  நான் மீண்டும் வெளியே வரும் நாற்பது ஆண்டுகளில் இந்து தர்மம் எங்கும் நிலைநின்று பொய்யானவர்கள் புறமுதுகிட்டிருக்கவேண்டும்”.

“அத்திவரதா! பக்தர்களின் விருப்பத்தை பூர்த்திசெய்யும் உனக்கும் ஒரு விருப்பமோ!  என ஆச்சர்யமாகவுள்ளது.  இருந்தாலும் உன்னுடைய இந்த திருஉள்ளத்தை யார் அறிவார்கள்?  மக்களுக்கு இது எப்படி தெரியும்?” – உற்சவர் வரதர்

“இதோ நாம் பேசுவதையெல்லாம் சுவற்றின் பின் மறைந்திருந்து கேட்கிறானே! அவன் மூலமாக உலகறியச்செய்யலாம்.   இந்த பேச்சுவார்த்தை அப்படியே மக்களுக்கு சென்று சேரட்டும். இனியாவது ஆஸ்திக உலகம் விழித்துக்  கொண்டு நாஸ்தீகர்களை கொண்டாடாமல் இருக்கட்டும். அதோ! மக்கள் நேற்றிரவு முதல் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.  இன்று புதிய பட்டாடையில் அவர்களுக்கு தரிசனம் தர வேண்டும்.  வாருங்கள் போகலாம்.”….

எத்தனையோ பிறவியில் செய்த பாக்கியத்தின் பயனாக எம்பெருமான்களின் உரையாடல் காதில் விழுந்தது.  இது அத்திவரதனின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, ஏக்கமும் கூட.  நம் சனாதன தர்மம் தழைத்திட இனியாவது சிந்தியுங்கள்.

அன்புடன்,

ஏபிஎன்.

Varadans Wish – 01

(English Translation of the Original Tamil Article by Sri APN Swami)

It was a beautiful and clear full moon night. The clouds were scattered and in between them, the stars shone brightly in the sky.  A lunar eclipse was going to take place in a few hours and there was an eerie silence all over, as if the entire world was waiting in anticipation of this event.  There was a chill breeze in the air that felt soothing after the long and hot day.

The temple was deserted.  All the people who had come to pray to Athi varadar had left for the day and since the next darshan was only in the morning, there was a complete silence in the premises.  It was almost midnight and even the tired policemen who diligently discharged their duties, were taking rest.  The temple tank was cordoned off to prevent anyone from entering it, but there lurked a dark figure on the steps of the temple tank.

The divine face seemed to have a touch of radiance and this person sat facing the mandapam in which Athi varadar was kept.  The figure nooded his head from left to right, clasped his hands, looked at the sky and seemed to be disturbed about something. A closer look made me wonder that I had seen this face somewhere.  But before I could gather my thoughts, it struck me.  “Oh my! This is Athi varadar! How did He come here from Vasantha Mandapam?”   While these thoughts were running in my mind, I suddenly heard some footsteps.  Immediately, I went and hid myself in the shadows of the tank wall and watched the proceedings from there.

The sound of footsteps became louder.  Seeing them, I felt confused because I didn’t know if this was a dream because the two figures coming towards Athi Varadar were none other than Utsavar Varadan and Moolavar Varadan. What a sight, I thought!

Seeing the three forms of Varadar, my mind went berserk . I screamed in my mind, “Varada! Varada!”

Utsavar Varadan gently called out, “Athi Varada.” but Athi Varadar didn’t hear these words as He was deeply engrossed in His thoughts.  Again, Utsavar Varadan called out in a higher tone, “Athi Varada…Athi Varada,..”  This sound shook Athi Varadar from His thoughts and He turned around sharply.  Utsavar moved closer, held His hand and asked gently, “What are you thinking?”

“I feel like going back to the temple tank.  I don’t know why I even came up in the first place”, lamented Athi Varadar.

Utsavar and Moolavar were shocked to hear these words.  “What? Why do you want to go back so quickly”, they asked.

“Mmmm…mmmm…” – Athi Varadar

“Why?  What happened?  You’re here only for 48 days, so why are You in a hurry to go back inside?” – Moolavar.

Athi Varadar sulked at this question and said, “I was excited to come out after 40 years because I thought I was going to see the world and all the changes that happened it since the last time.  I felt elated when the Kainkaryaparars chanted ‘Athi Varada’ as they lifted Me out of slush. But all this excitement has vanished into thin air, seeing all the happenings in this world.  You’re the lucky ones as You get to enjoy all the utsavams.

Utsavar Varadan responded, “Yes, Moolavar and I get to see everything.  But what has that go to do with Your worry?”

“You’re the Utsavar who came out of Brahma’s Ashwamedha yagam.  And you have a unique style as no other Perumal has utsavams that are as grand as Yours.  You even have a following that thoroughly enjoys Your style and beauty and believe that You’re the most special Perumal in the whole world. In fact, none of these people can even stand on their feet when Your Brahmotsavam begins.  People come from all parts of the world to see and enjoy Your beauty during these utsavams.” – Athi Varadar.

“Ok, leave all that. What are You trying to say?” – Utsavar

“See this Moolavar. His beauty is on par with that of the utsavar.  He also gets to enjoy Thirumanjanam (Abhishekam), flower garlands, and everything.”

Before He could complete, Moolavar intervened and said, “Hey! Athi Varada! You don’t know My state.  When Utsavar climbs down, no one should climb up to see Moolavar. That’s the rule of this land and is followed by all the locals.  As for outside pilgrims, they come to see the “Golden Lizard” more than Me. If they have to decide between the two of us, all of them choose the lizard. In fact, the lizard is a major revenue stream for the temple! And that’s not all.  Utsavar emerged from the yagam and you Athi Varadar is the foremost deity as all the Azhwars and Acharyas have sung on You.  As for Me, I came from Pazhaya seevaram to replace You.  So, people naturally say Athi Varadar is always the prime deity and this moolavar is someone who came recently.  Hearing all this, only I should go inside the temple tank.”  By the time Moolavar finished, He was almost out of His breath.

Utsavar said, “Moolavar, hold on!  We came here to listen to Athi varadar’s problems and we haven’t heard the reason for his lament yet.”

“What do I say Utsavar?  Due to the then prevailing circumstances, people decided to keep Me under the temple tank. One fine day, I was seen and keeping this count, people bring Me out once every forty years. Sometimes, this count goes off by a year or two.  Am I right?,  asked Athi Varadar.

“Yes, that’s right!” said both Moolavar and Utsavar in unison.

“It is definitely a blessing for people to pray to the One on whom azhwars and acharyas have sung many devotional songs and hymns.  But, then so much is happening under My name.  Astrologers, for example, are saying that people belonging to Kadaka raasi should pray to My cheeks, people of makara rasi should pray to My nose, people of Dhanur rasi should pray to My eyes and more.  They have split my body into 12 parts for the 12 zodiac signs! To top it, atheists comes under the garb of VIPs to take my darshan.” – Athi Varadar

“Athi Varada, whom are You talking about?” – Utsavar Varadan

“No one in particular.  I was talking about those who talk about atheism when they have strong religious beliefs in their minds and effectively fool people with their words.  I don’t even feel like seeing such people who come and stand in front of Me, but have so much dirt in their minds.  Also, I feel a bit frustrated for the people who come in long queues to pray to Me.” – Athi Varadar

“What did the common people do? They stand in long queues to come and see You.” – Moolavar.

“Yes, yes! These are the same people who encourage atheists and get swayed by their false words.  And because of these so-called VIPs, they are forced to stand in the queue for long hours. Let them suffer.  That’s when they will realize what they’re doing.” – said Athi Varadar.

Seeing Athi varadar’s breathlessness because of the long and emotional talk, the other two waited for Him to get composed again.  When Athi Varadar felt better, he started again. “What do these people want?  Why are they encouraging the growth of atheists and those who criticize God instead of following My words!”

Utsavar chipped in and said, “Even I told the famous “Six words” to Ramanujar through Thirukachchinambigal.  I clearly said that I’m the supreme and people can reach Me by doing Saranagathi.  Who is remembering all those words now?”

“That’s exactly what I’m saying too.  These people don’t know what is important and what is not and this is why some self-centered people are using their power and authority to manipulate them.  Now, I’m forced to bless those who talk about Atheism for politics and in cinema and behind people’s back, display their religious fervor.  In fact, I heard a few people say that I bless such atheists. Do I really need this?” – Athi Varadar.

Moolavar said with a smile. “Even popular media houses are being treat as VVIPs. Athi Varadar, you forgot to include this group!”

Athi varadar was frustrated by now. “When did I forget? I remember all of it. In all,  no one sees me as a God, but rather as a machine that bestows all their wishes.  I can’t take all this anymore and this is why I said I’d like to go back to the temple tank soon.”

“You have so much frustration for just 48 days.  Imagine, where I can go and pour out my feelings?  The number of learned people have gone down in Kanchi and there is no respect for even the few who continue to live here.  I agree, utsavamas are happening on a grand scale and My true devotees are coming here to pray to Me, but there stills to be some dearth! Am I right, Moolavar?” – Utsavar Varadan. Moolavar gave His consent with a slight nod.

“Athi Varada! Don’t you know this?  This is not the first time that people are behaving this way.  For eternity, they have been attracted towards glamour, advertisements, media, fake people and fame.  They are more interested in taking photos with the VIPs and VVIPs who come to visit Us, rather than praying to Us.  Let me tell you something. During the Nadavaapi utsavam in Chitra Pournami, people spread fake news that the moving doll from cinema and the Perumal made of fig tree from Salem Pattai temple are Athi Varadar.  Worse, people are putting images of Muthangi of Govindaraja Perumal in Tirupathi and are claiming that it is yours.  They are those who put “like” for such images on social media!” , said Utsavar with a laugh.

“Utsavar is right.  You’ve been staying under water for 40 years, so You don’t know how much this world has changed.  People who talked bad about Andal and Krishna are coming to take Our blessings now.  Just like how they go to people for votes just before election, they are trying to fool us too! People don’t understand this either.” – Moolavar.

“I won’t accept any of Your arguments.  I came out of the tank with an intent to help Dharma (righteousness) to grow, religion to flourish and to truly bless the common people.  Mainly, I want atheism to end.” – Athi Varadar

“No, Varada…..” – Moolavar

“Moolavar, listen to Me. Just like how I fulfill the wishes of all the devotees who come and pray to Me, they also have to fulfill My wish.  That’s when my true blessings will reach the,.” – Athi Varadar

“How is that possible?” – Utsavar

“Hindus should come together at least in the future and they should shut the mouths of those who speak wrong and unnecessary things about our religion.  We have to help people make the most of such a wave and re-established Dharmarajyam (Rule of Righteousness).  People should stop falling a prey to the power and money of those who talk lo about our religion.” – Athi varada.

“Though VIPs may deem it as a blessing to come and see Me and can even take photos with Me, but my true blessings only go to those people who are standing in queue for long hours. At the same time, these people should not fall for the glitz of these so-called celebrities by understanding the fact that I emerged to re-established dharmam.  When I emerge after the next 40 years, I should be able to see the might of Hindu religion and its spread across the land. “ – Athi Varadar.

“O Athi Varada! You’re the One who fulfills the wishes of Your devotees. Do You have a wish too? How will people know? Who will tell them?” – Utsavar.

“A man is hiding in the shadows to wall here. Let us ensure that these thoughts reach people through him When this conversation reaches people, let Us hope that they will stop embracing atheists.  People have started lining up. Let’s wear nice clothes to give darshan to them. Let’s go…”

Such a divine conversation has reached us because of the virtues that we have accumulated over the last several births.  This is not just Athi varadar’s expectations, but also his yearning.

Start thinking now so our Sanatana Dharma will flourish.

Translation by APN Swami Sishyas