Sri #APNSwami #Writes #Trending | ஒற்றைத்தலைமையா? இரட்டைத்தலைமையா?

Traditional Trending

ஒற்றைத்தலைமையா? இரட்டைத்தலைமையா?

(02-Sep-2022)

வேதபவனம் எனும் நீதிமன்ற வளாகம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. செய்தியாளர்கள், விமர்சகர்கள், சாஸ்த்ரா பார்வையாளர்கள் என எங்கும் மக்கள் வெள்ளம் குழுமியிருந்தது. Breaking News என்பார்களே அது போன்று ஏதோ பரபரப்பான செய்தியொன்று வெளியாவதற்காக அனைவரும் ஆவலாகக் காத்திருப்பதாகத் தெரிகிறது.

என்ன விஷயம்? என்று நாமும் ஆவலுடன் அருகிருந்தவரைக் கேட்டோம். இது தெரியாதா ஸ்வாமி? ஸ்வாமி பராசரபட்டர், ஸ்வாமி வேதாந்த தேசிகன் எனும் இருவர் அமர்வு (Bench) இன்று ஒரு முக்கியமான தீர்ப்பளிக்க உள்ளனர். அதனால்தான் இத்தனை கோலாகலம் என்றார் அவர்.

இது நமது ஆவலை மேலும் அதிகப்படுத்தியது.

“ஸ்வாமி! என்ன விஷயமான வழக்கு?” – நாம்

“இவ்வுலகிற்கு (அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்டத்திற்கு) ஒற்றைத்தலைமையா? இரட்டைத்தலைமையா? என்பது குறித்து விவாதம் பலநாட்களாக நடைபெற்றுவருகிறது. அதன் தீர்ப்புதான் இன்றையதினம்” என்றார் அவர்.

இப்போது விஷயம் புரிந்த காரணத்தால் நாமும் மக்களின் ஊடே புகுந்து அவர்கள் பேசிக்கொள்வதைச் சற்று கவனித்துக் கேட்டோம்.

“அது எப்படி ஒரு தேசத்திற்கு இரண்டு அரசர்கள் இருக்க முடியும்? அப்படியானால் அது ஈரரசு எனும் தோஷத்தை அடையாதா? ஆதலால் எம்பெருமான் ஒருவனே தலைவன். இதில் மாற்றுக்கருத்து இல்லை” என ஒருசாரார் பேசிக்கொண்டிருந்தனர்.

“ஆம் நாங்களும் இதை ஒப்புக்கொள்கிறோம். ஒற்றைத்தலைமைதான் ஏற்புடையது. அனால் அது பிராட்டியான மஹாலக்ஷ்மியை தலைவியாகக் கொண்டது. அது தான் சரி” என மற்றொரு குழுவினர்.

“ஈரரசு என்பது எக்காலத்திலும் ஏற்புடையது அன்று. இருப்பினும், எம்பெருமானும் பிராட்டியும் சமமான பெருமை பெற்றவர். ஆகையால் சுழற்சி முறையில் தலைமை மாறவேண்டும்” என மற்றொரு வகுப்பினர்.

இந்த விசாரணையில் தங்களையும் மனுதாரராகச் சேர்க்க வேண்டும். எங்களின் கருத்துக்களையும் கேட்ட பிறகே தீர்ப்பளிக்கவேண்டும் என்று வேறொரு குழுவினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அவர்களின் கொள்கையாவது “சுழற்சி முறையில் ஒற்றைத்தலைமை என்பது ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்று இருக்கவேண்டும்” என்றனர்.

அவர்களுள் மற்றொரு சாரார் மும்மூர்த்திகளைத் தவிர்த்து வேறொரு தெய்வத்திற்கே தனிப்பெருமை (தனித்தலைமை) உண்டு என்று வாதிட்டனர்.

இதில் வேதம், இதிஹாஸம், புராணம், ஆழ்வார், ஆசார்யர்களின் அருளிச்செயல்கள் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டன. ஸாங்க்யம், யோகம் முதலிய மாதங்கள் பிறழ் சாட்சியங்களானபடியால் அவைகளை ஏற்கமுடியாது என நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இப்படியாக நடைபெற்ற வழக்கின் தீர்ப்பிற்காக உலகமே காத்துக்கிடக்கிறது.

இருவர் அமர்வின் நீதியரசர்களான ஸ்வாமி பராசரபட்டர், ஸ்வாமி தேசிகன் வந்தமர்ந்ததும் வேதபவன வளாகமே அமைதி காத்தது. நீதியரசர்கள் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினர்.

மும்மூர்த்திகளில் சுழற்சி முறையோ, அவர்களைவிட வேறு தெய்வத்திற்கு ப்ரதானத்துவமோ ப்ரமாணங்களின்படி எங்குமே ஏற்க இயலாமையினால், அந்த மனுக்களை தள்ளுபடி செய்கிறோம். மேலும் பெருமாள், பிராட்டி இருவருக்கும் சமமான பெருமை உள்ளதால் சுழற்சி முறையில் அரசாட்சி என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. எனவே அதையும் தள்ளுபடி செய்கிறோம்.

“பெருமாளோ, அல்லது பிராட்டியோ இருவரில் ஒருவர்தான் தலைமையேற்க முடியும். இல்லையென்றால் ஈரரசு (இரண்டு அரசர்கள்) எனும் தோஷம் உண்டாகும்” என்பது வாதிகளால் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. குலம், குணம், வயது, நடத்தை என அனைத்திலும் பெருமாளுக்கும், பிராட்டிக்கு ஒப்புமை நன்கமைந்துள்ளதை ப்ரமாணங்கள் தெளிவுறுத்துகின்றன. ஒரு இல்லத்தில் கணவன், மனைவி இருவர்க்கும் எல்லா பண்புகளும் இருக்கையிலும், பெண்மைக்குரிய விஷயங்களில் மனைவியும், ஆண்மகனுக்குரிய செயல்களில் புருஷனும் ஈடுபட்டு தங்களுக்குள்ளே கலகம் ஏற்படாமல் குடும்பத்தைக் காப்பாற்றுகின்றனரோ! அஃதே போன்று பெருமாளும் பிராட்டியும் இவ்வுலகைக் காக்கின்றனர். இதை நிரூபிக்கும் பொருட்டு ஓராயிரம் ப்ரமாணங்கள் உள்ளன. ஆகையால் “தம்பதீ தைவதம் ந:” எம்பெருமானும், பிராட்டியும் சேர்ந்து ஒற்றைத்தலைமையாக இவ்வுலகை அருளாட்சி செய்கின்றனர்” என்று தீர்ப்பை வாசித்தவுடன் எங்கும் ஆரவாரம்; ஆர்ப்பரித்த பக்தர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும், ஆடல்பாடலுடன் தீர்ப்பைக் கொண்டாடினர்.

வேதபுருஷன், ஆழ்வார்கள், ஆசார்யர்கள் போன்ற நீதித்துறை (சாஸ்த்ர) வல்லுநர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்ப்பினை வரவேற்றனர். “ஸ்ரீ குணரத்நகோசம்”, “ஸ்ரீஸ்துதி” என தலைப்பிடப்பட்ட இத்தீர்ப்பின் நகல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

பெருமாளும், பிராட்டியும் சேர்ந்த இந்த ஒற்றைத்தலைமை உலகத்திற்கு பரம மங்களம்.

-ஏபிஎன் சுவாமி

02/sep/2022