Sri APN Swami’s #Shishya Writes #Trending | ஸ்வதந்திர தின அம்ருதோற்சவம் | Trending Article

Azadi ka Amrit Mahotsav – ஸ்வதந்திர தின அம்ருதோற்சவம் – आजादी का अमृत महोत्सव – 75th Indian Independence Day Special Article –  ஸ்ரீ APN ஸ்வாமியின்  கருட வைபவம்  மற்றும் சுதந்திர தின  உபந்யாசத்தின் படி எழுதியது.

கச்யப ப்ரஜாபதிக்கு கத்ரு, விநதை என்று இரண்டு மனைவியர் இருந்தனர். அதில் கத்ருவுக்கு பாம்புகள் பிள்ளைகளாகப்  பிறந்தனர். விநதைக்கு ஊனமுற்று பிறந்த பிள்ளையான அருணன், பிறந்தவுடனேயே சூரியனுக்கு ஸாரதியாகச் சென்று விட்டான்.

கத்ரு விநதைக்குள்ளே அடிக்கடி சர்ச்சைகள் உண்டாகும். ஒரு சமயம், இந்திரனுடைய குதிரையான உச்சைச் சிரவஸின் நிறம் குறித்து இவர்களுக்குளே விவாதம் மூண்டது.   உச்சைச் சிரவஸ் முழுவதும் வெண்மை என்று விநதை கூறினாள். உச்சைச் சிரவஸ் உடலில் கருமை நிறமும் உள்ளது என்று கத்ரு வாதித்தாள். மறுநாள் குதிரையை முழுவதுமாகப் பார்த்த பின் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று அவர்கள் முடிவெடுத்தனர். பந்தயத்தில் தோற்றவர்கள் வென்றவர்களுக்கு ஆயுள் முழுவதும் அடிமையாக இருக்க வேண்டும் என்று பந்தயமும் வைத்துக்கொண்டனர்.

கத்ரு தன் பாம்பு பிள்ளைகளில் ஒருவனான கருத்த கார்கோடகனை அழைத்து, உச்சைச் சிரவஸ் வால் பகுதியில் சுற்றிக்கொள்ளும் படி சொன்னாள்.

மறுநாள் விநதையும் கத்ருவும் தூரத்திலிருந்து பார்த்த போது, குதிரையின் வால் பகுதி கருமை நிறமாக தோற்றமளித்தது. கொடிய குணம் கொண்டவளான கத்ரு, வஞ்சனையினால் வென்றாள்.  ஒப்பந்தப்படி தோற்ற விநதை, கத்ருவிற்கும் அவள் பிள்ளைகளுக்கும் அடிமையானாள்.

காலம் கனிந்தது. விநதைக்குப் பிறந்தவனான வைநதேயன்(கருடன்), தன் தாயை அடிமை தன்மையிலிருந்து மீட்க விரும்பினான். அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற என்ன செய்ய வேண்டும் என்று கத்ருவிடம் கருடன் வினவினான்.

பேராசை கொண்ட கத்ருவும் அவள் பிள்ளைகளான பாம்புகளும் தேவலோகத்து அம்ருதத்தைக் கொண்டு வந்து கொடுத்தால் விடுதலை தரலாம் என்றனர்.

தாயின் ஆசி பெற்று, தேவலோகம் சென்ற கருடன் தடைகளைத் தகர்ந்து எரிந்து அம்ருத கலசத்தை தேவர்களிடமிருந்து கை பற்றினான்.

கருடனிடம் தோல்வியுற்ற தேவர்கள், கொடிய பாம்புகள் அம்ருதத்தை உண்டு சாகா வரம் பெற்றதென்றால், மனித குலத்திற்கு ஆபத்து நேரிடும் என்பதை கருடனுக்குப் புரியவைத்தனர். அவர்கள் ஆலோசனை படி  ஒரு நாழிகை மட்டும் அம்ருத கலசத்தை பூலோகத்தில் வைத்துக்கொள்ள கருடன் ஸம்மதித்தான்.

கருடனால் கொண்டுவரப்பட்டு குளத்தின் கரையில் வைக்கைப்பட்ட அம்ருத கலசத்தை கண்டவுடன், பாம்புகள் அக மகிழ்ந்து, குளத்தில் குளித்து விட்டு உண்ண தலைப்பட்டன. ஒப்பந்தப்படி அம்ருத கலசம் கொண்டு வந்ததினால் கருடனும் விநதையும் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டனர்.

பாம்புகள் குளித்துவிட்டு வருவதற்குள் ஒரு நாழிகை ஆன காரணத்தால், அம்ருத கலசம் மறைந்து விட்டது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று பாம்புகள் வருத்தம் அடைந்தன.

அம்ருத கலசம் சுத்தமாக வைக்கப்பட்டிருந்த தர்பை புல்லின் மீது அமுதத் துளிகள் சிந்தியிருக்குமோ என்று நினைத்த பாம்புகள்,  அங்கிருந்த தர்பை புல்லை தங்கள் நாவினால் நக்கின. அந்த தர்பை புல் பாம்புகளின் நாக்குகளை இரு பிளவாகியது. இதனால் தான், பாம்புகளுக்கு இரண்டு நாக்குகள் என்று புராணங்கள் கூறுகின்றன. 

ஏமார்ந்து போன ஸர்ப்பங்கள், சீரிய படி சென்றன. மேலே, கருடனின் வைபவம் அத்யாச்சர்யமாக வர்ணிக்கப்படுகிறது.

அன்னையை அடிமைதளத்திலிருந்து கருடன் மீட்ட இந்தக் கதையை “அம்ருதோற்சவம்” என்று ஸ்வாமி தேசிகன்  கருட பஞ்சாசத் என்னும் ஸ்தோத்திர நூலில் கொண்டாடுகிறார்.

இதே போல் நம் பாரதத்தாயை அடிமைத்தனத்திலிருந்து அவளின் தவப்புதல்வர்கள் மீட்டனர். பாம்புகளைப் போன்ற   கொடிய எண்ணம் படைத்தவர்கள், பாரத அன்னையை விடுவிக்க  பல விதமான எதிர்பார்ப்புகளைத் தெரிவித்தார்கள்.  ஆனால் கருடன் போன்ற பராக்ரமம் கொண்ட நமது விடுதலை வீரர்கள், எவரும் நினைத்துப் பார்க்கமுடியாத பல செயற்கரியச் செயல்களைச் செய்து ஸ்வதந்திர அம்ருதத்தை நமக்களித்து பாரத அன்னையை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்துள்ளனர். எதிர்த்தவர்கள் பாம்பு நாக்கு போல் பிளவுபட்டது கண்கூடு.

இன்று (15-ஆகஸ்ட்-2022) நம் பாரத நாட்டின்  75வது ஸ்வதந்திர தினத்தை அம்ருதோற்சவமாகும் கொண்டாடுகிறோம்.

நம் நாட்டில் ஸகல ஸம்பத்து  பெறுகவும், துஷ்டர்கள் விலகவும்,  அம்ருதம் எடுத்து வந்து, அன்னைக்கு ஸ்வதந்திரம் பெற்றுத் தந்த கருடனை, ஸ்வதந்திர அம்ருதோற்சவ நன்னாளில் வணங்குவோம். தியாகிகளையும் நினைவுகூருவோம்.

குறிப்பு : இந்த வ்யாஸம் ஸ்ரீ APN ஸ்வாமியின்  கருட வைபவம்  மற்றும் சுதந்திர தின  உபந்யாசத்தின்படி எழுதியது. 

இப்படிக்கு
அடியேன்

ஸ்ரீ APN ஸ்வாமியின் காலக்ஷேப சிஷ்யை & SARAN Sevak 

ஸ்ரீரஞ்ஜனி ஜகந்நாதன்

#HarGharTiranga #HarGharTirangaCampaign #AzadiKaAmritMahotsav #HappyIndependanceday #Indiaat75 Sri#APNSwami

Click here to watch SARAN – Traditional Trending Independence Day Upanyasam by Sri APN Swami

To learn Sampradayam in an interesting manner and for more such interesting trending videos/articles do regularly watch Sri APN Swami’s YouTube Channel and his blog website.

ஹர் கர் திரங்கா | Sri APN Swami Writes | 75th Independence Day Special | Sri #APNSwami #Writes #Trending |

வீடுகள்தோறும் மூவர்ண வெற்றிக்கொடி கட்டு

(முகுந்தகிரி Dr. ஸ்ரீ உ. வே. அநந்தபத்மநாபாசார்ய (APN) ஸ்வாமியின் 75வது சுதந்திர தின உபந்யாசத்தின் சுருக்கம்)

To watch the 75th Independence Day Upanyasam by Sri APN Swami Click Here.

Also Read Sri APN Swami’s article on Independence day in 2019. https://apnswami.wordpress.com/2019/08/15/sri-apnswamis-shishya-writes-flag-poles-that-protect-our-mother-land-india/

வந்தே மாதரம் ! பாரத் மாதாவிற்கு ஜயம்!

ஆகஸ்ட் 15 2022 நம் தாய்நாடான பாரத தேசத்தின் 75வது சுதந்திர தினமாகும்.  நம் சாஸ்திரம் விவரிக்கும் பல பண்டிகைகளை  நாம் இல்லம்தோறும் கொண்டாடுகிறோம். அதைப் போல் நம் நாட்டின் சுதந்திர தினத்தையும் இல்லம்தோறும் கொண்டாட வேண்டியதும் சாஸ்திரமே.  இதனையே நம் பாரத பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி தலைமையில் “ஹர் கர் திரங்கா”  என்று இல்லம்தோறும் பாரதத்தின் மூவர்ணக் கொடியினை ஏற்றிக் கொண்டாடும்படி இந்திய அரசு அறிக்கையிட்டுள்ளது. கடைகள் முதல் மாட மாளிகைகள் வரை நாடே விழாக்கோலம்  பூண்டுள்ளது.

வெற்றிக் கொடி கட்டுவது எதற்கு?

உலகெங்கும் பாரதத்தின் பெருமை பரவவும், திக்கெட்டும் வெற்றி கோஷம் முழங்கவும், அனைவரும் இல்லந்தோறும்   வெற்றிக் கொடியினைக் கட்டி கொண்டாட வேண்டும்.  நம் உற்சாகத்தையும், தேச பக்தியையும் வெளிப்படுத்தி, சுதந்திரதிற்காக அனைத்தையும் அர்ப்பணம் செய்தோருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்.  நம் தேசத்தின் கொடி பட்டொளி வீசிப்  பறக்கும் அழகே அழகு.

இல்லங்களில் கொடி ஏற்றுவது என்பது நம் புராண இதிகாசங்களில் பல இடங்களில் காணலாம்.

வேண்டியோரை வரவேற்கும் வெற்றிக் கொடி

விச்வாமித்ரர் ராம  லக்ஷ்மணர்களை மிதிலைக்கு அழைத்து வந்தார். அப்பொழுது, “வெற்றி வீரனான ராமா! வருக! வருக!  தசரத மைந்தனே ராமா! வருக! வருக!  எங்கள் சீதா பிராட்டியை கைப்பிடிக்க வரும் அழகிய மணாளனே ராமா! வருக! வருக! ராமா உனக்கு ஸுஸ்வாகதம்(நல்வரவு) ! உன் வரவு நல்வரவாகுக!” என்று மிதிலை மாடமாளிகைகளில் கட்டப்பட்டிருந்த கொடிகள் ராமனை வரவேற்றன.  பதாகைகள்

(கொடிகள்) பறக்கும் அழகு அவை ராமனை வரவேற்பது போல் இருந்தது என்று கம்பன் வர்ணிக்கிறார்.

கம்ப ராமாயணத்தில் மிதிலைக் கொடிகளின் தோற்றம்

மை அறு மலரின் நீங்கி

   யான் செய் மா தவத்தின் வந்து

செய்யவள் இருந்தாள்’ என்று

   செழு மணிக் கொடிகள் என்னும்

கைகளை நீட்டி அந்தக்

   கடி நகர் கமலச் செங் கண்

ஐயனை ‘ஒல்லை வா’ என்று

   அழைப்பது போன்றது அம்மா!         (480)

         (பால காண்டம், 10. மிதிலைக் காட்சிப் படலம்)

தாமரையில் வசிக்கும் மஹாலக்ஷ்மி,  குற்றமற்ற தாமரை மலரை  விடுத்து, காவல் நிறைந்த மிதிலா நகர் மக்கள் புரிந்த தவத்தால், அழகிய தாமரைக் காடு நிறைந்த  மிதிலையில் வந்து பிறந்துள்ளாள்  என்று கூறியபடி,  மிதிலையில்  உள்ள பெரிய அழகிய  கொடிகள்  கைகளை  நீட்டி  அதாவது (தன்) கைகளை மேலும் கீழுமாக அசைத்துக் காட்டி, தாமரை  போன்ற  கண்களைக்  கொண்ட இராமனை “விரைவில் வந்து சேர்க!” என்று  ப்ரேமையுடன் அழைப்பதைப் போன்றுள்ளது என்று கம்பன் பாடியுள்ளார்.

நிரம்பிய மாடத்து உம்பர்

   நிரை மணிக் கொடிகள் எல்லாம்

தரம் பிறர் இன்மை உன்னி

   தருமமே தூது செல்ல

வரம்பு இல் பேர் அழகினாளை

   மணம் செய்வான் வருகின்றான்’ என்று

அரம்பையர் விசும்பின் ஆடும்

   ஆடலின் ஆடக் கண்டார்.                  (481)

(பால காண்டம், 10. மிதிலைக் காட்சிப் படலம்)

சீதையைத் திருமணம் செய்து கொள்வதற்கு   இராமனைத்   தவிர வேறு  எவர்க்கும்   தகுதி இல்லாமையை  நினைத்து;  அறக் கடவுளே தூது  போய்த் தெரிவிக்க; அளவில்லாத   சிறந்த  அழகுடைய சீதையைத்  திருமணம்  செய்து  கொள்ளும்   பொருட்டு     இராமன் வருகின்றான் என்று மகிழ்ந்து,  தெய்வ மகளிர்  வானத்திலே  மகிழ்ச்சியால் ஆடுகின்ற ஆடலைப்  போல அந்த  நகரத்தில்    நிறைந்துள்ள   மாடங்களையுடைய வீடுகளின் மேலே  வரிசையாக  உள்ள அழகிய  கொடிகள் யாவும் காற்றில்   ஆடுவதை அம்மூவரும் பார்த்தார்கள்.

விரோதிகளை விரட்டி அடிக்கும் வெற்றிக்கொடி

மஹாபாரத போர் நடப்பதற்கு முன்னர்,  போரில் கிருஷ்ணனின் துணை  வேண்டி அர்ஜுனன்  துவாரகைக்கு வந்தான். அதே சமயம் கிருஷ்ணனின் படை பலத்தை வேண்டி துரியோதனனும் துவாரகைக்கு வந்திருந்தான். எம்பெருமான் கண்ணன் துவாரகாதீசன். அவனுடைய ராஜ்யத்தின் ஆளுமையைப் பறை சாற்றும் வகையில் ப்ரஹ்மாண்டமான கொடி துவாரகையில் பட்டொளி வீசிப் பறந்தது. இன்றும்  துவாரகையில் துவாரகாதீசனின் பெரிய கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டுள்ள ஆச்சரியமான  கொடியை ஸேவிக்கலாம்.

ஈண்டு நீ வரினும், எங்கள் எழிலுடை எழிலி வண்ணன்

பாண்டவர்தங்கட்கு அல்லால், படைத் துணை ஆகமாட்டான்;

மீண்டு போக!’ என்று என்று, அந்த வியன் மதில் குடுமிதோறும்

காண்தகு பதாகை ஆடை கைகளால் தடுப்ப போன்ற.

(வில்லி பாரதம் – 2.25.5)

துரியோதனன் துவாரகை நகரத்தினருகில் செல்லும் பொழுது, அந்நகரத்து மதில்களின் மேலுள்ள கொடிகள் காற்றில் இயற்கையில்  பலமுறை அசைதலை, துரியோதனனை நோக்கி “நீ இங்கு வாராதே! திரும்பிச் செல்!” என்று குறிப்புக் காட்டிக் கைகளால் மறுத்துத் தடுப்பது போன்றதென வில்லிபுத்துரார் வருணித்தார். தீய எண்ணத்துடன் வருவோரை விரட்டி அடிக்கும் கொடிகளாக துவாரகை கொடிகள் விளங்கின.

இதே போன்று பாரதத்தின் பெருமைதனை அறிந்து, நட்புக்கரம் நீட்டுவோருக்கு நம் தேசியக் கொடியானது அரவணைத்து வரவேற்கிறது. அதே பாரதத்தின் மீது பொறாமை கொண்டு பகைமை பாராட்டுபவர்களை  நம் தேசியக் கொடியானது அவர்களை விரட்டி அடிக்கிறது.

எவ்வாறு இப்படி ஒரே கொடி இரண்டையும் செய்ய இயலும் ?

இதற்கு மஹாபாரத போரில் அர்ஜுனனின் ரதத்தை ஆராய வேண்டும். அர்ஜுனன் தேரில் ஆஞ்சநேயன் கொடியாகத் திகழ்ந்தார். போரில் அவர் கர்ஜித்தது, ஸிம்ஹ கர்ஜனையாக  பாண்டவர்களுக்கு உற்சாகம் மற்றும் சந்தோஷம் அளிக்கும் சப்தமாகவும், கௌரவர்களுக்கு நடுக்கத்தை உண்டு பண்ணக் கூடிய சப்தமாகவும் இருந்தது என்று ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் விளக்குகிறார்.

நமது பாரத தேசத்தின் கொடியிலும் அசோக சக்ரம் என்னும் வடிவில் விஷ்ணுவின் அம்சமான ஸிம்ஹம் விளங்குகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததன்றோ!  

ஸ்வாமி தேசிகன் யாதவாப்யுதயத்தில் கொடிகள் பறக்கும் அழகை வர்ணிக்கிறார்.  பாரிஜாத அபஹரணம்(கடத்தல்) செய்த பின், தேவலோகத்திலிருந்து  கிருஷ்ணனும் சத்ய பாமாவும், யாரும் நினைத்து பார்க்க முடியாத பெருமை கொண்ட த்வாரகாபுரிக்குத் திரும்பி வந்தனர்.  கருடன் மீது அவர்கள் வரும் சமயத்தில், த்வாரகாபுரியில் அவர்களை வரவேற்கும் வண்ணம் ஜய கொடிகள் பட்டொளி வீசிப்  பறப்பதை ரசித்தார்களாம்.

ஆம், இந்த சுதந்திர தினத்தில் “ஹர் கர் திரங்கா” என்று இல்லம் தோறும் தேசியக் கொடியினை ஏற்றி ஒரு ட்ரோன்(drone) மூலம்,  பறவையின் பார்வை(bird’s eye view) என்னும் படி வானத்திலிருந்து பார்த்தால், அன்று கண்ணன் சத்யாபாமா கண்ட காட்சியாக நம் பாரத தேசம் விளங்குகிறது என்பது பெருமைப்பட வைக்கும் நிகழ்வாகும்.

நம் பாரத தேசம் ஆலயங்கள்  நிறைந்த புண்ய பூமியாகும்.  பல ஆசார்யர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஸித்த புருஷர்கள், ரிஷிகள், முனிகள், சான்றோர்கள்,  மஹான்கள்  எல்லோரும் வாழ்ந்த, வாழும் தேசம்.   அதனால்தான் நாம் நம் தேசத்தை திவ்யதேசமாக கொண்டாடுகிறோம்

நம் தேச பக்தியும், திவ்ய தேச பக்தியாக என்றும் விளங்கட்டும்.  

ஹர் கர் திரங்கா ஆமாம் இல்லந்தோறும் மற்றும் நம் ஹ்ருதய இல்லந்தோறும் “தி ரங்கா” – “The Ranga”

#HarGharTiranga #harghartirangacampaign #AzadiKaAmritMahotsav #HappyIndependanceday #Indiaat75 Sri#APNSwami