Sri APNSwami’s Shishya Writes | அக்னிபத் (Agnipath)

அக்னிபத் (Agnipath)

சில நாட்களாக அக்னி பாதையை (AGNIPATH) பற்றி பல விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த பாதை நமக்கு உகந்ததா இல்லையா என்பதை முயற்சி செய்து  கூட பார்க்காமல் விவாதங்களும் விதண்டா-வாதங்களும்  நம் காதுகளை  துளைத்து கொண்டிருக்கிறது.

இப்பொழுது நாம் நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ராமானுஜர் முதற்கொண்டு வேதாந்த தேசிகன் வரை நமக்கு வியாக்கியானங்கள் மூலமும்    ஸ்லோகங்கள் மூலமும் தெளிவாக காட்டிக்கொடுத்த அக்னி பாதையை பற்றி சிந்திப்போமா.

முன்னொருநாள் பிரமன் தவம் செய்யத் தொடங்கினான். அவன் தன் சொந்த பலத்தினால் தவம் சித்திக்கும் என்று நினைந்து முயலுகையில் அவன் மனம் ஒருநிலை படவில்லை. அப்பொழுது அங்கு தோன்றிய ஆகாசவாணி ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்தால் மட்டுமே அவன் பாபங்கள் அகன்று தவம் சித்திக்கும் என்றது. அதைக்கேட்டு பிரம்மித்துப் போய் நின்றான் பிரமன். அப்பொழுது மீண்டும் அந்த ஆகாசவாணி அவனுக்கு ஒரு சுலபமான வழி காட்டியது. அது மேலும் சத்தியவிரத ஷேத்திரம் எனுமிடத்தில் யாகத்தை செய்ய அது ஆயிரம் அஸ்வமேத யாகங்களுக்கு சமமாகும் என்று கூறி மறைந்தது.

நல்ல ஒரு சித்திரை மாத வளர்பிறையில் ஹஸ்த நட்சத்திரத்தில் பிரம்மா  வபாஹோமம் என்னும் யாகத்தை நடத்த அந்த அக்னி குண்டத்திலிருந்து (அதாவது அந்த அக்னி பாதையிலிருந்து) நம் அத்திகிரி பெருமான் நம் பேரருளாளன் தோன்றினான்.

இந்த இமையோர் தலைவன் உத்தர வேதியில் உதித்த நம் பேரருளாளன் வந்த பாதை அல்லவோ அக்னி பாதை அவன் நமக்கு திருக்கச்சி நம்பிகள் வழியாக ஆறு வார்த்தைகளால் உபதேசித்து வழி நடக்க சொன்ன பாதையோ அல்லவோ நாம் முக்தி அடைய அவன் வழி வகுத்துக் கொடுத்த பாதை இந்த பாதையை தான் நம் ராமானுசரும் தேசிகரும் வாழ்ந்து காட்டிய பாதை….

நம்முடைய இளைஞர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய அரசாங்கம் அமைத்து கொடுத்த பாதை அக்னி பாதை (AGNIPATH) இதேபோல் ஆன்மீக பாதையில் தேசிக பிரபந்தம் ஆன அதிகாரசங்கிரகத்தில் ‘நடைபெற வங்கி பகலொளி நாள் ……………. ……….எழிற்பதம் ஏறுவரே’’ பரமபதம் செல்கின்ற ஜீவன் அர்ச்சிராதி மார்க்கம் வழியே அக்னி முதலாக பல தேவதைகள் வழிகாட்டியபடி பல விதமான இன்பங்களை அனுபவித்தபடி செல்வதுதான் நம்முடைய வாழ்க்கையை சிறப்பாக்கும் என்று ஸ்வாமி வேதாந்த தேசிகன் நமக்கு வழிகாட்டியுள்ளார்.

நம் ஆச்சாரியன் காட்டிக்கொடுத்த அர்ச்சிராதி என்னும் அக்னி பாதை வாழ்வை சிறப்பிக்கும் அதேபோன்று அரசின் அக்னி பாதை தேசத்தை சிறப்பிக்கும்.

தாசன்

பார்த்தசாரதி

23 June 2022