திருவல்லிக்கேணி கண்டேனே! Sri APN Swami Writes Samvadham | Experience about Mylapore Srinivasan @Triplicane Sri Ahobila Mutt – 8-July-2023

குறிப்பு :

சம்பிரதாய உரையாடல்களை எழுதுவது  ஸ்ரீ ஏபிஎன் சுவாமியின் தனிப்பட்ட பாணி என்று கூறலாம். ஸ்ரீ ஏபிஎன் சுவாமியின் ஆசார்யனான ஸ்ரீ உ.வே.புரிசை சுவாமியின் திருவுள்ளப்படி பல உரையாடல் நூல்களை வெளியிட்டுள்ளார். இந்த சம்பாஷணைகளில் (conversations) சுவாமி ராமானுஜர், சுவாமி வேதாந்த தேசிகர் போன்ற நம் ஆசார்யர்கள் பெருமாளுடனும்  பிராட்டியுடனும் பேசிய விஷயங்களை மிகவும் ரசமாக எழுதியுள்ளார்.

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி எழுதிய ஏனைய உரையாடல் வடிவில் இருக்கும் நூல்களாவன –

1. தேவதேவனும் தேசிகனும்

2. அனந்தன் கண்ட ஆனந்தாநுபாவம்

3. நைமிஷத்தில் அநிமிஷர்கள்

4. ஆழ்வாரின் பாபம்

5. ஆசார்யரும் அடியேனும்

6. காண்டகு தோளண்ணல்

7. ஸிம்ஹங்களின் ஸல்லாபம்

8. ராஜராஜர்களின் ஸம்வாதம்

9. திவ்ய தம்பதிகளின் ஸம்வாதம் 

10. அரங்கன் உரைத்த அந்தரங்கம்

11. இடைமறித்த  இமையோர் தலைவன்

12. வரதனின் விருப்பம் – 1

13. வரதனின் விருப்பம் – 2

14. விச்வ(வா)மித்ரர்களின் ஸம்வாதம்


ஸ்ரீ:

திருவல்லிக்கேணி கண்டேனே!

திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கர் பெருமாள் சன்னதி தெரு. சேலேய் கண்ணியரான மதிமுக மடந்தயரும், விலக்ஷணமான ஊர்த்வ புண்ட்ர விசேஷங்களுடன் ஸ்ரீவைஷ்ணவ புருஷர்களும், உத்ஸாகத்துடன் ஓடி ஆடி கொண்டிருக்கும் சிறுவர்களுமாய் ஒரே கோலாகல குதூகலத்துடன் விளங்கியது.

ஆனி மாதத்தின் அவ்வழகிய காலைப்பொழுதில் ஒரு சில பெண்டிர் பூமி பரப்பை மறைத்த வெண்மேகக்குவியல் போன்று அழகிய கோலமிட்டு ஆனந்தித்தனர். வாய்ஜாலம் மட்டுமில்லை, எனக்கு வர்ணஜாலமும் தெரியும் என வேறு சில மகளிர் முத்துக்கோலத்தில் பல சித்திரவர்ணங்களை பதித்தனர்.

தட்டுகள் நிறைய புஷ்பங்களையும் பழங்களையும் ஏந்தியவர்களாகப் பலரும் வழிமேல் விழிவைத்து காத்திருந்தனர். அனைவரின் பார்வையும் பார்த்தஸாரதியின் தெற்கு தோரணவாயிலை நோக்கியே அனைவரின் விழிகளும் மலர்ந்திருந்தன. அல்லி மலர்கள் நிறைந்த அழகிய கழனிகள் சூழ் திருத்தலம் திருஅல்லிக்கேணியன்றோ! பகலில் குவளை மலருமா? எனும் கேள்வியும் உண்டாகிறதே! கதிரவன் குணதிசைச்சிகரம் வந்தணைந்த காலைப்பொழுதில் அல்லிகள் மலர்ந்தாற்போல் அங்கு காட்சியளித்தன. இதில் விசித்திர ரகசியம் ஒன்றுமில்லை. “மிதிலை நகரத்துப்பெண்களின் கண்களான சகோரப்பறவைக்கு ராமன் எனும் சந்த்ரன் ஆனந்தமளித்தான்.” என்கிறார் கவிஸிம்ஹமாம் தேசிகன்.

சந்திரகாந்த ராமனின் வரவு கண்டு இன்று ப்ருந்தாரண்ய வாசிகளின் அல்லிக்கண்கள் அழகாக மலர்ந்து விளங்கின. இங்குக்குழுமிருக்கும் ஆஸ்திக கோஷ்டிக்கு விஸ்வாமித்திரர், வசிஸ்டர் போன்று தேசிகனும், ஆதிவண் சடகோப ஸ்வாமியும் நடுநாயகமாக விளங்கினர்.

சந்தடி மிகுந்த அந்த சாலையின் சப்தங்களை மீறி பெருமாளின் அசாதாரண வாத்யம் உடல், திருச்சின்ன ஒலி கேட்டதுதான் தாமதம் பெரும் ஆர்ப்பரிப்பு அலையாகக் கிளர்ந்தது அங்கு “ஹோ”வெனும் உற்சாக சப்தம் எங்கும் எதிரொலித்தது.

ஓர் அழகிய மேனா பல்லக்கு ஆடியாடி அசைந்து வர ஸ்ரீநிவாஸா! தேசிகா! ஸ்ரீநிவாஸா! தேசிகா! என ஸ்ரீபாதம் தாங்கிகள் மெலிதாக ஒலியெழுப்பிக்கொண்டு பல்லாக்கைச் சுமந்து வருகின்றனர்.

“அழகெல்லாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்றகில்லார்” என அனுபவத்தின்படியே உயர் சோதி வெள்ளமாக மயிலை ஸ்ரீநிவாசன் உபய நாச்சிமார்களுடன் சேவை சாதித்தான். ஒருத்தர்கொருவர் முண்டியடித்துக்கொண்டும், தள்ளுமுள்ளுடன் எட்டி, எட்டி கண்ணாடிக்கதவு வழியாகவும், கைகளின் இடுக்குகள் வழியாகவும் பெருமாளை சேவித்தனர்.

ஸ்வாமி தேசிகனுக்கும், ஆதிவண் சடகோப ஸ்வாமிக்கும் அருளப்பாடுடன் மரியாதை ஆனவுடன் விண் அதிர தமிழ் மறை ஒலித்தது.

“ராமானுஜ தயாபாத்ரம் ஞான வைராக்கிய பூஷணம்” என திவ்ய ப்ரபந்தம் தொடங்கியவுடன் அங்கு கூடியிருந்த அனைவர்க்கும் மேனி சிலிர்த்தது. தெள்ளிய சிங்கனின் ராஜகோபுர நிழலில் கவிதார்கிக ஸிம்ஹத்தின் கர்ஜனை போன்று அந்த அதிர்வலைகள் இனம்புரியா ஆனந்தத்தை அளித்தது அனைவர்க்கும்.

மேனா பல்லாக்கு மெதுவாக அசைந்தபடி அஞ்ஜநாத்ரீச்வரன் அனைவர்க்கும் அனுக்ரஹத்தை  வாரி வழங்கிக்கொண்டு ஆனந்தமாக பவனி வந்தான் அந்த மாடவீதிகளில். அழகாக அலங்கரிக்கப்பட்ட ஆஸ்தான மண்டபமாகிய அஹோபில மடத்தின் நடுநாயகமாகப்பெருமாள் எழுந்தருளினதும் உபய கோஷ்டிகள் முடிந்தன.

மதியம் விசேஷ திருமஞ்சனம் அதியத்புதமாக நடைபெற்றது. வழிநடை விடாய்தீர்ந்த வேங்கடவன்.

மாலை சுமார் ஆறுமணியிருக்கும். மதியபொழுதுச்சற்றே வந்திருந்த மக்கள் வெள்ளம் சிறுதுசிறிதாகச் சேர அரம்பித்தது,பௌர்ணமியன்று தானே கடலலை கிளர்ந்தெழும். ஆர்பரிக்கும் அலைகடல் நகரத்தினுள் புகுந்ததா என்ன? என அனைவரும் திகைத்தனர். உப்புசாறான வங்கக்கடல் அல்ல இது. பக்தாம்ருதம் வழிந்தோடும்  பக்தி எனும்  பாற்கடல். வேங்கடவன் எனும் பௌர்ணமி சந்திரனை கண்டதும் நிலப்பரப்பில் பொங்கியதோ எனத்தோன்றியது.

இருபுறமும் உபயநாச்சிமார், எதிர்ப்புறம் உபய வேதாந்த ஆசிரியர் என ஸ்ரீநிவாஸனின் திருமாமணிமண்டபம் சேவை அத்யத்புதம். பரமபதத்திலும் நம் ஆசிரியர் நமக்கு அஃதேபோன்று சேவை சாதிப்பார் என்கிறார் ஸ்வாமி தேசிகன். அதாவது இங்கே நேரில் எவ்விதம் அவர்களை நாம் சேவித்தோமோ (கிறோமோ) அவ்விதமே பரமபதத்திலும் பெருமாளின் திருவடிக்கீழ் அவர்களின் சேவை நமக்கு கிடைக்கும்.

மேலும் அவர்களிடம் தனக்குள்ள ப்ரீத்தியை வெளிப்படுத்தும் பெருமாள், அவர்களின் திருவடிகளில் தங்கச்சிலம்பினை அணிவித்து ஆனந்தமடைகிறான்.

கூறுகவர்ந்த குருக்கள் குழாங்கள் குரை கழற் கீழ் ” என்கிறார் ஸ்வாமி தேசிகன்

ஸங்கல்ப ஸுர்யோதய நாடகத்திலும் இவ்விஷயத்தை நன்கு ரசிக்கலாம்.

ஒரு ஊருக்குச் செல்வதற்கு முன்பாக அது குறித்த விவரங்களை அறிந்து சென்றால் நமக்கு அனுபவம் இன்னும் மேலிருகிறதல்லவா! அதே போன்று பரமபதத்தில் இப்படித்தான் தன் ஆசார்யர்களுடன் சேவை சாதிப்பேன் என ஸ்ரீநிவாசன் தன் திருக்கோலத்தைக் காட்டினான்.

திரை திறந்து கற்பூர ஹாரத்தியானவுடன் கண் இமைக்க மறந்து அனைவரும் சேவித்தனர். அக்கம்பக்கம் யார் இருக்கின்றனர் என்பது கூடத் தெரியாமல் அனுபவத்தால் மெய்மறந்து நின்றனர். இதைவிட ஒரு சிறந்த சந்தர்ப்பம் கிடைக்குமா எம்பிரானுக்கு. பத்தர்கள் என்றாலும் பக்தர்கள் தானே. தன் பேரருளை புலப்படுத்த ஸரஸ   ஸம்பாஷணத்தை தொடங்கினான் ஸ்ரீனிவாசன்.

குருக்கள் கூட்டமும், அடியார் குழாமும், அத்தன் உயர் வேங்கடவனும் அளவளாவிய அந்த அற்புத உரையாடலை இனி அனுபவிக்கலாம்.

(தேசிகன் “ஹ்ருதி  முக்த சிகண்ட மண்டந:” என்று ஸ்ரீநிவாஸனின் கோடரி முடிச்சு எனும் அழகிய சௌரிக் கொண்டையின் அனுபவத்தில் ஆழ்ந்திருக்கிறார். தேசிகன் பெருமாள் ஸேவிக்கும் அழகை ஆதிவண் சடகோபஸ்வாமி அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.)

பெருமாள் மெதுவாக “ஸ்ரீநிவாஸ” என்று ஆதிவண்சடகோப ஸ்வாமியை அழைக்கிறார்.

அவரோ! சலனமேதுமின்றி  தேசிகனையே ஸேவித்துக்கொண்டிருக்கிறார்.

பெருமாள் மறுபடியும் “சடகோப ஜீயரே! ” என்று சற்று பலமாக அழைக்கிறார்.

ஆதிவண்சடகோப ஸ்வாமி துணுக்குற்று “என்ன ! என்ன ! யார் அழைத்தது ? “

ஸ்ரீநிவாசன் : ஏன் நான் தான் அழைத்தேன். ஒருமுறை அல்ல! பல முறை அழைத்தேன்.

ஆதிவண்சடகோப ஸ்வாமி : க்ஷமித்தருளவேணும்  ஸ்ரீநிவாஸ! ஆசார்யன் உன்னை ஸேவிக்கும் அழகில் அடியேன் வசமிழந்தேன்.

 ஸ்ரீநிவாசன் : எது? உம் ஆசார்யர்  என்னை ஸேவிக்கிறாரா? இல்லை இல்லை. அவரின் மனோ பாவம் வேறு.

ஆதிவண்சடகோப ஸ்வாமி : (பதில் சொல்லத்தலைப்படுகிறார். பின்னர் ஸ்வாமி தேசிகன் கவனிப்பதைக் கண்டு மௌனமாகிறார்.)

 ஸ்ரீநிவாசன் : என்ன பதில் இல்லை. சொல்லத்தெரியவில்லையா? சொல்ல விருப்பம் இல்லையா?

(ஆதிவண்சடகோப ஸ்வாமி தேசிகனைப் பார்க்கிறார்.)

 ஸ்ரீநிவாசன் : அங்கென்ன பார்வை. எனக்கு பதில் கூறு. (மீண்டும் தேசிகனைப்பார்க்க அவர் கண்களாலேயே அனுமதியளிக்கிறார்.)

ஆதிவண்சடகோப ஸ்வாமி: அலர்மேல் மங்கை உறைமார்பனே! அத்யாச்சர்யமான உனது அழகை அனுபவித்துக் கொண்டிருந்தார் எம் ஸ்வாமி.

ஆஹ்லாத சீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவான்

            ஸதா பரகுணாவிஷ்டோ த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:”

(கண்களில் ஆனந்தபாஷ்பம்  குளிரருவியாகப்பெறுக, உடம்பு சிலிர்த்து ரோமாந்சத்துடன் எம்பெருமானை அனுபவிக்கும் மஹான்கள் எப்போதும் சேவிக்கத்தக்கவர்கள்) எனும் ப்ரமாணத்திற்கேற்ப அவரை நான் ஸேவித்துக்கொண்டிருந்தேன்.

(தேசிகன் ஆனந்தத்துடன் தலையை அசைத்து ரசிக்கிறார்)

ஸ்ரீநிவாசன் : (சற்றே கோபமாக ) வேங்கடநாதா! உண்மையைச் சொல். நீ என்னையா ஸேவித்துக்கொண்டிருந்தாய் ?

தேசிகன் : அதிலென்ன ஸந்தேகம் ப்ரபோ! தங்களைத்தான் ஸேவித்துக்கொண்டிருந்தேன். இதோ இங்கு திகழும் இருபெரும் தேவியரே ஸாக்ஷி. (அவர்கள் பக்கம் திரும்பி) என்ன அம்மா ! நான் சொன்னது சரிதானே!

(தேவியர் இருவரும் ஆமாம், ஆமாம் என தலை அசைக்கின்றனர்)

ஸ்ரீநிவாசன் : (முன்னிலும் கோபமாக) சரிதான். தேவிகளை சிபாரிசுக்கு அழைக்காதே. தாய்மார்கள் என்றுமே பிள்ளைகளின் பக்ஷபாதிகள் தான்.

சரி அதைவிடு. எங்கே என்னை ஸேவித்த ச்லோகத்தைச் சொல் பார்க்கலாம்.

தேசிகன் : (  “ஹ்ருதி  முக்த சிகண்ட மண்டந : “) என மறுபடியும் துதிக்கிறார்.

ஸ்ரீநிவாசன் : (பரபரப்புடன்) பார்த்தாயா! பார்த்தாயா! ஸ்ரீநிவாஸனாகிய நானிருக்க என் விஷயமான தயாசதகம் சொல்லாமல் வேறு ஸ்தோத்ரம் சொல்லி துதிக்கிறாயே ! இதுதான் உனது பக்தியின் பரிவாஹமா!

(தேசிகன் மெளனமாக புன்சிரிப்புடன் வீற்றிருக்கிறார்)

ஸ்ரீநிவாசன் : எனது கேள்விக்கு பதிலுரைக்காமல் சிரிக்கிறாயே . (கோபமாகச் சொல்கிறான்)

(ஆதிவண்சடகோப ஸ்வாமி பக்கம் திரும்பி) சடகோப! நீயாவது சொல்லேன்.

(அவர் மீண்டும் தேசிகனைப் பார்க்க அவர் தலை அசைத்து அனுமதி தருகிறார்)

ஆதிவண்சடகோப ஸ்வாமி : வேங்கடேச இதுவும் உனது துதி தானே.

 ஸ்ரீநிவாசன் : அதெப்படி எனது ஸ்தோத்ரமாகும். இது கோபால விம்சதி ச்லோகமல்லவா  ?

ஆதிவண்சடகோபஸ்வாமி : அதனால் என்ன ?

ஸ்ரீநிவாசன் : அதனால் என்னவா? எனக்குரிய ஸ்தோத்தரங்கள் அனேகம் இருக்க, அவையனைத்தையும் விட்டுவிட்டு கோபால விம்சதியைச் சொல்லி என்னைத் துதிப்பது என்?

ஆதிவண்சடகோப ஸ்வாமி: கோபால விம்சதியும் தேவரீரது ஸ்தோத்தரமேயன்றோ ! அதைத்தான் எமது ஆசிரியர் பாடினார்.

தேசிகன் : நன்று, நன்று (ஆனந்திக்கிறார்)

ஸ்ரீநிவாசன் : என்ன நன்று? கோபால விம்சதி எப்படி என் ஸ்தோத்தரமாகும்?

ஆதிவண்சடகோபஸ்வாமி : : “மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர் சந்தி செய்ய நின்றான் அரங்கத்தரவின் அணையான் “(என்று சொல்லி நிறுத்தி தேசிகனைப்பார்க்கிறார். தேசிகன் மகிழ்வுடன் தலை அசைப்பதைக் கண்டு )

இந்த பாசுரத்தில் வடவேங்கடமுடையானும், அரங்கநகராளனும் எவ்விதம் ஒன்றோ ! அவ்விதமே இங்கும் பொருளாகலாமே!

ஸ்ரீநிவாசன்: (சற்று கோபத்துடன்) நன்றாய் இருக்கிறது உனது வாதம். அங்கு பாசுரத்தில் இரண்டு திவ்யதேசத்தையும் தெளிவுறக்காட்டியுள்ளார் ஆழ்வார். தேசிகனின் ஸ்தோத்ரத்தில் அவ்விதம் ஏதாவது தெரிகிறதா? ஏதோ சமாதானம் சொல்லவேண்டும் என்பதற்காகவே சொல்கிறாய். ஆனால் அர்த்தகம்பீரம் இல்லை.

தேசிகன்: ஸ்ரீநிவாச! (என்றழைக்கிறார்) உடனே பெருமாளும்  ஆதிவண்சடகோபஸ்வாமியும் ஒரே சமயம் திரும்புகிறார்கள்)

தேசிகன் : (பெருமானைப்பார்த்து ) ஸ்ரீநிவாச! ஸ்ரீநிவாச என்று உன்னை அழைக்கவில்லை, இதோ சடகோப ஜீயரை ஸ்ரீநிவாச! என்றேன்.

ஸ்ரீநிவாசன்: ஸ்ரீநிவாசனாகிய என்னை நேரில் வைத்துக்கொண்டு, சடகோபன் என ஸந்யாஸநாமம் பெற்றவனின் பூர்வாச்ரமப் பெயரை அழைத்தேன் என்கிறாயே!

தேசிகன்: உண்மைதான். ஆனால் முக்தானுபூதியில் இந்த வித்யாசம் கிடையாதன்றோ!

ஸ்ரீநிவாசன் : (தயக்கத்துடன் ) ஆ …மா ….ம் .

தேசிகன் : அஃதே போன்று அர்ச்சாவதார வடிவில் அப்ராக்ருத ரூபனாக சேவை ஸாதிக்கும் தேவரீரிடம் வித்யாசம் உண்டா !

ஸ்ரீநிவாசன் :  (பொறுமையிழந்து) சரி. அதற்கு என்ன இப்போது ?

ஆதிவண்சடகோப ஸ்வாமி:  வேங்கடமாமலை மேவிவாழும் வேங்கடவனாகிய ப்ரபுவை வேங்கடக்ருஷ்ண (பார்த்தஸாரதி- கோபாலவிம்சதி) ச்லோகம் கொண்டு ஏற்றினார் எம் ஆசார்யர்.

உபயநாச்சிமார்:  அத்புதம். அத்யத்புதம் (என கைதட்டிக் கொண்டாடுகின்றனர்)

ஸ்ரீநிவாசன் : போறும், போறும். உங்களின் ஆசார்ய பக்ஷபாதத்தைக்  காண்பித்தது போதும்.

பிராட்டிமார்: ஏன் ஸ்வாமி நாங்கள் ரசிப்பது தங்களுக்கு ஏன் கோபம் ?

ஸ்ரீநிவாசன் :  (சற்றே வருத்தத்துடன்) இன்று அனைவரும் ஒன்று கூடி என்னைத் தனிமைப்படுத்தி விட்டீர்கள்.

ஆதிவண்சடகோப ஸ்வாமி: ப்ரபோ! இப்படியும் தங்களின் திருவுள்ளம் கலங்கலாமா? ஒப்பில்லாத மாதர்களும், ஆடவர்களும் இங்கே திறண்டிருப்பது “திருவல்லிக்கேணி கண்டனே! ” எனத்தங்களை தரிசிப்பதற்காகவன்றோ!

ஸ்ரீநிவாசன் : அவர்கள் வந்து ஸேவிப்பது இருக்கட்டும். ஏன்  என்னுடைய ஸ்தோத்ரத்தைச்  சொல்லவில்லை என நான் கேட்ட கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை.

தேசிகன்: வருந்த வேண்டாம் வேங்கடேச! இதோ வண்சடகோபன் பதிலுரைப்பான்.

ஆதிவண்சடகோபஸ்வாமி: (தேசிகனை வணங்கி ) பக்தர் இடர் களையும் கேசவ இன்று தேவரீரின் அலங்கார விஷேசம் என்ன ?

ஸ்ரீநிவாசன் : (புரியாமல்) என்ன ! எப்போதும் போல் குருலிமாலை, மல்லிமாலை , திருவாபரணங்கள், பட்டு பீதாம்பரங்கள். வேறென்ன!

ஆதிவண்சடகோபஸ்வாமி: அதெல்லாம் சரி. திருக்குழலில் கோடரிமுடிச்சு என்று அழகாக சவரி சாற்றிக்கொண்டு கேசவனாக (குழல்கற்றையுடன்) ஸேவைசாதிக்கிறாயே !

ஸ்ரீநிவாசன் : உம் ஆசார்யர்  ச்லோகம் சொன்னது ஒருபுறம் இருக்கட்டும் நீ சுற்றி வளைத்துப் பேசுவது இன்னமும் புரியாமல் இருக்கிறது.

ஆதிவண்சடகோபஸ்வாமி : ப்ரபோ! க்ஷமித்தருளவும். அழகிய குழல் கற்றையில் மயிற்பீலி சொருகியவனாகிய  இக்கண்ணன் இடைப்பெண்களின் காதல் நோயினைத் தீர்ப்பவன். மோஹன மூர்த்தியான இவனின் திருவுள்ளத்தை என் இதயத்தில் செதுக்கிய சிற்பியார்? என்பதன்றோ அந்த ச்லோகத்தின் பொருள்.

ஸ்ரீநிவாசன் : ஆம்.

ஆதிவண்சடகோபஸ்வாமி :இன்று வேங்கடநாதனாகிய தாங்கள் ஒப்பில்லா மாதர்களாகிய இப்பெண்களுக்கு (ஜீவன்களுக்கு) காட்சியளிக்கும் அழகினை எம் ஆசார்யர் வேங்கடேசன்  வர்ணித்தார். இன்றைய திருக்கோலத்தின் அழகை அத்யத்புதமாக வர்ணிக்கும் இந்த ச்லோகத்தின் ஆழம் புரியாமல் நீயன்றோ மனம் கலங்குகிறாய் !

நாச்சிமார் : ஆஹா அத்புதம். அத்யத்புதம்.

ஸ்ரீநிவாசன் : எப்படியோ உன் ஆசார்யர்க்காக பரிந்துபேசி என்னை ஏளனம் செய்கிறாய்.

ஆதிவண்சடகோபஸ்வாமி : (அவசரமாக மறுத்து) சாந்தம் பாபம். திருமலையப்பனே இவ்விதம் சொல்லலாமா? என் ஆசர்யனே தாங்களன்றோ!

ஸ்ரீநிவாசன் :  (வியப்புடன் ) நானா? எப்படி ?

ஆதிவண்சடகோபஸ்வாமி :

அன்று இவ்வுலகினை ஆக்கி

அரும்  பொருள் நூல் விரித்து

நின்று தன் நீள் புகழ் வேங்கட மாமலை மேவி

பின்னும் வென்றி புகழ் திருவேங்கடநாதன்

என்னும் குருவாக அவதரித்தவனே!

இன்னுமா ஒன்றும் புரியாமல் என்னை கேள்வி கேட்கிறாய்!

ஸ்ரீநிவாசன் :  ஆஹா, ஆஹா அருமையான விளக்கம்,. ஆச்சர்யமான அனுபவம் (என ஆனந்திக்கிறான்) அதற்குள் புறப்பாட்டிற்குத் தயாராக திருச்சின்னம், உடல்  வாத்ய கோஷங்கள் முழங்கவாரம்பித்தன.

ஸ்ரீநிவாசன் : ஆசார்யார்களே ! திருமாமணிமண்டபம் போன்று இன்று உங்களுடன் ஸரஸ ஸல்லாபம் செய்தது அதியத்புதம் ஆனந்தம் அளிக்கிறது. இனி மிதிலையின் மாடவீதிகள் போன்ற இப்ப்ருந்தாரண்யத்தின் வீதிகளில் பவனி வரலாம் வாருங்கள்.

இப்படி வேங்கடகிருஷ்ணனின் அல்லிக்கேணியில் வேங்கடேசனும், வேங்கடநாதனும்(சுவாமி தேசிகன்), ஸ்ரீநிவாஸனும் (ஆதிவண்சடகோபஸ்வாமி) செய்தருளிய சம்வாதம் கேட்டு ஆனந்தம் அடைந்த பக்தர்கள் எம்பெருமான் தங்களுக்கு இங்கேயே முக்தர்களின் அனுபவத்தை அளித்த கருணையைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

எழுத்து

APN

10-7-2023

Watch videos at

https://www.facebook.com/watch/?v=817769733360698

https://www.facebook.com/Thirukandaen/videos/651672006875322/

https://fb.watch/lGBCNLKHsd/?mibextid=6aamW6