Sri #APNSwami #Writes #Book| அருளாளன் பேரருள் – Part 6 | அனுஷ்டான குளம் – சாலைக்கிணறு உற்சவம் @ காஞ்சி

“அருளாளன் பேரருள்” Part – 6

 “தீர்த்தன் ராமானுசன்” எனும் பாகத்தில் உத்தமவர்த்தலம் அமைத்ததோர் எழில்தனுவின் உய்த்தகணையால் அத்திரவரக்கன் முடிபத்தும் ஒரு கொத்தென உதிர்த்த திறலோனாக ராமன் ராவண வதம் செய்தான் என்றும், “இவனன்றோ பரமாத்மா” என்றும், கட்கண்ணால் காணமுடியாத அந்தவுருவை நெஞ்சென்னும் உட்கண்ணால் காண வேண்டும் என்றும், சரணாகதியே கதி என்று காட்டிய வள்ளல் ராமானுஜர் எழுந்தருளி இந்த அர்சாதிருமேனியான தேவதேவனை சேவிப்பதே புருஷார்த்தம் என்றும் பார்த்தோம்.  இன்னும் தொடரும்…

தொடர்ந்து வரதனுடைய வைபவங்களை அனுபவித்திடுங்கள்…

இனி ஸ்ரீAPN ஸ்வாமியின் அருளாளன் பேரருள் Part – 6 தொடரும்…

“தீர்த்தன் ராமானுசன்”

     பாஷ்யக்காரர் எழுந்தருளியது தீர்த்தகுடத்துடன்.  வரதரை ஆழிமழைக் கண்ணன் முத்தி மழைபொழியும் முகில்வண்ணன் “எங்கள் ஸ்ரீபாஷ்யகாரர் தினந்தோறும் சமர்ப்பித்தருளும் சாலைக்கிணறு தீர்த்தம் பருகி பக்தர்களுக்கு அவர்களின் விருப்பம்விட அதிகமாக அருள் மழை பொழிகிறான்” என்கிறார் நம் சுவாமி தேசிகன்.  இவை அனைத்தையும் ஒருங்கிணைந்த எங்களுக்கோ கண்களில் ஆனந்தபாஷ்யம் “கண்களில் ஆனந்த கண்ணீர் துளிக்க உன்னை வணங்குகின்றனர் வரதா” என்ற தேசிகோத்தமனின் சொல்லமுதை அனுபவபூர்வமாக உணர்ந்தோம்.  அதுவும் சாற்றுமறை ச்லோகத்திற்கு ஸ்ரீ பாஷ்யகாரர் எழுந்தருளினது பரிபூரண அனுக்ரஹம்தானே.

     முழுவதும் பாராயணம் முடிந்தபோது பெருமாள் திருமஞ்ஜனத்திற்கு தயாராக இருந்தார்.  இதுவரையிலும் சேவையான திருமேனி சோபைவேறு.   இப்போது சேவையானது வேறு.  ஆம் ஆவணங்களே இல்லாமல் மெலிதானதொரு கைவழி (ஒரு மெல்லிய வஸ்திரம்) சாற்றிக்கொண்டு மல்லாண்ட திண்தோள் மணிவண்ணனாக நின்ற கம்பீரம்.  அப்பப்பா!  சிறிய திருவடி பம்பை நதிக்கரையில் கண்டது போன்றதொரு கோலம் அது.

     “நன்கு உருண்டு, திரண்டு, பருத்து, பணைத்த தோள்கள் உடைய வீரர்களே, அனைத்து விதமான பூஷணங்களையும் அணியவேண்டிய இத்திருமேனியில் எதற்காக ஆபரணங்கள் அணியாமல் உள்ளீர்!” என்றார் திருவடி (அனுமான்).  அதன் பொருள் என்னவென்றால் பெருமாளுக்கு ஆபரணங்கள் அழகு செய்யவில்லை.  குணங்களே அவனை  அண்டிதான் அழகு (பெருமை) பெறுகின்றன என்றால், ஆபரணங்களுக்கு கேட்கவா வேண்டும்.  அப்படியெனில் அனுமானின் நோக்கம்தான் என்ன?  எதற்காக இப்படி சொன்னான் என்றால் நம் பூர்வாசார்யர்கள் சுவையான வ்யாக்கியானமொன்று அருளுகின்றனர்.

    “ஹே ராமா!  மரத்தினின்று மரம் தாவும் குரங்கு ஜாதியில் பிறந்தவர் நாங்கள்.  வெகு சாமான்யமான புளியம் பழத்தைக் கண்டால் கூட விரும்புமவர்கள், எங்களை வசப்படுத்த நீ இப்படி ஸர்வாவயவ சௌந்தர்யத்தைக் காண்பிக்க வேணுமா?  எங்களின் கண்ணெச்சில் (த்ருஷ்டி) படப்போகிறதப்பா!  நல்ல பெரிய பதக்கங்களும் அட்டிகைகளும் சாற்றிக் கொண்டு திருஷ்டி படாமல் உன் திருமேனியை மறைத்துக்கொள்” என்றாராம் திருவடி.

     அன்று அங்கு பம்பைக்கரையில் அனுமான் சொன்ன வார்த்தை இன்று இங்கு அனுஷ்டான குளக்கரையில் வரதனின் திவ்ய திருமேனியை சேவித்தபோது உள்ளத்தில் உணர்வலைகளை உண்டாக்கியது.  மின்னு மாமழை தவழும் மேகவண்ணனின் திருமஞ்ஜனம் தாகமெடுத்ததொரு மேகம் தண்ணீரில் குளிப்பது போன்றிருந்தது.

     இருபுறமும் உபயநாச்சியமாருடன் சேர்ந்த சேர்த்தி “மின்னல் கொடிகளால் சேர்ந்த (சூழ்ந்த) காளமேகம் போன்றது” எனும் வேத வாக்கியத்தின் பொருளை ஸ்ரீபாஷ்யகாரரின் சிஷ்யர்களாகிய நமக்குத் தெளிவாக காண்பிப்பது போன்றதொரு திருக்கோலம்.  இதைத்தானே தேசிகோத்தமனும் பல உவமைகளில் பாடினார்.

     இதுவரையிலும் நம் கர்ம வினைகளால் மறைக்கப்பட்டிருந்த எம்பெருமானுடைய குணங்கள், பதங்கள், இப்போது நன்கு தெரிகின்றன.  (அதாவது கர்மபந்தத்திலிருந்து விடுபட்டாலன்றோ எம்பெருமானை தெளிவாக அனுபவிக்க முடியும்) அதற்கு நம்மாசாரியர்கள் செய்யும் உபதேசம் அன்றோ காரணம்.  இங்கு ச்ருதிவாக்கியங்களுக்கு சங்கரர் முதலானோர் செய்த குயுக்தி, குத்குருஷ்டி (தவறான பொருள்) வாதங்களை கண்டித்து, பாஷ்யகாரர் ஸந்மதஸ்தாபனம் செய்தாரன்றோ.  ஸ்வாமியினுடைய பாஷ்யம் ஸத்யை காலம்பிபாஷ்யம் – அதாவது ப்ரம்மமும், அதைச் சார்ந்த அனைத்தும் ஸத்யம்.  அவன் திருமேனி, குணங்கள் என அனைத்தும் ஸத்யம்.  இப்படி எம்பெருமானாராம் ஸ்ரீபாஷ்யகாரர் உபதேசித்து, ஏற்றி மனத்தெழில் ஞானவிளக்கை, இருளனைத்தும் மாற்றியதால் இங்கேயே பரப்ரஹ்மத்தை அனுபவிக்கும் பேறு கிட்டியது.

     இது ஏரணிகீர்த்தி ராமானுஜரின் இன்னுரை சேர் சீரணிச்சிந்தையாலன்றோ கிடைத்த பாக்யம்.  இங்குள்ள வேதார்த்த ஸங்க்ரஹ வரிகள் அனைத்துமே வரதனின் வைபவத்தை பேசுவதை மஹான்கள் உணரலாம்.

 தொடரும்…

Sri #APNSwami #Writes #Book | அருளாளன் பேரருள் – Part 5 | அனுஷ்டான குளம் – சாலைக்கிணறு உற்சவம் @ காஞ்சி

“அருளாளன் பேரருள்” Part – 5

” அரண்மனையும், அரண்யமும்” எனும் பாகத்தில் “எவர்கள் கானகத்தில் ச்ரத்தையுடன் தவம் செய்கின்றனரோ அவர்கள் அர்ச்சிராதி (வைகுண்டமார்கம்) வழியையடைகின்றனர்” என்கிறது வேதம்.   ஆனால், இங்கு காட்டில்தவம் செய்யும் முனிவர்கள் அரண்மணையிலேயே தங்கியிருப்பதன் நோக்கம் ராமதரிசனமேயாகும் எங்கிறார்கள்.  அதிலும் விச்வாமித்ரர் “மஹாத்மாவான ராமனை நான் அறிவேன்” என்ற வாக்யத்தின் சுவையை உணர்த்த வல்ல அற்புதமான வேதார்த ஸங்க்ரஹ ஸ்ரீசூக்திகளை சேவித்து இங்கு ப்ரத்யஷ தரிசனம் என்று பார்த்தோம்… இனி இங்கு “தீர்த்தன் ராமானுசன்” பற்றி அறிவோம்.

தொடர்ந்து வரதனுடைய வைபவங்களை அனுபவித்திடுங்கள்…

இனி ஸ்ரீAPN ஸ்வாமியின் அருளாளன் பேரருள் Part – 5 தொடரும்…

“தீர்த்தன் ராமானுசன்”

     பெருமாள் ராமானுஜர் சன்னிதியில் இறங்கினவுடன் மறுபடியும் நாங்கள் பாராயணத்தைத் தொடர்ந்தோம்.  வேதார்த்த ஸங்க்ரஹத்தில் ச்ருதி ப்ராமாண்யம் (ச்ருதி வாக்யங்களின் உறுதி அதாவது தேவதேவனை பர தெய்வமாகக் காட்டுவது) முடிந்தவுடன் உபப்குஹ்மணங்களாகிய (வேதங்களின் பொருளை விளக்கும்) இதிஹாஸ புராணங்களின் வாக்யங்கள் ஸ்ரீபாஷ்யகாரர் எடுத்து உதாஹரிக்கிறார்.  அதாவது ஸத்யகாமின் ஸத்ய ஸங்கர்பன் எம்பெருமான் என்பதை இதிஹாஸ புராணங்கள் வழி மொழிகின்றன. அதிலொரு அத்யாச்சர்யமான ச்லோகம் மண்டோதரியின் வார்த்தையாக வால்மீகி வெளியிடுகிறார்.

     உத்தமமவர்த்தலம் அமைத்ததோர் எழில்தனுவின் உய்த்தகணையால் அத்திரவரக்கன் முடிபத்தும் ஒரு கொத்தென உதிர்த்த திறலோனாக ராமன் ராவண வதம் செய்தான்.  பின்னர் விஜய ரகவானாக பெருமாள் போர்க்களத்தில் நின்ற போது மந்தோதரி போர்களத்தில் ராமதரிசனம் செய்து “இவனன்றோ பரமாத்மா” என்று கொண்டாடுகிறாள்.

     ப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ரஹ்மமாக மாறுகிறான் அதையுணர்ந்தவன் இங்கேயே முக்தானுபாவத்தைப் பெறுகிறான் – முதலிய வரிகள் சேவிக்கும் சமயம் என்ன ஆச்சர்யம் ? எங்களை அனுக்ரகம் செய்ய அந்த யதிராஜன் எழுந்தருளினார்.  ஆம், தீர்த்தன் உலகளந்த சேவடியாம் சடகோபனின் திருவடியான ராமானுஜர் சாலைக்கிணறு தீர்த்தம் சமர்ப்பிக்க மண்டபம் ப்ரதக்ஷிணமாக எழுந்தருளினார்.  நீங்கள் செய்த பாராயணத்திற்கு ஸ்ரீபாஷ்யகாரரின் அங்கீகாரமன்றோ அது.  “ப்ரமாணத்தை பாராயணம் செய்த சமயம், ப்ரமேயமாகிய வரதனின் சேவை செய்து வைக்க ப்ரமாதாவான ஆசார்யர் எழுந்தருளியது ஆச்சர்யம்”.

     இதைவிட பேராச்ர்யம் மற்றுமொன்று.  தீர்த்தம் கொணர்ந்த பின்னர் மறுபடியும் ஸ்ரீபாஷ்யகாரர் ப்ரதக்ஷிணமாக எழுந்தருளினார்.  கடைசி வரிகள் – ப்ரியமானவனை எம்பெருமான் விரும்புகிறான்.  அப்படி பகவானால் விரும்பப்படுபவன் அவனுக்கு மிகுந்த ப்ரியனாகவிருக்கிறான் எனும் அர்த்தம் பொதிந்த பகவத்கீதையின் ச்லோகம்.

     “பகவானை உள்ளபடி அறிவது என்று சொல்லப்படும் பக்தியே அவனை அடையும் உபாயம்”.  மேலும் மஹாபாரதம் மோக்ஷ தர்மத்தில் “அவனுடைய ரூபம் பார்வைக்கு எட்டாதது.  ஒருவனும் அவனைக் கண்ணால் கண்டதில்லை.  இந்திரியங்களையடக்குவதாக த்ருதியால் காந்தியையடைந்துள்ள மனதைக் கொண்டு பக்தியினாலேயே ஜ்ஞனாநஸ்வரூபமாகிய அவனைக் காண்கிறான் என்னும் வாக்யம்.  இது பக்தியோகவிஷயம்”.  கட்கண்ணால் காணமுடியாத அந்தவுருவை நெஞ்சென்னும் உட்கண்ணால் காண வேண்டும்.  ஆனால் உயர்ந்த பக்தியோகத்தைச் செய்ய சக்தியற்றவர்களான நம்மைப் போன்றவர்களுக்கு சரணாகதியே கதி என்று காட்டிய வள்ளல் ராமானுஜர் எழுந்தருளி இந்த அர்சாதிருமேனியான தேவதேவனை சேவிப்பதே புருஷார்த்தம் என்று மொழிந்தது போன்றிருந்தது.  மேலும் க்ரந்தபாராயணத்தின் முடிவு ச்லோகத்தை சேவிக்கும் போதே மறுபடியும் ஸ்ரீபாஷ்யகாரர் எழுந்தருளினது பாக்யத்திலும் பரமபாக்யமன்றோ.  நின்ற நிலையிலேயே கடைசி மங்களச்லோகத்தை பூர்த்தி செய்து சேவித்தோம். அனைவரின் கண்களில் ஆனந்தபாஷ்பம். 

தொடரும்….

Sri #APNSwami #Writes #Book | அருளாளன் பேரருள் – Part 4 | அனுஷ்டான குளம் – சாலைக்கிணறு உற்சவம் @ காஞ்சி

அனுஷ்டான குளம் – சாலைக்கிணறு உற்சவம் 29/12/18 @ காஞ்சி

“அருளாளன் பேரருள்” Part – 4

     “வடிவழகு மறவாதார்” எனும் பாகம் மூன்றில் “சூர்யனைப் போன்று வர்ணம் உடைய இந்த மஹாபுருஷனை நானறிவேன்” என்னும் வேதவாக்யத்தின் பொருளை விச்வாமித்ரர் உரைக்கிறார்.  “ஐயோ ! இவன் அழியா அழகு எனும் வடிவுடையான்” எனும் கம்பராமாயணத்தின் வரிகள், “நீலமேனி ஐயோ ! நிறை கொண்டது என்நெஞ்சினையே” எனும் திருப்பாணணின் வரிகள் இப்படி பலர் ராமனின் வடிவழகை பலவாறு வர்ணித்திருப்பதை நாமும் அவ்வழகில் மயங்கினோம்.  இனி அருளாளனின் நான்காம் பதிவில்  ” அரண்மனையும், அரண்யமும்” பற்றிப் பார்ப்போம்…

தொடர்ந்து வரதனுடைய வைபவங்களை அனுபவித்திடுங்கள்…

இனி ஸ்ரீAPN ஸ்வாமியின் அருளாளன் பேரருள் Part – 4 தொடரும்…

      விச்வாமித்ரர் சொன்னதாக கீழ்ச்சொன்ன ராமாயண ச்லோகத்தில் ஒரு விசேஷம் உண்டு. “ வசிஷ்டரும் ராமனின் பெருமையறிவார். இதோ இங்கு தவம்புரியும் இந்த மஹரிஷிகளும் அறிவர்” என்றார்.  மஹரிஷிகள் அரண்யத்தில் தவம் புரிபவர்கள்.  அவர்களுக்கு அரண்மனையில் என்ன வேலை?   வசிஷ்டர் குலகுரு அவர் அமைச்சரவையில் இருப்பது நியாயம். எவ்வித விசேஷமும் இன்றி தபஸ்விகளுக்கு இங்கென்ன வேலை?

     ஆரண்யகம் எனும் வேதபாகத்தின் பொருள் பரமாத்மா.  “எவர்கள் இக்கானகத்தில் ச்ரத்தையுடன் தவம் செய்கின்றனரோ அவர்கள் அர்ச்சிராதி (வைகுண்டமார்கம்) வழியையடைகின்றனர்” என்பது வேதம். இவ்வாறெனில் தவத்தின் பயன் வைகுண்டம் சென்று பகவத்தரிசனம்தானே.  அதே தரிசனத்தைத்தான் வாமதேவர், ஜாபாலி, காச்யபர், சுயஜ்ஞர், கௌதமர், விஜயர் எனும் இம்மஹரிஷிகள் தசரதன் அரண்மணையிலேயே பெறுகின்றனரே!

     மீண்டும் ஒருமுறை புரிய வைக்கிறேன்.  காட்டில்தவம் செய்யும் முனிவர்கள் அரண்மணையிலேயே தங்கியிருப்பதன் நோக்கம் ராமதரிசனமேயாகும்.  அதாவது தவத்தின் பயன் பெருமாள் சேவை. ராமனே பரமாத்மா என்பதையுணர்ந்தவராதலின் அவர்கள் இங்கேயே தங்கியுள்ளனர்.  எனவே தசரதன் அறியாத அந்த தத்வத்தை மஹரிஷிகள் அறிந்ததினால் அரண்மனையிலிருந்து அரண்யம் செல்லவில்லை.  எங்கோ கண்மூடி தவம் செய்வதைவிட கண்திறந்து பகவத்தரிசனம் பெற அமர்ந்துள்ளனர்.

     அரண்யத்தில் வசித்தவர்களை அரண்மனைக்குள் வரவழைத்தது ராமனின் திருக்கல்யாண குணங்கள் அம்மஹரிஷிகள் இங்கும் தவத்தில் நிலைபெற்றவராகவே இருந்தனர்.  ராமன் அரண்மைக்கு வரும்போதெல்லாம் அவனின் திவ்ய ஸௌந்தர்யத்தையும், கல்யாண குணங்களையும் அனுபவித்து ஆனந்தமடைந்தனர்.

     மேலும் இவர்களைத் தவிர்த்து ஏனை மஹரிஷிகள் ராமனுக்காக காட்டிலேயே காத்திருந்தனர்.  “தண்டகாவனத்தின் நடமாடும் கற்பகத்தருவாக ராமன் அங்கு திரண்டிருந்த மஹரிஷிகளுக்கு தன்னுடன் கலந்து பரிமாறும் அனுக்ரஹம் செய்தான்”.  தம்மையே நாளும் வணங்கித் தொழ்வார்க்கெல்லாம், தம்மையே தக்க அருள் செய்பவனன்றோ அவன்!  “ஹே ராமா! காட்டிலும், நாட்டிலும் நீ எங்கிருந்தாலும் எங்கள் தலைவனன்றோ!” என்ற மஹரிஷிகள் அவனைக் கொண்டாடினர்.

     ராமனின், பிராட்டியின் வடிவழகு, உடன்வந்த லக்ஷ்மணனின் பெருமை இது கண்டு வனவாசிகளாகிய மஹரிஷிகள் அனைவருமே மோகித்துப் போனார்கள் என்கிறார் வால்மீகி.  “ஆடவர் பெண்மை அவாவும் தோளினாய்” என்கிறார் கம்பரும்.  “இத்தண்டகாரண்ய மஹரிஷிகளின் மோகத்தைத் தீர்க்கவே க்ருஷ்ணாவதாரத்தில் அவர்களை கோபிகளாக பிறக்கச் செய்து ராஸலீலை புரிந்தான்” என்கிறது கர்கபாகவதம்.

     இப்படி அரண்மனையில் உள்ளவர்கள், அரண்யத்தில் உள்ளவர்கள் என அனைவரையும் வசீகரிக்கும் அழகு, குணம், எம்பெருமானுடையது என்பதை நேராக உணர்ந்தோம்.  அரண்யம் போன்ற அனுஷ்டான குளத்திற்கு வரதனும், பிராட்டியும், லக்ஷ்மணமுனியாம் ராமானுஜரும் எழுந்தருளினர். நாங்கள் பாராயணம் செய்த வரிகளோ அவனது திவ்யாத்ம ஸ்வரூபத்தையும் திவ்யமங்கள விக்ரஹத்தையும் வர்ணிக்கின்றன.  அரண்மனையோ, அரண்யமோ! எங்குமே ப்ரகாசிக்கும் வரதனின் வடிவழகு பிச்சேற்றியது. 

     அதிலும் விச்வாமித்ரர் “மஹாத்மாவான ராமனை நான் அறிவேன்” என்ற வாக்யத்தின் சுவையை உணர்த்த வல்ல அற்புதமான வேதார்த ஸங்க்ரஹ ஸ்ரீசூக்திகளை சேவித்து இங்கு ப்ரத்யஷ தரிசனம்.

  தொடரும்….

Sri #APNSwami #Writes #Book | அருளாளன் பேரருள் – Part 3 | அனுஷ்டான குளம் – சாலைக்கிணறு உற்சவம் @ காஞ்சி

அனுஷ்டான குளம் – சாலைக்கிணறு உற்சவம் 29/12/18 @ காஞ்சி

“அருளாளன் பேரருள்” Part – 3

முன் பதிவில் வேதார்த்த ஸங்க்ரஹத்தில் ” உயர்வற உயர்நலம் உடையவன்” பற்றி பார்த்தோம்.  இப்பதிவில் “வடிவழகு மறவாதார்” பற்றி பார்ப்போம்.  அருளாளன் தாம் எனினும் தமக்கொவ்வாத வைபவத்தை உடையவன் செய்த பேரருளை உரைப்போமினிச்சிறிது. 

தொடர்ந்து வரதனுடைய வைபவங்களை அனுபவித்திடுங்கள்…

இனி ஸ்ரீAPN ஸ்வாமியின் அருளாளன் பேரருள் Part – 3 தொடரும்…

வடிவழகு மறவாதார்:

     விச்வாமித்ரர், யாக ஸம்ரக்ஷணத்திற்காக ராமனைக் கேட்கிறார் தசரதனிடம்.  அச்சமயம் தனக்கு ஆதரவளிக்க தசரதன் சபையில் கூடியிருந்த ஏழு மஹரிஷிகளையும், தசரதன் குலகுருவான வசிஷ்டரையும் சேர்கிறார்.  புருஷோத்தமனாகிய எம்பெருமானைப் போற்றுவது புருஷசூக்தம்.  வேதத்தில் புருஷசூக்தமே சிறந்தது.  அதில் “சூர்யனைப் போன்று வர்ணம் உடைய இந்த மஹாபுருஷனை நானறிவேன்” என்னும் வேதவாக்யத்தின் பொருளை விச்வாமித்ரர் உரைக்கிறார்.  ‘வில்லைக் கையேந்திய தசரதா!  மஹாத்மாவும் ஸத்ய பராக்ரமனுமாகிய ராமனை நானறிவேன்.  இதோ மஹா தேஜஸ்வியான வசிஷ்டர் அறிவார்.  ஏனைய இந்த மஹரிஷிகள் அறிவர்.  ஆனால் நீயறிய மாட்டாய்” என்கிறார்.

    வில்லுடன் ராஜ்யமாளும் மன்னனுக்கு புல்லுடன் (பவித்ரபாணியாக தர்பைப்புல்) ஜபம், தவம் செய்யும் மஹரிஷிகளின் திவ்யஜ்ஞானம் எப்படியுண்டாகும்?  ஆகையால் உனக்கு உன்மகன் (ராமன்) அருமை தெரியாது, அவன் குணங்களால் உயர்ந்த வள்ளல் என்கிறார்.

     “சூர்யனின் நடுவில் கோடிசூர்யனைப்போன்று ஒளிர்விடும் இப்புருஷன் சுவர்ண (தங்க) மயமாக ஜ்வலிக்கிறான் அவன்தன் திருக்கண்கள் சூரியகிரணங்களால் மலர்ந்த தாமரை” போன்றவை.

     “என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவினை நெஞ்சென்னும் உட்கண்ணால் மட்டுமே காண முடியும்”.

     “மின்னல் போன்ற ப்ரகாசத்தை உடைய இப்புருஷனிடமிருந்தே ஸமஸ்த ஜகத்தும் (உலகமும்) உண்டாயின”.

     “நீலமான மேகத்தின் நடுவில் உடைய மின்னல்கொடி போல ப்ரகாசித்துக் கொண்டிருப்பவன்”.

     “தூய்மையான மனம் ஒன்றினாலேயே அறியத்தக்கவன்”.  உலகிலுள்ள அனைத்தையும் தனது சரீரமாகக் கொண்டுள்ளான்.

     சுடர்விடும் திவ்ய மங்கள விக்ரகத்தை (அர்ச்சையில் வரதனாக) உடையவன். தடையிறாத சங்கல்பத்தை (கட்டளை) உடையவன்.  ஆகாசம் போன்று சூக்ஷ்மமாகிய ஸ்வரூபத்தையுடையவன்.  ஸகல ஜகத்திற்கும் கர்தா.  பரிசுத்தமான போக்யம், போகத்திற்கான உபகரணங்களையுடையவன்.  பரிபூர்ண ஐச்வர்யம் உடையவனாகையால் எதுகுறித்தும் கவலை கொள்ளாமல், எதிர்பார்க்காமல் அலக்ஷ்யமாக (அநாதரவுடன்), எதுவும் பேசாமல் இருக்கிறான்.

     “அழகிய வர்ணத்தினாலாகிய திவ்ய வஸ்த்ரத்தினை உடுத்தியிருக்கிறான்”.

     “பூமியும் லக்ஷ்மியும் இவனது மனைவிகள்”.

     “அந்த விஷ்ணுவின் உயர்ந்த ஸ்தானத்தை சூரிகள் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.”

     “ப்ரக்ருதி மண்டலத்திற்கு மேம்பட்டவிடத்தில் அவன் வசித்துக் கொண்டிருக்கின்றான்.   அவன்தன் திவ்யமங்கள விக்ரஹமானது அளவற்ற ரூபத்தை (அழகை) உடையது.  அது வர்ணிக்க இயலாதது. புராதனமானது. எங்கும் நிறைந்திருப்பது.

     பக்தர்களின் இதய குகையில் உள்ள இந்த பரப்ரஹ்மத்தை எவன் உபாசிக்கிறானோ ! அவன் மகாவைகுந்தமாகிய பரமபதத்தையடைகிறான்”.

     இதுவரையில் சொன்ன ப்ரமாணங்கள் அனைத்தும் வேதார்த்த ஸங்க்ரஹத்தில் எம்பெருமானை வர்ணிக்கும் எம்பெருமானாருடைய (ஸ்ரீபாஷ்யகாரர்) வாக்யங்கள்.  இவ்விதமுள்ள வாக்யங்களை பாராயணம் செய்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், வரதன்; அனுஷ்டான குளத்தின் அருகில் எழுந்தருளிய பரபரப்பு உண்டானது.

     திருயஜ்ஞம் சுவாமியின் நியமனத்தின்படி அடியோங்கள் பாராயணம் செய்வதை நிறுத்திவிட்டு பெருமாளை ஸேவிக்கச் சென்றோம்.  இந்த வேதார்த ஸங்க்ரஹத்திற்கு ஸ்ரீ பாஷ்யம் போன்றே வ்யாக்யானம் அருளியவர் ச்ருதப்ரகாசிகாசாரியார் எனும் சுதர்ஸந சூரி.  அவர் ச்ருதப்ரகாசிகையின் மங்களச்லோகத்தில் ப்ரமாணம், ப்ரமேயம், ப்ரமாதா என மூன்றையும் போற்றுகிறார்.

     அதாவது ப்ரமாணம் வேதம் அந்த வேதத்தினால் தெரிய வருவது ப்ரமேயமாகிய வரதன்.  “வேத வேத்யன்” என்று வேதம் கொண்டே அறியத்தக்கவன்.  அடுத்தது வேதத்தை கொண்டு நமக்கு வேதாந்த விழுப்பொருளான பெருமானைக் காட்டித்தரும் ஆசார்யர்.  அவர் ப்ரமாதா, ப்ரமாணங்களை விளக்கி, ப்ரமேயத்தைக் காட்டித்தருபவர்.

     இப்போது பாராயணம் செய்யும் ப்ரமாணம்.  வேதார்த ஸங்க்ரஹம் ப்ரமேயம் பகவான் வரதன். ப்ரமாதா ஸ்ரீபாஷ்யகாரர். அறிவிக்கும் ப்ரமாணமும், அறிவுறுத்தும் ஆசார்யரும், அறியப்படும் பரம்பொருளும் ஒன்று சேர்ந்ததை உள்ளம் அனுபவித்ததை வர்ணிக்க வார்த்தையில்லை.

     ஒரு அழகிய மேனாபல்லக்கில் (பொட்டியில்) இரண்டு பெண்ஹம்ஸங்களுடன் கூடிய ராஜஹம்ஸம் போன்று வரதன் எழுந்தருளினான்.  நாகரிகவாசனை அதிகமிருந்தாலும், இன்னமும் தார்சாலையில்லாத அந்த பாதையில் புழுதியளைந்த பொன்மேனியுடன் வரதனின் ஊர்வலம்.  சுவாமி தேசிகன் ஹம்ஸ ஸந்தேசத்தில் ஹஸ்திகிரி நாதனுடைய வாகனங்களை எழுந்தருளப் பண்ணுபவர்கள் உழக்கிய பாததுளிகளை தேவர்களும், நித்யசூரிகளூம் தங்களின் சிரஸில் (தலையில்) பூசிக்கொண்டு தன்யனாகிறார் என்கிறார்.  அதேபோன்று “ஸ்ரீரங்கநாதனுடைய திருவடித்தாமரைகளை தலையில் ஏந்தும் பாகவதரின் பாததூளி உலகினை பவித்ரமாக்குகிறது” என்கிறார் பாதுகா ஸஹஸ்ரத்தில். இதன் முடிவிலும் “யதிராஜன் ஸ்ரீ சூக்திஜயதி, அதுபோன்று முகுந்தனின் பாதுகைகள் ஜயதி” என்று முடிக்கிறார்.  இங்கு ஸத்வமயமான அப்புழுதி உலகினை உய்விக்கிறது.

     மேலும் நாங்கள் பாராயணம் செய்த வேதார்தஸங்கிரஹம். அது யதிராஜசூக்தி (ராமானுஜர் இன்னுரை).  ராமானுஜருடன் வரதன் புறப்பாடு முகுந்தஸ்ய பாதுகா – வரதனின் பாதுகை. உபக்ரம், உபஸம்ஹார ஆரம்பம், முடிவில் உள்ள விஷயங்களை ஆராய்ந்தால் பாதுகையின் பெருமை (துயரறு சுடரடி என்று தேவாதிராஜனை நெஞ்சினில் கொண்டு பாடிய நம்மாழ்வாரின் பெருமை) இத்தலத்திலன்றோ பொருத்தமுடையதாகிறது.

     அழகியதாக திருமேனியில் போர்த்தப்பட்ட போர்வைகள் களையப்பட்டு வரதனின் வடிவழகு முழுவதும் சேவையானது. “ஐயோ ! இவன் அழியா அழகு எனும் வடிவுடையான்” எனும் கம்பராமாயணத்தின் வரிகள் உள்ளத்தே ஆர்பரித்தன. கம்பநாட்டாழ்வான் இவ்விதம் பாடியதற்கு ஆதாரமாகிய “நீலமேனி ஐயோ ! நிறை கொண்டது என்நெஞ்சினையே” எனும் திருப்பாணணின் வரிகள் தேவாதிதேவனுக்கன்றோ. இனி கீழ்சொன்ன ப்ரமாணங்கள் ஒவ்வொன்றையும் இணைத்து சேவிப்போம்.  இதய குகை போன்ற மேனா பல்லக்கிலிருந்து வரதன் பகலோன் பகல் விளக்காக பரஞ்சுடர் தோன்றியது போன்றல்லவா ஆவிர் பவித்தான்.

     “ஹே வரதா! உலகியல் மயக்கமாகிய இருளகற்றும் கதிரவனாகிய உனது திவ்ய ஸௌந்தர்யம் என்றுமே சுடர் விடுகிறதே” என்றார் நம் அப்புள்ளார் வளர்த்த பைங்கிளி தேசிகன் வரதராஜ பஞ்சாஸத்தில். அதே போன்றுதான் நம் இதயகுகையின் இருளகற்றும் வரதன் நெஞ்சென்றும் உட்கண்ணால் காண்பதற்கு, இன்று கட்கண்ணில் தெரிந்தான்.

     “பகல் கண்டேன் நாராயணனைக் கண்டேன்” என்றும் ஆழ்வார் பாசுரத்தின்படி நல்ல மத்யாஹ்ன வேளையில் பகலோன் முன்பு பரஞ்சுடர் தோன்றியது. இந்த ஆயுளில் எத்தனையோ முறைகள் இங்கு சேவித்திருந்தாலும் இன்று ப்ரமாணத்துடன் (வேதார்த்த ஸங்க்ரஹம்) சேவித்ததே விசேஷம். ஆகையால் அடியோங்களுக்கு இது “பகல் கண்டேன்” என்றதாயிற்று.  இது அவனுடைய சங்கல்பத்தின் மகிமையன்றோ.  அதனால்தானே தூப்புல் குலமணியும் “ஸம்ஸாரம் எனும் இரவு எவனுடைய ஸங்கல்ப சூர்யோதையத்தால் அழிகிறதோ” என்று பாடினார்.

     நிலத்தேவரான ப்ராஹ்மணோத்தமர்கள் ப்ரமாணமாகிய வேதத்தைக் கொண்டு அவனை துதித்தபோது “சூரிகள் எப்போதும் அவனைக் காண்கின்றனர்” எனும் வாக்யத்தின் பொருள் உணர்ந்தோம்.  “அழகிய உண்மையமாகிய வஸ்த்ரத்தையுடுத்தியவன்” என்பதை போர்வைகளைந்து சேவித்தோம் “ஸ்ரீயும் பூமியும் அவனது தேவிகள்” என்று அதனைக் கண்டுணர்ந்தோம்.

     போக்யம், போகோபகரணம், போகஸ்தானம் இவையனைத்தும் அவனது புறப்பாட்டில் நிரம்பியிருந்ததைக் கண்டோம். அவனுடைய ஸ்தானம் “பரமபதம்” என்றால் அதுவும் இதுதான்.

     “ஹே வரதா ! நீ ப்ரஸன்னமாக வேண்டும்.  உன்னருகிலேயே இருக்க வேண்டும்.  நிஷ்கபடமான பக்தி உன்னிடம் வைக்கவேண்டும் இதோ.  இந்த உன்னடியாருடன் கூடியிருத்தல் வேண்டும் எனில் இவையன்றோ பரமபதம்” எனும் தேசிக ஸார்வபௌமனின் வர்ணனை இங்கு நிகழ்காலமானது. நிகழ்களமானது.

     இப்படி சுடர்மிகு சுருதியின் ஒவ்வொரு வாக்கியத்தையும் சேவித்து, அதன் பொருளை ப்ரத்யக்ஷமாக சேவித்து, சேவித்து தந்யர்களானோம்.

தொடரும்…

 

Sri #APNSwami #Writes #Book | அருளாளன் பேரருள் – Part 2 | அனுஷ்டான குளம் – சாலைக்கிணறு உற்சவம் @ காஞ்சி

அனுஷ்டான குளம் – சாலைக்கிணறு உற்சவம் 29/12/18 @ காஞ்சி

“அருளாளன் பேரருள்” Part – 2

      அருளாளன் தாம் எனினும் தமக்கொவ்வாத வைபவத்தை உடையவன் செய்த பேரருளை உரைப்போமினிச்சிறிது.  அன்றைய தினம் 19.1.2017 தேவாதிராஜ சபையில் ஒரு பாக்கியம் கிடைத்தது.  ஸ்ரீபாஷ்யகாரரின் 1000வது ஆண்டு அவதார மஹோத்ஸவத்தை முன்னிட்டு ராமானுஜ தாஸர்கள் எனும் அமைப்பினர் ஆங்காங்கு ஸ்ரீ பாஷ்யகாரரின் ஒன்பது க்ரந்த பாரயணத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.  அவ்வகையில் அன்றைய தினம் வேதார்த்த ஸங்க்ரஹம் பாராயணம் அடியேனுக்கு வாய்த்தது.  சென்னையிலிருந்து ஸ்ரீ உ. வே. கூத்தப்பாக்கம் சக்ரபாணி சுவாமி, காவனூர் சக்ரவர்த்தி சுவாமி, குறிச்சி நாராயணாசார்யார் சுவாமியுடன் செவிலிமேட்டிற்குச் சென்றோம்.

      ஸ்ரீ உ.வே. நாவல்பாக்கம் யக்ஞம் சுவாமி (கண்ணன்) இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.  ஒரத்தி. சுவாமி, தள்ளம் நரசிம்மன் சுவாமி, நாவல்பாக்கம் சித்தியார்ய ராமானுஜாசார்யர் சுவாமி என அனைவரும் வந்து சேர்ந்தனர்.  காலை பத்து மணிக்கு செவிலிமேடு ஸ்ரீபாஷ்யகாரர் சன்னிதி மண்டபத்தில் பாராயணம்.  நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகமாந்து.  அதனால் அச்சன்னிதியின் ப்ரகாரத்தில் பின்புறம் ஆலமர நிழலின் அமர்ந்து பாராயணம் செய்யலானோம்.  அதற்குள்ளாக வரதன் கோவிலிருந்து புறப்பாடு கண்டருளினான் என்பதும் அறிந்தோம்.

தொடர்ந்து வரதனுடைய வைபவங்களை அனுபவித்திடுங்கள்…

இனி ஸ்ரீAPN ஸ்வாமியின் அருளாளன் பேரருள் Part – 2 தொடரும்…

வேதார்த்த ஸங்க்ரஹம்:

     வேதார்த ஸ்ங்க்ரஹம் எனும் இந்த நூல் வேதாந்த வாக்யங்களுக்கு அத்வைதிகள் மற்றும் பாஸ்கர, யாதவப்ரகாச மதத்தார்கள் கூறும் தவறான பொருளையெல்லாம் கண்டித்து உண்மையை உரைப்பது.  ஸ்ரீ பாஷ்யகாரரின் சித்தாந்தத்தை நன்கு தெளிவாக உணரவைப்பது.  பரப்ரஹ்மமான தேவாதி ராஜனின் திருக்கல்யாண குணங்கள் இதில் அத்யாச்சர்யமாக விவரிக்கப்படுகின்றன.  இதிலுள்ள பங்க்திகள் (வரிகள்) ஸ்ரீபாஷ்யகாரரின் நாவீறுக்கு ( சொல் திறமைக்கு) அத்தாட்சியாகும்.

      முதலில் சாமான்யமாக அத்வைத, யாதவ பாஸ்கர, கண்டனம் செய்தபின்னர் ஸ்ரீபாஷ்யகாரர் தனது சித்தாந்தத்தை நிலை நிறுத்துகிறார்.  அதில் முக்யமானது வேதத்தின் பெருமை, இதிஹாஸ புராணங்களின் ஸத்யத்வம் ( உண்மை நிலை), நித்ய விபூதியாம் ஸ்ரீவைகுண்டத்தின் பெருமை.  அதில் எழுந்தருளியுள்ள எம்பெருமானின் வர்ணம்,  அவர்தம் குணங்கள், ஆபரணங்கள், சூரிகள் முதலியவற்றின் பெருமை என அனைத்தும் அநுபவ ரசிகர்களுக்கு ஆனந்தமான விருந்தாகும்.

     இவ்விதம் பூர்வபக்ஷ (விசிஷ்டாத்வைதத்திற்கு முரணான) விஷயங்களை பாராயணம் செய்துவந்த நாங்கள், பின்னர் சன்னிதியின் பின்புறம் அமர்ந்து பாராயணம் செய்யவாரம்பித்தவுடன் அற்புதமான திவ்ய குணங்களை ஸித்தாந்த பாகத்தை பாராயணம் செய்யலானோம்.

      நித்ய விபூதி ஸமர்த்தநம் என்பது வேதார்த்த ஸங்க்ரஹத்தின் கடைசி பகுதி.  அதை ஆரம்பித்தவுடன் வரதன் எழுந்தருளுவதற்கு அடையாளமாகிய உடல், திருசின்ன ஓசை கேட்டது.  “திருசின்ன ஓசை இனிமையுண்டோ மற்றை தேவர்கட்கே” என்கிறார் சுவாமி தேசிகன்.

      எம்பெருமானின் பாஞ்சன்யம் எனும் சங்கத்வனி போன்றது திருச்சின்னம்.  அது வரதனுக்கே உரித்தான் வாத்யம்.  ஓம்காரமாகிய ப்ரணவத்தின் உண்மைப்பொருளை நமக்கு உணர்த்தவல்லது.  நாங்கள் பாராயணம் செய்வதோ வேதார்த்த ஸங்க்ரஹம்  (வேதாந்தத்தின் சுவை பொருள் சுருக்கம்) வேதமோ ப்ரணவத்தினுள் அடங்கியது.  “ அந்த ப்ரணவத்தைச் சொல்லியே வேதம்” தொடங்கப்படும்.  அதிலேயே வேதம் நிறைவுறும்.

    1)  ப்ரணவத்தின் பொருள் வரதன்.  “பார்த்தன் தேரிலும், ப்ரணவத்திலும் விளங்குபவன்”  2)  எங்கிறார் சுவாமி தேசிகன் ப்ராமர்த்ஸ்துதியில் த்வனியான திருசின்னம் வேதத்தை, வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விரும்பும் கோதில் இங்கனியை, நந்தனார்களிற்றை, குவலயத்தோர் தொழுதேத்தும் ஆவியை, அருளாளனை நமக்கு அறிமுகப்படுத்தியது.

(மூன்று மாத்திரை வேதம்.  திருச்சின்னம் ஊதும் சமயம் – 3 மாத்திரை)

 இப்படி திருசின்னத்வனி ப்ரணவத்தை ஒத்தது என்றால் அதன் விவரணத்தையும் அறிய வேண்டாவோ!  அதைத்தானே சுவாமி தேசிகன் “திருச்சின்னமாலை” எனும் திவ்யப்ரபந்தமாகப் பாடியுள்ளார்.  அது முழுதும் பரதத்வ நிர்ணயம் செய்தும், பரமாத்மாவின் ஸ்வரூபம், ரூபம் (வடிவழகு) குணங்கள், வைபவங்கள் ஐஸ்வர்யங்கள் என அனைத்தையும் விளக்குகின்றன.

      இப்போது நாங்கள் சேவிக்கும் பாராயணம் செய்யும் வேதார்தஸங்க்ரஹத்தின் வரிகள் ஸத்ய ஸ்வரூபனாகிய தேவதேவனை கண்ணெதிரே தோன்றச் செய்தன.  நித்யவிபூதியினை வர்ணிக்கும் விஷயமனைத்தும்  நேராகக் கிடைத்த பொழுது யாரால்தான் அதை விடமுடியும்.  சுவாமி தேசிகன்  “ மனிதனுக்கு அமுதம் கிடைத்தால் அவன் அதனை வேண்டாம் என்பானோ?”  எங்கிறார்.  அதுபோன்றுதான் வரதன் தன்னையனுபவிக்கக் கொடுத்தபிறகு அதையனுபவிக்கத்தடையேது.  இது கண்டுதான் தேசிகோத்தமனும் “ வைகுண்ட்அ வாஸேபி நமே அபிலாஷ:”  வைகுண்டத்திலும் எனக்கு விருப்பமில்லை என்று அருளினார் போலும் .

      நாங்கள் பாராயணம் செய்ததற்கும், வரதன் எழுந்தருளி நின்ற கோலத்திற்குமுள்ள சாம்யத்தை (ஒப்புமையை)க் கேளீர்.

    “பரப்ரஹ்மமாகிய அந்த நாராயணனுக்கு எல்லையில்லாத ஜ்ஞாநம், ஆனந்தம், அமலம் (குற்றமற்ற தன்மை) முதலியவையும், எல்லையில்லாத ஜ்ஞாநம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீரியம், தேஜஸ் முதலிய கல்யாண குணங்களும் உண்டு”.  மேலும் தனது ஸங்கப்பத்தினால் இந்த ப்ரபஞ்சத்தின் இயக்கத்தை உடையவன்.   இதுபோன்றே நித்தியமாயும், நிர்துஷ்டமாயும் (கோதற்ற) வேறு சில தன்மைகள் அவனுக்கு உண்டு.

 அவையாவன:

1.  அவனுடைய திவ்யரூபம் ஒன்று உடையவன்.

2.  அந்த திவ்ய ரூபத்திற்குத்தக்கதான அளவற்ற மகிமையுடைய அப்ராக்குத (திவ்யமான) திவ்ய பூஷண ங்கள் அனேகங்களை உடையவன்.

3.  மிகவும் ஆச்சரியமாக அனேகவித  ஆயுதங்களை உடையவன்.

 4.  இவ்விதமுள்ள தனக்கு, எல்லாவிதத்திலும் தக்கவளான மகாலட்சுமிதனை உடையவன்.

 5.  அதே போன்று  அளவற்ற குணங்களுடைய பரிஜனர்களை ( சுற்றத்தாரை) உடையவன்.

 6.  எல்லாவிதத்திலும் தனக்குகந்த போகிய, போகோபகரண, போகஸ்தானத்தை (திவ்ய ஸ்தானத்தை) உடையவன்.

     என்று இவ்விதம் அனேக விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்

     ஸ்ரீபாஷ்யகாரர் இங்கு வர்ணிக்கும் சமயம்.  இதுவரையிலும் விவரணம் (விரித்து) சாதித்துப்பின்னர் ச்ருதி வாக்யங்களை (வேதவாக்யங்களை) ப்ரமாணமாக சாதிக்கிறார்.

     அடியோங்கள் பாராயணம் செய்த சமயம் பெருமாள் எழுந்தருளுவதாக திருச்சின்ன த்வனி கேட்டதல்லவா.  அவை விரித்துரைத்த பொருளைப் போன்று நாங்கள் இதை அனுபவித்தோம்.

“உயர்வற உயர்நலம் உடையவன்”

      என்று திருவாய் மொழியின் முதல் பாசுரம் வரதன் வைபவத்தை விளக்குவதே, என்று மகான்கள் இதைக்  கொண்டாடுகின்றார்கள்.  தேவப்பெருமாள் சன்னிதி நம்மாழ்வாரும் தொழுது எழு என்மகனே” என்பதாக தனது இதயத்தில் கைவைத்துள்ளதைக் காணலாம்.  உடையவராம் ஸ்ரீபாஷ்யகாரரை- உடையவனாம் (ஸ்ரீபாஷ்யகாரரைத் தன்னிடம் கொண்டவன்) வரதனின் கல்யாண குணங்கள் ஆழ்வாரின் திருவுள்ளத்தின்படியே இங்கு வர்ணிக்கப்படுவது பண்டித பாமர வித்தியாசமின்றி ஏற்படும் அனுபவம்.

      “உயர்வற உயர்நலம் உடையவன்” – என்று குணங்களின் சீர்மை பேசப்பட்டாலும் இச்சீர்மைகளையுடைய உடையவரை( ராமானுஜரை ) உடையவன் என்பதன்றோ வரதனுக்குப் பெருமை.  காணாத, சாக்கிய, பாஷண்டம் முதலிய மதங்களினால் துர்வாதம் எனும் சேற்றுக் குட்டையில் மூழ்கின ப்ரம்மத்தைக் காப்பாற்றிய கரம் உடையவரை உடையவன் வரதன்.

     வரதனுக்கு “ஹஸ்தீ” என்றொரு திருநாமமுண்டு அதாவது கொடுப்பவன்.  (வரதன்) அளிப்பவன் என்பது பொருள்.  இருப்பினும் காப்பாற்றுபவனும் ஹஸ்தீ (கையு டையவன்) அன்றோ.  ஆனால் பரப்ரஹ்மமாகிய தன்னைக் காப்பாற்றும் ராமானுஜரைத்தான் காப்பாற்ற வரதன் நிகழ்த்திய லீலையன்றோ இந்த உற்சவம் ஆகையால் உடையவராம் ராமானுஜரைஉயர்வற உயர்நலம் உடையவரை உடையவன் வரதன்.

இன்று “வேதார்த்த ஸங்க்ரஹம்” பார்த்தோம்…நாளை வடிவழகு மறவாதார்…

 நாளை தொடரும்… 

Sri #APNSwami #Writes #Book | அருளாளன் பேரருள் – Part 1 | அனுஷ்டான குளம் – சாலைக்கிணறு உற்சவம் @ காஞ்சி

அனுஷ்டான குளம் – சாலைக்கிணறு உற்சவம் 29/12/18 @ காஞ்சி

“அருளாளன் பேரருள்” Part – 1

     துர்முகி தை 06 வியாழக்கிழமை (19.1.2017) அன்று ஸ்ரீ தேவாதிராஜன் அனுஷ்டானகுள உத்ஸவம்.  இவ்வருடம் மிக விமரிசையாக நடந்தேறியது.  அன்றைதினம் அடியேனுக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்வதே இந்த வ்யாஸத்தின் (கட்டுரையின்) நோக்கம்.  அவசரமில்லாமல் நிதானமாகப் படியுங்கள்.  பின்னர் உங்களின் கருத்திக்களைப் பதிவிடுங்கள்.  ஏற்கனவே “ஸிம்ஹங்களின் சல்லாபம்”  எனும் தலைப்பில்… எழுதிய ஒரு சிறுபுத்தகத்தையும்,  “ மேகத்தின் தாகம்” எனும் ராமானுஜ சரித்திர நாவலையும் இங்கு நினைவுறுத்துகிறேன்.  இவையிரண்டுமே காஞ்சி வரதனின் அனுஷ்டான உத்ஸவத்தின் வைபவத்தை விளக்குபவை.

 தொடர்ந்து வரதனுடைய வைபவங்களை அனுபவித்திடுங்கள்…

இனி ஸ்ரீAPN ஸ்வாமியின் அருளாளன் பேரருள் தொடரும்…

சுருக்கத்தின் சுவை :

     திருப்புட்குழியில் யாதவப்ரகாசர் எனும் அத்வைத (தனி மதம்) ஆசார்யரிடம் ராமானுஜர் சிறுவயதில் கல்வி பயின்றார்.  அவரோ!  உபநிஷத்துக்களுக்கு மனம் போன போக்கில் அர்த்தம் சொல்வதில் வல்லவர்.  அதிலும் பெருமானின் திருகண்களுக்கு அவர் கொடுத்த உவமானம் வேதத்திற்கே ஏற்பட்ட அவமானம்.

     ஆழமான குளத்தில் பூத்த தாமரை, சூரியனின் கிரணம்பட்டு தானே மலர்ந்தால் விளையும் அழகினை வேதங்கள் எம்பெருமானின் திருக்கண்ணுக்கு உவமையாக்கின.  ஆனால் “ குரங்கின் சிவந்த பின்பாகம் போன்றது அவன் தன் கண்ணழகு”  என்று யாதவர் விரித்துரைத்தபோது;  ராமாநுஜரின் மூடினவிழிகள் வெந்நீரை வார்த்தன.  பல சமயங்களில் குருவுக்கும், சிஷ்யனுக்கும் கருத்து வேற்றுமை நிலவியதால் குரு சிஷ்யனைக் கொல்லவும் துணிந்தார்.  காஞ்சியில் கொன்றால்;  கலகம் விளையும் என்பதை நன்கு அறிந்தவராகையால் ‘காசிக்கு அழைத்துச் சென்று கங்கையில் கொல்லலாம்’ என்று நினைத்தார்.  ராமானுஜரின் தம்பியாகிய கோவிந்தனின் சமயோசிதத்தால் அக்கொலை முயற்சியிலிருந்து தப்பினார் ராமானுஜர்.

      பின்னர் விந்திய மலைகாடுகளில் தனியாகத் தவித்தபோது வரதனும், பெருந்தேவியுமாக ஒரு வேடுவன், வேடுவச்சியாக வந்தனர்.  இளையாழ்வாராம் ராமானுஜருடன் நடந்தபோது ஒரு இரவிற்குள் விந்திய மலைக்காடுகளிலிருந்து காஞ்சிக்கு அழைத்து வந்தனர்.  பின்மாலை வேளை இருள் பிரியும்போது வேடுவச்சி வேடத்திலிருந்து பிராட்டி தாகத்திற்கு தண்ணீர் வேண்டினாள்.  சாலையோரமிருந்த கிணற்றிலிருந்து ராமானுஜர் தண்ணீர் அளித்தார்.  பின்னர் அத்தம்பதி மறைந்தனர்.  அதன்பின்னர் திருக்கச்சிநம்பிகள் வாயிலாக வந்தது பெருமாள் என்றறிந்தார் ராமானுஜர்.  மேலும் அதுமுதற்கொண்டு அச்சாலையோர கிணற்றிலிருந்து பெருமாளுக்கு தினமும் தீர்த்தம் சமர்ப்பிக்கலானார்.

      இன்றுவரையிலும் வரதனுக்கு இக்கைங்கர்யம் இடையூறு இல்லாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இக்கதையின் பெருமைதனையும் சுவாமி தேசிகன் யதிராஜஸப்ததியில் அற்புதமாக ஒரு ச்லோகத்தாலே வர்ணிக்கிறார்.  இதை நினைவுறுத்தும் விதமாக வருடந்தோறும் அத்யயன உற்சவத்தில் இயற்பா சாற்றுமறைக்கு மறுதினம் (தேசிகப்ரபந்தம் சாற்றுமறை தினத்தில்) வரதன் சாலைக்கிணற்றுக்கு எழுந்தருளி அனுஷ்டான குள உத்ஸவம் கண்டருளுகிறான்.

      அதவது கோவிலிலிருந்து பெருமாள், உபயநாச்சியார் ஸ்ரீபாஷ்யகாரருடன் மதியம் சுமார் பன்னிரெண்டு மணிக்கு அனுஷ்டான குளம் எழுந்தருளுகிறான் வரதன்.  இவ்விடம் செவிலிமேடு எனும் க்ராமத்தில் அமைந்துள்ளது.  இங்கு ஒரு கிணறும், தூர்ந்துபோன அனுஷ்டான குளமும் அதன் எதிரில் ஸ்ரீபாஷ்யகாரர் சன்னதியும் அமைந்துள்ளது.

     பெருமாள் இம்மண்டபத்திற்கு எழுந்தருளியவுடன் ஸ்ரீ பாஷ்யகாரர் சாலைக்கிணற்றுக்குச் சென்று தண்ணீர் கொண்டு வருகிறார்.  சாலைக்கிணற்றின் தண்ணீரால் (தீர்த்தத்தால்) பெருமாளுக்கு அத்யாச்சர்யமானதொரு திருமஞ்ஜனம்  நடைபெறுகிறது.  பின்னர் பெருமாள் சார்ங்க தந்வாவாக (வில்லை சாற்றிக் கொண்டு வேடுவகோலத்துடன்) ஸ்ரீ பாஷ்யகாரருடன் தூப்புல் எழுந்தருளுகிறார்.

      ஸ்ரீபாஷ்யகாரரின் திவ்ய சரித்ரத்தையும், தேவாதிராஜனின் திவ்ய சௌந்தர்யத்தையும், அபார கருணைதனையும், தேசிகோத்தமனின் ஆசார்ய பக்திதனையும் ஒன்றாக அனுபவித்திட வாய்த்திடும் உத்ஸவமிது.  இதன் வைபவத்தையுணர்ந்து சேவிக்கும் பரம நாஸ்திகனும் ஆஸ்திகர்களுள் கலந்திடும் திவ்யாநுபவத்தை யார் உரைத்திட வல்லவர்?

சுருக்கத்தின் சுவையைப் பார்த்தோம்…இனி…’அருளாளன் பேரருள்”

                                                                                            நாளை தொடரும்…