தனிமையில் இனிமை காண முடியுமா? ஏகாகி ந ரமேத | A thought provoking article by Sri U.Ve K. B. Devarajan Swami | Published by Sri APN Swami

தனிமையில் இனிமை காண முடியுமாஏகாகி ந ரமேத

எண்ணமும் எழுத்தும் ஆக்கமும் : ஸ்ரீ உ.வே K.B. தேவராஜன் ஸ்வாமிகள்
ரசித்து வெளியிடுபவர் : ஸ்ரீ APN ஸ்வாமி

A thought provoking article on Senior citizen township & today’s state of temples in villages

தற்காலத்தில் முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டன. ஒரு புறம் பணம் மறுபுறம் முதியோர் இல்லங்கள் மிகுதியாக காணப்படுகிறது. அதே சமயத்தில் கிராமங்களில் உள்ள கோயில்கள் பெருமையிழந்து வருகின்றன. இதனை ஸ்ரீ உ.வே K.B. தேவராஜன் ஸ்வாமிகள் ஸ்ரீ APN ஸ்வாமிகளிடம் பகிர்ந்து கொண்டுள்ளதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

சுகம்” முதியோர் இல்லம் அன்று மிகவும் பரபரப்பாக இருந்தது.

பல முதியோர் அங்கு தங்கள் மக்கள்களால்(பிள்ளைகளால்) சேர்க்கப்பட்டு வசித்து வருகின்றனர். அனைவருக்கும் காலை காபி, எட்டு மணிக்கு சிற்றுண்டி, பன்னிரண்டு மணிக்கு சாத்வீக உணவு. மாலை மூன்றரை மணிக்கு சுண்டல் மற்றும் டீ, இரவு ஏழரை மணிக்கு சப்பாத்தி மற்றும் ஒன்பது மணிக்கு பால் வழங்கப்படுகிறது. வாரம் மூன்று முறை மருத்துவர் வருவார். கழிவறை வசதியுடன் கூடிய இருவர் தங்குமளவு ஒரு விசாலமான அறை. அறைக்கு அறை டிவி. மாதம் ஒரு முறை outing. பல அறைகளில் முதிய கணவன் மனைவியர் இருந்தனர் . சிற்சில அறைகளில் தனித்த ஆணோ பெண்ணோ இருந்தனர். கூப்பிட்ட குரலுக்கு வந்து உதவ ஒரு ஆண் ஆளும் பெண் ஆயாவும் உண்டு. யாருடைய முகத்திலும் மகிழ்ச்சி இல்லை. காரணம் வெளி நாடுகளிலும் வெளி ஊர்களிலும் உள்ள அவர்கள் குழந்தைகள் ஏதோ ஒரு காரணம் கூறிக்கொண்டு பெற்றோர்களை வந்து பார்ப்பதில்லை.

திடீரென்று பரபரப்பு உண்டாகக் காரணம், பற்பல கிராமங்களிலிருந்து எம்பெருமான்கள் பலர் தாயார்களுடன் அம்முதியோர்களை சந்திக்கின்றனர். ஒரு பெருமாள் நல்ல பட்டு பீதாம்பரம் சாத்தி நன்கு அலங்கரிக்கப் பட்ட தாயாருடன் வந்தார். ஒருவர் தடித்த ஆளுயர மாலை சாத்தி வந்தார். ஒருவர் ஒற்றைச் சரத்துடன் வெள்ளை வேட்டி உடுத்து வந்தார். ஒருவர் கவசத்துடன் வந்தார். ஒருவர் எண்ணெய் படிந்த வஸ்த்ரத்துடன் வந்தார். ஒருவருடைய வஸ்த்ரம் ஆகங்கு சிறு சிறு துளைகளுடன் இருந்தது. ஒருவர் பளபளத்த art jewellery சாத்தி வந்தார். ஒருவர் சாலக்ராம மாலை சாத்தி வந்தார். ஒருத்தர் வெள்ளிக் கவசம் சாத்தி வந்தார். ஒரு ஊரிலிருந்து உத்சவர் மூலவர் இருவரும் வந்திருந்தனர்.

எல்லா பெருமாளும் ஒவ்வொரு அறைக்குச் சென்று முதியவர்களிடம் பேசத் துவங்கினர்.

முதல் அறையில்.

பெருமாள் : என்ன ராமசாமி. எப்படி இருக்கீங்க? பங்கஜம் எப்படி இருக்கா?

முதியவர்: ஓ எங்க பெர்சொல்லி கூப்பிடுகிறீரே? நீர் யாரு? தெரியலையே.

பெருமாள்: என்னூரைச் சேர்ந்தவன் நீ. உன்னைத் தெரியாதா? நினைவு உள்ளதா? எட்டு வயசுல தாத்தா கையைப் பிடிச்சு அழைத்து வருவாயே. பொங்கல் கொஞ்சமாகக் கொடுத்தான்னு ஓ என்று அழுவாயே.

முதியவர்: ஆ தேனூர் ஶ்ரீ நிவாசப் பெருமாளா? என்ன பாக்யம். சேவித்து 25 வருஷம் ஆச்சு. மறந்து போச்சு.

பெருமாள்: சௌக்யம் தானே? நாங்கள் உன்னை மறக்கவில்லை.

மற்றொரு முதியவர்: ஆஹா எங்க வரதராஜப் பெருமாள்! எங்களைப் பார்க்க வந்திருக்கார். என்ன பாக்யம்!

மற்றொரு முதியவர்: எம்பெருமானே வேளைக்கு சாப்பாடு எல்லாம் கிடைக்கிறது. Walking போகிறோம். பேப்பர் படிக்கிறோம். பார்க்கில் பேசுகிறோம். மாஸம் ஒருமுறை outing. எல்லாம் உண்டு. ஆனால் இதெல்லாம் இருந்தால் போதுமா பெருமாளே?

பெருமாள்: இதுக்கு மேல என்ன வேணும்?

முதியவர்: நான் பெத்து வளத்து ஆளாக்கிய என் பசங்கள் ஒருத்தனும் வந்து என்னைப் பார்க்கரதில்லை. மூன்று வருஷத்துக்கு முன்னால இங்க கொண்டு வந்து சேர்த்தது தான். அதுக்குப் பிறகு எட்டிக்கூட பார்க்கல. கேட்டால் பசங்களுக்கு ஸ்கூலாம் ஆஃபீஸ் work பிசியாம்.

என்ன தான் இங்க நன்னா கவனித்துக் கொண்டாலும் உடம்புண்ணு வந்துட்டால் நம்மைச் சேர்ந்தவா வந்து பார்த்தால் தானே ஒரு ஆப்யாயம்.

பாட்டி: (கம்மிய குரலோடு) பேரக் குழந்தைகளக் கண்ணுல கூடக் காட்டல அந்தக் கிராதகி மட்டுப்பொண்ணு. யாருக்கும் ஒரு பாவமும் செய்யல நாங்கள். எங்களுக்கு ஏன் இந்த கஷ்டம் ஶ்ரீநிவசா ?

மற்றொரு பாட்டி: (கண்ணில் நீர்கசிய) என் சம்பந்தி இருக்காளே அவ்வளோ நல்லவ. என்னையும் என் பிள்ளையையும் plan panni பிரிச்சுட்டா. நன்னா இருக்கட்டும். பெத்த எங்கள வந்து பாக்கர்துக்கு நேரமில்லை. மாமியார் மாமனார் பிறந்த நாளுக்கும் கல்யாண நாளுக்கும் பிரதி வருஷம் wish பண்ண flight பிடித்துக் கொண்டு ஓடரான் பொண்டாட்டி பசங்களோட. மச்சினி ஆஸ்திரேலியவிலேந்து வந்தாளாம் 15 நாள் லீவு போட்டு எல்லாரும் குலு மணாலி எல்லாம் சென்று வந்தாளாம். நேத்து வந்த என் நாத்தனார் மாப்ள சொன்னார்

பெருமாள்: நீங்க சொல்றது எல்லாம் எங்களுக்குத் தெரியும்.நாங்க பல ஊர்லேந்து பெருமாள்கள் வந்திருக்கோம். இங்க இருக்கற எல்லோரிடமும் நாங்க பேசணும். வாங்கோ பார்க்குக்கு போவோம்.

பார்க்கில் விதவிதமாய் பெருமாள்களும் தாயார்களும் ஒருபக்கம் பரிதாபமாய் நிற்கிறார்கள். எதிரில் பக்திப் பரவசத்தில் முதியோர்கள் கண்ணீர் மல்க நிற்கிறார்கள்.

எங்க பெருமாள். எங்க பெருமாள் என்று பல குரல்கள். நாராயணா வாசுதேவா கேசவா, வரதா, ரங்கா, வேங்கட ரமணா, ராமா, கிருஷ்ணா, வேணுகோபால், சுந்தர ராஜா, ஜகன்னாதா பத்மாவதி, ஆதிகேசவா ஜனார்தனா யதிராஜவல்லி, சுந்தரவல்லி, என தழு தழுத்த பல குரல்கள்.

ஒவ்வொருவராக தங்கள் தங்கள் பெருமாளுடன் selfie எடுத்துக் கொள்கிறார்கள். Photo session முடிந்தது.

பங்கஜம் மாமி: ஏன்னா… நம்ப ஊர் பெருமாளோட எடுத்த selfieயை atlantaல இருக்கிற நம்ப அனந்துக்கு அனுப்புங்கோ. அவன் அதை DP/ Statusல வெச்சுப்பான். ரொம்ப சந்தோசப்படுவான்.

தன் குழந்தைகளுடன் போட்டோ எடுத்துக்கொண்ட வரை smile செய்த பெருமாள் அனைவரும் திடீரென்று குலுங்கிக் குலுங்கி அழுகிறார்கள்.

சற்று நேரம் பேரமைதி.

எல்லாரும் சுதாரித்துக் கொள்கின்றனர்.

பின் பெருமாள்கள் ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கினர்.

குழந்தைகளே, எல்லாருக்கும் எங்கள் அனுகிரகம் என்னைக்கும் உண்டு. உங்களைத் தனிமை எவ்வளவு வாட்டுகிறது என்று எங்களுக்கு நன்கு தெரிகிறது.

நாங்களும் அதைத் தானே அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்.

எங்களுக்கும் நீங்கள் பண்ணியுள்ள ஏற்பாட்டின்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக எல்லாம் நடக்கிறது.

காலை விஸ்வரூபத்துக்கு பசும்பால். திருவராதனம் பொங்கல் புளியோதரை சக்கரைப் பொங்கல் எல்லாம் உண்டு. அப்பப்போ திருமஞ்சனம் புது வாஸ்த்ரம் கூட.

மாலை திருமால் வடை சுண்டல் கூட.

இத்தனைக்கும் கூட இருப்பவர் அந்த 20000 ரூபா சம்பளக் கார அர்ச்சகர் மட்டும் தான்.

அவர் என்ன எப்பவும் கூட இருக்காரா? நாலைந்து கோவில் பண்ணுகிறார். ஒரு நாள் காலை 7 மணிக்கு ஒருநாள் பகல் 11 மணிக்கு என்று அவர் இஷ்டம் தான்.

தனுர் மாசம் மாரிமலை பாசுரத்தன்று பகல் 12.30க்கு தனுர் மாசம். அவர் புரோஹித்யம் வேறு வெச்சின்றுக்கார். அன்னைக்கு ஒரு ஆயுஷ் ஓமமாம்

ஏதோ இந்த மட்டாவது ஒரு வாய் அன்னம் கிடைக்கறதே.

குழந்தைகள் உங்களப் பார்க்க முடியலை. அப்பறம் அந்த பொங்கலும் புளியோரையும் சக்கரப் பொங்கலும் எங்க ரசிக்கறது?

நீங்க நேர வந்து என்னப் பாத்து சௌக்யமான்னு என்னைக்காவது விசாரித்தீங்களா?

வந்து ரெண்டு வாழைப்பழம் அமுது செய்ய பண்ணினாலும் போரும் எங்களுக்கு எவ்வளவு திருப்தி தெரியுமா?

நீங்க அடிக்கடி என்ன வந்து பார்த்து இருந்தால் உங்களுக்கு இந்த தனிமையும் முதியோர் இல்ல வாசமும் இருந்திருக்காது.

எங்க ஊர் பெருதனக்காரர் சீனுவின் பேரன் சுதர்சனா தை திருவோணம் உன் பிறந்த நாளன்று நீ வருவேன்னு ராத்திரி கோயில் கதவை சாத்தர வரைக்கும் எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். தாயாரை சமாதானப்படுத்தி அழுகையை நிறுத்த காலை நாலு மணி ஆகி விட்டது. அது வரை ரெண்டு பேருக்கும் தூக்கமில்லை. அன்றைக்கு எங்களுக்கு வைகுண்ட ஏகாதசி தான்.

நீங்கள் என்னை வந்து பார்த்திருந்தால் உங்கள் பிள்ளைகள் உங்களை வந்து பார்ப்பர். என் தனிமை உங்களுக்குத் தனிமை உண்டாக்கிவிட்டது.

இப்போதும் ஒண்ணும் கெட்டுப்போகவில்லை. ஒன்று செய்யலாம்.

அந்தந்த ஊர்க்காரர்கள் உங்களைப் போன்ற முதியோர் மொத்தமாக ஒரு கட்டடம் கட்டி ஒன்றாக share பண்ணிக்கொண்டு கிராமங்களில் வாழலாம். தளிகை வேலைக்கு ஒரு ஆளும் போக்கு வரத்து வசதிக்கு ஒரு vehicle மற்றும் டிரைவர் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

முதியோர்: இதற்கெல்லாம் எங்கள்வூர்க்காரர்கள் சம்மதிக்க மாட்டார்கள் கேசவ.

பெருமாள்: அப்போ குறைந்த செலவில் ஒரு பொதுவான இடம் வசதிகளுடன் அமைத்துக்கொண்டு உங்களுக்குள் டர்ன் போட்டுக்கொண்டு அவ்வப்போது வந்து என்னுடன் ஓரிரு நாள்கள் தங்கி அளவளாவி(கைங்கரியம்–பரிசாரகம் தெரிந்த அருளிச்செயல், புருஷ சூக்தம், புஷ்பம் கைங்கர்யம் இத்யாதிகள் செய்து) போகலாமே.

முதியவர்கள்: இரண்டுமே நன்றாக உள்ளது. ஏதேனும் நிச்சயம் சேர்ந்து பேசி பண்ணுகிறோம் பெருமாள்களே.

பெருமாள் : சரி implement பண்ணறா மாதிரி ஒரு practical ஐடியா கொடுக்கட்டுமா? நீங்க எல்லாரும் இங்க முதியோர் இல்லத்தில் இருப்பதற்கு பதில், இந்த முதியோர் இல்லங்களை கிராமங்களில் construct செய்யலாமே!

முதியவர்கள்: எங்க ஸ்வாமி பங்காளிகள் இதுக்கெல்லாம் இடம் கொடுக்க மாட்டேங்கிறா, கண்டிப்பா ஒத்துழைக்க மாட்டா.

பெருமாள் : உங்க பங்காளிகள் கிட்ட ஏன் போகணும். இந்த முதியோர் இல்லத்தில் உள்ள எல்லோரும் இடம் வாங்கி சேர்ந்து ஒன்றாக இருக்கலாமே. உங்க எல்லோருக்கும் தான் நல்ல வசதி, காசு பணம் இருக்கே. அனைவரும் சேர்ந்து வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு என்னுடன் நிம்மதியாக வாழலாமே.

பங்கஜம் மாமி : அது வந்து அது வந்து,,,

பெருமாள்: பங்கஜம் புலம்பர்துல இருக்கிற ஜோர் உனக்கு கிராமத்தில் வசிக்கிறதில் இல்லைனு தெரியறது. சரி, usually நீங்க தான் என்கிட்ட application போடுவேல், for a change நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கிறேன். தயவு செய்து கிராமத்துல இருக்கிற எனக்கு புதுசா திருவாபரணம் பண்ணறேன், ராஜகோபுரம் காட்டறேன், தெப்பக்குளம் கட்டறேன் விக்ரஹங்களை ப்ரதிஷ்டை பண்ணறேன் னு please don’t waste your energy and money. உங்க முதியோர் இல்லத்தில் அதிகமாக ஆள் வரா மாதிரி, புது புது விக்ரஹங்கள் ஆபரணங்கள் எங்கள் கோவில் ல சேர்ந்து போறது. ஸேவார்த்திகள் இல்லாமல் யாருக்கு இவற்றை காண்பிக்கிறது.
நீங்க வாங்கோ அனுபவிங்கோ. நீங்க ஒரு வேளை கூட வசிக்க தயாராக இல்லாத அந்த இடத்தில் புதுசு புதிசாக project ஆரம்பிக்காதீங்கோ. உங்க பைசா எங்களுக்கு வேண்டாம். சரியா.

முதியவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் குற்ற உணர்ச்சியில் நின்றனர்.

பெருமாள்: சரி சரி விடுங்கோ. selfie யுடன் படித்ததில் பிடித்தது என்று நாம் பேசியதை facebook,twitter, instagram என்று social mediaவில் போட்டு like வாங்கி, viral post ஆக்குவீர்கள். அவ்வளவு தானே! அதுக்கப்புறம் வழக்கம் போல் எங்களை மறந்து தான் போகப்போகிறீர்கள். புராதனமான கோவில்கள் பாழானாலும், அக்ரஹாரம் அழிந்தாலும் கவலையில்லை. ஹும் ……

முதியவர்கள் கண்களில் தாரை தாரையாக நீர் வழிய அங்கு மௌனம் நிலவியது.

பெருமாள்: சரி எங்களுக்கு time ஆயிடுத்து.நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லியாச்சு. முடிவு உங்கள் கையில். நல்லது நடந்தால் சரி. நாம் எல்லாம் இன்பமாக கூட்டுக்குடும்பமாக இருக்கலாம். என் பிள்ளைகளான நீங்க என்னிடம் வந்தால், உங்கள் பிள்ளைகள் கட்டாயம் உங்களை பார்க்க தானே வருவார்கள். இந்த photo selfieயை DPல வெச்சு அழகு பார்க்கறது மட்டும் இல்லாமல் எங்க கோரிக்கையை deepபாக யோசிங்கோ! நாங்கள் வருகிறோம்.

30-Jan-2023
_________
We hope that this article would have kindled your thought process for sure.
Do not forget to Like, Comment & Share so that there is a change in the way we worship which will change the way we live.

– SARAN Sevaks / Shishyas of Sri APN Swami