Sri #APNSwami #Writes #Trending | வரதனின் விருப்பம் – 02

வரதனின் விருப்பம் – 02

(By Sri APNSwami)

     அனந்தசரஸின் அழகிய தோற்றம் நிலவொளியில் நன்கு தெரிந்தது.  இரண்டொரு நாட்களுக்கு முன்னர்தான் பௌர்ணமி தினமாதலால் சந்திரனின் ஒளி இன்னமும் குறையவில்லை.  குளத்தில் ஆங்காங்கு சிறிதுசிறிதாகத் தேங்கியுள்ள தண்ணீரில், நிலவின் பிம்பத்தைக் காணும்போதும், சிறு காற்றின் அசைவில் அத்தண்ணீர் அசையும்போது நிலவின் பிம்பம் அசைவதையும் கண்டால், அக்குளத்தினுள் சந்திரன் எதையோ தேடுவது போன்றிருந்தது.

     இன்று சந்திரனும் என்னைப் போன்றுதான் இளைத்து வருகிறானோ?  சுக்லபட்சத்தில் சுடர்விட்டு ப்ரகாசித்தவன், இப்போது தேய்பிறையில் ஏனோ தேம்புகிறான்!

      நைவாய எம்மேபோல் நாள்மதியே!  நீஇந்நாள்

     மைவானிருளகற்றாய் மாழாந்து தேம்புதியால்

      ஐவாயரவணைமேல் ஆழிப்பெருமானார்

     மெய்வாசகம்கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே!   

                                                                                              திருவாய்மொழி 2.1.6)

என்ற ஆழ்வாரின் பாசுரத்திற்கு ஆசார்யர்கள் உபதேசித்த அர்த்தம் மனதிலே கனிந்தது.

     முழுமதி இளைத்துள்ளது கண்டு ஆழ்வார் வினவுகிறார்.  வரதனைப் பிரிந்த ஏக்கத்தில் தலைமகளாக (பராங்குச நாயகியாக) ஆழ்வாரின் பிரிவுத்துயர் பாசுரம் இது.

    “என்னைப் போன்றே சந்திரனே! நீயும் இளைத்துள்ளாயே!”  என வினவுகிறார்  நிற்கின்றதெல்லாம் நெடுமால் என எல்லாவற்றிலும் எம்பெருமானைக் காணும் ஆழ்வார், இப்போது சந்திரனும் பெருமாளின் பிரிவினால் வாடுகிறதோ!  என்று எண்ணுகிறார்.

     “அமுதைப்பொழியும் நிலவே!  நீ இப்போது இந்த இருளை ஏன் அகற்றவில்லை  உன் ஒளி ஏன் மங்கியது?  உன் மேனியின் வாட்டத்தின் காரணம்தான் என்ன?  ஓ…  நீயும் என்னைப்போன்று எம்பெருமானின் வார்த்தையில் நம்பிக்கை வைத்துப் பின்னர் அவனால் ஏமாற்றத்திற்குள்ளானாயோ?”  “மாசுச:” “கவலைப்படாதே” என்று அபயமுத்திரை அளித்தவன் ஏமாற்றினானே.

     “ஓ அவன் பழகுமவர்களின் இயல்பினைப் பெற்றிருப்பவன் தானே என்ற ஆழ்வார்,  அப்படி யாருடன் பெருமாள் பழகினான்?  அவர்களைப் போன்று இவனும் எப்படி பொய்யனானான்?”  விதியின் பிழையால் ஒளியிழந்த மதியின் நிலை கண்டு மேலும் விவரிக்கிறார் ஆழ்வார்.

     “நம் வரதன் கொடுமையான இக்கலியுகத்தில் “அனந்தன்” எனும் ஆதிசேஷனால் ஆராதிக்கப்படுகிறானல்லவா!  மேலும் அனந்தசயனனாக ஆதிசேஷன் மீது (அனந்தசரஸில்) பள்ளி கொள்கிறானன்றோ!  அனந்தன்  எனும் பாம்புக்கு இரண்டு நாக்குகள் உண்டோ? அதாவது, பொய் பேசுபவரை இரட்டை நாக்குடையவர் என்பர் பெரியோர்  அனந்தனான ஆதிசேஷனுடன் பழகுபவனான வரதனும் பொய் பேசி உன்னை ஏமாற்றினானோ  வெண்ணிலவே!”  என்கிறார். 

    “மேலும், வரதனின் ஆயுதங்கள் அழகு.  அவற்றினுள் அழகோ அழகு சுதர்ஸந சக்ரம்.  எதுவொன்று மேன்மேலும் பார்க்கத் தூண்டுமோ,  அதுதானே சுதர்ஸனம்”.  அந்த திவ்ய சக்ரத்தின் கதையைக் கேளுங்கள்.

     “கௌரவ, பாண்டவ யுத்தத்தில் அபிமன்யுவை அந்யாயமாகக் கொன்றான் ஜெயத்ரதன்.  இன்று சூரிய அஸ்தமனத்திற்குள் அவனைக் கொல்கிறேன் என சபதம் செய்தான் அர்ஜுனன்.  அர்ஜுனனின் சபதம் காக்க சுதர்ஸந சக்ரம் சூரிய ஒளியை மறைத்து,  பகலின் நடுவே இரவு வந்தது போன்றதொரு மாயத் (பொய்த்) தோற்றத்தை விளைவித்தது.  இருள் சூழ்ந்தது என எண்ணி குதூகலித்த ஜயத்ரதன் வெளியே வர, சுதர்ஸன சக்ரம் விலகி, சூரியன் ஒளிவிட, அர்ஜுனன் அவரைக் கொன்றான்.”

     இப்படி பகல் நடுவே இரவழைக்க வல்லான் சுதர்ஸனன் செய்ததும் வஞ்சனை தானே.  இருநாக்கு பாம்புடனும், வஞ்சனை செய்யும் சக்கரத்துடன் பழகும் வரதன், ஏமாற்றாமலிருப்பானா!”

     ஆழ்வார் ப்ராகாரத்தின் நடுவே கம்பீரமாகத் தோன்றும் நம்மாழ்வாரின் சன்னிதியும், அதன் மேலே முகிழ்த மதியும் கண்டபோது, நமக்குள்ளும் ஆழ்வாரின் இந்த பாசுரமும், அர்த்தமும் தோன்றியது.

     அப்படியானால் வரதன் வஞ்சனை செய்பவந்தானா!  நாயகி நிலையில் ஆழ்வார் பாடியது நம்மைப் பொறுத்த வரையில் இன்று நிஜமாகத் தோன்றுகிறதே!  என் விதியை என் என்பது?

     எப்போதும் உடன் இருப்பதாகச் சொன்னவன், இன்று விட்டுச் சென்றுவிடுவானோ?  அப்படியெனில் கவலைப்படாதே என்பதின் பொருள் ப்ரமையா?

     தொண்டரடிப் பொடியில் பூத்துக் குலுங்கும் மகிழ மரத்தின் சுகந்த பரிமள வாசனையை சுமந்து வரும் காற்று, நெஞ்சத்தை நிறைத்தது.  சோகத்தால் கனத்திருந்த நம் இதயத்தில் நுழைந்து, நுரையீரலில் புகுந்த அந்த வாசனை, சற்றே ஆறுதலளித்தது.  இதுபோன்ற அமைதியான சூழலில், ஆழ்வார் பாசுரங்களையும், ச்லோகங்களையும் அர்த்தத்துடன் அசைபோடுவது ஆனந்தமளிக்கும்.  ஆனால் இப்போதோ, உள்ளத்தில் ஓசையில்லை… உதடுகள் ஒட்ட மறுக்கின்றன.  ஒளியில்லாத பார்வையுடன், எதையும் கவனிக்கும் மனநிலையின்றி, ஒலியில்லாத வார்த்தைகள் இதழின் ஏக்கத்தைத் தெரிவித்தன.

    இதயம் கனத்திருந்தால் இதழால் இயம்ப முடியுமா? உலர்ந்த உதடுகள் ஒலியின்றி உச்சரித்தன. வ…. ர….. தா….    வ….ர…..தா….” என்று…

     பாக்கியத்தின் பக்குவத்தில் எழுந்த ஓசையெனில் விண்ணதிர வரதா என ஒலித்திருக்கும் சோகத்தின் சாயலில் சுவாரஸ்யமின்றி சுருண்டன அந்த வார்த்தைகள்.   ஆம்… இன்னும் சற்று நேரத்தில் எம் அத்திவரதன் அனந்தசரஸினுள் அமிழப் போகிறான்!!  சம்சார சாகரத்தில் அமிழ்ந்த எம்மைக் காக்கப் பிறந்தவன், பாற்கடலுள் பையத்துயிலும் பரமன், அனந்தன் மீது பள்ளிகொள்ளும் ஆதிப்பிரான், அனந்த கல்யாணகுணங்களுடையவன்,  அனந்தசரஸினுள் மீண்டும் செல்லப் போகிறான்!!

     பிரியமானவனைப் பிரிய மனமின்றி பிரியாவிடை கொடுக்கத் தெரியாமல் தவியாகத் தவிக்கும் போது, உதடுகள் உலர்ந்துதானே போகும்… தனிமையில் உள்ளத்துள் அழுவதை இந்த ஊருக்குப் புரிய வைத்திட முடியுமா?

     ஆயாசத்தின் ஆதிக்கத்தால், நெஞ்சத்தின் பாரத்தை சுமக்க முடியாமல் நூற்றுக்கால் மண்டபத்தின் குளக்கரைப் படிகளில் அமர்ந்தேன்.  கனத்த இதயம் கண்களைத் தானாக மூடியது வ….ர….தா… என ஒருமுறை வாயால் சொன்னாலும் மூச்சுக்காற்றின் வெம்மை உள்ளத்தின் வெறுமையைக் காட்டியது.

     கலக்கத்தில் கண்கள் மூடினவேயன்றி களைப்பில் மூடவில்லையன்றோ! அதனால் உறக்கம் எப்படி வரும்?  சில நொடிகள் சென்றிருக்கும்.  சிலீரென்று ஒரு ஸ்பரிசம்!!!!   இதுவரையிலும் உணர்ந்திராதது!!  ஆயிரம் வெண்மதியின் அனைத்து குளிர்ச்சியும் ஓரிடத்தில் ஸ்பரிசித்தால் எப்படி இருக்குமோ அதுபோன்று…

     மேனி சிலிர்த்த அந்த ஸ்பரிசம் தொடர்ந்திடாதா? என ஏங்க வைத்தது.

     ‘தனிமையில் தவிக்கும் நம்மைத் தொடுபவர் யார்?’ என தலையைத் திருப்பினால்….

      திசைகள் அனைத்தும் எழும்பிட ஒரு திகைப்பு உண்டானது.  இது திகைப்பா! அல்லது தித்திப்பா என் எதிரே நிற்பவன் …. நிற்பவன்…. தடுமாறித்தான் போனது உள்ளம்..

     “என் எதிரே நிற்பவன் தேவாதிராஜனா!!!. அத்திவரதனா!!! மும்மறையின் முதல்வனா!!! மூலமென ஓலமிட நின்றவனா!!!”

     திருவபிஷேகமும், திருக்குழைக்காதுகளில் கர்ணபத்ரமும், பங்கயக்கண்களும், பவளச் செவ்வாயும், திருக்கையின் திவ்ய ஆயுதங்களும், காண்தகு தோளும், திருமார்பு நாச்சியாரும், அனந்தநாபியும், அரைச்சிவந்த ஆடையும், ஆதிவேதத்தின் அனுபவம் கமழும் பாதகமலங்களும் சோதிவெள்ளமென சுடரிடும் ஆபரணங்களுடன் அருள்வரதன் என் முன்னே நின்ற பெருமையை எவ்வண்ணம் பேசுவேன்? எவரிடம் விளக்குவேன்?

     என்னைத் தொட்ட கைகள் இமையோர் தலைவனதா?  கருடனையும், அனுமனையும் அணைத்த கைகளா?  பெருந்தேவியுடன் பிணைந்த கைகளா? ஹஸ்திகிரிநாதனின் ஹஸ்தமா(கையா) அடியேனை ஸ்பரிசித்தது!!!!!

     என் உள்ளத்தை உணர்ந்தான் உரக மெல்லணையான்…. ஓதநீர் வண்ணன் மெலிதாக நகைத்தான். மந்தகாசப் புன்னகையின் மாறாத பொருள் கவலைப்படாதே“..

    “வ…. ர….. தா..” திகைத்தவன், திடுக்கிட்டு நான் எழுவதற்குள், தோளைத் தொட்டு அழுத்தி அமர வைத்தான் துழாய்முடியான்.

    அவனும் அருகே அமர்ந்ததை யாரிடம் சொன்னால் நம்புவர்?!!!!!!

     பிரமனின் யாகத்தில் வபை எனும் திரவியம் சேர்த்த போது அவதரித்தான் வரதன்.  அதனால் அவனது அதரத்தில் இன்றும் வபையின் பரிமளம் வீசுகிறது. வபையின் வாசனை, பெருந்தேவியின் தழுவலில் அவளின் திருமார்பக சந்தனத்தைத், தான் ஏற்றதால் வந்த பரிமளம், தனக்கு நிகர் எவருமில்லை என தன்னொப்பாரைத் தவிர்த்திடும் துளசிமாலையின் திவ்யசுகந்தம் என வேதக்கலவையின் பொருளானவன் இன்று வாசனைக் கலவியில் வந்தமர்ந்தான்.

     இமைக்க மறந்து இமையோர் தலைவனைக் கண்டேன்! எழுதவறியாத எம்பெருமானைக் கண்டேன்.  ஓவியத்தில் எழுதவொண்ணா உருவத்தைக் கண்டேன்.  ஆர்ப்பரிக்கும் உணர்ச்சிகள் உந்தித்தள்ள நிலைதடுமாறின என்னை, மென்மையாக ஆச்வாசம் செய்தான் ஆனைமலை நாயகன்.

     “முப்பது நாட்களுக்கு முன்பு நமது உரையாடலை நாடறியச் செய்தாயே! இன்று உனக்கு என்ன ஆயிற்று?  ஏன் இந்த வாட்டம்?”

     அனைத்துலகும் காக்கும் அருளாளன், அனைத்துக்கும் அதிபதியானவன், அடியேனை ஆறுதல்படுத்தக் கேட்கிறான் இது உண்மையா? அல்லது பிரமையா?

     “வரதா….. வரதா…. என் ப்ரபோ! தேவாதிராஜா! மாயம் செய்யேல் என்னை. உன்னைப் பெற்று அடியேன் எப்படி இழப்பேன் என்று தேம்பினேன்.

     “என்னது என்னைப் பிரிகிறாயா?  யார் சொன்னது? உன்னையும், என்னையும் பிரிக்க யாரால் முடியும்?” சற்றே குரலில் கடுமையுடன் வரதன்.

    “இல்லை வரதா! இன்னும் சற்று நேரத்தில் நீ குளத்தில் எழுந்தருளி விடுவாயே! அப்புறம் உனைக்காணும் பாக்கியம் எனக்குண்டா?” அந்த ஏக்கம் எனக்கில்லையா?” என்றேன்.

    நிவந்த நீண்முடியன் சற்றே குனிந்து எனது முகத்தை நிமிர்த்தி என் கண்களை ஊடுருவிப் பார்த்தான்.

     அம்புஜலோசனின் பார்வையின் கூர்மை தாளாமல் தலையை கவிழ்த்துக் கொண்டேன்.

     “இந்த உலகம்தான் பைத்தியக்காரத்தனமாக உளறுகிறது என்றால், உனக்கென்ன ஆயிற்று?” வரதன் குரலில் கடுமை…

    புரியாமல் பார்த்தேன்.

     “உன்னுள் மறைந்திருக்கும் நான், இக்குளத்தினுள் மறைந்தால், வாடுவாயோ?”

    “இதோ…. தூர்வாரி, பழுதுகளை நீக்கி பராமரித்து, தெளிந்த தீர்த்தத்துடன் உள்ள இக்குளத்தில் இருப்பது போன்றுதானே உன் மனதிலும் மூழ்கிட ஆசைகொண்டேன்…

     “கோபம், பொறாமை, ஆசை, கள்ளம், கபடம் என்று மனதில்தான் எத்தனை வகையான சேறுகள்!!  அதையெல்லாம் தூர்வாரி துடைத்தெறிந்து என்னை அனுபவிக்கத் தெரியாத நீ,  குளத்தினுள் நான் செல்ல கவலைப்படுகிறாயா? முட்டாள்….” என்று சீறினான் வரதன்.

     வ….ர….தா…. என நான் பேசத் தொடங்குமுன், நில்.. குறுக்கே பேசாதே! நாற்பது நாட்களுக்கு மேலாக மலையில் சென்று மூலவரையும், உற்சவரையும் சேவிக்க முடியவில்லையே! என்று ஏங்கியவன்தானே நீ!!…” – வரதன்.

     “ ஆமாம்..” – அடியேன்.

     அங்குள்ளவனும் நான்தானே! என்னை வெளியே வைத்தாலும், உள்ளே வைத்தாலும் உற்சவரின் உற்சவங்களால்தானே காஞ்சிக்கும் எனக்கும் பெருமை….” – வரதன்.

     தலையாட்டினேன் ஆமாம் என்று.

     “இப்போது எந்த உற்சவமாவது பழைய பொலிவுடன் பெருமையுடன் கம்பீரமாக நடந்ததா? சொல்… என்றான்.

     “ஆனால் வரதா! அத்திவரதரை தரிசிக்கத்தான் நாள்தோறும் பக்தர்கள் அலையலையாகப் படையெடுக்கின்றனரே!”

     “நான் அதையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.   இந்த மண் பக்தி மணம் கமழும் மண் என்பது மறுபடியும் நிரூபணம் ஆகியுள்ளது.  ஆனாலும் இந்த மக்களின் செயல்பாடு சற்று வருத்தமளிக்கிறது – வரதன்.

     வரதனே பேசட்டும் என மௌனம் காத்தேன். 

     “இப்போது ஓடோடி வருபவர்கள் இதே பக்தியினை இனியும் வெளிப்படுத்துவார்களா அத்திவரதர் ஊடகங்களுக்குச் செய்தியாகிவிட்டார். அத்திவரதர் உள்ளே போகலாமா?  கூடாதா?” என்றும் பட்டிமன்ற பொருளாகிவிட்டார்?  ஆதியுகத்து அயன் கண்ட அற்புத உற்சவங்களைத் தடுப்பதற்கு அவதரித்தவராகி விட்டார்“.

     எம்பெருமானின் இந்தப் பேச்சின் வேகத்தில் திடுக்கிட்ட சில பறவைகள்,  ராஜகோபுரத்தின் பொந்திலிருந்து படபடத்துப் பறந்தன.

     “இப்படியெல்லாம் ஊரார் என்னைப் பேசும்படி செய்துவிட்டனர் சிலர்.   நான் பத்திரமாக உள்ளே எழுந்தருள வேண்டும் என நீயும்தானே விரும்பினாய்?” வரதனின் கேள்வி.

     “நிச்சயமாக வரதா! அதுவும் உனது திருவுள்ளம்தானே! உனது தரிசனம் பக்தி வளர்த்தது நிதர்சனம்.  ஆனால் நடைமுறைக்கு ஒவ்வாத திட்டங்களை சிலர் செயல்படுத்த முனைந்தனர்.  அவ்விதம் நிகழ்வது பல பெரிய குழப்பங்களை உண்டாக்கும்.  ஆதலால் நன்கு தீர்மானித்து எல்லோரும் விரும்பும்படியான ஒரு நல்ல தீர்வை எடுக்க வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன்.  ஆ……னா….ல்….

    “ஆனால் என்ன?”… வரதன்.

     “எனது கருத்தில் முக்யமானதை விட்டுவிட்டு, அவரவர்கள் தங்களுக்குத் தோன்றியதையெல்லாம் பேசவாரம்பித்து விட்டனர்.  இது வருத்தத்தினால் விளைந்த கருத்து என்பதை உணராமலேயே தங்களின் சுய காழ்ப்புணர்ச்சியை விமர்சனமெனும் பெயரில் வெளியிட்டனர்.”

    “இங்குள்ள மக்களும் இங்கு வரும் பக்தர்களும் படும்பாட்டைக் காணும்போது, எவருக்குமே இது புரியுமே!!  அதற்காக உன்னைப் பிரிய நாங்கள் இசைந்தோம் என்பது பொருளாகிவிடுமா நடைமுறையின் சில அசாத்யங்களை இவ்வுலகம் உணரவில்லையே!  ஏறத்தாழ ஒரு நாஸ்திகனின் நிலையில் அடியேனை விமர்சிக்கின்றனரே!” அழுகையுடன் அடியேன்….

    ஹா…… ஹ…… ஹா….. எனச் சிரித்தான் அருளாளன்.

    “இதற்குத்தான் வருத்தப்படுகிறாயா என் குமரா?!!” என்றான்.

     விழிகளின் ஈரத்திரைகளின் ஊடே புரியாமல் அவன் முகத்தைப் பார்த்தேன். புன்னகை மாறாமல் பேசினான் புண்யகோடீச்வரன்.

    “நல்லதொரு ஆசார்யன் மூலமாக நம் சம்ப்ரதாய அர்த்தங்களை அறிந்தவன் தானே நீ?” வரதனின் கேள்வி.

   “என்ன சொல்ல வருகிறான் எம்பிரான்?” எனப் புரியாமல் ..மா..ம் என மெதுவாகத் தலையசைத்தேன்.

   “கீதையில் நான் சொன்னதை உனது ஆசார்யார் விளக்கியிருப்பாரே!” நினைவுபடுத்திகிறேன் கேள்.

    “ அர்ஜுனா! இன்னமும் இந்த உலகம் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. மனிதபாவனையுடனே என்னைப் பார்ப்பதால் எனக்குரிய மதிப்பளிப்பதுமில்லை என்று சொன்னேனே…. என்னையும், எனது உபதேசங்களையும் புரிந்து கொள்ளாத இவ்வுலகம்,  உன்னைப் புரிந்து கொள்ள வேண்டுமாம்!!  இன்னமும் நான் நாலாயிரம் அவதாரம் எடுத்தாலும் இவர்கள் இப்படித்தான்….”

     சத்யவ்ரதன் சத்யமான உலகியல்பைப் பேசினான். 

     “ஆம் ப்ரபோ! எனது சுவாமி தேசிகனும் உன் விஷயமான ஸ்தோத்ரத்தில்,  நிலையில்லா மனமுடைய மாந்தர், நிலையான உன்னை, உன் உண்மையை உணரவில்லையே!” என ஏங்குகிறாரே!” – அடியேன்.

     “ம்ம்.. சரிதான். இதையெல்லாம் அறிந்துமா உனக்கு வருத்தம்! ராமனையும், கண்ணனையும் ஏன் ராமானுஜனையும் தேசிகனையுமே குறைகூறும் இவ்வுலகம், உன்னை மட்டும் ஏற்கும் என்று எதிர்பார்க்கிறாயா?”

     பதில் சொல்லத் தெரியாமல் மௌனமாகத் தலைகுனிந்தேன்.

     “ஸர்வஜ்ஞனாகிய (எல்லாம் அறிந்தவனாகிய) என்னாலேயே இவர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.  சாமான்யன் உன்னால் முடியுமா?”

    “அது சரி, நான் இன்னமும் எவ்வளவு நாட்கள் தரிசனம் தந்தால் எல்லோரும் விரும்புவார்கள்?” என்றான் வரதன்.

    “ஒருசிலர் நூற்றியெட்டு என்கின்றனர் வேறு சிலர் நிரந்தரமாகவே நீ வெளியே சேவையாக வேண்டுமென்கின்றனர்.  உன் திருவுள்ளம் என்ன வரதா?” – அடியேன்.

     மறுபடியும் ஹா…. ஹ….. ஹா…… என்றவன், என்னை என்றுமே அனுபவிக்க வேண்டுமெனும் ஆவலில் அவர்கள் பேசுகின்றனர்.  அதிலொன்றும் தவறில்லை. ஆனால் எனது இந்த அர்ச்சா மூர்த்தியும் அவதாரம்தானே?!” – வரதன்.

     “அதிலென்ன சந்தேகம் வரதா! ஆகமங்கள் உனக்கு ஐந்து நிலைகளை அவதாரங்களாக அறிவிக்கின்றன.” – அடியேன். 

    “அப்படியானால் ராம க்ருஷ்ண அவதாரங்களைப் போன்று, ஒரு காரண கார்யத்தில் அவ்வப்போது அவதரிக்கும்(தோன்றும்) நான், அது முடிந்தவுடன் அந்த அவதாரத்தை முடித்துக் கொள்கிறேனல்லவா!” – வரதன்.

    நான் மௌனமாகவே இருந்தேன்.

     “நாற்பதாண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்திலிருந்து வெளியே வந்து அருள்பாலிப்பது ஒரு அவதாரம் போன்றுதானே! அது முடிந்தவுடன் மறுபடியும் மறைகிறேன்.  இதை உலகம் புரிந்து கொள்ளாமல் போகலாம். உனக்குமா புரியவில்லை?” – வரதன்.

    “ராமனும், கண்ணனும் தங்களது அவதாரத்தை முடித்துக் கொண்டு சென்றபோது, இவ்வுலகம் பட்டபாட்டை புராணங்களில் அறிகிறோமே வரதா!!! அதுபோன்றுதான் உன்னைப் பிரிய மனமின்றி தவிக்கிறோம் – எனது ஏக்கம்.

    மீண்டும் ஹா….. ஹா…..

    “ஊருக்கெல்லாம் உபந்யாசம் செய்யும் திறமை பெற்றவன் நீ – எனக்கும் நன்கு உபதேசிக்கிறாய்!” – வரதன்.

    “ஐயோ! ப்ரபோ! ப்ரபோ! அபசாரம்…..” பதறினேன்.

   “ஏனடா பதறுகிறாய்? நான் பழக்கி வைத்ததை, ஒரு கிளி போன்று என்னிடம் பேசுகிறாயே! நான் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன் இது உனது ஆசார்யன் சொன்னதுதானே!.”

   “அடியேன்… தேசிகனல்லால் தெய்வமில்லை..”

    “ம்ம்…. ம்….” என வரதன் விழிகளைச் சுழற்றி உதடுகளைக் குவித்தது அதியத்புதமாக இருந்தது.

    அந்த அழகில் மயங்கி அப்படியே நின்றேன்.

    “ஏன் பேசவில்லை பிள்ளாய் உன் மொழி கேட்கத்தானே நான் வந்தேன்… வரதன். 

    “என்னுடை இன்னமுதே! வானவர்தம் ஈசனே! மெய்நின்று கேட்டருள். அடியேனின் விண்ணப்பம் ராமாவதாரத்தில், உன்னைப் பிரிய மனமின்றி நதிகளும், குளங்களும், மரங்களும், பறவைகளும், மீன்களும்கூட கதறியழுதன என்றில்லையா!”

     “கண்ணனாக மாயம் செய்த உன்னைக் காணாமல் உயிர் தரியேன் என உத்தவர் ஓலமிட்டு அழவில்லையா?  நாங்கள் தபோவலிமையற்றவர்தாம்…. ஆனால் உனது பிரிவு எங்களுக்கு இனிக்குமா இத்தனை நாட்களும் உன் பெருமை பேசிவிட்டு இனி வெறுமையாக எப்படி இருப்பது?”

    “நன்று நன்று..” என ஆனந்தமாகத் தலையசைத்தான் ஆனையின் துயர் தீர்த்தவன்.

     “ராமாவதாரம் போன்று என்னுடன் எல்லோரும் வருவதற்குத் தயாராகவுள்ளனரா? அல்லது க்ருஷ்ணாவதாரத்தில் கோபிகளைப் போன்று என் நினைவிலேயே இருப்பவர் எத்தனை பேர்?” வரதன் வினவினான்.

    “உண்மைதான்… அந்த அளவிற்குப் பக்குவப்பட்ட பிறவிகள் இல்லை நாங்கள்.  ஆனாலும் உனது பிரிவு பேரிழப்புதானே” – அடியேன்.

    “பிரிகிறேன், பிரிகிறேன் என்கிறாயே! நான் எங்கு செல்கிறேன் இதே குளத்தினுள்தானே!. மேலும் எனது ஏனைய நிலைகள் மூலவர், உற்சவர் என்றுமே உங்களுடன்கூடியது தானே… ராம, க்ருஷ்ண அவதாரம் போன்று ஒட்டுமொத்தமாக விடுத்துச் செல்லாமல், என்றுமே என்னை அனுபவிக்க அளித்த அர்ச்சையின் மேன்மைதனை எப்பொழுது புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?”

    “அத்திவரதனாகிய நான், உனது அந்தர்யாமி. உன் உள்ளத்துள் உறைபவன்தானே… ஏதோ காரண காரியத்தால் இக்குளத்தினுள் அமிழ்ந்துள்ளேன் இது தேவரகசியம்!!!! தேவாதிதேவன் எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!! உள்ளே செல்லும் எனக்கு வெளியே வரத் தெரியாதா? நான் எந்த அரசாணைக்குக் காத்திருக்க வேண்டும்?

     “தர்மத்தை நிலைநிறுத்த எனது அவதாரம். அதைத்தான் எவ்வளவு பேர்கள் புரிந்து கொண்டு அதன்படி நடக்கின்றனர்?  இந்த நாற்பது நாட்கள் என்னைக் கொண்டாடுமவர்கள், தொன்றுதொட்ட பழக்கங்களான உற்சவங்கள் செவ்வனே நடைபெறவில்லை என்று உணர்ந்தனரா!”

    வரதனின் வார்த்தைகள் நடுவே குறுக்கிடுவது கூடாது என்று அமைதி காத்தேன்.

    சற்றே வேகம் தணிந்தவனாக என்னைப் பார்த்து கனிவான குரலில் மீண்டும் பேசினான்.

    “அதுசரி! என்னை நினைத்திருக்கும் நீ நித்யோத்சவரை மறந்து விட்டாயா? அவர்தானே என்றுமே உங்களுடன் கலந்திருப்பவர்!!”.

    திடீர் தாக்குதலாக வரதனின் கேள்வியில் நிலைகுலைந்து போனேன்.

    “என்ன! என் பெருமானை மறப்பதா அவனை சேவிக்க முடியவில்லையே எனும் ஏக்கத்தில்தானே ஓர் அறிக்கை சமர்ப்பித்தேன்.   ஆனால் அதன் கருத்தை ஆஸ்திகர்கள்கூட சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே!  இன்னமும் என்னை திட்டித் தீர்த்து வருகின்றனர் என் இயலாமையைக் கொட்டினேன்.

    ஆறுதலாகக் கரம் பிடித்து ஆச்வாசம் செய்தான் அரவிந்தலோசனன்.

    “நீ பெரியோர்கள் தாள் பணிந்து சம்ப்ரதாய பொருள் அறிந்தவன்தானே! இவர்கள் உன்பால் கொண்ட விரோதம் உனது பாபங்களைப் போக்குமென்பதை நீ அறியாயோ?”

    வாஞ்சையுடன் வரதன் விரல் பிணைத்தான் அந்தத் தீண்டுமின்பத்தில் திளைத்த அடியேன் திக்குமுக்காடிப் போனேன்.

   “வரதா! ஒரு பாசுரம் பாடட்டுமா?” என்றேன்.

    ஹா.. ஹா… எனச் சிரித்தவன், நான் வருவதற்கு முன்பு நம்மாழ்வார் பாசுரத்தைக் கொண்டு சந்திரனைக் கண்டாயே! அது போன்று மறுபடியும் பாசுரமா?” வினவினான் வரதன்.

   வெட்கத்தில் தலை கவிழ்ந்தேன்.   என் உள்ளத்துள் உறையும் இவனை அறியாது ரகசியமாக என் எண்ணங்களை வளர்த்தேனே!  இஃதென்ன முட்டாள்தனம்!”.

    என் மௌனம் கலைத்து ஆதிப்பிரான் பேசினான்.  “நானன்றி உன்னை உரிமையுடன் யார் சீண்டுவார்?  சரி.. சரி.. அந்த பாசுரத்தைச் சொல். உன் உபந்யாசத்தை நான் ரசிப்பேன் வரதன்.

         “விடுவேனோ? என் விளக்கை என் ஆவியை

           நடுவே வந்து உய்யக்கொள்கின்ற நாதனை”

                                                                                        (திருவாய்மொழி 175)

என்று முடிப்பதற்குள் முந்திக் கொண்ட வரதன்,  இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்றான்.

    “வரதா! பூர்வர்கள் காட்டிய விரிவுரை ஒருபுறம்…. இங்கு இப்போது எனது அனுபவம் மறுபுறம் என்றேன்.

    “அதைத்தான் சற்று விளக்கமாகக் கூறேன்..” என்றான் ஆழியான்.

     “என் விளக்கைஅதாவது, வரதா, எனக்கு ஜ்ஞானம் தந்து ஆட்கொண்ட விளக்கு நம் வரதன். கரிகிரிமேல் நின்றனைத்தும் காக்கும் கண்ணன்..“.

    “ம்… சரி… வரதன்.

    “என் விளக்கை விடுவேனோ! – என் வரதனை மறப்பேனா?”.

    “என் ஆவியை விடுவேனோ? – என் ஆவி பெருந்தேவி… இந்த ஆத்மாவுக்கு உயிரளித்து என்னைக் காக்கும் அன்னை.. அவளை விடுவேனா.. மறப்பேனா?..” அடியேன்.

    “அடடே… ம்… அப்புறம் மேலே சொல்…. வரதன்.

   நடுவே வந்து உய்யக்கொள்கின்ற நாதனை விடுவேனோ?” என அத்திவரதனைக் கைகாட்டினேன்… 

    “பேஷ்…. பேஷ்… என்றான். 

    “வரதா…. 

இவர்கள் நடுவே வந்து என்னை உய்யக் கொண்டாய்… 

என் வாழ்வின் நடுவே வந்து உய்யக் கொண்டாய்… 

குளத்தின் நடுவே வந்து உய்யக் கொண்டாய்… 

நாற்பது நாட்கள் நடுவே வந்து உய்யக் கொண்டாய்…

மேலே சொல்ல முடியாமல் தழுதழுத்த என் தலை கோதின தேவராஜன், உன் மனது எனக்குத் தெரியும் பிள்ளாய்..” என இதயம் வருடுகிற வார்த்தைகளை ஒலித்தான்.

     “வரதா! தரிசனம் காக்கவே இன்று தரிசனம் தந்தாய் நீ… ஆனால் தரிசு நிலமான இம்மனசில் உன் அனுபவம் இன்னமும் நிறையவில்லையே என ஏங்குகிறேன் என்று தேம்பினேன்.

   “அதை அனுபவிக்க ஆழ்வார்களே ஆசைப்பட்டனர்.  நீ எம்மாத்திரம் எனப் புன்னகைத்தான்…

   “பிள்ளாய்… உரையாடல்கள் போதும். உள்ளத்தில் வருத்தத்தை விடு.. உயர்வான உற்சவங்களும், உற்சாகமான உபயவேத கோஷ்டியும் காத்திருக்கிறது.  இனியென்ன கலக்கம்?” வரதன் விழி துடைத்தான்.

   உண்மைதான்.  மயர்வற (சந்தேகமற) என் மனத்தே மன்னினான் அத்திவரதன் அயர்வில் அமரர் ஆதிக் கொழுந்தாகச் சுடர்விட்டவனை, பாதாதிகேசம் தொழுதேன்.  எனது துயரங்கள் பறந்தோடின.

    நான் ஏன் கலங்க வேண்டும்? எனக்கென்ன குறை!! ஆள்கின்றான் ஆழியான்… ஆரால் குறை நமக்கு?… இதோ இக்குளமும் உண்டு.  இக்குளத்தில் நித்யகர்மானுஷ்டானம் செய்யும் பரமைகாந்திகளின் குலமும் உண்டு என்றுமே வரதன் எமக்கெதிரே சேவையாகிறான் என் பாட்டனாராம் ப்ரம்மதேவன் சேர்த்த அழியாத பெருஞ்செல்வம், அத்திமலையில் நிரந்தரமாகக் குவிந்துள்ளதே…. அள்ள அள்ளக் குறையாத செல்வமன்றோ!

    துயரறு சுடரடி தொழுதேன்.. வரதா…. வரதா…. என்றேன்.. இப்போது அவனது திருக்கையில் “மாசுச: – கவலைப்படாதே” எனும் எழுத்துக்கள் தெளிவாக மின்னியது.. திவ்யமான தேஜோமயமாகத் திருக்குளத்தினுள் இறங்கினான் அத்திகிரியான்.  சரயூவில் இறங்கிய ராமனைத் தழுவிய சரயூ போன்றும், கண்ணனின் காலடி வைப்பில் களித்த யமுனை போன்றும், அனந்தசரசின் புன்ணியதீர்த்தம் வரதனின் திருமேனியைத் தீண்டி மகிழ்ந்தது.  அனந்தனாம் நாகராஜன் அழகிய படுக்கையாகக் காத்திருந்தான்.  வரதனின் முழுதிருவுருவமும் நீருக்குள் மறைந்தது.  குளத்தின் தண்ணீர் போன்று என் நெஞ்சமும் தெளிந்தது.

    ஆம்… வரதன் அனந்தசரஸினுள் புகவில்லை.  இந்த அனந்தன் எனும் அடியேனின் உள்ளக் குளத்தினுள் அமிழ்ந்தான் – திருமாமகளைப் பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட பேரருளாளனார்.  இருபத்திநான்கு படிகளிலும் நீர் நிறைந்தது.  இருபத்திநான்கு அதிர்வேட்டுக்கள் முழங்கின!!!

    விழிகளின் ஓரம் திரண்ட துளிகளைத் துடைத்துக் கொண்டேன்.  இது சோகத்தின் வடிவமல்ல… ஆனந்தத்தின் அலைகள்.  ஆகையால் இந்தக் கண்ணீரை வரதனும் விரும்புவான். 

    ராமனைப் பிரிகிறோமோ என்று குளத்து மீன்கள் வெந்தன அயோத்தியில்! வரதனைத்  தாங்கள் மீண்டும் பெற்றோமே என்று அனந்தசரஸ் மீன்கள் துள்ளிக் குதித்தன!! மீன்களாம் நித்யசூரிகளுக்கு இங்கேயும் வரதானுபவம்!! 

    பொழுது புலரும் பின்மாலைப் பொழுதாகியது.  இப்பொழுது பார்த்தபோது வானத்து சந்திரன் சுடர்விட்டுத்தான் விளங்கினான்.  எனது கலக்கம் நீங்கியது போன்று அவனது களங்கமும் நீங்கியது. கதிரவன் தனது கிரணங்களை புண்யகோடி விமானத்தின் மீது படரவைத்தான். 

    ஏறத்தாழ ஒரு மண்டலம் தவிர்ந்து வைதிகர்கள் தங்கள் நித்யகர்மானுஷ்டானத்திற்கு திருக்குளத்தில் நீராட வந்தனர்.  அடியேன் மெதுவாக திருக்குளத்தை வலம் வந்தேன்.  தூரத்தே உடல், திருச்சின்னம் சப்தம் கச்சியின் மதிள்களில் எதிரொலித்தது. 

    ஆஹா, இதைக் கேட்டு எவ்வளவு நாட்களாகி விட்டன. அமைதியான காலையில் ராமானுஜரின் சாலைக்கிணறு தீர்த்தம் வரதனுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.  அதற்காகத்தான் திருச்சின்னம் ஊதுகின்றனர். 

     சோதியனந்தனாக, கலியில் ஸ்ரீராமானுஜர் அன்றோ வரதனுக்கு திருவாராதனம் செய்கிறார்!  இனி தீர்த்தாமாடி மலைக்குச் சென்று, பெருமாளையும் பெருந்தேவியையும் சேவிக்கவேண்டும். 

     காஞ்சியின் வீதிகளில், பெண்கள் கோலமிடத் தொடங்விட்டனர். வேதபாராயணம் மாடவீதி ப்ரதக்ஷிணம் செய்கின்றனர்.  ஆனிரைகளும் அழகாகச் சாலைகளில் படர்கின்றன.  இனி வாசலில் எழுந்தருளப்போகும் வரதனை வரவேற்கக் காத்திருப்போம்!!

அன்புடன்,

ஏபிஎன்.

Athi Varadan Special – Varadan’s wish by Sri APN Swami, Art by Sri Keshav

3 thoughts on “Sri #APNSwami #Writes #Trending | வரதனின் விருப்பம் – 02

  1. Ayindai Amudan August 17, 2019 / 10:29 pm

    As usual It has APN’s Stamp.
    Wonderful flow, moving dialogues, effective sequence in the episode.
    Very much apt context.

    Hats off. Dhanyosmi for sharing this

    Like

  2. Priyamvada August 18, 2019 / 11:02 am

    Sri:
    Namaskaram. Words fail to describe aptly the feeling we get in experiencing Varadan’s messages as conveyed by Swami.
    Varada has indeed blessed us with the eyes and mind with capability to read through this article.
    Dhanyavaadah.

    Like

  3. அத்திகிரி வரதனும் வரதப்ரியாவும்(நம் எ.பி.என் ஸ்வாமிதான்) பேசிய சம்பாஷனை மிக மிக அற்புதமாகவும், அருமையாகவும்,ரசித்து சிந்திக்கும் படியும் இருந்தது.மனது லேசானது, தெளிவானது.அவருடைய இந்த பக்தி கலந்த கர்பனை வளர அத்திவரதன் அருளும், ஆச்சாரியார் அனுக்ரஹமும், சித்திக்க ப்ரார்த்திக்கிரேன்.வத்ஸலா.

    Like

Leave a comment