Sri #APNSwami #Writes #Article |திருவள்ளுவர் தின வாழ்த்து

*****************
திருவள்ளுவர் தின வாழ்த்து 
by Sri #APNSwami
*****************
“தெய்வப் புலவன்”, “வான்புகழ் வள்ளுவர்”, “குறள் முனிவர்” என்றெல்லாம் போற்றுதலுக்கு உரியவர் திருவள்ளுவர். வள்ளுவர் எழுதிய திருக்குறள் உலகப் பொதுமறையாக எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. மேல்நாட்டு அறிஞர்கள் கூட திருக்குறளை மேற்கோள் காண்பிக்கின்றனர். உலகின் பல மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இத்தகைய மகாத்மா திருவள்ளுவர் திருநாளை மகர சங்கராந்தியின் இரண்டாம் நாள் கொண்டாடுகிறோம்.

இந்த திருவள்ளுவர் யார்? எங்கு பிறந்தவர்? என்பது குறித்து பலதரப்பட்ட விமர்சனங்கள் உண்டு. இக்கட்டுரை வாயிலாக திருவள்ளுவரின் தெய்வீகத்தை அறியலாம்.[பாரதத்தின் முன்னாள் அட்டர்னி ஜனரல் திரு கே. பராசரன் அவர்களின் திரு தகப்பனார் திரு உ.வ.கேசவ அய்யங்கார்(M.A.B.L) அவர்களின் “வள்ளுவர் உள்ளம்” என்னும் நூலை தழுவியது.]

பெரியாழ்வார் காலத்தில் வல்லப தேவன் என்னும் பாண்டிய மன்னன் இருந்தான். ஒரு நாள் அவனுக்கு ஒரு சந்தேகம் உண்டானது. அதாவது யார் பரதெய்வம்? எந்த தெய்வத்தை வணங்கினால் மோட்சம் அடையலாம்? எனும் கேள்விக்கு விடை தெரியாமல் தனது அமைச்சரைக் கேட்டான்.

செல்வநம்பி எனும் அந்த அமைச்சர் கூறிய யோசனையின்படி “அரசன் ஒரு பொற்கிழியை நிர்மாணித்தான். அக்காலத்தில் அனைத்தும் சத்தியத்திற்கு கட்டப்பட்டிருந்தன. இந்த அரசன் ஒரு அழகான உயர்ந்த கம்பத்தின் நுனியில் பொற்கிழியை அமைத்தான். ஆதாரப்பூர்வமாக பர தெய்வத்தை எடுத்துரைத்து வெற்றி பெற்றால் சத்தியத்திற்கு கட்டுப்பட்ட அந்த பொற்கிழி தானாகவே அறுந்து விழும்” என்பது ஏற்பாடு.

பல அறிஞர்கள் கலந்துகொண்டும் பொற்கிழி அறுபடவில்லை. அச்சமயம் வந்து பெரியாழ்வார் *”ஸ்ரீமன் நாராயணனே பரதெய்வம். அவனே மோட்சம் அளிப்பவன்”* என்பதினை நிர்ணயம் செய்தார். என்ன ஆச்சர்யம்! அந்த பொற்கிழி அறுந்து கீழே விழுந்தது.

“பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தான் என்று வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்….” என அரசன் உட்பட அனைவரும் கொண்டாடினர்.

ஆழ்வாரை யானை மீது ஊர்வலமாக அரசன் அழைத்துச் சென்றபோது, ஆழ்வாரை பெருமைப்படுத்த எண்ணிய பகவான் கருட வாகனத்துடன் காட்சியளித்தான். அப்போது எங்கே பெருமாளுக்கு கண்திருஷ்டி வருமோ! என பயந்த பெரியாழ்வார் தனது பொங்கும் பரிவினால் பல்லாண்டு பாடினார்.

அதில் வல்லப பாண்டியனின் அமைச்சரான செல்வ நம்பி என்னும் ஸ்ரீவைஷ்ணவரின் பெருமை போற்றுகிறார். “ஹே! பிரபோ ! நாராயணா ! குற்றம் குறையற்ற மிகச்சிறந்த நல் மனிதரான செல்வ நம்பியைப் போன்று நானும் உனது தாசன் அன்றோ! ” என்கிறார். இதனால் செல்வ நம்பி என்னும் ஸ்ரீவைஷ்ணவரின் பெருமை தெரிகிறது. அந்த செல்வநம்பியே திருவள்ளுவர் என்பதை அறிந்தால் ஆச்சரியம் உண்டாகிறது அல்லவா? இதை தொடர்ந்து படியுங்கள்.

அதாவது “செல்வநம்பி” என்பதினை “ஸ்ரீவல்லப நம்பி” என்றும் சொல்லப்படும். அதேபோன்று செல்வ- திரு என்றும் நம்பி- வல்லபன்( ஞான பூரணன்) என்றும் அறியலாம். வள்ளுவ மாலையில் “உப்பக்க நோக்கி உப கேசி தாள் மணந்தான்”(21) எனும் பாடல் நல்கூர் வேள்வியார் எனும் புலவர் பாடியது. அதன் பொருள் உணர்ந்தால் இந்த அர்த்தம் தெளியலாகும்.

பாண்டிய மன்னன் மந்திரி- குருவாகிய செல்வநம்பி என்னும் வேத நல்லார்க்கு ” திருவள்ளுவர்” என்பது பெயர். அதனால்தான் திருக்குறள் முதல் பாட்டை “அகர முதல” என்று “ஆகாரமாக” – விஷ்ணுவைக் குறிப்பதாக தொடங்கினார்.

“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது”
முதலிய குறட்பாக்களில் உயரிய சரணாகதி நெறியினை எடுத்துரைக்கின்றார். பரிமேலழகர் முதலியோர் செய்தருளிய உரைகளில் இந்த அர்த்தம் நன்கு காட்டப்படுகிறது.

உத்தம ஸ்ரீவைஷ்ணவரான ” திருவள்ளுவர்” காட்டிய சரணாகதி நெறியின்படி நாமும் வாழ்ந்து உயரலாம். உத்தராயண புண்ணிய காலத்தில் திருவள்ளுவர் திருநாளில் உத்தம பாகவதரைப் போற்றிப் பணிவோம்.

இப்படிக்கு
ஏபிஎன் ஸ்வாமி

Sri #APNSwami