Sri #APNSwami #Writes #Article| கடவுளெனும் விவசாயி | உழவர் திருநாள்

விளம்பி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      கடவுளெனும் விவசாயி | உழவர் திருநாள்

                      🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

உலகெங்கும் மகர சங்கராந்தி – உத்தராயண புண்யகாலம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. ஆன்மீக வாதிகள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விவசாயப் பெருமக்களுக்கு இதொரு மகிழ்ச்சியான நன்னாள். விவசாயம் இல்லை என்றால் உலகில் உயிரினங்களுக்கு உணவு ஏது ?

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.”
என்கிறார் திருவள்ளுவர். ஆடிப்பட்டம் தேடி விதைத்து, தையில் நல்ல அறுவடை செய்து மகிழ்ச்சியுடன் உழவர் திருநாளை கொண்டாடுகின்றனர் விவசாய மக்கள்.

    ஸம்ஸ்க்ருதத்தில் வ்யவஸாயம் – விவசாயம் – என்றால் முயற்சி. அதாவது சோர்ந்து போகாமல் காரியங்களைச் செய்து வெற்றியடைபவர்களே விவசாயர்கள் என்பர். சமனில்லாத பூமியை உழுது, சீர்படுத்தி, ஆழப்படுத்தி, விதை விதைத்து, தண்ணீர் தேக்கி, நாற்று நட்டு, களை பறித்து, பயிரினைக் காத்து, முடிவில் அறுவடை செய்கின்றனர் விவசாயிகள்.

இவ்வளவு பாடுபட்டு பயிரிட்டதைக் காப்பாற்ற ஒரு விவசாயி தனது நிலத்திலேயே தங்குவான். அறுவடை வரையிலும் வீட்டிற்குச் செல்ல மாட்டான். ஆடுகள், மாடுகள், பறவைகள், திருடர்கள், ஏனைய விலங்குகள் பயிரிட்டதைக் கெடுக்காதவண்ணம் காப்பது அவனது கடமை. அப்போது தானே மகசூல் (லாபம்) அடைய முடியும். தனது வயல் வெளியின் எல்லைகள் கண்ணுக்குத் தெரியும் வரை ஒரு உயர்ந்த பரணை(Loft) அமைத்து, அதிலேயே தான் வசித்துக்கொண்டு, கண்ணும் கருத்துமாக காவல் இருப்பான்.

ஸ்வாமி தேசிகன் உழவர் திருநாள் செய்தி ஒன்றை அளிக்கிறார் கேளுங்கள்.

ஸ்ரீநிவாசன் என்னும் நாராயணன் ஒரு விவசாயி. அவன் பரமபதமாகிய தனது வீட்டிலிருந்து புறப்பட்டு, வயல் வெளியாகிய பூமிக்கு(அவதாரம்) வருகிறான். இந்த பூமியில் “சரணாகதி” என்னும் விதை விதைத்து அதைக் கட்டிக் காப்பாற்றி வருகிறான்.

அதாவது விதை விதைத்து விட்டு வீட்டிற்கு(பரமபதம்) செல்லாமல் இங்கேயே (பூமியிலேயே) ஏழுமலைகள் என்னும் பெரிய பரணை (Loft) மீது நின்றுக் கொண்டு தான் இட்ட பயிரினைக் காவல் காக்கிறான். பயிரினைக் காப்பாற்ற களையெடுப்பது போன்று, அசுரர், நாஸ்திகர், வேதத்திற்கு பொய் அர்த்தம் சொல்பவர் முதலான களைகளை எடுத்து ரட்சிக்கிறான். ஒருவழியாக சரணாகதிப்பயிர் முளைவிட்டு, கிளை செழித்து, பால் பிடித்து, கதிர்கள் சீரார் செந்நெல்களாகத் திகழ்கின்றன.

     சரணாகதி சாஸ்திரத்தை நன்குணர்ந்து அனைவரும் மோக்ஷமடைய வேண்டும் என்னும் ஆவலில், விதை விதைத்த விவசாயி போன்று பெருமாள் திருமலையில் எப்பொழுதும் நிற்கிறான்.

இது உத்திராயண புண்ய காலம். அதாவது மோட்சமடையும் ஜீவன் உத்தராயண வாசல் வழியாக அர்ச்சிராதி (மோட்சமென்னும் வழி) வழியாக பரமபதம் செல்கிறான். நரகமடையும் ஜீவன் தூமாதி(புகை) தட்சிணாயன வாசல் வழியாக நரகம் செல்கிறான். போகியன்று புகைமூட்டமான தூமாதி மார்கம் விலகி உத்தராயண வாசல் திறந்து, திருவேங்கடமுடையான் கருணை என்னும் மகிழ்ச்சிப்பெருக்கு நமக்குக் கிடைத்திடும் நல்லதொரு காலம் இது.

சரணாகதி செய்த ஜீவர்களாகிய தான்யங்களைப் பெறும்(மகசூல்) ஸ்ரீனிவாசன் என்னும் விவசாயி மிகுந்த மகிழ்ச்சியடைகிறான். தனது இயற்கை(வேதம்) விவசாயம் பலித்ததே என கொண்டாடுகிறான்.

ஸ்வாமி தேசிகனின் தயா சதகம் – 21
              ஸமயோபநதைஸ் தவ ப்ரவாஹை:
              அநுகம்பே க்ருத ஸம்ப்லவா தரித்ரீ |
              சரணாகத ஸஸ்ய மாலிநீயம்
             வ்ருஷசைலேச க்ருஷிவலம் திநோதி ||

நாமும் தேசிகன் வழியில் உழவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.

அன்புடன்
ஏ.பி.என் ஸ்வாமி
Sri #APNSwami