துன்பம் தீர்க்கும் துளசித் தோட்டம் | பெங்களூரு | Sri APN Swami writes | Thedi Thozhutha Thiruththalangal 02

கர்நாடக மாநிலத்தின் தலைநகரமாம் பெங்களூருவில் மெஜஸ்டிக் பேருந்து நிலையம் அருகிலேயே அமைந்துள்ளது துளஸி தோட்டம் ஸ்ரீ ப்ரஸன்ன க்ருஷ்ணஸ்வாமி கோவில். மிகப் ப்ரம்மாண்டமான கோவிலாக இல்லாவிடினும், முன்புறம் விசாலமான இடைவெளியில், மரங்கள் அடர்ந்த பகுதியுடன் கூடியதாக, பெயருக்கு ஏற்றாற்போல் துளசிச்செடிகள் நிறைந்து காட்சியளிக்கிறது.

ஒரு காலத்தில் ஏக்கர் கணக்கில் இங்கு துளசிச் செடிகள் பூத்துக்குலுக்கி மணம் வீசிய காரணத்தால், இந்த இடத்திற்கு துளசித்தோட்டம் எனும் பெயருண்டானது. நகர வாழ்க்கைமுறை மாறினதாலும், இடப் பற்றாக்குறையினாலும் பெரும் தோட்டம் முழுதுமாகச் சுருங்கிச், சில செடிகள் மட்டுமே உள்ளன.

ஒரேயொரு துளசிச்செடி இருந்தாலும், அந்த இடத்தில் மஹாவிஷ்ணு மிகவும் மனமகிழ்ச்சியுடன் வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. க்ருஷ்ணன் திருவாய்ப்பாடியில் வசித்த இடத்திற்குப் ப்ருந்தாவனம் என்பது பெயர். ப்ருந்த என்றால் கூட்டம் என்பது பொருள். பசுக்களின் கூட்டம், பாகவதர்களின் கூட்டம், அதுபோன்றே துளசிச்செடியின் கூட்டம். இப்படி துளசி நிறைந்திருந்த காரணத்தால்தான், கண்ணன் ப்ருந்தாவனத்தை விரும்பினான். நம் திருவல்லிக்கேணியும் ப்ருந்தாரண்யம் எனும் பெயர் படைத்ததும் ஒரு சுவாரஸ்யம்.

ப்ரஸன்ன க்ருஷணன் 

அழகிய ராஜகோபுரம் நம்மை அன்புடன் வரவேற்கிறது. அதில், விசித்ரமான பல சிற்பங்கள், ஸ்ரீக்ருஷ்ணனின் பால லீலைகளை விவரிக்கின்றன. கம்பீரமான அக்கோபுரத்தைக் கடந்து, த்வஜஸ்த்ம்பத்தினடியில் கருடனை சேவிக்கிறோம். அங்கிருந்தே நவநீத கண்ணன் நர்த்தனம் ஆடிக்கொண்டே நமக்கு தரிசனம் தருகிறான்.

நவநீதம் என்றால் புதியதாகக் கடைந்தது என்று பெயர். கடைந்தவுடன் கையில் வருவது வெண்ணைதானே!. கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் கண்ணன். இவன் வெண்ணைக்கு ஆடும் பிள்ளை. அதாவது, ஆய்ப்பாடியில் சென்று ஒவ்வொரு வீட்டிலும் கண்ணன் வெண்ணை கேட்பானாம். திருடுவது, வேறுசமயம். கோபியரிடம் கெஞ்சுவது இப்போது. கண்ணா! நீ நர்த்தனம் செய்தால் உனக்கு வெண்ணை தருவோம் என்பர் அக்கோபியர். அவர்கள் தயிர் கடையும் தாள ஒலியைக் கொண்டே கையில் வெண்ணையுடன் ஆடும் கண்ணனைக் கண்கள் இமைக்காமல் கோபியர் கண்டு களிப்பாராம்.

ஆடும் கண்ணனைக் கண்டு இவர்கள் மகிழ்வர். இவர்களைக் கண்டு கண்ணனுக்கு மேலும் உத்ஸாஹம். ஆயர்பாடியில் ஆடிய கோலத்திலேயே, ப்ரஸன்ன க்ருஷ்ணனை சேவிக்கிறோம். சிறிய மூர்த்திதான். ஆனால் கொள்ளை அழகு. குண்டு கன்னம், கொழுத்த பின் பாகம், கள்ளத்தனம் கொண்ட கண்கள், காலைத் தூக்கிய நளினம் என, உருகும் வெண்ணையைக் கையில் உடையவன், எதற்கும் உருகாத நமது உள்ளத்தையும் உருக்கி விடுகிறான். எங்கே நமது கண்த்ருஷ்டி படுமோ! என பயந்து, ஒரு நொடி கண்களை மூடுகிறோம். மூடின கண்களுக்குள்ளும் கண்ணன் – இல்லையில்லை – கள்வன்!.

ஒருபுறம் ருக்மிணித் தாயார், மறுபுறம் ஆண்டாள் நாச்சியாருடன் சேவையாகும் எம்பெருமானின் இத்திருக்கோயில் 1844ம் வருடம் கட்டப்பட்டது.

மனத்துக்கினியானின் மகிமை 

சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கினியான் என்று ராமனைக் கொண்டாடுகிறாள் ஆண்டாள். ராமனை எதிர்த்து வந்த ராவணனும், ராமனின் அழகில் மயங்கினான். இக்கோயில் க்ருஷ்ணன் கோயிலாகவிருப்பினும், இங்குள்ள இராமனுக்குத் தனிப்பெருமைகள் உண்டு.

ராமபக்தியில் திளைத்தவரும், ராமசரித மாநஸம் எனும் அற்புத ராமாயண காவியத்தை அவதி எனும் மொழியில் படைத்தவருமான மகாத்மா துளசிதாசர் வழிபட்ட ஸ்ரீராம விக்ரகம், இத்திருக்கோவிலில் வழிபடப்படுகிறது என்பது ஆச்சர்யத்தின் ஆச்சர்யம்!! அதெப்படி என்று பார்க்கலாம்.

மகாத்மா துளசிதாசர், பல ராமவிக்ரகங்களை ப்ரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அவற்றினுள், துளசிதோட்டம் ஸ்ரீராமன் பல்லாயிரம் முறை ஸ்ரீமத் ராமாயண பாராயணம் கேட்டு களித்தவர். தனது வயதான காலத்தில், அப்போதைய மைசூரு மன்னரிடம் இந்த விக்ரகத்தை ஒப்படைத்தார் துளசிதாசர். மனம் மகிழ்ந்த மன்னனும், தனது ராஜ்யத்தில் துளசிவனமாகிய இங்கு, அந்த ராமரை ப்ரதிஷ்டை செய்தார். பின்னாளில், மூலவர் திருமேனியும் ப்ரதிஷ்டை ஆனது.

பல்லாயிரம் முறை ராமாயண பாராயணம் கேட்ட களிப்புடன், இங்கு ஸ்ரீராமபிரான் சேவை தருகிறார். அவரது சன்னிதி முன்பு நிற்கும் போதே, ராமாயண பாராயணம் காதுகளில் ஒலிப்பது போன்ற அனுபவம் உண்டாகி மேனி சிலிர்க்கிறது. ஒருமுறை மானசீகமாக மகாத்மா துளசிதாசரையும் வணங்குகிறோம். கோதண்டபாணியாக சீதா லக்ஷ்மணர்களுடன் ராமனின் வடிவழகினை நமது உள்ளத்தில் நிறைத்துக் கொள்கிறோம். சமீப காலங்களிலும் இப்பெருமான் சன்னிதியில், ஸ்ரீமத்ராமாயணம் மூலபாராயணம் பலமுறை நடந்துள்ளது. பகவானின் நாமாக்களைச் சொல்லச் சொல்ல விக்ரகத்தில் சாந்நித்யம் கூடுகிறது என்று ஆகமங்கள் கூறுகின்றன. பல்லாயிரம் முறைகள் ராமாயணத்தை அனுபவித்த இக்கோவில் ராமபிரான், நமது மனோரதங்களையும் பூர்த்தி செய்திடுவான் என்பதில் சந்தேகமுண்டோ!

பார்த்தசாரதி

மாபாதகச் செயல் புரிபவர்கள் இந்த மண்ணில் பெருகியதால் மாபாரம் (பெரிய சுமை) தாங்க முடியவில்லை என்றாள் பூமாதேவி நாராயணனிடம். அவள் ஒரு பசுவின் உருவத்தில் சென்று பகவானை வேண்டினாள். அதனால் பகவானும் கோபாலனாக (மாடு மேய்ப்பவனாக)ப் பிறந்து மாபாரத யுத்தம் செய்து மாபாதகர்களை அழித்தான்.

இனியும் உலகில் நன்மைகள் தொடர்ந்து நடைபெறவேண்டி பகவத் கீதையை உபதேசம் செய்தான். பார்த்தன் என்றால் அர்ச்சுனனுக்குப் பெயர். அர்ச்சுனனுக்கு தேரோட்டியவன் பார்த்தசாரதியானான்.

நூற்றியெட்டு வைணவத் தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், மூலவர், தனது வலது கையில் பாஞ்சசன்யம் எனும் அழகிய சங்கினை ஏந்தியிருப்பதைக் காணலாம். அவரின் உற்சவர் திருமேனி, இத்திருக்கோவிலில், வலது கையில் சங்குடன் சேவை சாதிப்பது சிறப்பானதாகும்.

ஒருவனுக்கு நல்ல அறிவு உண்டாக வேண்டுமென்றால, அதற்கு அவன் பாஞ்சசன்னிய சங்கினை வணங்க வேண்டும். எனவேதான், அர்ச்சுனனுக்கு ஞானம் உண்டாக கீதையை உபதேசிக்கத் தொடங்குமுன்பாக, சங்கொலியெழுப்பினான் பார்த்தசாரதி எனவே, நல்ல அறிவினைப் பெற்று வாழ்க்கையில் வெற்றியினை விரும்புபவர்கள், இங்குள்ள பார்த்தசாரதியையும், அவரின் கையிலிலுள்ள சங்கினையும் வணங்க வேண்டும்.

மற்றைய சன்னிதிகள் 

யசோதை இளஞ்சிங்கம் என்று ஆண்டாள் கண்ணனைக் கொண்டாடுவதற்கேற்ப, நவநீத க்ருஷ்ணனுக்கு வலதுபுறம் ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்மனும், இடதுபுறம் ஸ்ரீநிவாஸனும் அருள்பாலிக்கின்றனர். ஒரேசமயம், அருகருகே, மூன்று பெருமாளை வழிபடுவது நமது வாழ்க்கையில் பல சிறப்புகளைத் தரவல்லது. திருமலையப்பனாகிய ஸ்ரீநிவாசன், இக்கோவிலின் முதன்மை அர்ச்சகர் கேசவ ரங்கநாத பட்டரின் கனவில் தோன்றி, தனக்கொரு தனி சன்னிதி அமைத்துத் தரும்படி நியமனம் செய்ததால், ஸ்ரீநிவாஸன் சன்னிதி அமைக்கப்பட்டது.

தில்லைஸ்தானம் சுவாமி

தஞ்சாவூரில் அமைந்துள்ள அழகிய சிறிய கிராமம் தில்லைஸ்தானம். அங்கு தில்லைஸ்தானம் சடகோபன் சுவாமி என்னும் ஒரு மகான் எழுந்தருளியிருந்தார்.  வைராக்யத்தினால் சந்நியாச தீட்சை பெற்ற அவர், துளசி தோட்டம் க்ருஷ்ணன் கோவிலில் பல ஆண்டுகள் தங்கியிருந்தார். சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்பு, அவர் செய்து வைத்த திருத்தேர், இன்றுவரையில் புது மெருகு குறையாமல் பவனி வருகிறது. இதுவே இந்த மகானின் மகிமைக்குச் சான்றாகும்.

பல ஆண்டுகள் இங்கு வசித்த வந்த சுவாமிகள், நூற்றுக் கணக்கான சிஷ்யர்களுக்கு ராமனுஜரின் நல்லுபதேசங்களையும், வேதாந்த தேசிகனின் வ்யாக்யானங்களையும் உபதேசித்துள்ளார். இங்குள்ள ஒவ்வொரு கல்லும் அந்த மகானின் கம்பீரமான குரலை எதிரொலிக்கின்றன. தன் ஆசார்யன் ஆதிவண்சடகோப சுவாமிக்கு அருகிலேயே தில்லைஸ்தானம் சுவாமிக்கும் ஒரு விக்ரகம் அமைந்துள்ளது.

வேறெங்கும் கிடைக்காத பாக்கியமாக, அவரின் திவ்ய பாதுகைகள் இச்சன்னிதியில் விளங்குகின்றன. அந்த பாதுகைகளை சேவிப்பதால் நமது பாபங்கள் கழியும்.

சமுதாய பார்வை

வெறும் ஆன்மிக நோக்குடன் மட்டும் இருந்துவிடாமல், பி.கே.கருடாசார் சாரிடபிள் ட்ரஸ்ட் மூலமாக, ஒரு இலவச மாணவர்கள் தங்கும் விடுதியும் செயல்படுவது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இன்றைய இளைஞர்கள், இதுபோன்ற ஆன்மீக சூழலில் பழகுவதாலும் வளர்வதாலும் அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டதாகவே இருக்கும் என்பது நிச்சயம். 

குழந்தை வரம் வேண்டுவோர் வெண்ணை கண்ணனையும், மனப் பொருத்தம் அமைய மனத்துக்கினிய ராமனையும், பாவங்கள் தொலைய தில்லைஸ்தானம் சுவாமிகளின் பாதுகைகளையும் சேவித்துவிட்டு வாருங்கள். 

பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தின் மிக அருகாமையில் அமைந்துள்ளது இக்கோயில். சென்றுவர அனைத்து வசதிகளும் உண்டு. தொடர்புக்கு: 98457 47613, 080-23381184.

Thulasi Thottam that removes adversity

Thulasi Thottam Sri Prasanna Krishnaswami temple is situated very near to the Majestic bus stand of Bangalore, the capital city of Karnataka. Though this temple is not so big, it has lots of trees and a basil garden (Thulasi Thottam, as it is so called) in the available space, at the entrance of the temple.

Once upon a time, this place used to have a thick garden of basil plants and hence this place was popularly known as “Thulasi Thottam”. Due to the changes of city lifestyle and scarcity of space in the city, today the basil garden has shrunk to only few.

As per the puranas, it is believed, even if there is only one Thulasi plant, Sri Maha Vishnu will happily reside in that place. Thiruaaypaadi where Lord Krishna lived was known as “Brindavanam”. Brinda means that which is thickly populated or available in plenty. A herd of cows, crowd of devotees, similarly a garden of basil plants. Lord Krishna loved Brindavanam, because it is covered with lots of Basil plants. Triplicane was also known as “Brindaranyam” because of the same reason.

Beautiful Krishna (Prasanna Krishnan)

A very beautiful temple tower welcomes everyone at the entrance. The tower has lots of sculptures of Lord Krishna’s playful incidents from his younger days. The Garudan could be seen at the bottom of Dwajasthambam, once you cross the majestic temple tower. There is also an idol of Lord Navaneetha Krishnan, who gives darshan in dancing posture.

Navaneetham means freshly churned butter. When curd is churned, the butter pops out at the top. Kannan has another name Kovalan, whose mouth is always filled with fresh butter. Kannan will dance and do anything to get the butter. He visits every house in Aayarpadi and asks butter. He begs the Gopikas for the butter and sometimes even steals it. Gopikas tells Lord Krishna that if he dances, he will be given butter. With butter on his hands, Lord Krishna, dances to the tunes of the sweet sound that comes, when the Gopikas churn the curd. Gopikas enjoy this beautiful rhythmic dance without taking their eyes off him.

Gopikas drench in ecstasy on seeing the dancing Lord Krishna. Lord Krishna gets more excited on seeing the Gopikas. In this temple, Lord Prasanna Krishna gives darshan in the same form as he dances in Aayarpadi. It is a small idol of Lord Krishna, but he steals the heart of his devotees with his beauty. Chubby cheeks, fatty back, mischievous eyes, dancing posture by lifting one leg, melting butter on his one hand, which in-turn melts our hearts. We close our eyes, fearing Lord Krishna should not get any harm, by seeing his beauty through our eyes. No, he still resides inside the closed eyes, indeed he is a heart stealer.

With Rukmini Thayar on one side and Andal Nachiyar on the other, this temple of Lord Prasanna Krishna was built in the year 1844.

Sweetheart’s Grace (Manathukkiniyaanin Mahimai)

Andal praises Lord Rama as “Sinathinaal Thenilangai Komaanai chetra manathukkiniyaan”. Ravanan, who came to fight with Lord Rama, was taken away by the beauty of Lord Rama. Though the main deity in this temple, is Lord Prasanna Krishna, the idol of Lord Rama in this temple is very special, for a reason.

The idol of Lord Rama, which was worshipped by Thulasidasar, the Mahatma, who drenched himself in the Rama Bhakti and one who created the most precious epic of Ramayana as “Rama Charitha Maanasam” in a language called “Avathi” is worshipped in this temple. Surprised about the connection, let’s see.

Many idols of Lord Rama were worshipped by The Mahtama, Thulasidasar. The Lord Sri Raman of Thulasi Thottam has enjoyed Sri Ramayana parayanam, many thousand times. When Thulasidasar became old, he handed over this idol of Sri Raman to the then king of Mysore. The King installed this idol in this Thulasi Thottam and worshipped, which was part of his kingdom. The moolavar idol of Sri Rama was installed later.

Sri Raman, who has listened to the Sri Ramayana parayanam, many thousand times, gives darshan to his devotees in ecstasy. When one gets the darshan of Lord Rama in this temple, they will feel the vibration and could hear internally the Ramayana parayana, that gives goose bumps. Let’s pay our obeisance to Thulasidasar and fill our hearts with beautiful images of Sri Kothanda Rama, along with Sri Seetha and Sri Lakshmana. Even recently, in this Lord Rama’s sannadhi, Sri Ramayana parayanam (moola parayanam) have taken place many times. Agama sastra, says, as you pronounce the names of Lord many times, it will increase the sanctity of the idol, by many folds. No doubt, this Lord Rama, who has listened to Sri Ramayana parayanam many times, will bless all the devotees and their wishes to come true.

Parthasarathy

Due to the increase in wrong deeds on this planet, which has resulted in Mahabaram (load of wrong deeds), bhooma devi (in the form of cow) requested Lord Narayanan for a solution. God took the avatar of Lord Gopalan (Cowherd) and fought the Mahabaratha to destroy the evil forces.

To ensure only good karma continue hereafter Lord Krishna preached us the Bhagawad Geetha. Arjunan is also known as Parthan. Since Lord Krishna is the Charioteer of Arjuna (Parthan), he got the name “Parthasarathy”.

The Lord Parthasarathy (moolavar) holds the conch called Panchajanyam on his right hand, at Thiruvallikeni, which is one of the 108 vaishnava divya desams. The utsava moorthi, also gives darshan with conch on his right hand.

If one wants to have good knowledge, he should pray Panchajanyam. Hence Parthasarathy blew the conch, before preaching the Geetha to Arjuna. Those who want to attain good knowledge and succeed in life, should worship the Parthasarathy and the conch on his hand, at this temple.

Other Sannadhi’s in the temple:

Andal Nachiyar celebrates Lord Kannan as “Yasodhay Illansingam”. On the same lines, Sri Lakshmi Nrusimahan is on the right side and Sri Srinivasan is on the left side of Sri Navaneetha Krishnan. Worshipping all three Perumal at the same time will bring lots of good wishes in one’s life. Lord Thirumalaippan came in the dream of Sri Kesava Ranganatha Bhattar, chief archakar of the temple and ordered him for a separate sannadhi for Lord Srinivasa at this temple.

Thillaisthanam Swami:

Thillaisthanam is a beautiful, small village in Thanjavur district. There lived a mahan named Thillaisthanam Sadagopan swami. He was a sanyasi and he stayed in the Thulasi Thottam temple for many years. Thillaisthanam swami presented a temple car to this temple around 80 years ago and till today, this temple car comes around with all its beauty as ever. This is a living proof of this mahan’s glory.

Thillaisthanam swami, who lived in this temple for many years, has preached the teachings of Swami Ramanujar and works of Swami Vedantha Desikan to hundreds of his sishyas. Each stone in this temple has the positive vibes of this swami’s bold voice. The idol of Thillaisthanam swami is placed near to his Acharyan Adivan Sadagopan swami.

His Padukas has been kept at his Sannidhi. Having the darshan of the swami’s Padukas is a very rare opportunity. Prostrating before his Padukas will remove all the sins.

Social welfare:

This temple is not only a place for spirituality, but also has a free hostel for students, run by P.K. Garudachar Charitable Trust, which is praiseworthy. By living & growing in such environment, it is definite that the standard of life of younger generation will be noble.

For resolving child issues, pray Vennai Kannan and to get good match for matrimony, pray Manathukiniyan Raman and to remove all the sins, have the darshan of the Padukas of Thillaisthanam swami at this temple. This temple is situated very near to the Majestic bus stand. All facilities are available to have the darshan at this temple. Contact Details: 98457 47613, 080 – 23381184

Leave a comment