Sri #APNSwami #Writes #Article | சுகமான சுமை – திருப்பாணாழ்வார் வைபவம்

சுகமான சுமை- திருப்பாணாழ்வார் வைபவம் by Sri #APNSwami
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

யாரு ஸ்வாமி ? யாரு தாஸன் ?
ஒருவர் மற்றோருவரை சுமக்கும் போது, சுமப்பவருக்கு சோகம் வரவேண்டும், சுமக்கப்படுபவர் சந்தோஷப்படவேண்டும். சுமப்பவரோ வேத வேதாந்தங்களில் கரை கண்டவர். சுமக்கப்படுபவரோ தீண்டத்தகாத மட்டும் இல்லாமல், கண்ணில் படுவதற்கோ பேசுவதற்கோ தகுதியற்றவர் என்று தன்னை தாழ்த்திக்கொண்டு ஒதுங்கி நிற்பவர். இவரை அவர் சுமந்து வருகிறார்.
என்னே வைணவத்தின் பெருமை!
தோளில் இருப்பவர் தன்னை சுமப்பவரை “என் எஜமானன்” என்று கொண்டாடுகிறார். சுமப்பவரோ, இந்த சுகமான சுமையை தாங்கி ஒய்யார நடை போட்டு வருகிறார்.
சுமப்பவர் லோக சாரங்க முனிவர். சுமக்கப்படுபவரோ “நம் பாணநாதன்” என்று ஸ்வாமி தேசிகன் கொண்டாடும் பெருமை பெற்ற, இன்று கார்த்திகை ரோஹினியில் அவதரித்த திருப்பாணாழ்வார். தோளில் அமர்ந்து இருப்பவர் தன்னை தூக்கி வருபவரை எஜமானன் என்று கொண்டாடுகிறார். இது என்ன விசித்திரம்? “அடியார்க்கு ஆட்படுத்தும் விமலன்” என்று ஸ்வாமி தேசிகன் வர்ணிக்கும் அழகை தவறாமல் படியுங்கள்.
ஆட்படுத்துவது என்றால் கீழ்படிவது என்று பொருள். சுமப்பவர் தானே கீழ்பட்டவர். மேல் இருப்பவர் அவருக்கு எப்படி ஆட் பட்டவர் ஆவார்? ஏன் என்றால், கீழ்படிதலின் உண்மையான பொருளை இந்த உலகம் உணராததினால் இன்றளவும் துயரப்படுகிறது. இதுவும் ஒரு வகை Ego தான். தன் தோளில் ஏறிக்கொள்ளுமாறு லோகசாரங்கர் சொன்னதை உடனே செயல் படுத்தாவிட்டால், ஆழ்வார் தன்னை பெரியவராக நினைத்ததாகிவிடும். அப்படி இல்லாமல், பாகவத உத்தமரின் பெருமை உணர்ந்து, சொல்லுக்கு கட்டுப்பட்டு, தோளில் ஏறின அழகை ரசிக்க வேண்டும்.
அது சரி, என்ன இருந்தாலும், சுமப்பவருக்கு கஷ்டம் தானே என்றால், தன் பிள்ளையை தோளில் சுமப்பதை எந்த தகப்பனாராவது கஷ்டமாக நினைப்பது உண்டா? தகப்பன் தோள் மீது ஏறிய பிள்ளை தகப்பனை விட தன்னை பெரியவனாக நினைப்பது உண்டோ?

இது தான் “நம் பாணன்” பெருமை பறைசாற்றும் “தூப்புல் பிள்ளை”யின் பெருமை.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸