Sri #APNSwami #Writes #Article| பல்லி கூடமா? பள்ளிக்கூடமா? @ Kanchi Varadhan Kovil

               பல்லி கூடமா? பள்ளிக்கூடமா?

by Sri #APNSwami
*****************

சமீபத்தில் நண்பரின் குடும்பத்தினர் காஞ்சிபுரத்திற்குச் சென்று வந்தனர். எனக்குத் தெரிந்த ஆட்டோக்காரரை வாடகைக்கு அமர்த்திக் கொடுத்திருந்தேன்.   அதன்மூலம், திருப்புட்குழி உட்பட, எல்லா திவ்யதேசங்களையும் சேவித்து த்ருப்தியாக வந்தனர்.   “வரதன் சன்னிதியில்தான் ஒரே கூட்டம். சபரிமலை, மேல்மருவத்தூர் கும்பல் தாங்க முடியவில்லை” என்றார் நண்பர் ஸ்ரீநிவாஸன்.
“அதனாலென்ன! சேவித்தீர்களல்லவா?” என்றேன்.
“ம்…….ஹும்.. பெருமாளையெல்லாம் நன்றாகத்தான் சேவித்……தே……ன்” என் இழுத்தார்.
“ஏனிந்த அலுப்பு?” என்றேன்.
“அதொன்றுமில்லை…. இந்த பல்லி தரிசனம்தான் செய்யமுடியவில்லை” என்றார் ஏக்கத்துடன்.
“காஞ்சிபுரத்தில் வரதன் சன்னிதியிலுள்ள தங்க பல்லி, வெள்ளி பல்லி தரிசனம் World famous ஆயிற்றெ! தவிரவும் அதுதானே Tourist Attraction.” அதுதான் அவர் வருத்தம்.
“ஏம்பா! பகவத் தரிசனம் ஆயிற்றா? என்றால் பல்லி தரிசனம் ஆகவில்லை என்கிறாயே?!”
“உனக்குத் தெரியாதா? அந்த தங்க பல்லி, வெள்ளி பல்லிகளை தரிசித்தால், தோஷம் நீங்குமே! பல்லி மண்டபம்….. அதாம்பா! அந்தக் கூடம் full of crowd…. போகவே முடியல” என்றார் முன்னைவிட வருத்தத்துடன்.
“பகவத் தரிசனத்தால் போகாத தோஷம், பல்லி தரிசனத்தால் போகுமா?” என் மனதின் ஓசை.
“அவரின் அறியாமை கண்டு வியந்தேன் என்பதைவிட வருத்தமுற்றேன் என்பதே சரி”.

“அதுசரி, பல்லி கூடம் தரிசிக்கவில்லை; ஆனால் பள்ளிக்கூடம் தரிசித்தாயா?!” என்றேன்.
“என்றுமே, நான் குழப்புபவன் என்று அறிந்திருந்ததால், இப்போது மீண்டும் விசித்ரமாகப் பார்த்தார்.   விரிந்த அவரது நெற்றியில் விபூதிப் பட்டைகளாக சுருக்கங்கள்.”

    “பல்லியா? பள்ளியா?” தொலைக்காட்சி தொகுப்பாளினி போன்று எனது தமிழ் உச்சரிப்பில் அவர் தடுமாறுவது தெரிந்தது.
“ஒழுங்காகத் தமிழ் பேசினாலேயே ஊருக்குள் குழப்பம்தான்” என நினைத்துக் கொண்டே “ஆமாம்! பள்ளிக்கூடம்! பள்ளிக் கூடம்!” என்றேன் அழுத்தி……..
“நண்பனே! பல்லி தரிசனத்திற்காகக் காத்திருந்தீரே! அந்தக் கூடத்தின் (மண்டபத்தின்) பெருமை அறிவீரோ?”

 “பகவத் ராமானுஜருக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விடையாக, வரதன் திருக்கச்சி நம்பிகளிடம் ஆறுவார்த்தை பேசிய மண்டபம் அது!!   நம் சம்ப்ரதாயத்தின் முதல் குருவான வரதன், பாடம் நடத்திய பள்ளிக்கூடம்”.
“பின்னாளில், நடாதூர் அம்மாள், ஸ்ரீபாஷ்யத்தை, சிஷ்யர்களுக்குக் காலட்சேபம் சாதித்த (போதித்த) பள்ளிக்கூடம். இங்கு, தான்பயின்றதைத்தான், சுதர்சனசூரி பின்னாளில் பெரிய புத்தகமாக ஸ்ரீபாஷ்ய விரிவுரையாகத் தொகுத்தார்”.
“இதே பள்ளிக்கூடத்தில் தான் நடாதூர் அம்மாள் மூலமாக சிறுவன் வேங்கடநாதன் (வேதாந்த தேசிகன்) முதல் பாடல் (nursery rymes) பயிற்றுவிக்கப்பட்டார்.   அதாவது வாத்ஸ்ய வரதகுரு எனும் நடாதூர் அம்மாளால் நன்கு ஆசீர்வாதம் செய்யப்பட்டார்.  அந்த சித்திரத்தை இன்றும் பல்லி கூடத்தின் அருகேயுள்ள பள்ளிக்கூடத்தின் மேற்கூரையில் காணலாம்”.

 “வருடந்தோறும் புரட்டாசி ச்ரவணத்தில், வரதனை சேவிக்க வரும் தேசிகன், முதலில் இந்த பள்ளிக்கூடத்தை சேவித்து,  தனது ஆசார்யர்களை மானசீகமாக வணங்குகிறார்”.

“ஆகையால்தான், விவரமறிந்த பெரியோர்கள், இங்கு முதலில் விழுந்து சேவித்துவிட்டுப் பின்பு உள்ளே வரதனை சேவிக்கச் செல்வர்.  நாமும் ஸம்ப்ரதாய நல்லறிவுபெற, நமக்கிது பள்ளிக்கூடம்தானே!” என்றேன்.
“இனி அடுத்தமுறை காஞ்சிக்குச் சென்றால், பல்லி தரிசனத்தைவிட, ஆசார்யார் அநுக்ரகம் பெற, நம் பாவம் போக்கும் பள்ளிக்கூடத்தைக் கட்டாயம் தரிசித்து வருவேன்” என்றார்.

    கச்சிவாய்த்தான் மண்டபம் என வழங்கும் வரதன் சன்னிதி பின் மண்டபத்தை இனி முதலில் சேவித்து, பின்னர், பெருமாளை சேவிக்க நாமும் பழகிக் கொள்ளலாம்.

இப்படிக்கு,

அன்புடன்

ஏபிஎன் 

Sri #APNSwami