Sri APNSwami #Writes #Article | “இப்படிக்கு APN”| எல்லைச்சாமிகள்

க்ராமங்களிலும், நகரங்களிலும் நான்கு எல்லைகளில் தெய்வங்களுக்குக் கோயில் எழுப்பப்பட்டிருக்கும். ஐயனார், முனியன் இதுமுதலான தேவதைகளை எல்லைச்சாமி என்று அழைப்பர். அதாவது மற்றவர்கள் எளிதில் உட்புகாதவாறு ஊரைக்காக்கும் காவல் தெய்வங்கள் அவர்கள் என்று பொருள். நமது தேசத்தின் எல்லைகளைப் பாதுகாக்கும் பெரும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினரும் எல்லைத் தெய்வங்கள் தான் என்பதில் சந்தேகமில்லை.  சமீபத்தில் கல்வான் (இந்திய சீனா எல்லை) பள்ளத்தாக்கில் அன்னியரை உள்ளே நுழையவொட்டாமல் தீரத்துடன் தடுத்த ராணுவ வீரர்களின் பெருமையை உணர்ந்துள்ளோமே.

            அஃதே போன்று க்ராமங்களில் மாற்றுமதத்தினர் உள்ளே நுழையாமல் காவல்காக்கும் எல்லைச்சாமிகளாக ஸ்ரீவைஷ்ணவ பாகவதர்களைக் கூறலாம். ஆம் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது நான்கைந்து வைஷ்ணவ பாகவதர்கள் இருப்பார்களேயாயின் மதம் மாற்றுப்பணியாளர்கள் அவ்வூரில் நுழைய முடியாது என்பது நிதர்சனம்.

            சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பாகவதர்களுடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியின் வெளியீடு இக்கட்டுரை.

            சிறுவயதில் வரதன் ப்ரஹ்மோத்ஸவத்தில் ஆடிப்பாடிகளித்துக் கொண்டு பாகவதர்களின் பஜனையை ரசித்த அனுபவம் மறக்க இயலாது. வேதம், ப்ரபந்தம் என்று ப்ராஹ்மண சமூகத்தில் பழகிய எனக்கு ப்ரஹ்மணர் அல்லாத அந்தபாகவதர்களின் மேன்மையான பக்தி வியப்பளித்தது. கொளுத்தும் வெயிலில் காஞ்சி கருடசேவையில் கூட்டம் கூட்டமாகப் பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் அவர்கள் பின்தொடரும் அழகு இன்றளவும் சமன் செய்யமுடியாத சாதனை என்பேன்.

                  இடையியே தண்ணீர் கூட அருந்தாமல் தன்னைமறந்து உரத்த குரலில் கணிரென்று பாடியாடுவது சாத்தியமேயில்லாத சத்தியம் என்பது எனது தீர்மானம். பெருமாள் கோவிலுக்குத் திரும்பி வந்தவுடன் தன்னைமறந்து அசதியில் அவர்கள் தூங்குவதும் ஒரு அழகுதான்.

      அதேசமயம் ஸ்ம்ப்ரதாயப் பெரியோர்களைக் கண்டால் வயது வித்யாசம் பாராமல் விழுந்து வணங்குவது, உபசரிப்பது, விநயத்துடன் பழகுவது என பாகவததர்மம் பண்பின் சிகரம். “தொடர்ந்து அவர்களைத் துதி பாடுகிறேன்“ என நீங்கள் எண்ணலாம். இவையெல்லாம் எனது முழுமையான அனுபவம். இதற்கெல்லாம் காரணம் தேடிக் கொண்டு உங்களின் காலநேரத்தை வீணடித்துக் கொள்ளாதீர்கள்.

      இப்படி குதித்து பஜனை பாடுவதால் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என நினைத்துவிட வேண்டாம். சிலர் திவ்யப்ரபந்த அதிகாரிகளாகவும், சிலர் காலஷேப அதிகாரிகளாகவும், வேறு சிலர் சுத்த பரமைகாந்திகளாக தங்களின் வர்ணாச்ரம தர்மங்ககள் வழுவாமல் ஆசாரத்துடன் இருப்பதும் கண்கூடு. எவ்வித ப்ரதிபலன்களையும் எதிர்பாராமல் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தை பாகவதர்கள் ப்ரசாரம் செய்து வருகின்றனர்.

            ஆனால் சமீபகாலங்களில் இவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வேதனைக்குரியது மட்டுமின்றி, உண்மையில் நாம் சிந்தித்தும் செயல்படவேண்டும். ஏனெனில் முன்னமே சொன்னபடி இவர்களே எல்லைச்சாமிகள். தற்போதுள்ள விவசாய சூழல் மாறுவதாலும், நாகரீகம் என்னும் மாயவலையில் மயங்கி பாகவத இளைஞர்கள் தடம் மாறுவதாலும், க்ராமங்களில் ஸ்ரீவைஷ்ணவ பாகவதக் குடும்பங்கள் குறைந்து வருகின்றன.

            ஸ்ரீரங்கத்துக்கு அருகில் மாராடி எனும் ஊரில் சுமார் எண்பது வருடங்களுக்கு முன்பு மாற்றுமதத்தவர் மக்களை மனம்மாற்ற முயற்சித்தனர். அப்போது அங்கிருந்த பாகவத ரெட்டியார்களின் வேண்டுகோளின் படி புத்தம்கோட்டம் சுவாமி அவ்வூருக்குச் சென்று பலமாதங்கள் தங்கியிருந்து மதமாற்றத்தை முறியடித்தார். அதன் நினைவாக ஒரு தேசிகர் சன்னிதியையும் ஏற்படுத்தினார். மிகவும் பாழடைந்த அந்த சன்னிதியை தேசிகசூக்தி சம்ரட்சணை சபையோர் தற்போது மீண்டும் புதுப்பித்து வருகின்றனர்.

            இதுபோன்று சேட்டலூர் சுவாமி, நவநீதம் சுவாமி, கோஷ்டிபுரம் சுவாமி போன்ற பெரியோர்கள் க்ராமங்கள்தோறும் நடந்து பஞ்சஸம்ஸ்காரங்கள் செய்து பாகவத தர்மத்தைப் பரப்பினர்.

            சமீபகாலங்களில் குமாரவாடி சுவாமி (தற்போது ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள்), ரகுவீரபட்டாசார்யார், ஒப்பிலியப்பன் கோவில் கோபால தேசிகாசார்யார் சுவாமி, திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் இன்னமும் இம்மாபெரும் கைங்கர்யத்தினைச் செய்துவருகின்றனர்.

                  இருந்தாலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஸ்ரீவைஷ்ணவ பாகவத கோஷ்டிகள் இப்போது குறையத்தொடங்கியுள்ளதை மீண்டும் வருத்தத்துடன் குறிப்பிடுகிறேன். பாகவதர்களின் கோட்டைகளாகத் திகழும் ராமானுஜக் கூடங்களும் கவனிப்பாரற்று சிதிலமடைந்து வருகின்றன. இதனால்தான் ஜடேரி முதலிய க்ராமங்களில் மதம் மாற்றம் நடைபெற்றதை உணரவேண்டும். க்ராமங்கள் தோறும் பாகவதர் செழிக்கவேண்டும். இளைஞர்களுக்கு பஜனை, திவ்யப்ரபந்தம் முதலியவற்றை பயிற்றுவிக்க வேண்டும். அவர்கள் அனைவர்க்கும் ஆசார்ய சம்பந்தத்தின் அவசியத்தை உணர்த்த வேண்டும். ஆசார்யனிடம் பக்தி செலுத்துவதில் உதாரணமாகத் திகழும் பாகவத அடியார்களையும், மதம்மாற்றத்தைத் தடுக்கும் எல்லைச்சாமிகளாக திகழ்பவர்களையும் போற்றிப் பல்லாண்டு பாடுவோமாக.

      ஒரு சில பாகவதர்கள் ராணுவத்தில் பணி புரிந்தும் ஓய்வுபெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நமது எல்லைகளை நாம் அறியவேண்டும், உணரவேண்டும். தேசிய கீதத்தின் பெருமிதம் போன்று தேசிக (ஆசார்ய ) கீதத்தின் பெருமையை பட்டொளி வீசச்செய்வோம்.

ஜயஹிந்த்!!!

இப்படிக்கு

APN