Sri APNSwami #Writes #Articles | அசட்டு அரசனும், அறிவில்லா மந்த்ரிகளும்

🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️☔☔☔☔☔☔☔☔🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️
8-நவம்பர்-2021 | சென்னை
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️☔☔☔☔☔☔☔☔🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️

என்றோ எங்கேயோ படித்த ஒரு நீதி ச்லோகம். எப்பொழுதாவது உபன்யாசத்திற்கு உதவும் என்பதாக நான் இதனை பத்திரபடுத்தி வைத்திருந்தேன். இதை படித்துவிட்டு, இன்றைய நிலைமை குறித்து நீங்களாக ஏதாவது கற்பனை செய்து கொண்டால், அடியேன் அதற்கு பொறுப்பில்லை.
-APN
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️☔☔☔☔☔☔☔☔🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️

அசட்டு அரசனும், அறிவில்லா மந்த்ரிகளும்:

நிர்வாகத்திறமையில்லா ஒருவனுக்கு எப்படியோ அரசுரிமை கிடைத்துவிட்டது. எந்த அனுபவமும்‌
இல்லாத அடிமுட்டாள்களை அரசன்‌ அந்தரங்க அமைச்சர்களாக்கிக்‌ கொண்டான்‌. அந்த ஆட்சியிலும்‌
மக்கள்‌ எப்படியோ வாழ்ந்து வந்தனர்‌. ஒரு சமயம்‌ அரண்மனையினுள்‌ எலி ஒன்று ஓடி ஒளிந்தது. அதை
விழுங்க முயன்ற கொடிய பாம்பு அரண்மணைக்குள்‌ புகுந்தது. எதிர்பாராதவிதமாக அரசியை பாம்பு
கடித்தது.

விஷயமறிந்த அரசன்‌ நிலைமை அறிய சம்பவ இடத்திற்கு முதலில்‌ அமைச்சர்களை அனுப்பினான்‌.
அவர்கள்‌ செய்வதறியாது திகைத்தபோது அரசனும்‌ அங்கு வந்து சேர்ந்தான்‌. மருத்துவக்குழு
வருவதற்கு தாமதமாகிறது. ராணிக்கோ விஷமேறுகிறது. “தலைக்கு விஷமேறாது எப்படி தடுப்பது?
அமைச்சர்களுடன்‌ அவசர ஆலோசனைக்கூட்டம்‌ நடைபெறுகிறது.

“முதலில்‌ தலையை வெட்டினால்‌ தலைக்கு விஷமேறாது. பின்னர்‌ மருத்துவ சிகிச்சையால்‌
தலையைப்‌ பிணைக்கலாம்‌” என்பது அமைச்சர்களின்‌ அருமையான யோசனை. அது நடந்தது.
பாம்பைத்‌ தேடினார்கள்‌. அதைக்‌ காணவில்லை. “சரி அரண்மனையைக்‌ கொளுத்தினால்‌ பாம்பு
எரிந்துவிடும்‌. இனி எவரையும்‌ கடிக்காது எனும்‌ அமைச்சரவைத்‌ தீர்மானம்‌”. அதன்படி நடந்தது.
அரண்மனை கொளுத்தப்பட்டதால்‌ நகரமும்‌ சேர்ந்து எரிந்தது.

மறுபடியும்‌ அமைச்சரவைக்‌ கூட்டம்‌. காரசாரமான விவாதம்‌. இம்முறை மும்முரமான யோசனையின்‌.
முடிவில்‌ “நகரத்தின்‌ தண்ணீர்‌ தேவையை பூர்த்தி செய்யும்‌ ஏரியை வெட்டிவிட்டால்‌ அந்நீரால்‌ நெருப்பு அணையுமே!” எனும்‌ அருமையான யோசனையைச்‌ செயல்படுத்தினர்‌. திடீரென்று ஏரிவெள்ளம்‌
பாய்ந்தால்‌ நகரத்தின்‌ நிலை என்ன? நரகம்‌ தானே.

ஒரு வழியாக வெள்ளம்‌ வடிந்தது. உயிரையும்‌, உடைமைகளையும்‌ பறி கொடுத்தபின்‌ எஞ்சியவர்‌.
ஒரு சிலரே. அவர்கள்‌ தங்களின்‌ பயிர்கள்‌ தண்ணீரில்‌ அழுகின என சிலரும்‌, வெயிலில்‌ வாடுகின்றன
என வேறு சிலரும்‌ தெரிவித்து அரசனிடம்‌ நிவாரண உதவி கோருகின்றனர்‌. விடுவார்களா அமைச்சர்கள்‌
இம்முறையும்‌ ஆலோசனைகளை வாரிவழங்கி அரசனை செயல்பட வைத்தனர்‌.

வாடிவதங்கும்‌ பயிர்களைக்‌ காக்க நிழல்‌ தரும்‌ மரங்களை வெட்டி, அம்மரத்தின் கிளைகளை வயல்களில்‌ பந்தலமைத்து அதன்‌ மீது பரப்பினான்‌ மன்னன்‌. அந்த நகர (நரக)த்தில் வசித்த ஒரு கவி எழுதியது என்றோ படித்தது. இன்று நினைவில் வந்ததால் எழுதினேன். வேறொன்றுமில்லை.

மூர்கே ராஜநி துர்நயாத்‌ புரவராத்‌ ஆகும்‌ நிஹந்தும்‌ கத:
ஸர்ப: தந்மஹீஷீம்‌ ததம்ச சசிவ: தஸ்யா: சிரோ: அச்சிநத்‌ |
த்ருஷ்டும்‌ ஸர்பவரம்‌ நிஹத்ய பவநம்‌ தக்த்வாபுரிம்‌ ஸர்வத:
சாந்த்யை தோயதடம்‌ விபஜ்ய கலமச்சாயாம்‌ கரோதி த்ருமை: ॥

🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️☔☔☔☔☔☔☔☔🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️

Leave a comment