Sri #APNSwami #Writes #Book |வரம் தரும் மரம்| Varam Tharum Maram – 16|திருவடிவும் திருவருளும்|Beauty and the Blessings | Athi Varadar Vaibhavam

Note: Scroll down to read the article in Tamil & translation in English.

ஸ்ரீ APNSwamiயின்  எழுத்தில்

                   “வரம் தரும் மரம்”

                                                   (அத்தி வரதர் வைபவம்)

பகுதி 16 திருவடிவும் திருவருளும்

     ஆபத்தில் உள்ளவருக்கு அடைக்கலம் அளிக்காமல் பெரும்பாவத்தைச் செய்ததால் தனது வாழ்க்கையே வீணாகிவிட்டதே என வாக்பதி வருந்தியபோது, பரத்வாஜரின் வார்த்தை அவருக்குப் பெரும் ஆறுதல் அளித்தது.  சத்யவ்ரதம் எனும் காஞ்சிக்கு வந்து சேர்ந்தார்.  உயர்ந்த காயத்ரீ மஹாமந்திரத்தை ஜபித்தார்.  அனந்தசரஸில் காயத்ரீ மந்த்ரஜபம் அனந்தமான – அளவிடற்கரிய புண்யத்தை அளிக்கக் கூடியது.  பல ஆண்டுகள் அவரின் தவம் தொடர்ந்து கொண்டிருந்தது.  ஒருநாள் மிகவும் ரம்மியமான மாலைப் பொழுது.  நல்ல இளவேனிற்காலம் மரங்கள் மதுதாரைகளைப் பொழிந்து கொண்டிருக்கின்றன.  பசு, பட்சி, முனிவர்கள் என அனைவரின் மனத்திலும் இனம் தெரியாத ஆனந்தம் விளைவிக்கும் அழகிய காலம்.

     புள்ளி மான்கள் ஒருபுறம் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கின்றன.  அழகிய மென்னடை அன்னங்கள் அனந்தசரஸில் அணிவகுத்து நீந்திக் கொண்டிருக்கின்றன.  அவ்வப்பொழுது அவைகளின் மதுரத்வனி மதிள்களில் படர்ந்திடும் போது கற்பாறைகள் கூட களித்திருக்கும் காலமது என்னும்படி எதிரொலித்தது.  கொடிய புலி, சிம்மங்கள் கூட தங்களின் பிணைகளிடம் புணர்ந்து களித்தன.  சிறந்த மகிழ மரத்தின் வாசனையை சுமந்து வந்த சுகமான காற்றினை நுகர்ந்து மனதடக்கம் பெற்ற மஹாயோகிகள்கூட நிலை தடுமாறினர்.  வசந்தருதுவினைத் துணையாகக் கொண்டு மன்மதன் அனைவரின் மனதையும் மயக்கினான்.

    ஆழமான அனந்தசரஸில் ஆயிரம் இதழ் தாமரைகள் பூத்து மணம் வீசின. செந்தாமரைக் கண்ணன் வரதனின் திருமுகமண்டலத்தைப் போன்று தாமரை இதழ்கள் தண்ணீரில் மெலிதாக அசைந்தன.  மந்தமாருதம் வீசிய வேளையில் மகிழ்ந்த கயல்கள் துள்ளியெழுந்து அத்தாமரைகளில் தங்கிக் களித்தன.  சிவந்த தாமரையினுள் கறுத்த கயல்களைக் காணும் போது வரதனின் செவ்விழிகளில் படர்ந்த கருமையாகக் காட்சியளித்தது.

    மா, பலா, புன்னாக, பாரிஜாத, மகிழ, சம்பக, மல்லி மரங்களும் கொடிகளும் பூத்துக் குலுங்கி தங்களின் பூக்களையும், தேனையும் திவ்ய புஷ்கரிணியில் சொறிந்தன.  அந்த பரிமளம் மிகுந்த தீர்த்தத்தில் ப்ருகஸ்பதி நீராடித் தவம் செய்து கொண்டிருக்கிறார்.  குயில்களும், கிளிகளும், கொக்கு முதலிய நீர் பறவைகளும் கலந்தெழுப்பும் ஒலி வரதனுக்கு சமர்ப்பிக்கப்படும் வேத கானமாகியது.

    ஆளரவமற்ற அடர்ந்த அந்த வனப்பகுதியில் மெலிதாகக் காலடி ஓசை கேட்டது. உலர்ந்த சருகுகளின் மீது மெதுவாகப் பாதம் வைத்து நடந்து வருவது ஸர்க், ஸர்க்…..” என ஒலித்தது.  அடர்ந்து படர்ந்திருந்த மாதவிப் பந்தல்களினூடே அவ்வொலி கேட்டதால், உருவம் கண்ணுக்கு இன்னமும் புலப்படவில்லை.  சருகுகள் மிதிபடும் ஓசையுடன் க்லிங்… கணங்…. ங்ருங்…. என ஆபரணங்கள் அசையும் ஓசையும் சேர்ந்து கொண்டது.  அந்நடையொலி ஒரு இசையொலி என்று கூடச் சொல்லலாம்.  காலடியின் கணிப்பைப் பார்த்தால் யாரோ இருவர் வருவது தெரிகின்றது.

    சூரிய கிரணங்கள் உட்புகாத அளவிற்கு அடர்ந்து பூத்திருந்த மாதவிப் பந்தலுக்குள்ளிருந்து வெளிப்பட்ட அந்த உருவங்கள், ஓர் ஆணும் பெண்ணும். அவர்களின் மேனியெங்கும் மகரந்தத்  துகள் படர்ந்திருந்தன.  கொடிகளின் ஊடே நடந்த போது அவைகள் பூமாரி பொழிந்தன போலும்.  சாமுத்ரிகா சாஸ்திரத்தின் சர்வ லக்ஷணங்களும் பொருந்தியவராக இருவரும் காணப்பட்டனர்.  இளவேனிற்காலமாகையால் அந்த இளஞ்சோடிகள் இன்பச் சுற்றுலா வந்துள்ளனர் போலும்.

    கொடி வீட்டிலிருந்து வெளிவந்ததுமே கதிரவனை மறைத்த ஒற்றை மேகம் இவர்களின் மீது வெயில் படாமல் காத்து மெல்லிய துளிகளை பன்னீராகத் தெளித்தது.  மேனியில் படர்ந்த மகரந்தத்துடன் இத்துளிகள் தேன்பெருக்காய்த் திகழ்ந்தன.

    நல்ல ஆஜானுபாகுவாக அவ்விளைஞன் நின்ற தோரணை ஒரு மிடுக்கினைத் தந்தது.  ஆண்கள் கூட அவன் அழகைக் கண்டால் அதிசயித்து நிற்பர். வேட்டையாட வந்தவன் போன்றிராமல் வசந்த காலத்தை அனுபவிக்க வந்தவனாகவே தெரிந்தது.  மேனியில் மெல்லிய ஆடை அணிந்திருந்தான். அதிகமான ஆபரணங்களின்றி அந்த மேனி எடுப்பாகத் தோன்றுவதால்,  ஏதேனும் த்ருஷ்டி வருமோ என எண்ணத் தோன்றியது! செஞ்சந்தனத்தை மார்பினில் பூசியிருந்தான்.  அதன் நடுவே ஆங்காங்கு சிறு சிறு கரும்புள்ளிகள் தென்பட்டன.  சந்தனத்தின் நடுவே கரும்புள்ளிகளா? சற்றே உற்றுக் கவனித்தால்தான் உண்மை புரியும் காதலி அடிக்கடி அவன் மார்பில் சாய்ந்து முகம் புதைக்க, அவளின் கண்களின் கருமை மார்பினில் ஒட்டிக் கொண்டு மின்னுகிறது.  கருத்த அவனது திருமேனியில் இவளது தழுவல், மேகத்தில் படர்ந்த மின்னல் போன்றிருந்தது. 

    அங்குமிங்கும் வட்டமிடும் கருவிழிகள், முகத்தில் எப்போதும் குடிகொண்டிருக்கும் ஒரு மந்தகாசம் ஒருவித அலட்சியத்தைக் காண்பித்தாலும், அவனிடம் ஒரு தெய்வீகத்தன்மை குடியிருந்தது.

    எல்லாவிதத்திலும் அவனுக்கு ஏற்றவள் என்று பறை சாற்றிக் கொண்டிருந்தன  அப்பெண்ணின் இயல்புகள்.   யானை வந்தால் என்ன, புலி சிங்கம் பாய்ந்தால் என்ன, என்னைக் காப்பாற்ற இந்தத் தோள்கள் உள்ளனவே!!….” என்னும் மனோபாவத்தால், அவனது பணைத்த தோள்களில் மெலிதாகத் தலை சாய்த்திருந்தாள்.  பெண்மையின் பூரிப்பு அவளது பருவத்தில் நிரம்பியிருந்தது. தனது வலது கையில் தாமரை மொக்கினை ஏந்தியிருந்தாள் ஒரு அடி அந்த புருஷனை விடுத்து முன்னே அவள் செல்ல முயன்ற போது, அவன் அவளது கைபிடித்து இழுத்தான்.

    காதலனின் கரம் பட்டதும் அந்நாரீமணியின் உடம்பு வியர்த்தது நாணத்தால் மெதுவாக நடுங்கியது என்றுமே அனுபவிக்கும் பாக்கியம் அவளுக்குண்டு என்றாலும் அவ்வப்பொழுது அவனின் ஸ்பரிசம், இவளின் மேனியில் புளகாங்கிதத்தைக் கொடுத்தது.  அப்படியே துவண்டு அவனது தோளில் சாய்ந்துவிட மாட்டோமா எனும் ஏக்கம் அந்தக் கண்களில் தெரிந்தது. தழுதழுத்த அவள் தவியாய்த் தவித்தாள்.  சற்றே ஏறி இறங்கிய தொண்டைக் குழி அந்த தள்ளாட்டத்தைத் தெளிவாக உணர்த்தியது.

    வியர்த்த அவளின் மேனியும், தாமரை மொக்கு போன்ற கைகளையும் பார்த்தால் தேனில் நனைத்த தாமரையை நினைவுறுத்தியது.  அவளின் அந்நிலை கண்டு மெல்லிதாக நகைத்தான் நாயகன்.  அதற்குள் அன்னமும், மயிலும் இவர்களின் வரவு கண்டு விரைந்து நெருங்கின.  அந்தப் பெண்ணின் நிலை கண்டு பரிதவித்துத் தங்களது இறகுகளாலும், தோகைகளாலும் பெண்ணின் வாட்டம் தணியும்படி விசிறின.  நாணத்தில் நிலை தடுமாறி நின்றவள், அப்பறவைகளின் நற்பணிக்குக் கண்களாலேயே நன்றி தெரிவித்தாள்.

    ஒருவர்க்கொருவர் கரம் பற்றிக் கொண்டே குளக்கரையில் உலவினார்கள். இந்த இளஞ்சோடியைக் கண்ட தேவகுரு மனம் பதைத்தார் பிள்ளைகாள்! இஃதென்ன விபரீதம்!! இந்த வனாந்தரத்தில் தனியாக உலவுகிறீரே! உங்களுக்கு ஏதாவது தீங்கு வரப் போகிறது… என பயந்தார்.  புன்னகைத்த அவ்விளைஞன், மகரிஷியே! தாங்கள் யார்?” என வினவினான் தேவகுருவும் தன் கதையை முழுதும் சொல்லி முடித்தார்.  அதன் பின்னர் அவ்விருவரும் அவரிடம் விடைபெற்றுச் சென்றனர்.  வந்தது வரதனும் பெருந்தேவியுமே என்பதை முனிவர் அறியவில்லையே! அது தேவகுருவும் அறியாத ரகசியம்!!. தேவாதிதேவன் ரகசியம்!!.

    இப்படி த்ரேதா யுகத்தில் ப்ருகஸ்பதி அவருடைய பாப விசேஷத்தின் காரணத்தாலே தனக்குக் காட்சியளித்த எம்பெருமானையும் உணராமல் காலம் கழித்து வந்தார்.  இதன் நடுவே அதே த்ரேதா யுகத்தில் மற்றொரு சம்பவமும் நடைபெற்றது.  அது, வரதனுக்கு கஜேந்த்ர வரதன் எனும் பெயரைப் பெற்றுத் தந்தது. 

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

                       

                                Varam Tharum Maram

(Athi Varadar Vaibhavam)

Part 16 – Beauty and the Blessings

    Brihaspathi repented his mistake of not protecting the dog that came to him for refuge. Finding solace in sage Bharadwajar’s words, Brihaspathi reached Sathyavratam and started chanting the powerful Gayathri Mantram. In fact, chanting this mantram while taking a dip in Anantasaras can give enormous benefits. And it helped Brihaspathi too as he continued his penance for many years. 

    Once, Brihaspathi was enjoying a pleasant evening during the spring season when leaves and flowers were in full bloom. The deer were frolicking in one direction while the swans were sauntering on the Anantasaras lake in the other direction. Their gentle cries filled the air and it was really beautiful and pleasant everywhere.  There were a thousand lotuses on the Anantasaras lake and the small buds resembled the rosy lips of Varadan.

    Flowers and nectar from trees and creepers such as jackfruit, mango, parijatham, sampangi and jasmine fell into Anatansaras, thereby making it even more fragrant. The happy chirping of Cuckoo, parrots and other birds filled the air and they were the Vedas that were offered to Varadan.

    This season created a sense of calmness among the birds, animals, and sages who lived in Kanchi and Brihaspathi also felt this tranquility.  The air was filled with scents from different flowers and such sensory pleasures rattled even the sages. 

    Amidst such beauty, a gentle walking sound was heard. “Sark, sark….” was the sound that emanated as if someone was walking through the dense foliage. Along with it, “kaling..kanang…” and other sounds that resembled the rattling of jewels was also heard. It felt as if two people loaded with jewels were coming to this isolated part of the world, but then no form was visible. 

    As the rays of the sun penetrated through the thick jungle, a form of a man and a woman became visible. Their skin was covered with pollen particles and as they walked, these pollen particles scattered everywhere like flower petals. They had all the qualities mentioned in Samudrika Sastram and it looked as if they were taking a stroll to enjoy the beauty of this season.

    A small cloud blocked the sun’s rays from falling on them and sprinkled a few drops of rain as if to welcome them with rose water. When these water droplets fell on their skin, it mixed with pollen and glistered like honey.

    The majestic looks of the man is sure to put even the most fittest men to shame. he didn’t look like a hunter, rather he looked like someone who had come to enjoy the beauty of Spring at Sathyavratam. He was wearing light clothes and just a few jewels, but the sparkle and beauty of his body was breathtaking. He had applied sandalwood on his chest and there were a few black spots on it. You may wonder how come there are black spots in the midst of sandalwood?

    Well, if you look closely, you’ll understand. As his partner rested on his shoulders often, the kajal from her eyes were the black spots on the sandalwood. Every time when she rested her head on his shoulders, it resembled a streak of lightning on a rain-filled cloud. 

    Though his darting eyes and a slight smile gave a sense of indifference, there was no denying the divinity that oozed out from it. And his partner was the perfect match for him in every aspect. She felt relaxed in his presence and did not seem to worry about elephants, lions, or other wild animals attacking her. After all, his broad shoulders are enough to protect her from anything.

    Femininity was present wall over her as she gently held a lotus in one hand. When she tried to go one step ahead, the man clasped her other hand and pulled her back gently. The touch of her partner’s hand created a flutter in her heart and she shivered mildly with shyness. Though she had him for life, every touch created a new sensation in her.  Her eyes showed that she badly wanted to rest her head on his broad shoulders.

    Her gentle skin and the way she held the lotus bud reflected her grace and beauty. The gentle shiver that ran through her body made her glisten like gold and the man smiled gently looking at her in this state. Even the peacocks and swans noticed her shivering and they tried to cover her with their feathers to help her regain her composure. When she came back to her normal self, she thanked the birds with her eyes.

    They kept walking through the place with their hands held together. Seeing this couple, Devaguru felt apprehensive. “O children! Why are both of you walking through this jungle? Do you know how dangerous it is?” Smiling at these words, the man said, “O great sage! Who are you?”

    Devaguru poured out his story to the young couple, after which they left the place. Brihaspathi failed to realize that this couple is none other than Varadan and Perundevi Thayar. In fact, it is a secret that the Devaguru failed to comprehend. 

    Thus, due to his sins, Brihaspathi failed to realize Perumal even when He appeared before him and continue to spend his life.

    During this same Treta yugam, another incident happened that gave Varadan the name “Gajendra Varadan.”

Translation by Sri APN Swami’s Shishyas based on the original Tamil article by Sri #APNSwami

VTM Poster5

Leave a comment