Sri #APNSwami #Writes #Trending | சீதை விடுத்த சவால் #10YearsChallenge

சீதை விடுத்த சவால்

Ram’s #10YearsChallenge

ஸ்ரீமத்ராமாயணத்தில் ராமன் காட்டிற்கு கிளம்பும் பொழுது, தானும் உடன் வருவேன் என்று சீதாதேவி பலபடியாக நிர்பந்தம் செய்கின்றாள். ராமன், காட்டில் உள்ள கஷ்டங்களை எடுத்துக் கூறியும், சீதை பிடிவாதமாக தான் உடன் வருவேன் என்று நிர்பந்தித்து ராமபிரானிடத்தில் ஒரு விஷயத்தை கூறுகிறாள்.

“ஹே ராமா! உன் தந்தையார் அழைத்தபோது, நீ சென்று அவரை பார்த்து விட்டு வந்தாய் அல்லவா?  இது ஒரு முகூர்த்த காலம். அதாவது,  மிகக் குறைந்த ஒரு கால அவகாசம். இந்த சமயத்தில் கூட உன்னுடைய பிரிவை பொறுக்க முடியாமல் தவிக்கும் நான்,  எவ்விதம் உன்னை பிரிந்து பத்து ஆண்டுகளும், மூன்று ஆண்டுகளும், ஒரு ஆண்டும் மொத்தம் பதினான்கு ஆண்டுகள் வசிக்க முடியும்” என்கிறாள்?

இங்கே ராமனிடத்தில் சீதை சொல்லும் இந்த பதினான்கு ஆண்டுகளின் கணக்கு மிக விசித்திரமாய் அமைந்திருக்கிறது. “ஒட்டு மொத்தமாக பதினான்கு ஆண்டுகள் உன்னை பிரிந்து, எப்படி இருப்பேன்?” என்று கேட்கவேண்டி இருக்க,  பத்து ஆண்டுகள், மூன்று ஆண்டுகள், ஒரு ஆண்டு என்று தனித்தனியாக அவள் குறிப்பிடுகிறாள். அப்படியானால் இதன் பின்னனியில், சீதை ராமனிடத்தில் எதையோ சொல்ல வருகிறாள். அதாவது இங்கே எதையோ ராமனுக்கு மட்டும் புரியும் படி சீதை சொல்லுகிறாள் என்பதை நாம் உணரலாம்.

இனி நாம் ஆரண்ய காண்டத்திற்கு வரலாம்.

ஆரண்ய காண்டத்தில் முதன் முதலில் ராமனும் சீதையும் லக்ஷ்மணனும் உள்ளே நுழைகிறார்கள். அப்பொழுது, பல மஹரிஷிகள் வந்து, பெருமானிடத்தில் சரணாகதி செய்கிறார்கள். “ஹே ராமா! காட்டில் இருந்தாலும் ராஜ்ஜியத்தில் இருந்தாலும், நீயன்றோ என்றுமே எங்கள் தலைவன்.” என்பதை அந்த மஹரிஷிகள் தெரிவிக்கின்றார்கள். இப்படி மஹரிஷிகள் ராமபிரானிடத்தில் சரணாகதி செய்கிறார்கள்.

அதன் பின்னர் ‘விராத வதம்’. அதாவது விராதன் சீதையை கவர்ந்து செல்கிறான்.  பின்னர் ராம லக்ஷ்மணர்களை தூக்கிச் செல்கிறான். அந்த ராம லட்சுமணர்கள் விராதனை வதம் செய்கிறார்கள். சாபத்தினாலே கோரமான உருவம் கொண்ட விராதன், ராமபிரானால் தன் நிலையுணர்ந்து அதாவது தனக்கு சாப விமோசனம் ஏற்பட்டு,  பெருமாளை ஸ்தோத்திரம்  செய்கிறான்.

அதற்குப் பிறகு, சரபங்கருடைய ஆசிரமத்திற்கு செல்கிறார்கள். ராமனை சேவித்துவிட்டு சரபங்கர் தன் தேகத் தியாகம் செய்கிறார். அவர் சொர்க்கத்திற்க்குச் செல்வதை ராம லட்சுமணர் சீதை பார்க்கிறார்கள். இது முடிந்து, மறுபடியும் ஆறாவது சர்க்க த்தில் அனைத்து மஹரிஷிகளும் வந்து – தண்டகாரண்யம், பஞ்சவடி, சித்திரக்கூடம் போன்ற இடங்களில் உள்ளதான அனைத்து மஹரிஷிகளும்  ஒன்று திரண்டு வந்து ராமனிடத்தில் மீண்டும் சரணாகதி செய்கின்றார்கள். அப்பொழுது ராமபிரான் அவர்களை தான் காப்பதாக அபயப் பிரதானம் செய்கிறார். ராக்ஷஸர்களை வதம் செய்து, மஹரிஷிகளை ரக்ஷிப்பதாக ராமன் அங்கே ப்ரதிஞை செய்தான்.

அதன் பின்னர் அவர்கள் மூவரும் சுதீக்ஷணருடைய ஆசிரமத்திற்கு செல்கின்றார்கள். அங்கே அழகியதான அந்த ஆசிரமத்தில், அவர்கள் சில காலம் ஆனந்தமாக வசிக்கின்றார்கள்.  பின்னர் சுதீக்ஷணர் இடத்தில் விடைபெற்றுக்கொண்டு ராமன் கிளம்புகிறான். அப்பொழுது சீதாதேவி ராம லக்ஷ்மணர்களுக்கு வில் மற்றும் கூர்மையான அம்புகள் இவற்றை எடுத்து கொடுக்கிறாள். அழகியதான வில்லை கையில் ஏந்தியவர்களான இவர்கள் இருவரும், சீதையுடன் கிளம்பினார்கள் என்று வால்மீகி அங்கே வர்ணிக்கிறார்.

பின்னர், ஒன்பதாவது சர்க்கத்தில், ப்ரயாணத்தில்  அவர்கள் தனியாக இருக்கும் பொழுது ஏறத்தாழ ராமனும் சீதையும் தனிமையில் இருக்கக்கூடிய சந்தர்ப்பம் என்பதாக நாம் வைத்துக் கொள்ளலாம். சீதை ராமனிடத்தில் மெதுவாக பேச ஆரம்பிக்கிறாள்.

“ஹே ராமா!  நீ காட்டிற்கு வரும்பொழுது நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த காட்டில் அமைதியான ஒரு வாழ்க்கை நமக்கு  கிடைக்கப்போகின்றது  எனும் ஆனந்தத்தில் உன்னுடன் வந்தேன்.  ஆனால், தற்போது வில்லையும் அம்பையும் கையில் ஏந்தியிருப்பதை பார்க்கும்போது என் மனம் வேதனைப்படுகிறது.  நல்ல மஹரிஷிகளும் தபோதனத்தனர்களும் மஹான்களும் நிறைந்திருக்கக்கூடிய காடு இது. இந்தக் காட்டில் நாம் பரம சுகமாக வசித்து வருகிறோம்.  நீ மஹரிஷிகளுக்கு அபய ப்ரதானம் செய்ததை நான் பார்த்தேன். ராமா நான் சிறு வயதிலேயே உன்னை மணந்து கொண்டு உன்னுடன் வந்துவிட்டேன். உனக்கு தர்மத்தை நான் உறைக்கலாகாது,  இருந்தாலும் என் மனதில் பட்டதை சொல்கிறேன். நீயோ உயர்ந்தவன். ஒரு பொழுதும் பொய் பேச மாட்டாய். பிறர் மனைவியை ஏறெடுத்தும் பார்க்கமாட்டாய். அது போன்றே ஜீவ காருண்யம் மிக்கவன் அல்லவா? அத்தகைய நீ, நமக்கு எவ்வித துன்பமும் விளைவிக்காத ராக்ஷஸர்களுக்கு, அதாவது நம்மை துன்புறுத்தாத ராக்ஷஸர்களை கொல்கிறேன் என்று  ப்ரதிக்ஞை செய்துள்ளாய் அல்லவா? மஹரிஷிகளை காப்பாற்ற வேண்டியது தர்மம் என்றால் கூட, நமக்கு எந்த தீங்கும் இழைக்காத அந்த ராக்ஷஸர்களை கொல்கிறேன் என்று, நீ சொல்லியிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  ராமா! இந்த கூர்மையான வில், அம்பு கையில் வைத்திருந்தால் எவரையாவது அடிக்க வேண்டும், கொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அமைதியான இந்த ஆரண்யத்தில் எதற்காக அதிரடியாக ஆயுதங்கள்?  ஹே நாதா! பெண்மையின் புத்தியினால் நான் உன்னிடத்தில் சில வார்த்தைகள் பேசி விட்டேன். உண்மையில் உனக்கு தர்மத்தை சொல்வதற்கு யார் சமர்த்தர்கள்?  ஒருவேளை நான் சொல்லும் வார்த்தையில் ஒப்புக்கொள்ளும்படியான விஷயங்கள் இருந்தது என்றால், எல்லா விதத்திலும் உனக்கு தகுந்தவனாக உள்ள இளையபெருமாளாம் லக்ஷ்மணனுடன் ஆலோசித்து நீ தீர்மானம் செய்வாயாக” என்று மெதுவாக ராமனிடத்தில் தன்னுடைய கருத்துக்களை எடுத்துரைத்தாள்.

இதன் மூலம்,  என்ன தெரிகிறது என்றால், மஹரிஷிகளை ரக்ஷிப்பதாக ராமன் செய்த சத்திய பிரதிஞை, ராக்ஷஸர்களை கொல்வதற்கு காரணமாகிறது என்னும் காரணத்தினால், அனாவசியமாக  அவர்களை கொல்வது தகாது என்று சீதை தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளதை நாம் இங்கே அறியலாம்.

     உண்மையில் ராமனின் சரணாகத ரக்ஷகத்தின் உறுதியை சீதை சோதிக்கிறாள்.  Challenge!

அப்படி பொருள் பதிந்த வார்த்தைகளை சீதாதேவி தொடுத்து, ராமன் பதில் சொல்வதற்காக காத்திருந்தாள். அதற்கு அடுத்த சர்கத்தில், ராமன் பதிலுரைக்கிறான்.

“பெண்ணே! நீ என் மனதிற்கு இனியவளே! என்றுமே என் நன்மையில் நோக்குடையவள். என் மீது உனக்குள்ள ப்ரேமம் அலாதியானது என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன். ஆனால் மஹரிஷிகளை, கண்டாய் அல்லவா?  அவர்கள் ஒவ்வொருத்தரும், எவ்வளவு துன்பத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள் என்று பார்த்தாயா? ராக்ஷஸர்கள் பலம் வாய்ந்தவர்களாக, இந்த மஹரிஷிகளை எல்லாம் பெரும் துன்பத்தில் உட்படுத்தி வருகிறார்கள். அவயவங்களை இழந்தும், ஆச்ரமங்களை இழந்தும், மஹரிஷிகள் துன்பப்படுகிறார்கள். ஆனால், அதே சமயம் தபோதனர்களான அவர்கள், காமக்ரோதங்களுக்கு வசப்பட்டு அந்த ராக்ஷஸர்களை சபித்து விடவில்லை. ஏன் தெரியுமா?  தங்கள் தவ வலிமையை சேமித்து வைத்துக் கொண்டு, ப்ரஹ்மலோகத்தை அடைவதற்காக அவர்கள் காத்திருக்கின்றார்கள். அப்பொழுது என்னை போன்ற க்ஷத்ரியர்கள்,  தபோதனர்களை, சாதுக்களை ரக்ஷிக்க வேண்டாமா?  சீதை, என் உயிரை விட்டாலும் விடுவேன், என் உயிரினும் மேலான உன்னை விட்டாலும் விடுவேன், இதோ லக்ஷ்மணன், பரத, க்ஷத்ருக்குநர்களை விட்டாலும் விடுவேன், ஒரு பொழுதும் சாதுக்களை ரக்ஷிக்கிறேன் என்று சொன்ன என் வார்த்தையை, வாக்குறுதியை கை விடமாட்டேன்” என்று ராமபிரான் சூளுரைத்தான்.

அதன் பின்னர், சீதா தேவி எதுவும் பேசவில்லை. சீதை ராமனின் உறுதி கண்டு வியந்தாள்.

பின்னர் மீண்டும் வில்லுடன் கூடிய ராமன் அங்கிருந்து அகஸ்தியர் ஆச்ரமம் நோக்கி புறப்படுகிறான். இங்கு தான் ப்ரணவத்தின் அர்த்தமாக, அதாவது “அ, உ, ம”  என்பதை விளக்கும் வகையில், “அ” என்பதின்  பொருளாக  ராமனும், “உ” என்பதின்  பொருளாக சீதையும், “ம” என்பதின்  பொருளாக லக்ஷ்மணனும், அந்த காட்டில் நுழைந்ததை வால்மீகி வர்ணிக்கிறார். வால்மீகியால் சொல்லப்படும் அந்த அற்புதமான ச்லோகம்

அக்ரத: ப்ரயயௌ ராம: ஸீதா மத்யே ஸூமத்யமா

ப்ருஷ்டதஸ்து தநுஷ்பாணி: லக்ஷ்மண: அனுஜகாம ஹ

ஸ்வாமி வேதாந்த தேசிகனின் மாமா அப்புள்ளார் ப்ரணவத்தின் பொருளாக நமக்கு இந்த ச்லோகத்தை விளக்கி அருளுகிறார். இப்படி வால்மீகி “ஹ!” என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு ராமன் முன்னேயும், அவரை தொடர்ந்து சீதை நடுவிலும், இலக்குவன் மூன்றாவதாக சென்றனர்.

     அகஸ்தியர் ஆச்ரமத்தில், மஹரிஷியின் விசேஷங்களை எல்லாம் கேள்விப்பட்டு ஆனந்தம் அடைகின்றார்கள். வாதாபி இல்வலன் என்னும் அசுரர்களை அகஸ்தியர் அழித்த ப்ரபாவத்தையும், விந்தியமலையின் கர்வத்தை அகஸ்தியர் அடக்கியதையும், சமுத்திரத்தின் தண்ணீரை அகஸ்தியர் ஆசமனம்  செய்த கதையையும் அறிந்து, இவர்கள் மிகுந்த ஆச்சர்யம் அடைகிறார்கள். அகஸ்தியர் இவர்களுக்கு கோதண்டம் என்னும் வில்லையும், தெய்வீக பாணங்களையும் அளிக்கிறார். பின்னர் அவர்கள் பஞ்சவடிக்கு செல்கிறார்கள்.

இந்த இடைப்பட்ட காலங்களில், பல மஹரிஷிகளின் ஆச்ரமங்களில் ராமா லக்ஷ்மண சீதை வசித்து வருகிறார்கள். இப்படியாக ஒரு பத்து வருடம் கழிந்து விடுகிறது. பின்னர் அவர்கள் பஞ்சவடிக்கு செல்கிறார்கள்.  அங்கே ஜடாயுவை முதலில் காண்கின்றனர். சில காலம் பஞ்சவடியில் வசிக்கும் பொழுது தான் சூர்ப்பனகை வருகிறாள். அந்த சூர்ப்பனகை, ராமனிடத்தில் தன் காதலை தெரிவிக்கின்றாள். லக்ஷ்மணனால் மான பங்கம் செய்யப்படுகிறாள். அதன் பின்னர் கர தூஷணர்கள் வருகிறார்கள். ராமபிரான் தான் தனி ஒருவனாகவே கர தூஷணர்களை எதிர்த்து வெற்றி பெறுகின்றான். இதுவரையிலும் நாம் இங்கே நிறுத்திக்கொள்ளலாம்.

இனி சீதை ராமனுடன் காட்டுக்கு வருவேன் என்று சொன்ன சமயத்தில் சொன்ன ச்லோகத்தின் பொருளை மறுபடியும் ஆராயலாம்.   ஒரு வேளை  இது தான் அந்த #10yearChallenge ஆக  இருக்குமோ?

அதாவது சீதை முதலில் சொன்ன வார்த்தை “தந்தையை பார்க்க சென்ற சமயத்தில் கூட உன்னுடைய பிரிவை பொறுக்க முடியாமல் தவிக்கும் நான்,  எவ்விதம் உன்னை பிரிந்து பத்து ஆண்டுகளும், மூன்று ஆண்டுகளும், ஒரு ஆண்டும் மொத்தம் பதினான்கு ஆண்டுகள் பிரிந்து இருக்க முடியம்?” என்பதாகும்.

ஸ்ரீராமபிரான் சரணாகத ஸம்ரக்ஷகன். சரணமாக அடைக்கலம் வந்தவர்களை காப்பாற்றுபவன். அவனுடைய அந்த விரதங்களில் பரிபூரணமான ஒத்துழைப்பு நல்கி, அனைவரும் பெருமாளை அணுகும் படி செய்பவள் மங்கள தேவதையான சீதா தேவி.

இவர்கள் இருவரும் வைகுண்டத்திலிருந்து பூலோகத்தில் அவதரிக்க கிளம்புவதற்கு முன்னதாக, பூலோகத்தில் ராமாவதாரத்தில் என்ன என்ன செய்யவேண்டும் என்று தீர்மானித்து கொண்டார்கள். அதன் படி, சீதை ஜனகருக்கு பிறக்க வேண்டியது, ராமபிரான் வில்லை முறித்து அவளை மணம் முடிக்கவேண்டியது, பின்னர் பன்னிரெண்டு ஆண்டுகள் அயோத்தியில் இருவரும் சுகமாக வசிக்கவேண்டியது, கைகேயி கேட்ட வரம் என்னும் ஒரு காரணத்தினால் இருவரும் சேர்ந்து காட்டுக்குச்  செல்ல வேண்டியது, மஹரிஷிகள் செய்த தவத்தினால் காட்டில் அவர்களுடன் வசிக்க வேண்டியது, பின்னர் பஞ்சவடியில் மூன்று வருடம் வசிக்க வேண்டியது, பின்னர் ராமனும் சீதையும் பிரிந்து ஒரு வருடம் வசித்தால் தான், ராவணனை கொல்வது என்று ஏற்பாடு.

“இப்படி ஒப்பந்தத்தின் அடிப்படையில் பூமியில் அவதரித்து, ராமா இப்பொழுது என்னை விட்டு நீ தனியாக சென்றால், இந்த பத்து, மூன்று, ஒன்று என்ற கணக்கின் படியாக எவ்விதம் உன்னால் ராவண வதம் செய்ய முடியும்” என்று சீதை கேட்டதை புரிந்து கொண்ட ராமன், அவளை காட்டிற்கு உடன் அழைத்து வந்தான். என்ன புரிகிறதா?

இதற்கு பிறகு சீதை ராமபிரானை மீண்டும், பரிசை செய்கிறாள். மஹரிஷிகள் தங்களை காக்கும் படி ராமபிரானிடத்தில் சரணாகதி செய்தார்கள். ராக்ஷஸர்களை கொன்று, அவர்களை ரக்ஷிக்கிறேன் என்றான் ராமன். அதை சீதை ஆக்ஷேபம் செய்தாள். “நமக்கு எவ்வித தீங்கும் செய்யாத ராக்ஷஸர்களை கொல்கிறேன் என்று ராமா நீ சொன்னது எவ்விதத்தில் ஏற்புடையது?” என்பது சீதையின் ஆக்ஷேபம் அல்லவா?

உண்மையில் சீதைக்கு உரிய பதிலை ராமபிரான் சொல்லவில்லை. மஹரிஷிகளை காப்பாற்றுவதாக, தான் கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று தான் ராமன் பதில் சொன்னானே தவிர்த்து, நமக்கு தீங்கு செய்யாத ராக்ஷஸர்களை நீ கொல்வது எவ்விதம் தகும் என்றதற்கு ராமபிரான் அங்கு நேரடியாக பதில் சொல்லவில்லை. ஏனென்றால் சீதை கேட்டது முழுக்க முழுக்க சரியான ஒரு கேள்வி. தன்னிடத்தில் உள்ள நற்பண்புகளை பட்டியலிடும் சீதை, முதலில் பொய் உரைக்காதவன் ராமன், பின்னர் பிறர் மனை நோக்காதவன் ராமன், அது போன்றே ஜீவ ஹிம்சை  செய்யாதவன் ராமன் என்று மூன்றாவது காரணத்தை சொல்லி ராக்ஷஸர்களை ஏன் கொல்ல வேண்டும் என்பதாக கேள்வி எழுப்பினாள் அல்லவா? இந்த நுட்பத்தை நன்கு புரிந்து கொண்டவனான ராமன், பத்து  வருடங்கள் பொறுமையாக காத்து இருந்தான்.   சீதையின் கேள்விக்கு பதிலளிக்க ராமன் மேற்கொண்டது #10YearsChallenge .

சரபங்கர், சுதீக்ஷணர், அகஸ்தியர் இது முதலானோர் ஆச்ரமங்களில் ராமபிரான் பத்து ஆண்டுகள் வசித்து வந்தான். இந்த பத்து ஆண்டுகள் எங்குமே ராக்ஷஸ வதம்  சொல்லப்படவில்லை. ஒரு ராக்ஷஸனை கூட ராமபிரான் கொன்றதாக சொல்லப்படவில்லை. பத்து ஆண்டுகள் உருண்டு ஓடின.  ராமபிரான் சத்தியத்தை காப்பாற்ற வேண்டும். அதே சமயம் சீதையின் வார்த்தைக்கும் மதிப்பு அளிக்க வேண்டும். அப்படியானால் எப்படித் தான் ராமன் அதை சமாளித்தான்.

இது உண்மையிலேயே ராமபிரானுக்கு சீதை விடுத்த சவால். ஒரு புறம் உயிரைவிட்டாவது சத்தியத்தை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கிறான் ராமபிரான். மற்றோரு புறம் சீதை கேட்ட நியாயமான கேள்வி. தனக்கு மிகவும் பிரியமானவளும், தன் உயிரைவிட மேலானவளுமான சீதையின் கேள்விக்கும் மதிப்பளிக்க வேண்டும். இது தான் தர்ம சங்கடம் என்பார்கள் அல்லவா?

ஸ்ரீராமபிரான் நடுவில் அந்த பத்து ஆண்டுகள் பொறுமையாக காத்து இருந்தான். ஏன் ? மஹரிஷிகளின் ஆச்ரமங்களில் ராமபிரான் நல்லதொரு பாடம் பயின்றான் என்று சொன்னாலும் அது மிகையில்லை. பத்து ஆண்டுகள் உருண்டோடின. அகஸ்தியர் ஆச்ரமத்துக்கு சென்றபோது அகஸ்தியர் செய்த சரணாகத ஸம்ரக்ஷணம்,  அவர் தம் சரித்திரத்தின் வாயிலாக பிராட்டிக்கு எடுத்துரைக்கப்பட்டது. வாதாபி இல்வலனர்களை கொன்றது,  விந்திய மலையின் கர்வத்தை அடக்கியது, சமுத்திரத்தை வற்றச்செய்தது அனைத்தும் லோக க்ஷேமத்திற்காக அகஸ்தியர் செய்தது. இதனால் மஹரிஷிகளை சாதுக்களை காப்பாற்றுவதற்கு ராமனின் முயற்சி நியாயப்படுத்தப்பட்டதாகிறது. ஏற்கனவே இது போன்ற நிகழ்ச்சிகளை சாதுக்கள் நடத்தியுள்ளதை சீதைக்கு எடுத்துரைக்க, ராமன் அகஸ்தியர் ஆச்ரமம் சென்றான் போலும்.

பத்து ஆண்டுகளாக ராக்ஷஸர்களை கொல்லாத  காரணத்தினால், மஹரிஷிகளுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை ராமனுக்கு நினைவுறுத்தும் படியும், அடுத்து வரும் யுத்ததிற்கு ராமனை தயார் செய்யும் விதமாக, அகஸ்தியர், வில் மற்றும் அம்புகளையும் அம்பறாத்துணிகளையும் ராமனுக்கு கொடுத்தார்.

சீதையின் வார்த்தைக்கு கட்டுப்பட்டவனான ராமன், பஞ்சவடிக்கு சென்று அங்கு காத்திருந்தான். முதலில் பத்து வருடங்கள் தண்டகாரண்யத்தில், அடுத்த மூன்று வருடங்கள் சீதை சொன்ன கணக்கின் படியாக, ராக்ஷஸர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் பர்ணசாலை அமைத்து தங்கினர்.

அவன் எதிர்பார்த்தது நடந்தது. சூர்ப்பனகையின் மூலமாக கர தூஷணர்கள் வந்தார்கள். ஒரே சமயத்தில் ஜனஸ்தானத்தில், பதினான்காயிரம் ராக்ஷஸர்கள் ஒன்று கூடினார்கள். அப்பொழுது ராமபிரான் சீதையினிடத்தில் சொல்லாமல் சொன்னான். ஆம், அங்கே சொல்லழகைக் காட்டாமல், ராமன் தன்  செயலழகை காட்டினான்.

“இதோ சீதை, பதினான்காயிரம் ராக்ஷஸர்கள் ஒன்று திரண்டு நம்மை எதிர்க்க வந்திருக்கிறார்கள், பதினான்கு ஆண்டுகள் நாம் காட்டில் வாசிப்பதற்காக கிடைத்த வாய்ப்பு இது. நமக்கு எந்த தீங்கும் செய்யாத ராக்ஷஸர்களை உன் சொற்படி எதுவும் செய்யவில்லை, ஆனால் இப்பொழுது அவர்களாக எதிர்த்து வந்திருக்கிறார்கள். நம்மை கொல்ல துணிந்து ஆயுதத்துடன் எதிர் நிற்கிறார்கள். உயர்ந்த க்ஷத்திரியன் தன்  பராக்கிரமத்தை இது போன்ற நேரத்தில் செயல் படுத்த வேண்டுமல்லவா?” என்று தன்  புன்னகையினாலேயே சீதைக்கு புரிய வைத்தான் ராமன்.

பின்னர், தனி ஒருவனாக தான் ஒருவன் மட்டுமே சென்றான். ஏனென்றால் இது அவன் ஒருவனுக்கு மட்டும் விடுக்கப்பட்ட சவால் தானே. அதனால் லக்ஷமணன் இல்லாமல் தான் ஒருவன் மட்டும் சென்று ஜனஸ்தானத்தில் இருந்த பதினான்காயிரம் ராக்ஷஸர்களை வென்று கொன்றான். இதை கண்டதும் ஆனந்தத்தில் திளைத்த சீதாதேவி க்ஷத்ருக்களை ஜயித்தவனுமான , மஹரிஷிகளுக்கு சுகத்தை அளிப்பவனுமான விஜயராகவனாக விளங்கும் ஸ்ரீராமபிரானுக்கு,  பத்து  ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்த சவாலை ராமன் ஜயித்ததினாலே, ஓடி வந்து ஆரத்தழுவிக்கொண்டு,  தன் திருமேனியால் ஆரத்தி வழித்தாள். சீதை அந்த ஆனந்த தழுவலை வெற்றி வீரனான ராமனுக்கு பரிசாக அளித்தாள்.

இப்படி #10Yearschallenge ல் வெற்றி பெற்ற ராமன், விஜயராகவன் தானே!

     இப்படி சீதை விடுத்த #10Yearschallenge ல் வெற்றி பெற்ற  விஜயராகவனை சேவித்தால் நாமும் நம் சவால்களில் வெற்றி பெறலாம்.

இப்படிக்கு,

அன்புடன்

ஏபிஎன்

Sri #APNSwami

19-Jan-2019

 

5 thoughts on “Sri #APNSwami #Writes #Trending | சீதை விடுத்த சவால் #10YearsChallenge

  1. R.Srinivasavaradhan January 19, 2019 / 6:59 pm

    Athi
    Arputham

    Liked by 1 person

  2. vasudhar January 20, 2019 / 12:11 am

    படிக்கும் போதே ஸ்வாமியின் குரல் காதில் ஒலிக்கிறது. பெருமாளின் திருவுள்ளம் பிராட்டியே அறிவார்

    Liked by 1 person

  3. krish venkates January 22, 2019 / 6:29 pm

    வாழ்த்த வார்த்தைகள் இல்லை…………… Ultimate

    Like

Leave a comment