Sri #APNSwami #Writes #Article | ராமானுஜ தயா பாத்ரம் தேசிகனின் வைபவத்தின் வைபவம்

ஸ்ரீ:
ஸ்ரீமதேராமாநுஜாயநம:
ஸ்ரீமதேநிகமாந்தமஹாதேசிகாயநம:

ராமானுஜ தயா பாத்ரம் – தேசிகனின் வைபவத்தின் வைபவம்
ஸ்வாமி தேசிகனின் வைபவத்தை நாம் அறிந்திடவும், அதனை பகிர்ந்திடவும் முயற்சித்தல், எளிதான செயல் அன்று.ஸ்வாமியின் வைபவத்தின் வைபவம் அத்தகையதாகும்.
ஸ்வாமி பாதுகா ஸஹஸ்ரத்தில், பாதுகையின் ப்ரபாவத்தை கூறும் பொழுது, “ஆகாயம் முழுதும் காகிதமாக கொண்டு, ஏழு ஸமுத்ரங்களை மையாக கொண்டு, 1000 தலைகள்மற்றும்கண்கள் கொண்ட அந்த பரந்தாமனே வந்து எழுதினால், ஒரு வேளை எழுத முடியுமோ என்னவோ” என்று சாதிக்கின்றார்.
निश्शेषमम्बरतलं यदि पत्रिका स्यात् सप्तार्णवी यदि समेत्य मषी भवित्री ।
वक्ता सहस्रवदनः पुरुषः स्वयं चेत् लिख्येत रङ्गपतिपादुकयोः प्रभावः।। 3.2
இது பாதுகைக்கு மட்டும் இன்றி, பாதுகா சேவகராம் ஸ்வாமி தேசிகனுக்கும் உபலக்ஷணம். ஸ்வாமியின் பெருமையின் ப்ரபாவமும் அப்படியே ஆகும்.

ஸ்வாமி தேசிகன், பல க்ரந்தங்களை, பல மொழிகளில் அருளியுள்ளார். தேசிகனின் ப்ரபாவத்தையும், க்ரந்தங்களையும் அறிந்து கொள்ள நம் ஆயுள் போதாது. ஆயினும்தேசிகனின் ஒரு பாசுரம் பயின்றாலே, அது நமக்கு பரமபதத்திற்கு சோபானமாக(அதாவது படியாக) அமையும். இதையே, “ஓர் ஒன்று தானே அமையாதோ, தாரணியில் வாழ்வோருக்கு வானேற போமளவும் வாழ்வு” என்று ஸ்வாமி தேசிகனின் தனியனிலும் அறிகிறோம், போற்றி துதிக்கின்றோம்.

தேசிக அடியாரின் ரஹஸ்ய த்ரயம்: 
நம் ஸம்ப்ரதாயத்தில், தத்வ த்ரயம், ரஹஸ்ய த்ரயம் போன்ற விஷயங்களை காணலாம்.தேசிகனின் அடியார்கள் அறிய வேண்டிய மூன்று விஷயம் என்ன என்றால் அது தேசிகனின் மூன்று தனியன்களே ஆகும். அவையாவன,
1. ஸ்ரீ நயினாராசார்யர் அருளிச்செய்ததனியன்:
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்கிககேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
2. ஸ்ரீ ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர ஸ்வாமி அருளிச்செய்ததனியன்:
ராமானுஜ தயாபாத்ரம் ஜ்ஞாந வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேசிகம் ||
3. பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்ததனியன்:
சீர் ஒன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழமொழியுள் – ஓர் ஒன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு.

ராமானுஜ தயா பாத்ரம்தனியன் அவதாரம்:
ஒரு சமயம் ஸ்வாமி தேசிகன், தன் குமாரர் வரதாசார்யர், ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ரர் மற்றும் சிஷ்யர்கள் சூழ, திருநாராயணபுரம் /மேல்கோட்டை எழுந்தருளினார். அங்கு, ஸ்வாமியின் திருக்குமாரர் பகவத் விஷய” காலக்ஷேபம் சொல்லத் தொடங்கினார். ப்ரஹ்ம தந்த்ர ஸ்வதந்த்ரர், தேசிகனின் அனுமதியைப் பெற்று, காலக்ஷேப கோஷ்டியில் அமர்ந்து ஸ்வாமியின் திருக்குமாரர் பற்றிய கீழ்கண்ட தனியனை அனுஸந்தித்தார்.
ஸ்ரீ மந் லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜம் |
விச்வா மித்ர குலோத் பூதம் வரதார்யமஹம் பஜே ||
பிறகு, தர்சனப்ரவர்த்தகர் ஸ்ரீ உடையவரின் பரிபூர்ண கடாக்ஷத்துக்கும்,தாய் மாமாவானஸ்ரீ அப்புள்ளாரின் பரிபூர்ண கடாக்ஷத்துக்கும் பாத்ரரான ஸ்வாமி தேசிகன் விஷயமாக,
ராமானுஜ தயா பாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||
என்கிற தனியனை அனுஸந்தித்து, பிறகு குரு பரம்பரையைச் சொல்லி, பகவத் விஷய காலக்ஷேபத்தைக் கேட்கத் தொடங்கினார்.
இதனை அறிந்த ஸ்வாமி தேசிகன், “ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய” என்கிற தனியன், தன்னுடைய பெருமையைச் சொல்கிறது. ”ராமானுஜ தயாபாத்ரம்….” என்கிற தனியன், தனக்கு ஏற்பட்டுள்ள சதாசார்ய கடாக்ஷப் பெருமையைச் சொல்கிறதுஎன்று சந்தோஷப்பட்டார். பின்னர் ”ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய:” என்கிற தனியன் ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபத்தின் போது அநுஸந்திக்கும் படியும் ”ராமானுஜ தயா பாத்ரம்” என்கிற தனியன் “பகவத் விஷய” காலக்ஷேபத்தின்போது அநுஸந்திக்கும்படியும் நியமித்தார். இவ்வாறு பஹுதான்ய வருடம், ஆவணி ஹஸ்தம் நன்னாளில் ராமானுஜ தயா பாத்ரம் தனியன் அவதாரம்.பின்னர் ஸ்ரீரங்கநாதனின் நியமனத்தின் படி தமிழ் பிரபந்தங்களை ஸேவிக்கும் முன்இந்த தனியனை அநுஸந்திக்கும் முறை பின்பற்றப்படுகிறது.

ஆசார்ய தனியனின் தனிப்பெருமை:
கருணையினால் ஜ்ஞானத்தை அளித்து, நாம் நற்கதி அடைய வழி வகுக்கும் ஆசார்யனுக்கு, சிஷ்யன் கைமாறு செய்ய முடியுமா என்றால், முடியாது. அப்படி இருக்க, சிஷ்யன் ஆசார்யன் மேல் கொண்டுள்ள பக்தியை எப்படி வெளிப்படுத்துவது என்பதற்கு பூர்வர்கள் நான்குவித விஷயங்களை கூறியுள்ளனர். அவையாவன,
1. ஆசார்யன் பெருமை புலனாகும் படியாக அவரை பற்றிய ச்லோகம் எழுதி,அவரிடம் ஸமர்ப்பித்து, அவரின் அனுமதியின் பெயரில் அவரை பற்றிய துதி பாடல்களை பாடுவது.
2. விரலை வெட்டி ஆசார்யனுக்கு காணிக்கையாக ஸமர்பிப்பது.
3. மார்பில் ஆசார்யன் பெயரை பச்சை குத்திக்கொள்வது.
4. ஆசார்யன் திருவடி என்று நம்மை ஆசார்யனின் தாஸனாக அறிமுகம் செய்து கொள்வது. இதனையே ஸ்ரீவைஷ்ணவ அடியார்களாகிய நாம் “அடியேன் ராமானுஜ தாஸன்” என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறோம்.
இதில் நம் ஆசார்யர்கள் ஸாத்வீகமான முறையையே நாம் பின்பற்ற உபதேசித்தனர்.சிஷ்யர்கள் ஆசார்யனுக்கு தனியன் ஸமர்ப்பித்தல், அவரின் பெருமையையும் குணங்களையும் போற்றும் தனியனை நித்யம் அனுஸந்தானம் செய்தல், நம் ஆசார்யர்கள் உகந்தஅனுஷ்டானங்கள் ஆகும்.
இதையொட்டியே ஸ்வாமி தேசிகனின் ப்ரதான சிஷ்யர் ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர், ஸ்வாமி தேசிகனின் மேல் இருந்த அபரிமிதமான ஆசார்ய பக்தியினால் அருளியது ”ராமானுஜ தயா பாத்ரம்” என்னும் தனியன் ஆகும்.

ராமானுஜ தயா: 
ராமானுஜ தயா” – இந்த பதத்தின் அர்த்தத்தை நாம் அறிந்தோம் என்றால் அனைத்தையும் அறிந்தவர் ஆகின்றோம்.

ராமானுஜரின்தயைக்கு பாத்திரமானதேசிகன்
ராமானுஜரின் தயைக்கு, கருணைக்குபாத்ரமானவர்என்பது முதல்விளக்கம்.
ஸ்வாமி தேசிகனின் திருக் குமாரர் —குமார வரதாசார்யர் —-தன்னுடைய பிள்ளை அந்தாதியில்,
மாமலர் மன்னிய மங்கை மகிழ்ந்து உறை மார்பினன் ,தாள்
தூமலர் சூடிய தொல் அருள் மாறன் துணை அடிக்கீழ்
வாழ்வை உகக்கும் இராமாநுச முனி வண்மை போற்றும்
சீர்மையன் எங்கள் தூப்புல் பிள்ளை பாதம்என் சென்னியதே .
ராமானுஜரின் வண்மையைப் போற்றும், சீர்மையன்—என்று ஸ்ரீ நயினாசார்யர் சொல்கிறார்.எங்கள் தூப்புல் பிள்ளை—ஸ்வாமி தேசிகனின் திருவடிகள்—என் சென்னியதே—-என் தலைமேல் இருக்கிறது–என்று, ஸ்ரீ நயினாசார்யர்,பாசுரமிடுகிறார். இராமாநுசமுனி வண்மை போற்றும் சீர்மையன்—ஆதலால், ராமானுஜ தயா பாத்ரர். அதுமட்டுமல்ல ராமானுஜரின் மறுஅவதாரம் அன்றோ நம் ஸ்வாமி தேசிகன்.

நான்கு பிரதானமான திவ்ய தேசங்கள்:
ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம்
ஸ்ரீ ஹஸ்திஸைல சிகரோஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீசம் நமாமி சிரஸா யதுசைல தீபம்
என திருவரங்கம், திருமலை,திருக்கச்சி, திருயாதவகிரி ஆகிய நான்கு பிரதானமான திவ்ய தேசங்களை வணங்குகிறோம்.இந்த திவ்ய தேசங்களுக்கும் ராமானுஜ சப்தத்திற்கும் உள்ள தொடர்பை விரிவாக காணலாம்.

ஸ்ரீரங்கநாதனின் தயைக்கு பாத்திரமானதேசிகன்:
பூலோக வைகுண்ட க்ஷேத்திரம் “ஸ்ரீரங்கத்தில்” பெரிய பெருமாளாக, ப்ராணாவகார விமானத்தின் கீழ், பள்ளி கொண்டுள்ளான் ஸ்ரீரங்கநாதன். ரங்கநாதனுக்கு ராமானுஜன் என்னும் பெயர் உண்டு. அன்மொழித்தொகையின் படி “எவனுக்கு ராமன் இளையவனோ அவன் ராமானுஜன்”.
ராமனுக்கு முன்னரே திருஅயோத்தியில் எழுந்தருளிய பெருமாள் ஸ்ரீரங்கநாதன். ப்ரம்ம தேவன் இஷ்வாகு குலத்திற்கு தனமாக அளித்த பெருமாள் ஸ்ரீரங்கநாதன். “தோலாத தனி வீரன் தொழுத கோவில்” – ராமன் ரங்கநாதனை ஆராதித்து இருக்கிறான்.பெருமாளாம் ராமன் ஆராதித்த ஸ்ரீரங்கநாதன் பெரிய பெருமாள் என போற்றப்பெற்றார்.ராமன் பின்னர், விபீஷணனிடம் குலா தனமாக அளிக்க, விபீஷணன் இலங்கை செல்லும் வழியில் காவேரியின் மணல் திட்டில் நித்ய வாசம் செய்ய ஆரம்பித்தவன் ஸ்ரீரங்கநாதர். “அம்புயத்தோன் அயோத்தி மன்னருக்கு அளித்த கோவில்” என்று ஸ்வாமிதேசிகன் ஸ்ரீரங்கத்தை பற்றி அருளியுள்ளார். ஆகையால் ஸ்ரீரங்கநாதன் என்னும் ராமானுஜனின் தயைக்கு பாத்திரமான ஸ்வாமி தேசிகன். ரங்கநாதனின் தயையினால் வேதாந்தாசார்யன் / வேதாந்த தேசிகன் என்ற பிருதம் பெற்றதாக ஸ்வாமி தேசிகனே சாதித்துள்ளார். உபய வேதாந்தங்களுக்கும் ஆசார்யனாக ஸ்வாமி தேசிகன் திகழ்ந்தார்.ஸ்ரீரங்கநாதன் என்னும் ராமானுஜனின் தயைக்கு பாத்திரரானார் ஸ்வாமி தேசிகன்.

திருமலையப்பனின் தயைக்கு பாத்திரமானதேசிகன்:
ஸ்ரீநிவாசன் வாஸம் செய்யும் திருவேங்கட மாமலை அடுத்த திவ்ய தேசமாகும். அந்த ஸ்ரீனிவாசனே தேசிகனாக பிறந்தார். ஸ்ரீனிவாசனின் அனுகிரஹமே தேசிகனின் பிறப்பிற்கு காரணம்.

1.png
மங்களத்தை வளர்க்கக்கூடிய புரட்டாசி மாதத்தில், விஷ்ணு நக்ஷத்திரத்தில் அதாவது ச்ரவண நக்ஷத்திரத்தில், ஸ்ரீனிவாசனின் தீர்த்தவாரி சுப தினத்தில் அனந்தசூரிக்கும், தோதாரம்பைக்கும் ஸ்வாமி தேசிகன் மகனாக அவதாரம் செய்தார். பெருமாளே ஆசார்யனாக பிறந்தான்.

2.png

குழந்தை இல்லாத தம்பதியினர் அனந்தசூரி மற்றும் தோதாரம்பை, குழந்தை வேண்டி திருமலைக்கு யாத்திரையாக சென்றனர்.கனவில்திருமலையப்பனின் மணியினை தோதாரம்பை முழுங்குவதாக தம்பதியினர் ஸ்வப்னம் கண்டனர். மறுநாள் கோவிலில் மணியை காணாமல் ஒரே பரபரப்பாக இருந்தது. கோவில் ஜீயர் தோதாரம்பையை காட்டி, அவள் கர்ப்பத்தில் திருமணியின் அவதாரமாக பிள்ளை பிறக்கப் போவதை கூறினார். தேசிகன் அவ்வாறே திருமணியின் அவதாரமாக, தோதாரம்பையின் கர்ப்பத்தில், ராமனை போல் பன்னிரெண்டுமாதம் இருந்து அவதாரம் செய்தார். ஸ்வாமி தேசிகன் ஸங்கல்ப சூர்யோதயத்தில் தன்னை அனைவரும் திருமணியின் அவதாரமாக போற்றியதை தன் சொற்களினாலேயே அருளுகிறார்.

திருவாராதன சமயத்தில் தேவர்களை ஆவாஹனம் செய்யவும், அசுரர்களை விரட்டவும், திருமணி அடிக்கப்படுகிறது. ராமானுஜ ஸம்ப்ரதாயத்திற்கு விரோதமாக பொருள் சொல்லுபவர்கள் அலறி, பயந்து செல்லும் வகையில் திருமணியின் அவதாரமாகவே பிறந்து, அவர்களை வென்றார் நம் ஸ்வாமி தேசிகன். “திருமலை மால் திருமணியாய் சிறக்க வந்தோன்” நம்தேசிகன்.

3.png

ஸாக்ஷாத் திருமலையப்பன் அவதாரமோ, இல்லை ஒரு வேளை திருமலையப்பனின் திருமணியின் அவதாரமோ, இல்லை ஒரு வேளை யதிராஜரின் அம்சமோஎன போற்றப்பட்டவர் நம் ஸ்வாமி தேசிகன். அப்படிப்பட்ட ஆச்சர்யமான அவதாரம் நம் ஆசார்யன் அவதாரம்.

பிள்ளை அந்தாதியில்,
அன்றிவ் வுலகினை யாக்கி யரும்பொரு ணூல்விரித்து
நின்றுதன் னீள்புகழ் வேங்கட மாமலை மேவியும்பின்
வென்றிப் புகழ்த்திரு வேங்கட னாத னெனுங்குருவாய் நின்று
னிகழ்ந்துமண் மேனின்ற னோய்க டவிர்த்தனனே.
உலகினை ச்ருஷ்டி செய்து, வேதங்களையும் கொடுத்து எம்பெருமான் ஏழு மலையின் மேல் சென்று அமர்ந்து கொண்டான். ஏன் என்றால், விவசாயி தான் பயிரிட்ட பூமியை ரக்ஷிக்க வயலுக்கு நடுவில் ஒரு பரணை கட்டி அமர்ந்து கொண்டு காப்பான். அது போல் ஸ்ரீநிவாசன் உலகத்தில் சரணாகதி என்னும் பயிரை நட்டு, அதன் விளைச்சலுக்கு உயர்ந்த திருமலையில் அமர்ந்து கொண்டு, கண்ணும் கருத்துமாக ரக்ஷித்து வருகிறான். ஒரு வேளை ஆடு மாடுகள் கூட்டமாக பயிரை மேய வந்தால், அருகில் உள்ள தன் பசங்களை உடனேயே அவைகளைவிரட்ட சொல்வது போல், ஆசார்யர்களை அவதாரம் செய்விக்கிறான் பகவான். வேங்கடநாதன் என்னும் குருவாக அவதரித்தான் ஸ்ரீநிவாசன்.
திருமலையப்பன் என்னும் ராமானுஜனே வேங்கடநாதன் என்னும் குருவாய் அவதரித்தான்.
யசோதை வகுளமாளிகையாக பிறந்தாள்,
கண்ணன் திருவேங்கடமுடையானாக பிறந்தான்.
பலராமனின் அனுஜனான கண்ணனே அதாவது ராமானுஜ னே, திருவேங்கடமுடையான்.
அந்த திருவேங்கடமுடையானின் கருணையை தயா சதகம் என்னும் நூறுச்லோகங்களினாலே பாடியதால் திருவேங்கடமுடையானின் தயைக்கு பாத்திரமானார் நம் தேசிகன்.இப்படி ஸ்ரீநிவாஸனின் பரிபூரண கருணைக்கு இலக்கானவர் தேசிகன்.

திருக்கச்சி வரதனின் தயைக்கு பாத்திரமானதேசிகன்
காஞ்சி தேவப்பெருமாள் திருவடியில் பிறந்தவர் தேசிகன். வரதனுக்கு ராமானுஜன் என்னும் பெயர் உண்டு. இது ஒரு ஸ்வாரஸ்யம். அனுஜ சப்தத்திற்கு “அனுகாரம்” பண்ணுதல் என்று அர்த்தம். ஒருத்தர் செய்வதை போலச் செய்கை செய்வது அனுகாரம் எனப்படும். அப்புள்ளார் தேசிகனின் ஆசார்யன், அவரின் மாதுலர் தாய் மாமா ஆவார். “யதிவரனார் மடப்பள்ளியில் வந்த மனம் எங்கள் வார்த்தையில் மன்னியதே” என்று கூறுவது மரபு. நம் தேசிக ஸம்ப்ரதாயம் மாதுலர் வழி வந்த ஸம்ப்ரதாயமாகும்.
காள மேக தேசிகாத் – வாதி ஹம்ஸ அம்புஜ ஆசார்ய என அழைக்கப்படும் அப்புள்ளாரிடம் அனைத்தையும் கற்றார் நம் தேசிகன். தேசிகன் “அப்புள்ளார் ஒரு கிளியை பழக்கினாப் போலே அடியேனை பழக்கி வைத்தார்” என்கிறார்.
அப்புள்ளார், வால்மீகி இராமாயணத்தில் ப்ரணவம் நடந்து சென்றதை இந்த ச்லோகம்மூலம் விளக்கினார்.
अग्रतः प्रययौ रामस्सीता मध्ये सुमध्यमा।
पृष्ठतस्तु धनुष्पाणिर्लक्ष्मणोऽनुजगाम ह।।3.11.1।।
பெருமாள் என்பவன் mobile கற்பக வ்ருக்ஷம். நாம் இருக்கும் இடம் தேடி வந்து அருள் புரிபவன்.
அகார வாச்யனான ராமன், உகார வாச்யகமாக பிராட்டியும், மகாரமாக லக்ஷ்மணனும் நடந்து செல்வதை ப்ரணவத்தின் விளக்கம் தரும் வகையில் தேசிகனுக்கு விளக்கினார் அப்புள்ளார்.மகாரம் 25வது தத்துவமான ஜீவனை குறிக்கும்.ராமன், ஸீதை மற்றும் லக்ஷ்மணன் மூவரும் ப்ரணவத்தின் வடிவை விளக்கும் வகையில் நடந்து சென்றனர்.இவ்வாறுப்ரணவத்தின்அர்த்தவிசேஷத்தைஅப்புள்ளார் தேசிகனுக்கு விளக்கினார்.
ராமானுஜர் விந்திய மலையில் வழி தெரியாமல் தவித்த பொழுது, வரதனும் பெருந்தேவியும் வேடுவன் வேடுவச்சியாக வந்து காப்பாற்றி காஞ்சி வரை அழைத்து வந்தனர். அடியேனின், மேகத்தின் தாகம் என்னும் நூலில் இந்த அனுபவத்தை விரிவாக படிக்கலாம். அப்பொழுது அந்த இரவில் வேடுவன் வரதன் வில்லோடு, அவனை தொடர்ந்து வேடுவச்சி பெருந்தேவி, பின்னர் ராமானுஜர் மூவரும் நடந்து சென்றனர். அன்று ராமன், சீதை, லக்ஷ்மணன் ப்ரணவத்தின் வடிவாக நடந்து சென்றதை போல் இவர்கள் நடந்து சென்றனர். அன்று ராமன் கொடுத்தது அனுபவம் இன்று வரதன் காட்டியது அனுஷ்டானம்.ஸ்வாமி தேசிகன் யதிராஜா சப்ததியில்,சாலைக் கிணறு வ்ருத்தாந்தத்தை பற்றி கூறும் பொழுது,
वन्दे तं यमिनां धुरन्धरमहं मानान्धकारद्रुहा पन्थानं परिपन्थिनां निजदृशा रुन्धानमिन्धानया ।
दत्तं येन दयासुधाम्बुनिधिना पीत्वा विशुद्धं पयः काले नः करिशैलकृष्णजलदः काङ्क्षाधिकं वर्षति ॥
இன்றும் தேவப்பெருமாளுக்கு முதல் தீர்த்தம் சாலைக்கிணற்றிலிருந்து தான் எடுத்து வரப்படுகிறது.வரதன் என்னும் காள மேகம், நாம் கேட்பதை காட்டிலும் அதிகமாக வருஷிக்க என்ன காரணம்? மேகமானது ஒரு முறை மழை பொழிந்து விட்டால் காலியாகி விடும். அந்த மேகத்தில் மழைக்கு பின்னர் நீர் இருக்காது. வரதன் முக்தி மழை பொழியும் முகில் வண்ணனாக இருக்க காரணம் என்னவென்றால், தினமும் சாலைக்கிணற்றிலிருந்து ஸமர்ப்பிக்கப்படும் தீர்த்தத்தை பருகிக் கொண்டு இருப்பதினால்.
விபவத்தில் அனுபவத்தையும், வரதனாக அர்ச்சையில் அனுஷ்டானத்தையும் பெருமாள் காட்டுகிறான்.
முதலில் அநந்தனாக, பின்னர் லக்ஷ்மணனாக, அடுத்து பலராமனாக அவதாரம் செய்தவரே, கலியுகத்தில் ராமானுஜராக அவதாரம் செய்தார்.
இராமாயணத்தில் நடந்த வ்ருத்தாந்தத்தை, வரதன் அனுஷ்டித்து (அனுகாரம் ) செய்து காட்டியதால், வரதன் ராமானுஜன். வரதனாம் ராமானுஜனின்கருணைக்கு இலக்கானவர் தேசிகன்.

பத்தி முதலாமவற்றுள் பதி எனக்கு கூடாமல்
எத்திசையும் ஒழன்றோடி இளைத்துவிழும் காகம்போல்
முத்தி தரும் னகரேழில் முக்கியமாம் கச்சிதன்னில்
அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் னான் புகுந்தேனே
என கச்சி வரதனின் திருவடியில் சரணாகதி செய்தவர் நம் தேசிகன்.
“வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடகிளியை கை கூப்பி வணங்கினாள்” – பரகால நாயகியான திருமங்கைஆழ்வார் கிளிக்கு பேச சொல்லிக் கொடுக்கிறாள். தான் பழக்கிய கிளி அழகாக பாட ஆரம்பித்தவுடன், சந்தோஷமடைந்த பரகால நாயகி, அந்த மடப்பம் பொருந்திய கிளியை பார்த்து கை கூப்பினாள். வரதன் வளர்த்த கிளி தேசிகன்.
“திக்கு எட்டும் புகழ் ஸ்ரீபாஷ்யத்தை தெளிய உரைத்திடு நாள்” – தேசிகன் திக் எட்டும் ஸ்ரீபாஷ்யத்தை உரைத்திடச் செய்தார்.அந்த தேசிகனை பார்த்தவுடன், தான் வளர்த்த கிளி என்று பெருமை கொள்கிறான் வரதன்.
தேசிகனின் திருநட்சத்திரம் புரட்டாசி சரவணத்தன்று, தன் குடை, சாமரம், வாத்தியங்கள், பல்லாக்கு, அனந்த கொத்து கைங்கர்யபரர்கள் என அனைத்தையும் தேசிகனுக்கு அனுப்பி தன் குழந்தை “வரதா வரதா” என்று வரதன் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறான்.

ஸகல பரிவாரங்களுடன் தன் குழந்தை தேசிகன் வருவதை பார்த்து வரதன் சந்தோஷப்படுகிறான். அன்று பெரியாழ்வர் பவனி வருவதைக் காண பெருமாள் வந்தான், இன்று தேசிகனைக் காண, அனுபவிக்க வரதன் வருகிறான்.
தேசிகன் பிறந்தது வரதன் திருவடியில், பின்னர் ஸித்தாந்த ஸ்தாபனம் செய்தது அரங்கன் திருவடியில்.
இதனாலேயே நான்கு திவ்ய தேசங்களில் கைங்கர்யம் இனிதே நடைபெற வேண்டும் என்று வரதனையே தேசிகன் ப்ரார்த்திக்கிறார்.
வரதனின் பரிபூரண கடாக்ஷத்திற்கு பாத்திரபூதர் ஸ்வாமி தேசிகன்.

திருயாதவகிரி சம்பத்குமாரனின் தயைக்கு பாத்திரமானதேசிகன்
சம்பத்குமாரன் ( செல்லப்பிள்ளை) யதிராஜரின் இளவல். ராஜா ராமானுஜர், சம்பத்குமாரன் இளையராஜா ஆவார். இந்த பெருமாளுக்கு ராமப்ரியன் என்று திருநாமம். இஷ்வாகு குலா தனமான ஸ்ரீரங்கநாதனை, விபீஷணன் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு சென்றவுடன், ராமன் தான் ஆராதனம் செய்ய மீண்டும் ஒரு பெருமாளை எழுந்தருளப்பண்ணினார். ராமனால் ஆராதிக்கப்பட்டு, ராமனுக்கு மிகவும் பிரியமான பெருமாள் என்பதால் ராமப்ரியன் என்று திருநாமம்.ராமனுக்கு அடுத்து வந்தவன் ராமப்ரியன், ராமனுக்கு அனுஜன் ஆகையால் ராமப்ரியன் ராமானுஜன்.பின்னர் கிருஷ்ணனால் யாதவகிரியில் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாள் இவரே.
ராமனின் பேத்தி கனகமாலினி (கனகாங்கி) என்று பெயர். யது வம்சத்து யதுத்தமனுக்கு கல்யாணம் செய்து கொடுத்தான் குசன். குசன் பெண் விட்டு சீதனமாக ராமப்ரியனை ஆராதனம் செய்ய அளித்தான். இப்படி யது வம்சத்தில் ஆராதிக்க பட்ட பெருமாளை, பலராமன் தீர்த்தயாத்திரை சென்ற போது, யாதவ கிரியில் மூலவர் திருநாராயணன் திருஉருவமும் ராமப்ரியன் திருஉருவமும் ஒன்றாக இருப்பதைக் கண்டு, கண்ணன் அனுமதியுடன் ராமப்ரியனை திருநாராயணபுரத்தில் ப்ரதிஷ்டை செய்தார்கள்.ராமனுக்கு பிறகு அவதாரம் செய்ததினால் ராமப்ரியன் ராமானுஜன். யதிராஜனான ராமானுஜர் ராமன் என்றால், யுவராஜாவான சம்பத்குமாரன் ராமானுஜன். ராமப்ரியனின் க்ருப்பைக்கு பாத்திர பூதர் தேசிகன். இந்த ராமானுஜ தயா பாத்ரம் தனியன் அவதாரம் மேல்கோட்டையில் , சம்பத் குமாரன் ஸந்நிதியில் தான் ஏற்பட்டது. ராமப்ரியனாம் சம்பத்குமாரின் தயைக்கு பாத்திரமானவர் தேசிகன்.
இவ்வாறு திருவரங்கம், திருமலை,திருக்கச்சி, திருயாதவகிரி ஆகிய நான்கு பிரதானமான திவ்ய தேசங்களின் எம்பெருமான்களின் கருணைக்கு ஸ்வாமி தேசிகன் பாத்திரபூதர் ஆவார்.
இதை மேலும்நன்கு விவரித்து அனுபவித்தால் தேவநாதனின் பூரண கருணைக்கு முழு வடிவம் நம் ஸ்வாமி என்பதும் நன்கு புரியும்.

ராமானுஜ தயா
இவர்கள் மட்டுமின்றி தசாவதார எம்பெருமான், ஸ்ரீ தேவி, பூ தேவி , மற்றும் நீளா தேவி, விச்வக்சேனர்,லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன்,நம்மாழ்வார், ஆளவந்தார் மற்றும் பூர்வாசார்யர்கள், ராமானுஜர், நடாதூர் அம்மாள், அப்புள்ளார் (ராமானுஜப்பிள்ளான், கிடாம்பி ராமாநுஜாசார்யர்) ஆகியோர் தயைக்கும் தேசிகன் பாத்திரமானவர்.
தேசிகனின் திருவடிகளை சரணம் என்றும் பற்றி, அனைத்து ஆழ்வார், ஆசார்யர்கள், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன், ஸ்ரீ தேவி, பூ தேவி, மற்றும் நீளா தேவி, எம்பெருமான் ஆகியோரின் கருணையை நாமும் பெற்றிடலாம்.

ஸ்வாமி தேசிகனின் 750வது திருநக்ஷத்திர மஹோத்சவத்தில், திருவஹீந்திரபுரம் ஸ்ரீ வேத பரிபாலன சபா வெளியிடும் மலரில், அடியேனுக்கு லேகன கைங்கர்யம் கிடைத்தது தேசிகனின் அனுகிரஹமே. இந்த வாய்ப்பை அளித்த மகான்களுக்கு, அடியேனின் தன்யவாதங்கள் ஸமர்ப்பணம் செய்கிறேன்.

தேசிகன் அல்லால் தெய்வம் இல்லை.
தேசிகன் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வாத்ஸ்ய ஸ்ரீ க்ருஷ்ணமார்ய மஹாதேசிகனின் அந்தேவாசி
முகுந்தகிரி ஸ்ரீ உ.வே அனந்த பத்மநாபாசாரியார் ஸ்வாமி

Leave a comment